Showing posts with label கிறிஸ்தவம். Show all posts
Showing posts with label கிறிஸ்தவம். Show all posts

Friday, 7 August 2015

தலித் கிறிஸ்தவர்கள் இடஒதுக்கீடு - உச்சநீதிமன்றம் கருத்து



இப்போது நாடெங்கும் தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவர்கள் தங்களையும்  (தாழ்த்தப்பட்ட இந்துக்களைப் போலவே) பட்டியல் இனத்தில் (SCHEDULED CASTE) சேர்க்க வேண்டும் என்று கோரி வருகிறார்கள். இந்திய உச்ச நீதிமன்றம் என்ன சொல்கிறது. கீழே சொல்லப்பட்ட செருப்பு தைக்கும் சூசை வழக்கு  பலருக்கு தெரியாது. சில வருடங்களுக்கு முன்னர் பரபரப்பாக பேசப்பட்ட அந்த வழக்கின் தீர்ப்பைப் பற்றி அப்போது தினகரன் ( 02, டிசம்பர், 1995 ) நாளிதழில் வந்த செய்தி இது. (அப்படியே டைப் செய்துள்ளேன்)

செருப்பு தைக்கும் சூசை வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

தலித் கிறிஸ்தவர்களை அட்டவணை சாதியில் இணைக்கலாமா? கூடாதா என்னும் பிரச்சினை உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு வைக்கப்பட்டது 1982-ம் வருடத்தில்! இந்த வழக்கு நமது மாநிலமான தமிழ்நாட்டைச் சார்ந்தது என்பதால் தமிழர்களாகிய நாம் இதனைப் பற்றி தெரிந்து கொள்வது அவசியம்.

1982-ம் வருடம் மே மாதம் தமிழ்நாடு கதர் மற்றும் கிராம தொழில் வாரியத்தார் சென்னை நகரத்தின் தெருவோரங்களில் அமர்ந்து செருப்பு தைக்கும் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் தொழில் பற்றிய சர்வே ஒன்றை மேற்கொண்டது. அப்படி சர்வே செய்யப்பட்டபோது அதில் பதிவானவர்கள்  பலருள் சூசை என்பவரும் ஒருவர். இவர் பூர்வீகத்தில் இந்து மதத்தை சார்ந்தவர். ஆனால் பின்னர் கிறிஸ்தவராக மதம் மாறியவர்.

1982 ஜூலை மாதம் இவர்களுக்கெல்லாம் ‘பங்க்எனப்படும் பெட்டிக்கடைகளை இலவசமாக வழங்கினார்கள். இந்திய அரசின் பணத்தில் இந்த பெட்டி கடைகள் செய்யப்பட்டு மாநில அரசால் வழங்கப்பட்டது. சூசை தவிர பிற செருப்பு தைப்போர் அனைவருக்கும் கடைகள் வழங்கப்பட்டன. சூசைக்கு மட்டும் இல்லை. ஏன்? சூசை கிறிஸ்தவர் என்பதால் அட்டவணை சாதியினர் நல்வாழ்வுக்காக அமுல் நடத்தப்படும் திட்டத்தின் கீழ் அட்டவணை சாதி அல்லாத சூசைக்கு எப்படி உதவி செய்ய முடியும் என்பது அரசின் நிலை.

இதுகுறித்து சூசை சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. வழக்கு விசாரணை நீடித்துக்கொண்டே போய் 1985-ம் வருடம் செப்டம்பர் மாதம் 30-ந்தேதியன்று தீர்ப்பு கூறப்பட்டது. சூசையின் கோரிக்கை உச்சநீதிமன்றத்தால் ஏற்கப்படவில்லை. வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. இதற்கு காரணமாக உச்சநீதிமன்றம் கூறிய காரணம் என்ன?

சாதி அமைப்பு என்பது இந்து சமய அமைப்பில் ஓர் அம்சம் என்பதை யாரும் மறுக்கமுடியாது. சாதி அமைப்பு என்பது இந்து சமயத்துக்கு மட்டுமே உரிய ஒரு வினோதமான ஒரு சமூக விசித்திரம் “ ( …. IT CANNOT BE DISPUTED THAT THE CASTE SYSTEM IS A FEATURE OF THE HINDU SOCIAL STRUCTURE. IT IS A SOCIAL PHNOMENON PECULIAR TO HINDU SOCIETY “ ) 

இப்படி சொல்லியதோடு நில்லாமல் இன்னொரு கருத்தையும் கூறியது. அதாவது, “ இந்து மதத்தில் இருந்தபோது தாழ்த்தப்பட்ட வகுப்பினர் ஒருவர், இந்து மதத்திலுள்ள பிறரால் இழிவாக நடத்தப்படுவது போல அவரே கிறிஸ்தவ சமயத்திற்கு மதம் மாறிய பிறகும் அவரை அவரது புதிய சமயத்தவர்களான கிறிஸ்தவர்கள் நடத்துகிறார்களா? “ இது உச்ச நீதிமன்றம் கூறிய கருத்து - கேட்ட கேள்வி. இதற்கு இன்னமும் சரியான பதில் உச்சநீதிமன்றம் வாயிலாக இன்னமும் கூறப்படவில்லை. இது ஒரு பெரிய தடைக்கல்லாக உள்ளது என்று சில சட்ட நிபுணர்கள் கூறுகிறார்கள்.

நன்றி: தினகரன் (திருச்சி பதிப்பு) தேதி- 02, டிசம்பர், 1995.

இன்னொரு கோணம்:

மதத்தின் அடிப்படையில் அல்லாது இன்றைய நிலை என்ற கோணத்தில் பார்க்கும்போது, கிறிஸ்தவ மதத்தினை தழுவினாலும் அவர்கள் நிலைமை அப்படியேதான் இருக்கிறது என்கிறார்கள்.

இன்னும் படித்த பலர் இட ஒதுக்கீட்டில் வேலை வாய்ப்பிற்காக வேண்டி கிறிஸ்தவ மதத்திலிருந்து இந்து மதத்திற்கு மாறிக் கொள்கிறார்கள். பெயர் மாற்றம செய்து கொள்ளும்போது கூட கிறிஸ்தவத்திற்கும் இந்து மதத்திற்கும் பொதுவான ஒரு பெயரை வைத்துக் கொள்கிறார்கள். ஆனால் நடைமுறையில் அவர்களும் அவர்கள் குடும்பத்தினரும் கிறிஸ்தவர்களாகவே இருந்து கொள்கிறார்கள். ஆரம்பத்தில் இதனை எதிர்த்த கிறிஸ்தவ மெஷினரிகள் இதனை இப்போது கண்டு கொள்வதில்லை.  

நாட்டின் பல இடங்களிலும் முக்கிய நகரங்களிலும் கிறிஸ்தவ மெஷினரிகள் மற்றும் பணக்கார கிறிஸ்தவர்கள் நடத்தும் பல கல்வி நிறுவனங்களில் தொழிற்சாலைகளில்  தலித் கிறிஸ்தவர்களுக்கு சரியான வாய்ப்புகள் தரப் படுவதில்லை. இதற்காகவும் அவர்கள் போராடி வருகிறார்கள்.

கல்லறையில் குறுக்குச்சுவர்:

Till death do us part: Dalits are buried on the other side of the wall in this cemetery (Courtesy: http://www.bbc.com/news/world-south-asia-11229170 )

திருச்சியில் ஒரு கிறிஸ்தவ கல்லறையில் தலித் கிறிஸ்தவர்களையும் மற்ற கிறிஸ்தவர்களையும் ஒரு குறுக்குச்சுவர் வைத்து பிரித்து வைத்து இருக்கிறார்கள். அதை உடைக்கவும் போராடுகிறார்கள். ஆனால் இவைகள் எதனையும் யாரும் கண்டு கொள்வது கிடையாது. இந்த குறுக்குச் சுவரைக் கட்டிக் காக்கும் கல்லறைக் கமிட்டியின் முக்கிய பொறுப்பாளர்கள் சிலர் அரசியல் கட்சிகளில் முக்கிய பொறுப்பு வகிப்பவர்கள்.

இதற்கு யார் காரணம்? இந்த நிலைமையை நீக்க வேண்டியது பல்வேறு தொண்டு நிறுவனங்களையும், பல கல்வி நிறுவனங்களையும் வைத்துள்ள கிறிஸ்தவ சமூகம்தான் இதனை நீக்க பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். அந்த நிறுவனங்களில் தலித் கிறிஸ்தவர்களுக்கு உரிய இட ஒதுக்கீட்டை சரியாக கொடுக்க வேண்டும்.                                                              

எனவே பாராளுமன்றத்தில் இட ஒதுக்கீட்டிற்காக  ஒரு சட்ட திருத்தம் கொண்டு வந்தால்தான் தலித் கிறிஸ்தவர்களின் கோரிக்கை நிறைவேறும். இதற்கு அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பார்களா என்று தெரியவில்லை. அதிலும் இப்போது நடக்கும் பி.ஜே.பி ஆட்சியில் எந்த அளவிற்கு இது சாத்தியம் என்று சொல்ல முடியாது. மேலும், காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இருந்தே, எல்லா மட்டத்திலும் வெளியாள் முறை (OUTSOURCING) மற்றும் ஒப்பந்தமுறை (CONTRACT) நுழைந்து விட்டபடியினால், இடஒதுக்கீடு என்பது பெயரளவில்தான் இருக்கிறது.

கட்டுரை எழுத துணை நின்றவை:
1. தினகரன் (திருச்சி பதிப்பு) தேதி- 02, டிசம்பர், 1995
3. Google search : writ of petition No. 9596 of 1983
     SOOSAI THE COBBLER AGAINST THE SUPREME COURT OF INDIA


Wednesday, 30 July 2014

பைபிள் ஓவியங்கள்


நான் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புவரை படித்தது ஒரு கிறிஸ்தவ மிஷனரி பள்ளியில்தான். அப்போதெல்லாம் ஞானோபதேசம் எனப்படும் வகுப்புகளை கிறிஸ்தவ பிள்ளைகளுக்கும், நல்லொழுக்கம் எனப்படும் வகுப்புகளை பிற சமயம் சார்ந்த பிள்ளைகளுக்கும் அந்த பள்ளியில் நடத்தினார்கள்.  நான் நல்லொழுக்க வகுப்பிற்குச் சென்றபோதிலும் கிறிஸ்தவ நண்பர்கள் வைத்து இருக்கும் “நற்கருணை வீரன் எனப்படும் பைபிள் படக் கதைப் பிரசுரங்களையும் மற்ற நூல்களையும் வாங்கிப் படிப்பேன். அந்த வகையில் அந்த நூல்களில் உள்ள பைபிள் சம்பந்தப்பட்ட வண்ண ஓவியங்கள் எனது மனதைக் கவ்ர்ந்தன.

இந்துக் கோயில்கள் சென்றாலும் கிறிஸ்தவ தேவாலயங்கள் சென்றாலும் அங்குள்ள வண்ண ஓவியங்களை ரசிப்பவன் நான். கிறிஸ்தவ தேவாலயங்களுக்குச் சென்றால் உட் கூரை ஓவியங்கள் (CEILING PAINTINGS) , சுவர்ச் சித்திரங்கள் (WALL PAINTINGS) மற்றும் ஜன்னல்களில் உள்ள கண்ணாடி ஓவியங்கள் (GLASS PAINTINGS) முதலானவற்றைக் காணலாம். அந்த ஓவியங்கள் அனைத்தும் மைக்கேல் ஆஞ்சலோ (Michelangelo) லியனார்டோ டா வின்சி (Leonardo da Vinci) மற்றும் ரபேல்(RAPHAEL ) போன்ற இத்தாலிய ஓவியர்கள் வரைந்த ஓவியங்களின் அடிப்படையிலேயே இருப்பதைக் காணலாம். மேலும் பைபிள் சம்பந்தப்பட்ட நூல்களிலும் இந்த ஓவியங்களைக் காணலாம். அந்த வகையில் சில பைபிள் ஓவியங்கள் இங்கே.

குழந்தை இயேசு ( INFANT JESUS)

இயேசு பெத்லேகம் என்ற ஊரில் மாட்டுக் கொட்டகையில் பிறந்தார். இதனடிப்படையில் வரையப்பட்ட வண்ண ஓவியங்கள் நிறைய உண்டு. மேலே உள்ள ஓவியம் மிகவும் பிரபலமானது. வரைந்த ஓவியர் யாரென்று அறிய முடியவில்லை.

இயேசுவின் ஞானஸ்ஞானம் (BAPTISM OF JESUS CHRIST)


அந்நாட்களில் யோவான் ஸ்நானகன் என்பவர் யூதேயாவின் வனாந்தரத்தில் பொது மக்களுக்கு போதனைகள் செய்து கொண்டு இருந்தார். யோவானின் போதனையைக் கேட்க நிறைய மக்கள் வந்தனர். யோவான் அவர்களுக்கு யோர்தான் நதியில் ஞானஸ்நானம் கொடுத்தார். இயேசு கலிலேயாவிலிருந்து  யோர்தான் நதிக்கரைக்கு வருகிறார். இயேசு யோவானிடம் சென்று தனக்கு ஞானஸ்நானம் கொடுக்கும்படிக் கேட்டார். ஆனால் யோவானோ இயேசுவுக்குத் தான் ஞானஸ்நானம் கொடுக்குமளவுக்கு மேன்மையானவன் அல்ல என்று அவரைத் தடுத்தார். பின்னர் யோவான் இயேசுவின் வற்புறுத்தலுக்குப் பிறகு அவருக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறார். படம் வரைந்த ஓவியர் BARTOLOME ESTEBAN MURILLO   

இயேசு கோயில் வியாபாரிகளை விரட்டுதல்(Casting out the Money Changers)

(படம் மேலே) Christ Cleansing the Temple

இயேசு ஒருநாள் ஜெருசேலம் நகரில் உள்ள கோயிலுக்கு செல்கிறார். அங்கே ஆடு மாடுகள் அடைந்து இருப்பதையும், வியாபாரிகள் ஆக்கிரமித்துக் கொண்டு ஒரே கூச்சலாக வியாபாரம் செய்வதையும், சூதாட்ட்ங்கள் நடப்பதையும் காண்கிறார். கோயில் கொள்ளையர்கள் கூடாரானமானதைக் கண்டு, மனம் வெகுண்ட இயேசு அவர்களை விரட்டி அடிக்கிறார். அந்த காட்சியை சொல்லும் ஓவியம் இது. வரைந்த ஓவியர் CARL HEINRICH BLOCH

இயேசுவின் மலைப் பொழிவு (THE SERMON ON THE MOUNT)


(படம் மேலே) ஒரு மலைப் பகுதியில் தனது சீடர்களுக்கும் பொது மக்களுக்கும் இயேசு பிரசங்கம் செய்தார். அந்த சொற்பொழிவு இயேசுவின் மலைப் பொழிவு எனப்படுகிறது. படம் வரைந்த ஓவியர் CARL HEINRICH BLOCH

ஊதாரி மைந்தன் (The Prodigal Son)

இயேசு சொன்ன உவமைக் கதை இது. ஒருவனுக்கு இரண்டு மகன்கள். மூத்தவன் அப்பன் பேச்சை கேட்டு வீட்டில் இருக்கிறான். இளையவன் கெட்ட நண்பர்கள் சகவாசத்தால் சொத்தில் தனது பங்கைபிரித்துத் தரும்படி வாங்கிக் கொண்டு வெளிதேசம் செல்கிறான். அந்த மகன் என்றேனும் ஒருநாள் திரும்பி வருவான் என்ற நம்பிக்கையில் தகப்பன் இருக்கிறான். வெளிதேசம் சென்ற மைந்தன் அங்கு சொத்துக்களை அழித்துவிட்டு ஒரு குடியானவனிடம் பன்றி மேய்ப்பவனாக இருக்கிறான். மனம் ருந்திய அவன் தனது வீடு திரும்புகிறான். அவன் வீட்டிற்கு தொலைவில் வரும் போதே அவனை கவனித்து விட்ட அவனது தந்தை ஓடி வந்து வரவேற்கிறான். மனம் திரும்பிய அவனை அவனது தந்தை மன்னித்து ஏற்றுக் கொள்கிறான். இந்த கதையை விளக்கும் படம் இது. படத்தினை வரைந்தவர் Harold Copping

கடைசி இரவு உணவு ( LAST SUPPER)

இயேசுநாதர் தனது சீடர்களுடன் இரவு உணவு உண்ணுகிறார். அதுசமயம் யூதாஸ் என்ற அவரது சீடனே அவரைக் கன்னத்தில் முத்தமிட்டு இன்னார்தான் இயேசு என்று காட்டிக் கொடுக்கிறான். அதன் பின்னர் இயேசுவை அரண்மனைக் காவலர்கள் கொண்டு செல்கின்றனர். அடுத்தநாள் இயேசு சிலுவையில் அறையப் படுகிறார். இந்த நிகழ்ச்சியை மையமாக வைத்து கடைசி இரவு உணவு ( LAST SUPPER) எனப்படும் இந்த ஓவியத்தை மிலான் நகரில் உள்ள, சாண்டா மரியா தேவாலயத்தில் லியனார்டோ டா வின்சி வரைந்தார். நாளடைவில் இந்த ஓவியம் பழுதடைந்து போகவே பின்னாளில் சீர்திருத்தம் செய்து புதுப்பித்தனர். பிற்பாடு நிறைய ஓவியர்கள் அந்த ஓவியத்தின் நகலை வரைந்தனர்.

(படம் மேலே) இயேசு தனது சீடர்களுடன் கடைசியாகக் கலந்து கொண்ட இரவு உணவுக் காட்சி. படம் வரைந்தவர் JUAN DE JUANES  

சிலுவையில் இயேசு (JESUS’ CRUCIFIXION) மற்றும் உயிர்த்தெழுதல் (Resurrection of Jesus)


(படம்: மேலே சிலுவையில் இயேசு ஓவியர் CARL HEINRICH BLOCH ) 

சிலுவையில் அறையப்பட்ட இயேசு இறந்து போகிறார் அவரை ஒரு சிறு குகைக் கல்லறையில் அடக்கம் செய்கிறார்கள். இறந்த மூன்றாம் நாள் அவர் உயிர்த்தெழுந்தார்

மேலே உள்ள உயிர்த்தெழுதல் படத்தினை வரைந்தவர் ஓவியர் ரபேல் (RAPHAEL)

கட்டுரை எழுத துணை நின்றவை:
MY THANKS TO –
மத்தேயு சுவிசேஷம்
www.google.co.in

 

Monday, 18 November 2013

என்னைக் கவர்ந்த கிறிஸ்தவ கீதங்கள்



எனது சிறு வயதிலிருந்து எனக்கு திருமணம் ஆகும் வரை  நாங்கள் திருச்சி டவுனில் இருந்தோம்..(இப்போது புறநகர்) நாங்கள் வசித்த இடம் கிறிஸ்தவர்கள் நிறைந்த பகுதியாகும். மேலும் முதல் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை நான் படித்தது ஹோலிகிராஸ் கான்வெண்ட் நடத்திய ஒரு கிறிஸ்தவ ஆரம்பப் பள்ளி ஆகும். எனவே நான் ஒரு இந்து என்றாலும், எனக்கு மத வேறுபாடு கடந்த கிறிஸ்தவ நண்பர்கள் உண்டு. அவர்களது ஆலயங்களுக்குச் செல்வது, நல்லது கெட்டது நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வது என்ற வகையில், அவர்களுடைய ஜெப முறைகளையும் அவர்களது கிறிஸ்த பாடல்களையும் நான் அறிவேன். அந்த வகையில் திருச்சி: புனித லூர்து அன்னை ஆலயம் (St. Lourdes Church) http://tthamizhelango.blogspot.com/2012/09/st-lourdes-church_9.html என்று ஒரு பதிவையும் எழுதியுள்ளேன். இங்கு எனது மனம் கவர்ந்த சில கிறிஸ்தவ கீதங்களையும் அதனைச் சார்ந்த சில நிகழ்வுகளையும் குறிப்பிட விரும்புகிறேன். பாடல்களில் தொடக்கத்தில் உள்ள வரிகளை மட்டும் குறிப்பிட்டு உள்ளேன்.

கேளுங்கள் தரப்படும்

நாங்கள் முன்பு வசித்த வீட்டிற்கு அருகில் சர்ச் ஒன்று உண்டு. கிறிஸ்துமஸ் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்னரே மூங்கில் குச்சிகளைக் கொண்டு “கிறிஸ்துமஸ் கூண்டு தயார் செய்தல், இயேசு பிறந்த மாட்டுக் கொட்டகை ஜோடித்தல், கலர்க் காகிதங்களைக் கொண்டு கொடிகள் செய்து தோரணங்கள் கட்டுவது என்று வேலைகள் நடக்கும். சிறுவனான நானும் அதில் பங்கு கொள்வேன். அந்த சர்ச்சில் விழாக் காலங்களில் ஒலிபெருக்கியில் முதலில் பாடும்பாடல்  கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் ... ... “ என்று தொடங்கும் பாடல்தான். இன்றும் அந்த கணீர் குரலில் தொடங்கும் பாடலைக் கேட்கும் போதெல்லாம் அந்தநாள் ஞாபகங்கள் வந்துவிடும்

கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்
தேடுங்கள் கிடைக்குமென்றார் -இயேசு 
தேடுங்கள் கிடைக்குமென்றார் 
பெத்லேகேம் நகரில் மாட்டு தொழுவமதில் பிறந்தார் பரமப்பிதா
சூசை கன்னி மரியின் மடியில் தவழ்ந்தார் ஏசுப்பிதா 

பாடலை வீடியோவில் கண்டு கேட்டு மகிழ இங்கே க்ளிக் செய்யுங்கள்.  

எனை ஆளும் மேரி மாதா
 
அப்போதைய மறக்க முடியாத இலங்கை வர்த்தக ஒலிபரப்பு வானொலியில் எல்லா சமயப் பாடல்களையும் காலையில் ஒலி பரப்புவார்கள். அவற்றுள் மிஸ்ஸியம்மா ( ஜெமினி கணேசன் சாவித்திரி நடித்தது ) படத்தில் வரும் “ எனை ஆளும் மேரி மாதா “ என்று தொடங்கும் பாடலை அடிக்கடி ஒலி பரப்புவார்கள்.

எனை ஆளும் மேரி மாதா
துணை நீயே மேரி மாதா
என்றும் துணை நீயே மேரி மாதா

எனை ஆளும் மேரி மாதா
துணை நீயே மேரி மாதா

பரிசுத்த ஆவியாலே
பரபுத்ரன் ஈன்ற தாயே
பரிசுத்த ஆவியாலே
பரபுத்ரன் ஈன்ற தாயே
ப்ரபு ஏசு நாதன் அருளால்
புவியோரும் புனிதம் அடைந்தார்

எனை ஆளும் மேரி மாதா
துணை நீயே மேரி மாதா

( படம்: மிஸ்ஸியம்மா (1955) - பாடல்: தஞ்சை ராமையாதாஸ்- பாடியவர் P லீலா இசை S ராஜேஸ்வர ராவ் )

பாடலை வீடியோவில் கண்டு கேட்டு மகிழ இங்கே க்ளிக் செய்யுங்கள். 
 
இடைவிடா சகாயமாதா:
 
திருச்சி பாலக்கரையில் சகாயமாதா கோவில் உள்ளது. என்னைவிட மூத்தவர், ஸ்டேட் வங்கியில் பணிபுரிந்த மார்ட்டின் என்பவர். அவர் ஒவ்வொரு புதன்கிழமையும் பணி முடிந்ததும் மாலைவேளை இந்த கோயிலுக்கு செல்வார். ஒருமுறை அவர் என்னையும் இந்த கோயிலுக்கு அழைத்துச் சென்றார். பிரார்த்தனைக்கு முன்னர் அந்த சர்ச்சில் சில பாடல்களை ஒலிபரப்பினர். அவற்றுள் எனது மனங் கவர்ந்த பாடல்  
“இடைவிடா சகாயமாதா “ என்று தொடங்கும் பாடல். இன்று அந்த மார்ட்டின் உயிரோடு இல்லை.

இடைவிடா சகாயமாதா
இணையில்லா தேவமாதா 
பாவவினை தீர்ப்பாள்
பதமுனை சேர்ப்பாள் 
நிதம் துணை சேர்ப்பாயே

பாடலை வீடியோவில் கண்டு கேட்டு மகிழ இங்கே க்ளிக் செய்யுங்கள்.

நீலக் கடலின் ஓரத்தில்:

கிறிஸ்தவ சமயம் சார்ந்த பல் திரைப் படங்கள் ஆங்கிலத்திலும் , தமிழிலும் வந்துள்ளன. ஆங்கிலத்தில் வெளிவந்த THE TEN COMMANDMENTS மற்றும் BENHUR இரண்டையும் மிகவும் ரசித்தவன் நான். இவற்றுள் பத்துக் கட்டளைகள் படம் பற்றி  திரைப் படம் - பத்து கட்டளைகள் (THE TEN COMMANDMENTS)  http://tthamizhelango.blogspot.com/2012/10/ten-commandments.html என்ற பதிவையும் எழுதி உள்ளேன்.

கவிஞர் கண்ணதாசன் சிறந்த கவிஞர். அவர் எழுதிய அர்த்தமுள்ள இந்துமதம் ( பத்து பாகங்கள் ) என்ற நூல் அனைவரும் படிக்க வேண்டிய ஒன்று. அவர் இந்து மதத்தில் ஈடுபாடு மிக்கவராயினும் சமய நல்லிணக்கம் கொண்டவர். அவர் படைத்த “இயேசு காவியம் என்ற நூலே இதற்கு சான்று. அவர் “அன்னை வேளாங்கண்ணிஎன்ற படத்திற்காக எழுதிய நீலக் கடலின் ஓரத்தில்என்று தொடங்கும் இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்.

நீலக்கடலின் ஓரத்தில்
நீங்கா இன்பக் காவியாமாம்...
தென்னை உயர பனை உயர
செந்நெல் உயர்ந்து வளம் செழிக்கும்
வேளாங்கண்ணி என்னும் ஊராம்

(பாடல்: கண்ணதாசன் படம்: அன்னை வேளாங்கண்ணி பாடியவர்கள்:T.M.சௌந்தரராஜன் & P மாதுரி, இசை: ஜி தேவராஜன் )

பாடலை வீடியோவில் கண்டு கேட்டு மகிழ இங்கே க்ளிக் செய்யுங்கள்
  
திருமண வரவேற்பு நிகழ்ச்சியில்:


நாங்கள் இருந்த பகுதியில் கடைவீதியில் டேவிட் என்ற பெரியவர் “ டேவிட் மளிகை “ என்ற பலசரக்கு கடை வைத்து இருந்தார். அவரிடம்தான் எங்களுக்குத் தேவையான மளிகை சாமான்களை வாங்குவோம். அவர் வீட்டு திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு  சென்று இருந்தபோது, மணமக்கள் மேடைக்கு வரும் வரை கிறிஸ்தவ கீதங்கள் பலவற்றை ஒலி பரப்பினார்கள். அவற்றுள் ஒன்று கட்டடம் கட்டிடும் சிற்பிகள் நாம் “ என்று தொடங்கும் இந்த பாடல் -

கட்டடம்  கட்டிடும் சிற்பிகள் நாம்
கட்டிடுவோம் கிறிஸ்தேசுவுக்காய்
சுத்தியால்  வைத்து அடித்தல்ல
ரம்பத்த்தால்  மரத்தை அறுத்தல்ல

ஒவ்வொரு நாளும் கட்டிடுவோம்
ஒவ்வொரு செயலாம்  கற்களாலே
உத்தமர் இயேசுவே  அஸ்திபாரம்
பத்திரமாக தாங்கிடுவார்

பாடலை வீடியோவில் கண்டு கேட்டு மகிழ இங்கே க்ளிக் செய்யுங்கள்.

மேலே சொன்ன திருமண நிகழச்சியில் மணமக்கள் மேடைக்கு வந்து அமர்ந்தவுடன் அங்கு ஒலிபரப்பப்பட்ட பாடல்

ரோஜாப்பூ வாசமலர்கள் நாம்
இப்போ நேச மணாளர் மேல்  தூவிடுவோம்

மல்லிகை முல்லை சிவந்தி பிச்சி 
மெல்லியர் சேர்ந்து அள்ளியே வீசி 
நல்மணமக்கள் மீது நாம்...
எல்லா மலரும் தூவிடுவோம்.

ரோஜாப்பூ வாசமலர்கள் நாம்
இப்போ நேச மணாளர் மேல்  தூவிடுவோம்

மன்னனாம் மாப்பிள்ளை பண்புள்ள பெண்ணுடன் 
அன்றிலும் தேனும் போல் ஒன்றித்து வாழ
ஆண்டவர் ஆசீர்வதிக்க...
நம் வேண்டுதலோடு தூவிடுவோம்.

பாடலை வீடியோவில் கண்டு கேட்டு மகிழ இங்கே க்ளிக் செய்யுங்கள்.


இவைகள் மட்டுமல்லாது இன்னும் பாடல்கள் உண்டு. இங்கு எழுத இடமும், உங்களுக்கு படிக்க நேரமும் இல்லாத படியினால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

(PICTURES  &  VIDEOS  THANKS  TO  GOOGLE) 



Sunday, 9 September 2012

திருச்சி: புனித லூர்து அன்னை ஆலயம் (St. Lourdes Church)


திருச்சிராப்பள்ளி நகரின் மத்தியில், மெயின்கார்டு கேட் (MAINGUARD GATE) அருகே அமைந்துள்ளது புனித லூர்து அன்னை ஆலயம் (St. Lourdes Church ). இந்த ஆலயமும் இதன் வரலாறும் புனித ஜோசப் கல்லூரி (St. Josephs College )  வரலாறும்  வளாகங்களும் இணைநதே உள்ளன. இந்த ஆலயத்தின் எதிரே திருச்சி மலைக் கோட்டையும் தெப்பகுளமும் அமைந்துள்ளன. தெப்பகுளத்தின் கிழக்குக் கரையில், கிளைவ்ஸ் கட்டடம் (CLIVES BUILDING ) இருக்கும் இடத்தில் இருந்து இந்த ஆலயத்தினையும் தெப்பக்குள மண்டபத்தையும் ஒரு சேர மத நல்லிணக்கத்தோடு காணலாம்.

புனித  லூர்து அன்னை என்ற பெயர்:

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெர்னதெத் சூபிரூஸ் ( Bernadette Soubirous ) என்ற சிறுமி தனது சகோதரி மற்றும் தோழியுடன் அருகில் உள்ள காட்டிற்கு விறகு பொறுக்கச் சென்றாள். அப்போது மசபியேல் என்ற கெபி (குகை) அருகே சென்றபோது அன்னை மேரி காட்சி தந்தார். இந்த காட்சியானது பெர்னதெத்திற்கு மட்டுமே தெரிந்தது. அவளோடு சென்ற மற்ற இருவருக்கும் தெரியவில்லை. அதன் பிறகு தொடர்ந்து சில நாட்கள் அன்னை மேரி அந்த சிறுமியை அந்த இடத்திற்கு வரச் சொன்னார். அங்கு தனக்கு ஒரு ஆலயம் கட்ட வேண்டும் என்று அன்னை மேரி சொல்கிறார். ஒருதடவை அன்னை மேரியின் கட்டளையை ஏற்று அந்த இடத்தில் பெர்னதெத் மண்ணைத் தோண்டுகிறாள். அந்த இடத்தில் ஓர் நீருற்று உண்டானது. பின்னர் அது ஒரு ஓடையாக மாறிவிட்டது. இந்த அற்புதத்தைக் கேட்ட திருச்சபையினர் உண்மையைக் கண்டறிய விசாரணை செய்தனர். முடிவில் அங்கு பெர்னதெத் என்ற சிறுமிக்கு அன்னை மேரி காட்சி அளித்து அற்புதம் நிகழ்த்தியது உண்மையே என்று அறிவித்தனர். அதன் பிறகு மசபியேல் என்ற குகை அருகே ஒரு தேவாலயம் கட்டப்பட்டது. அந்த ஓடைநீர் புனித நீராக கருதப்பட்டது. ஆலயம் அமைந்த இடம் லூர்து நகர் என்று அழைக்கப்பட்டது. அன்னை மேரி சிறுமிக்கு முதன் முதல் காட்சி அளித்த நாள் 1858  ஆம் ஆண்டு பிப்ரவரி 11ந்தேதி ஆகும். ஆண்டுதோறும் இந்த நாளை கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் திருவிழாவாக கொண்டாடுகிறார்கள்.

திருச்சியில் கோட்டைப் பகுதியில் கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயம் கட்டத் தொடங்கியபோது இயேசு சபையில் பிரெஞ்ச்சு நாட்டைச்  சேர்ந்த இறைப் பணியாளர்களே அதிகம் இருந்தனர். அவர்கள் தங்கள் நாட்டில் (பிரான்ஸ்) காட்சி தந்த லூர்து அன்னையின் பெயரையே இந்த தேவாலயத்திற்கும் சூட்டினார்கள். “ CHURCH OF  OUR LADY OF  LOURDES “


தேவாலயத்தின் வரலாறு:

இப்போது திருச்சியில் இருக்கும் புனித ஜோசப் கல்லூரியானது ஆரம்பத்தில் நாகப்பட்டணத்தில் இருந்தது. பின்னர் அங்கிருந்து 1883 ஆம் ஆண்டு திருச்சிக்கு மாற்றப் பட்டது. ஆரம்பத்தில் கல்லூரியானது கிளைவ்ஸ் கட்டடத்தில் இயங்கியது. அப்போது திருச்சியில் கோட்டைப் பகுதியில் இருந்த பெல்லார்மின் ஹால்தான் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் வழிபாட்டு இடமாக இருந்திருக்கிறது.. அருள் தந்தை ஜோசப் பெய் என்பவர்  1884 ஆம் ஆண்டு முதல் 1893 வரை கல்லூரி முதல்வராக இருந்தார். அவர் இந்த ஆலயம் எழுப்புவதில் மிகுந்த ஆர்வம் கொண்டு இருந்தார். அவர் காலத்தில் தேவாலயம் கட்டுவதற்கு திட்டம் போடப்பட்டு  பணி தொடங்கப்பட்டது. அவர் திருநெல்வேலியைச் சேர்ந்த தனம் சவரிமுத்து மேஸ்திரியார் என்பவரிடம் இந்த பணியை ஒப்படைத்தார். அப்போது திருச்சி ஆயராக இருந்த ஜான் மேரி பார்த் என்பவர் 1890 ஆம் ஆண்டு ஜூன் 26 ஆம் தேதி , தேவாலயத்தின் அஸ்திவாரத்திற்கான முதல் கல்லை ஆசீர்வாதம் செய்து எடுத்து வைத்து தேவாலயம் கட்டும் பணியை தொடங்கி வைத்தார். 1893 முதல் 1903 வரை ஜோசப் கல்லூரியின் முதல்வராக இருந்த அருள் திரு லியோ பார்பியர் அவர்கள் தேவாலயம் கட்டும் பணியில் முழுமையாக ஈடுபட்டார்.  1890 இல் தொடங்கப்பட்ட தேவாலய பணியானது 1898- ஆம் ஆண்டு வரை நடைபெற்றது. பிரதான கோபுரவேலை மட்டும் நான்கு ஆண்டுகள் தடைபட்டு, பின்னர் 1903 ஜனவரி தொடங்கி 1910- டிசம்பரில் முடிந்தது.

தேவாலயத்தின் அமைப்பு:

 

   தேவாலயம் கோதிக் கட்டடக்கலை (Gothic architecture) அமைப்பில் உருவானது. ( கோதிக் கட்டடக்கலை என்பது 12-ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் பிரான்ஸ் நாட்டில் உருவானது. பெரும்பாலும்  தேவாலயங்கள், கல்லறைகள், கோட்டைகள், அரண்மனைகள இந்த அமைப்பு முறையினால் கட்டப்பட்டன.) இந்த கோதிக் கட்டடக் கலையினைப் பற்றிய பயிற்சிகள் , ஆலயத்தை கட்டும் பணியை மேற்கொண்ட தனம் சவரிமுத்து மேஸ்திரியாருக்கும் மற்றவர்களுக்கும் சொல்லித் தரப்பட்டன. இதன் மேற்பார்வையை அருள்தந்தை பெர்னார்டுசெல் பார்த்துக் கொண்டார்.  தேவாலயம் கட்டுவதற்கு தேவையான கற்கள் கல்லூரியின் உள்ளே இருந்த கல் குவாரியில் இருந்தே வெட்டி எடுக்கப்பட்டன. சுடு சிற்பங்கள் இங்கிருந்த களி மண்ணாலேயே செய்யப்பட்டன. கட்டட அமைப்பில் பிரான்ஸ்சில் உள்ள லூர்து நகர் தேவாலயம் போன்றே இந்த திருச்சி புனித லூர்தன்னை தேவாலயமும் கட்டப்பட்டது என்பது சிறப்புச் செய்தியாகும்.



தேவாலயத்தின் உள்ளே நுழையும் போதே நம்மை அந்த பிருமாண்டமான வாயில் சிலுசிலுவென்று வீசும் காற்றோடு வரவேற்கும். கோயிலின் உள்ளே நன்கு விசாலமான அமைப்பு. அண்ணாந்து பார்க்க வைக்கும் மேற்கூரையிலும் பக்கவாட்டிலும் வண்ண ஓவியங்கள். பெரும்பாலானவை கண்ணாடி ஓவியங்கள். வெளிநாட்டிலிருந்து வரும் மேல்நாட்டவர்கள் இந்த ஆலயத்தின் அழகினை ரசித்து ரசித்து படம் எடுப்பதைக் காணலாம். ஆலயத்தின் நூற்றாண்டு விழா (1896 1998) இன்றைக்கு 14 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தது. அப்போது தேவாலயம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது.

இப்போதும் திருச்சிக்கு கம்பீரம் சேர்க்கும் விதமாக புனித லூர்து அன்னை ஆலயம் (St. lourdes church) இருந்து வருகிறது.

வழிபாட்டு நேரம்:

வார நாட்கள் : காலை: 5.30 a.m & 6.30 a.m
                மாலை: 6.30 p.m
ஞாயிறு       : காலை: 5.15 a.m, 6.15 a.m & 7.30 a.m
                              மாலை: 6.30 p.m

குறிப்பு: மேலே உள்ள அன்னை மரியாள் படம் தவிர , மற்ற தேவாலயப் புகைப் படங்கள் யாவும் என்னால் இன்று (09.09.12) காலை " Canon Power Shot A800 " என்ற Digital Camera மூலம் எடுக்கப்பட்டவை.

நன்றியுடன் (கட்டுரை எழுத உதவியவை) :
1.புனித லூர்தன்னை ஆலயம் நூற்றாண்டு விழா மலர்
 (1896 1998)
      2.. www.sjctni.edu
      3. Wikipedia, the free encyclopedia -  English
      4. Wikipedia, the free encyclopedia -  Tamil
   5. பாரம்பரியம்: நூற்றாண்டைக் கடந்த ஆலயம்!                    .                அ. சத்தியமூர்த்தி - 29 May 2011 DINAMANI e-paper

இணைப்பு:


( PHOTO THANKS TO   Glyn John Willett  ( http://members.virtualtourist.com )