Saturday, 31 October 2015

மாட்டுக்கறி ஆட்டுக்கறியான கதை



அண்மையில் ஒரு டீவி சானலில் ஒரு தீவிர மதக் கட்சிக்காரார் ஒருவர் பேட்டி கொடுத்துக் கொண்டு இருந்தார். நிகழ்ச்சியை நடத்தியவர் கேள்விகள் கேட்க, அவர் பதில்கள் தர என்று சென்றது. ஆரம்பத்திலிருந்து கடைசிவரை அந்த கட்சிக்காரின் நோக்கம், ஒரு குறிப்பிட்ட மதத்தவரை சீண்டுவதிலும், அவர்கள் மாட்டுக்கறி சாப்பிடுவதனாலேயே மனம் புண்பட்டுக் கிடப்பது போலவும் பேசினார். இத்தனை வருடங்களாக அவர் எங்கிருந்தார் என்று தெரியவில்லை. ( இங்கு ஆச்சாரம், அனுஷ்டானம் பார்த்தவர்களெல்லாம் மேனாட்டுக்குப் போய் அந்த கறியை சாப்பிடுவது பற்றியும் அவர் பேசி இருந்தால் நன்றாக இருந்து இருக்கும்.) பேட்டி முடிந்ததும் எனக்கு, பழைய சில நிகழ்வுகள் இன்றைய சூழலோடு நினைவுக்கு வந்தன.

வெளியில் சொல்லாதீர்கள்

நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு முன் நடந்த விஷயம் இது.   அந்த ஏரியா முழுக்க தனியார் மருத்துவமனைகளும், தனியார் நிறுவனங்களும் அதிகம். வெளியில் சாப்பிடும், கம்பெனி பிரதிநிதிகளையும் அதிகம் காணலாம். அதற்கேற்ப அந்த ஏரியாவில் சைவ-அசைவ ஹோட்டல்களும், மெஸ்ஸுகளும் அதிகம். ஒருமுறை அங்கிருந்த மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு இருந்த ஒருவரைப் பார்க்கப் போயிருந்தேன். அப்போது வழியில், ஒரு பழைய நண்பரை டிவிஎஸ் மொபெட்டில் பார்க்க நேர்ந்தது. பொதுத்துறை ஒன்றில் தற்காலிக பகுதிநேர கடைநிலை ஊழியராக வேலை பார்த்தவர் இவர். வண்டியின் பின்புறம் ஒரு பெரிய மரப்பெட்டி. அது ஒரு பெரிய சாக்கினால் இழுத்து மூடி கட்டப்பட்டு இருந்தது. ரொம்பநாள் கழித்து அவரைச் சந்தித்ததால், வழக்கம் போல நலன் விசாரித்தேன். இப்போதும் அதே வேலையைச் செய்வதாகவும், வருமானம் போதாததால், இந்தப் பகுதியில் இருக்கும் அசைவ உணவு விடுதிகளுக்கு தானும் இன்னும் சிலரும் மாட்டுக்கறி சப்ளை செய்வதாகவும், சில இடங்களில் அங்கேயே மாட்டுகறியை  ஆட்டுக்கறி போல சின்னச் சின்ன துண்டுகளாக போடும் வேலையையும் செய்வதாகச் சொன்னார். ”வெளியில் சொல்லி விடாதீர்கள், சார்” என்று எனக்கு அன்பு கட்டளை வேறு. எனக்கோ ஒரே ஆச்சரியம். ஏனெனில் அவர் சொன்ன உணவு விடுதிகளில்தான் மக்கள், மட்டன் குழம்பு, மட்டன் பிரியாணி, மட்டன் வறுவல் என்று ஆசையாக வாங்கி சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறார்கள். ஆக அவலை நினைத்துக் கொண்டு வெறும் வாயை மெல்லுவது போல, ஆட்டுக்கறியை ( மட்டனை ) சாப்பிடுவதாக நினைத்துக் கொண்டு எல்லோரும் மாட்டுக்கறியை ( பீப் ) வெட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.

பெரிய ஆட்டுக்கறி

அப்போதெல்லாம் (இப்போதும்தான்) மாட்டுக்கறியை பெரிய ஆட்டுக்கறி என்றுதான் மறைமுகமாக குறிப்பிடுவார்கள். (இப்போது பீப் என்று அடையாளம் செய்கிறார்கள்) கடைகளில் அசைவம் சாப்பிடவே யோசிப்பார்கள். காரணம் கலந்து விடுவார்கள் என்ற பயம்தான். கலத்தல் என்றால் மாட்டுக்கறியை சின்ன சின்ன துண்டுகளாக்கி ஒருமுறை வேகவைத்து, மறுபடியும் ஆட்டுக் கறியோடு கலந்து வேகவைத்து சமைப்பது ஹோட்டல்காரர்களைக் கேட்டால் ஆட்டுகறி விற்கும் விலையில், நமக்கு கட்டுப்படி ஆகாது சார் என்கிறார்கள். நம்ப பாய் வீட்டுக் கல்யாணம், கச்சேரி , விசேஷம் என்றால் அங்கு மட்டன் பிரியாணிதான். ஆனால் எங்கே கலந்து விடுவார்களோ என்ற பயத்தில், ஒரு காளிமார்க் கலரை அல்லது சோடாவை மட்டும் சாப்பிட்டுவிட்டு , மொய் செய்துவிட்டு வந்தவர்களும் உண்டு. இப்போது அப்படி இல்லை. பிரியாணி என்றால் நிறையபேர் மறுப்பதில்லை. ( நான் சைவம்; மீன் மட்டும் சாப்பிடுவேன் என்றால் யாரும் சிரிக்கக் கூடாது )

தள்ளுவண்டி வியாபாரம்

இது ஒரு பக்கம் என்றால், எல்லா ஊர்களிலும் இருக்கும் பழைய, புதிய பேருந்து நிலையங்கள் அருகில் இருக்கும் சாராயக் கடைகள் பக்கம், பீப் பிரியாணி, பீப் வறுவல், பீப் பகோடா என்று வெளிப்படையாக போர்டு போட்டுக் கொண்டு, இரவு நேரத்தில் வெள்ளை நிற பல்புகள் ஜொலிக்க , தள்ளுவண்டிகளில் விற்றுக் கொண்டு இருக்கிறார்கள். அந்த பக்கம் சாலையைக் கடந்தாலே ஒரே மசாலா நெடி எனக்கு குமட்டுகிறது. அங்கு நின்று கொண்டு வாங்கி சாப்பிடுவர்களை இன்ன ஜாதி, இன்ன மதம் என்று அடையாளம் சொல்ல முடியாது. நல்ல கும்பல். அந்த தள்ளு வண்டிக்காரர்கள், மற்ற கடைக்காரர்களைப் போலவே கொடுக்க வேண்டிய மாமூலை கொடுத்து விடுகிறார்கள்; கூடவே இலவசமாக ஒரு பொட்டலமும் உண்டு. அப்புறம் என்ன? எந்த கட்சிக்காரன் வந்து தடுக்கப் போகிறான்?

அதெல்லாம் சரி! நகர்ப்புறம், எதைப் பற்றியும் கவலைப் படாமல் ரோட்டில் மாடுகளை மேய விட்டு விடுகிறார்களே அவர்களை ஏன் யாரும் தண்டிப்பதில்லை? போக்குவரத்திற்கு இடைஞ்சலான மாடுகளைப் பிடித்துக் கொண்டு போய் பட்டியில் அடைப்பதில்லை? இவ்வாறாக அலையும் மாடுகளில் சில, தினமும் காலையில் எங்கள் குடியிருப்பு பகுதிகளில் வந்துவிடுகின்றன. ஒவ்வொரு வீட்டு வாசலிலும், ஒரு மாடு யாராவது , எதையாவது தின்ன தர மாட்டார்களா என்று நின்றுவிடும். கொடுத்தால்தான் வாசலைவிட்டு நகரும்.


47 comments:

  1. எல்லா இடத்திலும் இப்படித்தான் ஐயா... என்ன செய்ய.... தவறு நாக்கு(கள்) மீது...!

    ReplyDelete
    Replies
    1. சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களது கருத்துரைக்கு நன்றி.
      சாப்பாடு விஷயத்தில் எல்லோருமே நாவுக்கரசர்கள்தான்.

      Delete
    2. நாவிற்கு அடிமைகள் என்பதே பொருத்தம்!...

      Delete
  2. நன்றாகச் சொன்னீர்கள்.

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
    Replies
    1. சுப்புத்தாத்தா அவர்களை இங்கு நான் எதிர் பார்க்கவே இல்லை. இன்ப அதிர்ச்சி எனக்கு. பாராட்டிற்கு நன்றி.

      Delete
  3. அது அங்க .. எங்க ஊரில் மட்டன் என்றால் வேண்டாம் என்று சொல்லுவார்கள்.

    ReplyDelete
    Replies
    1. அண்ணா உங்க ஊரு எது
      சொல்லவே இல்லையே..
      சலாம்... நியாபகம் இருக்கா...

      Delete
    2. சகோதரர் விசுAWESOME அவர்களுக்கு நன்றி. உங்கள் பெயரை எப்படி உச்சரிப்பது அல்லது தமிழில் எப்படி எழுதுவது என்று தெரியவில்லை.உங்கள் கருத்துரைக்குள் ஒளிந்து இருக்கும் நகைச்சுவையை ரசித்தேன்.

      Delete
    3. பெயர் விசுவாசம் தான் ஐயா... வெள்ளைக்காரன் வாயில் 30 வருடம் இருந்ததால்.. விசுAwesome ஆகியது...

      Delete
  4. அன்புள்ள அய்யா,

    ‘நானெல்லாம் மட்டன் சாப்பிட மாட்டேன்’ என்று சொல்பவர்கள் அவர்களுக்குத் தெரியாமலே கடைகளில் சாப்பிட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஜங்ஷன் வெளியில் திண்டுக்கல்லின் பெயரால் கன்னுக்குட்டி கறி சின்னதாக வெட்டி போடப்படுகிறது. சில ஆண்டுகளுக்குமுன் வாரஇதழில் அதுபற்றிய செய்தி வந்திருந்தது. அதை நன்றாக வேகவைக்க மாத்திரைப் போடப்படுவதாகவும் எழுதப்பட்ட இருந்தது. திருச்சியில் அமோகமான வியாபாரம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. எங்கள் ஊரிலிருந்துதான் கறி தினமும் கொண்டு செல்லப்படுகிறது. கேரளா முழுவதும் பெரிதும் மக்கள் உண்பது மாட்டுக்கறிதான்; மலிவானதும்கூட.

    மீன் எல்லாம சைவம்தான்... அசைவம் என்று யார் சொன்னது? நன்றாகச் சைவச் சாப்பாட்டைச் சாப்பிடுங்கள். எதைச் சாப்பிடுவது என்பது அவரவர் விரும்பம்தானே!

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர் மணவை ஜேம்ஸ் அவர்களின் தடலாடி கருத்துரைக்கு நன்றி. ஆம்லேட்டை சைவத்தில் சேர்த்துள்ளார்கள் என்பதை அறிவேன். மீன் எப்போது சைவம் ஆனது?

      Delete
  5. துளசி : அருமையாகச் சொல்லிச் சென்றிருக்கின்றீர்கள். கேரளத்தில் மாட்டுக் கறிதான் அதிகம்....வெட்டும் இடத்தில் நேரடியாக வாங்குவதால் ஆட்டுக் கறி கிடைத்துவிடும்...நாங்கள் வெளியில் வாங்குவதில்லை...

    கீதா: நான் சைவம் அதுவும் பக்கா சைவம் என்றாலும், மகனின் மூலம் அசைவம் வெட்டப்படும் இடங்களிலும், விற்கப்படும் இடங்களிலும் என்ன நடக்கின்றது என்பது நன்றாகவே தெரியும்...வெட்டப்படும் இடங்களும் சரி விற்கப்படும் இடங்களும் சரி வெட்னரியின் சில கட்டுப்பாட்டு விதிகளுக்கு உட்பட்டு நடப்பதில்லை என்பதே. அதைப் பற்றி எல்லாம் கண்டுகொள்வதும் இல்லை அரசு...

    ReplyDelete
    Replies
    1. சகோதரர் – சகோதரி இருவருக்கும் நன்றி. கேரளா ஹோட்டல் என்றாலே நினைவுக்கு வருவது எருமைக்கறிதான். திருச்சியிலும் உண்டு. (நான் போனது இல்லை)

      Delete
  6. நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான்.ஆனால் நான் கேள்விப்பட்ட அளவில் இது தலைமுறையாகவே செய்வார்கள் போலிருக்கிறது....மிளகில் அந்திமந்தாரை விதை.. மிளகாய்ப்பொடியில் செங்கல் தூள்....
    சனியனைத் தூரப்போட்டுவிட்டு காய்கறியைத்தின்று ஜீவிக்கலாமென்றால்.... காதைக்கொடுங்கள் அத்தனையும் ரசாயனக்கரைசலில் குளித்து வருகிறதாம்...பிரகாசிக்கும் திராட்சை, பளபளக்கும் ஆப்பிள், சிவப்பு தர்பூசணி,

    எங்கேனும் காற்ரைக்குடித்து உயிர்வாழச்சொல்லிக்கொடுக்கிறார்கலென்றால் விசாரியுங்கள்..முதலில் சேர வேண்டும்...
    நாசமாய்ப்போன நாய்கள் அங்கும் நுழைந்து வேலையைக்காட்டிவிடுவார்கள்....

    ReplyDelete
    Replies
    1. கவிஞரின் கருத்துரைக்கு நன்றி

      Delete
  7. ஏதோ ஒரு படத்தில் விவேக் கோழி பிரியாணி என்று காக்கா பிரியாணி சாப்பிட்ட அனுபவம் காட்டியது நினைவுக்கு வருகிறது

    ReplyDelete
    Replies
    1. அய்யா ஜீ.எம்.பி அவர்களின் கருத்துரைக்கு நன்றி. சினிமாவில், விவேக் படத்தில் வருவது போல, நம்நாட்டில் காக்கா பிரியாணி போடுகிறார்ளா என்று தெரியவில்லை.

      Delete
  8. எல்லோர் வயித்தையும் கலக்கி விட்டுட்டீங்களே, சார் ? இது நியாயமா ? 😠

    ReplyDelete
    Replies
    1. வயிற்றைப் பிடித்துக் கொண்டு கருத்துரை தந்த முனைவர் அவர்களுக்கு நன்றி. கோளாறு வயிற்றில் இல்லை; பிரியாணியை பார்க்கும் பார்வையில்தான் இருக்கிறது. எப்போதும் போல மட்டன் பிரியாணி என்று நினைத்துக் கொண்டு சாப்பிட வேண்டியதுதான்.

      Delete
  9. நிறைய அசைவ ஹோட்டல்களில் இது தான் நடக்கிற‌து. அது மட்டுமல்ல, முதல்நாள் மீந்து போன பழசையும் புதுசில் கலக்கிப்போடுகிறார்கள். கோழியையும் தான் ஊசி போட்டு பெருக்க வைப்ப‌தாகச் சொல்கிறார்கள். மீன்களிலோ, வளர்ப்பு மீன்களையும் கெமிக்கல் பொருள்கள் போட்டுத்தான் வளர்க்கிறார்கள். அதன் சுவை சக்கை மாதிரி இருக்கிறது. இதையெல்லாம் விட்டு சைவத்திற்குப்போகலாமென்றால் உரம் போட்டு வளர்ந்த காய்கறிகளில் சுவையில்லை. பழங்களோ நல்ல கலர் வருவதற்காக ரசயனக்கரைச‌ல் தடவப்படுகிறது.

    எதை சாப்பிட்டுத்தான் உயிர் வாழ்வது?

    ReplyDelete
    Replies
    1. மனிதகுல எதிரி மனிதனே என்பதைச் சொல்லாமல் சொல்லிய உங்கள் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  10. இதில் கூட கலப்படமா? எதை உண்பது என்பது அவரவர் மனதையும் உடல் நலனையும் பொறுத்தது! இதில் மற்றவர் தலையீடு அதிகப்படிதான்!

    ReplyDelete
  11. நண்பரே இந்த குழப்பமான கடைகள் தமிழ் நாட்டில் ஊருறுவி சுமார் 10 ஆண்டுகள் கடந்து விடுகிறது அரசியல்வாதிகள் ஏதோ திடீரென ஞானோதயம் தோன்றி காரணமில்லாத காரணத்தாலோ, என்னவோ இப்படி மாட்டைப்பிடித்துக்கொண்டு அரசியல் செய்கின்றார்கள் இன்னும் சில மாதங்களில் தேர்தல் வரும் அனைவரும் மறந்து விடுவார்கள் பாருங்கள்.
    தமிழ் மணம் ஓட்டுப்பெட்டி எங்கே ?

    ReplyDelete
    Replies
    1. கடந்து விட்டது என்று படிக்கவும்

      Delete
    2. நண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்களே! நலந்தானா? உடலும் உள்ளமும் நலந்தானா? நம்நாட்டில் எல்லாமே அரசியல்தான்.

      நேற்று காலையிலிருந்தே எனக்கு தமிழ்மணம் சரியாக வரவில்லை. எப்படியோ இந்த பதிவை ரிலீஸ் செய்து விட்டேன். அப்புறம் எங்கள் வீட்டு கம்ப்யூட்டரில் இண்டர்நெட் இணைப்பில் கோளாறு. ஒருவழியாக Data Cord தான் காரணம் என்று தெரிந்து, இரவுதான் மாற்றினேன். இந்த கோளாறினால் தமிழ்மணம் ஓட்டுப் பட்டை வராமல் போயிருக்கலாம்.

      Delete
  12. பல தகவல்களை சொல்லியிருக்கிறீர்கள். அதிர்ச்சிகள் இன்னும் கூட நிறைய இருக்கிறது. எனக்கு தெரிந்த ஒருவர் கோழிப் பண்ணை வைத்திருக்கிறார். தினமும் 3-ல் இருந்து 8 கோழிகள் வரை இறந்துபோகும். இந்த இறந்த கோழிகளை வாங்குவதற்காகவே ஹோட்டல்கள் தயாராய் இருக்கும்.

    என் நண்பர் ஒருவர் ஐஸ் பேக்டரி வைத்திருக்கிறார். அவரது பிரீசரில் எப்போதும் இறந்தபோன ஆடுகள் வைக்கப் பட்டிருக்கும் அதைப் பற்றிக் கேட்டால் பிரபலமான ஹோட்டல் பெயரை சொல்லி அவர்கள்தான் கொண்டு வந்து கொடுப்பார்கள். இது பண்ணைகளில் இறந்துபோன ஆடுகள். ஐஸ் பெட்டியில் வைத்து வேண்டும் போது எடுத்துக் கொள்வார்கள் என்றார். எனக்கு அசைவம் சாப்பிடும் ஆசையே போய்விட்டது.
    த ம 2

    ReplyDelete
    Replies
    1. சகோதரர் எஸ்.பி.செந்தில் குமார் அவர்களுக்கு நன்றி.

      மாக்ஸிம் கார்க்கி என்று நினைக்கிறேன். அவர் சொன்ன வாசகம் இது. “வியாபாரம் என்பது சட்டபூர்வமான திருட்டு”. – எனவே அவர்கள் வியாபாரத்தை, லாபக் கணக்கை மட்டுமே யோசிப்பவர்கள்.

      Delete
  13. மாட்டிறைச்சி என்பது..
    தள்ளிவைக்கப்பட்டு இருந்த காலமும் உண்டு.
    அது சத்து உள்ளது. நோய் எதிர்ப்பு தன்மை கொண்டது
    என்று சொல்லப்பட்டபின் அவரவர் தேவைக்கேற்ப நேரடியாகவும் மறைமுகமாகவும் வாங்கி உண்ண ஆரம்பித்து வெகு காலம் ஆகிவிட்ட நிலையில் இப்போது அதற்க்கு யார் எதிர்ப்பு தெரிவித்தாலும் அது உள் நோக்கம் கொண்டதாகவே தோன்றுகிறது. ஒருவர் என்ன சாப்பிட வேண்டும் என்று மற்றவர்கள் முடிவு செய்ய முடியாது....

    தங்களின் பதிவின் மூலம் கலப்படம் என்பது வெகு சாமர்த்தியமாய்..
    அதுவும் பல்வேறு 'தொழில்' 'நுட்பங்களுடன் செய்யப்படுவது உண்மையென உணர்ந்தேன்..

    முக்கிய ரகசிய தகவல்... நான் எந்த உணவு விடுதியிலும் பெரும்பாலும் அசைவம் சாப்பிடுவதை தவிர்க்க முயல்பவன். அப்படி தவிர்க்க முடியாத சூழல் ஏற்பட்டால் நான் தேர்ந்தெடுப்பது...........................................................................................................................'HALF BOIL' தான் ஏனெனில் அதுவும் நானும் ஒன்று என்கிற உண்மையோடு இன்னொரு உண்மை யாதெனில் அதில் யாராலும் கலப்படம் செய்ய முடியாது...

    ReplyDelete
    Replies

    1. அன்பே சிவம் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் என்பது அவரவர் தேர்வு. அதே போலவே மாட்டுக்கறி சாப்பிடுவதும். தங்கள் கருத்தினை ஏற்றுக் கொள்கிறேன். ஆப் பாயில் என்று நீங்கள் குறிப்பிடுவது முட்டை உணவை என்று நினைக்கிறேன். எந்த உணவையும் அரை வேக்காட்டில் சாப்பிடக் கூடாது என்பார்கள்.

      Delete
    2. அப்ப ஆப்புக்கும் ஆப்பா ஐய்யய்யோ''' குழம்பாதீர்கள்...
      சொல்கிறேன்..
      HAlF க்கும் OFF ஆப்பா

      Delete
  14. பல விடுதிகளில் மாட்டுக்கறி
    கலப்பட காலமல்லவா இது ஐயா
    தாங்கள் கூறுவது போல் பசுவை தெய்வம் என்கிறார்கள்
    தஞ்சைக்கு வாருங்கள் , சுவற்றில் ஒட்டப்படும் போஸ்டர்களை மட்டு மே உண்டு வாழும் பசுக்கள் இருக்கத்தான் செய்கின்றன
    நன்றி ஐயா
    தம +1

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களுக்கு நன்றி. உங்கள் ஊரில் மட்டுமல்ல, கிராமப்புறம் தவிர்த்து எல்லா நகர்ப்புறங்களிலும் மாடுகளின் முக்கிய உணவே சுவற்றில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள்தான். கோமாதா எங்கள் குலமாதா என்பவர்கள், இதனைத் தடுத்து அவைகளுக்கு தங்கள் செலவில் நிறைய புல்லும், வைக்கோலும் தரலாம்.

      Delete
  15. Replies
    1. மறக்காமல் மீண்டும் வந்து தமிழ்மணம் – ஓட்டு தந்த நண்பருக்கு நன்றி. தமிழ்மணம் , கம்ப்யூட்டர் பிரச்சினைகள் சரியாகி விட்டன.

      Delete
  16. நடக்கும் அநியாயத்தை வெளிப்படுத்திய விதம் அருமையாக இருந்தது.

    ReplyDelete
    Replies
    1. முனைவர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  17. வணக்கம்
    ஐயா
    தெளிவாக வெளிப்படையாக சொல்லியுள்ளீர்கள் காலம் மாறி விட்டது... த.ம 6
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. கவிஞர் ரூபன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  18. கொன்றால் பாவம் தின்றால் போச்சு ,அது ஆடா இருந்தாலென்ன மாடா இருந்தாலென்ன:)

    ReplyDelete
    Replies
    1. அதானே, பகவான்ஜீ அவர்களே! அவரவருக்கு பிடித்தமானவற்றில் உறைப்பு, உப்பு போட்டுக் கொள்கிறோம். அவ்வளவுதான். உடும்புக்கறி சாப்பிடுபவனைப் பார்த்தால் என்னவென்று சொல்வது?

      Delete
  19. கொல்லுறவன் வாழ; தின்னுறவன் சாக
    மாட்டுக்கறி ஆட்டுக்கறியான கதையா?
    நன்றே அலசி உள்ளீர்கள்!

    ReplyDelete
    Replies
    1. கவிஞரே! இங்கு எங்கள் நாட்டில் எல்லாமே அரசியல்தான்.

      Delete

  20. நான் அசைவம் சாப்பிடுவதில்லை. இருப்பினும் இதுபோன்று உணவில் கலப்படம் செய்து விற்பவர்களை கடுமையாய் தண்டிக்கவேண்டும் என்ற கருத்தை கொண்டவன். அசைவம் சாப்பிடுபவர்களுக்கு தாங்கள் தந்திருக்கும் தகவல் மிகவும் உபயோகமாய் இருக்கும் . பகிர்ந்தமிக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. ஆழமான கருத்துரை ஒன்றைத்தந்த V.N.S அவர்களுக்கு நன்றி.

      Delete
  21. சைவம், அசைவம் என எதுவாக இருந்தாலும் கலப்படம் இருக்கத்தான் செய்கிறது. சைனீஸ் உணவுகளில் முட்டைக்கோஸ் பிரதானமாக பயன்படுத்துவது பார்த்திருக்கிறோம். அந்த முட்டைக்கோஸை செயற்கையாக உருவாக்குவது பற்றி ஒரு காணொளி பார்த்தேன் - இப்போதெல்லாம் முட்டைக்கோஸ் பார்த்தாலே - இயற்கையாக விளைந்ததா அல்லது செயற்கையாக உருவாக்கப்பட்டதா என்ற எண்ணம் வருகிறது... காணொளி இங்கே பார்க்கலாம் - https://www.youtube.com/watch?v=e2tF-aKiPAM

    ReplyDelete
    Replies
    1. முட்டைக்கோஸையும் விட்டு வைக்கவில்லையா. தகவல் தந்த சகோதரருக்கு நன்றி.

      Delete