Showing posts with label எம்.ஆர்.ராதா. Show all posts
Showing posts with label எம்.ஆர்.ராதா. Show all posts

Monday, 16 November 2015

எம்.ஆர்.ராதா சினிமா பாடல்கள்




எம்.ஜி.ஆர் ரசிகர்கள் என்றால் தி.மு.க அனுதாபிகள்தான். சிவாஜி ரசிகர்கள் என்றால் அவர்கள் காங்கிரஸ் பக்கம்தான். எந்த கட்சி சார்பாக இல்லாமலும் மற்ற நடிகர்களுக்கும் ரசிகர்கள் உண்டு. அவர்கள் சினிமாவை கலை கலைக்காகவே என்ற நிலையில் நின்று ரசிப்பவர்கள். அந்த வகையில் எம்.ஆர்.ராதா, சந்திரபாபு போன்ற கலைஞர்களுக்கும் ரசிகர்கள் உண்டு. சினிமாவில் இருந்து கொண்டே சினிமாவைப் பற்றியும், சினிமா நடிகர்களைப் பற்றியும் கடுமையாக விமர்சனம் செய்தவர் நடிகவேள் எம்.ஆர்.ராதா. அவருக்கென்று ஒரு தனி நடிப்பு அவரிடம் இருந்தது போலவே, அவருக்கென்றே சில காட்சி அமைப்புகளும் பாடல்களும் சினிமாவில் அமைக்கப்பட்டன.

குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் – (1954)

எம்.ஆர்.ராதா என்றாலே மனக்கண் முன் வந்து நிற்கும் படம் “ரத்தக் கண்ணீர்” தான். 1954 இல் இந்த படம் வந்தபோது நான் பிறந்து இருக்கவில்லை. வளர்ந்து பெரியவனாக ஆன பிறகுதான் இந்த படத்தையே பார்க்க முடிந்தது. புரட்சிகரமான வசனங்கள் நிரம்பிய இந்த படத்தில் வரும்  ”குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில்” என்ற பாடல் மறக்க முடியாத ஒன்றாகும்.

குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில்
நிம்மதி கொள்வதென்பதேது?
குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி
கொள்வதென்பதேது?

(வசனம்: ஆம், ஆம், வாழ்க்கையில்
குற்றங்களைப் புரிந்த  எனக்கு நிம்மதி ஏது? )

அற்றது உலகில் அமைதியும் மகிழ்வும்
அற்றது உலகில் அமைதியும் மகிழ்வும்
அரும்பிட முடியாது? முடியாது,

(வசனம்: உண்மை, உண்மை என் ஆனந்தம்,
என் மகிழ்ச்சி, என் இன்பம் அத்தனையும்
அற்றுப் போய்விட்டது)
-    பாடல்:  கவிஞர் கு.சா.கிருஷ்ணமூர்த்தி

இந்த பாடலின் இடையிடையே எம்.ஆர்.ராதாவின் கரகரத்த குரலில்  ” ” வாழ்க்கையில் குற்றங்களைப் புரிந்த எனக்கு நிம்மதி ஏது?, ஒழிந்தது, என் ஆணவன், என் கர்வம், என் அகம்பாவம், ‘’ போன்ற வசனங்களும் வரும். இந்த பாடலின் காட்சியில் எம்.ஆர்.ராதாவின் நடிப்பு ரொம்பவும் மிகை என்றும் சொன்னார்கள். ஆனால் இந்த படத்திற்கு இந்த பாடல் காட்சி கொடுத்த பாப்புலாரிட்டியை மறுக்க முடியாது. பாடலைக் கண்டு கேட்டு மகிழ கீழே உள்ள you tube  இணையதள முகவரியினை சொடுக்குங்கள்.
             
 
சின்ன அரும்பு மலரும் (1961)

முன்பெல்லாம் பழைய படங்களை மீண்டும் தியேட்டரில் பார்க்க வேண்டும் என்றால், காத்து இருக்க வேண்டும். எப்போது போடுவார்கள் என்றே தெரியாது. இப்போது 95% தியேட்டர்கள் (ஏசி உட்பட) மூடப்பட்டு விட்டன. பழைய படங்கள் பார்க்க வேண்டும் என்றால் டிவி தான். என்னைப் போன்றவர்களுக்கு, இண்டர்நெட் வந்த பிறகு யூடியூப் (YOUTUBE) சவுகரியமாகப் போய் விட்டது. நினைத்த நேரத்தில் பிடித்த படத்தை பார்க்க யூடியூப் உதவியாக இருக்கிறது. அப்படி அண்மையில் பார்த்தது,‘பங்காளிகள்’ என்ற திரைப்படம். ஜெமினி கணேசன், எம்.ஆர்.ராதா, அஞ்சலிதேவி, E.V.சரோஜா மற்றும் தேவிகா ஆகியோர்  நடித்தது. இதில் குழந்தைப்பாசம் உள்ளவராக எம்.ஆர்.ராதா பாடும்,

சின்ன அரும்பு மலரும்
சிரிப்பை சிந்தி வளரும்
கண்கள் அந்தக் காட்சி கண்டு
களிக்கும் நாள் வரும்
நான் களிக்கும் நாள் வரும்

சின்ன அரும்பு மலரும்
சிரிப்பை சிந்தி வளரும்
மண்ணில் உலவும் நிலவே
என் வயிற்றில் உதித்த கனியே

மண்ணில் உலவும் நிலவே
என் வயிற்றில் உதித்த கனியே
வாழ்வு உன்னால் செழித்தே
மனம் மகிழும் நாள் வரும்
நான் மகிழும் நாள் வரும்

       -  பாடல் கவிஞர் மருதகாசி (பங்காளிகள்)

என்ற பாடல் காட்சி பார்ப்பவர் நெஞ்சை கரைய வைக்கும். பாடலைக் கண்டு கேட்டு மகிழ, கீழே உள்ள you tube இணையதள முகவரியினை சொடுக்குங்கள்.

https://www.youtube.com/watch?v=rigaKnrraZo
 
சொந்தமுமில்லே ஒரு பந்தமுமில்லே (1965)

‘ஹலோ மிஸ்டர் ஜமீன்தார்’ என்று ஒரு படம். 1965 இல் வெளிவந்தது. ஜெமினி கணேசன், சாவித்திரி மற்றும் எம்.ஆர்.ராதா நடித்தது. இதில் முடிதிருத்தும் கலைஞராக நடித்து இருப்பார். சலூனில் பணிபுரியும் முடிவெட்டும் மற்ற தொழிலாளர்களுடன் சேர்ந்து எம்.ஆர்.ராதாவும் பாடுவதாக அமைந்த,

சொந்தமுமில்லே பந்தமுமில்லே.....
சொன்ன இடத்தில் அமர்ந்து கொள்கிறார்!
நாங்க மன்னருமில்லே மந்திரியில்லே
வணக்கம் போட்டு தலையை சாய்க்கிறார்!
-    பாடல்: கவிஞர் கண்ணதாசன்

என்ற பாடல். இதில் சலூனில் முடிதிருத்தும் கலைஞருக்கும் , வாடிக்கையாளருக்கும் உள்ள உறவு, எம்.ஆர்.ராதா பாணியில் நகைச்சுவையாக சொல்லப்பட்டுள்ளது. பாடலைக் கண்டு கேட்டு மகிழ கீழே உள்ள you tube  இணையதள முகவரியினை  சொடுக்குங்கள்.

https://www.youtube.com/watch?v=thhp6yyFoAI
                                                                                                                                                     
இன்னும் சில பாடல்கள் உண்டு. படிப்பவர்களுக்கு நேரம் இருக்காது. எனவே இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.

                (ALL  PICTURES COURTESY: GOOGLE IMAGES) 

Sunday, 14 October 2012

“எம்.ஆர்.ராதாவின் சிறைச்சாலை சிந்தனைகள்.”



1971 - இல் தினமணி கதிரில் எம்.ஆர்.ராதாவின் பேட்டியாக வந்தது இந்த நூல். ”சிறையில் இருந்தபோது பெரியார் மனம் வைத்தால் சீக்கிரமாக விடுதலையாகி விடலாம் என்று நீங்கள் நினைத்ததுண்டா” என்ற விந்தனின் கேள்வியுடன் பேட்டி தொடங்குகிறது. சென்னையிலிருந்து மதுரைக்கு ஓடிப் போன நாள்முதல். நாடக நடிகனாக இருந்து பின்னர் திரைப்பட நடிகராக இருந்த காலம் வரை எல்லாவற்றைப் பற்றியும் பேட்டியாக தந்துள்ளார். புத்தகத்தின் தொடக்கம் முதல் முடிவு வரை எம்.ஆர்.ராதாவின் கரகரப்பான குரலும் நம்மை தொடர்ந்து வருகிறது.அவருடைய அபிமானிகளுக்கும் அவருடைய மலேசிய பேச்சைக் கேட்டவர்களுக்கும்  இந்த புத்தகத்தை படிக்கும்போது இந்த அனுபவம்தான் உண்டாகும்.
  
அண்மையில் திருச்சியில் நடைபெற்ற புத்தக கண்காட்சிக்கு சென்றபோது வழக்கம் போல வாசிப்பு ஆர்வம் காரணமாக சில புதிய நூல்களை வாங்கினேன். “எம்.ஆர்.ராதாவின் சிறைச்சாலை சிந்தனைகள். என்ற மேலே சொன்ன நூலும் அவற்றுள் ஒன்று. எம்.ஆர். ராதாவை பேட்டி கண்டு எழுதியவர் ஆசிரியர் மறைந்த எழுத்தாளர் விந்தன். எம்.ஆர். ராதா என்றாலே அவர் முரடர் என்று பிம்பம் உண்டு. ஆனாலும் பயப்படாமல் நூலில் பல இடங்களில் எழுத்தாளர் விந்தன் அவரிடம் கேள்விகள் கேட்டுள்ளார்.

 
பாத காணிக்கை“ என்று ஒரு படம். அந்த படத்தில் ராதா பட்டாளத்து பரம்பரை சுட்டுடுவேன்என்று துப்பாக்கியை தூக்கியபடி அடிக்கடி இந்த வசனத்தைச் சொல்லுவார். நிஜ வாழ்க்கையிலும் அப்படித்தான் இருந்திருக்கிறார். நாடகக் கம்பெனியில் தன்னோடு மல்லுகட்டி நின்ற போடிநாயக்கனூரான் என்ற ஸ்டண்ட் நடிகரை மேடையிலேயே நிஜமாகவே சுட்டு இருக்கிறார். திருப்பதியில் வெடிகுண்டு தயாரித்து இருக்கிறார். என்.எஸ்.கே மீது இவருக்கு ஏனோ கோபம். அவரைச் சுடுவதற்கு ஒரு துப்பாக்கியை உளுந்தூர்பேட்டை ஆசாமி ஒருவரிடம் வாங்கியிருக்கிறார். இதனைக் கேள்விப்பட்ட என்.எஸ்.கே நேரிலேயே வந்து இவரிடம் சுடச் சொல்ல இருவருமே கட்டி பிடித்தபடி நண்பர்கள் ஆனார்கள். பார்ப்பதற்கு ஆள் முரடனாக தோன்றினாலும் மற்ற சினிமாக் கலைஞர்களைப் போலவே இவரும் ஒரு காதற் பறவைதான். ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்களை செய்து இருக்கிறார். . எம்.ஆர்.ராதா அவர்கள் எல்லாவற்றையும் வெளிப்படையாகவும் சுவையாகவும் சொல்லுகிறார். பெரியார், அறிஞர் அண்ணா, கருணாநிதி, ஜி.டி.நாயுடு, டி.வி.எஸ் அய்யங்கார், என்.எஸ்.கே, தோழர் ஜீவா - என்று தான் தொடர்பும் பழக்கமும் வைத்திருந்த அனைவரைப் பற்றியும் பேசுகிறார்.


பெரியாரின் அன்புத் தொண்டராக இருந்த போதும் தனது கண்கண்ட தெய்வமாக அந்நாளில் செஷன்ஸ் கோர்ட் ஜட்ஜாக இருந்த பிராமண சமுதாயத்தைச் சேர்ந்த கணேச அய்யரைக் குறிப்பிடுகிறார். அவர் தனக்கு  செய்த உதவிகளையும் மறக்காமல் சொல்லியுள்ளார். “விமலா அல்லது விதவையின் கண்ணீர்” என்ற நாடகத்தை எம்.ஆர்.ராதா நடத்தியபோது பழமைவாதிகள் கோர்ட்டில் தடை கோரி வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதியான கணேச அய்யர் நாடகத்தைப் பார்த்து விட்டு எம்.ஆர்.ராதாவை பாராட்டியதோடு இந்தியா முழுக்க இந்த நாடகம் நடத்தப்பட வேண்டும் என்றார். அதன் பிறகும் பல்வேறு சந்தர்ப்பங்களில் ஜட்ஜ் கணேச அய்யர் எம்.ஆர்.ராதாவிற்கு இக்கட்டான பல சந்தர்ப்பங்களில் உதவி செய்துள்ளார்.


தனக்கும் எம்ஜிஆருக்கும் எதனால் தகராறு ஏற்பட்டது என்பதனையும் ஓரிடத்தில் வெளிப்படையாகவே சொல்லுகிறார். எம்ஜிஆரால் தான் பாதிக்கப்பட்டது போலவே திரைப்பட உலகத்தினரில் சிலர்  பாதிக்கப்பட்டது குறித்தும் சொல்கிறார். “அந்த சமயத்திலே ராமச்சந்திரனாலே பாதிக்கப்பட்ட சில நடிகர்களும் நடிகைகளும் என்கிட்டே வந்து, அவர் எங்க பொழப்பை அப்படிக் கெடுத்துட்டார். அவர் செய்யற தான தர்ம சாகசத்தாலே இதெல்லாம் வெளியே தெரியமாட்டேங்குதுன்னு புகார் சொல்ல ஆரம்பிச்சாங்க அதேபோல தனக்கும் எம்ஜிஆருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டை பற்றியும் சில கருத்துக்களை புத்தகத்தின் கடைசி அத்தியாயத்தில் சொல்லுகிறார்.

அதுக்கு மேலே என்ன நடந்தது, நான் ஏன் ஜெயிலுக்குப் போனேங்கிறதெல்லாம் உங்களுக்கும் தெரியும். இந்த உலகத்துக்கும் தெரியும். அதைத் திரும்பத் திரும்பச் சொல்லி மேலே மேலே கசப்பை வளர்த்துக்கிட்டிருக்க நான் விரும்பல்லே. அப்படிச் சொல்லச் சொல்லி என்னை வற்புறுத்தறவங்களுக்கெல்லாம் நான் சொல்ற பதில் இதுதான். தயவு செஞ்சி என் வழக்கு சம்பந்தப்பட்ட விவரங்களைக் கொஞ்சம் விரிவா வெளியிட்டிருக்கிற பேப்பருங்களை எடுத்து வைச்சுக்கிட்டு இன்னொரு தடவை ஊன்றிப் படியுங்க என்கிறதே அது. அதுங்களிலே இருக்கிற என் வக்கீல்களின் வாதங்கள் உங்களுக்கு உண்மையை ஓரளவாவது எடுத்துக் காட்டும்


புத்தகத்தின் தலைப்பில் சிறைச்சாலை அனுபவங்கள் என்று சொல்லப்பட்டாலும் சிறையில் தான் பட்ட அனுபவங்களையோ அல்லது அதனால் ஏற்பட்ட சிந்தனைகளைப் பற்றியோ இங்கு எம்.ஆர்.ராதா சொல்லவில்லை. முழுக்க முழுக்க அவருடைய வாழ்க்கைக் குறிப்புகளே.புத்தகத்தில் ஆங்காங்கே இருக்கும் அவரது கருத்துக்கள் சில: 

"எனக்குத் தெரிஞ்ச வரையிலே ரோசமுள்ளவனும் மானமுள்ளவனும் ஜெயில்லே இருக்கான்! அங்கே வேலை கெடைக்குது. கூலி கெடைக்குது"

"தமிழனைப் பொறுத்தவரையிலே எந்த வீரமும் சோறில்லாமல் போனாத்தான் வரும்”

"படிக்காதவனுக்குச் சட்டம் தெரியறதில்லே; படிச்சவனுக்குச் சட்டம் தெரியுது. அதனாலே படிக்காதவன் எந்தத் தப்பைச் சேஞ்சாலும் சட்டத்துக்கு விரோதமா சேஞ்சிட்டு மாட்டிக்கிறான். படிச்சவன், செய்ய வேண்டிய அயோக்கியத் தனங்களை யெல்லாம் சட்டப்படிடே சேஞ்சிட்டு என்னிக்கும் பெரிய மனுஷனா பெயர் எடுத்துக்கிட்டிருக்கான்."

"என்ன பிரயோசனம்? ஊர்ப் பெரிய மனுஷங்க ரவுடிசமெல்லாம் அந்தந்த ஊரிலேதானே செல்லும்? மற்ற ஊர்களிலே செல்லாதே" 




நூல் வெளியீடு: பாரதி புத்தகாலயம், சென்னை. நூலின் விலை ரூ 70 பக்கங்கள்: 144