Showing posts with label இராய.செல்லப்பா. Show all posts
Showing posts with label இராய.செல்லப்பா. Show all posts

Tuesday, 9 January 2018

இராய செல்லப்பா அவர்களுடன் ஒரு சந்திப்பு



சென்ற மாதத்தில் ஒருநாள் மூத்த வலைப்பதிவர் திரு. இராய செல்லப்பா அவர்களிடமிருந்து செல்போன் அழைப்பு. தான் ஒரு வேலையாக திருச்சிக்கு வரப் போவதாகவும், அப்போது V.G.K (திரு வை.கோபால கிருஷ்ணன்) அவர்களையும், என்னையும் சந்திக்க விரும்புவதாகவும் தெரிவித்தார். மகிழ்ச்சியான செய்தி. நானும் திரு V.G.K அவர்களிடம் இதுபற்றி செல்போனிலும், தெரிவித்து இருந்தேன். சொன்னது போலவே திருச்சிக்கு வந்திட்ட இராய செல்லப்பா அவர்கள், போன் செய்தார். நானும் திரு V.G.K அவர்களும் அவரை அவர் தங்கி இருக்கும் ஹோட்டல் அஜந்தாவில், 07.01.18 ஞாயிறு – மாலை சந்திப்பது என முடிவானது. 

இராய செல்லப்பா


வங்கி அதிகாரியாக பல முக்கிய நகரங்களில் பணி செய்து ஓய்வு பெற்றவர். டெல்லி தமிழ்ச்சங்கத்தில் சிறப்பான தமிழ்ப் பணிகளைச் செய்தவர்
.
செல்லப்பா தமிழ் டயரி ( http://chellappatamildiary.blogspot.com ) இமயத்தலைவன் ( http://imayathalaivan.blogspot.in

என்ற தனது வலைத்தளங்களில் எழுதி வருகிறார். இவர் எழுதிய  சொல்லட்டுமா கொஞ்சம்?, உண்மைக்குப் பொய் அழகு, அபுசி – தபசி (தொகுதி.1 மற்றும் தொகுதி.2 ), ஊர்க்கோலம் – ஆகிய மின்னூல்களை ‘புஸ்தகா’ வெளியிட்டுள்ளது. தாத்தா தோட்டத்து வெள்ளரிக்காய் என்ற நூலை அகநாழிகை வெளியிட்டுள்ளது.


ஹோட்டல் அஜந்தாவில்

அன்று (07.01.18 ஞாயிறு) மாலை நான் எனது இருப்பிடத்திலிருந்து, கே.கே.நகர் பஸ் ஸ்டாண்ட் சென்றேன். அன்று நடைபெற்றுக் கொண்டிருந்த அரசுப் பேருந்து ஊழியர் வேலை நிறுத்தம் காரணமாக ஒரு பஸ் கூட இல்லை. ஆட்டோவில் போகலாம் என்றால், ஆட்டோ ஸ்டாண்டே காலி. எல்லாமே சவாரிக்கு போய் விட்டன. நல்ல வேளையாக ஒரு தனியார் பஸ் வந்துவிட அதில் பயணம் செய்து சென்று விட்டேன். எனக்கு முன்னதாக திரு V.G.K அவர்கள் ஆட்டோவிலேயே ஆண்டார் தெருவிலிருந்து (சத்திரம் பேருந்து நிலையம்) ஹோட்டல் அஜந்தா வந்து விட்டார்.

ஹோட்டல் அஜந்தா அந்த காலத்து தங்கும் விடுதி என்றாலும், நவீன கால முறைக்கு ஏற்ப மாற்றம் செய்யப் பட்டது. காலை, மாலை, இரவு நேர டிபன் வசதியும் உண்டு. மதியச் சாப்பாடும் (மோர்க் குழம்பும், பாயாசமும் விஷேசம்) உண்டு. எல்லாமே நன்றாக இருக்கும். நான் இங்கு அடிக்கடி சாப்பிட்டு இருக்கிறேன். எனது மகள் திருமணத்திற்கு முன்னதான நிச்சயதார்த்தம்,. இங்குள்ள மினி ஹாலில்தான் நடைபெற்றது.) பெரிய திருமண மண்டபமும் உண்டு.

கலந்துரையாடல்

(படம் மேலே) திருப்பதி வெங்கடாசலபதி படம் முன் திரு V.G.K

(படம் மேலே)   திரு V.G.K மற்றும் இராய. செல்லப்பா

(படம் மேலே) திரு V.G.K ,இராய. செல்லப்பா மற்றும் நான்

அங்கிருந்த வரவேற்பு (Reception) ஹாலில் ஒரு பெரிய வெங்கடாசலபதி படம். அதன் அருகே கோபு சாரை (V.G.K) நிற்க வைத்து நான் படம் எடுத்துக் கொண்டு இருந்த சற்று நேரத்தில் .இராய செல்லப்பா அவர்கள் வந்து விட்டார். சிறிதுநேரம் கழித்து அவருடைய மனைவியும் வந்து விட்டார். அவர்கள் தங்கி இருந்த அறை சிறியது என்ற படியினால் ஹாலிலேயே எங்களது உரையாடல் தொடங்கியது.  வழக்கம் போல பரஸ்பரம் ஒருவரைப் பற்றி ஒருவர் விசாரித்துக் கொள்ளல், மற்றும் பரிசுப் பொருட்களை பகிர்ந்து கொள்ளல் என்று ஒரே மகிழ்ச்சி. .(நான் ஏற்கனவே புதுக்கோட்டை வலைப்பதிவர் சந்திப்பு மாநாட்டில் அய்யா இராய.செல்லப்பா அவர்களைச் சந்தித்து இருக்கிறேன்)

(படம் மேலே) திரு V.G.K அவர்கள் இராய.செல்லப்பாவுக்கு தந்த அன்பளிப்புகள்
(படம் மேலே) இராய.செல்லப்பா அவர்களுக்கு எனது பரிசுகள்

இராய செல்லப்பா அய்யா, எங்கள் இருவருக்கும் ஸ்வீட் காரம் அடங்கிய பைகளைத் தந்தார். நமது கோபு சார் (V.G.K) செல்லப்பா சாருக்கு பழங்களையும்,  தான் எழுதிய நூலையும் பரிசாகத் தந்தார். நான் ஒரு GOOD DAY பிஸ்கட் பாக்கெட்டினையும், ஆரண்ய நிவாஸ் (ஆசிரியர் ராமமூர்த்தி) என்ற சிறுகதைத் தொகுப்பையும் கூடவே 2018 ஆம் வருட தமிழ் டைரியையும் செல்லப்பா சாருக்கு என் அன்புப் பரிசாகக் கொடுத்தேன்.

இராய. செல்லப்பா அய்யா அவர்களிடம் பேசிக் கொண்டு இருந்த போது, தான் ஒரு முக்கியப் பணிக்காக திருச்சி நேஷனல் கல்லூரிக்கு வந்து இருப்பதாகவும், 11ஆம் தேதி வரை இங்கு இருக்கப் போவதாகவும் சொன்னார். மேலும் தான் சமஸ்கிருதத்திலிருந்து தமிழுக்கு மொழி பெயர்த்த ‘ஶ்ரீமந் நாராயணீயம்’ என்ற ஶ்ரீமத் பாகவத நூல் விரைவில் வெளிவரும் என்றும் குறிப்பிட்டார்.

அவர் தனது சொந்த ஊர் இராணிப்பேட்டை என்றும், கார்ப்பரேஷன் வங்கியில் அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் என்றும் சொன்னார். அவரது பெயரில் உள்ள ‘இராய’ என்பதன் விவரம் கேட்ட போது இரா என்பது இராணிப்பேட்டையையும்; ய என்பது தந்தையின் பெயரான யக்ஞசாமியையும் குறிக்கும் என்றார். அப்போது இராணிப்பேட்டைக்கு அப்பெயர் வந்ததன் காரணத்தையும் சொன்னார்.

செஞ்சியை ஆண்ட ராஜா தேசிங்குவின் மனைவி ராணிபாய். இவள் ராஜபுத்திர வம்சத்தைச் சேர்ந்தவள். தேசிங்கு கபடமாகக் கொல்லப்பட்டதை அறிந்த, அவள் உடனே தீக்குளித்து மாண்டாள். அவள் பெயரால் இந்த ஊருக்கு இராணிப்பேட்டை என்று பெயர்.

இன்னொரு தகவலையும் சொன்னார். சென்னைக்கு வந்த பெரு வெள்ளத்தின் போது, அகநாழிகை பதிப்பகத்தில் இருந்த நிறைய புத்தகங்கள் சேறு படிந்து வீணாகி விட்டன என்றும், பதிப்பகத்திற்கு நிறையவே நஷ்டம் என்றும் சொன்னார். அவற்றுள் இவர் எழுதிய நூலின் பிரதிகளும் அடங்கும் என்றும் தெரிவித்தார்.

உணவு விடுதியில்



உரையாடல் முடிந்ததும் எங்கள் இருவரையும் அங்கிருந்த ரெஸ்டாரண்டிற்கு அழைத்துச் சென்றனர். அங்கு செல்லப்பா சார் சூடான சுவையான மொறுமொறு பக்கோடாவிற்கு ஆர்டர் தந்தார். சாப்பிட்டு முடிந்ததும் காபி வந்தது. எல்லாம் உண்டு முடிந்ததும் நானும் கோபு சாரும் அவர்களிடம் விடை பெற்றுக் கொண்டோம்.