Saturday 24 December 2011

எம்ஜிஆருக்கு ஒரு ஹீரோவைப் போல் சிலை வையுங்கள் !

எம்ஜிஆர் என்றால் அவர் ஒரு ஹீரோ. அவர் நடித்த படங்களில் அவருக்கென்று ஒரு பாணி. அதாவது தனி ஸ்டைல். எம்ஜிஆர் ஸ்டைல்.அவரது காலத்தில் கதாநாயகனாக நடித்த எல்லோருமே  வயதானவர்கள்தான். எல்லோருமே கதாநாயகனாக, கல்லூரி மாணவனாக, இளைஞனாக நடித்தனர். அவர்களில் அவர்களை விட இவர், அதாவது எம்ஜிஆர் கொஞ்சம் மூத்தவர் அவ்வளவுதான். ஆனாலும் அவரை எதிர் முகாமில் வயதான நடிகர் என்று கிண்டலடித்தனர்.

எனவே தனது தோற்றத்தை காட்டிக் கொள்வதில் தனி கவனம் செலுத்தினார். அதற்குத் தகுந்தாற் போல காட்சிகள் அமைக்கச் சொன்னார். உடைகள் அணிந்தார். மேக்கப் போடச் சொன்னார். பெரும்பாலும் அவரது பாடல்களில் அவர் அணியும் அரைக் கை சட்டை என்பது கைகளில் உள்ள முண்டாவைக் காட்டும். அவரது  எந்த தனிப் பாடலை பார்த்தாலும் அவர் கைகளை வீசிக் கொண்டும், உயர்த்தி கொண்டும் வேகமாக ஓடி வருவதை நாம் காணலாம். (அச்சம் என்பது மடமையடா மன்னாதி மன்னன் ; உலகம் பிறந்தது எனக்காக பாசம் ; புதிய வானம் புதிய பூமி அன்பே வா ; அதோ அந்த பறவை போல வாழ வேண்டும் & ஏன் என்ற கேள்வி ஆயிரத்தில் ஒருவன் ) அதே போல திடீரென்று ஏதேனும் ஒரு கனமான பொருளை தூக்குவார் அல்லது நகர்த்தி வைப்பார். துள்ளி குதிப்பார். அவரது காதல் பாடல்களும் இதற்கு தப்பாது ( காற்று வாங்கப் போனேன் கலங்கரை விளக்கம் ; நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத் தான் அன்பே வா )

எம்ஜிஆர் கதாநாயகிகளை மாற்றிக் கொண்டே இருந்தார். அவர்கள் இவரைவிட வயது குறைந்தவர்கள். கதாநாயகிகள் மாறிக் கொண்டே இருந்தாலும் இவர் என்றும் ஹீரோவாகத்தான் ( EVER GREEN HERO ) இருந்தார்.அதுதான் எம்ஜிஆர். ஆனால் அவருக்கு சிலை வைக்கும் அன்பர்கள் அவர் விரும்பிய ஹீரோ தோற்றத்தில் சிலை வைப்பது கிடையாது. அவரது வாழ்வின் பிற்பகுதியில் தொப்பியோடு இருந்த அவரது  முதுமை தோற்றத்தையே வடிவமைக்கின்றனர். இது சரியா? எம்ஜிஆர் என்றால் இளமை கம்பீரம் புன்னகை என்று சிலை வடிவமையுங்கள்.



Wednesday 21 December 2011

டமில்நாடு நல்ல தமிழ் நாடு


அறிஞர் அண்ணா, 1967 - இல் ஆட்சிக்கு வந்தவுடன், அதுவரை சென்னை மாகாணம் ( MADRAS STATE )  என்று இருந்த பெயரை தமிழ் நாடு என்று பெயர் மாற்றம் செய்தார். பெயர் மாற்றம் நடந்து 40 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்னும் அரசு அலுவலக நடவடிக்கைகளில் ஆங்கிலத்தில் டமில் நாடு” ( TAMIL NADU ) என்றும் தமிழில் தமிழ் நாடு என்றும் குறிப்பிடப் படுகிறது. அதே போல தமிழையும் “டமில்” ( TAMIL )  என்றே குறிக்கின்றனர். இந்த நடைமுறை தமிழ் நாடு முழுக்க விரவி உள்ளது. தமிழ் என்பதற்கு ஆங்கிலத்தில் “ THAMIZH ” என்று எழுதுவதே சரியான வடிவம் ஆகும். சிலர் “ THAMIL “ என்றும் எழுதுகின்றனர்.

தமிழரசன் “டமிலரசன் (TAMILARASAN) எனவும், தமிழ் அரசி “டமில் அரசி(TAMILARASI) எனவும், தமிழ் மணி “டமில் மணி (TAMIL MANI) எனவும் தமிழர்களின் பெயர்கள் எழுதப் படுகின்றன. தமிழ் நாடு சைவம் வைணவம் இரண்டும் தழைத்தோங்கிய நாடு. எனவே திருக் கோயில்கள் உள்ள ஊர்கள் அனைத்தும் திரு ”  என்ற சொல்லொடு அழைக்கப் பட்டன. ஆனால் திருவுக்குப் பதிலாக டி ( T ) ஒலியில் டிரு (TIRU) என உச்சரிக்கப் படுகிறது. உதாரணம் திருவாரூர் > டிருவாரூர் (TIRUVARUR) , திருவையாறு > டிருவையாறு (TIRUVAIYARU) , திருவானைக் கோயில் > டிருவானைக் கோயில் ( TIRUVANAIK KOYIL) , திருவண்னாமலை > டிருவண்னாமலை (TIRUVANNAMALAI) , திருப்பூர் > டிருப்பூர் (TIRUPUR)  –  இவ்வாறாக பல ஊர்கள். சில ஊர்கள் ஆங்கிலேயர் அழைத்தது போலவே இன்னும் ஒலிக்கின்றன. தஞ்சாவூர் > ‘’டேஞ்சூர்” (TANJORE) திருவல்லிக்கேணி > ட்ரிப்ளிகேன்” (TRIPLICANE) திண்டுக்கல் > டிண்டிகல்” (DINDIGUL), திருச்சிராப் பள்ளி டிருச்சிராப்பள்ளி “ ( TIRUCHIRAPALLI) அல்லது ட்ரிச்சி “ (TRICHY), மதுரை > “மடுரை” (MADURAI).  

மெட்ராஸ் (MADRAS) என்ற பெயர் சென்னை (CHENNAI)  என்று மாற்றப் பட்டு வருடங்கள் ஓடி விட்டன. இன்னும் சென்னை உயர் நீதி மன்றத்தில்,  “மெட்ராஸ் ஹைகோர்ட்” (MADRAS HIGH COURT) என்ற பெயரிலேயே  அலுவலக வேலைகள் நடைபெறுகின்றன. தமிழ் நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் யாவும் இவ்வாறே இருக்கின்றன.

 மணக்க வரும் தென்றலிலே  
  குளிரா இல்லை?  தோப்பில்                  
  நிழலா இல்லை?
 தணிப்பரிதாம் துன்பமிது!
  தமிழகத்தின தமிழ்த் தெருவில்
  தமிழ்தான் இல்லை!            
                     - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.( தமிழியக்கம் )




Saturday 17 December 2011

இந்திய ஓய்வூதியர் தினம் ( PENSIONERS’ DAY OF INDIA)


டிசம்பர், 17. இந்திய ஓய்வூதியர் தினமாக கடைபிடிக்கப் படுகிறது. இந்தியாவில் பென்ஷன் என்பது ஆங்கிலேயர்களால் கொண்டு வரப்பட்ட நல்ல அம்சங்களில் ஒன்று. 1982 - ஆம் ஆண்டு டிசம்பர் 17 - ஆம் நாள், இந்திய உச்சநீதி மன்றம் ஓய்வூதியம் பற்றிய குறிப்பிடத்தக்க ஒரு தீர்ப்பினை D S நகாரா என்பவரது வழக்கில் ( NAKARA CASE ) வழங்கியது. அதில் Pension is neither a gift nor a reward or bounty. Pension is the right of a retired Government Servant who had served nation for a long time" என்று குறிப்பிட்டது. ஒரு காலத்தில் ஓய்வூதியர் என்றால் அவர்கள் வயதானவர்கள் என்ற நிலை இருந்தது. இன்று அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் விருப்ப ஓய்வு முறை வந்த பிறகு நடுத்தர வயதுள்ளவர்களும் ஓய்வூதியம் பெறுவோர்களாக உள்ளனர். அவர்களும் சில மாதங்களில் வயதானவர் களாக வந்து விடுவார்கள். சில நிறுவனங்களில் ஓய்வு பெறுபவர்களுக்கு ஓய்வூதியம் கிடையாது. கருணைத் தொகை என்ற பெயரில் கடமையே என்று தருகிறார்கள். இப்போது விற்கும் விலைவாசியில் அந்த கருணைத் தொகை என்பது யானைப் பசிக்கு சோளப்பொரி கொடுப்பது போன்றது தான்.

முன்பெல்லாம் ஓய்வூதியம் பற்றிய அதிக தகவல்களை தெரிந்து கொள்ள முடியாது. சம்பந்தப்பட்ட அலுவலக மூத்த ஊழியர்களையோ அல்லது தம்மைப் போல ஓய்வு பெற்ற விவரம் தெரிந்த ஓய்வூதியர்களையோ தேடிப் போய் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.அவர்கள் தரும் விவரங்களும் துல்லியமாக இருக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால் இப்போது கணிணியுகத்தில் இண்டர்நெட் மூலம் அனைத்து தகவல்களையும் பெற்றுக் கொள்ள முடிகிறது. மத்திய மாநில அரசுகள் தங்கள் இணையத் தளங்கள் ( www.pensionersportal.gov.in  ) மூலம் ஓய்வூதியர்களுக் கான, ஓய்வுக்கால பயன்கள், ஓய்வூதிய விதி முறைகள், அறிக்கைகள் என்று எல்லா தகவல்களையும் உடனுக்குடன் தெரிவிக்கின்றன. மாநில அரசு இணைய தளங்கள் அந்தந்த மொழியிலேயே வெளியிடுகின்றன. நமது தமிழ் நாடு அரசும் (www.tn.gov.in ) ஓய்வூதியம் பற்றிய செய்திகளை ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழி களில் வெளியிட்டு வருகிறது.

இப்போது அனைத்து ஓய்வூதியங்களும் வங்கிகளின் மூலமே வழங்கப் படுகின்றன. எனவே ஓய்வூதியகாரர்களுக்கு வங்கிகளில் அவர்களது ஓய்வூதியத்தின் அடிப்படையில் கடன் வழங்கப்படுகிறது. பலர் சரியான திட்டமிடுதல் இல்லாத படியினால் காலம் முழுக்க கடனாளியாகவே இருந்து இறந்து போகின்றனர். இன்னும் சிலர் ஜாமீன் கையெழுத்து போட்டுவிட்டு, கடன் வாங்கிய ஆசாமி கட்டாதபோது இவர்கள் நோட்டீஸ், வழக்கு , வக்கீல் என்று நிம்மதியை இழக்கிறார்கள். எனவே ஓய்வூதியர்கள் கவனமாக இருத்தல் அவசியம். வங்கிகளில் ஓய்வூதியர் குறை தீர்க்கும் நாள் என்று சில சமயம் அழைப்பார்கள். சென்ற கூட்டத்தில் சொன்ன அதே குறைகளை சில ஓய்வூதியர்கள் இந்த கூட்டத்திலும் சொல்லுவார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒரு நோட் புத்தகத்தில் அன்றைய தினம் மட்டும் ஓய்வூதியர்கள் சொல்வதை குறித்துக் கொள்வதோடு சரி. உண்மையாகவே ஓய்வூதியதாரர்களுக்கு வேண்டியன செய்பவர்களும் உண்டு. இன்னும் சில வங்கிகளில் எதற்கு வம்பு என்று  இதுபோன்று ஓய்வூதியர் குறை தீர்க்கும் கூட்டமே கூட்டுவதில்லை. வங்கிகள் மூலம் ஓய்வூதியம் பெறுபவர் களுக்கு கிடைக்கும் கடன் வசதிகள் தபால் அலுவலகம் மூலம் பெறுபவர்களுக்கு கிடைப்பதில்லை.

பல ஓய்வூதியர்கள் தங்களது சேமிப்புகளை வங்கிகளிலேயே வைத்துள்ளனர். அதில் பெரிதாக ஏதும் வட்டி வந்து விடப் போவதில்லை. அதிலும் TDS என்ற பெயரில் வருமான வரியை பிடித்து விடுகின்றனர். இதனால் சில ஓய்வூதியர்கள் அதிக வட்டிக்காக மோசடி நபர்களிடம் பணத்தைக் கொடுத்து ஏமாந்து போய் தவிக்கின்றனர். எனவே மத்திய அரசு இந்த விஷயத்தில் ஓய்வூதியர்களின் சேமிப்பிற்கு சலுகை காட்டினால் நல்லது. கம்ப்யூட்டரும் இன்டர்நெட்டும் வந்த பிறகு ஓய்வூதியர்கள் எந்த சந்தேகம் கேட்டாலும் சென்னை போன்ற இடங்களில் உள்ள தங்களது தலைமை அலுவலகத்தினை கை காட்டுகிறார்கள்.அங்கிருந்து விவரம் பெறுவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடுகிறது. அந்தந்த கிளைகளிலேயே இவற்றை நிவர்த்தி செய்தால் நல்லது.


Sunday 11 December 2011

ஊழ்வினைப் பயன் என்பது


வாழ்க்கை நல்ல மாதிரி ஓடிக் கொண்டு இருக்கும் வரை மனிதன் எனது திறமை, எனது உழைப்பு என இறுமாந்து நிற்கிறான். கொஞ்சம் பிசிறினாலும் எதிர்பார்த்தது நடக்கவில்லை என்றாலும் என்தலையெ ழுத்து, என் விதி, போன ஜென்மத்து வினை என்று தன்னைத்தானே நொந்து கொள்கிறான். மரணத்திற்கு முன்னும் பின்னும் மனித உயிரின் அம்சம் என்னவென்றே யூகிகக முடிவதில்லை. வாழ்வில் எதிர்பாராது நடக்கும் சில நிகழ்வுகளுக்கு சில கேள்விகளுக்கு நம்மால் விடை காண முடிவதில்லை. கண்டவர் விண்டிலர். விண்டவர் கண்டதில்லை. எல்லாம் ஒரு அனுமானம்தான்.

காவிரிக் கரையில் பிறந்து வளர்ந்து வாழ்வைத் தொடங்கிய கோவலன் தனது மனைவி கண்ணகியோடு பிழைப்பைத் தேடி மதுரை சென்றான். அங்கே வஞ்சகன் சூழ்ச்சியால் கள்வன் எனக் கைதாகி கொலைக் களத்தில் இறக்கிறான். தன் கணவன் குற்றமற்றவன் என்று அரசவையில் நிரூபித்த கண்ணகி சினம் கொண்டு மதுரையை சாபமிட்டு எரிக்கிறாள். அப்போது மதுரை மாநகரின் காவல்தெய்வமான மதுராபதி தோன்றி கண்ணகியின் இந்த துயர நிலைக்கு முற்பிறவியில் கோவலன் செய்த ஒரு காரியம் என்று கதையைக் கூறுகிறது. அந்த பிறவியில்  பரதன் என்ற பெயரில் கோவலன் வாழ்ந்தபோது சங்கமன் என்பவனை கள்வன் என பொய்க் குற்றம் சாட்டி அரசனிடம்  மரண தண்டனை வாங்கித் தந்ததாகவும், அதனால் சங்கமனின் மனைவி

எம்முறு துயரம் செய்தோர் யாவதும்
 தம்முறு துயரமிற் றாகுக ‘

என்று கொடுத்த சாபமே இந்த பிறவியில் கோவலன் இந்த நிலைமை அடைந்ததாக சொன்னது. இந்தக் கதையை எழுத வந்த இளங்கோ அடிகள், “ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் “ என்று சொல்கிறார்.

மேய்ச்சலுக்கு காலையில் வெளியில் சென்ற மாடுகள் மாலையில் கொட்டில் திரும்புகின்றன. கன்றுகள் அவிழ்த்து விடப்படுகின்றன. அத்தனை பசுக்களிலும் கன்றுகள் தன் தாயை சரியாகக் கண்டடைகின்றன. அது போல ஒருவன் செய்த  முன் வினையானது அடுத்த பிறவியில் அவனைக் கண்டு சேரும். இதனால் அவனுடைய வாழ்க்கை வினைப்படியே அமையும். இந்தக் கருத்தினைச் சொல்வது நாலடியார்.

பல்லாவுள் உய்த்து விடினும் குழக்கன்று
வல்லதாம் தாய்நாடிக் கோடலைத் தொல்லைப்
பழவினையும் அன்ன தகைத்தே தன்செய்த
கிழவனை நாடிக் கொளற்கு.

என்பது பாடல்.


உடம்பில் உயிர் இருக்கும்வரை உடம்பானது தனக்கு எது நேர்ந்தாலும் உணர்கிறது. உடம்பை விட்டு உயிர் போன பின்பு அந்த உடம்பை அதனை வெட்டி எரித்தாலும் அது உணராது. இதிலிருந்து உடம்பை விட்டு ஏதோ ஒன்று வெளியேறியுள்ளது என்று உணரலாம். அதுதான் உயிர். வெளியேறிய உயிர் தன் விதிப் பயனை அடைய வேறொரு பிறவி எடுக்கும். இதனைச் சொல்வது மணிமேகலைக் காப்பியம்.

உற்றதை உணரும், உடல் உயிர் வாழ்வுழி ;
மற்றைய உடம்பே மன் உயிர் நீங்கிடின் ;
தடித்து எரியூட்டினும் தான் உணராது எனின்
உடம்பிடைப் போனது ஒன்று உண்டுஎன உணர் நீ ;
போனார் தமக்கு ஓர் புக்கில் உண்டு என்பது ;
யானோ அல்லேன், யாவரும் உணர்குவர் ;
உடம்பு ஈண்டு ஒழிய, உயிர் பல காவதம்
கடந்து, சேண் சேறல் கனவினும் காண்குவை ;
ஆங்கனம் போகி, அவ்வுயிர் செய்வினை
பூண்ட யாக்கையின் புகுவது தெளி, நீ !
-         மணிமேகலை (ஆதிரை பிச்சையிட்ட காதை)

திருவள்ளுவரும் விதியிலிருந்து தப்பவில்லை. ஊழ் என்று ஒரு அதிகாரமே (பத்து குறட்பாக்கள்) தந்து விட்டார்.

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்

என்று முடிக்கிறார். தமிழ் திரைப்படம் ஒன்றில் ஒரு பாடல்.

மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று!
இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று!
...............   ......................  ...............   ................ ................
விதியின் கரங்களிலே நாம் விரைந்து பயணம் செய்தால்
மதியும் மயங்குதடா! சிறு மனமும் கலங்குதடா!
         -கவிஞர் கண்ணதாசன் (படம்: அவன்தான் மனிதன்)

எனவே ஊழ்வினைப் பயன் என்பது விடை தெரியாத ஒன்று.