Sunday 29 May 2016

சிலந்தி லில்லி ( Spider Lily )



சில தினங்களுக்கு முன்னர் திரு G.M.B அய்யா அவர்கள் தனது வலைத்தளத்தில் மலரே மலரே வாசமில்லா மலரே என்ற தலைப்பினில் பதிவு http://gmbat1649.blogspot.in/2016/05/blog-post_14.html ஒன்றை வெளியிட்டு இருந்தார்கள். அதில் அவரது வீட்டுத் தோட்டத்தில் பூத்த அதிசய மலர் ஒன்றினைப் பற்றி படங்களுடன் வெளியிட்டு இருந்தார். அதனைத் தொடர்ந்து நானும் எங்கள் வீட்டுத் தோட்டதில் மலர்ந்த ஒரு பூச்செடியைப் பற்றி இங்கு சொல்லப் போகிறேன். 

லில்லி:

நாங்கள் புறநகர் பகுதியில் புதுவீடு கட்டி வந்த சமயத்தில் (1998) வீட்டு முகப்பில், காம்பவுண்டு சுவருக்குள்  நிறைய பூச்செடிகள் வைத்து இருந்தோம். என்னதான் தண்ணீர் ஊற்றி கவனமாக பார்த்துக் கொண்டாலும், எல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான். தண்ணீரின் ஈரம் பூமியில் காய்ந்து, சில சின்ன செடிகள் பட்டு போய் விட்டன. இப்படி பட்டுப்போன செடிகளில் வெள்ளை நிற லில்லி செடியும் ஒன்று..இதனை விற்ற நர்சரியில் ஆப்ரிக்கன் லில்லி என்று சொல்லி கொடுத்தார். இதில் நீலம் அல்லது வெள்ளை நிறப் பூக்கள் பூப்பவை என்று இருவகை உண்டு. எங்கள் வீட்டில் இருந்தது வெள்ளை லில்லி. 

சில வருடங்கள் கழித்து, ஒரு மழைக்காலத்தில் (2014) மறுபடியும் அந்த செடி துளிர்த்தபோது, ஒருவித புழுக்கள் செடியைக் கடித்து குதறிக் கொண்டு இருந்தன. உடனே செடியைக் காப்பாற்ற வேண்டி, வீட்டில் இருந்த கொசுமருந்தை (Sprayer) செடிகள் மீதும், புழுக்கள் மீதும் தெளித்தேன். புழுக்கள் செத்து விட்டன; கூடவே அடுத்தநாள் செடியும் பாதி பட்டு போய், அப்படியே முழுதும் அழிந்து விட்டது. (நான் நர்சரி கார்டனில் போய் ஆலோசனை கேட்டு இருக்க வேண்டும்) (படங்கள் கீழே)2014







மழைக்காலத்தில்:

அப்புறம் இந்த செடி சில மாதங்களாக கண்ணில் தென்படவில்லை. சென்ற ஆண்டு (2015) மழைக்காலத்தில் மீண்டும் துளிர்விட்டு சில பூக்களை பூத்தது. (படங்கள் கீழே)








 இந்த ஆண்டு (2016) கடும் வெயில் காரணமாக காய்ந்து போயிருந்த இந்த செடி, அண்மையில் பெய்த கோடைமழையால் துளிர்த்து விட்டது முதலில் ஒரு பூ மட்டும் பூத்து இருந்தது. அப்புறம் ஐந்தாறு பூக்கள்.. பூப்பதும் உதிருவதுமாக இருக்கின்றன. எனவே தரையில் இருக்கும் இந்த செடியைக் காப்பாற்ற. மண் நிரப்பிய  சிமெண்டு பூத்தொட்டிக்குள் மாற்றி விடலாம் என்று இருக்கிறேன். (படங்கள் கீழே)











செடி பற்றிய விவரங்கள்:

வழக்கம் போல கூகிளில் தேடியபோது இதே செடியைப் போன்ற இலைகள் கொண்ட செடியின் விவரம் கிடைத்தது. இதன் தாயகம் தென் ஆப்பிரிக்கா. இதன் தாவரப் பெயர் agapanthus-africanus என்று தெரிய வந்தது. www.boethingtreeland.com/agapanthus-africanus-peter-pan-white.html ) ஆனால் இந்த இணையதளத்தில் உள்ள பூக்களின் படங்களுக்கும், எங்கள் வீட்டில் உள்ள செடியில் உள்ள பூக்களின் படங்களுக்கும் வித்தியாசம் இருப்பது போல் தோன்றுகிறது. எங்கள் வீட்டில் உள்ள செடி முழுமையாக, உயரமாக வளர்ந்து பூத்தால்தான் இரண்டும் ஒன்றா அல்லது வெவ்வேறு வகையா என்பதும், இது எந்த வகை ஆப்பிரிக்கன் செடி என்ற விவரமும் தெரிய வரும். விவரம் அறிந்தவர்கள் சொல்லலாம்.

பிற்சேர்க்கை – ( 01.06.2016 – 22.36) ஸ்பைடர் லில்லி

மரியாதைக்குரிய வலைப்பதிவர்கள் திரு V.N.S (வே.நடனசபாபதி) சகோதரி கீதமஞ்சரி மற்றும் தளிர் சுரேஷ்  மூவரும் கீழே பின்னூட்டங்களில் தமது கருத்துக்களை சொல்லியுள்ளார். மூவருக்கும் நன்றி.
இவற்றுள் சகோதரி கீதமஞ்சரி அவர்கள் கொடுத்த சுட்டியில் உள்ள     ( www.flowersofindia.net/catalog/slides/Long%20Flowered%20Spider%20Lily.html ) Long Flowered Spider Lily என்ற படம் பொருத்தமானதாக உள்ளது. அவருக்கு மீண்டும் நன்றி. எனவே மேலே பதிவிலும் சில மாற்றங்கள் செய்து எழுதியுள்ளேன். நண்பர்கள் மன்னிக்கவும். அதில் உள்ள படங்கள் கீழே.



படங்கள் – மேலே நன்றி: flowersofindia.net

இன்று (01.06.16) எனது அம்மா வழி உறவினர் ஒருவரது வீட்டு ’மாமன் நலுங்கு’ நிகழ்ச்சிக்காக, அம்மா கிராமத்திற்கு சென்று இருந்தேன். காட்டில் தேடிய மூலிகை காலில் பட்ட கதையாக,  அவரது வீட்டிலும் இதே செடிகள் இருந்தன. அவர் தோட்டக்கலைத் துறையில் பணிபுரிபவர். அவரும் இதனை SPIDER LILY என்று உறுதிப்படுத்தியதோடு Ornamental Plants வகையைச் சேர்ந்த செடி என்றும் குறிப்பிட்டார். இன்று அவரது வீட்டில் எனது செல்போனில் எடுத்த படம் ஒன்று கீழே. 

 

Sunday 22 May 2016

வங்கிக் கடனை திரும்பக் கட்ட வேண்டுமா?



’கடன் பட்டார் நெஞ்சம் போல கலங்கினான் தார்வேந்தன் இலங்கை இராவணன்’ என்று சொல்லுவார்கள். கம்பர் இவ்வாறு பாடவில்லை; இது ஒரு தனிப்பாடல் வரி என்பார்கள். நிற்க. இப்போதெல்லாம் கடன் கொடுத்தவர்கள்தான் கலங்கி நிற்கிறார்கள் என்பது புதுமொழி. ஆனாலும் வங்கிக் கடன் என்றாலே கொடுத்தவரும் கலங்குவதில்லை; வாங்கியவர்களில் கலங்காதவர்களும் உண்டு.

இருபது அம்சத் திட்டம்:

நான் வெளியூரிலிருந்து உள்ளூர் நகரக் கிளைக்கு பணிமாற்றல் பெற்று வந்த நேரம். பாரதப் பிரதமரின் 20 அம்சத் திட்டத்தின் கீழ்,சுயவேலை வாய்ப்பு என்ற பெயரில் வேலையில்லாத பட்டதாரிகளுக்கு, வேலைவாய்ப்பு அலுவலகம் பரிந்துரையின்படி அரசு வங்கிகளில் கடன் தொகை வழங்கிக் கொண்டு இருந்தார்கள். வழக்கம் போல அவரவர் ஏரியாக்களுக்கு ஒதுக்கப்பட்ட வங்கிகளுக்கு மக்கள் படையெடுப்பு. விண்ணப்ப பாரங்களை பூர்த்தி செய்து தருவதற்கென்றே கடைவீதியில் சிலர் கடை போட்டு, கூடவே ஸிராக்ஸ் மெசினும் வைத்து நல்ல வியாபாரம். சில சமயம் வங்கி சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு விடை தெரியாவிடில் வங்கி ஊழியர்களிடம் கேட்டு விண்ணப்ப பாரங்களில் எழுதுவார்கள். . இதில் அரசியல்வாதிகள் சிபாரிசுக் கடிதங்களும் உண்டு. வேலை வாய்ப்பு அலுவலகம், தாலுகா அலுவலகம், கட்சி ஆபிஸ், வங்கிகள் என்று அலைந்ததன் பலனாக, கிட்டத் தட்ட எல்லோருக்குமே கடன் தொகை கிடைத்தது எல்லாம் முடிந்து கடன் வாங்கிய ஒருவர் என்னிடம் கடைசியாக கேட்ட கேள்வி “ சார்! வங்கியில் வாங்கிய இந்தக் கடனை திரும்பக் கட்ட வேண்டுமா?” என்பதுதான்.

விவசாயி என்றால்..

இந்திய விவசாயி என்றால் நிறையபேரின் மனக்கண்ணில் வருவது ஏர் கலப்பையும், மேலாடை அணியாத விவசாயியும்தான். ஆனால் நடைமுறையில், வங்கிக்கடன் பெறுபவர்கள் அனைவருமே வசதியான விவசாயிகள்தான். இவர்கள் இலவச மின்சாரம், உர மான்யம், விதை மான்யம், கடன் தள்ளுபடி என்று எல்லா சலுகைகளும் பெறுவார்கள். அவர்கள் விவசாயத்திற்கு என்று டிராக்டர் வாங்குவார்கள். தாங்கள் வைத்து இருக்கும் நிலங்களில் பயன்படுத்துவது மட்டுமன்றி, மற்ற விவசாயிகளுக்கும்  இந்த டிராக்டரை மணிக்கு இவ்வளவு என்று வாடகைக்கும் விடுவார்கள்.. ஆனால் கடன் வசூல் என்று போனால் பணத்தை ஒழுங்காக கட்டுவது இல்லை.  காரணம் என்றேனும் ஒருநாள் ஆட்சியில் இருக்கும் அல்லது ஆட்சிக்கு வர இருக்கும் அரசியல் கட்சிகள், இந்த விவசாயக் கடனை எல்லாம், தள்ளுபடி செய்துவிடும் என்ற எதிர்பார்ப்புதான். ஒரு சாதாரண விவசாயியும், ஏக்கர் கணக்கில் நிலம் வைத்திருக்கும் இந்த விவசாயியும் ஒன்றா? என்பதை எண்ணிப் பார்ப்பதில்லை. ஒருமுறை நாளிதழ் ஒன்றில் நான் கண்ட விளம்பர வாசகம் ‘இலவச மின்சாரம் மற்றும் பம்புசெட்டுடன் கூடிய விவசாய பண்ணைத் தோட்டம் விற்பனைக்கு’

விஜயமல்லையாக்கள்:
                                                                                                                                                                  
ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப், ப்ளாக் – என்று விஜயமல்லையாவைப் பற்றி விமர்சனம் வராத நாளே இல்லை எனும் அளவுக்கு செய்தி பரிமாற்றம் இருந்தது. ஒருவிதத்தில் வங்கி நடைமுறைச் சட்டத்தில், கடன் வழங்குவதில் உள்ள அரசியலையும், வசூல் விஷயத்தில் உள்ள பலவீனத்தையும் இவர்களால்தான் மக்கள் தெரிந்து கொண்டனர் எனலாம். இதில் குறிப்பாக சொல்ல வேண்டிய விஷயம் என்னவென்றால், இதுபோன்ற மல்லையாக்கள் உருவாக எல்லா அரசியல் கட்சிகளுமே காரணம் என்பதுதான். இது போன்ற ஆட்களிடம் கட்சி பேதமின்றி நன்கொடை தாராளமாக இருக்கும். எனவே இந்த விஜயமல்லையாக்கள் வங்கிக்கடன் பெறுவதற்கு எல்லா அரசியல் கட்சிகளுமே உதவும். இவர்களும் கிடைத்த வாய்ப்பை பெற்றுக் கொண்டு, சட்டத்தில் இருக்கின்ற, சந்து பொந்துகளில் நுழைந்து, வங்கிக் கடனை, வாராக் கடனாக (NPA) மாற்றி விட்டு ’பெப்பே’ காட்டி விடுகின்றனர். சிறிய கடன்காரர்கள் வகை தெரியாமல் முழிக்கிறார்கள். இவர்களிலும் மல்லையாக்கள் இருக்கிறார்கள். வங்கிகளில் வாராக்கடன் என்பது நாட்டிற்கு பொருளாதாரக் கேடு.

                  (ALL  PICTURES COURTESY: GOOGLE IMAGES)

Thursday 19 May 2016

சட்டமன்ற தேர்தல் 2016 – வின்னரும் ரன்னரும்



ஒரு வழியாக சட்டமன்றத் தேர்தல் - 2016 முடிந்தது. பத்திரிகைகள், டீவி சானல்கள் காட்டிய வாணவேடிக்கைகளில், நமது மக்கள் , தங்களுடைய சொந்த கவலைகள், பிரச்சினைகள் எல்லாவற்றையும், கொஞ்சம் மறந்து இருந்தனர். பரபரப்பான கால் பந்தாட்டம் ஒன்று முடிந்ததைப் போன்று இருக்கிறது. அதிலும் ஒவ்வொருவரும் அ.தி.மு.க அல்லது தி.மு.க ஆட்சியை அமைக்கும் என்று மாறி மாறி மக்களை குழப்பிக் கொண்டு இருந்தனர். 

கருத்துக் கணிப்பும் வாழ்த்துக்களும்:

கட்சி வாரியாக - முடிவுகள்
கட்சி
முன்னிலை / வெற்றி (19.35PM)
அதிமுக
134
திமுக
89
தேமுதிக
00
பாமக
00
காங்கிரஸ்
08
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
01
புதிய தமிழகம்
00
பாஜக
00
மதிமுக
00
விடுதலைச் சிறுத்தைகள்
00
இந்திய கம்யூ.
00
மார்க்சிஸ்ட் கம்யூ.
00
(நன்றி: தி இந்து தமிழ் - வியாழன், மே 19, 2016)

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் மே,16, 2016 அன்று (அரவக்குறிச்சி, தஞ்சை நீங்கலாக) 232 தொகுதிகளுக்கும் ஒரேநாளில் நடந்தது. எல்லோரும் தி.மு.க – காங்கிரஸ் கூட்டணிதான் வெற்றி பெறும் என்று கணிப்பு சொல்ல, C-Voter மற்றும் தந்தி டீ.வி இரண்டும் அ.தி.மு.க.தான் மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று கணித்திருந்தன இப்போது யார் வின்னர், யார் ரன்னர் என்று முடிவுகளும் தெரிந்து விட்டன. இந்த தேர்தலில் அ.தி.மு.க வின் வெற்றி என்பது எதிர்பார்த்த ஒன்றுதான்.

தொடர்புடைய எனது அரசியல் பதிவு: மீண்டும் ஆட்சியில்அம்மாதான் http://tthamizhelango.blogspot.com/2016/02/blog-post_20.html
 
வெற்றி பெற்றவருக்கு வாழ்த்து சொல்லுதல் மரபு. அந்த வகையில் இந்த தேர்தலில் வெற்றி பெற்ற அ.இ.அ.தி.மு.க வுக்கும், அதன் பொதுச்செயலாளர் ஜெயலலிதா அவர்களுக்கும் வாழ்த்துக்கள். 

தி.மு.க அல்லது அ.தி.மு.க:

அடுத்து இரண்டாவதாக வந்த தி.மு.க வுக்கும், அதன் தலைவர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

தமிழகத்தைப் பொறுத்தவரை தி.மு.க வா அல்லது அ.தி.மு.க வா என்ற போட்டியில் அ.தி.மு.க வெற்றி பெற்றுள்ளது. தமிழக மக்கள் எங்களுக்கு இந்த இரண்டு கட்சிகளை விட்டால் வேறு போக்கிடம் இல்லை என்று சொல்லி விட்டார்கள்.

ஊடகங்கள் பெரிது படுத்திய, மக்கள் நலக் கூட்டணியின் தோல்விக்கு முக்கிய காரணமே, வை.கோபால்சாமியின் செயல்பாடுகளே என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. தேர்தலின்போது ஈழம் பற்றி மூச்சு பேச்சு இல்லாத வை.கோ அவர்கள், இனி பச்சைத் தலைப்பாகையை கழட்டி விட்டு, கறுப்பு துண்டுடன் மீண்டும் முழங்கச் சென்று விடுவார். 

காம்ரேடுகளும், திருமாவளவனும் மட்டும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து இருந்தால், குறிப்பிடத்தக்க இடங்களையாவது பெற்று இருப்பார்கள்.வாசன் அவர்கள் தனது சகாக்களுடன் மீண்டும் காங்கிரஸில் சேருவதுதான் நல்லது. அ.தி.மு.க துணையோடுதான் பி.ஜே.பி இங்கு அரசியலில் காலூன்ற முடியும் என்பது மீண்டும் நிரூபணம் ஆகி விட்டது. டாக்டர் ராமதாசின் பா.ம.கவின் எதிர்காலம் எப்படி என்பதனை காலம்தான் முடிவு செய்யும்.  

ஆளுங்கட்சிக்கு:

எது எப்படியோ மக்கள் மீண்டும் அ.தி.மு.க வை ஆட்சியில் அமர்த்தியுள்ளனர். அவர்கள் மக்கள் நலனில் அக்கறை கொண்டு நல்லது செய்தால் சரி.

நடக்கும் என்பார் நடக்காது
நடக்காதென்பார் நடந்துவிடும்
கிடைக்கும் என்பார் கிடைக்காது
கிடைக்காதென்பார் கிடைத்துவிடும்
-    கவிஞர் கண்ணதாசன் ( படம்: தாயைக் காத்த தனயன் )

          (ALL  PICTURES COURTESY: GOOGLE IMAGES)