Showing posts with label சிம்பு. Show all posts
Showing posts with label சிம்பு. Show all posts

Saturday, 26 December 2015

சிம்புவின் கழிவறைப் பாடல்



இப்போது கொஞ்ச நாட்களாகவே நாட்டில் இருக்கின்ற பிரச்சினைகளை எல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு சிம்பு பாடிய ஒரு பாடலை எல்லோரும் பேசிக் கொண்டு இருக்கிறார்கள். போயும் போயும் இந்த பாடலை கேட்பதா என்று எனக்கு அதில் கேட்க ஆர்வம் இல்லை. அய்யா ஆசிரியர் நா.முத்துநிலவன் அவர்கள் பகிர்ந்த ஒரு பதிவை வைத்து “ தடை செய்ய வேண்டிய சிம்பு-அனிருத் பாடல்” என்ற பதிவைப் படித்தவுடனேயே (http://valarumkavithai.blogspot.com/2015/12/blog-post_82.html ) அது எப்பேர்பட்ட பாடல் என்பதனைப் புரிந்து கொண்டேன். ஆனால் இப்போது சிம்புவுக்கு ஆதரவாக சிலர் விடும் அறிக்கைகளைப் பார்க்கும் போது பாடலை முதலில் கேட்டுவிட்டு, அப்புறம் எழுதலாம் என்பதால் YOUTUBE இல் இந்த பாடலைக் கேட்டேன்

கழிவறைக் கிறுக்கல்கள்
 
மூன்று மாதங்களுக்கு முன்பு நான் எழுதிய “கழிவறைக் கிறுக்கல்கள்http://tthamizhelango.blogspot.com/2015/09/blog-post_54.html என்ற எனது பதிவினில்,

/// இந்த கிறுக்கல்களை பொதுவாக பொதுக் கழிவறைகளில் அல்லது பொது குளியல் அறைகளில் மட்டுமே காணலாம். இவ்வாறு எழுதுவதை கழிவறைக் கிறுக்கல்கள் (Latrinalia) என்று சொல்கிறார்கள். உடம்பில் அரிப்பெடுத்தால் சொறிந்து கொள்வதைப் போல, மனதில் உண்டாகும் அரிப்பை போக்கிக் கொள்ள அல்லது தன்னுடைய இயலாமைக்கு வடிகாலாக சிலர் எழுதும் கிறுக்கல்கள்தான் இவை. சிலரின் மனக்குமுறல்களாகவும் இருக்கும். சிலரின் குறுங்கவிதைகளையும் இங்கே காணலாம். பெரும்பாலும் அவசரம் அவசரமாக சாக்பீசாலோ, கரித்துண்டினாலோ, அல்லது ஸ்கெட்ச் பென்சிலாலோ எழுதப்பட்ட குறுஞ்செய்திகள் (SMS என இவற்றை சொல்லலாம். சிலசமயம் சிறிய படங்களாகவும் இருக்கலாம். எழுதுபவரின் மனநிலையைப் பொறுத்தது.///

என்று எழுதி இருந்தேன். 

சிம்புவின் ‘பீப்’ பாடல் 

ஆனால் சிம்புவின் ‘பீப்’ பாடல் என்பது கழிவறையோடு முடிந்து இருந்தால் பரவாயில்லை. கழிப்பறைக்கு வெளியேயும் நாற்றமடிக்கத் தொடங்கியதால்தான் இந்த பிரச்சினை. இந்த பாடலில் அவர் யாரையோ நினைத்து, ஒரு கோபத்தோடு பாடுவதாகவே தெரிகிறது. அந்த சொல்லை மறைப்பதற்கு ‘பீப்’ ஒலி வருகிறது என்கிறார்கள்; ஆனால் காதில் அந்த ‘பீப்’பையும் மீறியே என்ன சொல்லி திட்டுகிறார் என்பது தெரிகிறது. தண்ணி அடித்துவிட்டு ஒருவன் நடுரோட்டில் ஆபாசமாக கத்திக் கத்தி, திரும்பத் திரும்ப , ஆவேசமாக திட்டும் காட்சியை நினைவு படுத்தியது.

/// இது குறித்து சிம்புவிடம் கேட்டபோது, "'பீப் பாடல்' வெளியானது பற்றி பலரும் என்னிடம் கேள்வி எழுப்பி வருகிறார்கள். அப்பாடலை முதலில் நான் அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை. நானும் அனிருத்தும் இணைந்து பல்வேறு தளங்களில் சுமார் 150 பாடல்களை தயார் செய்து வைத்திருக்கிறோம். அதில் இருந்து ஒரு பாடலை திருடி வெளியிட்டு இருக்கிறார்கள்

முதலில் அப்பாடல் ஏதாவது ஒரு படத்திலோ, ஆல்பத்திலோ இடம்பெறவில்லை. அது இணையத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது. அப்பாடல் குறித்து ஒரு சிலர் நன்றாக இருக்கிறது என்றும், பலரும் அதற்கு எதிராகவும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். நான் ஒரு கேள்வி கேட்கிறேன்... அதே இணையத்தில் தானே போர்ன் (ஆபாச வீடியோ) வீடியோக்களும் இருக்கிறது. தேவை என்றால் தானே போய் பார்க்கிறீர்கள். அதேபோல் தான் பாடல் பிடிக்கவில்லை என்றால் கேட்காதீர்கள்.

நான் எனது வீட்டின் படுக்கையறையிலும், பாத்ரூமிலும் என்ன வேண்டுமானாலும் செய்வேன். அதை எட்டிப் பார்க்கும் அதிகாரம் நான் யாருக்கும் அளிக்கவில்லை. என்னைக் கேள்வி கேட்பவர்கள் வீடுகளில் நான் கேமராவை வைத்து அவர்கள் பண்ணும் விஷயங்களைப் பார்த்து "நீங்கள் ஏன் இப்படி எல்லாம் பண்ணுகிறீர்கள்" என்று கேட்டால் என்னவாகும் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.  /// 

இது சிம்பு என்கிற சிலம்பரசன் தந்த பதில் (நன்றி தி இந்து (தமிழ்) தேதி: டிசம்பர்,12,2015)

கழிவறைக் கிறுக்கலும், குடிகாரன் பேச்சும் அத்தோடு சரி. ஆனால் சிம்புவின் ‘பீப்’ பாடலை அர்த்தம் புரியாமலேயே சிறுவர்களும், அர்த்தம் தெரிந்தே வாலிபர்களும் பொதுவில் ஒலிபரப்ப சாத்தியம் அதிகம். சமுதாயத்தில் மோசமான பின்விளைவுகளை விளைவிக்கக் கூடிய பாடல் என்பதில் சந்தேகம் இல்லை.

தமிழன் சிம்பு :

இப்போது சிம்புவின் பாடலுக்கு ஆதரவாக குரல்கள் ஒலிக்கத் தொடங்கி உள்ளன. T. ராஜேந்தரும், உஷா ராஜேந்தரும் தங்கள் மகனுக்காக பரிந்து பேசுவதிலாவது அர்த்தம் உள்ளது. அதிலும் ஒரு ’தைரிய லட்சுமி’ சிம்புவை தமிழன் என்பதற்காக பழி வாங்குகிறார்கள் என்று கொதித்தெழுகிறார். (சிலம்பரசன் என்ற அழகான அவரது தமிழ்ப் பெயரை  சிம்புவாக மாற்றிக் கொண்டது அவரது சொந்த விஷயம்) தமிழ், தமிழன் என்று எதற்கெடுத்தாலும் வர்ணம்பூசும் வேலை. இன்னும் சிலர் சிம்புவுக்கு ஆதரவு என்ற பெயரில், மேலும்மேலும் அவருக்கு சிக்கல் உண்டு பண்ணிக் கொண்டு இருக்கிறார்கள். விளம்பரத்திற்காக இப்படிப் பேசும் இவர்களை என்னவென்று சொல்வது.? பொதுவில் நாகரிகமாகப் பேசவேண்டும் என்பதற்காக, எந்த வார்த்தைகளை எப்படிப் பேசவேண்டும் என்பதற்கு தமிழில் ‘இடக்கரடக்கல்’ என்று ஒரு மரபே உண்டு.. ஆனால் சிம்பு பயன்படுத்தியது இந்த இடக்கரடக்கல்லிலும் வராத பச்சை என்பது வெளிப்படை. இன்னும் சிலர் பழைய தமிழ் சினிமாப் பாடல்களில் எழுதவில்லையா என்று கேட்கிறார்கள். ஆனால் யாரும் இதுபோல் பச்சையாக பாட்டு வடிவில் இசையோடு எழுதவில்லை என்பதே உண்மை.  

சட்டப்படி நடவடிக்கை:

ஆரம்பத்திலேயே சம்பந்தப்பட்டவர்கள், இந்த பாடல் பற்றிய பிரச்சினை தொடங்கியவுடனேயே, வருத்தம் தெரிவித்து விட்டு பாடலை நீக்க முயற்சி செய்து இருக்கலாம். இதில் ஒருவர் புத்திசாலி. நான் இசை அமைக்கவில்லை என்று சொல்லி விட்டார். இன்னொருவர் வீரத்தமிழன். அதனை விட்டு விட்டு, ஆமாம் நான்தான் செய்தேன் என்றதும், இதில் என்ன தப்பு என்று அவருக்காக சிலர் தூபம் போட்டதிலும் பிரச்சினை வேறுமாதிரி வளர்ந்து விட்டது. எனவே சட்டப்படி என்ன நடவடிக்கை என்பதனை நீதிமன்றம்தான் இனி முடிவு செய்யும். (அபராதம் மட்டும் விதித்து விட்டுவிடுவார்கள் என்றே நினைக்கிறேன்.) பார்ப்போம்.