Sunday 23 September 2012

நானும் ஒரு போட்டோகிராபர் ஆனேன்.


சின்ன வயதிலிருந்து எனக்கு ஒரு கேமரா வாங்க வேண்டும் என்று ஆசை. போட்டோகிராபி என்பது அதிக செலவு (Photography is an expensive hobby  ) என்று சொல்வார்கள். சைக்கிள் ஆசையே நிறைவேறாத போது கேமரா மட்டும் கிடைத்துவிடுமா? சென்னையில் இருக்கும் எனது மாமாவிடம் (அத்தையின் கணவர்) ஒரு ஆஃபா கிளிக் ( Agfa Click) கேமரா ஒன்று இருந்தது. அவர் ஒரு அட்வகேட். ரொம்பவும் கண்டிப்பானவர். எனவே எனது அப்பா மூலமாக கொஞ்ச நாளில் திரும்பத் தருவதாகச் சொல்லி அந்த கேமராவை வாங்கினேன். இது நடந்தது நான் பிஏ இறுதி ஆண்டு படிக்கும்போது. 

ஆஃபா கிளிக்  கேமரா (AGFA CLICK CAMERA):

நான் எனது மாமாவிடமிருந்து இரவல் வாங்கிய அந்த ஆஃபா கிளிக் , ஜெர்மன் கேமரா ஆகும். அந்த கேமரா மூலம் 12 படங்கள் மட்டுமே எடுக்க முடியும். இப்போது போல் அப்போது போட்டோ கடைகள் அதிகம் கிடையாது. அதிலும் கறுப்பு வெள்ளை பட பிலிம்கள்தான் கிடைக்கும். 

அப்போது திருச்சி தெப்பகுளம் பகுதியில் வாணப்பட்டறை தெருவில் ஒரு போட்டோ கடை இருந்தது. அந்த கடையில் போட்டோ பிலிமை டெவலப் செய்து பிரிண்டும் போட்டுத் தருவார்கள். எப்போதும் அவர் கடை வாசலில் டெவலப் செய்த பிலிம் ரோல்கள் ஈரம் காய்வதற்காக தொங்க விடப்பட்டு இருக்கும். தண்ணீர் நிரம்பிய ட்ரேக்களில் பிரிண்ட் போட்ட போட்டோக்கள் இருக்கும். பெரும்பாலும் அந்த கடையில் பெரிய சங்கராச்சாரியார் படங்களை பிரிண்ட் போட்டு வண்ணம் தீட்டி விற்பனைக்கு வைத்து இருப்பார்கள். அந்த கடையில் வேலை செய்த நண்பர் ஒருவர், எனக்கு கேமராவில்  எப்படி பிலிம் மாட்ட வேண்டும் எப்படி எடுக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார். ஏற்கனவே நான் வாங்கி வைத்து இருந்த அந்நாளில் பிரபலமாக இருந்த ORWO  கறுப்பு வெள்ளை பிலிமை கேமராவில் மாட்டியும் கொடுத்தார். படம் எடுக்க வேண்டிய முறைகளையும் சொல்லிக் கொடுத்தார்.

நான் அந்த கேமராவை எடுத்துக்  கொண்டு எனது பாட்டி ஊருக்குச் சென்றேன். கொள்ளிடம் ஆறு, மரங்கள், பக்கத்து ஊரான திருக்கானூர் சிவன் கோவில், உறவினர்கள் என்று ஆசைதீர படம் எடுத்தேன். அந்த கேமராவில் எதிர் வெய்யிலில் படம் எடுத்தால் மட்டுமே நன்றாக இருக்கும். எல்லாம் கறுப்பு வெள்ளைதான். எனது போதாத நேரம் 1977 நவம்பர் வெள்ளத்தின் போது அந்த காமிராவில் சேறு புகுந்து பயன்படாமல் போய்விட்டது. அந்த அட்வகேட் மாமாவிடம் எதிர்பார்த்த திட்டு கிடைத்தது. கேமரா ஆசை போய் விட்டது.

நேஷனல் 35 எம்.எம் ( National C-300EF ) கேமரா:

அப்போது திருச்சி பர்மா பஜாரில் விதம் விதமான சின்ன பெரிய வெளிநாட்டு கேமராக்கள், பிலிம் ரோல்கள் தாராளமாக கிடைத்தன. எனது நண்பர் ஒருவர் நேஷனல் 110 கேமராவை வைத்து ஒரு சின்ன நிகழ்ச்சியை படம் எடுத்தார். கேமராவைப் பார்த்ததும் மறுபடியும் கேமரா மீது ஆசை. அப்போது நான் வேலையில் சேர்ந்து இருந்த நேரம். எனவே பர்மா பஜாரில் எனக்குத் தெரிந்தவர் மூலம் நேஷனல் 110 கேமராவுக்கு சொல்லி வைத்தேன். அவர் 110 வேண்டாம் என்று சொல்லி நேஷனல் 35 எம்.எம் என்ற பிலிம் கேமராவைப் பற்றி சொல்லியும், National C-300EF என்ற கேமராவை வாங்கியும் கொடுத்தார்.

அந்த கேமரா மூலம் ஆசை தீர வண்ணப் படங்களை எடுத்தேன். ஆட்டோ ப்ளாஷ் கேமரா என்பதால் பிரச்சினை இல்லை. அதற்குத் தகுந்தாற் போல அப்போது திருச்சியில் கலர் போட்டோ டெவலப்மெண்ட் கடைகள் வரத் தொடங்கிவிட்டன. கிராமத்தில் ஏதேனும் நிகழ்ச்சிக்கு சென்றால் நான் எனது கேமராவில் பதிவு செய்து, கடையில் பிரிண்ட் போட்டு கொடுப்பேன். பணம் வாங்க மாட்டேன். அதே போல கிராமத்து வயதானவர்களை படம் எடுத்து அவர்கள் வீட்டாருக்கு கொடுத்து விடுவேன். பின்னாளில் அந்த பெரியவர்கள் மறைந்தபோது அவ்வாறு எடுத்த படங்கள் அவர்களுக்கு நினைவஞ்சலி செய்ய உதவியாக இருந்தன. சிலர் பழைய படங்களில் இருக்கும் வயதானவர்களை மட்டும் பெரிதாக பிரிண்ட் போட்டு அனுப்பச் சொல்வார்கள். கிராமத்து சொந்தங்கள் என்பதால்  யாரிடமும் இதற்காக பணம் வாங்கியதில்லை.  

யாஷிகா எஃப் எக்ஸ் 3 சூப்பர் (YASHICA  FX 3 SUPER) கேமரா:

போட்டோகிராபி மீது ஏற்பட்ட ஆர்வம் காரணமாக அது சம்பந்தப்பட்ட புத்தகங்களை நிறைய படிக்க வாங்கினேன். இது சம்பந்தமாக நான் வாங்கிய போட்டோகிராபி நூல்கள் விவரம் இதோ ( இப்போது இவைகள் கடையில் கிடைக்கின்றனவா என்று தெரியவில்லை)

செய்முறை புகைப்படக்கலை S. தியாகராஜன்
ஒளிப்படம் பிடிக்கும் கலை எம்.எஸ்பி.சண்முகம்
போட்டோ கலையைக் கற்றுக்கொள்ளுங்கள்
        மணிமேகலை பிரசுரம்
கேமராவின் கதையும் அதன் வகைகளும்
        மணிமேகலை பிரசுரம்
THE 35MM HAND BOOK   -  Michael  Freeman
THE 35MM PHOTOGRAPHERS HANDBOOK  - Julian Calder and John Carrett
THE FOCAL GUIDE TO CAMERAS – Clyde Reynolds
THIS IS PHOTOGRAPHY ITS MEANS AND ENDS
                                                             – Thomas H.Miller And Wyatt Brummitt
PHOTOGRAPHY MADE SIMPLE – Derek Bowskill
THE RIGHT WAY TO USE A CAMERA – Laurence Mallory
HOW TO BECOME AN EXPERT IN PHOTOGRAPHY – Nirmal Pasricha
TAKING PHOTOS – Lu Jeffery
PRACTICAL  PHOTOGRAPHY   -  O.P.Sharma
PRACTICAL  PHOTOGRAPHY   -  S. Thiagarajan

தபால் மூலம் போட்டோகிராபி கற்றுக் கொள்ள ஆசைப் பட்டு கலைமதி நிலையம் ( நஞ்சைத் தலையூர், ஈரோடு மாவட்டம் ) மூலம் பாடங்கள் படித்தேன். மற்றும் Amateur Photography போன்ற இதழ்களையும் வாங்கினேன். எனவே பெரிய கேமரா வாங்கும் ஆசை வந்தது. அடிக்கடி சிங்கப்பூர் சென்று வரும் பர்மா பஜார் நண்பரிடம் சொல்லி யாஷிகா எஃப் எக்ஸ் 3 சூப்பர் கேமரா ஒன்றை வாங்கினேன். கூடவே மறக்காமல் நேஷனல் ப்ளாஷ் ஒன்றையும் வாங்கினேன். அந்த கேமரா மற்றும் புத்தகங்கள் வழியாக போட்டோ கிராபியின் பல நுட்பங்களை தெரிந்து கொண்டேன். அலுவலக நிகழ்வுகள், திருமண நிகழ்ச்சிகள், தொழிற்சங்க மாநாடுகள், சுற்றுலா என்று பலவற்றிற்கு இந்த கேமரா உதவியது. எனது நேரம் கேமராவில் சிறு பிரச்சினை. திருச்சியில் பிரபலமான போட்டோ சர்வீஸ் செய்பவர் வெளியூர் சென்று வர நாட்கள் ஆகும் என்றதால் இன்னொருவரிடம் கொடுத்தேன். அவர் சரியாக பார்க்கவில்லை. மேலும் பழுதாக்கி விட்டார். இப்போதும் அந்த கேமரா வீட்டில் அப்படியே உள்ளது. 


கேனான் டிஜிட்டல் கேமரா (CANON POWERSHOT A800)  

சில வருடம் போட்டோ எடுபபதையே விட்டுவிட்டேன். இப்போது Canon Powershot A800  என்ற கேமராவை எனது வலைப் பதிவு உபயோகத்திற்காக வாங்கியுள்ளேன். வலைப்பதிவில் படங்களை இணைப்பதற்கும், திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கும் இதன் தொழில் நுட்பம் நன்றாகவே உள்ளது. வீடியோ வசதியும் உள்ளது

போட்டோகிராபி என்பது இப்போது ரொம்பவும் எளிமையாக உள்ளது. முன்புபோல் ரொம்பவும் கஷ்டப்பட வேண்டியதில்லை. எல்லாமே ஆட்டோமேட்டிக் டிஜிடல் தொழில் நுட்பம். ஒரு கேமரா இருந்தால் போதும். ( குறிப்பு: பிலிம் ரோலில் இருக்கும் நான் எடுத்த பழைய படங்களை CD  ஆக மாற்ற நேரமும் காசும் அதிகம் ஆகும் என்பதனால் இங்கு இணைக்கவில்லை. Canon Powershot A800 இல் எடுத்த பல படங்கள் எனது பதிவுகளிலேயே உள்ளன. )   

( PHOTOS  THANKS TO  “ GOOGLE ” ) *National C-300EF கேமராவின் படம் மட்டும் என்னால் எடுக்கப்பட்டது)


 Monday 17 September 2012

அரவாணி என்ற பெயர்க் காரணம்.
நான் பள்ளிச் சிறுவனாக இருந்தபோது எங்கள் கிராமத்திற்கு சென்றபோது வித்தியாசமான ஒரு உறவினரைப் பார்த்தேன். சிறுவனான எனக்கு அவரின் பேச்சும் நடவடிக்கையும் வினோதமாக இருந்தன. ஆள் வாட்ட சாட்டமாக நல்ல உயரம். தலைக்கு கிராப்பு. ஆனால் மீசை வைத்துக் கொள்ள மாட்டார். பெரும்பாலும் வேட்டியும் கைவைத்த வெள்ளை பனியனும்தான். பனியன் மேல் ஒரு பெரிய துண்டை பெண்கள் மாராக்கு போடுவது போல் போட்டுக் கொள்வார். நெளிந்து நெளிந்து நடப்பார். குரலும் வித்தியாசமாக இருக்கும். கிராமத்திற்கு வெளியே சாமான்கள் வாங்கச் சென்றால், பெண்கள் குழந்தையை இடுப்பில் வைத்துக் கொள்வதைப் போல, ஒரு கூடையை வைத்துக் கொள்வார். கிராமத்தில் பெண்கள் மத்தியில் வீட்டுத் திண்ணைகளில் உட்கார்ந்து கொண்டு அரட்டை அடிப்பது அவர்கள் கூந்தலில் சிக்கல் எடுப்பது பேன் பார்ப்பது என்று இருப்பார். அவருக்கென்று ஒரு பெயர் இருந்தபோதும் ஊரில் எல்லோரும் அவரை பெயர் சொல்லி கூப்பிடுவதில்லை. அவரும் அதைப் பற்றி கவலைப்பட்டது கிடையாது. இந்த நிலையிலும் அவரை ஒரு சொந்தக்கார பெண் திருமணம் செய்து கொண்டார். குழந்தைகள் இல்லாததால் தம்பியின் குழந்தைகளை தன் பிள்ளைகளாக வளர்த்தார்.

திருநங்கை என்ற பெயர்:

தமிழ்நாட்டில் இந்து சமயத்தில் பல சீர்திருத்தங்களைச் செய்த பெரியவர். ஸ்ரீராமானுஜர். வைணவனாகப் பிறந்த அனைவரும் சமமானவர்களே,  இங்கு ஏற்றத்தாழ்வு கிடையாது என்று சொல்லி, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பூணூல் அணிவித்து அவர்களை திருக்குலத்தார் என்று அழைத்தார். அவர் திருக்குலத்தார் என்று முன்பு அழைத்த பெயரைப் போன்று இப்போது திருநங்கை என்ற பெயர் வந்துள்ளது.   முன்பு அரவாணிகள் என்றும் அலிகள்  என்றும் தமிழ்நாட்டில் அழைக்கப்பட்டவர்களை இப்போது திருநங்கைகள் என்று அழைக்கத் தொடங்கியுள்ளனர்..

அரவான்  கதை:

பஞ்சபாண்டவர்கள் நாடு நகரம் இழந்து வனவாசம் செல்கின்றனர். அப்போது அவர்களில் ஒருவனான அர்ச்சுனன் மட்டும் தீர்த்தயாத்திரை செல்லும் நிலை வருகிறது. அர்ச்சுனன் பல்வேறு இடங்களுக்குச் சென்று விட்டு கங்கைநதி உற்பத்தி ஆகும் இடத்திற்கு வந்து நீராடுகிறான். அப்போது அவனது அழகில் மயங்கிய உலூபி என்னும் நாகக்கன்னி அவனை இழுத்துக் கொண்டு நாகலோகம் சென்றுவிடுகிறாள். அர்ச்சுனனும் ஒரு காதல் மன்னன். அங்கு இருவருக்கும் திருமணம் நடைபெறுகிறது.  அங்கேயே இருவரும் வாழ்க்கை நடத்துகின்றனர். அப்போது அவர்கள் இருவருக்கும் பிறந்தவன்தான் இளவரசன் அரவான் . பின்னர் அர்ச்சுனன் அவர்கள் இருவரையும் நாகலோகத்தில் இருக்கச் செய்துவிட்டு தனது இருப்பிடம் அடைகிறான்.

பாண்டவர்கள் வனவாசம் முடிந்த பிறகு மீண்டும் தாங்கள் இழந்த நாடு நகரம் அடைய கௌரவர்களுடன் போர் செய்ய வேண்டியதாயிற்று. மகாபாரதப் போர் தொடங்கியதை கேள்விப்பட்ட, நாகலோகத்தில் இருந்த அரவான் தனது தந்தை அர்ச்சுனனோடு சேர்ந்து போர் செய்ய கிளம்புகிறான். அவனது தாய்  உலூபி அர்ச்சுனன் அழைத்தால் மட்டுமே அங்கு செல்ல வேண்டும் என்று அவனைத் தடுத்துவிட்டாள்.

எல்லோரும் எதிர்பார்த்த  பாரதப்போர் தொடங்குகிறது. போர் தொடங்குவதற்கு முன்னர் செய்ய வேண்டிய சடங்குகள் செய்கின்றனர். அந்நாளில் போரில் வெற்றிபெற காளிதேவியை வணங்கி அங்ககுறைபாடு இல்லாத ஒருவரை நரபலி கொடுப்பது வழக்கமாக இருந்தது. எனவே நாகலோகத்தில் இருக்கும் அர்ச்சுனனது மகன்  அரவான் தகுதியாவன் என்று அவனை அழைத்து விவரம் சொல்லுகின்றனர். அது கேட்ட அரவானும் தனது தந்தைக்காக தன்னை களப்பலியாக்கிக் கொள்ள சம்மதம் தெரிவிக்கிறான். அதற்கு இரண்டு வரங்கள் கேட்கிறான்.1. தனக்கு நரபலி கொடுக்கும் முன்னர் திருமணம் செய்து வைக்க வேண்டும். 2. இறந்த பின்பும் துண்டிக்கப்பட்ட தனது தலை போர் முழுவதையும் காணும் சக்தி வேண்டும் என்றும் கேட்கிறான். இதற்கு கிருஷ்ணனும் ஒத்துக் கொள்கிறான். முதல் நாள் திருமணம் செய்து கொண்டு அடுத்த நாள் மரணமடையப் போகும் ஒருவனை எந்த பெண்ணும் மணக்க முன் வரவில்லை. எனவே கிருஷ்ணனே பெண்ணாக மாறி அரவானை திருமணம் செய்து கொள்கிறார். அடுத்த நாள் களப்பலி ஆகிறான் அரவான். அவன் கேட்டபடி அரவானின் தலை பதினெட்டு நாட்கள் நடைபெற்ற பாரதப் போரினைக் காணுகிறது. இதனால்தான் அரவான் வழிபாட்டில் வெட்டுண்ட தலை மட்டும் இருக்கிறது.

வில்லிபுத்தூரார் எழுதிய வில்லிபாரதம் என்ற நூலில் அரவான் களப்பலி பற்றி சில பாடல்களில் சொல்லப்பட்டுள்ளது. வில்லிபாரதத்தில் அரவான் என்ற பாத்திரம் இராவான் என்று அழைக்கப்படுகிறது.

( காளி கோயில் முன்னர் இராவான் தன்னைப்  பலி கொடுத்தல் )

அவ் வரம் அவற்கு நல்கி, அத் தினத்து, அவ் இராவில்,
தெவ்வரை ஒளித்து, தங்கள் சென்ம தேயத்தில் சென்றார்;
மெய் வரு காளி முன்னர் மெய் உறுப்பு அனைத்தும் வீரன்
கொய்வரு நிலையில் கொய்து கொடுத்தனன் என்ப மன்னோ

                                             -  வில்லிபாரதம் (களப்பலியூட்டுச் சருக்கம்)

அரவாணி என்ற பெயர்:

பொதுவாகவே நமது நாட்டில் நாட்டார் வழக்கத்தில் மகாபாரதம், ராமாயணம் போன்ற கதைகளில் வரும் கதாபாத்திரங்களையும் இடங்களையும் இணைத்துச் சொல்லிக் கொள்ளும் வழக்கம் இருந்துள்ளது. உதாரணமாக பஞ்சபாண்டவர் ரதம் ( மகாபலிபுரத்தில் உள்ளது )  வாலி கண்டபுரம் ( பெரம்பலூர்),  பஞ்சவடி( புதுச்சேரி) முதலானவற்றை சொல்லலாம்.

ஆணாகிய கிருஷ்ணன் அரவானுக்காக ஒருநாள் பெண்ணாக மாறுகிறார். அவன் இறந்தவுடன் ஒரு மனைவி செய்ய வேண்டிய சடங்குகளைச் செய்கிறார். இங்கே கிருஷ்ணன் அரவானுக்காக எடுத்த வடிவம்தான் அரவானின் பெயரோடு சம்பந்தப்பட்டு அரவாணி என்று அழைக்கப் படுகிறது. அரவு, அரவம் என்றால் பாம்பு என்று பொருள். ( அரவு > அரவம் > அரவான் >அரவாணி)

மேலும் நாகவழிபாடு என்பது நமது நாட்டில் தொன்மையானது. அரவான் நாகலோகத்தில் வாழும் உலூபி என்னும் நாககன்னிகை மகன். அரவ இளவரசன் என்பதால் அரவான். அரவானை மணந்த மோகினி அரவாணி. எனவேதான் அரவாணிகள் தங்களை கிருஷ்ணரின் மறுவடிவமாக எண்ணி (விழுப்புரம் அருகே உள்ள) கூவாகம் என்ற ஊரில் உள்ள கூத்தாண்டவர் கோவிலில் சடங்குகள் செய்கின்றனர் 

மூடநம்பிக்கை:

மேலெழுந்தவாறு பார்க்கையில் களப்பலி என்பது ஒரு சடங்கு போன்று தெரிந்தாலும் உண்மையில் அது ஒரு நரபலியாகும். அதனை நிலைநிறுத்துவது போல் சிலர் அதனை தியாகம் என்று பேசியும் எழுதியும் வருகின்றனர். நரபலி என்பது ஒரு மூடநம்பிக்கை. நரபலி கொடுத்தால் புதையல் கிடைக்கும், நோய் தீரும், மற்றவர்கள் செய்து வைத்த பில்லி சூன்யம் தீரும், வெற்றி கிடைக்கும்  என்ற மூட நம்பிக்கையின் காரணமாக, இன்னும் சிலர் இதுமாதிரியான காரியங்களை செய்து வருகின்றனர். இது தவறு.
(ALL PICTURES :  THANKS TO  “ GOOGLE ”)


Sunday 9 September 2012

திருச்சி: புனித லூர்து அன்னை ஆலயம் (St. Lourdes Church)


திருச்சிராப்பள்ளி நகரின் மத்தியில், மெயின்கார்டு கேட் (MAINGUARD GATE) அருகே அமைந்துள்ளது புனித லூர்து அன்னை ஆலயம் (St. Lourdes Church ). இந்த ஆலயமும் இதன் வரலாறும் புனித ஜோசப் கல்லூரி (St. Josephs College )  வரலாறும்  வளாகங்களும் இணைநதே உள்ளன. இந்த ஆலயத்தின் எதிரே திருச்சி மலைக் கோட்டையும் தெப்பகுளமும் அமைந்துள்ளன. தெப்பகுளத்தின் கிழக்குக் கரையில், கிளைவ்ஸ் கட்டடம் (CLIVES BUILDING ) இருக்கும் இடத்தில் இருந்து இந்த ஆலயத்தினையும் தெப்பக்குள மண்டபத்தையும் ஒரு சேர மத நல்லிணக்கத்தோடு காணலாம்.

புனித  லூர்து அன்னை என்ற பெயர்:

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெர்னதெத் சூபிரூஸ் ( Bernadette Soubirous ) என்ற சிறுமி தனது சகோதரி மற்றும் தோழியுடன் அருகில் உள்ள காட்டிற்கு விறகு பொறுக்கச் சென்றாள். அப்போது மசபியேல் என்ற கெபி (குகை) அருகே சென்றபோது அன்னை மேரி காட்சி தந்தார். இந்த காட்சியானது பெர்னதெத்திற்கு மட்டுமே தெரிந்தது. அவளோடு சென்ற மற்ற இருவருக்கும் தெரியவில்லை. அதன் பிறகு தொடர்ந்து சில நாட்கள் அன்னை மேரி அந்த சிறுமியை அந்த இடத்திற்கு வரச் சொன்னார். அங்கு தனக்கு ஒரு ஆலயம் கட்ட வேண்டும் என்று அன்னை மேரி சொல்கிறார். ஒருதடவை அன்னை மேரியின் கட்டளையை ஏற்று அந்த இடத்தில் பெர்னதெத் மண்ணைத் தோண்டுகிறாள். அந்த இடத்தில் ஓர் நீருற்று உண்டானது. பின்னர் அது ஒரு ஓடையாக மாறிவிட்டது. இந்த அற்புதத்தைக் கேட்ட திருச்சபையினர் உண்மையைக் கண்டறிய விசாரணை செய்தனர். முடிவில் அங்கு பெர்னதெத் என்ற சிறுமிக்கு அன்னை மேரி காட்சி அளித்து அற்புதம் நிகழ்த்தியது உண்மையே என்று அறிவித்தனர். அதன் பிறகு மசபியேல் என்ற குகை அருகே ஒரு தேவாலயம் கட்டப்பட்டது. அந்த ஓடைநீர் புனித நீராக கருதப்பட்டது. ஆலயம் அமைந்த இடம் லூர்து நகர் என்று அழைக்கப்பட்டது. அன்னை மேரி சிறுமிக்கு முதன் முதல் காட்சி அளித்த நாள் 1858  ஆம் ஆண்டு பிப்ரவரி 11ந்தேதி ஆகும். ஆண்டுதோறும் இந்த நாளை கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் திருவிழாவாக கொண்டாடுகிறார்கள்.

திருச்சியில் கோட்டைப் பகுதியில் கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயம் கட்டத் தொடங்கியபோது இயேசு சபையில் பிரெஞ்ச்சு நாட்டைச்  சேர்ந்த இறைப் பணியாளர்களே அதிகம் இருந்தனர். அவர்கள் தங்கள் நாட்டில் (பிரான்ஸ்) காட்சி தந்த லூர்து அன்னையின் பெயரையே இந்த தேவாலயத்திற்கும் சூட்டினார்கள். “ CHURCH OF  OUR LADY OF  LOURDES “


தேவாலயத்தின் வரலாறு:

இப்போது திருச்சியில் இருக்கும் புனித ஜோசப் கல்லூரியானது ஆரம்பத்தில் நாகப்பட்டணத்தில் இருந்தது. பின்னர் அங்கிருந்து 1883 ஆம் ஆண்டு திருச்சிக்கு மாற்றப் பட்டது. ஆரம்பத்தில் கல்லூரியானது கிளைவ்ஸ் கட்டடத்தில் இயங்கியது. அப்போது திருச்சியில் கோட்டைப் பகுதியில் இருந்த பெல்லார்மின் ஹால்தான் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் வழிபாட்டு இடமாக இருந்திருக்கிறது.. அருள் தந்தை ஜோசப் பெய் என்பவர்  1884 ஆம் ஆண்டு முதல் 1893 வரை கல்லூரி முதல்வராக இருந்தார். அவர் இந்த ஆலயம் எழுப்புவதில் மிகுந்த ஆர்வம் கொண்டு இருந்தார். அவர் காலத்தில் தேவாலயம் கட்டுவதற்கு திட்டம் போடப்பட்டு  பணி தொடங்கப்பட்டது. அவர் திருநெல்வேலியைச் சேர்ந்த தனம் சவரிமுத்து மேஸ்திரியார் என்பவரிடம் இந்த பணியை ஒப்படைத்தார். அப்போது திருச்சி ஆயராக இருந்த ஜான் மேரி பார்த் என்பவர் 1890 ஆம் ஆண்டு ஜூன் 26 ஆம் தேதி , தேவாலயத்தின் அஸ்திவாரத்திற்கான முதல் கல்லை ஆசீர்வாதம் செய்து எடுத்து வைத்து தேவாலயம் கட்டும் பணியை தொடங்கி வைத்தார். 1893 முதல் 1903 வரை ஜோசப் கல்லூரியின் முதல்வராக இருந்த அருள் திரு லியோ பார்பியர் அவர்கள் தேவாலயம் கட்டும் பணியில் முழுமையாக ஈடுபட்டார்.  1890 இல் தொடங்கப்பட்ட தேவாலய பணியானது 1898- ஆம் ஆண்டு வரை நடைபெற்றது. பிரதான கோபுரவேலை மட்டும் நான்கு ஆண்டுகள் தடைபட்டு, பின்னர் 1903 ஜனவரி தொடங்கி 1910- டிசம்பரில் முடிந்தது.

தேவாலயத்தின் அமைப்பு:

 

   தேவாலயம் கோதிக் கட்டடக்கலை (Gothic architecture) அமைப்பில் உருவானது. ( கோதிக் கட்டடக்கலை என்பது 12-ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் பிரான்ஸ் நாட்டில் உருவானது. பெரும்பாலும்  தேவாலயங்கள், கல்லறைகள், கோட்டைகள், அரண்மனைகள இந்த அமைப்பு முறையினால் கட்டப்பட்டன.) இந்த கோதிக் கட்டடக் கலையினைப் பற்றிய பயிற்சிகள் , ஆலயத்தை கட்டும் பணியை மேற்கொண்ட தனம் சவரிமுத்து மேஸ்திரியாருக்கும் மற்றவர்களுக்கும் சொல்லித் தரப்பட்டன. இதன் மேற்பார்வையை அருள்தந்தை பெர்னார்டுசெல் பார்த்துக் கொண்டார்.  தேவாலயம் கட்டுவதற்கு தேவையான கற்கள் கல்லூரியின் உள்ளே இருந்த கல் குவாரியில் இருந்தே வெட்டி எடுக்கப்பட்டன. சுடு சிற்பங்கள் இங்கிருந்த களி மண்ணாலேயே செய்யப்பட்டன. கட்டட அமைப்பில் பிரான்ஸ்சில் உள்ள லூர்து நகர் தேவாலயம் போன்றே இந்த திருச்சி புனித லூர்தன்னை தேவாலயமும் கட்டப்பட்டது என்பது சிறப்புச் செய்தியாகும்.தேவாலயத்தின் உள்ளே நுழையும் போதே நம்மை அந்த பிருமாண்டமான வாயில் சிலுசிலுவென்று வீசும் காற்றோடு வரவேற்கும். கோயிலின் உள்ளே நன்கு விசாலமான அமைப்பு. அண்ணாந்து பார்க்க வைக்கும் மேற்கூரையிலும் பக்கவாட்டிலும் வண்ண ஓவியங்கள். பெரும்பாலானவை கண்ணாடி ஓவியங்கள். வெளிநாட்டிலிருந்து வரும் மேல்நாட்டவர்கள் இந்த ஆலயத்தின் அழகினை ரசித்து ரசித்து படம் எடுப்பதைக் காணலாம். ஆலயத்தின் நூற்றாண்டு விழா (1896 1998) இன்றைக்கு 14 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தது. அப்போது தேவாலயம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது.

இப்போதும் திருச்சிக்கு கம்பீரம் சேர்க்கும் விதமாக புனித லூர்து அன்னை ஆலயம் (St. lourdes church) இருந்து வருகிறது.

வழிபாட்டு நேரம்:

வார நாட்கள் : காலை: 5.30 a.m & 6.30 a.m
                மாலை: 6.30 p.m
ஞாயிறு       : காலை: 5.15 a.m, 6.15 a.m & 7.30 a.m
                              மாலை: 6.30 p.m

குறிப்பு: மேலே உள்ள அன்னை மரியாள் படம் தவிர , மற்ற தேவாலயப் புகைப் படங்கள் யாவும் என்னால் இன்று (09.09.12) காலை " Canon Power Shot A800 " என்ற Digital Camera மூலம் எடுக்கப்பட்டவை.

நன்றியுடன் (கட்டுரை எழுத உதவியவை) :
1.புனித லூர்தன்னை ஆலயம் நூற்றாண்டு விழா மலர்
 (1896 1998)
      2.. www.sjctni.edu
      3. Wikipedia, the free encyclopedia -  English
      4. Wikipedia, the free encyclopedia -  Tamil
   5. பாரம்பரியம்: நூற்றாண்டைக் கடந்த ஆலயம்!                    .                அ. சத்தியமூர்த்தி - 29 May 2011 DINAMANI e-paper

இணைப்பு:


( PHOTO THANKS TO   Glyn John Willett  ( http://members.virtualtourist.com )
   

Tuesday 4 September 2012

திருச்சியும் பதிவர் வை.கோபால கிருஷ்ணனும்ஒரு காலத்து நிகழ்ச்சிகளை வரலாறாக எழுதும்போது அப்போது எழுதப்பட்ட நூல்களையும் கட்டுரைகளையும் செய்தித் தாள்களையும் ஆவணங்களாக  எடுத்துக் கொள்ளலாம். இது வலைப் பதிவர்கள் காலம். திருச்சியை மையப் படுத்தியே நிறைய பதிவுகளை ( கட்டுரைகள், கதைகள் ) திருச்சியைச் சேர்ந்த திரு. வை.கோபாலகிருஷ்ணன் (Retired Accounts Officer (CASH) BHEL Trichy  அவர்கள் தந்துள்ளார். ( http://gopu1949.blogspot.in ) இதில் மிகைப் படுத்துதல் எதுவும் இல்லை. குறிப்பாக அறுபது, எழுபதுகளில் இருந்த அக்கால திருச்சியைப் பற்றி அவர் எழுதிய விதமே இதற்கு சாட்சி.  

நடுத்தர மக்கள் நிலைமை:

மின்விளக்கே அதிகம் இல்லாத, அந்தக்கால திருச்சி வடக்கு ஆண்டார்தெரு.அங்கிருந்த பெரிய அரசமரம், எதிரில் உள்ள ராமா கபே, அருகில் உள்ள மதுரா லாட்ஜ் தொடங்கி, கீழ ஆண்டார் தெரு முடிய, மலைக்கோட்டை பகுதியில் நிறைய குடியிருப்புக்கள். எல்லாம் நாட்டு ஓடு வேய்ந்தவை. அங்கிருந்த ஒண்டு குடித்தனங்களை, குறிப்பாக நடுத்தர சமூக மக்களை  நினைவில் வைத்து ‘’ மறக்க மனம் கூடுதில்லையே! ’’  என்ற கதையில் VGK அவர்கள்  எழுதியுள்ளார்.. http://gopu1949.blogspot.com/2011/06/1-of-4_19.html

// அப்போது எனக்கு அலைபாயும் 21 வயது. மணி, ராம்கி, மாது, ரத்தினம், சேகர், பாபு, வெங்கிட்டு என பல நண்பர்கள். தெரு விளக்கடியில் இரவு 10 மணிக்குமேல் கூடி பல்வேறு விஷயங்களை விவாதித்துவிட்டு பிறகே படுக்கச்செல்வோம். 

டி.வி., கம்ப்யூட்டர், செல்போன் என்ற எந்த விதமான குறுக்கீடுகளும் இல்லாத காலம். வாசக சாலையில் வாங்கி வரும் புத்தகங்கள், மைதானம் சென்று விளையாட்டு, ரேடியோ, சினிமா, சிலசமயம் சீட்டுக்கச்சேரி தவிர, இது போன்ற ஆருயிர் நண்பர்களின் நேருக்கு நேர் சந்திப்பு தான் மிகச்சிறந்த பொழுதுபோக்கு. 

அவரவர் வீட்டின் ஆயிரம் சமூக, பொருளாதார பிரச்சனைகள் பற்றி அலசுதல், நடிகர்திலகம் சிவாஜி, மக்கள்திலகம் எம்.ஜி.ஆர்., படங்கள் பற்றிய விமர்சனங்கள், இடையிடையே கட்டிளம் காளை வயதில் தானே வந்துபோகும் எங்களின் ஏக்கங்களும், ஒரு சிலரின் காதல் அனுபவங்களும் எனப்பேசப்பேச நள்ளிரவு வெகு நேரம் ஆகி பிரிய மனமில்லாமல் பிரிந்து சென்று அவரவர் கூட்டை அடைவோம். 
.
எல்லோருமே படித்து, ஏதோ ஒரு கிடைத்த வேலையில் இருந்துகொண்டு, நிரந்தர வருவாய்க்கான வேலை வாய்ப்பைத்தேடி அலைந்த நேரம் அது. எல்லோருமே வறுமைக்கோட்டுக்கு கீழேயுமில்லாமல், மேலேயும் இல்லாமல் கோட்டை ஒட்டியேயுள்ள, ஓட்டு வீடுகளில் ஒண்டிக்குடித்தனமாக இருந்த நேரம் அது. 

எங்கள் குடியிருப்பில் மிகச்சிறியதாக சுமார் ஐம்பது ஓட்டு வீடுகள். அவ்வாறான குடியிருப்புப் பகுதிகள் ஸ்டோர் என்று அழைக்கப்படும். எங்கள் வீட்டின் உட்புறத்தை விட அதிகமான புழங்கும் இடங்கள் எங்கள் வீடுகளைச்சுற்றி இருக்கும்.

நிம்மதியாகப் படிக்கவும், படுக்கவும், குளிக்கவும் பிரைவசி இல்லாத அந்தக்குடியிருப்பில் காதலில் கசிந்துருக வாய்ப்புகள் மிகவும் குறைவு. பள்ளிக்கூடம், கடைத்தெரு, கோயில்கள், பொதுக்குழாயடி, பொதுக்கிணற்றடி, பொதுக்கழிப்பிடம் செல்லும் பாதை என பொதுவான இடங்களிலே தான், ஒருவரை ஒருவர் மின்னல் போல் பார்த்து மறைவோம்.

அதற்குள் பல பொதுமக்களின் கழுகுப்பார்வைகள் எங்களை நோட்டமிடும். இருப்பினும் அதில் ஒரு நொடிப்பொழுது, மின் அதிர்வுபோல ஒருவித சுகானுபவமும் ஏற்படுவது உண்டு. 

பலர் வீடுகளில் மின் விளக்கே கிடையாது. கேஸ் அடுப்பும் வராத காலம் அது. சிம்னி, அரிக்கேன் லைட், திரி ஸ்டவ்,  பம்ப் ஸ்டவ், கரி அடுப்பு, விறகு அடுப்பு, ரம்பத்தூள் அடுப்பு என்று அவரவர் ஏதேதோ உபயோகிப்பார்கள்.

ஒரு பழைய பாடாவதி சைக்கிளோ, ஒரு கயிற்றுக்கட்டிலோ, ஒரு மர பீரோவோ இவற்றில் ஏதாவது ஒன்று வைத்திருப்பவர் அந்தக்குடியிருப்பில் சற்று வசதியானவர் என்பதை வெளிப்படுத்தும் அளவுகோலாக இருந்தது.

அந்த ஸ்டோரில் இறைக்க இறைக்க நீர் ஊறக்கூடிய, என்றுமே வற்றாத ஒரு பெரிய பொதுக்கிணறு. அந்தக்கிணற்றைசுற்றி பாறாங்கற்கள் பதிக்கப்பட்ட ஜில்லென்ற சமதரை. இரவுப்பொழிதில் கிணற்றடியிலும், கிணற்றைச்சுற்றியுள்ள சிமெண்ட் தரையிலுமாக, நிறைய ஆண்கள் கையில் ஒரு விசிறியுடன், துண்டை விரித்துப்படுத்திருப்பார்கள். 

இவ்வாறு படுத்திருப்பவர் பலரின் இருமல், தும்மல், ஏப்பம், கொட்டாவி, குறட்டை முதலியவற்றால், அந்தக்குடியிருப்பில் திருட்டு பயமே கிடையாது. திருடிச்செல்லும் அளவுக்கு விலை உயர்ந்த பொருட்கள் என்று எதுவும் யாரிடமும் கிடையாது. நிம்மதியான வாழ்க்கை. 

இரவு நேரத்தில் கடும் குளிரோ, மழையோ வந்தால் மட்டுமே வீட்டுலுள்ள பெண்களுடன் ஆண்களும் கோழிக்குஞ்சுகள் போல அட்ஜஸ்ட் செய்து தங்கும்படியாக நேரிடும்.

இவ்வாறு கிணற்றடி போன்ற பொது இடங்களில் படுப்பவர்கள், விடிவதற்கு முன்பாக அனைவரும் வாரிச்சுருட்டிக்கொண்டு எழுந்து விடுவார்கள். அவர்களில் பலரும், அதிகாலையில் கிணற்று நீரில் குளித்துவிட்டு அவரவர்கள் பிழைப்புக்குச் செல்ல வேண்டும். //

மேலே, அப்போதைய அங்கிருந்த  நடுத்தர மக்களது சமூக நிலைமை, பெண்களுக்கு இருந்த கட்டுப்பாடுகள், (அப்போதைய காலகட்டத்தில் ஒரு பெண்ணிடம் ஒரு ஆண் அவ்வளவு சுலபமாகப் பேசிவிட முடியாது) இவற்றை இயல்பாகச் சொல்லி அந்த காலத்திற்கே அழைத்துச் செல்கிறார்.

திருச்சி நகரம்:
 
 
ஊரைச் சொல்லவா பேரைச் சொல்லவா என்ற கட்டுரையில் திருச்சி மலைக் கோட்டை பற்றியும் , அருகே உள்ள கடைத் தெருக்களைப் பற்றியும் கடைகளைப் பற்றியும் விவரிக்கிறார்.

 // இந்த மலைக்கோட்டைக்கு அருகேயுள்ள சின்னக்கடைத்தெரு, பெரியகடை வீதி, NSB Road (நேதாஜி சுபாஷ் சந்த்ரபோஸ் ரோடு) ஆகியவற்றில் கிடைக்காத தங்கமோ, வைரமோ, வெள்ளியோ, பித்தளைப்பாத்திரங்களோ, வெங்கலப்பாத்திரங்களோ, அலுமினிய, எவர்சில்வர், பிளாஸ்டிக் சாமான்களோ, ஜவுளிகளோ, மருந்துகளோ, நாட்டு மருந்துகளோ, ஆயுர்வேத மருந்துகளோ, செயற்கை வைரங்களோ, இதர மளிகை காய்கறி, கனி வகைகளோ, சாப்பாடோ, டிபனோ, காஃபியோ, டீயோ. தீனியோ, கூல் டிரிங் ஐஸ்க்ரீமோ, பாய் படுக்கை தலையணி, மெத்தை, ஃபர்னிச்சர் சாமான்களோ உலகில் வேறு எங்குமே கிடைக்காது என்று தலையில் அடித்து சத்தியம் செய்யலாம்.  அந்த அளவுக்கு குடும்பத்திற்கு வேண்டிய அனைத்துப்பொருட்களும் மொத்தமாகவும் சில்லரையாகவும் கிடைக்கும் வணிக வளாகங்கள் அனைத்தும் நிறைந்த பகுதியாகும்.


சுடிதார் வாங்கப் போறேன்என்ற கதையில் திருச்சியிலுள்ள ஒரு ஜவுளிக் கடையின் அமைப்பை அப்படியே விவரித்து மனக்கண் முன் நிறுத்துகிறார். http://gopu1949.blogspot.in/2011/04/1-of-3.html

//நான் உள்ளே நுழைந்த அது, திருச்சியிலேயே மிகப்பெரிய ஜவுளிக் கடல். கண்ணைக்கவரும் ரெடிமேட் ஆடைகள். பகலா இரவா என பிரமிக்க வைக்கும் மின் விளக்குகள் ஜொலிக்கின்றன.  

முழுவதும் குளுகுளு வென்று ஜில்லிட்டுப்போக வைக்கும் .ஸி க் கட்டடம். கடையின் உள்ளே நுழையும் போதே வருவோர் தலையில் [ஏற்கனவே உள்ள ஒரு சில முடிகளையும் பறக்கச் செய்யும் புயலென] ஜில் காற்று வேகமாக அடிக்கும்படி ஒரு சிறப்பு ஏற்பாடு.  வேறு கடைகளுக்குப் போய் விடாமல் இங்கேயே வாங்கி விட வேண்டும் என்று ப்ரைன் வாஷ் செய்யவதற்காகவே இது போல வைத்திருப்பார்களோ என்னவோ!

எங்கு பார்த்தாலும் ஜவுளி வாங்க வந்துள்ள மக்கள் கூட்டம்.  அவர்களின் ரசனைக்குத் தீனி போட தயாராக இருந்த விற்பனைப் பெண்கள். //

மேலும். திருச்சி மலை வாசலில் T.A.S ரத்தினம் பட்டணம் பொடிக் கடை என்று மூக்குப் பொடிக் கடை உள்ளது. சின்ன வயதில் அந்த பொடிக் கடைக்கு என்னை எங்கள் அப்பா அழைத்துச் சென்று இருக்கிறார். ஆசிரியர்கள், அரசாங்க அலுவலர்கள், மற்றவர்கள் என்று கடை வாசலில் எப்போதும் குறிப்பாக மாலை வேளையில் கும்பல் இருக்கும். அந்த பீங்கான் ஜாடிகளைப் பற்றியும், நீண்ட சிறிய கரண்டிகளைப் பற்றியும், அந்த கரண்டிகளில் ஒன்றில் ஓசிப் பொடி கொடுப்பதைப் பற்றியும் வந்து விட்டார் வ.வ.ஸ்ரீ என்ற கதையில் சுவையாகச் சொல்லுகிறார்.

//. பொடி போடும் என் அப்பாவுக்கு நான் தான் அந்தக்காலத்தில் பொடி வாங்கி வருவேன்.  அவருக்கு திருச்சி மலைவாசலில் தேரடி பஜாரில் மேற்குப்பார்த்த முதல் கடையில் தான் டி.ஏ.எஸ்.  ரத்தினம் பட்டணம் பொடி’  வாங்கி வரணும். அங்கு எப்போதும் கமகமவென்று ஒரே பொடிமணமாக இருக்கும். 

சோம்பலில், வேறு கடைகளில் நான் பொடி வாங்கி வந்தால், அதன் காரசார மணம் குணம் முதலியவற்றை ஆராய்ச்சி செய்து விட்டு, என் மூஞ்சியிலேயே தூவி விடுவார். அவ்வளவு கோபம் வந்துவிடும் அவருக்கு. 

அந்த மலைவாசல் கடையில், பருமனான ஒருவர் முரட்டு மீசையுடன் பனியன் மட்டும் போட்டுக்கொண்டு கம்பீரமாக அமர்ந்திருப்பார்.  ஒரு பெரிய பத்துபடி டின்னிலிருந்து புதுப்பொடியாக ஒரு பெரிய கரண்டியில் எடுத்து, அங்குள்ள ஜாடிகளில் (ஊறுகாய் ஜாடி போல பீங்கானில் இருக்கும்) போட்டு வைத்துக்கொள்வார். 

அதன் பிறகு அந்த ஜாடிகளிலிருந்து கரண்டியால் எடுத்து தராசில் தங்கம் போல நிறுத்து, பதம் செய்யப்பட்டு, கத்தரியால் வெட்டப்பட்ட, வாழைப்பட்டைகளில், பேரெழுச்சியுடன் பேக் செய்து, வெள்ளை நூலினால் ஸ்பீடாகக் கட்டிக்கட்டிப் போட்டுக்கொண்டே இருப்பார், 10 கிராம், 50 கிராம், 100 கிராம் என்று பல எடைகளில்.   

அவர் கட்டிப்போடப்போட, அவர் எதிரில் வெள்ளைவெளேரென்ற கதர் சட்டையுடன், கோல்ட் ஃப்ரேம் கண்ணாடி, தங்க மோதிரங்கள், தங்கத்தில் புலி நகம் கட்டிய மைனர் செயின் முதலியன அணிந்த, மிகவும் குண்டான முதலாளி ஒருவர் அவற்றை உடனுக்குடன் விற்று, கைமேல் காசு வாங்கிப் போட்டுக்கொண்டே இருப்பார்.  கடை வாசலில் எப்போதுமே, (தற்கால ரேஷன் கடைகள் போல), கும்பலான கும்பல் இருந்து வரும். மொத்த வியாபாரம், சில்லறை வியாபாரம் என பொடி வியாபாரத்தில் கொடிகட்டிப் பறந்து வந்தனர் அவர்கள்.  

அதை விட வேடிக்கை என்னவென்றால், பொடிப்பயல்கள் முதல் பெரியவர்கள் வரை, நடுநடுவே ஓஸிப்பொட்டிக்கு கைவிரலை நீட்டுபவர்களுக்கெல்லாம், இலவசப்பொடி வழங்கப்பட்டு வந்ததே அந்தக்கடையின் தனிச்சிறப்பு.   

ஒரு அடி நீளத்திற்கு மேல் நீண்ட ஒரு மெல்லிய இரும்புக்குச்சிபோல ஒரு கரண்டி வைத்திருப்பார்கள்.   அதன் கொண்டைப்பகுதியில் ஒரு 10 சிட்டிகை மட்டும் பொடி பிடிக்கும் அளவு குழிவான பகுதி இருக்கும்.  பொடி ஜாடிக்குள் அதை நுழைத்து, அடிக்கடி 5  நிமிடங்களுக்கு ஒரு முறை வீதம், வெளிப்பக்கம் நிற்கும் வாடிக்கையாளர்களை நோக்கி அந்த இரும்புக்குச்சி போன்ற கரண்டியை நீட்டுவார்கள்.   அதே நேரம் கோவிலில் சுண்டலுக்கு பாய்வது போல அங்கு நிற்கும் அனைவரும், தங்கள் விரலை ஒரு வித நேச பாசத்துடன், அந்த மிகச்சிறிய கரண்டிக்குள் விட்டு,  பொடியை எடுத்துக்கொண்டு நுகர்ந்து மகிழ்வார்கள்.  இழுக்க இழுக்க இன்பம் அடைவார்கள். அந்தக் காலத்தில் அதுபோல இலவசப்பொடியை நுகர ஆரம்பித்த நுகர்வோர்களில் 12 வயதே ஆன நானும் ஒருவன்.//

திருச்சியில் உள்ள பள்ளிகளில் நேஷனல் உயர்நிலைப் பள்ளி பழமையான ஒன்று.  தான் படித்த இந்த உயர்நிலைப் பள்ளி  பற்றியும் மலரும் நினைவுகளாக. மீண்டும் பள்ளிக்குப் போகலாம் (தொடர் பதிவு)என்ற தலைப்பில் எழுதியுள்ளார். இதில் அவர் படித்த காலத்தில் இருந்த பள்ளியின் சூழ்நிலை, ஆசிரியர்கள், நண்பர்கள் என்று நகைச் சுவையாகவும் அலுப்பு தட்டாமலும் விவரிக்கிறார். நானும் இந்த பள்ளியில்தான் படித்தேன்..http://gopu1949.blogspot.in/2012/03/1.html


// அந்தக்காலத்தில் நான் படித்த இந்த தேசியக்கல்லூரி உயர்நிலைப் பள்ளியின் மிகப்பெரிய விளையாட்டு மைதானத்தில் தான், சேங்காலிபுரம் ப்ரும்மஸ்ரீ அனந்தராம தீக்ஷதர், தூப்புல் ஸ்ரீ லெக்ஷ்மி நரசிம்மாச்சாரியார், திருமதி சிவானந்த விஜயலக்ஷ்மி, திரு. கிருபானந்த வாரியார், புலவர் திரு. கீரன் போன்ற மிகப் பிரபலமான உபன்யாசகர்களால் புராணக்கதைகள் அடிக்கடி சொல்லப்படும். //

பள்ளிக்கூடத்து வாசலில் விற்ற தின்பண்டங்களைப் பற்றியும் ந்மது நாக்கு சப்பு கொட்டும் வண்ணம் சொல்கிறார்

//பள்ளிக்கூட வாசலில் குச்சி ஐஸ், எலந்தவடை, அரிநெல்லிக்காய், சீத்தாப்பழம், எலந்தைப்பழம், நவாப்பழம், கலாக்காய், கலாப்பழம், சுட்ட சோளக்கருதுகள், வேர்க்கடலை, பஞ்சு மிட்டாய் என என்னென்னவோ விற்பார்கள்.சற்று சுகாதரக்குறைவாக இருப்பினும் வசதியுள்ள பல  மாணவர்களும் அவற்றை விரும்பி வாங்கிச் சாப்பிடுவார்கள்.

மற்றொருவர் ஒரு நாலு சக்கர சைக்கிள் வண்டியை நிறுத்தி வைத்துக்கொண்டு, அதைச்சுற்றிலும், சர்பத் பாட்டில்களாக அடுக்கி வைத்திருப்பார். மரத்தூளுடன் இருக்கும் பெரிய பாறை போன்ற ஐஸ்கட்டிகளை, தண்ணீர் ஊற்றி அலம்பிவிட்டு, அதை அப்படியே கேரட் சீவுவது போல அழகாகச் சீவி, சீவிய தூள்களை ஒரு கெட்டித்துணியில் பிடித்து சேகரித்து, அந்த ஐஸ் தூள்களை ஒரு கெட்டிக்குச்சியில் ஒரே அழுத்தாக அழுத்தி, கலர் கலராக ஏதேதோ சர்பத்களை அதன் தலையில் தெளித்து, கும்மென்று பெரியதாக பஞ்சுமிட்டாய் போல ஆக்கித் தருவார். //


திருச்சி கோயில்கள்:

திருச்சி ஒரு அமைதியான வரலாற்றுப் புகழ் உள்ள நகரம். ஊருக்குள்ளும் வெளியேயும் நிறைய கோயில்கள். அந்த கோயில்களைப் பற்றியும் நன்றாக எழுதியுள்ளார்.

திருச்சி தெப்பகுளம் அருகே வாணபட்டறை தெரு உள்ளது. ரொம்பவும் குறுகலான வளைந்த சாலைகள் கொண்டது. அந்த தெருவில் மாரியம்மன் கோயில் ஒன்று உள்ளது. ஆண்டுதோறும்
தேரோட்டம் நடைபெறும். அந்த நிகழ்ச்சியை தாயுமானவள் என்ற சிறுகதையில் அழகாகச் சொல்கிறார்.

//திருச்சி தெப்பக்குளம் வாணப்பட்டரைத்தெரு மாரியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா. மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் மலையைச்சுற்றியுள்ள நான்கு பெரிய வீதிகளிலும், மழை பெய்ததுபோல, வாடகைக்கு எடுத்த முனிசிபல் லாரிகள் மூலம் காவிரி நீர் பீச்சப்பட்டு, கலர் கலராகக் கோலங்கள் போடப்பட்டுள்ளன.   

ஆங்காங்கே மாவிலைத் தோரணங்களுடன் தண்ணீர் பந்தல்கள். பானகம், நீர்மோர், உப்புடன் பாசிப்பருப்பு கலந்த வெள்ளரிப் பிஞ்சுக்கலவை என ஏதேதோ பக்தர்களுக்கும், பசித்துக்களைத்து வருபவர்களுக்கும் இலவச விநியோகங்கள் செய்யப்பட்டு வருகின்றன. 

வடக்கு ஆண்டார் தெருவின் மேற்கு மூலையில், தெருவோரமாக உள்ள பிள்ளையார் கோயில் வாசலில், பெரிய பெரிய அண்டாக்களிலும், குண்டான்களிலும், கஞ்சி காய்ச்சப்பட்டு ஏழைபாழைகளுக்கு அன்னதானம் செய்ய ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

வேப்பிலைக்கொத்துடன் தீச்சட்டிகளைக் கையில் ஏந்தி, மஞ்சள் நிற ஆடையணிந்து மாலையணிந்த மங்கையர்க் கூட்டத்துடன், மேள தாளங்கள்,கரகாட்டம், காவடியாட்டம், வாண வேடிக்கைகள் என அந்தப்பகுதியே கோலாகலமாக உள்ளது. எங்கும் மக்கள் கூட்டம் கூட்டமாக! //


முன்பு சொன்ன ஊரைச் சொல்லவா பேரைச் சொல்லவா  என்ற கட்டுரையில் திருச்சி மலைக் கோட்டையில் உள்ள தாயுமானவர், உச்சிப் பிள்ளையார் கோயில்களைப் பற்றியும் கீழே உள்ள நந்தி கோயிலைப் பற்றியும் சொல்கிறார்.

// ஊரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலும், ஸ்ரீ சுகந்தி குந்தலாம்பாள் ஸமேத ஸ்ரீ கல்யாண மாத்ருபூதேஸ்வரர் கோயிலும், அதன் அழகிய தெப்பக்குளமும், அதன் மாபெரும் நந்தி கோயிலும், அடிவாரத்தில் படிவாசல் பிள்ளையார் என்று செல்லமாக அழைக்கப்படும் ஸ்ரீ மாணிக்க விநாயகர் சந்நதியும் மிகவும் பிரபலமானவை.  [இந்த சிவன்கோயிலை தூய தமிழில்அருள்மிகு மட்டுவர் குழலம்மை உடனுறை அருள்மிகு தாயுமானவர் கோயில்என்று அழைக்கிறார்கள்// //

மற்றும் திருச்சி நகருக்கு வெளியே இருக்கும் கோயில்களைப் பற்றியும் , இந்த பதிவில் சொல்லுகிறார்.  ஏழைப் பிள்ளையார் “ என்ற பதிவில், திருச்சி மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார் கோயில் பற்றியும், கீழே உள்ள வடக்கு ஆண்டார் தெரு, கிழக்கு ஆண்டார் தெரு, சின்னக் கடை வீதி, NSB ரோடு, நந்தி கோயில் தெரு என்று வலம் வந்து அங்குள்ள எல்லா பிள்ளையார் கோயில்களைப் பற்றியும் குறிப்பிடுகிறார்.


//திருச்சியில் மிகப்பிரபலமான உச்சிப்பிள்ளையார் மற்றும் தாயுமானவர் மலையைச்சுற்றி தேரோடும் நான்கு வீதிகள் உண்டு. உச்சிப்பிள்ளையார் மற்றும் தாயுமானவர் கோயிலின் பிரதான நுழைவாயில் தெற்கு நோக்கி அமைந்திருக்கும். 

அந்த பிரதான நுழைவாயில், அந்த மிகப்பெரிய தெருவின் மத்தியில் அமைந்திருப்பதால், நுழைவாயிலை நோக்கி நின்றால் நம் வலதுகைப்பக்கத்தை [கிழக்குப்பக்கத்தை] அந்தக்காலத்தில் சின்னக்கடை வீதி என்று அழைப்பார்கள், இன்று அங்கு சின்னக்கடைகளே ஏதும் கிடையாது என்பது போல உலக அளவில் பிரபலமான ஆலுக்காஸ் நகைக்கடையும், மற்றும் கோபால்தாஸ் போன்ற தங்க வைர நகைக்கடைகளும், ஜவுளிக்கடைகளுமாக மாறிவிட்டது.. 

அதேபோல கோயிலின் பிரதான நுழைவாயிலை நோக்கி நின்றால் நம் இடது பக்கத்தை [மேற்குப்பக்கத்தை] அந்தக்காலத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஷ் (NSB) ரோடு என்று அழைப்பார்கள். இன்று அந்தத்தலைவரின் பெயர் சொல்லி யாராவது வெளியூர் ஆசாமிகள் விசாரித்தால், அந்தத்தெருவை அடையாளம் காட்டுபவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். 

அந்த அளவுக்கு சாரதாஸ்என்ற ஜவுளிக்கடலும், மங்கள் and  மங்கள் என்ற நகை மற்றும் பாத்திரங்கள் கடலும், ரத்னா ஸ்டோர்ஸ் என்ற மிகப்பெரிய பாத்திர வியாபாரக்கடலும் தங்கள் கடல் அலைகளை தொடர்ந்து மோதிமோதி, கடற்கரை போல மக்களைக் கவர்ந்து இழுத்து வருகின்றன.

தேரோடும் தெற்கு வீதி [சின்னக்கடை வீதி மற்றும் NSB Road]

(1) உச்சிப்பிள்ளையார் [கிழக்கு நோக்கி அமர்ந்திருக்கிறார்]
(2) கீழே ஸ்ரீ மாணிக்க விநாயகர் [கிழக்கு நோக்கி அமர்ந்திருக்கிறார்]
(3) கிரிப்பிரதக்ஷணமாக வந்தால் தென் மேற்கு மூலையில் ஸ்ரீ சங்கடஹர கணபதி [தெற்கு நோக்கி அமர்ந்திருக்கிறார்]

தேரோடும் மேற்குவீதி 

இந்த மேற்கு வீதி நந்தி கோயில் தெரு என்று அழைக்கப்படுகிறது. இங்கு தான் தாயுமானவர் கோயிலுக்குச் சொந்தமான பிரும்மாண்ட நந்தியும், அழகிய தெப்பக்குளமும் அமைந்துள்ளது. பிரபலமான ஸ்ரீ ஆனந்தவல்லி ஸமேத ஸ்ரீ நாகநாதர் ஸ்வாமி கோயிலின் ஒரு நுழைவாயிலும் இதே தெருவில் அமைந்துள்ளது.  இந்தத்தெருவினில் நிறைய வணிக வளாகங்களும், வங்கிகளும் அமைந்துள்ளன.

(4) இந்த பிரும்மாண்ட நந்தி கிழக்கு முகமாக அமைந்திருக்க, அதன் வால்புறம் மேற்கு நோக்கி ஹனுமனுக்கும், பிள்ளையாருக்குமாக இரண்டு தனித்தனி கோயில்கள் அருகருகே அமைந்துள்ளன. இது தான் நாலாவது பிள்ளையார்.

தேரோடும் வடக்கு வீதி

இதுவடக்கு ஆண்டார் தெருஎன்று அழைக்கப்படுகிறது.  பெரும்பாலும் குடியிருப்புகள் உள்ள பகுதி. இந்தத்தெருவில் மட்டும் நான்கு பிள்ளையார் கோயில்கள் உள்ளன. எல்லாமே தெற்கு நோக்கியுள்ள பிள்ளையார்கள்.

(5) வடமேற்கு மூலையில் அரசமரத்தடியில் உள்ள வரஸித்தி விநாயகர் 

(6) செல்வ விநாயகர்

(7)  ஏழைப்பிள்ளையார் எனப்படும் ஸப்தபுரீஸ்வரர்

(8) ஸ்ரீ நிர்தானந்த விநாயகர்

தேரோடும் கிழக்கு வீதி

இது கீழாண்டார் தெரு (அல்லது கிழக்கு ஆண்டார் தெரு) என்று அழைக்கப்படுகிறது. இங்கும் குடியிருப்புகள், கடைகள் மற்றும் கோயிலின் இரண்டு மிகப்பெரிய தேர்கள் நிறுத்துமிடம் முதலியன உள்ளன.

  (9) வடகிழக்கு மூலை அரசமர ஸித்தி விநாயகர் (கிழக்கு நோக்கி உள்ளார்)

(10) ஸ்ரீ முத்தாளம்மன் திருக்கோயில் வாசல் பிள்ளையார் 
        (கிழக்கு நோக்கியபடி)

(11) மேற்படி பிள்ளையாரைப் பார்த்தபடி இன்னொரு பிள்ளையார்
       (மேற்கு நோக்கியபடி)

(12) தென் கிழக்கு மூலையில் ஸ்ரீ ஸித்தி விநாயகர் (கிழக்கு நோக்கியபடி)

இவ்வாறாக திருச்சி உச்சிப்பிள்ளையார் மலையையும், மலையைச்சுற்றியுள்ள தேரோடும் நான்கு வீதிகளிலுமாகச் சேர்த்து மொத்தம் 12 விநாயகர்கள் மிகவும் பிரபலமாக, சிறிய கோயில்கள் கொண்டு உள்ளனர். தினமும் அபிஷேகம், அர்ச்சனை, ஆராதனை எல்லாம் நடைபெறுகின்றன. சங்கடஹரசதுர்த்தி போன்ற விசேஷ நாட்களில் சிறப்பு பூஜைகள், அலங்காரங்கள், ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன.

இவற்றில் எண்ணிக்கையில் ஏழாவதான [வடக்கு ஆண்டார் தெருவில் அமைந்துள்ள] ஏழைப்பிள்ளையார் என்னும் ஸப்தபுரீஸ்வரர் பற்றி ஒரு சிறிய விளக்கம் கொடுக்க விரும்புகிறேன்.

சங்கீதத்தில் ஏழு ஸ்வரங்களை ஸப்த ஸ்வரங்கள் என்போம். ஸப்தகிரி என்றால் ஏழுமலை என்று பொருள்.  ஸப்தரிஷி என்றால் ஏழு முனிவர்கள் என்று அர்த்தம். ஸப்தஎன்ற வடமொழிச்சொல்லுக்கு ஏழு என்று பொருள். ஏழு என்பது முழுமையைக் குறிப்பதாகும்.  உச்சிப்பிள்ளையாரிலிருந்து ஆரம்பித்து மலையைப் பிரதக்ஷணமாக வரும்போது ஏழாவதாக உள்ள இவர் ஏழாவது பிள்ளையார்என்று தான் இருந்திருக்க வேண்டும். நாளடைவில் இந்த ஏழாவது பிள்ளையார்சொல்வழக்கில்ஏழைப்பிள்ளையார்ஆகி இருப்பார் என்பது எனது ஆராய்ச்சியாகும்.  

ஏழை மக்களுக்கு அருள் பாலிப்பவராக இருப்பதனாலும் அவ்வாறு அழைக்கப்பட்டிருக்கலாம்.  ஸப்தபுரீஸ்வரர் என்ற திருநாமமும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. மலையேறி உச்சிப்பிள்ளையாரை தரிஸிக்க இயலாதவர்கள் இந்த ஏழைப்பிள்ளையாரை வேண்டிக்கொண்டாலே அது உச்சிபிள்ளையாரை தரிஸித்ததற்கு சமமாகும் என்றும் சொல்லுகிறார்கள். பக்தர்கள் முழுத்தேங்காய்களின் குடுமிப்பகுதிகளை கயிற்றால் கோத்து மாலையாக இந்த ஏழைப்பிள்ளையாருக்கு அணிவித்து மகிழ்கிறார்கள்.  

இந்த ஏழைப்பிள்ளையார் கோயில் வாசலிலிருந்து பார்த்தாலே அந்த பணக்கார உச்சிப்பிள்ளையார் கோயில் அழகாகத்தெரியும்படி அமைந்துள்ளது இந்தக்கோயிலின் மற்றொரு சிறப்பாகும். //

காவேரி கரை இருக்கு! கரைமேலே இருக்குஎன்ற பதிவில் ஸ்ரீ ஆற்றழகிய சிங்கப் பெருமாள் என்ற கோயிலைப் பற்றி அழகிய படங்களுடன் விவரிக்கிறார். இந்த கோயில் காவிரியின் தென் கரையில், காவிரிப் பாலம் அருகே கிழக்கில் ஓடத்துறை என்னும் இடத்தில் உள்ளது. காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் போதெல்லாம் கோயிலுக்குள் காவிரி வந்து விடும்.


முடிவுரை:

நான் எனது வலைப் பதிவைத் தொடங்கி எழுதிக் கொண்டிருந்தேன். அப்போது திருச்சியைப் பற்றி எழுதலாம் என்று எண்ணிக் கொண்டிருந்த போது திரு VGK அவர்கள் தனது பதிவுகளில் திருச்சியைப் பற்றி தனக்கே உண்டான பாணியில் சிறப்பாக சுவைபட சொல்லியிருந்தார். எனவே நான் அப்போது திருச்சியைப் பற்றி எதுவும் எழுதவில்லை. இருந்தாலும் அவரது கதை கட்டுரைகளில் தந்த செய்திகளை தொகுத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று எண்ணினேன். ஒரு ஆய்வுக் கட்டுரை போன்று எழுத முடியாவிட்டாலும், ஒரு வலைப் பதிவிற்கு தேவையான முறையில் தந்துள்ளேன்.