Wednesday 27 February 2013

திருச்சி பதிவர் VGK அவர்களை சந்தித்தேன்.திருச்சியிலுள்ள மூத்த வலைப்பதிவாளர் திரு வை. கோபால கிருஷ்ணன் அவர்களுடன் ஒரு ஆண்டுக்கு முன் எனக்கு வலைப்பதிவின் மூலம் தொடர்பு ஏற்பட்டது. அன்று முதல் அவரை நேரில்  பார்த்து பேச வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. மேலும் அவர் தனக்கு கிடைத்த வலைப்பதிவு விருதுகளை மற்றவர்களுக்கு பகிர்ந்தளிக்கும்போது  எனக்கும் தருவார். அவர் அவ்வாறு தந்த விருதுகளை ஒரு கௌரவமாகவே நான் நினைக்கிறேன். மேலும் நான் எழுதும் ஒவ்வொரு பதிவிற்கும் கருத்துக்களை தந்து உற்சாகமூட்டுவார். நானும் அவர் பதிவுகள் சென்று கருத்துரை எழுதுவேன்.

அவரும் திருச்சியில்தான் (வடக்கு ஆண்டார் தெரு) இருக்கிறார். நானும் திருச்சியில்தான் (கருணாநிதி நகர்) இருக்கிறேன். இப்படியாக நாங்கள் இருவரும் ஒரே ஊரில் இருந்தும், என்ன காரணமோ ஒரு ஆண்டு காலமாக அவரை சந்திக்க சந்தர்ப்பமே அமையவில்லை. கோப்பெருஞ்சோழன் பிராந்தையார் நட்பு போல ஒருவரை ஒருவர் சந்திக்காமலேயே நட்பு. ஆனாலும் இணையத்தின் வழியே மின்னஞ்சல் மற்றும் வலைப்பதிவுகள் மூலமாகவே தொடர்பு இழைகள் சென்றன. இடையிடையே ஓரிருமுறைதான் செல் போனில் பேசிக் கொண்டோம்.

ஒருமுறை சென்ற ஆண்டு (2012) டிசம்பர் மாதம் VGK அவர்கள் குடியிருக்கும் வடக்கு ஆண்டார் தெருவில் இருக்கும் எனது ஆசிரியர் ஒருவரைப் பார்க்க மாலை வேளை சென்றேன். அவர்களிடம் இவரைப் பற்றி சொன்னதும் கோபால கிருஷ்ணனா? BHEL – இல் பணிபுரிந்தவர்தானே? நன்றாகத் தெரியுமே? எங்கள் வீட்டிற்கு எதிரில்தான் முன்பு இருந்தார்கள். இப்போது புதிதாக உள்ள அபார்ட்மெண்ட்டில் இருக்கிறார்கள் என்று அவர் இருக்கும் குடியிருப்பைச் சொன்னார்கள். ஆனால் எனக்கு ஆசிரியர் வீட்டிலேயே நேரம் ஆகி விட்டபடியினால், அன்றும் VGK அவர்களை என்னால் சந்திக்க இயலவில்லை.

இரண்டு நாட்களுக்கு முன்னர் அவருக்கு உடல் நலமில்லை என்று அவரது பதிவு ஒன்றில் ஒருவர் எழுதிய தகவல் அறிந்து இன்று எப்படிம் சந்தித்தே ஆக வேண்டும் “ என்ற வேகத்துடன் நேற்று முன்தினம் (25.02.2013 திங்கள்) மாலை அவர் இல்லம் சென்றேன். நான் சென்ற நேரம் மின்வெட்டு நேரம், எனவே தெப்பக்குளம் கடைவீதி பக்கம் ஒரு அரைமணி நேரம் சென்றுவிட்டு மின்சாரம் வந்ததும் சென்றேன்.

சிவசக்தி டவர்ஸ்என்ற அடுக்கு மாடி குடியிருப்பில் இரண்டாவது தளத்தில் அவரது “பவித்ராலயா இருந்தது.. என்னை வரவேற்க ரொம்பவும் சந்தோஷத்துடன் கீழே வந்து கொண்டிருந்தார். அதற்குள் நானே அவரது இல்லம் சென்றுவிட்டேன். ( நான் முடிந்தவரை லிப்டில் செல்வதை தவிர்த்து விடுவேன்) அப்போதுதான் நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் முதன் முதலாக பார்க்கிறோம். வீட்டின் உள்ளே இருந்த அவரது மனைவியும் என்னை அன்புடன் வரவேற்றார்கள். நான் அவரது நலனையும் குடும்பத்தார் நலனையும் விசாரித்தேன். அதன் பின்னர் நானும் VGK அவர்களும் பொதுவாகப் பேசினோம். வறுத்த முந்திரியும் காபியும் தந்தார்கள். அப்போது அவர்கள் வீட்டிற்கு அவரது விருந்தாளிகள் வந்தனர். என்வே நானே அவரிடம் இன்னொருநாள் சந்திப்போம் என்று விடைபெற்றுக் கொண்டேன். இன்னொருநாள் சந்திக்கும் போது அவருடன் படம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

( யோவ் இதெல்லாம் யார் கேட்டது? என்று சிலர் முணுமுணுப்பது காதில் விழுகிறது. யார் யாரோ என்னவெல்லாமோ எழுதுகிறார்கள். அதற்கு இது தேவலாம் என்று நினைக்கிறேன். )

அவரது குடியிருப்பை விட்டு வெளியில் வந்தபோது நந்திகோயில் தெருவில் உற்சவர்களின் ஊர்வலம். அப்போது என்னிடம் கைவசம் கேமரா இல்லை. எனவே செல்போனில் படம் எடுத்துக் கொண்டேன். செல்போன் கேமராவில் படம் தெளிவாக கிடைக்கவில்லை.