Showing posts with label யானை. Show all posts
Showing posts with label யானை. Show all posts

Monday, 6 January 2014

ஸ்ரீரங்கம் கோயில் ஆண்டாள் யானையைக் காப்பாற்றுங்கள்!



யானை என்றாலே எல்லோருக்கும் அதனை பார்ப்பதில் ஒரு சந்தோஷம்தான். அதிலும் கோயில் யானை என்றால் கேட்க வேண்டியதில்லை. ஸ்ரீரங்கம் கோயிலுக்குச் செல்லும் போதெல்லாம் அந்த கோயில் யானையைப் பார்த்து இருக்கிறேன். எட்ட இருந்துதான் பார்ப்பேன் (நான் சிறுவனாக இருக்கும்போது திருச்சி மலைக்கோட்டை யானை ஒரு சமயம் கடை வீதியில், கோபமாக இங்கும் அங்கும் ஓட பார்த்தது. எல்லோரும் பயந்து ஓடினார்கள். அவர்களில் நானும் ஒருவன். அன்றிலிருந்து எனக்கு யானை என்றால் பயம்.) ஸ்ரீரங்கம் கோயில் யானையின் பெயர் பெயர் ஆண்டாள். பெரும்பாலும் கோயிலின் உட்புறம் , ஸ்ரீராமானுஜர் சந்நிதிக்கு எதிரே உள்ள மண்டபத்தில் கட்டப்பட்டு இருக்கும். கூடவே அதனுடைய பாகன் ஸ்ரீதர்.( இப்போது உள்ளூர் சேனல்களில் பத்திரிகைகளில் அவர் பெயர் அடிக்கடி வருவதால் தெரிந்து கொள்ள முடிந்தது )  அவர் மண்டபத்தில் யானைக்கு வேண்டியவற்றை செய்து கொண்டு கூடவே இருப்பார்.

கோடை காலங்களில் காவிரியில் நடு ஆற்றில் தண்ணீர் ஓடைபோல ஓடும். அப்போது சிந்தாமணி பகுதியில் இருக்கும் நாங்கள் தினமும் அந்த பகுதிக்குச் சென்று குளிப்போம். எதிரே அம்மா மண்டபம். அங்கே யானையக் குளிப்பாட்டுவார்கள். அதை வேடிக்கை பார்ப்பதற்கென்றே ஒரு கூட்டம் இருக்கும். அம்மா மண்டபத்தில் காவிரி ஆற்றில் இருந்து கோயிலுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் போது அந்த மணடபத்தின் உள்ளே வேகமாக விறுவிறு என்று அந்த யானை வரும். யானையின் மேலே பூசைக்குரிய நீர்க் குடத்துடன் பாகனுடன் ஒருவர் வருவார் (சித்தி சீரியலில் டைட்டில் பாட்டின்போது வருவது ஆண்டாள் யானைதான் என்று நினைக்கிறேன். ) நவராத்திரி சமயம் தாயார் சன்னதியில் இந்த ஆண்டாள் யானை சாமரம் வீசும், ; மவுத் ஆர்கான் வாசிக்கும் என்று சொல்வார்கள். கோயிலின் பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகளிலும் இந்த ஆண்டாளையும் பாகனையும் சேர்ந்தே பார்க்கலாம்.

ஆண்டாள் யானை இந்த கோவிலுக்கு வந்து 25 ஆண்டுகளுக்கும் மேல் இருக்கும். இதற்கு முன் ஒரு யானை இருந்தது. அது இறந்து விட்டது. ஆண்டாள் யானை இங்கு வந்ததிலிருந்து அதற்கு பாகனாக இருந்து வருபவர் ஸ்ரீதர். சமீபகாலமாகவே கோயில் நிர்வாகம், அரசு அதிகாரிகள் உத்தரவு என்று பாகன் ஸ்ரீதருக்கு பிரச்சினைகள். இந்த செய்திகள் உள்ளூர் பத்திரிகைகளிலும் டீவி சேனல்களிலும் வந்தது. இப்போது ஸ்ரீரங்கம் கோயில் யானை ஆண்டாள், தேக்கம்பட்டியில், தமிழக அரசு நடத்தும் யானைகள் புத்துணர்வு முகாமில் இருக்கிறது.

இப்போது யானைப் பாகன் தனது வேலையை ராஜினாமா செய்து விட்டு , யானையிடமும் அதன் மொழியில் சொல்லிவிட்டு, ஸ்ரீரங்கம் வந்துவிட்டதாகச் சொல்லுகிறார்கள். இதனால் பாகனைப் பிரிந்த ஆண்டாள் இரண்டு நாட்களாகச் சாப்பிடாமல் இருக்கிறது ; சமாதானப் படுத்தும் புதிய பாகனையும் ஏற்றுக் கொள்ளவில்லை. அரசு ஆணைப்படி கோயில் நிர்வாகம் உதவி பாகன் ஒருவரை நியமனம் செய்ததாகவும்,  அதில் பாகன் ஸ்ரீதருக்கு உடன்பாடில்லை என்றும் சொல்கிறார்கள். இதுபற்றி பத்திரிகையாளர்களிடம் பேசிய ஸ்ரீதர் “ நான் இல்லாததால் முகாமில் யானை சரியாக சாப்பிடாமல் அடம் பிடிப்பதாக கேள்விப்பட்டேன். நேற்று முன்தினம் சென்று உணவு கொடுத்து விட்டு வந்தேன். மீண்டும் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வருகிற 4.2.2014 அன்று யானை வருகிறது. மீண்டும் ஆண்டாள் யானைக்கு பாகனாக இருந்து பணியாற்ற விரும்புகிறேன் - என்று சொல்லி இருக்கிறார். (நன்றி : மாலைமலர்)

கோயில் யானைக்கு பாகன், உதவிப் பாகன் என்று ஆரம்ப காலத்திலேயே நியமனம் செய்து இருக்க வேண்டும். 25 வருடங்களுக்கும் மேலாக பாகன் ஒருவரிடம் இருந்த யானையை இன்னொரு புதிய பாகனிடம் மட்டும் ஒப்படைப்பது சிக்கலான விஷயம்தான். பழைய பாகனை மறக்க முடியாத அந்த யானைக்கு உடல்நிலையில் பாதிப்பு ஏற்படலாம். மேலும் மனநிலை பாதிக்கப் பட்டால் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தீங்கு ஏற்படலாம். எது எவ்வாறு இருப்பினும் ஸ்ரீரங்கம் கோயில் யானை ஆண்டாள் நலனை முன்னிட்டு அரசு அதிகாரிகள், கோயில் நிர்வாகம், யானைப் பாகன் ஸ்ரீதர் இணைந்து ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும். அரசு உத்தியோகத்தில் எத்தனையோ பேருக்கு பதவி நீட்டிப்பைச் செய்யும் தமிழக அரசு யானைப் பாகன் ஸ்ரீதருக்கும் தனி சலுகை அளிக்கலாம். யானைப் பாகன் ஸ்ரீதரும் கோயில் நிர்வாகத்திற்கு உதவியாக உதவிப் பாகனையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். மற்ற கோயில்களில் பாகன்கள் விஷயத்தில் இல்லாத அரசியல் இங்கு என்னவென்று தெரியவில்லை. எது எப்படி இருப்பினும்,  ஸ்ரீரங்கம் கோயில் ஆண்டாள் யானையைக் காப்பாற்றுங்கள்!


( PHOTOS THANKS TO  PANORAMIO and  THE HINDU )