Showing posts with label ஆன்மீகம். Show all posts
Showing posts with label ஆன்மீகம். Show all posts

Friday, 6 October 2017

ஆகமவிதிகள் பற்றிய சர்ச்சை



இப்போதெல்லாம் பெரும்பாலும் ஆங்கிலப் புத்தாண்டு பிறந்ததும், ஜனவரி முதல்நாள் அவரவர் கும்பிடும் அல்லது இஷ்ட தெய்வத்தின் கோயிலுக்கு சென்று வழிபடுவது, ஒருவருக்கொருவர் “HAPPY NEW YEAR” – என்று, புத்தாண்டு வாழ்த்து கூறிக் கொள்வது – ஆகியவை மக்கள் மனதில் ஒன்றி விட்டது. எனவே வருடத்தின் தொடக்கம் ஒரு இறைவழிபாடுடன் துவங்க நினைப்பதில் தப்பில்லை. ஏனெனில் ஆங்கில நாட்காட்டியின் படியே நிறைய காரியங்களைச் செய்கிறோம். ஆனால் ஆண்டுதோறும் ”ஆங்கிலப்  புத்தாண்டு வழிபாட்டுக்காக  ஆகம விதிகளை மீறி நள்ளிரவில் கோவில்களைத் திறக்கக் கூடாது .மீறித் திறந்தால், அதனை எதிர்த்து ஆர்ப்பாட்டம்  நடத்துவோம்’ – என்று சிலர் எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டு இருக்கிறார்கள். அப்புறம் அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்திய மாதிரியோ, ஆகமவிதிகளை மீறி அர்ச்சனை செய்தவர்கள் மீது சட்டபடி நடவடிக்கை எடுத்த மாதிரியோ தெரியவில்லை..

ஞாயிற்றுக்கிழமைக்கு (இதுவும் பைபிள் அடிப்படையில் ஆங்கிலேயர் சொன்ன வார விடுமுறை நாள்) என்ன சொல்வார்கள் என்று தெரியவில்லை. மேலும், இந்த கனம் கோர்ட்டார் தீர்ப்பு என்பது, அர்ச்சகருக்கான நியமனத்தில் ஆகமவிதிகளைப் பற்றி சொல்லும்போது,  “முன்னால் இருந்து பார்த்தால் முதலியார் குதிரை; பின்னால் இருந்து பார்த்தால் செட்டியார் குதிரை” என்பது போல இருக்கிறது.

இவை ஆகம விதிகளா?

இந்துமதத்தில் ஆகம விதிகள் என்று ஏதேனும் நூல் இருக்கிறதா என்று தேடிப் பார்த்தால் ஒன்றும் கிடைக்கவில்லை. தெரிந்த நண்பர்களிடம் கேட்டாலும் தெரியாது என்றே சொல்கிறார்கள். வேதத்தில் சொல்லி இருக்கு என்று சொல்லிச் சொல்லியே, வேத புத்தகத்தையே பார்க்காத கதையாக இருக்கிறது.. எதற்கெடுத்தாலும் ஆகமவிதிகள் என்று மேற்கோள் காட்டுபவர்கள் கீழ்க்கண்ட கோயில் சம்பந்தப்பட்ட விஷயங்கள், எந்த ஆகமவிதிகளின் கீழ் நடைமுறையில் உள்ளன என்று சொன்னால் நன்றாக இருக்கும்.

கோயிலில் எந்த இடத்தில் விளக்குகள் எரிந்தாலும் , அவை சுத்தமான நல்லெண்ணெய் ஊற்றித்தான் எரிய வைக்க வேண்டும் என்பார்கள். இப்போது ஆன்மீகம் பற்றி வாராவாரம் எழுதும் பத்திரிகைகளில் இதனை ரொம்பவும் சிரத்தையாக சொல்லி இருப்பார்கள். பக்கத்திலேயே தீப எண்ணெய்க்கான விளம்பரமும் இருக்கும். அந்த காலத்தில் வெளிச்சத்திற்காக ஏற்றப்பட்ட தீப்பந்தங்களும் இதற்கு விதிவிலக்கல்ல. இப்படி இருக்க இப்போது கோயில் முழுக்க டியூப்லைட் போன்ற மின்விளக்குகள்தான் இருக்கின்றன. கோயிலில் விஷேசம் என்றால் அலங்கார வண்ண விளக்குகள்தான்.

அப்புறம் இந்த கழிப்பிடம் சமாச்சாரம். உச்சி மீது கோயில் இருந்தாலும், அங்கேயும் மற்றும் எல்லாக் கோயில்களிலும் கட்டணக் கழிப்பிடங்கள்தான். இவை எந்த ஆகம விதிகளின் கீழ் இருக்கின்றன என்று தெரியவில்லை. (அவசரத்திற்கு இவை கட்டாயம் தேவைதான் என்பதிலும், கால மாறுதலுக்கு ஏற்ப வசதிகளை உண்டாக்கிக் கொள்ள வேண்டும் என்பதிலும் மாற்றுக் கருத்து இல்லை:)

சாதா தரினம், சிறப்பு தரிசனம் என்ற பெயரில் கட்டண வசூல். அதிலும் கட்டணம் இல்லாத V.I.P என்று மட்டும் அல்லாமல் V.V.I.P என்று ஒரு சிறப்புப் பிரிவு வேறு உண்டு. இறைவன் முன் அனைவரும் சமம் என்ற சித்தாந்தம் உடைபட்டு போகிறது.

இதேபோல் கோயிலில் படம் எடுக்கக் கூடாது என்று சில இடங்களில் சொல்கிறார்கள். காரணம் கேட்டால் சரியாகச் சொல்வதில்லை. ஸ்ரீரங்கம் மற்றும் தஞ்சை பெரிய கோயில் போன்ற கோயில்களில் படம் எடுக்க அனுமதி உண்டு. ஆனால் கருவறையை மட்டும் படம் எடுக்க அனுமதி இல்லை. ஆனால் பல பத்திரிகைகளில் அவர்கள் செல்வாக்கில் சில கோயில்களின் கருவறைப் படங்கள் வெளிவந்து இருப்பதைப் பார்த்து இருக்கிறேன்.

இப்போது, “ திருப்பதி லட்டுக்கு ஆதார் அடையாள அட்டையை கட்டாயமாக்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது “ என்ற செய்தி வந்துள்ளது. .

இதற்கெல்லாம் மேலாக, இறைவன் சன்னிதானத்தில் மேளம் கொட்டுதல், பாட்டு பாடுதல் மற்றும் நாதஸ்வரம் வாசிப்பது  என்பது சம்பந்தப்பட்ட கலைஞர்களாலேயே நிகழ்வுறும். ஆனால் இப்போதோ பதிவு செய்யப்பட்ட மேள சத்தத்தை, அர்ச்சனை மணி ஓசையை கோயில்களில் ஒலி பரப்புகிறார்கள்.

எனவே, இதேபோல அர்ச்சகர் நியமனத்திலும், காலத்திற்கு ஏற்ப மாற்றம் என்றால் ஏற்றுக் கொள்வதில்லை.

தமிழ் பிராமணர்கள் செல்வாக்கு இழந்தமை:

கல்லூரியில், முதுகலையில் நான் படித்த சைவ சித்தாந்த நூல்களில் இன்ன ஜாதியார்தான் கோயிலில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று, சொல்லப்பட்டு நான் படித்ததாக நினைவில்லை. மேலும் அவை இறைவனை வணங்குவது பற்றியும், இறையடியார்கள் பெருமை பற்றியுமே அவை பேசுகின்றன.

டாக்டர் கே.கே.பிள்ளை, தமிழ்நாட்டு பிராமணர்கள், அயல்நாட்டு பிராமணர்கள் என்று சொல்லும் கருத்துக்கள் இங்கு கவனிக்கத் தக்கவை. (கீழே காண்க)

/// தமிழகத்து வேந்தர்கள் தமிழகத்து அந்தணரிடம் எக் குறைபாடுகளைக் கண்டார்கள் என்பது விளங்கவில்லை. தமிழகத்தில் சமய வளர்ச்சியும், வேதப்பயிற்சியும், ஆகமங்களின் வளர்ச்சியும், கோயில் வழிபாடும் பல தரப்பட்டதுறைகளில் விரிவடையவே அவற்றுக்கு ஏற்றவாறு தம்மைத் திருத்தியமைத்துக்கொள்ளும் ஆற்றல்கள் தமிழ்ப் பிராமணரிடம் பெருகவில்லை போலும்.

ஆனால், வடவரின் இலக்கியமும், சமயக் கருத்துகளும் பண்பாடுகளும்
தமிழ்நாட்டில் பெருக்கெடுத்துப் பாயவே அவற்றை வளர்ப்பதற்கும்,
மேற்கொண்டு பல புதுமைகளைப் பெருக்கிக் கொள்ளுவதற்கும், மன்னர்கள் ஆயிரக்கணக்கில் அயல்நாட்டுப் பிராமணரை இறக்குமதி செய்து கோயில்களிலும், மடங்களிலும், கல்வி நிறுவனங்களிலும்
அவர்களை அருச்சகர்களாகவும், புரோகிதர்களாகவும், வேத பாராயணம் செய்வோராகவும் ஆங்காங்கு அமர்த்தினர். வேதநெறி தழைத்தோங்கு வதற்காக மன்னரும் மக்களும் புதிதாகக் குடிபுகுந்த பிராமணருக்குப் பொன்னையும், பொருளையும், குடியுரிமைகளையும் வாரி
வழங்கினர். பிராமணருக்குத் தனி நிலங்களும், முழுமுழுக் கிராமங்களும் தானமாக வழங்கப்பட்டன. அக் கிராமங்கள் அக்கிரகாரம், அகரம், சதுர்வேதி மங்கலம், பிரமதேயம் எனப் பல பெயரில் வழங்கின. இக் குடியிருப்புகள் அனைத்தும் பிராமணரின் நிருவாகத்துக்கே விடப்பட்டன. அரசனுடைய ஆணைகள் அவற்றினுள் செயல்படா. அக் கிராமங்களுக்கு எல்லாவிதமான வரிகள், கட்டணங்கள், கடமைகள், ஆயங்கள் முதலியவற்றினின்றும் முழு
விலக்கு அளிக்கப்பட்டன. ஒவ்வொரு கிராமத்தின் உள்ளாட்சிக்கும் ஒரு மகா சபை அமைத்துக் கொண்டு பிராமணர்கள் தத்தம் கிராமத்தின்
நிருவாகத்துக்குத் தாமே பொறுப்பேற்றுக் கொண்டார்கள். பிராமணர் தமிழகம் முழுவதும் பரவிக் குடியமர்ந்தார்கள்.

உள நிறைவுடன் நல்வாழ்க்கையில் நின்று வேதம் ஓதி, இறைப்பணி புரிந்து, அறம் ஓம்பி, மக்களிடையே கல்வியறிவையும் ஆன்மிக விழிப்பையும் தோற்றுவிப்பதற்காகவே மன்னரும் மக்களும் அவர்கட்குத் துணை நின்றார்கள். ஆனால், விளைவோ வேறு விதமாயிற்று. தமிழ் மன்னரும் தமிழ்மக்களும் வரையாது வழங்கிய வாழ்க்கை நலன்களைப் பெற்ற பிராமணர்கள் தனித்து வாழ்ந்து, மக்களிடையே குலவேறுபாடுகளைப் பெருக்கித் தமிழர் அனைவரையுமே சூத்திரர் என்ற இழிகுலத்தினராகக் கருதிக் கோயில்களிலும், மடங்களிலும், ஏனைய பொது அறச்சாலைகளிலும் ஒதுக்கிவைத்துவிட்டார்கள். ஒரு கோயிலைக் கட்டிக் குடமுழுக்குச் செய்விக்கும் தமிழன் ஒருவன், தான் கட்டிய கோயிலிலேயே தொலைவில் ஒதுங்கி நிற்கவும், பிராமணர்களின் பின்னின்று கோயில்‘பிரசாதங்களைப்’ பெறவும் ஒப்புக் கொண்டு விட்டான். கோயில் கருவறையில் வடமொழியின் ஆரவார ஓசை ஓங்கவும், தமிழ்ஒலி மறையவும் வழக்காறுகள் வகுக்கப்பட்டன. தேவார ஆசிரியர்கள் காலத்தில் தமிழர் கருவறைக்குட் செல்லும் உரிமை பெற்றிருந்தும் சோழர் பாண்டியர் காலத்தில் அவ்வுரிமையை அவர்கள் இழந்து விட்டார்கள். ///  - (டாக்டர் கே.கே.பிள்ளை, தமிழக வரலாறு – மக்களும் பண்பாடும், தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் வெளியீடு, பக்கம் 316 - 317)

மேலே சொல்லப்பட்ட மேற்கோளில் இன்றைய சூழலில் யார் தமிழ் பிராமணர்கள் அல்லது யார் அயல்நாட்டு பிராமணர்கள் என்று பிரித்துப் பார்ப்பது கடினம். அன்று முதல்.அர்ச்சகர்கள் பிராமணர்களாகவே, நியமிக்கப்பட்டு வருவது கண்கூடு. தமிழ் மேட்ரிமோனியலில் (Tamil Matrimony) தமிழ் பிராமின் என்று விளம்பரம் வருவதை அனைவரும் பார்த்து இருக்கலாம். எனவே தமிழரான பிராமணர்கள், தெலுங்கு வம்ச சோழர்களின் ஆட்சி சூழல் மாறலுக்கு ஏற்ப, அவர்கள், தங்கள் வழிபாட்டு முறைகளை மாற்றிக் கொண்டு விட்டனர் எனலாம்.

திருமூலர் சொல்லும் ஆகமச் சிறப்புகள்:

அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகவும், பதினெண் சித்தர்களில் ஒருவராகவும் வைத்து போற்றப்படும் திருமூலர் எழுதிய திருமந்திரம், தனது பாயிரத்தில்,  ஆகமச் சிறப்பு பற்றி பத்து
பாடல்களில் பேசுகிறது. அப்பாடல்களில் சொல்லப்பட்டுள்ள சுருக்கமான கருத்துக்கள் இவை.

1. சிவன் 28 ஆகமகங்களை 66 பேருக்கு உபதேசித்தான்.
2. இந்த ஆகமகங்களின் (அதாவது கிரந்தங்களின்) எண்ணிக்கை              இருபத்தெட்டு கோடி நூறாயிரம்; இந்த ஆகமகங்கள் துணையுடன் விண்ணவர்கள் ஈசனது பெருமையைச் சொன்னார்கள்.
3. பதினெட்டு மொழிகளும் தெரிந்த பண்டிதர்கள் இந்த ஆகமங்கள் கூறும் வகையை அறிவார்கள்.
4. இந்த ஆகமங்கள் அனுபவத்தால் மட்டுமே விளங்கக் கூடியவை.
5. சிவனே ஆகமத்தில் அறிவாய் விளங்குகிறான்.
6. இந்த ஆகமகங்களை சிவனிடமிருந்து பெற்றவர்களுள் நந்தியும் ஒருவன்.
7. அப்படி நந்தி பெற்ற ஆகமங்கள் ஒன்பது.
8. இந்த ஆகமப் பொருளை இறைவன் அருள் இருந்தால் மட்டுமே உணர முடியும்.
9. சிவன் இந்த ஆகமகங்களை உமாதேவிக்கு ஆரியம் (வடமொழி) மற்றும் தமிழ் இரண்டிலும் உபதேசித்தான்.
10. ஆனாலும் சிவனை ஆகம அறிவினால் மட்டும் அறிய முடியாது. (மேலே எண் எட்டில் சொல்லப்பட்ட கருத்தை இங்கே ஒப்பிட்டுக் கொள்ளவும்)

அண்ணல் அருளால் அருளும் சிவாகமம்
எண்ணில் இருபத்தெண் கோடிநூ றாயிரம்
விண்ணவர் ஈசன் விழுப்பம் உரைத்தனர்
எண்ணிநின் றப்பொருள் ஏத்துவன் நானே.
-          (திருமந்திரம். 58)

மாரியும் கோடையும் வார்பனி தூங்கநின்று
ஏரியும் நின்றங்கு இளைக்கின்ற காலத்து
ஆரிய முந்தமி ழும்உட னேசொலிக்
காரிகை யார்க்குக் கருணைசெய் தானே.
-          (திருமந்திரம் – 65)

எனவே திருமூலர் கருத்துப்படி பார்த்தாலும், எவையெவை ஆகம விதிகள் என்று நிர்ணயம் செய்ய முடியாத நிலைமை. திருமூலர் சொல்லும் இதோபதேசப் பாடல் ஒன்று இங்கே …

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் நமனில்லை நாணாமே
சென்றே புகுங்கதி இல்லைநும் சித்தத்து
நின்றே நிலைபெற நீர்நினைந்துய் மினே.
-          (திருமந்திரம் 2014)

மக்கள் மனநிலை:

இந்தியாவில் பல விஷயங்கள் ஜாதி அபிமான அடிப்படையிலேயே இன்னமும் இருப்பது கண்கூடு. பெரும்பாலான அரசு அலுவலகங்களில், வருடா வருடம் ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜையின் போது அங்கு வேலை பார்க்கும் ஒரு பிராமணர் ஒருவர்தான் பூஜை புனஷ்காரம் செய்வார். அவரும் அதனை விருப்பத்துடன், கர்ம சிரத்தையாக, பயபக்தியோடு செய்வார். அவரைத்தான் மற்றவர்களும் பூஜை காரியங்கள் செய்யச் சொல்லுவார்கள். மற்றவர்கள் யாரும் அந்த பூஜை செய்ய முன்வருவதும் இல்லை. இஷ்டப்படுவதும் கிடையாது.

எனவே இந்த நாட்டில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்று ஒருவேளை தீர்ப்பு ஆனாலும், கூட நடைமுறையில் என்ன நடக்கும் என்பது கண்கூடு. (வெளியே பகுத்தறிவு பேசும் பலரும், தங்கள் வீட்டு கல்யாணம் கிரகப் பிரவேச நிகழ்ச்சிகளுக்கு பிராமணர்களை வைத்தே செய்கிறார்கள். இது அவர்களுடைய தனிப்பட்ட அல்லது குடும்பம் சார்ந்த விருப்பம். ஆனால் அவர்களே வெளியில் பிராமணர்களை பகுத்தறிவு என்ற பெயரில் திட்டுவதை என்னவென்று சொல்வது?)
 
( சென்ற ஆண்டு ஜனவரி (2016) முதல் வாரத்தில் எழுதி வைக்கப்பட்ட கட்டுரை இது. அப்போது வெளியிட முடியவில்லை. பல்வேறு யோசனைகளுக்குப் பிறகு இப்போது வெளியிட்டுள்ளேன்)

Saturday, 19 March 2016

இறைவன் இருக்கின்றானா?



நான் சிறுவயதில், அதாவது பள்ளிப்பருவத்தில், ரொம்பவும் கடவுள் பக்தி உள்ளவன். பள்ளிக்குச் செல்லும்போது, வீட்டில் சாமி கும்பிட்டுவிட்டு, நெற்றியில் திருநீறு இல்லாமல் சென்றதில்லை.   அப்புறம் கல்லூரியில் சேர்ந்த பிறகு, கம்யூனிசத்தோடு நாத்திகமும் பேசியது ஒரு காலம். (இருபத்தைந்து வயதில் கம்யூனிசம் பேசாதவனும், அதற்கு மேலேயும் பேசிக்கொண்டிருப்பவனும் பரிசீலிக்கப் பட வேண்டியவர்கள் என்று சிலர் சொல்லுவார்கள்.) அப்புறம் குடும்பஸ்தனாக மாறி , வாழ்க்கையில் சந்தித்த ஏற்ற இறக்கங்கள், புயல்கள் காரணமாக கடவுள் நம்பிக்கை வந்தது ஒரு பெரிய கதை. இருந்தாலும் சிலசமயம் நாட்டில் நடக்கும் சில அநியாயங்களைப் பார்க்கும் போதும், அப்பாவி மக்கள் கஷ்ட நிலையில் இருப்பதும், வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்று வாழும் வலியவர்கள் நன்றாக இருப்பதைக் காணும்போதும் “இறைவன் இருக்கின்றானா?” என்ற கேள்வி மனதில் சிலசமயம் எழத்தான் செய்கிறது.
     
கடவுள் மீது நம்பிக்கையும் கோபமும்:

நாம் ஒருவரை நம்புகிறோம். அவர் நமது நம்பிக்கைக்கு மாறாக நடந்து கொண்டால் என்ன சொல்கிறோம்..” ரொம்ப நம்பிக்கையா இருந்தேனுங்க. அவன் இப்படி பண்ணுவான்னு நினைக்கலை” இதுபோலத்தான் கடவுள் மீது நம்பிக்கை கொண்ட தீவிர ஆத்திகர்கள் கூட சிலசமயம் மனம் வெறுத்து “ கடவுள்னு ஒன்னு இருக்கான்னே தெரியவில்லை” என்று மனம் வெறுத்துச் சொல்வதையும் கேட்க முடிகிறது. காரணம் கடவுள் சர்வ சக்தி உள்ளவர்; நியாயவான்; தீயவர்களை தண்டிப்பார் என்ற பெரிய நம்பிக்கை காலங்காலமாக எல்லோருடைய மனதிலும் இருப்பதுதான்.

அண்மையில் ஒரு பதிவர்கூட, தனது உறவினர் இறந்த சோகத்தில் மனம் வெறுத்து - 

// சில வருடங்களுக்கு முன்பு வரை, நானும் ஒரு தெய்வ வழிபாட்டு நெறியினைப் பின்பற்றுபவனாகவே இருந்துள்ளேன். ஆனாலும் நாளடைவில், என் மனவோட்டம் மெல்ல மெல்ல மாறத்தான் தொடங்கியது. காரணம் நான் படித்த புத்தகங்கள், கண்ட காட்சிகள், எதிர்கொண்ட இன்னல்கள், சந்தித்த அனுபவங்கள் பொது நலனை முன் வைத்தும், சுய நலனை முன் வைத்தும், நான் கண்ட காட்சிகள் என்னுள் மாற்றத்தை உருவாக்கின.//

என்று ஆதங்கப்பட்டு எழுதியதோடு ‘கடவுள் கைவிட்டார்’ என்றும் வருத்தப்பட்டு இருந்தார். ஒரு சகோதரி தனது கணவர் இறந்த சோகத்தினாலும், கணவரது நெருங்கிய உறவினர்களே செய்த துரோகத்தினாலும் ‘ இறைவா, ஏன் என்னை கைவிட்டீர்? “ என்று தனது வலைப்பதிவினில் ஆற்றாது சொல்லி இருந்தார்.

இலக்கியத்தில்:

இன்று நாட்டில் நடக்கும் கொலை,கொள்ளை, அரசியல்வாதிகளின் அடாவடித்தனம் இவற்றைப் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் “இறைவன் இருக்கின்றானா” என்ற கேள்வி  எழுவது இயல்பான ஒன்றுதான்.
அன்றைய சங்ககாலத்தில் ஒருபுலவர் கண்ட காட்சி , (ஒரு வீட்டில் மணப்பறை முழக்கம்; இன்னொரு வீட்டில் பிணப்பறை முழக்கம்) படைத்தவனையே பண்பு இல்லாதவன் என்று ஏசும் அளவுக்கு அவரது மனம் வெறுத்து இருக்கிறது. இதோ பாடல்.
                                                                                                                                                            
ஓரில் நெய்தல் கறங்க,ஓரில்
ஈர்ந்தண் முழவின் பாணி ததும்ப,
புணர்ந்தோர் பூவணி அணியப் பிரிந்தோர்
பைதல் உண்கண் பனிவார்பு உறைப்பப்
படைத்தோன் மன்ற, அப் பண்பிலாளன்!
இன்னாது அம்ம இவ்வுலகம்!
இனிய காண்க இதன் இயல்புணர்ந்தோரே!

(பாடியவர்: பக்குடுக்கை நண்கணியார்
புறநானூறு,  பாடல் வரிசை எண்-194)

‘ஆதி பகவன், வேண்டுதல் வேண்டாமை இலான், இருவினையும் சேரா இறைவன்” என்றேல்லாம் சொன்ன வள்ளுவருக்கே, படைத்த அந்த கடவுள் மீதே கோபம் வந்து, அவன் அலைந்து திரிய வேண்டும் என்று சாபம் கொடுக்கிறார். அவர் சொன்ன குறள் இது.

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான். (திருக்குறள் – 1062)

(மு.வ உரை: உலகத்தை படைத்தவன் உலகில் சிலர் இரந்தும் உயிர்வாழுமாறு ஏற்படுத்தியிருந்தால், அவன் இரப்பவரைப் போல் எங்கும் அலைந்து கெடுவானாக.)

என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்:

எல்லோருக்கும் இயேசு யார் என்று தெரியும். ஆனாலும் அவரை இன்னார் என்று காட்டிக் கொடுக்க சாட்சி ஒருவன் தேவைப் பட்டான். இயேசுவின் பன்னிரு சீடர்களில் ஒருவனான யூதாஸ் காரியோத்து முப்பது வெள்ளிக் காசுகளுக்காக விலை போனான். இயேசுவைக் காட்டிக் கொடுத்தான். பின்னர் பல்வேறு அவமரியாதை மற்றும் ஆக்கினைகளுக்குப் பிறகு இயேசுவை சிலுவையில் அறைந்தார்கள். அன்றைய பிற்பகல் பூமியெங்கும் ஒரு அடர் இருள் உண்டாயிற்று. இயேசு: ஏலீ! ஏலீ! லெமா சபக்தானி, (Eli, Eli, lema sabachthani?) என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார் (அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் My God, my God, why have you forsaken me?) என்று அர்த்தம் சொல்லுகிறார்கள்) பின்னர் மறுபடியும் மகா சப்தமிட்டு இயேசு ஆவியை விடுகிறார். – இயேசுவின் இறுதிக்கால நிகழ்வை, கவிஞர் கண்ணதாசன் இவ்வாறு சொல்லுகிறார்.

பிற்பகல் நேரம் பெருகிய வானம்
இருநா ழிகைகள் இருளில் ஆழ்ந்தது!
கண்ணீர் சிந்திக் கலங்கிய வாறு
சிலுவையின் அருகே தேவ அன்னை
மரியா ளோடும் மற்றொரு பெண்ணும்
அருளப் பர்எனும் அன்புச் சீடரும்
நின்றார் அவரை நேரில் நோக்கி,
இயேசு பெருமான் இருவரை விளித்து
"
அம்மா அவருன் அன்பின் மைந்தன்
அருளப் பாஅவர் அன்னை உனக்கு"
என்றே அவரை அன்பில் இணைத்தார்!
மூன்று மணிக்கு மோகன மன்னன்
தோன்றிய தேதோ சொல்லை உயர்த்திச்
சத்தம் இட்டார் தாரணி ஒடுங்க!
"
இறைவா! இறைவா! என்னை ஏனோ
கைவிட் டாயே! கைவிட் டாயே!"
என்றார் உடனே இருந்த சிலபேர்
"
எலியாஸ் தன்னை இவன்அழைக் கின்றான்'
என்றே அவரை ஏளனம் செய்தார்!
மரண நேரம் வந்ததென் றெண்ணி
வேதன் கூற்றை விளக்கிடு மாறு,
"
தாகம் எனக்கெ"னச் சாற்றினார் இயேசு!
ஆத்மதா கத்தை அவர்சொன் னாரென
அறியா திருந்த ஐந்தறி மாக்கள்
கடலில் எடுத்த காளான் தன்னைக்
காடியில் தோய்த்துக் கட்டையில் நீட்டினர்!
அதையும் பெற்ற அன்பின் மைந்தன்,
"
எல்லாம் முடிந்தது!" என்று நவின்றார்!
எல்லாம் என்ற சொல்லின் பொருளை
நல்லோர் யாவரும் நன்றே அறிவார்!
'
தந்தை எனக்குத் தந்ததோர் கடமை
இந்த உலகில்நான் ஏற்றதோர் கடமை
எல்லாம் முடிந்தது' எனமனம் நிறைந்தார்!

கவிஞர் கண்ணதாசன், இயேசு காவியம், (பக்கங்கள் 367 – 368)

ஒரு சினிமா பாடல்:

அவன் பித்தனா? – 1966 இல் வெளிவந்த, எஸ்.எஸ்.ராஜேந்திரன் & விஜயகுமாரி நடித்த தமிழ்ப்படம். அதில் ஒரு பாடல். ஆண்,  "இறைவன் இருக்கின்றானா?" என்று கேட்கிறான். பெண், "மனிதன் இருக்கின்றானா?"  என்று கேட்கிறாள். இருவரது கேள்விகளிலும் நியாயங்கள் இருக்கின்றன.

ஆண் குரல்:
இறைவன் இருக்கின்றானா?
இறைவன் இருக்கின்றானா? மனிதன் கேட்கிறான் - அவன்
இருந்தால் உலகத்திலே எங்கே வாழ்கிறான்? எங்கே வாழ்கிறான்?
நான் ஆத்திகனானேன் அவன் அகப்படவில்லை
நான் நாத்திகனானேன் அவன் பயப்படவில்லை 

பெண் குரல்:
மனிதன் இருக்கின்றானா?
மனிதன் இருக்கின்றானா? இறைவன் கேட்கிறான் - அவன்
இருந்தால் உலகத்திலே எங்கே வாழ்கிறான்? எங்கே வாழ்கிறான்?
நான் அன்பு காட்டினேன் அவன் ஆட்கொள்ளவில்லை
இந்தத் துன்பம் தீர்க்கவும் அவன் துணை வரவில்லை

பாடலை முழுவதும் யூடியூப்பில் கண்டு கேட்டிட கீழே உள்ள இணைய முகவரியை சொடுக்குங்கள்:
 
இறைவன் இருக்கின்றான்:

விடை தெரியா கேள்விகள் ஒரு புறம் இருந்தாலும் சில காரண காரியங்களை வைத்து (ஒவ்வொரு கிரகமும் அதனதன் வட்டப் பாதையில் சுற்றுதல், இந்த பூமியின் செயல்பாடு, மற்றும் பூமியில் உள்ள உயிர்களின் வாழ்க்கை சுழற்சி முறை போன்றவற்றை வைத்து பார்க்கும் போது) நமக்கும் மேலே ஏதோ ஒரு சக்தி எல்லாவற்றையும் இயக்குகிறது என்பதனை உணர முடிகிறது. அந்த சக்திக்கு அவரவர் அவரவர் மதத்தில் ஒரு பெயரை வைத்து வணங்குகின்றனர் என்பதாகக் கொள்ளலாம். திருவள்ளுவர் பொதுப்பெயரில் தமிழில் ‘இறைவன், என்று சொல்லுகிறார்.

Friday, 3 April 2015

எனது அம்மா – என்று காண்பேன் இனி?



வாழ்க்கைதான் எத்தனை விசித்திரமானது. ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு மாறுதல். நாடகம் போல காட்சிகள் மாறிக் கொண்டே இருக்கின்றன. நாம் இப்படியே இருந்து விடுவோம், நமக்கு ஒன்றும் வராது என்று நினைத்துக் கொண்டு இருக்கும்போது புதிதாக ஒரு குழப்பம் வந்து சேருகிறது. அன்றும் ( போன மாதம் 23 ஆம் தேதி) அப்படித்தான். வழக்கம் போல எல்லா வேலைகளையும் முடித்து விட்டு, இரவு 11 மணி, தூங்கப் போகும் நேரம். எனது அப்பாவிடமிருந்து போன். “அம்மா மயக்கமாகி கிடக்கிறார்கள் என்ற தகவல்.

ஜென்மம் நிறைந்தது

நான் படபடப்போடு அப்பா அம்மா குடியிருந்த வீட்டிற்குச் சென்றேன். (நான் குடியிருக்கும் பகுதிக்கு அடுத்த ஏரியா) அங்கு அம்மாவின் நிலைமை மோசமாக இருந்தது. மயக்கமாகி தரையில் கிடந்தார். அம்மாவின் அருகில் எனது அப்பா (வயது 88) கவலையுடன் இருந்தார். ஏற்கனவே அப்பா தெரியப்படுத்தி இருந்ததால், எனது தங்கையும் அவரது கணவரும் அவர்களது மகனும் வந்து விட்டார்கள். நான் போனில் எனது மனைவியையும் மகனையும் உடனே வரச் சொன்னேன். எனது மனைவியை அப்பாவை பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு, எனது அம்மாவை மைத்துனரின் காரில், பிரபலமான தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். அந்த நள்ளிரவிலும் டாக்டர்கள் முடிந்தவரை பார்த்தார்கள். எல்லாம் முடிந்து விட்டது. 24.03.15 செவ்வாய் அதிகாலை 4 மணி அளவில் எனது அம்மாவின் மரணம். (வயது சுமார் 78) Hyper tension என்றார்கள்.வேறு ஒன்றும் சொல்வதற்கு இல்லை. கவிஞர் வைரமுத்துவின் ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க என்ற பாடல் வரிகள்தான் நினைவுக்கு வந்தன. எனது அம்மாவின் பெயர் திருமதி சுந்தரம். அப்பாவின் பெயர் திருமழபாடி திருமுகம்.
  
அம்மாவின் மறைவிற்கு முன்னரே கடந்த சில நாட்களாகவே மனதில், இன்னதென்று புரிந்து கொள்ள முடியாத குழப்பங்கள், விசித்திரமான கனவுகள் என்று எனக்குள் வந்து கொண்டு இருந்தன. வலைப்பதிவு எழுத உட்கார்ந்தால் கூட, காரணமே இல்லாமல் நிலையாமை தத்துவங்கள் , பாடல்கள் மனதில் வந்து போயின. அதனால் அதிகம் எழுதவில்லை. அண்மையில் நடிகர் அசோகன் பற்றிய எனது பதிவினில் கூட ஒரு சோகப்பாடல் வந்து விழுந்தது.   

பட்டினத்தார் பாடல்கள்

அம்மாவை இழந்த சோகத்தில் இருந்த எனக்கு மிகவும் ஆறுதல் அளித்தவை, பட்டினத்தார் பாடிய பாடல்கள் தாம். சிலர் இவை பட்டினத்தாரால் பாடப்பட்டவை அல்ல. அவர் பெயரால் அவர் வரலாற்றைச் சொல்லும்போது வேறொருவர் எழுதியது என்றும் சொல்வார்கள். எது எப்படி இருந்த போதும், தனது தாய் இறந்த துக்கத்தினை தாங்க முடியாமல், பட்டினத்தார் வெளிப்படுத்திய பாடல்கள் மிகவும் உருக்கமானவை என்பதில் சந்தேகமில்லை.

துறவி என்றால் பட்டினத்தாரைப் போல் ஒரு துறவி காண முடியாது என்று சொல்லுவார்கள். அவரைப் பற்றி

`பாரனைத்தும் பொய்யெனவே
பட்டினத்துப் பிள்ளையைப் போல்
ஆரும் துறக்கை அரிது

என்று சொல்லுகிறார் தாயுமானவர். அப்பேர்ப்பட்ட பட்டினத்தார் தனது தாயின் மீது கொண்ட அன்பை மட்டும் துறக்க மாட்டாதவராய் இருந்திருக்கிறார். பட்டினத்தார் மறுபிறப்பில் நம்பிக்கை உள்ளவர். எனவே அந்த கருத்துக்கள் அவரது பாடல்களில் விரவிக் கிடக்கின்றன.
   
இந்த பிறவியில் நமக்கு அம்மாவாக வந்த அம்மா அடுத்த பிறவியிலும் நமக்கு அம்மாவாக வருவாரா? என்று சொல்ல முடியாது. இறந்த பிறகு அவர் வேறு ஒரு உயிருக்கு மகனாகவோ மகளாகவோ பிறந்து இருப்பார். இந்த பிறவியில் அம்மா, அப்பா, மகன்,மகள் என்று உறவாக சேர்ந்த குடும்பத்தில், இவர்கள் இறந்த பிறகு இதேபோல அப்படியே இனி வரும் பிறப்பிலும் இதே உறவோடு ஜோடி சேருவார்களா என்பது சந்தேகம்தான். ஒவ்வொரு பிறவியிலும் நமக்கு ஒரு அன்னை, ஒரு அப்பன். இதுபோல் எத்தனையோ பிறவிகள். எத்தனையோ அன்னை, எத்தனையோ அப்பன்.

சீட்டுக்கட்டு விளையாட்டில், சீட்டுக் கட்டை கலைத்து போடுவார்கள். ஒருமுறை வரும் சீட்டுகள், அடுத்தடுத்து கலைத்து போடும் ஒவ்வொரு முறையும், அப்படியே அதேபோல் வருவதில்லை.

அன்னை எத்தனை எத்தனை அன்னையோ?
அப்பன் எத்தனை எத்தனை அப்பனோ?
பின்னை எத்தனை எத்தனை பெண்டீரோ?
பிள்ளை எத்தனை எத்தனை பிள்ளையோ?
முன்னை எத்தனை எத்தனை சன்மமோ?
மூடனாயடி யேனும றிந்திலேன்,
இன்ன மெத்தனை யெத்தனை சன்மமோ?
என்செய் வேன்? கச்சியேகம்ப நாதனே

அதனால்தான் பட்டினத்தார் இனி உன்னை எந்த பிறப்பில் எனது அம்மாவாக உன்னை காண்பேன் என்று உருகுகிறார். 

ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்றுப்
பையலென்ற போதே பரிந்தெடுத்துச் செய்ய இரு
கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை
எப்பிறப்பில் காண்பேன் இனி

ஒருவர் இறந்தால் அவரது உடலை புதைக்கிறார்கள்; அல்லது எரிக்கிறார்கள். நாங்கள் இறந்து போன எனது அம்மாவின் உடலை புதைத்தோம். பட்டினத்தார் தாயாரின் உடலை எரித்து இருக்கிறார்கள். அப்போது அவர் பாடிய பாடல்கள் படிப்போர் நெஞ்சை கலங்க வைக்கும்.

வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும்
கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து முட்டச்
சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டிய தாய்க்கோ
விறகிலிட்டுத் தீமூட்டு வேன்

எனவே தாயாக இருந்தாலும், தந்தையாக இருந்தாலும் அல்லது யாராக இருந்தாலும் உயிருடன் இருக்கும் போதே அவர் மீது அன்பு காட்டுதல்தான் சிறப்பு. அதனை விடுத்து, அவர் இறந்த பிறகு, அவருக்காக விரதம் இருப்பது, பலகாரம் படைப்பது, அன்னதானம் செய்வது, தீர்த்த யாத்திரை என்பதெல்லாம் ஒரு சில நம்பிக்கைகள்தான்.

           (திருமதி சுந்தரம் (தோற்றம் 01.01.1940 மறைவு 24.03.2015)

எனது அம்மா மீது நான் அளவற்ற அன்பு காட்டினேன்; அவரும் என் மீது அளவில்லாத அன்பு வைத்து இருந்தார். எனது அம்மா கடைசி வரை தனது குடும்ப வேலைகளையும் கவனித்துக் கொண்டு, அப்பாவையும் நன்றாக கவனித்துக் கொண்டார். எனது அம்மா என்று காண்பேன் இனி?

கவிஞர் வைரமுத்துவின் பாடல்:

ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க
சிந்தை கலங்கிட வந்தவர் வாழ்க
நீரில் மிதந்திடும் கண்களும் காய்க
நிம்மதி நிம்மதி இவ்விடம் சூழ்க!

ஜனனமும் பூமியில் புதியது இல்லை
மரணத்தைப் போல் ஒரு பழையதும் இல்லை
இரண்டுமில்லாவிடில் இயற்கையும் இல்லை
இயற்கையின் ஆணைதான் ஞானத்தின் எல்லை

பாசம் உலாவிய கண்களும் எங்கே?
பாய்ந்து துழாவிய கைகளும் எங்கே?
தேசம் அளாவிய கால்களும் எங்கே?
தீ உண்டதென்றது சாம்பலும் இங்கே

கண்ணில் தெரிந்தது காற்றுடன் போக
மண்ணில் பிறந்தது மண்ணுடன் சேர்க
எலும்பு சதை கொண்ட உருவங்கள் போக
எச்சங்களால் அந்த இன்னுயிர் வாழ்க

பிறப்பு இல்லாமலே நாளொன்றும் இல்லை
இறப்பு இல்லாமலும் நாளொன்றும் இல்லை
நேசத்தினால் வரும் நினைவுகள் தொல்லை
மறதியைப் போல் ஒரு மாமருந்தில்லை.

கடல் தொடும் ஆறுகள் கலங்குவதில்லை
தரை தொடும் தாரைகள் அழுவதும் இல்லை
நதி மழை போன்றதே விதியென்று கண்டும்
மதி கொண்ட மானுடர் மயங்குவதேன்ன!

மரணத்தினால் சில கோபங்கள் தீரும்
மரணத்தினால் சில சாபங்கள் தீரும்
வேதம் சொல்லாததை மரணங்கள் கூறும்
விதை ஒன்று வீழ்ந்திட செடிவந்து சேரும்

பூமிக்கு நாம் ஒரு யாத்திரை வந்தோம்
யாத்திரை தீரும் முன் நித்திரை கொண்டோம்
நித்திரை போவது நியதி என்றாலும்
யாத்திரை என்பது தொடர்கதையாகும்

தென்றலின் பூங்கரம் தீண்டிடும் போதும்
சூரியக் கீற்றொளி தோன்றிடும் போதும்
மழலையின் தேன்மொழி செவியுறும் போதும்
மாண்டவர் எம்முடன் வாழ்ந்திட கூடும்

மாண்டவர் சுவாசங்கள் காற்றுடன் சேர்க!
தூயவர் கண்ணொளி சூரியன் சேர்க!
பூதங்கள் ஐந்திலும் பொன்னுடல் சேர்க!
போனவர் புண்ணியம் எம்முடன் சேர்க!
                                                                                
                                                     -  கவிஞர் வைரமுத்து

இந்த பாடலை வீடியோவில் கேட்க கீழே உள்ள முகவரியில் க்ளிக் செய்யுங்கள்.