Showing posts with label ஆகமம். Show all posts
Showing posts with label ஆகமம். Show all posts

Friday, 6 October 2017

ஆகமவிதிகள் பற்றிய சர்ச்சை



இப்போதெல்லாம் பெரும்பாலும் ஆங்கிலப் புத்தாண்டு பிறந்ததும், ஜனவரி முதல்நாள் அவரவர் கும்பிடும் அல்லது இஷ்ட தெய்வத்தின் கோயிலுக்கு சென்று வழிபடுவது, ஒருவருக்கொருவர் “HAPPY NEW YEAR” – என்று, புத்தாண்டு வாழ்த்து கூறிக் கொள்வது – ஆகியவை மக்கள் மனதில் ஒன்றி விட்டது. எனவே வருடத்தின் தொடக்கம் ஒரு இறைவழிபாடுடன் துவங்க நினைப்பதில் தப்பில்லை. ஏனெனில் ஆங்கில நாட்காட்டியின் படியே நிறைய காரியங்களைச் செய்கிறோம். ஆனால் ஆண்டுதோறும் ”ஆங்கிலப்  புத்தாண்டு வழிபாட்டுக்காக  ஆகம விதிகளை மீறி நள்ளிரவில் கோவில்களைத் திறக்கக் கூடாது .மீறித் திறந்தால், அதனை எதிர்த்து ஆர்ப்பாட்டம்  நடத்துவோம்’ – என்று சிலர் எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டு இருக்கிறார்கள். அப்புறம் அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்திய மாதிரியோ, ஆகமவிதிகளை மீறி அர்ச்சனை செய்தவர்கள் மீது சட்டபடி நடவடிக்கை எடுத்த மாதிரியோ தெரியவில்லை..

ஞாயிற்றுக்கிழமைக்கு (இதுவும் பைபிள் அடிப்படையில் ஆங்கிலேயர் சொன்ன வார விடுமுறை நாள்) என்ன சொல்வார்கள் என்று தெரியவில்லை. மேலும், இந்த கனம் கோர்ட்டார் தீர்ப்பு என்பது, அர்ச்சகருக்கான நியமனத்தில் ஆகமவிதிகளைப் பற்றி சொல்லும்போது,  “முன்னால் இருந்து பார்த்தால் முதலியார் குதிரை; பின்னால் இருந்து பார்த்தால் செட்டியார் குதிரை” என்பது போல இருக்கிறது.

இவை ஆகம விதிகளா?

இந்துமதத்தில் ஆகம விதிகள் என்று ஏதேனும் நூல் இருக்கிறதா என்று தேடிப் பார்த்தால் ஒன்றும் கிடைக்கவில்லை. தெரிந்த நண்பர்களிடம் கேட்டாலும் தெரியாது என்றே சொல்கிறார்கள். வேதத்தில் சொல்லி இருக்கு என்று சொல்லிச் சொல்லியே, வேத புத்தகத்தையே பார்க்காத கதையாக இருக்கிறது.. எதற்கெடுத்தாலும் ஆகமவிதிகள் என்று மேற்கோள் காட்டுபவர்கள் கீழ்க்கண்ட கோயில் சம்பந்தப்பட்ட விஷயங்கள், எந்த ஆகமவிதிகளின் கீழ் நடைமுறையில் உள்ளன என்று சொன்னால் நன்றாக இருக்கும்.

கோயிலில் எந்த இடத்தில் விளக்குகள் எரிந்தாலும் , அவை சுத்தமான நல்லெண்ணெய் ஊற்றித்தான் எரிய வைக்க வேண்டும் என்பார்கள். இப்போது ஆன்மீகம் பற்றி வாராவாரம் எழுதும் பத்திரிகைகளில் இதனை ரொம்பவும் சிரத்தையாக சொல்லி இருப்பார்கள். பக்கத்திலேயே தீப எண்ணெய்க்கான விளம்பரமும் இருக்கும். அந்த காலத்தில் வெளிச்சத்திற்காக ஏற்றப்பட்ட தீப்பந்தங்களும் இதற்கு விதிவிலக்கல்ல. இப்படி இருக்க இப்போது கோயில் முழுக்க டியூப்லைட் போன்ற மின்விளக்குகள்தான் இருக்கின்றன. கோயிலில் விஷேசம் என்றால் அலங்கார வண்ண விளக்குகள்தான்.

அப்புறம் இந்த கழிப்பிடம் சமாச்சாரம். உச்சி மீது கோயில் இருந்தாலும், அங்கேயும் மற்றும் எல்லாக் கோயில்களிலும் கட்டணக் கழிப்பிடங்கள்தான். இவை எந்த ஆகம விதிகளின் கீழ் இருக்கின்றன என்று தெரியவில்லை. (அவசரத்திற்கு இவை கட்டாயம் தேவைதான் என்பதிலும், கால மாறுதலுக்கு ஏற்ப வசதிகளை உண்டாக்கிக் கொள்ள வேண்டும் என்பதிலும் மாற்றுக் கருத்து இல்லை:)

சாதா தரினம், சிறப்பு தரிசனம் என்ற பெயரில் கட்டண வசூல். அதிலும் கட்டணம் இல்லாத V.I.P என்று மட்டும் அல்லாமல் V.V.I.P என்று ஒரு சிறப்புப் பிரிவு வேறு உண்டு. இறைவன் முன் அனைவரும் சமம் என்ற சித்தாந்தம் உடைபட்டு போகிறது.

இதேபோல் கோயிலில் படம் எடுக்கக் கூடாது என்று சில இடங்களில் சொல்கிறார்கள். காரணம் கேட்டால் சரியாகச் சொல்வதில்லை. ஸ்ரீரங்கம் மற்றும் தஞ்சை பெரிய கோயில் போன்ற கோயில்களில் படம் எடுக்க அனுமதி உண்டு. ஆனால் கருவறையை மட்டும் படம் எடுக்க அனுமதி இல்லை. ஆனால் பல பத்திரிகைகளில் அவர்கள் செல்வாக்கில் சில கோயில்களின் கருவறைப் படங்கள் வெளிவந்து இருப்பதைப் பார்த்து இருக்கிறேன்.

இப்போது, “ திருப்பதி லட்டுக்கு ஆதார் அடையாள அட்டையை கட்டாயமாக்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது “ என்ற செய்தி வந்துள்ளது. .

இதற்கெல்லாம் மேலாக, இறைவன் சன்னிதானத்தில் மேளம் கொட்டுதல், பாட்டு பாடுதல் மற்றும் நாதஸ்வரம் வாசிப்பது  என்பது சம்பந்தப்பட்ட கலைஞர்களாலேயே நிகழ்வுறும். ஆனால் இப்போதோ பதிவு செய்யப்பட்ட மேள சத்தத்தை, அர்ச்சனை மணி ஓசையை கோயில்களில் ஒலி பரப்புகிறார்கள்.

எனவே, இதேபோல அர்ச்சகர் நியமனத்திலும், காலத்திற்கு ஏற்ப மாற்றம் என்றால் ஏற்றுக் கொள்வதில்லை.

தமிழ் பிராமணர்கள் செல்வாக்கு இழந்தமை:

கல்லூரியில், முதுகலையில் நான் படித்த சைவ சித்தாந்த நூல்களில் இன்ன ஜாதியார்தான் கோயிலில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று, சொல்லப்பட்டு நான் படித்ததாக நினைவில்லை. மேலும் அவை இறைவனை வணங்குவது பற்றியும், இறையடியார்கள் பெருமை பற்றியுமே அவை பேசுகின்றன.

டாக்டர் கே.கே.பிள்ளை, தமிழ்நாட்டு பிராமணர்கள், அயல்நாட்டு பிராமணர்கள் என்று சொல்லும் கருத்துக்கள் இங்கு கவனிக்கத் தக்கவை. (கீழே காண்க)

/// தமிழகத்து வேந்தர்கள் தமிழகத்து அந்தணரிடம் எக் குறைபாடுகளைக் கண்டார்கள் என்பது விளங்கவில்லை. தமிழகத்தில் சமய வளர்ச்சியும், வேதப்பயிற்சியும், ஆகமங்களின் வளர்ச்சியும், கோயில் வழிபாடும் பல தரப்பட்டதுறைகளில் விரிவடையவே அவற்றுக்கு ஏற்றவாறு தம்மைத் திருத்தியமைத்துக்கொள்ளும் ஆற்றல்கள் தமிழ்ப் பிராமணரிடம் பெருகவில்லை போலும்.

ஆனால், வடவரின் இலக்கியமும், சமயக் கருத்துகளும் பண்பாடுகளும்
தமிழ்நாட்டில் பெருக்கெடுத்துப் பாயவே அவற்றை வளர்ப்பதற்கும்,
மேற்கொண்டு பல புதுமைகளைப் பெருக்கிக் கொள்ளுவதற்கும், மன்னர்கள் ஆயிரக்கணக்கில் அயல்நாட்டுப் பிராமணரை இறக்குமதி செய்து கோயில்களிலும், மடங்களிலும், கல்வி நிறுவனங்களிலும்
அவர்களை அருச்சகர்களாகவும், புரோகிதர்களாகவும், வேத பாராயணம் செய்வோராகவும் ஆங்காங்கு அமர்த்தினர். வேதநெறி தழைத்தோங்கு வதற்காக மன்னரும் மக்களும் புதிதாகக் குடிபுகுந்த பிராமணருக்குப் பொன்னையும், பொருளையும், குடியுரிமைகளையும் வாரி
வழங்கினர். பிராமணருக்குத் தனி நிலங்களும், முழுமுழுக் கிராமங்களும் தானமாக வழங்கப்பட்டன. அக் கிராமங்கள் அக்கிரகாரம், அகரம், சதுர்வேதி மங்கலம், பிரமதேயம் எனப் பல பெயரில் வழங்கின. இக் குடியிருப்புகள் அனைத்தும் பிராமணரின் நிருவாகத்துக்கே விடப்பட்டன. அரசனுடைய ஆணைகள் அவற்றினுள் செயல்படா. அக் கிராமங்களுக்கு எல்லாவிதமான வரிகள், கட்டணங்கள், கடமைகள், ஆயங்கள் முதலியவற்றினின்றும் முழு
விலக்கு அளிக்கப்பட்டன. ஒவ்வொரு கிராமத்தின் உள்ளாட்சிக்கும் ஒரு மகா சபை அமைத்துக் கொண்டு பிராமணர்கள் தத்தம் கிராமத்தின்
நிருவாகத்துக்குத் தாமே பொறுப்பேற்றுக் கொண்டார்கள். பிராமணர் தமிழகம் முழுவதும் பரவிக் குடியமர்ந்தார்கள்.

உள நிறைவுடன் நல்வாழ்க்கையில் நின்று வேதம் ஓதி, இறைப்பணி புரிந்து, அறம் ஓம்பி, மக்களிடையே கல்வியறிவையும் ஆன்மிக விழிப்பையும் தோற்றுவிப்பதற்காகவே மன்னரும் மக்களும் அவர்கட்குத் துணை நின்றார்கள். ஆனால், விளைவோ வேறு விதமாயிற்று. தமிழ் மன்னரும் தமிழ்மக்களும் வரையாது வழங்கிய வாழ்க்கை நலன்களைப் பெற்ற பிராமணர்கள் தனித்து வாழ்ந்து, மக்களிடையே குலவேறுபாடுகளைப் பெருக்கித் தமிழர் அனைவரையுமே சூத்திரர் என்ற இழிகுலத்தினராகக் கருதிக் கோயில்களிலும், மடங்களிலும், ஏனைய பொது அறச்சாலைகளிலும் ஒதுக்கிவைத்துவிட்டார்கள். ஒரு கோயிலைக் கட்டிக் குடமுழுக்குச் செய்விக்கும் தமிழன் ஒருவன், தான் கட்டிய கோயிலிலேயே தொலைவில் ஒதுங்கி நிற்கவும், பிராமணர்களின் பின்னின்று கோயில்‘பிரசாதங்களைப்’ பெறவும் ஒப்புக் கொண்டு விட்டான். கோயில் கருவறையில் வடமொழியின் ஆரவார ஓசை ஓங்கவும், தமிழ்ஒலி மறையவும் வழக்காறுகள் வகுக்கப்பட்டன. தேவார ஆசிரியர்கள் காலத்தில் தமிழர் கருவறைக்குட் செல்லும் உரிமை பெற்றிருந்தும் சோழர் பாண்டியர் காலத்தில் அவ்வுரிமையை அவர்கள் இழந்து விட்டார்கள். ///  - (டாக்டர் கே.கே.பிள்ளை, தமிழக வரலாறு – மக்களும் பண்பாடும், தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் வெளியீடு, பக்கம் 316 - 317)

மேலே சொல்லப்பட்ட மேற்கோளில் இன்றைய சூழலில் யார் தமிழ் பிராமணர்கள் அல்லது யார் அயல்நாட்டு பிராமணர்கள் என்று பிரித்துப் பார்ப்பது கடினம். அன்று முதல்.அர்ச்சகர்கள் பிராமணர்களாகவே, நியமிக்கப்பட்டு வருவது கண்கூடு. தமிழ் மேட்ரிமோனியலில் (Tamil Matrimony) தமிழ் பிராமின் என்று விளம்பரம் வருவதை அனைவரும் பார்த்து இருக்கலாம். எனவே தமிழரான பிராமணர்கள், தெலுங்கு வம்ச சோழர்களின் ஆட்சி சூழல் மாறலுக்கு ஏற்ப, அவர்கள், தங்கள் வழிபாட்டு முறைகளை மாற்றிக் கொண்டு விட்டனர் எனலாம்.

திருமூலர் சொல்லும் ஆகமச் சிறப்புகள்:

அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகவும், பதினெண் சித்தர்களில் ஒருவராகவும் வைத்து போற்றப்படும் திருமூலர் எழுதிய திருமந்திரம், தனது பாயிரத்தில்,  ஆகமச் சிறப்பு பற்றி பத்து
பாடல்களில் பேசுகிறது. அப்பாடல்களில் சொல்லப்பட்டுள்ள சுருக்கமான கருத்துக்கள் இவை.

1. சிவன் 28 ஆகமகங்களை 66 பேருக்கு உபதேசித்தான்.
2. இந்த ஆகமகங்களின் (அதாவது கிரந்தங்களின்) எண்ணிக்கை              இருபத்தெட்டு கோடி நூறாயிரம்; இந்த ஆகமகங்கள் துணையுடன் விண்ணவர்கள் ஈசனது பெருமையைச் சொன்னார்கள்.
3. பதினெட்டு மொழிகளும் தெரிந்த பண்டிதர்கள் இந்த ஆகமங்கள் கூறும் வகையை அறிவார்கள்.
4. இந்த ஆகமங்கள் அனுபவத்தால் மட்டுமே விளங்கக் கூடியவை.
5. சிவனே ஆகமத்தில் அறிவாய் விளங்குகிறான்.
6. இந்த ஆகமகங்களை சிவனிடமிருந்து பெற்றவர்களுள் நந்தியும் ஒருவன்.
7. அப்படி நந்தி பெற்ற ஆகமங்கள் ஒன்பது.
8. இந்த ஆகமப் பொருளை இறைவன் அருள் இருந்தால் மட்டுமே உணர முடியும்.
9. சிவன் இந்த ஆகமகங்களை உமாதேவிக்கு ஆரியம் (வடமொழி) மற்றும் தமிழ் இரண்டிலும் உபதேசித்தான்.
10. ஆனாலும் சிவனை ஆகம அறிவினால் மட்டும் அறிய முடியாது. (மேலே எண் எட்டில் சொல்லப்பட்ட கருத்தை இங்கே ஒப்பிட்டுக் கொள்ளவும்)

அண்ணல் அருளால் அருளும் சிவாகமம்
எண்ணில் இருபத்தெண் கோடிநூ றாயிரம்
விண்ணவர் ஈசன் விழுப்பம் உரைத்தனர்
எண்ணிநின் றப்பொருள் ஏத்துவன் நானே.
-          (திருமந்திரம். 58)

மாரியும் கோடையும் வார்பனி தூங்கநின்று
ஏரியும் நின்றங்கு இளைக்கின்ற காலத்து
ஆரிய முந்தமி ழும்உட னேசொலிக்
காரிகை யார்க்குக் கருணைசெய் தானே.
-          (திருமந்திரம் – 65)

எனவே திருமூலர் கருத்துப்படி பார்த்தாலும், எவையெவை ஆகம விதிகள் என்று நிர்ணயம் செய்ய முடியாத நிலைமை. திருமூலர் சொல்லும் இதோபதேசப் பாடல் ஒன்று இங்கே …

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் நமனில்லை நாணாமே
சென்றே புகுங்கதி இல்லைநும் சித்தத்து
நின்றே நிலைபெற நீர்நினைந்துய் மினே.
-          (திருமந்திரம் 2014)

மக்கள் மனநிலை:

இந்தியாவில் பல விஷயங்கள் ஜாதி அபிமான அடிப்படையிலேயே இன்னமும் இருப்பது கண்கூடு. பெரும்பாலான அரசு அலுவலகங்களில், வருடா வருடம் ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜையின் போது அங்கு வேலை பார்க்கும் ஒரு பிராமணர் ஒருவர்தான் பூஜை புனஷ்காரம் செய்வார். அவரும் அதனை விருப்பத்துடன், கர்ம சிரத்தையாக, பயபக்தியோடு செய்வார். அவரைத்தான் மற்றவர்களும் பூஜை காரியங்கள் செய்யச் சொல்லுவார்கள். மற்றவர்கள் யாரும் அந்த பூஜை செய்ய முன்வருவதும் இல்லை. இஷ்டப்படுவதும் கிடையாது.

எனவே இந்த நாட்டில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்று ஒருவேளை தீர்ப்பு ஆனாலும், கூட நடைமுறையில் என்ன நடக்கும் என்பது கண்கூடு. (வெளியே பகுத்தறிவு பேசும் பலரும், தங்கள் வீட்டு கல்யாணம் கிரகப் பிரவேச நிகழ்ச்சிகளுக்கு பிராமணர்களை வைத்தே செய்கிறார்கள். இது அவர்களுடைய தனிப்பட்ட அல்லது குடும்பம் சார்ந்த விருப்பம். ஆனால் அவர்களே வெளியில் பிராமணர்களை பகுத்தறிவு என்ற பெயரில் திட்டுவதை என்னவென்று சொல்வது?)
 
( சென்ற ஆண்டு ஜனவரி (2016) முதல் வாரத்தில் எழுதி வைக்கப்பட்ட கட்டுரை இது. அப்போது வெளியிட முடியவில்லை. பல்வேறு யோசனைகளுக்குப் பிறகு இப்போது வெளியிட்டுள்ளேன்)