Showing posts with label பான்பராக். Show all posts
Showing posts with label பான்பராக். Show all posts

Wednesday, 12 June 2013

குட்கா, பான் மசாலா தடை செய்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு பாராட்டு:



நான் வழக்கமாக டீ சாப்பிடும் கடை. அந்த கடைக்காரர் டீ வியாபாரத்தோடு ஒரு பெட்டிகடை வியாபாரமும் செய்து வருகிறர்ர். டீக்கடையில் மற்ற பொருட்களைவிட குட்கா, பான் மசாலா பொருட்களை மட்டும், கடைக்கு வந்தவுடனேயே பார்வையில் தெரியும்படி தோரணங்களாக தொங்க விட்டிருப்பார். ஒரு ஆட்டோ டிரைவர் வருகிறார். பான்பராக் ஐந்து அல்லது ஆறு பாக்கெட்டுகளை வாங்குகிறார். ஒரு பாக்கெட்டை கடையிலேயே பிரித்து போட்டுக் கொள்கிறார். ஏற்கனவே அவரது வாய் அந்த பாக்கையோ புகையிலையையோ மென்று மென்று பற்கள், ஷோலே படத்தில் வரும் வில்லன் கப்பர்சிங் பற்களைப் போன்று காவியேறி உள்ளன. இந்த ஆட்டோ டிரைவர் போன்று மற்ற டிரைவர்கள், மாணவர்கள், கட்டிடத் தொழிலாளர்கள் ( குறிப்பாக வட இந்திய தொழிலாளர்கள் ) என்று நிறையபேர் வருகிறார்கள். ஒவ்வொருவரும் ஒருநாளைக்கு எத்தனை பாக்கெட் வாங்குகிறார்கள்  என்று  தெரியவில்லை.  யாரும் பான்பராக், பான்மசலா, குட்கா போன்றவற்றை வாயில் போட்டுக் கொள்வதால் ஏற்படும் ( வாய் புற்றுநோய், குடல் புற்றுநோய் போன்ற  ) தீமைகளை உணர்ந்த மாதிரி தெரியவில்லை. கடைக்காரருக்கு  விற்றவரை  லாபம்  தயாரிப்பாளர்களுக்கு கொள்ளை லாபம்.


தமிழ்நாடு முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் அறிவிப்பு:   

  

முதல்-அமைச்சர் ஜெயலலிதா அவர்கள்,  சென்னை, மே. 8, 2013 அன்று சட்டசபையில் 110-வது விதியின் கீழ் ஒரு அறிக்கை வாசித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

புகையிலை மற்றும் புகையிலைப் பொருட்கள் ஏற்படுத்தும் புற்று நோய்களை தடுக்கும் நோக்கத்துடன் மத்திய அரசின் உணவு கலப்படத் தடைச் சட்டம் 1954ன் கீழ், மெல்லும் வகை புகையிலைப் பொருட்களை 19.11.2001 முதல் ஐந்து ஆண்டுகளுக்கு எனது அரசு தடை செய்து, அறிவிக்கை வெளியிட்டது. ஆனால் தமிழ்நாடு மற்றும் இதர சில மாநிலங்களின் இத்தகைய அறிவிக்கைகள், குறித்த வழக்கை விசாரணை செய்த உச்ச நீதிமன்றம் இந்தச் சட்டத்தில், இதனை தடை செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உள்ளதாக கூறி, 2.8.2004 அன்று அறிவிக்கையை ரத்து செய்தது.

தற்பொழுது, உணவு கலப்படத் தடைச் சட்டத்திற்கு பதிலாக உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம் என்ற புதிய சட்டத்தை 2006-ல் மத்திய அரசு இயற்றி உள்ளது. இந்த சட்டம் மற்றும் அதன் விதிமுறைகள் 5.8.2011 முதல் நாடு முழுவதும் நடைமுறைக்கு வந்தன.

தமிழக அரசும் இந்தச் சட்டத்தை செயல்படுத்த இதற்கென 'தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகம்என்ற தனித்துறையை ஏற்படுத்தியுள்ளது.

உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயம் விதிமுறைகளின்கீழ் எந்த ஒரு உணவிலும் சுகாதாரத்தைப் பாதிக்கும் பொருள் இருக்கக்கூடாது என்றும் புகையிலை மற்றும் நிக்கோட்டின் ஆகியவற்றை உணவுப் பொருளில் சேர்க்கக்கூடாது என்றும் விதிமுறை உள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் முன்பு உள்ள ஒரு வழக்கு விசாரணையின் போது குட்கா மற்றும் பான் மசாலா போன்ற சுவைக்கும் புகையிலைப் பொருட்களை தடை செய்வதை பற்றி மாநில அரசுகளால் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று உச்ச நீதிமன்றம் கோரியுள்ளது.

புகையிலையால் ஏற்படும் பல்வேறு வகையான புற்று நோய்களைத் தடுக்கும் வண்ணம், குட்கா, பான் மசாலா போன்ற சுவைக்கும் புகையிலைப் பொருட்களைத் தயாரிக்கவும், சேமித்து வைக்கவும், விநியோகம் செய்யவும், விற்கவும் தடை விதிக்க எனது தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்

தமிழ்நாடு முதல் அமைச்சர் ஜெயலலிதாவிற்கு பாராட்டு::

அதிரடியான முடிவுகளை  துணிச்சலாக எடுப்பதில் ந்மது முதல்வர் ஜெயலலிதாவிற்கு நிகர் யாரும் கிடையாது.  ஒருகாலத்தில் தமிழ்நாடெங்கும் லாட்டரி சீட்டு விற்பனை தமிழக மக்களின் வாழ்க்கையை கெடுத்துக் கொண்டிருந்தது. ஏழை பணக்காரன் வித்தியாசமின்றி எல்லோரும் இதில் பணத்தை இழந்து கொண்டிருந்தனர். வாங்குகிற தினக் கூலியை, லட்சாதிபதியாகும் அவசரத்தில் அப்படியே இழந்தவர்கள் நிறையபேர். இந்த லாட்டரி சீட்டினை தடை செய்து  (2003 ஆம் ஆண்டு) உத்தரவு போட்டவர் அன்றைய முதல்வர் ஜெயலலிதா அவர்கள்.

அன்று ஒரு துணிச்சலான நடவடிக்கையை எடுத்தது போலவே இப்பொழுதும் எடுத்து இருக்கிறார். அதைப் போலவே இப்பொழுது மக்கள் நலன் கருதி குட்கா, பான் மசாலா  போன்றவற்றை தடை செய்து உத்தரவு போட்டு இருக்கிறார். துணிச்சலான இந்த நடவடிக்கை எடுத்த, தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு பாராட்டு.

( முன்பே எழுதி வைத்த பதிவு. எடிட் செய்து இப்போதுதான் பதிவிட முடிந்தது )
 
( PHOTOS  THANKS TO  “ GOOGLE ” )