Showing posts with label சீமைக்கருவை. Show all posts
Showing posts with label சீமைக்கருவை. Show all posts

Sunday, 11 January 2015

சீமைக் கருவை – தீமையா?




எந்த ஊர் சென்றாலும் அந்த ஊரின் ஆற்றங் கரை, குளக்கரை, கண்மாய், புறம்போக்கு நிலம் - என்று எங்கும் நீக்கமற நிறைந்திருப்பது சீமைக் கருவை எனப்படும் சீமைக் கருவேலம் (PROSOPIS JULIFLORA) மரங்கள்தாம். இது ஒரு வகை முள்மரம். ஆஸ்திரேலியாவிலிருந்து நமது இந்தியாவுக்கு இதன் விதைகள் கொண்டு வரப்பட்டதாக சொல்லுகிறார்கள்.

சீமைக் கருவை ஒழிப்பு:

இப்போது சீமைக் கருவேலமரம் ஒழிப்பு என்று குரல்கள் எழத் தொடங்கி உள்ளன. அதாவது சீமைக் கருவேல மரங்களால் நிலத்தடி நீர் உறிஞ்சப் படுகிறது, தாவரங்களுக்கு பாதிப்பு, கால்நடைக்கு பாதிப்பு என்றெல்லாம் பட்டியல் இடுகின்றனர். குறிப்பாக பேஸ்புக் (FACEBOOK)போன்ற சமூக வலைத் தளங்களில் இவற்றைக் காணலாம். ஒருவர் பேஸ்புக்கில் எழுதி விட்டால் போதும். அந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை அல்லது நம்பகமானது என்றெல்லாம் யோசிப்பதில்லை. உடனே ஆளாளுக்கு ஒருவருக்கொருவர் நட்பு வட்டங்கள் மூலம் பகிர்ந்து கொள்கின்றனர்.

எனக்கு தெரிந்து இவர்கள் பரபரப்பாக சொல்வதைப் போல, சீமைக் கருவேல மரங்களால் அதிகம் பாதிப்பு இருப்பது போல தெரியவில்லை. அப்படி இருந்திருந்தால் நாடு எப்போதோ சுடுகாடாக மாறி இருக்கும். யூக்லிப்ட்ஸ் (EUCALYPTUS) மரங்களையும் இப்படித்தான் சொன்னார்கள். ஆனால் இப்போதோ பல இடங்களில், தேசிய வேளாண்மை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் யூக்லிப்ட்ஸ் மரக் கன்றுகள் நடப்பட்டு வருகின்றன.

எனவே எனது ”மாற்று சிந்தனை” கட்டுரை இது.

மரத்தின் பயன்பாடுகள்:

இன்று நாடு முழுக்க வீட்டுக்கு வீடு கழிப்பறை (TOILET ) கட்ட வேண்டும் என்ற விழிப்புணர்வு உண்டாகி இருக்கிறது. ஆனால், காலம் காலமாக பல கிராமங்களில் இன்றும் அவசரத்திற்கு என்று ஒதுங்குவது இந்த கருவ மரங்கள் அடர்ந்த காடுகளுக்குத் தான். வீட்டிற்கும் தோட்டங்களுக்கும் வேலியாக பயன்படுவதால் வேலிக்கருவை என்ற பெயரும் உண்டு.


இன்றும் பல வீடுகளில், உணவு விடுதிகளில் அடுப்பெரிக்க பெரிதும் பயன்படுவது சீமைக் கருவேல மரங்கள்தான். கிராமம் சென்றால், பல பெண்கள் இந்த மரத்தினை வெட்டி, இலைகள் மற்றும் முட்களை நீக்கி விட்டு, விறகிற்காக கட்டு கட்டாக சுமந்து வருவதைக் கணலாம். இந்த மரங்களை விறகுக்காக பயன்படுத்துவதால் தான் மற்ற மரங்கள் அடுப்புக்கு போகாமல் தப்பின. இதன் பிசின், கோந்து எனப்படும் பசை தயாரிக்க உதவுகிறது. எனக்கு தெரிந்து, கிராமத்தில் இருந்த எங்கள் உறவினர் ஒருவர் அவர் தோட்டத்தில் இருந்த கருவை மரங்களை விற்று, தன் வீட்டு திருமணம் ஒன்றை நடத்தினார்.அடுப்புக்கரி தயார் செய்வதற்கும், செங்கல் சூளையில் நெருப்பு மூட்டவும், இந்த மரம் பெரிதும் பயன்படுகிறது. எனவே வியாபார ரீதியாகவும் இந்த மரங்கள் கிராமப்புற மக்களுக்கு நல்ல வருமானம் தருகின்றன.


இதன் மஞ்சள் நிற விதைகளை கால்நடைகள் விரும்பித் தின்னுகின்றன. எனது சிறுவயதில், எனது தாத்தா வீட்டில், அவர் இந்த விதைகளைப் பறித்து மூட்டையாக வைத்து இருப்பார். எங்கள் தாத்தா வீட்டு பட்டியில் இருந்த ஆடுகளுக்கு நானே இந்த விதைகளை அள்ளி போட்டு இருக்கிறேன்.   

தி இந்து கட்டுரை:

தாவரவியல் பேராசிரியர் நரசிம்மன் அவர்களின் கட்டுரை ஒன்று  தி இந்து “ ( ஜூலை, 1, 2014) தமிழ் இதழில் வந்துள்ளது. அதில் சொல்லப் பட்டுள்ள கருத்துக்கள் வருமாறு:

// இயல் தாவரமோ, அயல் தாவரமோ முதலில் மண்ணரிப்பைத் தடுத்து மண் வளத்தைப் பாதுகாக்கிறது, விறகைத் தருகிறது. இன்றைக்கும் சாதாரண மக்கள் தாவர எரிபொருளையே சார்ந்திருக்கிறார்கள். அயர்ன் செய்பவர்கள், டீக்கடைக்காரர்கள் சீமை கருவேலத்தின் மர கரியை நம்பித் தொழில் நடத்துகிறார்கள். தென் மாவட்டங்களில் சீமை கருவேல மரத்தில் இருந்து கரி தயாரிக்கும் தொழில் முக்கியமானது. ஆடு, மாடுக்குத் தீவனமாகவும் இந்தத் தாவரம் இருக்கிறது. பல்வேறு வகைகளில் பயன்தரும் இயற்கைவளம் இது.
இப்படிப் பல்வேறு பொருளாதார நலன்களைத் தரும் தாவரத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டுமா என்பது பற்றி சிந்திக்க வேண்டும். அப்படிச் செய்தால், சாதாரண மக்களுக்குப் பொருளாதாரரீதியில் பெரும் இழப்பு ஏற்படும். அதற்கு மாற்று ஏற்பாட்டை உருவாக்க வேண்டும். அதேநேரம் சீமை கருவேலத்தின் கண்மூடித்தனமான பரவலை முறையாக நிர்வகிக்க வேண்டியது அவசியம்தான்.
இப்படி அயல் தாவரங்களை எதிர்க்கும்போது, வேறு விஷயங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும். யூகலிப்டஸ் எனும் தைல மரம் இல்லையென்றால், காகிதத் தொழிற்சாலைகளால் நமது காடுகள் எவ்வளவு அழிக்கப்பட்டிருக்கும்? கிட்டத்தட்ட 20-30 சதவீதக் காடுகள் அழிந்து போயிருக்கும்.
மரம் வெட்டுவதையும் நடுவதையும் முறைப்படுத்தத் தாவர ஆணையம் போன்ற அமைப்பு தமிழகத்தில் தேவை. பூனாவில் இது போன்ற குழு இருக்கிறது. ஓர் இடத்தில் உள்ள மரத்தை வெட்டலாமா, கூடாதா என்பது பற்றி முடிவெடுப்பது மட்டுமில்லாமல், ஓரிடத்தில் எந்த மரத்தை நடுவது உகந்ததாக இருக்கும் என்றும் இந்தக் குழு ஆலோசனை வழங்கலாம். அதற்கான நிபுணத்துவம் கொண்டவர்களை உள்ளடக்கி, இந்தக் குழுவை உருவாக்கப்பட வேண்டும். //
( நன்றி : tamil.thehindu.com/general/environment/சீமை-கருவேலத்தை-ஒழிக்கத்தான்-வேண்டுமா-தாவரவியல்-பேராசிரியர்-நரசிம்மன்/article6164634.ece )

எனவே சீமைக் கருவையை ஒரு தீமையான மரம் என்று சொல்லுவதை விட, அதனை எப்படி பயன்படுத்தினால் நல்லது என்று யோசித்தால் சமூகநலனுக்கு நல்லது.

          (ALL PICTURES - COURTESY: "GOOGLE IMAGES")