Wednesday 30 May 2012

பிளாஸ்டிக் ஒழிப்பு என்ற பெயரில்


பிளாஸ்டிக் பைகள் அவ்வளவாக அறிமுகம் ஆகாத சமயம். மளிகைக் கடைகள் முதல் சிறிய கடைகள் வரை பொருட்களை பேப்பரில்தான் கட்டி கொடுப்பார்கள். தள்ளு வண்டிக்காரரிடம் திராட்சைப் பழம் வாங்கச் சென்றால், பழைய பேப்பர் கடையில் வாங்கிய மிகவும் மெல்லிதான டைப்ரைட்டிங் பேப்பரில் எடை போட்டு நூலில் கட்டிக் கொடுப்பார். பெரும்பாலும் நூல் ரோஸ் கலரில்தான் இருக்கும். அதேபோல மளிகைக் கடைகளிலும் எண்ணெய்ப் பொருட்களைத் தவிர எல்லா பொருட்களையும் பழைய செய்தித்தாளில் பொட்டலம் போட்டு சணல் கயிற்றால் கட்டிக் கொடுப்பார்கள். பொருட்கள் வாங்குபவர் கூடையையோ அல்லது பையையோ எடுத்துச் சென்று வாங்கி வருவார். இது அப்போதைய நடைமுறை.

இந்தியாவிலேயே முதன் முறையாக, கடலூரைச் சேர்ந்த டாக்டர் C.K. ராஜ்குமார் என்பவர் வெல்வெட் ஷாம்பூ என்ற நிறுவனத்தை தொடங்கி, 1979 வாக்கில் தலைக்கு போடும் ஷாம்பூவை ஷாஷேயில் (சிறிய பிளாஸ்டிக் பையில்) விற்கத் தொடங்கினார்.. பெரிய கடை முதல் சாதாரண பெட்டிக் கடை வரை விற்பனை.  புதிய உத்தியின் காரணமாக நல்ல வியாபாரம். பெரிய பாட்டில்களில் அடைத்து வைக்கப் பட்ட விலை அதிகமான பிரபலமான நிறுவனங்களின் ஷாம்பூ வியாபாரம் தேங்க ஆரம்பித்தது. பார்த்தார்கள் பெரிய கம்பெனி முதலாளிகள், ஷாம்பூ, ஹேர்டை மட்டுமல்லாது எல்லா பொருட்களையுமே (எண்ணெய் உட்பட) பிளாஸ்டிக் பையில் கம்பெனி பெயரோடு விற்கத் தொடங்கினார்கள். கடைகளிலும் பிளாஸ்டிக் தூக்குப் பையை (Carry Bag) அவர்கள் பங்கிற்கு இலவசமாக கொடுத்தார்கள்.  இந்த நடைமுறை மக்களுக்கு வசதியாகவும் பிடித்தும் போயிற்று.


ஆனால் இப்போது இத்தனை ஆண்டிற்குப் பிறகு, திடீரென்று பிளாஸ்டிக்கை ஒழிப்போம் என்று கொடி பிடிக்கிறார்கள். இவ்வளவு தூரம் பயன்பாட்டிற்கு வந்த பிளாஸ்டிக்கிற்கு மாற்றுப் பொருள் ஏதேனும் கண்டு பிடித்தார்களா என்றால் இல்லை. பிளாஸ்டிக் பையில் இப்போதும் அடைத்து விற்கப்படும் பொருட்களை தடை செய்யவும் இல்லை. பிளாஸ்டிக் தூக்குப் பைகளையும் சின்ன குவளைகளையும் மட்டுமே தடை செய்கிறார்கள். பாதிக்கப்படுவது சிறுவியாபாரிகளும் பொதுமக்களும்தான். இதுதான் சாக்கென்று சூப்பர் மார்க்கெட், ஷாப்பிங் மால் நடத்துபவர்களும் இதுவரை இலவசமாக கொடுத்து வந்த பிளாஸ்டிக் தூக்கு பைகளுக்கும் விலை வைத்து காசு பார்க்க ஆரம்பித்து விட்டனர். பிளாஸ்டிக் ஒழிப்பு என்றால், காசுக்கு மட்டும் பிளாஸ்டிக் தூக்கு பையை விற்பது சரியா?  அதிகாரிகள் திடீர் ரெய்டு என்ற பெயரில் சிறு வியாபாரிகளை தொந்தரவு செய்வார்கள். பெரிய நிறுவனங்கள் பக்கம் எட்டிப் பார்ப்பது கூட கிடையாது. வழக்கம் போல பள்ளி மாணவர்களை வைத்து  பிளாஸ்டிக் எதிர்ப்பு ஊர்வலம். பின்னர் போட்டோவுடன் செய்தி தருகிறார்கள்.

பிளாஸ்டிக் நல்லது இல்லை என்றால் அதற்கு மாற்று கண்டு பிடிக்க வேண்டும். அல்லது பயன்படுத்தப் பட்ட பிளாஸ்டிக் பொருட்களை மாற்று சூழலுக்கு பயன்படுத்த வேண்டும். ஊராட்சி நகராட்சிகளில்  அள்ள வேண்டிய குப்பைகளை அள்ளி, துப்புரவு பணிகளை தினமும் ஒழுங்காகச் செய்தாலே போதும். அதை விட்டுவிட்டு பொதுமக்களுக்கு சமூக சேவை என்ற பெயரில் இம்சைதான் நடக்கிறது.
.

Wednesday 23 May 2012

மூச்சுத் திணறல் குணமானது எப்படி?


மழை பெய்தாலோ அல்லது மார்கழி மாத இரவுப் பனியில் நனைந்தாலோ என்னால் அன்று இரவு சரியாகத் தூங்க முடியாது. காரணம் அப்போது எனக்கு ஏற்படும் மூச்சுத் திணறல்தான். காலையிலும் தடிமனோடு, கண்கள் சிவந்து பேசுவதற்கே சிரமமாக இருக்கும். சில நாட்களில் தொடர் தும்மலும் சேர்ந்து கொள்ளும். எப்போதாவது வீட்டை சுத்தம் செய்யும் போதும், புத்தக அலமாரியில் புத்தகங்களை அடுக்கி வைக்கும் போதும் இதே நிலைமைதான். இதனால் இரவு நேரங்களில் அடிக்கடி படுக்கை அறையை விட்டு வெளியே வந்து வாசலில் காற்றாட உட்கார்ந்து கொள்வேன். அப்போது எனக்கு வயது நாற்பத்தேழு  இருக்கும்.

இந்த மூச்சுத் திணறல் எனக்கு ஆரம்பத்தில் கிடையாது. சின்ன வயதில் மழையில் நனைந்தாலும் ஐஸ்க்ரீம் சாப்பிட்டாலும் ஒன்றும் ஆகாது.  டாக்டரிடம் போனால் அவர் சளித் தொந்தரவுக்கான மருந்துகளை எழுதிக் கொடுப்பார். அல்லது எனக்கு “ ஈசினோபீலியா” வுக்கான அறிகுறி என்று சொல்லி சில மருந்துகளை மாற்றி எழுதித் தருவார். ஒருமுறை அவர் “உங்களுக்கு உட்கொள்ளும் மருந்துகளைவிட இன்ஹேலர் நல்லது “ - என்று அதை உபயோகித்துப் பார்க்கச் சொன்னார். என்வே மூச்சுத் திணறல் ஏற்படும் போதெல்லாம் வாயை திறந்து புஸ் புஸ் என்று இன்ஹேலரை அடித்துக் கொள்வேன். அந்த நேரத்திற்கு கொஞ்சம் தேவலாம் என்று இருக்கும். எல்லாம் கொஞ்சநாள்தான். தொடர்ச்சியாக பயன்படுத்த பயமாக இருந்தபடியினால் அதனை நிறுத்தி விட்டேன். 

நண்பர்கள் அனைவரும் எனக்காக டாக்டர்களாக மாறி வண்டி வண்டியாக அட்வைஸ் தந்தார்கள். கொதிக்கும் நீரை அகன்ற பாத்திரத்தில் ஊற்றி முக்காடு போட்டு ஆவி பிடிக்கச் சொன்னார்கள். ஒன்றும் பலன் இல்லை. சிலர் டாக்டரை மாற்றிப் பார்க்கச் சொன்னார்கள். வேறு டாக்டர்களும் பழைய டாக்டர் செய்த மருத்துவமே செய்தார்கள். இதற்கென்று  இருக்கும் டாக்டர்களையும் சென்று பார்த்தேன். அந்த ஸ்பெஷலிஸ்டுகளின் வித்தைகளுக்கும் எனது மூச்சுத் திணறல் கட்டுப் படவில்லை. இன்னும் சிலர் மூக்கைப் பிடிக்கும் மூச்சுப் பயிற்சி  செய்ய சொன்னார்கள். ஏற்கனவே மூச்சு விட சிரமமாக இருக்கும்போது மூச்சைப் பிடித்தால் என்னவாகும்? வேர்த்து விறுவிறுத்ததுதான் மிச்சம்.

 
இந்த சமயத்தில் டாக்டர் கே.ஏ.மோகனதாஸ் என்பவர் எழுதிய ஒவ்வாமை (அலர்ஜி) என்ற நூலை படிக்க நேர்ந்தது. அதிலுள்ள கருத்துக்கள் எனக்கு ஒரு புதிய விடியலைத் தந்தன. இதனால் நான் தொந்தரவு அடைவதற்கு காரணம் ஒவ்வாமை ( ALLERGY )தான் என்று தெரிந்தது. ஆனால் எந்த பொருள் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. ஒருநாள் பளீரென்று மின்னல் வேகத்தில் மனதில் ஒரு யோசனை தோன்றியது. எனக்கு மது அருந்தும் பழக்கமோ அல்லது புகைபிடித்தல் பழக்கமோ கிடையாது. ஆனால் மீசைக்கு மட்டும் டை அடிக்கும் பழக்கம் இருந்தது. எனது தலை நரைக்கவில்லை. ஆனால் மீசை மட்டும் நரைத்து விட்டது. எனவே இந்தியாவில் பிரபலமான ஒரு நல்ல கம்பெனி டையையே மீசைக்கு உபயோகித்து வந்தேன்.  மீசைக்கு அடிக்கும் டை ஒத்துக் கொள்ள வில்லையோ என்று தோன்றியது. எனவே மீசைக்கு டை அடிப்பதை நிறுத்திவிட முடிவு செய்தேன். அதேசமயம் மீசைக்கு டை இல்லாமல் வெளியே செல்லவும் கூச்சமாக இருந்தது. பல தடவை யோசித்து, நமக்கு வயதுக்கு வந்த பெண்ணும் பையனும் இருக்கும்போது இவையெல்லாம் தேவையா என்று மீசைக்கு டை அடிப்பதை நிறுத்தினேன். தலைமுடி இயல்பாகவே கருப்பாகவும் மீசை மட்டும் வெள்ளையாக இருக்க நண்பர்கள் கொஞ்ச நாள் விசாரித்தார்கள். அப்புறம் எல்லோருக்கும் எனது முகம் பழக்கமாகி விட்டது. மீசைக்கு டை அடிப்பதை நிறுத்தியதும் என்னை பீடித்து இருந்த அலர்ஜியும் மூச்சுத்திணறலும் போய்விட்டது.

இப்போது மழையில் நனைந்தாலும், வெயிலில் அலைந்து வேர்வை வந்தாலும், பனியில் திரிந்தாலும் , ஐஸ்க்ரீம் சாப்பிட்டு விட்டு மழையில் நனைந்தால் கூட ஒன்றும் ஆவதில்லை. தொடர் தும்மலோ, மூச்சுத் திணறலோ இப்போது கிடையாது. இது எனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவம். அவ்வளவுதான். மூச்சுத் திணறல் உள்ள அனைவருக்கும் இது அப்படியே பொருந்தும் என்று சொல்ல முடியாது.

( PHOTOS  THANKS TO  “ GOOGLE ” )Friday 18 May 2012

கோடை மழை!சாலை முழுதும் அனல் காற்று !
முந்தானை கழுத்தில் சரிய சுற்றிய
முக்காடும், முழு கையுறையும் போட்ட
ஸ்கூட்டி பெண்கள் முழு வேகத்தில்!

கடும் வெய்யிலிலும் பென்சன் வாங்க
கறுப்புக் குடையோடு செல்லும் பெரியவர்!
கிடைத்த இடத்தில் கிரிக்கெட் விளையாடும்
சாலை ஓர சச்சின்கள்!  மட்டையும் கையுமாய்!

இரு சக்கர வாகனத்தில் நான்!
மெதுவாகவே சாலையில் சென்றபோது
மெல்லிய காற்று வருடியது
மண் வாசனையோடு - திடுமென வந்தன
வெட்டவெளி வானில் கரு மேகங்கள்!
முட்டிக் கொண்டன மூர்க்கமாய்!
பூமியில் வெட்டி வெட்டி
வீசப்பட்டன மின்னல் வீச்சுக்கள்!
கொட்டிக் கொட்டி முழங்கிய இடிமுழக்கம்!
காற்றும் மழையுமாய் கொட்டியது வானம்!
சாலை முழுதும் சலசலக்கும் மழைநீர்!

ஒதுங்க நேரமில்லை!
மழைக் குளியல் போட்டேன்!
அந்தநாள் ஞாபகம் வந்திட
ஆனந்தம்! ஆனந்தமே!
கோடை மழையே!
வருகவே! வருகவே!Friday 4 May 2012

நான் ஜெய்சங்கர் ரசிகன் ஆனேன்எம்ஜிஆர்,  சிவாஜி கணேசன் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்த  படங்கள் வெள்ளித் திரையில் ஓடிக் கொண்டிருந்த நேரம். நானும் எனது நண்பர்களும் எம்ஜிஆர் ரசிகர்கள். விடுமுறை நாட்களில் எம்ஜிஆர்  படம் பார்க்கச் செல்லும் போது சிலசமயம் டிக்கட் கிடைக்காது. அப்போதெல்லாம் “ ஹவுஸ்புல் சர்வசாதாரணம். எனவே அதுமாதிரி சமயங்களில் பக்கத்தில் உள்ள தியேட்டர்களுக்கு படம் பார்க்கச் செல்லுவோம். பெரும்பாலும் எம்ஜிஆர் படம் ஓடும் தியேட்டர்களுக்கு அருகில் உள்ள தியேட்டர்களில் ஜெய்சங்கர் நடித்த திரைப் படங்களைத்தான் போடுவார்கள். அப்படி ஜெய்சங்கர் நடித்த படங்களைப் பார்த்தவகையில் எங்களுக்கு ஜெய்சங்கரும் பிடித்துப் போனார். இப்படியாக எனக்கு பிடித்த நடிகர்கள் வரிசையில் எம்ஜிஆருக்கு அடுத்து ஜெய்சங்கர். நானும் ஜெய்சங்கர் ரசிகன் ஆனேன்.அவர் நடித்த படங்களைப் பார்ப்பதோடு சரி. ஏனெனில் அப்போது எனக்கு படிப்புதான் முக்கியம்.
 

பெரும்பாலும் ஜெய்சங்கர் நடித்த படங்கள், எம்ஜிஆர் படங்கள் போன்றே சண்டை காட்சிகள் நிறைந்ததாக இருக்கும். அப்போது ஆங்கிலத்தில் வெற்றி கண்ட ஜேம்ஸ் பாண்ட் படங்கள் தமிழக ரசிகர்களை கவர்ந்து இழுக்கத் தொடங்கின. அப்போது ஆங்கிலப் படங்கள் தமிழுக்கு மொழி மாற்றம் செய்யப் படவில்லை. இருந்தாலும் ஆங்கிலத்தில் வந்த ஜேம்ஸ் பாண்டிற்கு ரசிகர்கள் அதிகம் இருந்தனர். பார்த்தார்கள், பட அதிபர்கள். ஜெய்சங்கரை ஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் நடிக்க வைத்தனர். கதைக்கேற்ற அருமையான சண்டைக் காட்சிகள் அமைக்கப் பட்டன. படங்கள் நல்ல வெற்றியையும் வசூலையும் தந்தன. தமிழ் நாட்டு ஜேம்ஸ்பாண்ட் என்ற பெயர் பெற்ற  இவருக்கு ரசிகர்கள் அமோக ஆதரவு தந்தனர். அந்த வகையில் வல்லவன் ஒருவன், சிஐடி சங்கர், நீலகிரி எக்ஸ்பிரஸ், இரு வல்லவர்கள்,  என்ற படங்களைச் சொல்லலாம். திருச்சியில் மக்கள் கலைஞர் ஜெய்சங்கருக்கு ரசிகர் மன்றங்கள் இருந்தன.கிராமப்புற டூரிங் தியேட்டர்களிலும் ஜெய்சங்கர் படங்கள் நல்ல வசூலைத் தந்தன.

ஒருமுறை திருச்சி ராஜா தியேட்டரில் “ பட்டணத்தில் பூதம் “ என்ற ஜெய்சங்கர் நடித்த படத்தை திரையிட்டு இருந்தார்கள். தியேட்டர் முன்பு ஒருவர் கோஷம் போட்டபடி, கையில் அட்டைத் தட்டியுடன் மறியல் செய்து கொண்டிருந்தார். அவரை போலீஸ் வேனில் ஏற்றிக் கொண்டு இருந்தார்கள். அவர் மறியல் செய்ததற்கு காரணம், அந்த படத்தில் கே ஆர் விஜயா நீச்சல் உடையில் ரொம்பவும் கவர்ச்சியாக நடித்து இருக்கிறார் என்பதுதான். அந்த படத்திற்குப் பிறகு கே.ஆர்.விஜயா அது மாதிரியான காட்சிகளில் நடிக்கவில்லை. குடும்பப் பாங்கான் படங்களில் மட்டுமே கவனம் செலுத்தினார். பின்னாளில் அம்மன் வேடத்தில் நடித்து , அம்மன் புகழ் பெற்றவர் கே ஆர் விஜயா என்பது இங்கு. குறிப்பிடத் தக்கது. 

ஜோசப் தளியத் என்ற இயக்குநர் தனது படத்தில் நடிக்க நடிகர்களை தேடிக் கொண்டிருந்தார். அவருக்கு இசை அமைப்பாளர் டி.ஆர். பாப்பா அவர்கள் சங்கர் என்ற சென்னை புதுக் கல்லூரியில் பயின்ற பட்டதாரி இளைஞரை அறிமுகம் செய்தார். அந்த இளைஞரின் பெயரை இயக்குநர் ஜோசப் தளியத்,  ஜெய்சங்கர் என்று மாற்றி தனது “இரவும் பகலும்படத்தில் கதாநாயகன் வேடம் தந்தார். முதல் படமே ஜெய்சங்கருக்கு வெற்றிப் படமாக அமைந்தது. அதன் பிறகு ஜேம்ஸ்பாண்ட் பாணியில் நிறைய படங்கள். அத்தோடு குடும்ப படங்களிலும் நிறைய நடித்துள்ளார். “குழந்தையும் தெய்வமும், பூவா தலையாபோன்ற   நல்ல குடும்பக் கதை படங்கள். ஜெய்சங்கர் கதாநாயகனாக நடித்த  யார் நீ?என்ற திகில் படத்தில் ஜெயலலிதா கதாநாயகி.

ஜெய்சங்கர் நடித்த படங்களில் பல பாடல்கள் அன்றும் இன்றும் என்றும் இனிமையானவை. சில பாடல்கள்............ 

இரவு வரும் பகலும் வரும் உலகம் ஒன்று தான்
உறவு வரும் பகையும் வரும் இதயம் ஒன்று தான்
இரவு வரும் பகலும் வரும் உலகம் ஒன்று தான்
உறவு வரும் பகையும் வரும் இதயம் ஒன்று தான்
-         பாடல்: கண்ணதாசன் படம்: இரவும் பகலும

உள்ளத்தின் கதவுகள் கண்களடா - இங்கே
உறவுக்குக் காரணம் பெண்களடா - உள்ளத்தை
ஒருத்திக்குக் கொடுத்துவிடு - அந்த
ஒருத்தியை உயிராய் மதித்து விடு
                                - பாடல்: கண்ணதாசன் படம்: இரவும் பகலும்

இன்னும் பார்த்து கொண்டிருந்தால் என்னாவது
இந்த பார்வைக்குத் தானா பெண்ணானது
நான் கேட்டதை தருவாய் இன்றாவது
- பாடல்: கண்ணதாசன் படம்: வல்லவன் ஒருவன்

நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்?  - என்
மக ராணி உனைக் காண ஓடோடி வந்தேன்
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என்
மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்
        - பாடல்: கண்ணதாசன் படம்: இரு வல்லவர்கள்

நடிகர் ஜெய்சங்கர்  நல்ல துடிப்பாக, இளைஞனாக இருந்தபோது படவுலகில் நுழைந்தார். நல்ல ஆக்‌ஷன் படங்களில் நடித்தார்.(பிறப்பு: ஜூலை 12, 1938  இறப்பு: ஜூன் 3, 2000). அவர் இறந்த செய்தி கேட்டபோது நான் ரொம்பவும் வருத்தப் பட்டேன்.