Showing posts with label இந்தி. Show all posts
Showing posts with label இந்தி. Show all posts

Monday, 8 June 2015

நினைவுகள் - சில பழைய இந்தி பட பாடல்கள்




எப்போதும் காலையில் எழுந்தவுடன் காபி சாப்பிடும் வரை கம்ப்யூட்டரில் இண்டர்நெட்டில் மேய்வது வழக்கம். சென்ற வாரம் ஒருதினம் ( ஜூன் 1, 2015) வழக்கம் போல எனது முதல் மேய்ச்சல் நிலமான கூகிள் (GOOGLE) சென்றேன். ‘Nargis’ 86th birth day’ – என்று மின்னியது. உடனே எனக்கு நர்கீஸ் நடித்த அந்நாளைய இந்தி பாடல்களோடு மற்றைய சில இந்தி பாடல்களும் நினைவுக்கு வந்தன. அன்றைக்கே இந்த பதிவை எழுதியிருக்க வேண்டும். இயலவில்லை.

தமிழ்நாட்டில் இந்தி பட பாடல்கள்

நான் பள்ளி மாணவனாக இருந்த நாட்களில் பிரபலமான பல இந்தி பல பாடல்களை வானொலியில் ஒலி பரப்புவார்கள். மேலும் அப்போதெல்லாம் (அறுபதுகளில்) பெரும்பாலான வீடுகளில் ரேடியோப் பெட்டி என்பதெல்லாம் கிடையாது. ரேடியோ என்பது வசதி படைத்தவர்கள் சமாச்சாரம். ஆனாலும் பெரும்பாலும்  ஓட்டல்களில் ரேடியோ கட்டாயம் இருக்கும். அவ்வாறு ஒலி பரப்பி கேட்ட சில இந்தி பாடல்கள் மனதில் நின்று அசைபோட வைத்து விட்டன.


அப்புறம் கொஞ்சம் பெரியவன் ஆனதும்தான் இந்தி திரைப்படப் பாடல்களைப் பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது. அப்போது இந்தி எதிர்ப்பு உச்சத்தில் இருந்த நேரம். இந்தி எதிர்ப்பு என்பது மாணவர்கள் போராட்டமாக மாறிய சூழ்நிலையில், இந்தி படங்களை தமிழ்நாட்டில் திரையிடவே பயந்தார்கள். இருந்தாலும்,  சில இந்தி பாடல்களின் மெட்டுக்கள் அப்படியே காப்பி செய்யப்பட்டு தமிழ் திரைப்பட பாடல்களிலும் வந்தன. ஆனாலும் முஸ்லீம் நண்பர்களது திருமணம் போன்ற விசேச நிகழ்ச்சிகளில் அவர்கள் வீடுகளில் தமிழ் பாடல்களோடு ஒன்றிரண்டு இந்தி படப் பாடல்களையும் ரேடியோசெட் ஆள் வைப்பார். (அப்போதெல்லாம் திருமணம் என்பது வீடுகளில்தான்; அக்கம் பக்கத்து வீடுகளில் விருந்து நடைபெறும். இப்போது திருமண மண்டபங்கள் நிறைய வந்து விட்டன) அப்போது அடிக்கடி வைக்கும் பாடல்களை கேட்கும் போது யார் நடித்த படம் என்று கேட்பது வழக்கம். பெரும்பாலும் ராஜ்கபூர் நர்கீஸ் நடித்தது என்றுதான் சொல்வார்கள். நம்ப ஊர் எம்.ஜி.ஆர்- சரோஜாதேவி மற்றும் சிவாஜி பத்மினி திரையுலக ஜோடிகள் போல அந்நாளைய இந்தி திரையுலக ஜோடி ராஜ்கபூர் நர்கீஸ்.

பின்னர் தி.மு.க ஆட்சி வந்ததற்குப் பின் இந்தி எதிர்ப்பு என்பது கொள்கை அளவில் மாறிப் போன பின்பு, தமிழ்நாட்டில் தாராளமாக இந்தி படங்கள் திரையிடப்பட்டன. திருச்சியில் கெயிட்டி, பிளாஸா தியேட்டர்களில் இந்திப் படங்கள் நல்ல வசூலை குவித்தன. அப்புறம் மற்ற தியேட்டர்களிலும் திரையிட்டார்கள். நெஸ்காபி அறிமுகம் ஆன சமயம். அங்கங்கே கல்லூரி மாணவர்களையும், வேலையில்லாத இளைஞர்கள் ஒருங்கிணைக்கும் இடங்களாக நெஸ்கபே ஸ்டால்கள் விளங்கின. அப்போது இந்த காபி, டீக்கடைகளில் மட்டுமல்லாது திருவிழா, திருமணம் போன்ற நிகழ்ச்சிகளிலும் இளைஞர்களது விருப்பப் பாடல்களாக  இந்தி படப் பாடல்களை ஒலி பரப்பினார்கள். இப்போது காலம் மாறி விட்டது. இந்தியை தேவைப்படும் இடங்களில் பயன்படுத்திக் கொள்கிறோம்.

இந்தி பாடல்கள் சில:

நர்கீஸ் - ராஜ்கபூர் நடித்துக் கொண்டிருந்த ஆரம்ப நாட்களில் நான் பிறக்கவே இல்லை. ஆனாலும் பின்னாளில் அவர் நடித்த இந்தி படப் பாடல்களை கேட்கும் சந்தர்ப்பங்கள் அமைந்தன. அப்புறம் டீவி, கம்ப்யூட்டர், இண்டர்நெட் என்று வந்த பிறகு அவர் நடித்த பழைய இந்தி பட பாடல்களை அடிக்கடி கண்டு கேட்டு ரசிக்க முடிகின்றது.


ஆஹ் (Aah ) - என்று ஒரு இந்தி திரைப்படம் 1953இல் வெளியானது. ராஜ்கபூர் - நர்கீஸ் நடித்தது. இதில் வரும் jaane naa nazar pehchane jigar –  என்ற பாடலையும் மறக்க முடியுமா என்ன? இந்த ஆஹ் (Aah )  படம் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு (பாடல்களின் மெட்டும் அப்படியே தமிழில்) அவன் என்ற பெயரில் வெளியானது (1953) மேலே சொன்ன இந்தி பாடலின் மெட்டில் கண் காணாததும் மனம் கண்டு விடும்‘ – என்ற பாடலை பாடலாசிரியர் கம்பதாசன் எழுதினார். ராஜா ஜிக்கி  பாடினார்கள். ராஜ்கபூர் நர்கீஸ் தமிழில் பாடும், இந்த பாடலைக் கண்டு கேட்டு மகிழ்ந்திட கீழே உள்ள யூடியூப் இணைய முகவரியை கிளிக் செய்யுங்கள்.



சோரி சோரி (Chori Chori) என்ற படத்தில் (1956 இல் வெளிவந்தது) வரும் aa jaa sanam madnoor என்ற பாடல் மறக்க முடியாத ஒன்று. நர்கீஸ் ராஜ்கபூர் நடித்த இந்த பாடலைக் கண்டு கேட்டு மகிழ்ந்திட கீழே உள்ள யூடியூப் இணைய முகவரியை கிளிக் செய்யுங்கள்.


இந்த பாடலின் மெட்டில் முஸ்லிம் சமய பாடல் ஒன்று உள்ளது. பாடல் நினைவில் இல்லை.


அனாரி (Anari) என்ற 1959 இல் வெளிவந்த படத்தில் வரும்  Sab Kuchh Seekha Ham Ne என்ற பாடலையும் மறக்க முடியாது. 

sury Siva said...
அனாரி படத்தில் ராஜ் கபூர் உடன் நடித்திருப்பது நூடான்.
நர்கீஸ் அல்ல.
சுப்பு தாத்தா.


இந்த பாடலைக் கண்டு கேட்டு மகிழ்ந்திட கீழே உள்ள யூடியூப் இணைய முகவரியை கிளிக் செய்யுங்கள்.


இந்த பாடலின் மெட்டுக்கள் ஜெமினி கணேசன் நடித்த பாசமும் நேசமும் என்ற படத்தில் எல்லாம் நாடகமேடை என்ற பாடலில் அப்படியே இருப்பதைக் கேட்கலாம். 
(இந்த தமிழ் பாடல் பற்றி ஒரு பதிவு ஒன்றும் எழுதியுள்ளேன். தலைப்பு: எல்லாம் நாடக மேடை பாடலாசிரியர் யார்?  இணைப்பு: http://tthamizhelango.blogspot.com/2014/10/blog-post.html)

                                  (ALL  PICTURES COURTESY: GOOGLE IMAGES)