Showing posts with label செல்போன். Show all posts
Showing posts with label செல்போன். Show all posts

Thursday, 30 June 2016

வாட்ஸ்அப் குப்பைகள்



ஒரு அவசர ஆத்திரத்திற்கு உதவுமே என்று வாட்ஸ்அப் (WhatsApp) ஐ டவுன்லோட் செய்து தெரிந்த நண்பர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க சில குழுக்களிலும் என்னை இணைத்துக் கொண்டேன்.

காப்பி பேஸ்டு நண்பர்கள்

ஆரம்பத்தில் நல்லாத்தான் போய்க் கொண்டு இருந்தது. ஒவ்வொரு குழுவிலும் என்ன நோக்கத்திற்காக அவை தொடங்கப் பட்டனவோ அது சம்பந்தப்பட்ட செய்திகள், அறிவிப்புகள் வந்து கொண்டு இருந்தன. அப்புறம் வழக்கம் போல காப்பி பேஸ்டு நண்பர்கள் இங்கும் வந்து விட்டனர். அடுத்தவர் படைப்புகளையோ அல்லது தங்களது ஃபேஸ்புக் தளத்தில் உள்ளவற்றையோ காப்பி பேஸ்டு செய்து போட ஆரம்பித்து விட்டார்கள். உதாரணத்திற்கு கபிலர் குறிஞ்சிப் பாட்டில் பாடிய 99 மலர்கள் பற்றிய விக்கிபீடியா பதிவு மற்றும் அவற்றிற்கான படங்களை இன்னும் காப்பி பேஸ்டு செய்து கொண்டே இருக்கிறார்கள். இன்னும் சிலர் நான்தான் தென்னைமரம் பேசுகிறேன், பனைமரம் பேசுகிறேன் என்று ஏதாவது கப்சா விட்டுக் கொண்டு இருக்கிறார்கள். இதில் அரசியல், சட்டஞானம் எல்லாம் உண்டு.

குப்பைகள்

சிலர் தினம் ஒரு கவிதை. இன்னும் சிலர் காலையில் எழுந்தவுடன், தினமும் ‘Good Morning Friends” என்று சொல்லுகிறார்கள்.. இதுவாவது பரவாயில்லை. சிலர் எப்போதோ நடந்த செய்திகளை இப்போதுதான் நடந்தது போன்று பகிர்வு செய்கிறார்கள். பகிர்வதற்கு முன்பு அது சரியான தகவலா என்று உறுதிப்படுத்திக் கொள்வது கிடையாது. இதுவும் போதாதென்று போட்டோ படங்கள் , வீடியோ படங்கள். என்று திரும்பத் திரும்ப ஊடகங்களிலும் ஃபேஸ்புக் தளங்களிலும் வந்தவைகளையே போட்டு அவை நிரம்பி வழிகின்றன.

இதில் உங்களுக்கு என்ன வந்தது என்று கேட்கலாம். இப்படி வழியும் தேவையற்ற தகவல்களை நீக்குவதற்கே (Clear) நேரம் ஒதுக்க வேண்டி உள்ளது. அதிலும் இந்த போட்டோக்கள், வீடியோக்கள், செல்போனில் கேமரா மற்றும் படங்கள் உள்ள Photo Gallery பகுதியில் அடைத்துக் கொண்டு ஹேங் (Hang) ஆகி விடுகின்றன. சில உறவினர்கள், நண்பர்கள் அனுப்பும் படங்களும் வீடியோக்களும் போட்டோ காலரியில் எங்கோ புதைந்து விடுகின்றன. சிலசமயம் செல்போனில் போட்டோ எடுக்கமுடியாமல் போய்விடும் நிலை. எனவே ஒவ்வொரு முறையும் Power Off செய்து விட்டு மறுபடியும் Power On செய்து செல்போனை பழையநிலைக்கு கொண்டு வர வேண்டி உள்ளது.  

இது விஷயமாக குழு நிர்வாகிகள் (Admin) எடுத்துச் சொல்லியும் யாரும் கேட்பதில்லை. ஆர்வக் கோளாறு காரணமாக திரும்பத் திரும்ப அப்படியே செய்கிறார்கள். 

எனக்கு வந்த பதில்

நானும் பொறுத்தது போதும் என்று வாட்ஸ்அப்பில் ஒரு குழுவில் அனுப்பிய செய்தி இது.

// …. … சங்க நண்பர்களே! சங்க வளர்ச்சி, நிகழ்ச்சி பற்றிய தகவல்களைத் தாருங்கள். ஏற்கனவே மற்ற சமூக வலைத்தளத்தில் வெளியானவற்றை இங்கு மறுபடியும்  Copy & Paste செய்யாதீர்கள். - இப்படிக்கு தி.தமிழ் இளங்கோ //

உடனே வாட்ஸ்அப் நண்பர் ஒருவர் குழுவில் பகிர்ந்து கொண்ட அவருடைய பதில் இது.

// Give Freedom ma.
  Dont insists post this.
  Post that.
  Spot is to Relax and share
  If the postings annoying.
  Let the admin remove //

Saturday, 26 March 2016

சம்சாரிக்கனும் – எனக்கு வந்த ராங்க் நம்பர்



கடந்த ஒரு வாரமாக எந்த வேலையும் நடக்கவில்லை. வலைப்பக்கம் கூட சரியாக படிக்கவும் எழுதவும் முடியவில்லை. ஒரே டென்ஷன். சென்ற வெள்ளிக்கிழமை (18.03.16) எனது மனைவி வழக்கம்போல பஸ்சில் அலுவலகம் புறப்பட்டுச் சென்றார்; சென்ற சில மணி நேரம் கழித்து எனது மனைவியின் அலுவலக போனிலிருந்து மனைவி, தான் கைப்பையில் வைத்து இருந்த பர்ஸ் மற்றும் செல்போனை காணவில்லை என்றும் வீட்டில் மறதியாக விட்டு போய் விட்டேனா என்று தெரியவில்லை, தேடிப் பார்க்கவும் என்றும் பேசினார். நான் வீட்டில் தேடியபோது எதுவும் கிடைக்கவில்லை. எனவே எனது செல்போனிலிருந்து மனைவியின் செல்போன் எண்ணுக்கு டயல் செய்து பார்த்தேன். ரிங்டோன் எதுவும் செல்லவில்லை. அப்போதே மனைவியின் செல்போன் திருட்டு போய்விட்டதை உறுதி செய்து கொண்டேன். மாலை அலுவலத்திலிருந்து திரும்பிய மனைவியும் இதனை உறுதி செய்தார். 

ஹலோ! ராங்க் நம்பர்:

அடுத்தநாள் சனிக்கிழமை மாலை xxxx என்ற எண்ணிலிருந்து எனது செல்போனுக்கு கால் வந்தது. மனைவியிடம் இதே போன் முன்பு நேற்று இரண்டுமுறை வந்ததையும் ஒரு பெண் இந்தியில் ஏதோ கேட்டார்கள்; நான் ராங்க் நம்பர் என்று சொன்னதையும் அது ஆண்ட்ராய்டில் Mundagod, Karnataka என்று இருப்பதாகவும் சொன்னேன். இப்போது மறுபடியும் போன் வந்த போது மனைவி என்னிடம் போனில் என்ன சொல்கிறார்கள் என்று பார்த்து விட்டு வைத்துவிடச் சொன்னார்கள். நான் எடுத்து பேசிய போது மறுமுனையில் இருந்து “இது எவ்விட” என்று கேட்டார்கள். நான் “ராங்க் கால், This is Trichy” என்று சொல்லிவிட்டு வைத்து விட்டேன்.

மறுநாள் ஞாயிறு டிராவல்ஸ் கம்பெனியில் பணிபுரியும் ஒருவர், மெயின்கார்டுகேட் பகுதியில் ஒரு பர்ஸ் கிடந்ததாகவும், தான் எடுத்து பார்த்ததில் ஒரு அலுவலக அடையாள அட்டையும் மூக்கு கண்ணாடியும் இருப்பதாகவும் தெரிவித்தார். அதில் இருந்த செல்போனும் இருநூறு ரூபாய் பணமும் இல்லை போலிருக்கிறது.  

அடுத்தநாள் திங்கள் காலை ஆட்டோவில் சென்று, நன்றி தெரிவித்து விட்டு வாங்கி வந்தோம். மனைவியின் ஆபிஸ் வாசலில் ஆட்டோவிலிருந்து இறங்கும்போது.  xxxx என்ற எண்ணிலிருந்து (Mundagod, Karnataka) மீண்டும் போன். ‘கொஞ்சம் சம்சாரிக்கனும்’ என்றார்கள். ‘HELLO THIS IS TRICHY. WRONG NUMBER” என்று சொல்லி வைத்து விட்டேன். அப்புறம் நான் பஸ்ஸில் சத்திரம் பஸ் நிலையம் வரும் வரை, தொடர்ச்சியாக அந்த எண்ணிலிருந்து போன் அழைப்புகள். நான் எடுக்கவில்லை. உடனே plscalme என்று ஒரு SMS வந்தது. Wrong number. This is Trichy in Taml nadu என்று நான் ஒரு SMS அனுப்பினேன். சிறிதுநேரத்தில் I love you.plese என்று மீண்டும் ஒரு SMS வந்தது. அப்போதுதான் இது ஏதோ ஒரு வில்லங்கம் என்று நான் சுதாரித்தேன். உடனே எனது போனை ஸ்விட்ச் ஆப் செய்து விட்டு நீண்ட நேரம் கழித்து ஆன் செய்தேன். இந்த சோதனையிலும் எனக்கு கமலஹாசன் நடித்த ’மன்மதலீலை’ படமும், அதில் வரும் ‘ஹலோ மைடியர் ராங்க் நம்பர்” என்ற பாடலும்தான் நினைவுக்கு வந்தன.

61 வயதில் காதலா?

அப்புறம் மதியம் சத்திரம் பஸ் நிலையத்திலிருந்து வீடு திரும்பும் வரை xxxxx என்ற வேறு ஒரு செல்போனிலிருந்து தொடர்ச்சியாக கால்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. முதல் தடவை எடுக்கும் போது அதே குரல் “சம்சாரிக்கனும்”. அப்புறம் தொடர்ச்சியாக அழைப்புகள். நான் எடுக்கவில்லை. வீட்டிற்கு வந்ததும் எனது மனைவி, மகன் இருவரிடமும் ’சம்சாரிக்கனும்’ பற்றி சொல்லிவிட்டு “61 வயதில் காதலா” என்று சொல்லி சிரித்தேன். அவர்களும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். எனது மகன் உடனே தனது செல்போனில் இருக்கும் truecaller என்ற சாப்ட்வேரில் அந்த இரண்டு செல்போன் எண்களையும் போட்டு பார்த்ததில் ஒன்று Aswini, Kerala, India மற்றொன்று Faisal, Kerala. India என்றும் தெரிய வந்தன. நானும் உடனே அந்த சாப்ட்வேரை எனது செல்போனில் டவுன்லோடு செய்து கொண்டு அந்த இரண்டு செல்போன் எண்களையும் Block செய்து விட்டேன். வீட்டில் உள்ள டெஸ்க் டாப் கம்ப்யூட்டரிலும் www.truecaller.com என்ற இணையதள முகவரியை ’புக்மார்க்’ செய்து வைத்துள்ளேன். BSNL அலுவலகத்திலும், இதே யோசனையைத் தெரிவித்தார்கள். இருந்தும் நேற்றைய தினம் வரை Faisal, Kerala. India என்ற பெயரில் தொடர்ச்சியாக வந்து கொண்டே இருந்த இந்த அழைப்புகள், இப்போது குறைந்துள்ளன. இன்றைய இப்போதைய நிலவரப்படி, எனது செல்போன் truecaller இல் 9 hours ago என்று புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.  அப்படியே ROBO CALLS எனப்படும் இவை முற்றிலும் நின்றுவிடும் என்று நினைக்கிறேன். 

சோதனை மேல் சோதனை:

எனக்குள்ள குழப்பம் என்னவென்றால், ’காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதை’ போல்  மனைவியின் செல்போன் காணாமல் போனதற்கும், இதற்கும் தொடர்பு உண்டா அல்லது வேறு எங்கிருந்து எனது செல்போன் எண்ணை, இந்த கும்பல் எடுத்து இருக்கும் என்பதுதான். (இதற்கிடையில் இரண்டு வாரத்திற்கு முன்பு பக்கத்து வீட்டுக்காரர் துரத்தியதால், எங்கள் வீட்டு கொல்லைப்புறம் ஒரு பூனை தனது மூன்று குட்டிகளுடன் வந்து தங்கி இருந்தது; அதில் ஒரு குட்டி கம்ப்ரசர் மோட்டாரில் சிக்கி சென்ற ஞாயிறன்று உயிரிழந்தது தனிசோகக் கதை) அடுத்து என்ன? பார்ப்போம்.

சிறுகுறிப்பு:

A robocall is a phone call that uses a computerized autodialer to deliver a pre-recorded message, as if from a robot. Robocalls are often associated with political and telemarketing phone campaigns, but can also be used for public-service or emergency announcements.   ( Courtesy: https://en.wikipedia.org/wiki/Robocall )


Thursday, 11 February 2016

ஆண்ட்ராய்ட் போனில் தமிழ் தட்டச்சு



                   ’யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்’ - திருமூலர்

எங்கள் வீட்டில் இருப்பது ‘டெஸ்க் டாப்’ கம்ப்யூட்டர். எனவே அதில் தமிழில் தட்டச்சு செய்ய NHM Writer 1.5.1.1 Beta என்ற தமிழ் எழுதியைப் பயன்படுத்தி வருகிறேன். இதிலுள்ள English - Tamil Phonetic முறை எனக்கு எளிதாகவும் இருக்கிறது. ஸ்மார்ட் போன் (ஆண்ட்ராய்ட்) வாங்கிய பிறகு, அதில் தமிழில் தட்டச்சு செய்ய, எந்த தமிழ் எழுதி நல்லது என்று தெரியாமல் இருந்தேன். 

தமிழ் எழுதிகள்:

இது விஷயமாக கூகிளில் தேடியதில், பல்வேறு தமிழ் எழுதிகளைக் காண முடிந்தது. 

Ezhuthani – Tamil Keyboard
Tamil Unicode Keyboard free
Tamil Keyboard
Google Handwriting Input
PaniniKeypad Tamil IME
Sellinam
Tamil Writer
Tamil Pride Tamil Editor
Tanglish – Tamil Editor
Tamil Unicode Font – Donated
Tamil Keyboard Unicode
Type Tamil Offline
Tamil Wrier
Google Indic Keyboard
Types In Tamil
Indic Keyboard

இவற்றைப் பற்றி, நமது வலைப்பதிவு நண்பர்களிடம் விசாரித்ததில், ஒவ்வொருவரும் அவரவர் பயன்படுத்தும் தமிழ் எழுதிகளைத்  தெரிவித்தனர்.

செல்லினம் (Sellinam 4.0.7)


ஒருமுறை புதுக்கோட்டையில் ஆசிரியர் நா.முத்துநிலவன் அவர்களிடம் பேசிக் கொண்டு இருந்தபோது ‘செல்லினம்’ (Sellinam)  பற்றி சொன்னார். நான் உடனே கூகிள் தேடலில் போய் Sellinam 2.0.1 என்ற மென்பொருளை தரவிறக்கம் செய்து கொண்டேன். அது அவ்வளவாக திருப்தி இல்லாத படியினால், மீண்டும் வேறொரு தமிழ் எழுதிக்குப் போனேன். அதுவும் சரிப்பட்டு வராததால், அண்மையில், திண்டுக்கல் தனபாலன் அவர்களிடம் ஆலோசனை கேட்டேன். அவர் செல்போனில், செட்டிங்ஸ் சென்று ஆப்ஸில் செல்லினத்தை (புதியது) தரவிறக்கம் செய்து கொள்ளச் சொன்னார். அவ்வாறே செய்தேன். 


இப்போது எனது ஆண்ட்ராய்டு செல்போனில் இருப்பது Sellinam 4.0.7 என்ற மென்பொருள் ஆகும். இது நன்றாகவே செயல்படுகிறது. இதில் தமிழ் 99 மற்றும் முரசு அஞ்சல் என்று இரு விசைப்பலகைகள் (KEY BOARD) உள்ளன. 

தமிழ் 99 - இதில் தமிழிலேயே தட்டச்சு செய்யலாம்
முரசு அஞ்சல் - இதில் ஆங்கில எழுத்துக்களைக் கொண்டு தமிழ் தட்டச்சு செய்யலாம் ( உதாரணம் ammaa > அம்மா)


நான் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு , Phonetic முறையில் தட்டச்சு செய்யும் முரசு அஞ்சல் முறையை பயன்படுத்துகிறேன். இதில் வேண்டும்போது தமிழுக்கும் ஆங்கிலத்திற்குமாக விசைப்பலகையை (KEY BOARD) மாற்றிக் கொள்ளலாம். நான் இப்போது பெரும்பாலும் நேரம் இருக்கும்போது வலைப்பதிவுகளுக்கான தமிழ் கருத்துரைகளையும் மற்ற குறுஞ்செய்திகளையும் (SMS) எனது செல்போன் மூலமாகவே டைப் செய்து அனுப்புகிறேன். மேலும் இந்த செல்லினத்தை ஃபேஸ்புக், வாட்ஸ்அப் ஆகியவற்றிலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.


// செல்லினம் என்பது ஒருங்குறியைப் பயன்படுத்தி செல்பேசிகளில் தமிழ் குறுஞ் செய்திகளை அனுப்பும் மென்பொருளாகும். இம்மென்பொருளை மலேசியாவைச் சேர்ந்த முத்து நெடுமாறன் தலைமையிலான முரசு நிறுவனம் உருவாக்கியது. இதை தைப்பொங்கற் திருநாளான ஜனவரி 15, 2005 முதல் சிங்கப்பூரில் வணிகப் பயன்பாட்டுக்காக வெளியிட்டது. நோக்கியா, சாம்சங் போன்ற கருவிகளில் இயங்கி வந்த செல்லினம், பின்னர் ஐபோன், ஐபேடு, ஆண்டிராய்டில் இயங்கும் கருவிகளுக்கும் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது வரையிலும், ஐம்பதாயிரத்துக்கும் அதிகமானோர் இதை பதிவிறக்கி உள்ளனர். //  ( நன்றி https://ta.wikipedia.org/s/1b3v )

செல்லினம் பற்றிய மேலும் அதிக விவரங்களுக்கு: http://sellinam.com/archives/406
             
                                  (ALL  PICTURES COURTESY: GOOGLE IMAGES)

Thursday, 3 December 2015

இன்றைய தேவை: சோலார் செல்போன்கள் / சார்ஜர்கள்



சென்னையில் புயல், மழை,வெள்ளம் காரணமாக, இப்போது (2015) ஏற்பட்டு இருக்கும் அழிவை சொல்ல வார்த்தைகள் இல்லை. விடிய விடிய நாள் முழுவதும் மழை; ஏரிகளில், ஆறுகளில் உடைப்பு. குடியிருப்புகளைச் சுற்றி தண்ணீர். மின்சாரம் கிடையாது; தகவல் தொடர்பு இல்லை. சென்னைக்கு பஸ், ரெயில் போக்குவரத்து கிடையாது. வரலாற்றில் முதன்முறையாக சென்னை விமான நிலையம் மூடப்பட்டது. சென்னை தனித் தீவானது.

தகவல் தொடர்பு:

இந்த இடர்ப்பாடில் சென்னையில் இருக்கும் உறவினர்கள் மற்றும் நண்பர்களோடு தொடர்பு கொள்ள போனிலும் செல்போனிலும் முயற்சி செய்தேன். பலரிடம் தொடர்பே கொள்ள முடியவில்லை. காரணம் சென்னையில் பாதிக்கப்பட்ட எல்லோரிடமும் செல்போன் இருக்கிறது ; ஆனால் அவர்கள் செல்போன் பேட்டரியில் சார்ஜ் இல்லை; சார்ஜ் செய்யலாம் என்றால், அவர்கள் ஏரியாவில் மின்சாரம் துண்டிப்பு. (அதுவுமல்லாமல் தரைதளத்தில் அமைக்கப்பட்டு இருந்த, செல்போன் கோபுரங்களின் ஜெனரேட்டர்கள், தண்ணீரில் மூழ்கி அவையும் செயல் இழந்து விட்டதாக டீவியில் செய்தி வாசித்தார்கள்}

சோலார் கால்குலேட்டர்கள்:

ஆரம்பத்தில் பாக்கெட் கால்குலேட்டர்கள் எனப்படும் சிறிய கால்குலேட்டர்கள் வந்த புதிதில் அவை பேட்டரியில் இயங்கக் கூடியவைகளாக இருந்தன. உபயோகத்தைப் பொறுத்து அடிக்கடி பேட்டரிகள் மாற்ற வேண்டியது இருந்தது. அப்புறம் சோலாருடன் பேட்டரியும் உள்ள பாக்கெட் கால்குலேட்டர்கள் வந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன. இன்று செல்போனிலேயே கால்குலேட்டர் வசதி இருந்தாலும், கடைகளில், சிறு வியாபார நிறுவனங்களில் இந்த வகை கால்குலேட்டர்கள் பயன்பாட்டில்தான் இருக்கின்றன.

சோலார் செல்போன்கள்:

நமதுநாட்டில் செல்போனின் அத்தியாயம் தொடங்கி பல  வருடங்கள் ஆகின்றன.. இன்னும் அதே பேட்டரி முறைதான் நடைமுறையில் உள்ளது. அடிக்கடி சார்ஜ் செய்ய வேண்டியது உள்ளது. ஸ்மார்ட் போன்களும் வந்து விட்டன. இந்தவகை போன்களில் சார்ஜ் அடிக்கடி தீர்ந்துவிடும். எனவே எப்போதுமே சில சமயம் தொடர்ச்சியாக சார்ஜ் செய்து கொண்டே இருக்க வேண்டும். ஸ்மார்ட் போன்களுக்கு என்று தனியாக பவர் பேங்க் (Power Bank) எனப்படும் சேமிப்பு பேட்டரி முறை வந்து விட்டது. வெளியூர் பயணம் அடிக்கடி செல்பவர்களுக்கு நல்ல துணை.

எந்த செல்போனாக இருந்தாலும் சார்ஜ் செய்ய மின்சாரம் தேவை. ஆனால் நம்நாட்டில் மின்வெட்டு சமயங்களில் செல்போனில் முன்கூட்டியே சார்ஜ் செய்யாவிடில் படும் அவஸ்தை சொல்ல வார்த்தைகள் இல்லை. பவர் பேங்க் (சேமிப்பு பேட்டரி) முறையிலும் சார்ஜ் இருந்தால்தான் போச்சு; இல்லையேல் கஷ்டம்தான்.

இந்த குறையைத் தவிர்க்க சூரிய ஒளியில் இயங்கும் சோலார் செல்போன்கள் வந்து விட்டன. உலகின் முதல் சோலார் செல்போன் –  (Samsung Guru E1107 ) 2009 ஆம் ஆண்டு சாம்சங் (SAMSUNG) நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. ஆனால் இந்த வகை செல்போன்கள் இந்தியாவில் இன்னும் சரியான பயன்பாட்டுக்கு வரவே இல்லை. அதே போலத்தான் பவர் பேங்க் (சேமிப்பு பேட்டரி) முறையும். இதற்கு முக்கிய காரணம் செல்போன் விற்பனையில் ஒளிந்து கிடக்கும் சுயநலம் மற்றும் தொலைநோக்கு பார்வை இல்லாததுதான். எங்கே இந்த சோலார் செல்போன்கள் வகை போன் வந்தால் தங்கள் வியாபாரம் போய் விடுமோ என்ற எண்ணம்தான் முக்கிய காரணம்.

இப்போது சென்னையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக ஏற்பட்ட, தகவல் தொடர்பு இன்மைக்கு முக்கிய காரணம் செல்போனில் உள்ள சார்ஜிங் முறைதான் காரணம். எனவே இந்த குறையைப் போக்கிட நாட்டில் சோலார் செல்போன்கள் (ஸ்மார்ட் போன் உட்பட)  உற்பத்தியை எல்லா செல்போன் நிறுவனங்களும் மேற்கொள்ள வேண்டும். மேலும் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள செல்போன்களுக்கு சோலார் சார்ஜர்கள் தாராளமாக கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

                                  (ALL  PICTURES COURTESY: GOOGLE IMAGES)