சொந்தக்காரர் ஒருவருக்கு உடல்நலம் சரியில்லை. பார்க்கப் போயிருந்தேன் ஆள்
இளைத்துப் போயிருந்தார். என்ன பண்ணுகிறது என்று கேட்டபோது , தொழில் போட்டியில்
எனக்கு செய்வினை செய்து வைத்து விட்டார்கள் என்றார்.
நான் பணியில் இருந்த சமயம், என்னோடு பணிபுரிந்த நண்பர் ஒருவர் நீண்ட லீவில்
இருந்தார். அவர் ஒரு முஸ்லிம். அவரைப் பார்க்க சென்றபோது , அவர் “ பக்கத்து
வீட்டுக்காரனுக்கும் எங்களுக்கும் வீட்டு சந்து பிரச்சினை. கேஸ் நடந்து கொண்டு
இருக்கிறது. பக்கத்து வீட்டுக்காரன் எங்களுக்கு செய்வினை செய்து வைத்து விட்டான்.
அதில் என் மனைவிக்கு உடம்பு நலமில்லாமல் போய்விட்டது. பையன் வெளிநாட்டில்
இருக்கிறான். துணைக்கு யாரும் இல்லாததால் நான் லீவு போடும்படி ஆகி விட்டது.” என்றார். இத்தனைக்கும்
நம்ம பாயோட பக்கத்து வீட்டுக்காரரும் ஒரு முஸ்லிம். கொஞ்சநாளில் நமது நண்பர் அந்த வீட்டை
விற்று விட்டு வேறு இடம் சென்றார்.வேறு இடம் போனதும் அந்த அம்மாள் குணமாகி
விட்டார்.
மந்திரவாதிகள்:
“எனக்கு என்னோட எதிரிகள் செய்வினை
செய்து வைத்து விட்டார்கள். அதுதான் இபபடி ஆகிவிட்டது” - இதுபோல் செய்வினை,பில்லி சூன்யம் என்று நிறைய
பேர் புலம்புவதை நம்மில் பலபேர் கேட்டு இருக்கலாம். அதிலும் ஒரு கால், ஒரு கை
ஒருவருக்கு சரியாக இயங்கா விட்டால் (பக்கவாதம்) அதற்கு காரணம் செய்வினை என்றே
நம்புகிறார்கள். பில்லி சூன்யம் ஏவல் என்றால் என்ன? தன்னுடைய எதிரிகளை அல்லது தனக்கு வேண்டாதவர்களை நேருக்கு நேர்
எதிர்க்க முடியாதவர்கள் சிறு தெய்வங்கள் அல்லது துர் தேவதைகள் மூலம் அவர்களுக்கு
கெடுதல் செய்தல் அல்லது அவர்களை அழித்தல். இதற்கு மாந்திரீகம் தெரிந்த மந்திரவாதி
ஒருவன் இடையில் இருந்து காரியம் செய்வான். காசையும் பிடுங்குவான். செய்வினையை
எடுப்பதற்கும் மந்திரவாதிகளை நாடுவார்கள். இதுமாதிரியான காரியங்களுக்கு மலையாள
மந்திரவாதிகளுக்கு மவுசு அதிகம். இதற்கு எதிராளியின் தலை முடி. காலடி மண், உபயோகப்
படுத்தும் எதேனும் ஒரு பொருள் அல்லது எதிராளியின் புகைப்படம் கேட்பார்கள் நடு
ராத்திரியில் அல்லது அதிகாலை வேளைகளில் முச்சந்தியில் அல்லது நாற்சந்தியில்
கறுப்புக் கயிறு, முட்டை, மிளகாய் போன்றவற்றை மந்திரித்து வைத்து விடுவார்கள். நான்
இவறறை அடிக்கடி அதிகாலையில் ஆற்றுக்கு
போகும் வழியில் கண்டதுண்டு. அவற்றை பெரிதாக எடுத்துக் கொண்டதில்லை. (அப்போது
மந்திரித்த தாயத்து, கறுப்புக் கயிறு, தகடு –
ஏதேனும் ஒன்றை எதிராளி இருக்கும் இடத்தில் அவனுக்குத் தெரியாமல் வைத்து
விடுவார்கள்.)
இதில் வேடிக்கை என்னவென்றால், ஊர்ப் பெரிய மனிதர்கள், தன்னை பெரிய பலசாலியாக
காட்டிக் கொள்பவர்கள் என்று பெரும்பாலானோர் பயத்தின்
காரணமாக கழுத்து ,கைகள், இடுப்பு ஆகியவற்றில் மாந்திரீக கயிறுகள், தாயத்துகள்
கட்டிக் கொள்வதைக் காணலாம். ஆக ஒரு பெரிய முரட்டு ஆசாமியை மடக்க ஒரு வதந்தியே
போதும்.
ஒருநாள் இரவு:
நாங்கள் திருச்சி டவுனில் (சுமார் 30
வருடங்களுக்கு முன்னர்) குடியிருக்கும்போது எங்கள் பகுதியில் இருக்கும் ஒரு
பையனுக்கு பேய் பிடித்து விட்டதாகச் சொன்னார்கள். எப்படி பேய் பிடித்தது என்றால்,
முருகன் டாக்கீசில் இரவு சினிமா பார்த்து
விட்டு காந்தி பூங்கா வழியாக வந்து இருக்கிறான். அப்போதெல்லாம் அந்த பகுதியில்
வீடுகள் அதிகம் இல்லை; ஆள் நடமாட்டமும் அதிகம் இருக்காது. அப்போது அந்த பூங்காவின்
அருகில் இருந்த முச்சந்தியில் சிலர் மந்திர வேலைகள் செய்து கொண்டு
இருந்திருக்கிறார்கள். இவன் பேசாமல் வந்து இருந்தால் பிரச்சினை இல்லை. அங்கு
நின்று வேடிக்கை பார்த்து இருக்கிறான். அவர்கள் மந்திரவேலை முடிந்ததும் ஏதோ ஒன்றை
ஊத இவன் மீது பட்டு இருக்கிறது. இவன் பயந்து போய் விட்டான். அன்றிலிருந்து அந்த
பையனுக்கு ஏதோ ஆகிவிட்டது. கடுமையான
குளிர் சுரம். கண்டபடி உளறினான். ஒருநாள் இரவு அவனுக்கு பேய் ஓட்டப் போவதாகச்
சொன்னார்கள். ஒரு பூசாரி அந்த பையனின் தலையில் உள்ள முடியை பிடித்துக் கொண்டு நடந்தார்.
அவனது குடும்பத்தை சேர்ந்த சிலர் உடன் சென்றனர். நானும் என்னதான் நடக்கிறது என்று
வேடிக்கை பார்ப்பதற்காக கூடவே சென்றேன். அவன் பயந்ததாகச் சொல்லப்படும்
முச்சந்தியில் அந்த பூசாரி அவனை வைத்து ஏதேதோ முணுமுணுத்து அவன் மீது திருநீற்றை
வீசினார். பின்னர் வீட்டிலிருந்து கொண்டு சென்ற சொம்புத் தண்ணீரை அவன் முகத்தில்
பளிச் பளிச் என்று அடித்தார்.தலை முடியில் இரண்டை வெட்டி எடுத்து காந்தி
பூங்காவிற்குள் (PARK) இருந்த புதருக்குள்
வீசினார். பின்னர் அவனது ஒரு கையில் மணிக்கட்டில்
ஒரு கருப்புக் கயிறு கட்டினார். அப்புறம் கொஞ்சநாளில் சரியாகி விட்டான்.
இது மாதிரி நிறைய கேள்விப் பட்டு இருக்கிறேன். பார்த்தும் இருக்கிறேன்.
இவ்ற்றை நான் உளவியல் மருத்துவம் என்ற அடிப்படையிலேயே பார்க்கிறேன்.
துளசிதளம்:
எண்டமூரி வீரேந்திரநாத் என்ற தெலுங்கு நாவலாசிரியர் எழுதிய “துளசிதளம்” என்ற நாவல் இந்த பில்லி
சூன்யத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல் . இதனை நான் தமிழில்
(தமிழாக்கம்: சுசீலா கனக துர்கா)
படித்து இருக்கிறேன். ந்ன்கு விறுவிறுப்பான நாவல். சாவி - வாரப் பத்திரிகையில்
தொடராக வந்து வாசகர்களின் வயிற்றைக் கலக்கியது. துளசி என்ற குழந்தைக்கு வைக்கப்படும் ஏவலை எப்படி
எடுக்கிறார்கள் என்பது கதை. மேலும் இந்த நாவலில் பில்லி சூன்யம் பற்றிய
விவரங்களையும் நாவலாசிரியர் சொல்கிறார். இந்த நாவலில் வரும் காத்ரா என்ற
மந்திரவாதியையும் காஷ்மோரா என்ற சூன்யமான ஏவலையும் மறக்க முடியாது
காளி கோயில்கள்:
நம்நாட்டில் பில்லி சூன்யம் விலகுவதற்காக வேண்டிக் கொள்வதற்காக விசேடமான கோயில்கள் நிறைய உண்டு. குறிப்பாக துர்க்கை எனப்படும் காளி கோயில்கள் இதற்கு
பிரசித்தி பெற்றவை. நமது தமிழ்நாட்டில் இந்துக்கள் மட்டுமன்றி கிறிஸ்தவர்களிலும்
முஸ்லிம்களிலும் இந்த பில்லி,சூன்யம்,ஏவலை நம்புபவர்கள் இருக்கிறார்கள்.
திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது
சிறுவாச்சூர் என்ற ஊர். அந்த ஊரிலுள்ள அம்மனைப் பற்றிய
ஒரு தகவல்.
மதுரையை விட்டு
வெளியேறிய கண்ணகி மேற்கு தொடர்ச்சி மலை செல்கிறாள். அங்கு வானுலகம் அடைகிறாள்.
ஆனாலும் ஆவேச வடிவ கண்ணகியானவள் மலையை விட்டு கீழிறங்கி கிழக்கு திசை நோக்கி காளி வடிவில் வருகிறாள்.
சிறுவாச்சூர் என்ற இந்த இடம் வரும் போது இருட்டி விடுகிறது. அப்போது அங்கிருந்த
கோயிலில் தங்க இடம் கேட்கிறாள். உள்ளேயிருந்த செல்லியம்மன் என்னும் தெய்வம்,
தன்னால் வரம் பெற்ற தீய மந்திரவாதி
ஒருவன் தன்னை மந்திரத்தால் கட்டி போட்டு இருப்பதாக கூறியது. அன்றிரவு
செல்லியம்மனோடு தங்கும் காளி வழக்கப்படி மந்திர வேலைகள் செய்ய வந்த மந்திரவாதியை
ஆவேசம் கொண்டு அழித்தாள். விடிந்ததும் செல்லியம்மன் நீயே இங்கிரு என்று காளியிடம் சொல்லிவிட்டு, மேற்கில் அருகிலுள்ள பெரியசாமி மலைக்கு
சென்றுவிடுகிறது. சிறுவாச்சூரில்
அமைதியாக (மதுரமாக) அமர்ந்ததால் மதுரகாளி என்று அழைக்கப் படுகிறாள். செல்லியம்மனை
மந்திரத்தால் கட்டிப் போட்ட மந்திரவாதி பில்லி, சூன்யம் போன்ற வித்தைகள் தெரிந்தவன். அவனை காளி அழித்த
இடம் என்பதால் இங்கு வந்து சென்றால் பில்லி, சூன்யம் சம்பந்தப்பட்ட துன்பங்கள் நீங்கும் என்று
நம்புகிறார்கள்
எல்லாமே நம்பிக்கைதான்:
ஒருமுறை அப்பரும்,சம்பந்தரும் மதுரைக்கு செல்வதாக இருந்தது. அப்போது நாளும்
கோளும் சரியில்லை என்று அப்பர் பயணத்தை தள்ளி வைக்க சொன்னார். ஆனால் சம்பந்தரோ ” சூரியன், சந்திரன், செவ்வாய், புதன்,
குரு, சுக்கிரன், சனி, மற்றும் ராகு-
கேது என்னும் ஒன்பது கோள்களும் சிவனையே நினைந்திருப்பவருக்கு ஒன்றும் செய்யாது “ என்று
ஒரு பதிகம் (கோளறு பதிகம்) பாடினார். ஒரு பதிகம் என்பது பத்து பாடல்கள் கொண்டது.
அந்த பதிகத்தின் முதல் பாடல் இது.
வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து என்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
சனிபாம் பிரண்டும் உடனே
ஆசறு நல்ல நல்ல அவைநல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே - திருஞானசம்பந்தர்
தேவாரம்
திருஞானசம்பந்தராவது பரவாயில்லை மென்மையாகவே பாடினார். இன்னொருவர் முருக
பக்தர். பெயர் குமரகுருபரர். நேரிடையாகவே விஷயத்திற்கு வந்து விடுகிறார்.
நாள் என் செய்யும் வினைதான் என்செயும் எனை
நாடிவந்த
கோள் என் செய்யும் கொடும் கூற்று என்செயும் குமரேசன் இரு
தாளும், சிலம்பும், சதங்கையும், தண்டையும் சண்முகமும்
தோளும், கடம்பும், எனக்கு முன்னே வந்து தோன்றிடினே.
கோள் என் செய்யும் கொடும் கூற்று என்செயும் குமரேசன் இரு
தாளும், சிலம்பும், சதங்கையும், தண்டையும் சண்முகமும்
தோளும், கடம்பும், எனக்கு முன்னே வந்து தோன்றிடினே.
-
குமரகுருபரர் (கந்தர்
அலங்காரம்)
” ஒன்றே குலம் ஒருவனே தேவன் “ என்ற நம்பிக்கை உடையவன் நான். ஆனால் இந்த பில்லி சூன்யம் இவற்றில் எல்லாம்
எனக்கு நம்பிக்கை கிடையாது. ஏனெனில் நல்லவனாக
இருக்கும் ஒருவன் சொல்லும் வாக்கே பலிப்பதில்லை. இதில் தீய எண்ணம் தீய செயல் கொண்ட
ஒருவன் சொல்லும் செயலும் பலிக்கும் என்பது எவ்வளவு பெரிய மூடநம்பிக்கை. அப்படி
நடந்து இருந்தால் இந்த உலகம் என்றைக்கோ சாம்பலாக
போயிருக்கும்.