Tuesday 23 May 2017

கொடைமடம்அவன் பித்தனா? என்று ஒரு தமிழ்த் திரைப்படம். நடிகர் எஸ்.எஸ்.ஆர் கதாநாயகன். இந்த படத்தில், ஒரு பிச்சைக்காரனுக்கு இரக்கத்தின் மிகுதியால் கதாநாயகன் ஒரு நூறு ரூபாயை பிச்சையாகக் கொடுத்திட, அவனுக்கு அந்த பிச்சைக்காரன் கொடுத்த பட்டம் பைத்தியம் என்பதாக ஒரு காட்சி வரும். (1966 இல் வெளிவந்த படம் இது – அன்றைக்கு நூறு ரூபாய் என்பது பெரிய மதிப்பு ) இதே போல தமிழ் இலக்கியக் காட்சிகளிலும் சிலர் மிகை இரக்கம் காரணமாக செய்த செயல்களும் உண்டு. ஆனால் அவற்றை யாரும் பைத்தியக்காரத்தனம் என்று சொல்லுவதில்லை.
    
இரண்டு வள்ளல்கள்

அன்றைய பறம்புமலையையும் அதனைச் சுற்றியுள்ள முந்நூறு ஊர்களையும் தன்னகத்தே கொண்ட பறம்புநாட்டை ஆண்ட மன்னன் வேள்பாரி என்பவன். ஒருமுறை அவன் தேரில் செல்லும்போது வழியில் முல்லைக்கொடி ஒன்றைக் கண்டான்.  பொதுவாகவே காட்டுக் கொடி என்றால், அது அருகே உள்ள ஒரு செடியையோ அல்லது மரத்தையோ பற்றி படரும். இந்த முல்லைக்கொடிக்கு அது மாதிரி படர அருகில் எதுவும் இல்லை போலிருக்கிறது. அவன் நினைத்து இருந்தால் வேலையாட்களைக் கொண்டு, அது பற்றிப் படர ஒரு பந்தலை போட்டு கொடுத்து இருக்கலாம். ஆனால் அந்த பாரி மன்னனோ தான் வந்த தேரையே அதன் அருகில் நிறுத்தி, அந்த முல்லைக் கொடியை எடுத்து தேரின் மீது படர விட்டு விட்டு, குதிரைகளை ஓட்டிக் கொண்டு வந்து விட்டான். விஷயத்தை கேள்விப்பட்ட மக்கள் மன்னனை ‘முல்லைக்குத் தேர் ஈந்த பாரி’ என்று போற்றினார்கள்.


இந்த கொடையைப் பற்றி கேள்விப்பட்ட, கபிலர் தனது பாடல்களில்

.... .... பூத் தலை அறாஅப் புனை கொடி முல்லை
நாத் தழும்பு இருப்பப் பாடாதுஆயினும்,
‘கறங்கு மணி நெடுந் தேர் கொள்க!’ எனக் கொடுத்த
பரந்து ஓங்கு சிறப்பின் பாரி – (புறநானூறு பாடல் எண்.200)

என்றும்

ஊருடன் இரவலர்க்கு அருளித் ,தேருடன்
முல்லைக்கு ஈத்த செல்லா நல்லிசை,
படுமணி யானைப்,பறம்பின் கோமான்
நெடுமாப் பாரி - (புறநானூறு பாடல் எண்.201)

என்றும் சிறப்பித்துப் பேசுகின்றார்.

இதே போல இன்னொரு வள்ளல். மலைசூழ்ந்த ஆவினன்குடியைச் சேர்ந்த பேகன். என்பவன். இவனும் ஒருமுறை தேரில் சென்று கொண்டு இருக்கும் போது, மயில் ஒன்று தோகை விரித்து ஆடக் கண்டான். எங்கே மயிலுக்கு குளிருமோ என்று இரக்கப் பட்டவன், தான் மேலுக்கு அணிந்து இருந்த சால்வையையே மயிலுக்கு போர்த்தி விட்டான். மக்கள் மனதில் ‘மயிலுக்குப் போர்வை ஈந்த வள்ளல் பேகன்’ என்று வாழ்த்தினர். இந்த இரண்டு வள்ளல்களும் கடையெழுவள்ளல்கள் வரிசையில் வைக்கப்பட்டு பாராட்டப் படுகின்றனர். 

நத்தத்தனார் எனும் புலவர் தனது சிறுபாணாற்றுப்படை (84 – 91) எனும் நூலில்,

வானம் வாய்த்த வளமலைக் கவாஅற்
கான மஞ்ஞைக்குக் கலிங்க நல்கிய
       
வ‌ருந்திற லணங்கி னாவியர் பெருமகன்
பெருங்க னாடன் பேகன் ……..  ……


என்று பேகனையும்

…… ….. …. ….            சுரும்புண
நறுவீ யுறைக்கு நாக நெடுவழிச்
சிறுவீ முல்லைக்குப் பெருந்தேர் நல்கிய
பிறங்குவெள் ளருவி வீழுஞ் சாரற்
       
பறம்பிற் கோமான் பாரி

என்று பாரியையும் சிறப்பித்துப் பேசுகிறார்.

பிற செய்திகள்:

இதே போல ஒரு வள்ளல், அவனை நாடி வந்த, வறுமையில் வாடிய புலவனுக்கு ஒரு யானையையே பரிசிலாக தருகிறான். அவன் அந்த யானையைக் கட்டி தீனி போட்டானா என்று தெரியவில்லை இன்னொருவன், பெயர் சிபி சக்கரவர்த்தி. தன்னை நாடி வந்த புறாவுக்காக அதனைத் துரத்தி வந்த பருந்துவின் பசியை ஆற்ற வேண்டி, தன்னுடைய தொடையையே அரிந்து கொடுத்தானாம். ( சக்கரவர்த்தி கை தட்டினால், அரண்மனை சமையல் அறையிலிருந்து இறைச்சி தட்டு தட்டாக வரும். ஆனாலும் அவனுக்குள் அப்படி ஒரு அவசரம் )

கொடைமடம்:

இவ்வாறு இந்த வள்ளல்கள் அளவற்ற அன்பு அல்லது அளவற்ற இரக்கம் காரணமாக, அளவுக்கு மீறி அல்லது கொடை வாங்குவோரின் தகுதிக்கு மீறி செய்வதை கொடைமடம் என்று சொல்கிறார்கள். இந்த கொடைமடம் என்ற குறிப்பு பரணர் பாடிய புறநானூறு பாடல் எண். 142 இல் வருகிறது. கொடைமடம் என்பதற்கு கொடுக்கும்போது இது சரியா என்று எண்ணாது அளவு கடந்து கொடுத்தல் எனலாம். இங்கே ‘ஆற்றில் போட்டாலும் அளந்துதான் போட வேண்டும்’ என்ற நமது. பழமொழியை நினைத்துக் கொள்ளுங்கள். பெரும்பாலும் இவை போன்ற செய்திகள் மிகைப்படுத்தப் பட்டவை என்றே எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது.

                          (ALL  PICTURES COURTESY: GOOGLE IMAGES)

Thursday 18 May 2017

ஹேக் செய்யப்பட்ட தமிழ் திரட்டிஒரு பக்கம் ரேன்சம்வேர் (Ransomware) என்று பக்கம் பக்கமாக எழுதிக் கொண்டு இருக்கிறார்கள். இந்த வைரஸ் உலகம் முழுக்க பரவி விட்டது; இன்னும் சில தின தினங்களில் இந்திய வங்கிகளை வளைத்து விடும்; யாரும் ஏடிஎம் பக்கம் போகாதீர்கள், பணம் எடுக்காதீர்கள் என்றெல்லாம் எழுதுகிறார்கள். இன்னொரு பக்கம் ஐஎஸ்ஐ தீவிரவாதிகளின் இணையத் தாக்குதல் என்று வரிசையாகப் பட்டியல்.

தேன்கூடு

தமிழ் வலைத் திரட்டிகளில் தமிழ்மணம் போன்று தேன்கூடு என்பதும் சிறப்பான ஒன்று. தமிழ்மணத்தில் இணைந்த புதிய வலைப்பதிவர்கள் தமது பதிவுகள் வெளிவர காத்திருக்க வேண்டும். ஆனால் தேன்கூடு புதிய, பழைய பதிவர்களின் பதிவுகளை உடனுக்குடன் வெளியிட்டு விடும். வாசகர் வட்டமும் பெரிது.

எனவே நான் எனது பதிவுகளை தமிழ்மணம் அடுத்து தேன்கூடு, இண்டிப்ளாக்கர் என்று இணைத்து வந்தேன். வழக்கம்போல, சென்ற வாரமும் எனது பதிவு ஒன்றினை, எனது வலைத்தளத்தில் இருந்தே தேன்கூடுவின் WIDGET மூலமாக அந்த திரட்டிக்கு இணைத்தேன். ஆனால் ERROR CODE என்று வந்தது. சில சமயம் தேன்கூடு திடீரென்று காணாமல் போய் விடும். அப்புறம் வந்துவிடும் ஆனால் இந்த தடவை. திரும்பத் திரும்ப சென்றாலும் அதே பிரச்சினை. ஏதோ புதிதாக ஒரு பிரச்சினை என்று எண்ணிய நான் http://thenkoodu.in/என்ற அதன் தளத்திற்கு நேரேயே சென்று பார்த்தேன். அங்கே HACKED BY INNOC3NT KING H4CK3R என்று ஒரு செய்தி வந்தது. கண்ணாடி டீசர்ட்டுடன் ஒரு பெரியவர், இரண்டு கைகளையும் நெறித்துக் கொண்டு, மார்பில் அடித்துக் கொள்வதைப் போல ஒரு வீடியோ; பின்னணியில் எனக்கு புரியாத மொழியில் ஒரு பாடல் ஒலித்து கொண்டு இருந்தது. மேலும் Message for Indian Army என்று , நமது இந்திய ராணுவத்தை திட்டியும், சவாலுக்கு அழைத்தும் சில வார்த்தைகள். மேலும் திரைக்கு அடியில், பாகிஸ்தானை வாழ்த்தி Cyber Team Warriors என்ற லோகோவும் இருந்தது. 

உடனடியாக நான் எனது வலைத்தளம் சென்று  தேன்கூடுவின் WIDGET ஐ நீக்கி விட்டேன். இவ்வாறு தேன்கூடு என்ற இணையத் திரட்டி ஹேக் செய்யப்பட்டது குறித்து எந்த வலைப்பதிவிலும் அல்லது மற்ற செய்தி இணைய தளங்களிலும் தகவல் ஏதும் இல்லை.                                                  

சரி ஏனைய தமிழ் திரட்டிகளின் நிலைமை எவ்வாறு இருக்கிறது என்று, எனக்குத் தெரிந்தவற்றின் இணைய முகவரிகள் சென்று வந்தேன். 

நின்று போனவை:


ஹாரம் www.haaram.com  இந்த தளம் இப்போது இல்லை. விற்பனைக்கு என்று தகவல் வருகிறது.

தமிழ் சிட்டி www.tamilchetee.com இந்த தளமும் இப்போது இல்லை.

உலவு www.ulavu.com வலைப்பதிவு நண்பர்கள் பலர் இதில் இணைந்து இருந்தனர். என்னையும் சேரச் சொன்னார்கள். நான் சேரவில்லை. நாளடைவில் இந்த திரட்டியானது திறப்பதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டது; இதனாலேயே பலருடைய வலைத்தளங்கள் இதே பிரச்சினையில் சிக்கித் தவித்தன. இந்த திரட்டியும் சிறிது நாட்களிலேயே நின்று விட்டது.

வலைப் பூக்கள் www.valaipookkal.com வந்த புதில் ரொம்பவும் பிரமாதமாக அனைவரையும் கவர்ந்தது. அப்புறம் வழக்கம்போல மற்ற தமிழ் திரட்டிகளைப் போலவே இதுவும் படுத்து விட்டது.

தமிழ் ராஜா www.tamilraja.com இதுவும் இப்போது இல்லை. இணையதள முகவரிக்கு சென்றால் The domain tamilraja.com may be for sale. Click here to inquire about this domain. என்று விற்பனை அறிவிப்பு வருகிறது.

பூங்கா www.poongaa.com இதுவும் ஒரு காலத்தில் ஓகோ என்று இருந்தது இப்போது அங்கே போனால்  ‘ 404 - Component not found ‘ என்று வருகிறது.

தமிழ் ப்ளாக்ஸ் http://tamilblogs./com  இதுவும் நின்று விட்டது.

மரத்தடி www.maraththadi.com  இதுவும் ஒரு காலத்தில் விமரிசையாகவே போய்க் கொண்டு இருந்தது. இப்போது நின்று விட்டது. Buy this domain. என்று வருகிறது

தோழி www.thozhi.com  இந்த இணையதளத்தில் இப்போது Thozhi.com is for sale என்று அறிவிப்பு வருகிறது.

கில்லி http://gilli.com இதுவும் இப்போது இல்லை.

தமிழ் ப்ளாக்கர்ஸ் http://tamilbloggers.org இதுவும் இப்போது இல்லை.

வல்லினம் http://vallinam.com  இந்த தளத்திற்குப் போனால் ValliNam.com is for sale (Valli Nam) என்று பதில்.

போகி www.bogy.in இப்போது இல்லை.

மாற்று www.maatru.net பழைய பதிவுகளோடு 2011 முதல் அப்படியே நிற்கிறது.

இண்ட்லி http://ta.indli.net   இதில் இப்போது 500 Internal Server Error என்று காட்டுகிறது. இதுவும் ஒரு காலத்தில் பிரபலமாக இருந்த ஒன்று.

சங்கமம் http://isangamam.com – பழைய திரட்டிகளில் இதுவும் ஒன்று. திடீரென்று காணாமல் போய் மீண்டும் வந்துள்ளது. ஆனால் அப்டேட் இல்லை. பழைய பதிவுகளே அப்படியே நிற்கின்றன.

தமிழ் நண்பர்கள் http://tamilnanbargal.com   இந்த தளமும் துவங்கிய காலத்தில் ஓஹோ என்று ஓடியது. இப்போது இங்கே சென்றால்  Sorry, the page you are looking for is currently unavailable. என்ற பதிலே கிடைக்கிறது.
 

இப்போது உள்ளவை: 

தமிழ் மணம் www.tamilmanam.net இப்போதைய தமிழ்திரட்டிகளில் சிறப்பானது. இதன்  தமிழ்மணம் தர வரிசைப் பட்டியல் குறிப்பிடத்தக்க அம்சம் ஆகும். ஆனாலும் இது பழைய நிலைமையில் இல்லை. முன்பெல்லாம் நமது பதிவுகளை இதில் இணைத்தால் உடனுக்குடன் வெளியாகும். இப்போது ரொம்பவும் தாமதமாகவே திரட்டி வெளியிடுகிறது. இதில் உள்ள தமிழ்மணம் ஓட்டுப் பட்டையில், பிற பதிவர்களுக்கு வாக்களித்தால் சட்டென்று முடிவதில்லை. இணையம் சுற்றிக் கொண்டே இருக்கிறது. சில சமயம் நீங்கள் ஏற்கனவே வாக்களித்து விட்டிர்கள் என்று வரும்; போய் பார்த்தால் அவ்வாறு இருக்காது.

இண்டிப்ளாக்கர் www.indiblogger.in/languagesearch.php?lang=tamil  இந்த தமிழ்திரட்டியும் சிறப்பான ஒன்று. தமிழ்மணம் போன்றே ரேங்க் பட்டியல் இதிலும் உண்டு. தமிழ் தவிர ஆங்கிலம், இந்தி, தெலுங்கு என்று பிற மொழிகளிலும் இதன் திரட்டிகள் உண்டு. அடிக்கடி வலைப்பதிவர்கள் சந்திப்பிற்கு ஸ்பான்சராக இருந்து வருகிறார்கள். தமிழ் வலைப்பதிவர்களுக்கும்  இவ்வாறு ஸ்பான்சர் செய்து வருகின்றனர். ஒருமுறை உணர்ச்சி வசப்பட்ட தமிழ்வலைப் பதிவர்கள் சிலரால் பிரச்சினை என்று கூட செய்தி வந்தது.

திண்ணை http://www.thinnai.com தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை என்ற முகப்பு வரிகளோடு உள்ள, இதுவும், இணையதள வாசகர்களால் அதிகம் விரும்பப்படும் இணையதளம் இது இப்போது http://puthu.thinnai.com என்ற இணைய முகவரியில் இயங்கி வருகிறது.

தமிழோவியம் www.tamiloviam.com ஆசிரியர் மீனா கணேஷ் – பதிப்பாளர் கணேஷ் சந்திரா என்று வெளிப்படையான தளம்.

நிலாசாரல் www.nilacharal.com இதுவும் அப்டேட் ஆகாமல் அப்படியே இருக்கிறது.

முத்தமிழ் மன்றம் www.muthamilmantram.com எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற முழக்கத்துடன் வலம் வரும் இந்த தளம் ஒரு பல்துறைக் கருத்துக் களம். அனைத்து தமிழ் வலைப்பதிவர்களும் சென்று பார்க்க வேண்டும்.
வல்லமை www.vallamai.com தமிழின் முன்னணி எழுத்தாளர்களும், மூத்த வலைப் பதிவர்களும் இந்த தளத்தில் தங்களது படைப்புகளை இணைப்பது இதன் சிறப்பு.

தமிழ் களஞ்சியம் www.tamilkalanjiyam.com  இந்த வலைத்தளம் இப்போது http://www.tamilsurangam.com தமிழ்ச் சுரங்கம் என்ற பெயரில் இயங்குகிறது.

வலையகம் www.valaiyakam.com இந்த வலைத்தளம் இப்போது https://www.facebook.com/valaiyakam என்ற ஃபேஸ்புக் தளத்தில் இயங்குகிறது

தமிழ் நாதம் www.tamilnaatham.com  இந்த வலைத்தளமும் இப்போது https://www.facebook.com/tamilnaatham என்ற ஃபேஸ்புக் தளத்தில் இயங்குகிறது.

தமிழ் 10 www.tamil10.com என்ற இந்த வலைத்தளமும் இப்போது https://www.facebook.com/tamil10com என்ற ஃபேஸ்புக் தளத்தில் இயங்குகிறது.

பதிவர் திரட்டி http://www.pathivar.net என்ற தமிழ் வலைத்திரட்டி நமது வலைப்பதிவர்களிடையே பிரபலமாக இருக்கிறது.. இதில் இணைந்து நமது பதிவுகளை வெளியிடுவதில் உள்ள சில இடர்ப்பாடுகள் காரணமாக நான் சேரவில்லை.

இன்னும் நிறைய வலைத்தளங்கள் இப்போது வந்து இருக்கலாம். நண்பர்கள் தெரியப் படுத்தினால் எனக்கும் மற்றவர்களுக்கும் உதவியாக இருக்கும்.Friday 12 May 2017

ஆதார் எண் அட்டையும் நானும்
ஏற்கனவே கழுத்தில் தொங்க விட்டுக் கொள்ளாத குறையாக, டிரைவிங் லைசென்ஸ், வாக்காளர் அட்டை, பென்ஷனர் ஐடி, PAN கார்டு, ஹெல்த் இன்சூரன்ஸ் ஐடி, ஏ.டி.எம் கார்டு, லைப்ரரி ஐடி என்று நிறையவே அடையாள அட்டைகள். பெரும்பாலும் எல்லா அட்டைகளும் பர்ஸில் இருக்கும். பத்தாதற்கு வீட்டில் ரேஷன் கார்டு, ஆர்.சி புத்தகம் என்று டாகுமெண்ட் ஐடிகள்.

காங்கிரசும் பிஜேபியும்

மேலே சொன்ன அடையாளங்கள் எல்லாம் போதாது என்று, அப்போது ஆட்சியில் இருந்த, ஐக்கிய முன்னணி (காங்கிரஸ்) அரசு, எல்லோருக்கும் ஆதார் எண் என்ற திட்டத்தை கொண்டு வந்தது. எல்லா அரசியல் கட்சிகளும் கடுமையாக விமர்சனம் செய்தன. இதில் கட்டாயம் ஏதும் இல்லை என்பதால், அலைச்சலுக்கு பயந்து கொண்டு நான் ஆதார் பக்கம் போகவில்லை.


மத்தியில் பி.ஜே.பி ஆளும் கட்சியாக வந்தவுடன், காங்கிரஸ் கொண்டு வந்த ஆதார் எண் திட்டத்தை, அப்போது கடுமையாக எதிர்த்த இந்த ஆதாரையே இப்போது எதற்கெடுத்தாலும் கட்டாயப் படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். 

// ஆதார் அடையாள அட்டை வாங்க வேண்டும் என, நாட்டின் குடிமக்கள் யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது. அத்தியாவசிய சேவைகள் வழங்குவதற்கு, அந்த அடையாள அட்டை அவசியம் என, நிர்பந்திக்கக் கூடாது. மேலும், பிற நாடுகளில் இருந்து சட்ட விரோதமாக ஊடுருவியவர்களுக்கு, கட்டாயம், இந்த அடையாள அட்டை வழங்கப்படக் கூடாது //

என்று உச்சநீதி மன்றம் உத்தரவிட்டு இருந்தபோதும் அதனை, இந்த மோடி அரசாங்கம் ஒரு பொருட்டாக மதித்ததாகவே தெரியவில்லை. 

இன்றும் ( 12.05.2017 வெள்ளி ) உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள், "ஆதார் கட்டாயமல்ல என நாங்கள் உத்தரவு பிறப்பித்திருக்கும்போது நீங்கள் (மத்திய அரசு) எப்படி அதை கட்டாயமாக்கி உத்தரவிட முடியும். வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆதார் ஏன் கட்டாயம் என்பதை அரசு விளக்க வேண்டும்" என்று கேட்டுள்ளனர். 

ஆதாருக்கு அலைச்சல்:

நாங்கள் குடியிருப்பது புறநகர் பகுதி என்பதால், ஆதார் எண்ணுக்காக டவுனுக்கு அடிக்கடி அலைய வேண்டி இருந்தது. ஆரம்பத்தில் இப்போது இருப்பது போல் ஆதார் எண் பெறுவது சுலபமாக இருக்கவில்லை. சட்டசபை தொகுதி வாரியாக, நகரின் மத்தியில் உள்ள, ஒரு கல்லூரியின் பெயரைக் குறிப்பிட்டு அங்கு வந்து பதியச் சொன்னார்கள். நானும் அங்கு சென்றேன். ஒரு பெரிய விண்ணப்ப பாரத்தைக் கொடுத்து அடுத்தநாள் குடும்ப உறுப்பினர்களையும் அழைத்து வரச் சொன்னார்கள். எனது மனைவி அலுவலகத்திற்கும் மகன் கல்லூரிக்கும், சென்று விட்ட படியினால் நான் மட்டும் சென்றேன். சரியான கும்பல். சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சரியான திட்டமிடல் இல்லை. வரிசையில் ரொம்பநேரம் நின்று விட்டு திரும்பி விட்டேன்.

திடீரென்று ஒருநாள் சட்டசபை தேர்தலுக்கு ஓட்டு போட்ட பள்ளியில் ஆதார் எண் பதிவதாக பக்கத்து வீட்டுக்காரர் சொன்னார். நானும் பரவாயில்லையே வீட்டிற்கு அருகில் என்று ஆவலாய்ச் சென்று வரிசையில் நின்றேன். ஒரு பத்து பேர்தான்., எனக்கு முன்னே பர்தா அணிந்த பெண்கள் நான்கு பேர். நான் போன நேரம், அவர்களில் ஒருவர் போன் செய்ய ஒரு வேனில் வந்த, அவரது உறவினர்கள் (பெரும்பாலும் பெண்கள்) அவருக்குப் பின் நின்று கொண்டார்கள்., இது கதைக்கு ஆகாது என்று திரும்பி விட்டேன்.

கிடைத்தது ஆதார்:

ஒரு கட்டத்தில், இனிமேல் மாநகராட்சி அலுவலகத்தில் ஆதார் பதியப்படும் என்றார்கள். நானும் கொஞ்சநாள் ஆகட்டும் என்று இருந்தேன். எனது மனைவி அந்த அலுவலகத்திற்கு பதியச் சென்றபோது, கும்பலே இல்லை என்று சொன்னவுடன், அப்புறம் நானும் பொறுமையாக சென்று ஆதார் எண்ணை பதிந்து வந்தேன். என்னைத் தொடர்ந்து எனது மகனும் பதிந்தார். அப்புறம் தபாலில் ஆதார் அட்டைகள் வீடு தேடி வந்தன.

வங்கிக் கணக்குகள்:

நான் வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவன் என்பதால், எனது எல்லா கணக்குகளும் அந்த வங்கியில்தான். எனவே முதல் வேலையாக எனது பெயரில் உள்ள எல்லா கணக்குகளுக்கும் ( கூட்டுக் கணக்குகள் உட்பட) ஒரே ஐடி எண் (CIF) இருக்கும்படி, கடிதம் கொடுத்து மாற்றிக் கொண்டேன். பின்னர் அந்த ஐடியோடு எனது ஆதார் எண்ணை இணைத்தேன். 

ரேஷன் கார்டு:
 
எங்களது குடும்ப கார்டு வெள்ளை நிறம்; சர்க்கரை மட்டும்தான். முன்பு இந்த கார்டுதான் எங்களுக்கு வங்கிக் கணக்கு துவங்க, டிரைவிங் லைசென்ஸ் வாங்க, வாகனம் வாங்க, பாஸ்போர்ட் எடுக்க என்று எல்லாவற்றிற்கும் அடையாளமாக பயன்பட்டது. இந்த ரேசன் கார்டிலும், குடும்ப உறுப்பினர்களது அனைவரது ஆதார் எண்களையும் இணைக்க வேண்டும் என்றார்கள்.. ஒரு வழியாக இதிலும் இணைத்தாகி விட்டது. இப்போது இந்த ரேசன் கார்டுக்குப் பதிலாக ஸ்மார்ட் கார்டு தரப்படும் என்று இழுத்தடித்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆகக் கூடி அலைச்சலும், கியூ வரிசையில் நிற்பதும் என்று நிறையவே நேரம் வீணாக போகின்றது.