Monday, 24 October 2016

ஹார்லிக்ஸ் நினைவுகள்இது ஒரு விளம்பரக் கட்டுரை கிடையாது என்பதனை முன்னதாகவே சொல்லி விடுகிறேன். எனது சிறுவயது மலரும் நினைவுகளில் ஹார்லிக்ஸும் (HORLICKS) ஒன்று. இன்று எத்தனை பேர், சிறு வயதிலிருந்து இன்னும் ஹார்லிக்ஸ் சாப்பிடுகிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால் நான் இப்போதும் எனக்கு விருப்பப்பட்ட போதெல்லாம் பாலில் சேர்த்தோ அல்லது சுடு தண்ணீரில் கலந்தோ அல்லது அப்படியே வெறுமனே ஆகவோ ஹார்லிக்ஸ் சாப்பிடுகிறேன்.

டாக்டர்களின் சிபாரிசு:

ஒருசமயம் ஹார்லிக்ஸ் என்பது டாக்டர் சீட்டு இருந்தால்தான் மருந்துக் கடைகளில் வாங்க முடியும் என்ற நிலைமை இருந்தது. அன்றைய டாகடர்களும் ஹார்லிக்ஸை சிபாரிசு செய்தார்கள். அப்போது இருந்த டிமாண்டைப் பார்த்த, பர்மாபஜார் வியாபாரிகள் கப்பலில் கொண்டு வரப்பட்ட பெரிய, சிறிய ஹார்லிக்ஸ் பாட்டில்களை தங்கள் கடைகளில் விற்றனர். இந்த பர்மா பஜார் பாட்டில்களில் சிலவற்றில் மேல்நாட்டு வாட்சுகள் இருந்ததாகக் கூட கதைகள் உண்டு. அந்த காலத்து, எங்களது உறவினர் ஒருவர் கண்டியிலிருந்து வந்த போது, அலாரம் டைம்பீஸ், சிலோன் டீ ஆகியவற்றுடன் ஒரு ஹார்லிக்ஸ் பாட்டிலையும் கொண்டு வந்ததாக நினைவு. அப்புறம் மிலிட்டரி கேண்டீன்களில் விற்றார்கள். தாராளமாக கிடைக்கத் தொடங்கியவுடன் இப்போது மெடிக்கல் ஷாப்புகளில் மட்டுமன்றி மளிகைக்கடைகளிலும், சூப்பர் மார்க்கெட்டுகளிலும் ஹார்லிக்ஸ் கிடைக்கிறது.

சின்ன வயதினிலே:

நான் அப்போது ஆரம்ப பள்ளிச் சிறுவன். அப்போது நாங்கள் குடியிருந்த பகுதியில், சிந்தாமணி கடைவீதியில் இருந்த ‘டேவிட் மளிகை ஸ்டோர்’ என்ற கடையில்தான் மாதாந்திர மளிகை சாமான்கள் வாங்குவது வழக்கம். அந்த பட்டியலில் எனக்காக மால்ட்டேட் மில்க் – ஹார்லிக்ஸ் பாட்டில் ஒன்றும் இருக்கும். எனது அம்மா ஹார்லிக்சை பாலில் சேர்த்தும், பால் இல்லாமல் போனால் சுடுதண்ணீரிலும் கலந்து தருவார்கள். இப்போது போல் அப்போது கடைகளில், பால் தாராளமாக கிடைக்காது. ஹார்லிக்சை கடையில் வாங்கி, வீட்டுக்கு வந்தவுடன் முதலில் இரண்டு ஸ்பூன் வெறுமனே அப்படியே வாயில் போட்டு சுவைப்பதில் எனக்கு ஒரு மகிழ்ச்சி. இப்போதும் அப்படியேதான் (இப்போதுள்ள ஹார்லிக்ஸில் பழைய அடர்த்தி, சுவை இல்லை)

ஒட்டகப் பால்:

நான் படித்த ஆரம்பப்பள்ளி, ஹோலிகிராஸ் என்ற கிறிஸ்தவ மெஷினரியால் நடத்தப்படுவது. (இன்றும் அந்த பள்ளி இருக்கிறது) ஒருநாள், நான் படித்த இந்த பள்ளிக்கு அருகில் இருந்த சில கடைகளில் ஒட்டகப் பால் என்று இறுகிப்போன ஹார்லிக்ஸ் கட்டிகளை விற்றார்கள். வாங்கித் தின்றவர்களில் நானும் ஒருவன். இதனை அறிந்ததும், பள்ளி தலைமை ஆசிரியை ( இவர் கிறிஸ்தவ கன்னியாஸ்திரீ), காலை இறை வணக்கத்தின் போது “ யாரும் ஒட்டகப்பால் என்று வெளியில் வாங்கி சாப்பிடாதீர்கள். அது கெட்டுப் போன ஹார்லிக்ஸ். வயிற்றுக்கு கெடுதல். பக்கத்தில் உள்ள ஒரு குடோனிலிருந்து தூக்கி எறியப்பட்ட அவற்றை, பாட்டில்களை உடைத்து சிலர் விற்கிறார்கள், அவற்றில் கண்ணாடித் துண்டுகளும் இருக்கும், வயிற்றை கிழித்து விடும் ” என்று எச்சரித்தார்கள்.

ஹார்லிக்ஸ் பாட்டில்கள்:

இந்த காலியான ஹார்லிக்ஸ் பாட்டில்கள் பற்றி சொல்வதென்றால், அந்த காலத்து வீட்டுத் தயாரிப்புகளீல் ஒன்றான ஊறுகாய் பற்றியும் சொல்ல வேண்டி வரும். ஏனெனில் காலியான ஹார்லிக்ஸ் பாட்டில்கள் நல்லெண்ணெய், கடலெண்ணெய் வாங்குவதற்கு பயன்பட்டதோடு, ஊறுகாய் போட்டு வைப்பதற்கும், விற்பதற்கும் பயன்பட்டன. இப்போது முன்புபோல கண்ணாடி பாட்டிலில் ஹார்லிக்ஸ் வருவது இல்லை. பைபர் க்ளாஸ் பாட்டில்களில் வருகின்றன.  
     
தியேட்டர்களில் விளம்பரம்:

டெலிவிஷன் வருவதற்கு முன்னர் அப்போதெல்லாம் தியேட்டர்களில் படம் ஆரம்பிப்பதற்கு முன்னர் அல்லது இடைவேளையில் பீடி, சிகரெட் விளம்பரங்களோடு அழகிய மேனிக்கு லக்ஸ் மற்றும் ஹார்லிக்ஸ், வாஷிங் பவுடர் நிர்மா விளம்பரப் படங்களையும் போடுவார்கள். விளம்பரத்தின் கடைசியில் கரகரத்த குரலோடு பீகாரில் வெள்ளம் என்றோ அல்லது வறட்சி என்றோ ஒரு ரீல் ஓட்டுவார்கள். ஹார்லிக்ஸ் விளம்பரங்களில் ஒரு டாக்டர், ஒரு வக்கீல் (”இந்த காலத்திலே எதையுமே நம்ப முடியாது), ஒரு இல்லத்தரசி, ஒரு சிறுவன் ( ‘அப்படியே சாப்பிடுவேன்’) என்ற விளம்பரம்தான் எனக்கு பிடித்தமானது.

ஹார்லிக்ஸ் வரலாறு:

(படங்கள் மேலே ஹார்லிக்ஸ் நிறுவனர்கள் வில்லியம் ஹார்லிக் (William Horlick) மற்றும் ஜேம்ஸ் ஹார்லிக் (James Horlick)

இதுநாள் வரை ஹார்லிக்சை சுவைத்துதான் பழக்கமே ஒழிய, அதன் வரலாறு தெரியாது. இந்த கட்டுரைக்காக இப்போதுதான் படித்து தெரிந்து கொண்டேன். இங்கே அந்த வரலாற்றை சொல்லப் போனால் கட்டுரை நீண்டு விடும். எனவே நேரம் கிடைக்கும் போது கீழே உள்ள கட்டுரைகளை நண்பர்கள் படிக்கவும். 

 
40 years....and now: How Horlicks grew up with the times http://www.rediff.com/business/report/pix-40-yearsand-now-how-horlicks-grew-up-with-the-times/20141002.htm
                                                                                                                                                                  
 
                        (ALL  PICTURES COURTESY: GOOGLE IMAGES)Sunday, 23 October 2016

2000 ரூபாய் நோட்டுஇன்று (23.10.16) காலை இண்டர்நெட்டைத் திறந்து செய்திகளைப் பார்த்தால், அம்மாவின் செய்திகளை எல்லாம் (அவதூறு, கைது என்று செய்திகள் வந்தவுடன் நிறையபேர் அடக்கி வாசிக்க ஆரம்பித்து விட்டார்கள்) பின்னுக்குத் தள்ளிவிட்டு ஒரு பரபரப்பு செய்தி. அந்த செய்தி இதுதான். ’ விரைவில் வருகிறது 2000 ரூபாய் நோட்டு – அச்சடிப்பு தீவிரம்”

செய்தியும் பின்னணியும்:

பிஜேபி ஆட்சிக்கு வந்தது முதல் நாங்கள் உள்ளூரில் கறுப்பு பணத்தை ஒழிப்போம், வெளிநாடுகளில், குறிப்பாக ஸ்விஸ் வங்கியில் மறைத்து வைத்து இருக்கும் கணக்கில் காட்டாத பணத்தை வெளிக் கொணருவோம் என்று சொல்லி வருகிறார்கள். காலக் கெடுவெல்லாம் வைத்து பார்த்தார்கள்.. ம்ஹூம் … எதிர்பார்த்த விளைவு இல்லை. 

இப்போது புழக்கத்தில் இருக்கும் கரன்சி நோட்டுகளில் ரூ1000 தான் அதிகப்பட்ச மதிப்பு உள்ளது. கறுப்பு பணம் பேச்சு வந்தவுடன், வழக்கம் போல இந்த ஆயிரம் ரூபாயை செல்லாது என்று அறிவித்து விடுமோ? என்ற பயமும், கேள்வியும் பலரது மனதில் உண்டு. இப்படியான நேரத்தில்  2000 ரூபாய் நோட்டு வெளிவரப் போகிறது என்ற செய்தி பத்திரிகைகள் வழியாக கசிய விட்டு இருப்பது, மக்கள் மத்தியில் பல கேள்விகளை எழுப்பி உள்ளது.

ஒன் இந்தியா – தமிழ்(இணையம்) வெளியிட்டுள்ள செய்தி இது (கீழே)

// ரிசர்வ் வங்கியின் உத்தரவுப்படி 2,000 ரூபாய் நோட்டுக்கள் மைசூரு கரன்சி அச்சகத்தில் அச்சிடப்பட்டு வருவதாகத் தெரிகிறது. இந்த நோட்டுக்களை விரைவில் புழக்கத்துக்கு விட ரிசர்வ் வங்கியை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளதாக நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த 2000 ரூபாய் நோட்டுக்கள் அடுத்த ஆண்டு துவக்கத்தில் புழக்கத்தில் வரும் என்று எதிர் பார்க்கப்படுகின்றது.//        

தினகரன் (இணையம்) வெளியிட்டுள்ள செய்தி இது (கீழே)

// மும்பை: ரிசர்வ் வங்கி விரைவில் 2,000 ரூபாய் நோட்டை வெளியிட உள்ளது.  தற்போது அதிகபட்ச மதிப்பாக ஆயிரம் ரூபாய் நோட்டும், இதற்கு அடுத்து 500 ரூபாய் நோட்டும் புழக்கத்தில் உள்ளது. கருப்பு பண புழக்கத்தை தடுக்க வேண்டும் என்று மத்திய அரசு தீவிரம் காட்டி வரும் நிலையில், அதிக மதிப்பிலான ரூபாய் நோட்டு கருப்பு பண பதுக்கலுக்கு வழிவகுக்கும் என்ற கருத்து எழுந்துள்ளது.

இதற்கேற்ப, ஆயிரம் ரூபாய் உள்ளிட்ட அதிக மதிப்பிலான ரூபாய் நோட்டு புழக்கத்தை தடுக்க வேண்டும், இவற்றை வாபஸ் பெற வேண்டும் என்று பல்வேறு தரப்புகளில் இருந்து மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. இந்நிலையில், ரிசர்வ் வங்கி 2,000 நோட்டை வெளியிட உள்ளது. மைசூருவில் உள்ள அச்சகத்தில் இந்த நோட்டுக்கள் அச்சிட்டு தயாராக இருப்பதாகவும், விரைவில் புழக்கத்தில் வெளியிடப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், ரிசர்வ் வங்கி அல்லது மத்திய அரசு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. //

இதே செய்தியை தி இந்து, தினமணி ஆகிய செய்திப் பத்திரிகைகளும் வெளியிட்டுள்ளன.

செய்தியின் எதிரொலி:

இப்போது புழக்கத்தில் இருக்கும், ரிசர்வ் வங்கி அறிவிக்காத நிலையிலும், பொதுமக்கள் மத்தியில் 50 பைசா நாணயத்தை வாங்க மறுக்கிறார்கள். இந்த ஐம்பது பைசாவால் ஏற்படும் கடுமையான வாக்கு வாதங்களை பேருந்துகளிலும், பெட்டிக் கடைகளிலும், பெரிய கடைகளிலும் காண முடிகிறது. நல்ல நாளிலேயே நமது மக்கள் தில்லைநாயகமாக இருப்பார்கள். இப்போது இப்படி ஒரு செய்தி கசிய விடப்பட்டுள்ளது என்ன விளைவை ஏற்படுத்தும் என்று சொல்ல வேண்டியதில்லை. 

தொடர்புடைய எனது முந்தைய பதிவுகள்:

ஆயிரம் ரூபாய் நோட்டு செல்லாது ( எனது 101 ஆவது பதிவு) http://tthamizhelango.blogspot.com/2013/06/101.html  

ஐநூறு, ஆயிரம் என்றால் நம்பர் வேண்டுமாம் http://tthamizhelango.blogspot.com/2015/11/blog-post_22.html  

Sunday, 16 October 2016

அரண்மனை ரகசியங்கள்’ஒருவர் அறிந்தால் ரகசியம்; இருவர் அறிந்தால் அம்பலம்’ என்பது பழமொழி. இது முற்றிலும் உண்மை. அந்நாளைய அரண்மனை முதல் இந்நாளைய அரசியல் ரகசியங்கள் வரை இப்படித்தான் வெளியே வந்துவிடுகின்றன.

பணியாளர்கள்:

என்னதான் அதிகாரம் மிக்கவர்களாக இருந்தாலும், பல காரியங்களுக்கு அடுத்தவர்களைச் சார்ந்தே வாழ வேண்டும். உதாரணத்திற்கு சமையல், மருத்துவம், சிகை அலங்காரம் போன்றவை. எனவே ராஜா, ராணிகள் தங்களுக்கென்று அரண்மனை வைத்தியர், அரண்மனை சமையல்காரர், அரண்மனை நாவிதர், அரண்மனை சேடியர், என்று தனியே பணியாளர்களை அமர்த்திக் கொண்டனர். இன்று குடும்ப மருத்துவர், குடும்ப சமையல்காரர், குடும்ப நண்பர் என்று சொல்கிறோம். இவர்கள் மூலமாகவே ரகசியங்கள் கசிந்து விடுகின்றன. அதிலும் ராஜாங்க அதிகாரியாக இருக்கும் ஒருவர் தனது மனைவியிடம் தானறிந்த ரகசியத்தை சொல்லாமல் இருக்க மாட்டார். அந்த பெண்மணி மூலம் ஊருக்கே தெரிந்து விடும். ஒரு ராஜாவிற்கு கழுதைக் காது இருப்பதை அரண்மனை நாவிதன் வெளியே வந்து தன் மனைவியிடம் சொல்ல, ஊர், உலகத்திற்கே அந்த விஷயம் தெரிந்து விடுகிறது.. நம் எல்லோருடைய விவரங்களும் கூகிள் கையில் உள்ளது. யாருமே உடைக்க முடியாத கடவுச்சொல் (Password) என்பதெல்லாம் சும்மா.

சினிமா கிசுகிசுக்கள்:

சுமார் 50 வருடங்களுக்கு முன்பு அரசியல் கிசுகிசுக்களை விட சினிமா கிசுகிசுக்களே அதிகம். நடிகர்கள் நடிககைகள் பற்றிய அந்தரங்க விஷயங்கள் அதிகமாக பேசப்படும். இந்த தகவல்களைப் பெறுவதற்கென்றே சில நிருபர்கள் விஷேசமாக அலைவார்கள். முழுக்க முழுக்க சினிமா நடிகர், நடிகையர் இடையே இருந்த அந்தரங்க விஷயங்களை நிஜமாகவும் கற்பனையாகவும் எழுதி வந்த ‘இந்துநேசன்’ பத்திரிகை ஆசிரியர் லட்சுமிகாந்தன் கொலை செய்யப்பட்டார். இன்றளவும் இந்த கொலை ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ என்று பிரமாதமாக பேசப்படுகிறது.

அரசியல் கிசுகிசுக்கள்:

அரசியல் கிசுகிசுக்கள் எழுதுவதற்கு தைரியம் வேண்டும். அண்மையில் விக்கி லீக்ஸ் வெளிப்படுத்திய அரசியல் ரகசியங்களை பற்றி அதிகம் சொல்ல வேண்டியதில்லை. ஆனால் இந்த மாதிரியான அரசியலைக் கடந்த அந்தரங்க நட்புகள், பொதுவிடத்தில் அவர்களுக்குள் நடக்கும் ‘வாக்கு வாதங்களாலேயே வெளியே வந்து விடுகின்றன. இன்னும் கிச்சன் காபினெட், தேநீர் விருந்து, திருமண விருந்து என்று பிரபலங்கள் நடத்தும் ஒன்றுகூடும் நிகழ்ச்சிகள் (get together) வழியாகவும், அரசியல் ரகசியங்கள் வீதிக்கு வந்து விடுகின்றன. 

வதந்திகள்:

சில சமயம் அரண்மனை ரகசியங்கள் கடுமையான மிரட்டல்களாலும், சட்ட பூர்வமான நடவடிக்கைகளாலும் காக்கப்படுகின்றன. இது போன்ற சமயங்களில் உண்மைக்கு மாறான அல்லது மறைக்கப்பட்ட உண்மைகள் வெளியே வதந்திகளாக உருவெடுத்து விடுகின்றன.

எனது தூரத்து உறவினர் ஒருவர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார்; விஷயத்தை அவரது குடும்பத்தினர் யாருக்கும் சொல்லாமல் கட்டி காத்தனர். அவர் நலம் பெற்று வீடு வந்தபோது, விஷயம் கேள்விப்பட்டு நலம் விசாரிக்கப் போனவர்களையும் ஒன்றுமில்லை என்று சொல்லி அனுப்பி விட்டார்கள். விளைவு? அவருக்கு என்ன நோய் என்று ஆளாளுக்கு கற்பனையாகச் சொல்லி இட்டு கட்டி விட்டார்கள். “உண்மை உறங்கும்போது பொய்கள் ஊர்வலம் போகும்” - என்பது பொன்மொழி, 

ஒரு பிரபல மருத்துவமனையில் முக்கியபிரமுகர் ஒருவரின் சிகிச்சை பற்றிய தகவல்கள் வெளியானதற்கு காரணமானவர்கள் என்று சில நர்சுகளை வேலை நீக்கம் செய்தது அந்த மருத்துவமனை நிர்வாகம் என்று செய்திகள் வந்தன. ‘உலை வாயை மூடலாம், ஊர் வாயை மூட முடியுமா?’ – என்பது பழமொழி.

சமூக வலைத்தளங்கள்:

இப்போது எல்லோரது கையிலும் இண்டர்நெட், செல்போன் - இவற்றின் புண்ணியத்தில் சமூக வலைத்தளம் என்னும் ஆயுதம் இருக்கிறது. அது ஃபேஸ்புக்காகவோ அல்லது வாட்ஸ்அப் ஆகவோ அல்லது வேறு எதுவாகவும் இருக்கலாம். ஒரு கத்தியை நல்லதுக்கும் கெட்டதுக்கும் பயன்படுத்துவதைப் போல , இந்த சமூக வலைத்தளத்தை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். அறைக்குள் நடப்பது அப்படியே அடுத்த விநாடி அம்பலத்துக்கு வந்து விடுகிறது நிறையபேர் குறிப்பாக அரசியல் அதிகாரத்தில் உள்ளவர்கள் பயப்படுவது இவற்றிற்குத்தான். இவைகள் மெய்யாகவும் இருக்கலாம்; பொய்யாகவும் இருக்கலாம். மிகைப்படுத்தப் பட்டவைகளாகவும் இருக்கலாம். 

இதில் வேடிக்கை என்னவென்றால், ஒரு செய்தியைச் சொன்னவரிடமிருந்து வெவ்வேறு நபர்களிடம் போய், அது அவரிடமே பகிரப்படும் என்பதுதான்.

                                 (ALL  PICTURES COURTESY: GOOGLE IMAGES)


Tuesday, 4 October 2016

சசிகலா – துணைமுதல்வர் ஆக வாய்ப்புசென்ற மாதம் (செப்டம்பர். 2016) 22 ஆம் தேதி முதல், தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள், உடல்நலக் குறைவு காரணமாக, சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

பால்கனிப் பாவை:                                                                                                                    

ஜெயலலிதா நடிகையாக இருந்தபோது ரசிகர்களுக்கும், அரசியல்வாதியாக மாறியவுடன் தொண்டர்களூக்கும், அடிக்கடி பால்கனியில் இருந்து காட்சி தருவார்; கையை அசைப்பார். இது என்.டி.ராமராவ் ஸ்டைல். இதனால் இவரை ‘பால்கனிப் பாவை’ என்றே அப்போது சொன்னார்கள். ஆனால், இன்றைய சூழ்நிலையில், அப்போலோ மருத்துவமனையில் ICU- வில்இருக்கும் அவர், மருத்துவமனை வாசலில் காத்து இருக்கும் தொண்டர்களை இதுவரை பார்க்க முடியாத நிலைமையில் அவரது உடல்நிலைமை இருக்கிறது.

சாதாரணமாக மருத்துவமனையில் ICU- வில் இருப்பவர்களை மற்றவர்கள் சென்று பார்க்க அனுமதி இல்லை; ரொம்பவும் வேண்டப்பட்டவர்களை மட்டும், கதவில் பொருத்தப்பட்டுள்ள கண்ணாடி வழியேதான் பார்க்க அனுமதிப்பார்கள். 

( மேலே படம் – நன்றி நக்கீரன்..இன்)

நேற்று மாலை (03.10.16) அப்போலோ மருத்துவமனை வெளியிட்டுள்ள நான்காவது மருத்துவ அறிக்கையில் முதல்வரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாகவும், கிருமி தொற்று மற்றும் சுவாசம் சம்பந்தப்பட்ட (respiratory support) சிகிச்சை கொடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்து உள்ளனர். இதில் சுவாசம் சம்பந்தப்பட்ட respiratory support என்பதனை ‘செயற்கை சுவாசம்’ என்று நாமாகவே புரிந்து கொள்ள வேண்டி உள்ளது.

துணைமுதல்வர் பதவி:

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, 02.10.16 அன்று மருத்துவமனையில் அமைச்சர்கள் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை நடத்தியதாக செய்தி. மேலும் அனைத்து அ.தி.மு.க எம்.எல்.ஏக்களையும் சென்னைக்கு வரச் சொல்லி இருப்பதாகவும் சொல்கிறார்கள். ஜெயலலிதா முழு குணம் அடையும் வரை, அரசு நிர்வாக எந்திரத்தை நடத்திடவும், எதிர்க்கட்சியினரின் சில கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், முதல்வரின் நெருங்கிய தோழி சசிகலா அவர்களை துணை முதல்வராக தேர்ந்தெடுக்கும் படியான அரசியல் சூழ்நிலை, அ.தி.மு.கவில் அமையும் போலிருக்கிறது. தமிழ்நாட்டில் நிலவும், அசாதாரண நிலைமையைக் கருத்தில் கொண்டு, சசிகலா தேர்தலில் போட்டியிட வசதியாக தஞ்சை தொகுதிக்கு தேர்தல்தேதி அறிவிக்கப்படவும் வாய்ப்பு இருக்கிறது.

கலைஞர் கருணாநிதி என்ன செய்யப் போகிறார் என்று தெரியவில்லை. மத்திய அரசுக் கட்டிலில் இருக்கும் பி.ஜே.பியின் ஆதரவு யாருக்கு என்பது வெளிப்படை.  எதுவும் நடக்கலாம்.


( மேலே படம் – நன்றி: விகடன்.காம் )
                                                                                 
ஒரு பாடல்:

’முத்துச்சிப்பி’ என்றொரு படம். ஜெய்சங்கர் - ஜெயலலிதா நடித்தது. அந்த படத்தில் ”தொட்ட இடம் துலங்க வரும் … தாய்க்குலமே வருக’ … என்று தொடங்கும் ஒரு பாடல்.  எழுதியவர் கவிஞர் வாலி. இந்த படம் வந்த ஆண்டு 1968. அப்போது எழுதப்பட்ட இந்த பாடல் காட்சியில் ஜெயலலிதாவையும், அம்மனையும் மாறி மாறி காட்டி பாடல் அம்மனுக்கா அல்லது அம்மாவுக்கா என்று வித்தியாசம் காண முடியாதபடி படமாக்கி இருப்பார்கள். இந்த பாடலை ஜெயா டிவியில் அடிக்கடி ஒளிபரப்புவார்கள். பாடல் இதோ 

(நன்றி – யூடியூப்) 

அரியதாய் … பெரியதாய் … வணக்கத்திற்குரியதாய்
எளியதாய் வலியதாய் என்றுமே இனியதாய்
மலர்ந்ததாய் கனிந்ததாய் மனதிலே நிறைந்ததாய் …
வளர்ந்ததாய் வாழ்வதாய் வந்த தாய்
எங்கள் தாய் … எங்கள் தாய் …

தொட்ட இடம் துலங்க வரும் … தாய்க்குலமே வருக …
கண் பட்ட இடம் பூ மலரும் … பொன் மகளே வருக …
பொன் மகளே வருக … நீ வருக!

கருணை என்ற தீபம்
இரு கண்களில் ஏந்திய தாயே
காலந்தோறும் நெஞ்சில் வந்து கோவில் கொண்டவள் நீயே 
பூமுகத்தாமரை மேலே அருள் பொழிகின்ற தெய்வத்தாயே  
பூமுகத்தாமரை மேலே அருள் பொழிகின்ற தெய்வத்தாயே
வானம் பார்த்த பூமிக்கெல்லாம் மாரியென்பது நீயே …
முத்து மாரியென்பது நீயே … முத்து மாரியென்பது நீயே …

இதயம் உன்னைப்பாடும் …
நல்ல எண்ணங்கள் மாலைகள் போடும்
இன்னல் வந்த நேரம் உந்தன் புன்னகை ஆறுதல் கூறும்
வாவென வேண்டிடும்போது எதிர் வருகின்ற செல்வம் நீயே
நாலும் கொண்ட பெண்மைக்கெல்லாம் தலைவியாகிய தாயே …
ஒரு தலைவியாகிய தாயே!!

(திரைப்படம்: முத்துச்சிப்பி (1968) பாடல்: வாலி  / பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன் / இசை: எஸ்.எம்.சுப்பையா நாயுடு)