Thursday 27 June 2013

ஆயிரம் ரூபாய் நோட்டு செல்லாது ( எனது 101 ஆவது பதிவு)



யாரும் பயப்பட வேண்டாம் இது 35 ஆண்டுகளுக்கு முன்பு (1978 - இல்) நடந்தது. அப்போது மணப்பாறையில் (வங்கியில்) பணிபுரிந்த நேரம். தினமும் திருச்சியிலிருந்து  மணப்பாறைக்கு சென்று வந்தேன். (காலையில் செல்லும்போது  பஸ். மாலையில் திரும்பி வரும்போது ரெயில்). என்னைப்போல் அந்த ஊரில் வெவ்வேறு அலுவலங்களில் பணிபுரிந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், வங்கி ஊழியர்கள் இவ்வாறே சென்று வந்தோம். எல்லோருமே நண்பர்கள். காலையில் பஸ்சில் பேச நேரம் இருக்காது. மாலை திரும்பும்போது ரெயிலில் பேச நேரம் இருக்கும். அப்போது எல்லா விவரங்களும் அலசப்படும்.

உண்மையா அல்லது வதந்தியா:

ஒருநாள் ரெயிலில் திரும்பும்போது, நண்பர்களிடையே ஒரு செய்தி சொல்லப்பட்டது. ஆயிரம் ரூபாய் நோட்டை செல்லாது என்று அரசாங்கம் அறிவிக்கும் என்பதுதான். அந்தநாளில் இப்போது இருப்பதுபோல் இண்டர்நெட் (INTERNET), செல்போன், குறுஞ்செய்திகள் (SMS) மின்னஞ்சல் (email) வசதிகள் இல்லாத நேரம். அந்த செய்தி உண்மையா அல்லது வதந்தியா என்று யாருக்கும் தெரியாது. ஆனாலும் அந்த செய்தி நன்றாக உலாவியது. அடுத்தநாள் வாடிக்கையாளர்கள் சிலரும், உள்ளூர் நண்பர்களும் இதுபற்றி என்னை கேட்டனர். யாருக்கு தெரியும்? .

கறுப்பு பணக்காரர்கள்:

பொதுவாக கறுப்பு பணக்காரர்கள் தங்களது சொத்துக்களை வெவ்வேறு முறைகளில் வைத்து இருப்பார்கள். முதலாவது: அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு வெளிப்படையாக வங்கிக் கணக்குகளில், லாக்கர்களில், சொத்து பத்திரங்களில் வைத்து இருப்பார்கள். சிலர்

ஆடிட்டர் வைத்துக் கொண்டு வரியை ஒழுங்காக கட்டி ரசீதெல்லாம் வைத்து இருப்பார்கள். இரண்டாவது: அதே ஆசாமிகள் சில சொத்துக்களை தனது பெயரில் இல்லாமல் இன்னொருவர் (பினாமி) பெயரில் வைத்து இருப்பார்கள். பினாமி சொத்து பினாமிகளுக்கே பெரும்பாலும் சென்று சேரும். மூன்றாவது: தங்க நகைகளாக அல்லது தங்க கட்டிகளாக பதுக்கி வைத்துக் கொள்ளுதல். நான்காவது: ரொக்கப் பணம். அதாவது கறுப்பு பணத்தை ரொக்கமாக, உயர் மதிப்பு (higher value denomination currency) நோட்டுக்களாக பதுக்கி வைத்தல். 1954 இல் சுதந்திர இந்தியாவில் Rs 1,000,  Rs. 5,000,  Rs. 10,000 ரூபாய் நோட்டுக்கள் வெளியிடப்பட்டன. இவைகளில், அப்போது பெரும்பாலும் புழக்கத்தில் இருந்த உயர்மதி்ப்பு நோட்டு ஆயிரம் ரூபாய்தான். 

ரொக்கமாக வைத்து இருப்பவர்களுக்கு எப்போதுமே ஒரு பயம்.. அதாவது தாங்கள் வைத்து இருக்கும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்று அரசாங்கம் சொல்லிவிட்டால் என்ன ஆகுமோ என்ற கவலைதான். அவ்வாறு அறிவிக்கும் முன்னர் ஒரே சமயத்தில் எல்லா பணத்தையும் வங்கியில் கட்டவும் முடியாது. கொஞ்சம் கொஞ்சமாக மாற்றவும் முடியாது. 



மத்திய அரசு அறிவிப்பு:

எங்கள் வங்கியில், எனக்கு எழுத்தர் - காசாளர் (Clerk – cum – Cashier ) என்று இரண்டு வேலைகள். அப்போது காசாளராக கௌண்டரில் இருந்த நேரம். ஒருநாள் சிலர் கௌண்டரில் ஆயிரம் ரூபாய்களைக் கட்டினர். அதிகம் இல்லை. பக்கத்து கவுண்டர்களிலும் இதே போல் கட்டினர். அன்று மாலை பணிமுடிந்து ரெயிலில் திரும்பும் போது, இதேபோல் மற்ற வங்கிகளிலும் ஆயிரம் ரூபாய் வந்ததாக வங்கி நண்பர்கள் சொன்னார்கள். அடுத்து சிலநாட்களில் மக்களுக்கு தெரிவிக்கப்பட்ட  செய்தி “ ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் இனி செல்லாது. மத்திய அரசு அறிவிப்பு “ என்பதுதான். ( அறிவிக்கப்பட்ட நாள் - ஜனவரி 16, 1978 , அன்றைய பிரதமர் திரு.மொரார்ஜி தேசாய் அவர்கள் )

அரசாங்கம் வெளியிடப் போகும் ஒரு அறிவிப்பு, தகவல் தொடர்பு அதிகம் இல்லாத அந்தநாளில், சாதாரணமான ஒரு ஊரிலேயே முன்னதாகவே சிலருக்கு மட்டும் தெரிந்து விடுகிறது என்றால் மற்ற பெரிய ஊர்களில் என்ன நடந்து இருக்கும் என்று யூகித்துக் கொள்ளலாம். மூட்டை கட்டி வைத்து இருந்த, விஷயம் தெரியாதவர்கள் என்ன செய்து இருப்பார்கள்?  கர்மயோகி அவர்கள் (www.karmayogi.net/?q=abarimidamaanaselvam1) தனது இணைய தளத்தில் அபரிதமான செல்வம்என்ற தனது கட்டுரையில் எழுதியது இது.

// ரூ.1000 நோட்டு இனி செல்லாது என 40 வருஷத்திற்கு முன் ஒரு சட்டம் வந்தது. அன்று ஒரு பெட்டிக் கடைக்காரன் 1000 ரூபாய் நோட்டில் பாக்கு மடித்துக் கொடுத்தான். 40 ஆண்டுக்கு முன்னும் பம்பாய் பெட்டிக் கடையில் 1000 ரூபாய் நோட்டு புழங்கியது. //

நேரம் இருக்கும்போது கர்மயோகியின் இந்த கட்டுரையை நண்பர்கள் அவசியம் படிக்கவும்.

முடிவு:

இப்போது 24 மணி நேர ATM CARD வசதி இருப்பதால், அவசர செலவுகளுக்கு மட்டும் பணத்தை கையில் வைத்துக் கொண்டு மீதியை வங்கிக் கணக்கில் வைத்துக் கொள்வதுதான் நல்லது. எப்போது என்ன நடக்கும் என்று யாருக்கு தெரியும். 




( குறிப்பு: ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை மட்டுமன்றி மற்ற 5000 மற்றும் 10000 ரூபாய் நோட்டுக்களையும் செல்லாது என்று அரசாங்கம் அறிவித்தது. The Indian 1000-rupee banknote (INR1000) is a denomination of Indian currency. It was first introduced by the Reserve Bank of India in 1954. In January 1978, all high-denomination banknotes (INR1000, INR5000, and INR10,000) were demonetised to curb )
 



My thanks to:

Google



 








 




Monday 24 June 2013

எங்கள் கல்லூரி விழாவில் கண்ணதாசன்


நான் புகுமுக வகுப்பை (P.U.C) திருச்சி நேஷனல் கல்லூரியில் முடித்துவிட்டு, பெரியார் ஈவெரா கல்லூரி  திருச்சியில் இளங்கலை(B.A) தமிழ் இலக்கியம் சேர்ந்தேன். அப்போது CO – EDUCATION கிடையாது. ஆனாலும் கல்லூரியில் பேராசிரியைகள் உண்டு.  அது அரசு கல்லூரி என்பதால் மாணவர்களுக்கு  நல்ல சுதந்திரம். நான் கல்லூரிக்கு முதன் முதலாக நுழைந்தபோது பல பழையகாலத்து கட்டிடங்கள் அங்கொனறும் இங்கொன்றுமாக இருந்தன. அவைகளில் வகுப்பறைகள் அலுவலகங்கள் இருந்தன. புதிதாக கட்டப்பட்ட பிளாக்கில் ஷிப்டு முறையில் வகுப்புகள்.
  

மாணவர் தமிழ்ப் பேரவை:
 
பெரும்பாலும் மாணவர் தலைவர் தேர்தல், மாணவர் தமிழ்ப் பேரவைத் தேர்தல்களில் அனல் பறக்கும். ஆனால் பல கல்லூரிகளில் இப்போது நடக்கும் சாதி மோதல்கள், கட்சி மோதல்கள் போல் அன்று இருந்ததில்லை. தேர்தலுக்குப் பிறகு மாணவர்கள் அவரவர் வேலையை கவனிக்கப் போய் விடுவார்கள். ஒவ்வொரு ஆண்டும் மாணவர் தமிழ்ப் பேரவையின் சார்பாக முத்தமிழ் விழா நடைபெறும். அப்போது விழாவிற்கு அன்றைய தமிழ் அறிஞர்கள், கவிஞர்கள் என்று அழைப்பார்கள்.

கண்ணதாசன் சொற்பொழிவு:

நான் படித்தபோது ஒருமுறை  கவிஞர் கண்ணதாசனை அந்த விழாவிற்கு அழைத்து இருந்தார்கள். (அப்போது அரசியல் ரீதியாக அவரது பேச்சுக்களால் கண்ணதாசனுக்கும் எதிர்ப்பாளர்கள் உண்டு. ஆனாலும் அவர் மீது எல்லோரும் கொண்ட தமிழ்ப் பற்றின் காரணமாக யாரும் பெரிதாக எடுத்துக் கொண்டதில்லை.)  அப்போது திருச்சி பெரியார் ஈவெரா கல்லூரியில் திறந்தவெளி அரங்கம்தான். அவரை பேச அழைத்தார்கள். அவர் மைக்கைப் பிடிப்பதற்கு முன்னர் கூட்டத்தின் கடைசியில் சிறு சலசலப்பு. அங்கிருந்த சிலர் ஓவென்று கத்தினார்கள். அவர்களில் சிலர் கடுமையாக திட்டினார்கள். அப்போதெல்லாம் போலீஸ் பாதுகாப்பெல்லாம் அவ்வளவாக கிடையாது. மாணவர்கள்தான் எல்லோரையும் கட்டுப்படுத்தினார்கள்.

கண்ணதாசன் பேச ஆரம்பித்தார். கையில் எந்தவிதமான குறிப்பு காகிதங்களையும் வைத்துக் கொள்ளவில்லை. மடை திறந்த வெள்ளமென பேச ஆரம்பித்தார். எந்தவிதமான தடுமாற்றமும் இல்லை. அதுவரை சலசலப்பு செய்தவர்கள் கூட மனம் லயிக்கும் வண்ணம் ஒரு இலக்கிய சொற்பொழிவைத் தந்தார். இடையிடையே சில பாடல்களை அருமையாக பாடவும் செய்தார். மாணவர்கள் மட்டுமல்லாது அங்கு இருந்த அனைவருமே மயங்கி ரசித்தனர். கூட்டத்தில் அவ்வளவு அமைதி.

தான் ஒரு பெண்ணை போகும்போதும் வரும்போதும் பார்வையிலேயே விரும்பியதாகவும், அந்த பெண்ணும் அப்படியே பார்வையிலேயே  விரும்பியபோதும் தனது காதல் கைகூடவில்லை என்று வருத்தமாகச் சொல்லிவிட்டு, அவளை நினைத்து தான் எழுதிய  ஒரு பாடலை முழுவதும் பாடினார். அந்த பாடல் … …

என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்
இது யார் பாடும் பாடல் என்று நீ கேட்கிறாய்
நான் அவள் பேரை தினம் பாடும் குயிலல்லவா
என் பாடல் அவள் தந்த மொழி அல்லவா
என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்
இது யார் பாடும் பாடல் என்று நீ கேட்கிறாய்
                                            
                                                        -              ( படம்: பாலும் பழமும்)

இன்னொரு பாடல். இந்தபாடல் உருவாக்கம் பற்றியும் சொன்னார். என்ன சொன்னார் என்று சரியாக நினைவில்லை. ஆனால் பாடம் நினைவுக்கு வருகிறது. இதனையும் மேடையில் பாடினார்.

பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்
அன்று உனைத் தேன் என நான் நினைத்தேன்
அந்த மலைத் தேன் இதுவென மலைத்தேன்
பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்
உனைத் தேன் என நான் நினைத்தேன்
அந்த மலைத் தேன் இதுவென மலைத்தேன்

                      - ( படம் :வீர அபிமன்யு )

அவரது சொற்பொழிவு முடிந்ததும் ஒரே கைதட்டல். மேடையில் ஒருவர் நன்றியுரை சொன்னதைக் கூட கவனிக்காமல் கூட்டம் கலையத் தொடங்கியது.

என்னைக் கவர்ந்த கண்ணதாசன்:

பள்ளி மாணவனாக இருந்த காலத்திலிருந்தே கண்ணதாசன் பாடல்களில் எனக்கும் மற்றவர்களைப் போல் ஒரு ஈர்ப்பு . இதற்கு முக்கிய காரணம், மறக்கமுடியாத இலங்கை வானொலியின் அன்றைய தமிழ் ஒலிபரப்பு. அவர்கள் அடிக்கடி ஒலிபரப்பிய கண்ணதாசன் பாடல்கள் நெஞ்சில் அப்படியே பதிந்தன. 

 தமிழால் தமிழர்களை மயங்க வைத்த, கவிஞர் கண்ணதாசனை அன்றுதான் நேரில் கண்டேன். அன்றுதான் அவருடைய பேச்சைக் கேட்டேன். இன்று கவிஞர் கண்ணதாசன் பிறந்தநாள். ( 24.06.1927)  மெல்லிசை மன்னர் எம் எஸ விஸ்வநாதனுக்கும் இன்று பிறந்தநாள்! அவருக்கு எனது வாழ்த்துக்கள்! 

சில பழைய படங்கள்:
படம்: (மேலே) மதியழகன், எம்.ஜி.ஆர்., அன்பில் தர்மலிங்கம், கண்ணதாசன், கருணாநிதி

படம்: (மேலே) தலைவர் காமராஜர் மற்றும் திரைப்படக் கலைஞர்களுடன் கண்ணதாசன்



படம்: (மேலே) மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் (நடுவில் இருப்பவர்) ராமமூர்த்தி ஆகியோருடன் கண்ணதாசன்.


( PHOTOS  THANKS TO  “ GOOGLE ” )
 


 













Friday 14 June 2013

வெட்சி மலர் ( LXORA ) எனப்படும் இட்லிப் பூ


இரண்டு ஆண்டுகளுக்கு முன் எனது மனைவியும், மகளும் நர்சரியில் இருந்து ஒரு பூச்செடியை வீட்டிற்கு கொண்டு வந்தார்கள். வீட்டின் முன்பக்கம், சுற்றுச் சுவருக்கு உட்புறம், செடியை நட்டு வைத்தார்கள். என்ன செடி என்று கேட்டதற்கு இட்லிப் பூ செடி என்று சொன்னார்கள்.  எனது மகளுக்கு திருமணம் முடிந்து அவரது கணவர் வீடு, சென்று விட்டார். அதன்பிறகு அந்த செடிக்கு நானும் எனது மனைவியும் தண்ணீர் விட்டு கவனித்துக் கொண்டோம். சென்ற ஆண்டு செடி நன்கு பெரிதானதும் பூக்கள் பூத்தன. பூக்கள் சிவப்பாக, நன்கு பெரிதாக இட்லி வடிவத்தில் இருந்தன. அந்த இட்லிப் பூக்களை யாரும் பறிப்பதில்லை. செடியிலேயே பூத்து, செடியிலேயே இருந்து விட்டு, நாளடைவில் காய்ந்து உதிர்ந்து விடும். மனித வாழ்க்கையும் இப்படியேதான் போய் விடுகிறது.

வெட்சிப் பூ:

சிலநாட்களுக்கு முன்னர் வலைப் பதிவில் ஒரு இலக்கியக் கட்டுரை எழுத வேண்டி இருந்தது. தமிழர்களின் போர்முறைகள் பற்றிய கட்டுரை அது. அதில் வெட்சி, கரந்தை என பன்னிரண்டு துறைகளைப் பற்றியும், அந்த மலர்களைப் பற்றியும் படித்து குறிப்புகள் எடுத்துக் கொண்டு இருந்தேன். . கல்லூரி நாட்களிலிருந்து வெட்சி , கரந்தை என்று சொல்லிக் கொண்டே இருக்கிறோம், ஆனால் அந்த மலர்கள் எப்படி இருக்கும் என்று தெரியாது.. படித்த போது இலக்கிய ஆசிரியர்களும் காட்டியதில்லை. நாங்கள் படித்த காலத்தில், இப்போது இருப்பதுபோல்  இவ்வளவு புத்தகங்களோ அல்லது இண்டர்நெட் வசதியோ கிடையாது. குறிப்புகள் எடுக்க எதுவாக இருந்தாலும் நூலகம்தான் ஓட வேண்டும். அதற்கும் நேரம் இருக்காது.  இப்போது வீட்டிலேயே இண்டர்நெட் வந்து விட்டது. எனவே சங்க இலக்கிய மலர்கள் பலவற்றைக் கூகிள் ( GOOGLE ) துணையோடு தேடினேன்.

அப்போது அங்கு தெரிந்த மலர்களில் ஒரு மலர் எங்கள் வீட்டில் உள்ள இட்லிப் பூவாக இருந்தது. அதன் இலக்கியப் பெயர் வெட்சி மலர் அல்லது வெட்சிப் பூ. இத்தனை நாட்கள் எங்கள் வீட்டில் இருந்து வரும் இட்லிப் பூ, தமிழ் இலக்கியத்தில் சொல்லப்படும் வெட்சிப் பூ என்பதிலும் ஒரு மகிழ்ச்சிதான். வெண்ணிற வெட்சி, செந்நிற வெட்சி என இரண்டுவகை. எங்கள் வீட்டில் இருப்பது செந்நிற வெட்சி.

எங்கள் வீட்டில் உள்ள வெட்சி செடி:



 




முதற் படம் மற்றும் மேலே உள்ள அனைத்துப் படங்களும் CANON - POWER SHOT A800  என்ற கேமராவால் இன்று (14.06.2013) எடுக்கப்பட்டவை.   

கீழே உள்ள படங்கள் ஆறு மாதங்களுக்கு முன்னால் NOKIA X2 செல்போன் கேமராவினால் எடுக்கப்பட்டவை.






இலக்கிய மலர்: 

பண்டைத் தமிழர்கள் பல்வேறு குழுக்களாக (நாடுகளாக) இருந்தனர். ஒரு நாட்டினரிடம் இருந்த ஆநிரைகளை கொள்ளையடிக்க,  மற்ற நாட்டினர் தொடுத்த போர் வெட்சிப் போர் எனப்பட்டது. அப்போது வீரர்கள் அடையாளமாக  வெட்சிப் பூவை அணிந்தனர். இலக்கண நூல்கள் வெட்சித் திணை என உரைத்தன.

தமிழ் இலக்கியத்தில் மலர்கள் என்றாலே கபிலர் பாடிய குறிஞ்சிப் பாட்டுதான் நினைவிற்கு வரும். ஆரிய மன்னன் பிரகத்தத்தன் என்பவனுக்கு தமிழைப் பற்றிச் சொல்லும்போது,  அந்த பாட்டில் கபிலர் பல்வேறு மலர்களைப் பற்றி சொல்லுகிறார். வெட்சிப் பூவை 63 ஆவது வரியில் சொல்லுகிறார்.

சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகள், வெட்சிப் பூவைப் பற்றி வேட்டுவ வரியில் குறிப்பிடுகிறார்.

திருமுருகாற்றுப்படையில், மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்செங்கால் வெட்சி “ ( வரி எண்.21 ) என்று சிறப்பிக்கிறார்..இதன் பொருள் சிவந்த கால்களை உடைய வெட்சிஎன்பதாகும்.

குறுந்தொகை  209 ஆவது பாடலில் பாலை பாடிய பெருங்கடுங்கோ “ முடச்சினை வெட்சி “ (வளைந்த கிளைகளைக் கொண்ட வெட்சி) என்று விவரிக்கிறார்.

  இதல் முள் ஒப்பின் முகை முதிர் வெட்சி “ என்று அகநானூறு (133) சொல்கிறது. 14-8.  ( சிவலின் ( சிவல் - ஒருவகைப் பறவை ) காலிலுள்ள முள்ளை ஒத்த,  அரும்பு முதிர்ந்த வெட்சிப்பூக்கள்) பாடலாசிரியர் உறையூர் மருத்துவன் தாமோதரனார்

ஏறு தழுவலின் போது வெட்சிப்பூவை வீரர்கள் சூடிக் கொண்டார்கள். அதனைப் பற்றிச் சொல்ல வந்த புலவர் புல்லிலை வெட்சி “ என்று கலித்தொகையில் (103) சிறப்பிக்கிறார். முல்லைக் கலி - ஆசிரியர்: சோழன் நல்லுத்திரன்



Wednesday 12 June 2013

குட்கா, பான் மசாலா தடை செய்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு பாராட்டு:



நான் வழக்கமாக டீ சாப்பிடும் கடை. அந்த கடைக்காரர் டீ வியாபாரத்தோடு ஒரு பெட்டிகடை வியாபாரமும் செய்து வருகிறர்ர். டீக்கடையில் மற்ற பொருட்களைவிட குட்கா, பான் மசாலா பொருட்களை மட்டும், கடைக்கு வந்தவுடனேயே பார்வையில் தெரியும்படி தோரணங்களாக தொங்க விட்டிருப்பார். ஒரு ஆட்டோ டிரைவர் வருகிறார். பான்பராக் ஐந்து அல்லது ஆறு பாக்கெட்டுகளை வாங்குகிறார். ஒரு பாக்கெட்டை கடையிலேயே பிரித்து போட்டுக் கொள்கிறார். ஏற்கனவே அவரது வாய் அந்த பாக்கையோ புகையிலையையோ மென்று மென்று பற்கள், ஷோலே படத்தில் வரும் வில்லன் கப்பர்சிங் பற்களைப் போன்று காவியேறி உள்ளன. இந்த ஆட்டோ டிரைவர் போன்று மற்ற டிரைவர்கள், மாணவர்கள், கட்டிடத் தொழிலாளர்கள் ( குறிப்பாக வட இந்திய தொழிலாளர்கள் ) என்று நிறையபேர் வருகிறார்கள். ஒவ்வொருவரும் ஒருநாளைக்கு எத்தனை பாக்கெட் வாங்குகிறார்கள்  என்று  தெரியவில்லை.  யாரும் பான்பராக், பான்மசலா, குட்கா போன்றவற்றை வாயில் போட்டுக் கொள்வதால் ஏற்படும் ( வாய் புற்றுநோய், குடல் புற்றுநோய் போன்ற  ) தீமைகளை உணர்ந்த மாதிரி தெரியவில்லை. கடைக்காரருக்கு  விற்றவரை  லாபம்  தயாரிப்பாளர்களுக்கு கொள்ளை லாபம்.


தமிழ்நாடு முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் அறிவிப்பு:   

  

முதல்-அமைச்சர் ஜெயலலிதா அவர்கள்,  சென்னை, மே. 8, 2013 அன்று சட்டசபையில் 110-வது விதியின் கீழ் ஒரு அறிக்கை வாசித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

புகையிலை மற்றும் புகையிலைப் பொருட்கள் ஏற்படுத்தும் புற்று நோய்களை தடுக்கும் நோக்கத்துடன் மத்திய அரசின் உணவு கலப்படத் தடைச் சட்டம் 1954ன் கீழ், மெல்லும் வகை புகையிலைப் பொருட்களை 19.11.2001 முதல் ஐந்து ஆண்டுகளுக்கு எனது அரசு தடை செய்து, அறிவிக்கை வெளியிட்டது. ஆனால் தமிழ்நாடு மற்றும் இதர சில மாநிலங்களின் இத்தகைய அறிவிக்கைகள், குறித்த வழக்கை விசாரணை செய்த உச்ச நீதிமன்றம் இந்தச் சட்டத்தில், இதனை தடை செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உள்ளதாக கூறி, 2.8.2004 அன்று அறிவிக்கையை ரத்து செய்தது.

தற்பொழுது, உணவு கலப்படத் தடைச் சட்டத்திற்கு பதிலாக உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம் என்ற புதிய சட்டத்தை 2006-ல் மத்திய அரசு இயற்றி உள்ளது. இந்த சட்டம் மற்றும் அதன் விதிமுறைகள் 5.8.2011 முதல் நாடு முழுவதும் நடைமுறைக்கு வந்தன.

தமிழக அரசும் இந்தச் சட்டத்தை செயல்படுத்த இதற்கென 'தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகம்என்ற தனித்துறையை ஏற்படுத்தியுள்ளது.

உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயம் விதிமுறைகளின்கீழ் எந்த ஒரு உணவிலும் சுகாதாரத்தைப் பாதிக்கும் பொருள் இருக்கக்கூடாது என்றும் புகையிலை மற்றும் நிக்கோட்டின் ஆகியவற்றை உணவுப் பொருளில் சேர்க்கக்கூடாது என்றும் விதிமுறை உள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் முன்பு உள்ள ஒரு வழக்கு விசாரணையின் போது குட்கா மற்றும் பான் மசாலா போன்ற சுவைக்கும் புகையிலைப் பொருட்களை தடை செய்வதை பற்றி மாநில அரசுகளால் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று உச்ச நீதிமன்றம் கோரியுள்ளது.

புகையிலையால் ஏற்படும் பல்வேறு வகையான புற்று நோய்களைத் தடுக்கும் வண்ணம், குட்கா, பான் மசாலா போன்ற சுவைக்கும் புகையிலைப் பொருட்களைத் தயாரிக்கவும், சேமித்து வைக்கவும், விநியோகம் செய்யவும், விற்கவும் தடை விதிக்க எனது தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்

தமிழ்நாடு முதல் அமைச்சர் ஜெயலலிதாவிற்கு பாராட்டு::

அதிரடியான முடிவுகளை  துணிச்சலாக எடுப்பதில் ந்மது முதல்வர் ஜெயலலிதாவிற்கு நிகர் யாரும் கிடையாது.  ஒருகாலத்தில் தமிழ்நாடெங்கும் லாட்டரி சீட்டு விற்பனை தமிழக மக்களின் வாழ்க்கையை கெடுத்துக் கொண்டிருந்தது. ஏழை பணக்காரன் வித்தியாசமின்றி எல்லோரும் இதில் பணத்தை இழந்து கொண்டிருந்தனர். வாங்குகிற தினக் கூலியை, லட்சாதிபதியாகும் அவசரத்தில் அப்படியே இழந்தவர்கள் நிறையபேர். இந்த லாட்டரி சீட்டினை தடை செய்து  (2003 ஆம் ஆண்டு) உத்தரவு போட்டவர் அன்றைய முதல்வர் ஜெயலலிதா அவர்கள்.

அன்று ஒரு துணிச்சலான நடவடிக்கையை எடுத்தது போலவே இப்பொழுதும் எடுத்து இருக்கிறார். அதைப் போலவே இப்பொழுது மக்கள் நலன் கருதி குட்கா, பான் மசாலா  போன்றவற்றை தடை செய்து உத்தரவு போட்டு இருக்கிறார். துணிச்சலான இந்த நடவடிக்கை எடுத்த, தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு பாராட்டு.

( முன்பே எழுதி வைத்த பதிவு. எடிட் செய்து இப்போதுதான் பதிவிட முடிந்தது )
 
( PHOTOS  THANKS TO  “ GOOGLE ” )

Sunday 9 June 2013

பண்டைத் தமிழர்களின் காட்டுமிராண்டிப் போர்:


ஒருமுறை புதுமைப் பித்தன்,  கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்தகுடி  (புறப்பொருள் வெண்பாமாலை (பாடல் எண்.35) என்ற வாக்கியத்திற்கு   உலகில் குரங்குதான் முதலில் பிறந்தது என்றால் அதிலும் கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்த குரங்கு தமிழ்க் குரங்கே என்று கேலி செய்தார். இது நகைச்சுவைக்காக சொல்லப்பட்டது  என்பதால், அப்போது  யாரும் இதனை பெரிது படுத்தவில்லை. அதேபோல பெரியார் ஒருமுறைதமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழிஎன்று சொன்னார். அவர் என்ன அர்த்தத்தில் சொன்னார் என்பதற்கு அவர் தொண்டர்கள், கருத்துரை தந்தார்கள். யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. எது எப்படி இருப்பினும், தமிழர் நடத்திய போர் முறையைப் பார்க்கும்போதுதமிழர் வீரம்என்பது காட்டுமிராண்டிகள் செயல் என்றே தெரிகிறது.

பண்டைத் தமிழர் வரலாற்றைப் பற்றி எழுதும்போது தமிழ்நாடு இப்போது பல்வேறு, மாவட்டங்களாக இருப்பதைப் போன்று, அன்றும் இருந்தன என்பதைப் போன்ற ஒரு பிம்பத்தை உண்டு பண்ணி விட்டார்கள். உண்மையில் தமிழர்கள் ஆங்காங்கே சின்னச் சின்ன குழுக்களாகத்தான் ( TRIBES) இயங்கி வந்தனர்.ஒவ்வொருவரும் தாங்கள் இருந்த பகுதியை நாடு என்று அழைத்துக் கொண்டனர். வலுவான ஒரு குழுவினர் மற்ற குழுவினரை அடக்கி தம் நாட்டை விரிவு படுத்திக் கொண்டனர். இப்போது அரசியல் கூட்டணி இருப்பது போன்று அன்று சில குழுவினர் தங்கள் தலைமையில் குழுக்களை சேர்த்துக் கொண்டு ஒருவர் மீது ஒருவர் படையெடுத்து போரிட்டுக் கொண்டனர். மேற்கு தொடர்ச்சி மலைத் தொடர், மலைக்கு அப்பால் இருந்த தமிழ் மக்களை முற்றிலும் பிரித்து விட்டது. இன்றைய அரசியல் கூட்டணி மாறுவதைப் போல அன்று குழுக்களும் அணி மாறிக் கொண்டே இருந்தனர். பின்னாளில் இந்த குழுக்கள் ஒன்றோடொன்று கலந்து, சேர சோழ பாண்டியர் என்று உருவாக்கம் பெற்றன. தமிழ்நாடு என்ற பெயரில் அப்போது நாடு ஏதும் கிடையாது

தென்பாண்டி குட்டம் குடம்கற்கா வேண்பூழி
பன்றிஅருவா அதன்வடக்கு நன்றாய
சீதமலநாடு புனல்நாடு செந்தமிழ்சேர்
ஏதமில் பன்னிரு நாட்டெண்.


என்பது ஒரு பழம் பாடல். இது அந்த காலத்தில் இருந்த செந்தமிழ் நாட்டின் பன்னிரண்டு பிரிவுகளைச் சொல்லும்.

ஆணாதிக்கம் மிக்க இந்தக் குழுக்களில் பெண்கள் அடிமையாகத்தான் வைக்கப்பட்டு இருந்தனர். அனைத்துக் குழுவினராலும் தமிழ் பொதுவாகப் பேசப்பட்டாலும் ஒவ்வொரு குழுவினரும் தமிழை ஒவ்வொருவிதமாக உச்சரித்தார்கள்.

தமிழர் போர் முறைகள்:

தமிழர்கள் போர் நெறியைப் பற்றி சொல்லும் நூல்புறப்பொருள் வெண்பாமாலைஎன்பதாகும். இதனை எழுதியவர் ஐயனாரிதனார்.  இவர் அந்தகாலத்தில் தமிழர்களிடையே இருந்த போர்நடை முறையைத் தொகுத்து எழுதியுள்ளார். அதிலுள்ள சில விவரங்களைப் பார்ப்போம்.

வெட்சியும் கரந்தையும்:

அன்று ஒவ்வொரு குழுவினரிடமும் ஆநிரைகள் எனப்படும் கால்நடைச் செல்வம் இருந்தது. அவற்றை கைப்பற்ற ஒரு நாட்டினர் இன்னொரு நாட்டின் மீது போர் தொடுத்தனர். இந்த போர் முறையைவெட்சிஎன்றார்கள். அப்போது அடையாளமாக வெட்சி மலர் அணிந்து சென்றனர். அவ்வாறு ஆநிரைகளைக் கவர வருபவர்களை எதிர்த்து போர் நடக்கும. இவ்வாறு எதிர் தாக்குதல் நடத்துவது கரந்தை எனப்பட்டது. அப்போது  அடையாளமாக கரந்தை மலர் அணிந்து கொண்டனர்.

வஞ்சியும் காஞ்சியும்:

சிலசமயம் மன்னனுக்கு அடுத்த நாட்டையும் தனது நாட்டுடன் சேர்த்துக் கொள்ளும் மண்ணாசை வந்துவிடும். அப்போது எதிரி நாட்டை கைப்பற்ற போர் நடக்கும். இந்த போர்வஞ்சிஎனப்பட்டது. அப்போது வஞ்சிப் பூ அணிந்து செல்வார்கள். இவ்வாறு மண்ணாசை கொண்டு வருபவர்களை எதிர்த்து போர் செய்தல்காஞ்சிஎனப்பட்டது. அப்போது காஞ்சி மலர் அணிந்தனர்.

உழிஞையும் நொச்சியும் தும்பையும்:

வேற்று நாட்டு மன்னன் கோட்டை ஒன்றைக் கட்டிக் கொண்டு அதனுள் இருப்பான். அவன் கோட்டையைக் கைப்பற்ற நடக்கும் போர் உழிஞை எனப்படும். அப்போது வீரர்கள் உழிஞைப் பூ சூட்டிக் கொண்டனர். கோட்டைக்குள் இருக்கும் மன்னன் எதிரிகளை, எதிர்த்து செய்யும் போர் நொச்சி எனப்பட்டது. அப்போது நொச்சிப்பூ அணிந்து கொண்டனர்.  

இவற்றிற்கும் மேலாக தரையிலும் போர் நடந்தது. இந்த யுத்தத்தை தும்பை என்றனர். அப்போது இருபக்க வீரர்களும் தும்பைப் பூவை அணிந்தனர். 

வாகை :

இரண்டு நாடுகளுக்கு இடையே நடக்கும் போரில் பலம் உள்ள நாடு வெற்றி பெறுவது என்பது இயற்கை. வெற்றியை வாகைப் பூ சூடி கொண்டாடினார்கள். இது வாகை எனப்பட்டது.

போர்க்கருவிகளும் உபாயங்களும்:

இன்று, போர் என்றாலே மக்கள் வெறுக்கின்றனர். போர் வெறியன் என்று
முகம் சுழிக்கின்றனர். அன்றைய போர் முறையானது ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டும். வாளால் வெட்டிக் கொண்டும் இறப்பதாகத்தான் இருந்தன. யாரிடம் (எந்த குழுவினரிடம்) போர் வீரர்கள் அல்லது போர் (தீ வைத்துக் கொளுத்துதல் போன்ற) உபாயங்கள் அதிகம் இருந்ததோ அவர்கள் வென்றார்கள். ( கற்காலத்தில் கற்களும், இரும்பு காலத்தில் இரும்பால் ஆன ஆயுதங்களும் பயன்படுத்தப்பட்டன.) தமிழர்களின் போரின்போது, வாள், வேல், ஈட்டி, அம்பு, அரிவாள், கோடரி, வளரி, மடுவு போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தினர். எதிரி நாட்டுப் பெண்கள் சூறையாடப் பட்டனர்; கணவனை இழந்த மகளிர் அவர்களது உறவினர்களால் உடன்கட்டைக்கு வற்புறுத்தப்பட்டனர்.. குடியிருப்புகள் கொளுத்தப்பட்டன. விளைநிலங்கள் அழிக்கப்பட்டன. பொருட்கள் களவாடப்பட்டன



இங்கு ஒரு சில காட்சிகள்... ...

ஆநிரைகளை கவருவதற்கு முன்னர் அந்த ஊரினைப் பற்றிய எல்லா தகவல்களையும் ஒற்றர்கள் மூலம் தெரிந்து கொண்டனர். பின்னர் ஊரைச் சுற்றி வளைக்கின்றனர். ஊரிலுள்ள ஒருவரும் தப்ப இயலாது போயிற்று. பின்னர் ஆநிரைகளையும் பொருட்களையும் கொள்ளையடிக்கின்றனர்.



உய்த்து ஒழிவார் ஈங்கு இல்லை ஊழிக்கண் தீயே போல்
முந்து அமருள் ஏற்றார் முரண் முருங்கத் - தம் தமரின்
ஒற்றினால் ஆய்ந்து ஆய்ந்து உரவோர் குறும்பினைச்
சுற்றினார் போகாமல் சூழ்ந்து  

-          புறப்பொருள் வெண்பா மாலை (பாடல் எண்.7)
          
தனது ஊரை அழிக்க வந்த வெட்சிப் பகைவர்களை எதிர்த்து போரிடுகிறான்
ஒரு கரந்தை வீரன். அவன் தனது எதிரியின் மார்பினை தனது வேலால் பிளக்கிறான். பின்னர் எதிரியின் குடலை உருவி தனது வேலில் மாலையாக சுற்றிக் கொண்டு ஆடுகிறான்.

மாட்டிய பிள்ளை மறவர் நிறம் திறந்து
கூட்டிய ·கம் குடர் மாலை - சூட்டிய பின்
மாறிரியச் சீறி நுடங்குவான் கைக்கொண்ட
வேல் திரிய விம்மும் துடி
-          புறப்பொருள் வெண்பா மாலை (பாடல் எண். 30)

அந்த ஊர் இதுவரை அமைதியாகத்தான் இருந்தது. சோலைகளில் குயில்கள் அகவும். மக்கள் வருவதும் போவதுமாக இயல்பான வாழ்க்கை. அந்த ஊரைக் கைபபற்ற வந்த எதிரிகள் ஊரைத் தாக்கினர். பெண்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடுகின்றனர்.

அயில் அன்ன கண் புதைத்து அஞ்சி அலறி
மயில் அன்னார் மன்றம் படரக் - குயில் அகவ
ஆடு இரிய வண்டு இமிரும் செம்மல் அடையார் நாட்டு
ஓடு எரியுள் வைகின ஊர்
-          புறப்பொருள் வெண்பா மாலை (பாடல் எண். 49)
        
கோட்டையை யானைப் படை, குதிரைப் படை, காலாட் படை என்று அனைத்து படைகளின் துணை கொண்டு தாக்குகின்றனர். கோட்டை மதிலின் மீது உயரமான ஏணிகளை வைத்து ஏறுகின்றனர். உள்ளே இருப்பவர்கள் சும்மா இருப்பார்களா? கோட்டை மீதிருந்து இவர்கள் மீது பாம்புகளை வீசுகின்றனர். கடிக்கப் பழகிய குரங்குகளை ஏவுகின்றனர். நெருப்பை அள்ளி அள்ளிக் கொட்டுகின்றனர். உள்ளேயிருந்து எறியும் கருவி கொண்டு பெருங்கற்களை வீசுகின்றனர்.

கல்பொறியும் பாம்பும் கனலும் கடிகுரங்கும்
வில்பொறியும் வேலும் விலக்கவும் - பொற்புடைய
பாணிநடைப் புரவி பல்களிற்றார் சார்த்தினார்
ஏணி பலவும் எயில்
-          புறப்பொருள் வெண்பாமாலை (பாடல் எண். 112)

போர் காரணமாக ஒரு குடும்பத்தில் உள்ள எல்லோருமே இறந்து விடுகின்றனர். தனது மகனும் இவ்வாறு இறக்க ஆற்றாத ஒரு தாய், “ முன்னம் நடந்த ஒரு போரில் எனது தந்தை போரிட்டு இறந்தான். இன்னொரு போரில் எனது கணவன் போரிட்டு மாண்டான். அவ்வாறே என்னுடைய தமையன்மாரும் போரிட்டு வீழ்ந்தனர். இப்போழுது எனது மகனும் பகைவர் அம்புகளால் இறந்து பட்டான்  என்று அரற்றுகிறாள்.

கல் நின்றான் எந்தைக் கணவன் களப்பட்டான்
முன் நின்று மொய் அவிந்தார் என்னையர் - பின்நின்று
கைபோய் கணை உதைப்பக் காவலன் மேலோடி
எய்ப்பன்றிக் கிடந்தான் என் ஏறு  
                                     -  புறப்பொருள் வெண்பாமாலை (பாடல் எண்.176)

இவ்வாறு இரக்கமற்ற நெஞ்சினராகப் போரிட்டதைத்தான்தமிழர் வீரம்என்று சொல்லி பெருமைப் பட்டுக் கொள்கின்றனர். “நமது தமிழர்கள் வீரம் செறிந்தவர்கள்என்று சொல்பவர்கள், தமிழர்கள் தங்களுக்குள் தமிழர்களோடு, ஒருவருக்கொருவர் போரிட்டார்கள் என்று சொல்வதில்லை. பகைவர்களோடு போரிட்டார்கள் என்று மழுப்புவார்கள். பகைவர்கள் யார் என்றால் இங்கே தமிழனுக்கு தமிழன்தான்.
 

அகமும் புறமும்:

அகம் எனப்படும், தமிழ் இலக்கியப் பாடல்கள் அமைதியானவை. இலக்கிய இன்பம் மிகுந்தவை. காரணம் அவை புலவர்கள் கற்பனையில் எழுந்தவை. ஆனால் பேராசை பிடித்த மன்னர்களால் நடத்தப் பெற்ற போர்களில் வெற்றி ஒன்றே இலக்கு. எனவே. காட்டுமிராண்டித்தனம்தான் இருந்தது. நாகரிகம் இல்லை


(குறிப்பு: இது ஒரு மாற்றுச் சிந்தனை கொண்ட கட்டுரை) 



( PICTURES :  THANKS TO  “ GOOGLE ” )