Saturday 29 November 2014

சுட்ட பதிவு வேண்டுமா?



கல்லூரி மாணவனாக இருந்தபோது ஒரு, ஒரு குயர் நோட்டை வைத்துக் கொண்டு பக்கத்திற்கு பக்கம் கவிதைகளையும், அவற்றிற்கு பொருத்தமான கிறுக்கல் ஓவியங்களையும் வரைந்தது ஒரு காலம். கவிதைகளில்  மரபுக் கவிதைகள், புதுக் கவிதைகள் இரண்டும் எனக்கு நன்றாக வரும். ஒருமுறை ஒரு பேராசிரியர்இளங்கோ! பெரும்பாலும் நாம் எழுதிய கவிதைகளை நாமேதான் படித்துக் கொள்ள வேண்டும். எனவே கட்டுரைகள் எழுதுவதில் கவனம் செலுத்துங்கள்என்று சொன்னார். அன்றிலிருந்து கவிதைகளை பக்கம் பக்கமாக எழுதி கிழிப்பதை விட்டு விட்டேன்.  அவர் சொன்னது உண்மை என்பதனை, நூலகங்களில் அலங்காரமாகவே இருக்கும் , பல கவிதை நூல்களைக் கண்டு தெளிந்து கொண்டேன். எனது நண்பர் ஒருவர் நல்ல கவிஞர். தான் எழுதிய கவிதை நூல்களை சரியாக விற்பனை ஆகாததால், அனைத்தையும் அன்பளிப்பாகவே நண்பர்களுக்கு கொடுத்தார். மக்கள் என்றும் விரும்பும் பாரதியார், பாரதிதாசன், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், கண்ணதாசன், வாலி, வைரமுத்து போன்ற கவிஞர்கள் உருவாக வேண்டும்.

எப்படி இருந்தாலும் கவிதை என்பது நமது ஆன்மாவின் குரல் என்பதை மறுக்க இயலாது. காசுக்காக யாரும் எழுதுவதில்லை. தமது ஆன்ம திருப்திக்காகவே ஒவ்வொருவரும் கவிதை பாடுகின்றனர்.  இப்போதும் நான் அவ்வப்போது  புதுக்கவிதைகளை வலைப்பதிவில் எழுதுவதுண்டு. இங்கே மூன்று புதுக் கவிதைகள். யாரும் சுடாமல் இருந்தால் சரி.

                                       PICTURE THANKS TO : http://bloggerbabes.com

(குறிப்பு: ஒருவர் எழுதிய பதிவை அப்படியே நகலெடுத்து தனது பதிவில் தனது பெயரில் வெளியிட்டால் சுட்ட பதிவு. அதனையே இன்னாருடையது என்று தெரிவித்தால் அது மேற்கோள் பதிவு. இது தவறாகாது)

சுட்ட  பதிவு வேண்டுமா?

சுட்ட  பதிவுவேண்டுமா? இல்லை
சுடாத  பதிவு வேண்டுமா? என்றே
கேட்ட குமரனிடம் சுட்ட பதிவே
வேண்டினாள்  அவ்வை!

ஏனென்று கேட்ட போது
அவள் பாடல்களையும்
யாரோ சுட்டு விட்டார்களாம்
தேடுவதற்கே  என்றாள்

யாரோ சொல்லி விட்டார்கள்
சுட்ட பதிவுகள் சுட்ட படங்கள்
வலைத்தளத்தில் நிறையவே
கொட்டிக் கிடக்கின்றன என்று.

அந்த  அவ்வைக்கும்
ஒரு ஜிமெயில்
கணக்கு வேண்டுமாம்
யாரும் சுட்டு விடாதீர்கள்

அரசியலில் வேஷமும் கோஷமும்

எந்த விலை ஏறினாலும்
எத்தனை முறை ஏறினாலும்
அத்தனையும் தாங்குவோம்!
எங்க ஊரு எம்எல்ஏவும் எம்பியும்
எங்காளு எங்காளு! எதிர்க்க மாட்டோம்!
புரட்சியாவது! புடலங்காயாவது!
அந்நிய நாடுகளில் நடந்த
ஆவேச புரட்சி இங்கு வராது!

இப்போது நாங்கள் போடுவது கோஷம்!
தேர்தல் வந்தால் போடுவோம் வேஷம்!
என்னவர்கள் ஓட்டு அன்னவருக்கு இல்லை!
அன்னவர்கள் ஓட்டு என்னவருக்கு இல்லை! ஏன்
உன்னவருக்கும் இல்லை! இருந்தாலும்
அடுத்து ஆளப் போவது நாங்கள்தான்! - என்ன
கணக்கு என்று மட்டும் கேட்காதீர்கள்!

எங்கே தமிழன்?

தமிழன் தமிழன் என்றே
கதைக்கின்றார் நம்நாட்டில்!
அக்மார்க் தமிழனைத்
தேடித் தேடி அலைந்தேன்!
அங்கிங்கெனாதபடி எங்கெங்கும்
இருக்கின்றார்கள் ஜாதித் தமிழர்கள்!

                                       ( படம் மேலே - நன்றி “நக்கீரன்” வார இதழ்)



Wednesday 26 November 2014

முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே! - நூல் விமர்சனம்



புதுக்கோட்டை ஆசிரியர் நா.முத்துநிலவன் அவர்கள் பற்றிய அறிமுகம் தேவையில்லை. சிறந்த கவிஞர், பட்டிமன்ற பேச்சாளர். முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்கள் (தஞ்சை) விக்கிபீடியாவில் இவருக்கென்றே ஒரு கட்டுரையை தொகுத்து இருக்கிறார் என்றால், இவரைப் பற்றி அதிகம் இங்கு சொல்ல வேண்டியதில்லை. அண்மையில் புதுக்கோட்டையில் ஆசிரியர் நா.முத்துநிலவன் (05.10.2014, ஞாயிறு அன்று) எழுதிய மூன்று வெளியிடப்பட்டன.அவற்றுள் “முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே!  என்ற நூலும் ஒன்று. நூல் முழுக்க கல்விச் சிந்தனைகள் நிறைந்த கட்டுரைகள்.

நூல் வெளியீட்டு விழா முடிந்தவுடனேயே, பல நண்பர்கள் தொடர்ந்து அவர் நூல்களைப் பற்றிய கட்டுரைகளை வலைப்பதிவில் வெளியிட்டனர். இப்போது நாமும் எழுதினால் சரியாக இருக்காது என்பதனால் அப்போது எழுதவில்லை.

(படம் மேலே)முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே! நூல் வெளியீடு நன்றி: வளரும் கவிதை (http://valarumkavithai.blogspot.com/2014/10/blog-post_7.html)

கல்விமுறையும் பள்ளிகளும்:

அதிக மதிப்பெண் வாங்குவதற்காகவே மாணவர்கள் பள்ளிப் படிப்பில் படிக்கிறார்கள், படிக்க வைக்கப்படுகிறார்கள் என்பதனை சொல்லுகிறார்.. நமக்குத் தெரிந்தவரையில் பல பள்ளிகள் இந்த மதிப்பெண் போட்டியில், மாணவர் தேர்ச்சியில் அதிக சதவீதம் காட்ட  வேண்டும் என்பதற்காக, 9 ஆம் வகுப்பிலேயே 10 ஆம் வகுப்பு பாடங்களையும், 11 ஆம் வகுப்பிலேயே + 2 ( 12 ஆம்)  வகுப்பு பாடங்களையும் தொடங்கிவிடுகிறார்கள். தேறமாட்டார்கள் என்பவர்களை மாற்றுச் சான்றிதழ் (T.C) கொடுத்து அனுப்பி விடுகிறார்கள். தனது ஆதங்கத்தினை இவ்வாறு சொல்லுகிறார்

பெரும்பாலான தனியார் மெட்ரிக் பள்ளிகளிலும், சில அரசுப்பள்ளிகளிலும் கூட 9,11ஆம் வகுப்புகளை நடத்தும் வழக்கமே இல்லை! அந்தமாணவர்க்கு, முறையே10, 12ஆம் வகுப்புப் பாடங்களே இரண்டுவருடங்களும் நடத்தப்படுவது ஊரறிந்த ரகசியமாக உள்ளது! இரண்டு வருடமும் ஒரே புத்தகத்தை உருப்போட்டமாணவர்கள், தொழிற்கல்வி நுழைவுத் தேர்வுகளில் உருப்படாதமதிப்பெண் எடுக்கும் ரகசியமும் இதுதான்! அந்தந்த வயதிற்கும், உளவியல்- சொல்லாற்றல்-பொது கவனிப்புத் தன்மைக்கும் ஏற்றவாறு பாடங்கள் தயாரிக்கப்படுவது உண்மை யெனில், இந்தப்பள்ளிகள் இந்த வகுப்புகளையே புறக்கணித்துவிட்டு-ஒரே தாண்டாகத் தாண்டி-அடுத்த வகுப்புக்கு மாணவர்களைக் கடத்திகொண்டு போவது எப்படி அனுமதிக்கப் படுகிறது?  (பக்கம்.32)

வாழ்க்கையைக் கொடுக்கும் பாடங்களை மருந்துபோலத் தருகிறோம்! கல்வி சுமையாகிறது! வாழ்க்கையைக் கெடுக்கும் படங்களை விருந்துபோலத் தருகிறோம்! வாழ்க்கையே சுமையாகிறது! (பக்கம்.34)
               
ஆசிரியர்கள் படும்பாடு:

ஒரு மாணவன் அதிக மதிப்பெண் பெறுவதற்கு எவ்வளவோ சமூகக் காரணங்கள் உண்டு. ஆனால், இந்த மதிப்பெண் போட்டியில் ஆசிரியர்கள் மட்டுமே படும் தொல்லைகளைப் பட்டியலிட முடியாது. அரசுப் பள்ளிகளில் ஓடாத குதிரைகளை, போட்டியில் ஓட்டிக் காண்பிக்க வேண்டும். பல பள்ளிகளில் இந்த வகுப்பு ஆசிரியர்களுக்கு விடுப்பே கிடையாது. அதிலும் பல தனியார் பள்ளிகளில் கேட்கவே வேண்டாம்.ஓயாமல் படிப்பு, படிப்பு என்றால் மாணவர்களுக்கும் சரி, ஆசிரியர்களுக்கும் சரி மன அழுத்தம்தான் மிஞ்சுகிறது. பெற்றோர்களும் விதி விலக்கல்ல. இதனால் ஏற்படும் உரசல்கள், மோதல்கள் பற்றி அடிக்கடி பத்திரிகையில் காண்கிறோம். சென்னையில் உமா மகேஸ்வரி என்ற ஆசிரியை கொலையே செய்யப்பட்டு இருக்கிறார்.

“ஆசிரியர் உமாவைக் கொலை செய்தது யார்? என்று கேள்வி கேட்ட  நமது ஆசிரியர் சொல்லும் பதில்,  அல்ல அல்ல குற்றச்சாட்டு  இது. ( ஆசிரியர் என்பது பொதுப்பால் சொல் என்பது இவரது கருத்து. )

 அந்தச் சகோதரியின் உடலில் கத்திக் குத்து மீண்டும் மீண்டும் விழ விழக் கத்திக் கதறிய கதறலில், பொங்கிப் பெருகிய ரத்தத்துளியின் கறைபட்டு யார் யாரெல்லாம் குற்றவாளிகளாகி நிற்கிறார்கள் தெரியுமா? நாம் எல்லாரும்தான்! இது, உண்மை வெறும் இகழ்ச்சி இல்லை! (பக்கம்.23)

முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியராக இருந்தவர் அல்லவா? இன்னும் வெளிப்படையாகவே தனது மனக்குமுறல்களை சொல்கிறார்.

நூறு விழுக்காடு தேர்ச்சிக்காகப் பல தனியார் பள்ளிகளும் சில அரசுப்பள்ளிகளும் கூட எடுக்கும் நடவடிக்கைகளை மனச்சாட்சியுள்ள ஆசிரியர் எவரேனும் தட்டிக் கேட்டால் கல்வித்துறை பேரைச் சொல்லியே அவர்களை ஓரங்கட்டி விட்டு மாணவர்களைப் படுத்தும்பாடு கொஞ்சமா நஞ்சமா? காலை 4மணிக்கே எழுப்பி விட்டு வீட்டுப்பாடம், பிறகு தனிப்பயிற்சிக்கு ஓடி, பிறகு வந்து பள்ளிக்கூடம் ஓடி, பிறகு மாலை பள்ளியிலிருந்து வந்ததும் எதையோ வாயில் கொட்டிக் கொண்டே உடைமாற்றிக் கொண்டு, மீண்டும் தனிப் பயிற்சிக்கு ஓடி, இரவு 8மணிக்கு மேல் வீட்டுக்கு வந்து மீண்டும் மாடுபோல அன்று நடந்த, முந்திய நாள்களில் படிக்க விட்டுப்போன பகுதிகளை அசைபோட்டு- இரவு படுக்க 11மணி யாகிவிடும் குழந்தைக்கு வயது 15! "ஓடி விளையாடு பாப்பா" என்ற பாரதி பாட்டைப் படித்து ஒப்பிக்காமல் விளையாடப்போன குழந்தைக்கு கடுமையான தண்டனை தரும் நமது பள்ளிக் கூடங்களால் மனஅழுத்தம் வராதா என்ன? அந்த அழுத்தம் கட்டாயப் படுத்தி சிரித்துக்கூடப் பேசாத ஆசிரியரால்- அதிகமாகாதா என்ன? (பக்கம்.25 26)

விருதுகளும், மாணவன் தந்த விருதும்:

பல பொதுத்துறை மற்றும் அரசு அலுவலகங்களில் தணிக்கை (Audit) நடந்து முடிந்தவுடன், தணிக்கைச் சான்றிதழ் (Inspection Report) தரும்போது,  சான்றிதழோடு சில ஊழியர்களுக்கு, வேலைத் திறமை, சேவை மனப்பான்மை இவற்றின் அடிப்படையில் நற்சான்றிதழ் (Good Report). கொடுப்பார்கள். பெரும்பாலும் நிர்வாகத்தில் காக்காய் பிடிப்பவர்களுக்கே இந்த சான்றிதழ் கொடுக்கப்படும்

முன்பெல்லாம் அரசு விருதுகள் எல்லாம் தகுதி பார்த்து தேடிப் பிடித்து தந்தார்கள். பணிக் காலத்திலேயே விருது, வாழ்நாளிலேயே விருது என்பது எல்லோருக்கும் மகிழ்ச்சியைத் தரும். ஆனால் விருது என்பது இப்போது அரசியலாகி விட்டது. அதிலும் கேட்டுப் பெற வேண்டும். இதுபற்றி ஆசிரியர் நா.முத்துநிலவன் அவர்கள் என்ன சொல்லுகிறார்?

தமிழக அரசு தரும் நல்லாசிரியர்’ விருது ஒவ்வோராண்டும் செப்டம்பர்-5ஆம் தேதி டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளில் அவரது பெயராலேயே வழங்கப்படுகிறது. இந்த விருது மட்டுமன்றி,  கலைமாமணி   விருது பற்றிய செய்திகளும் வரும்போதெல்லாம் ‘அட இவருக்கா இந்த விருது?’ எனச் சிலர் பெயர்களைப் பார்த்து ஆச்சரியப் படுவதும்சில பெயர்களைப் பார்த்து அதிர்ச்சி அடைவதும் தொடர்கதையாகிவிட்டது! இதனால்இவ்விருதுகள் வரவர கேலிக்கூத்தாகிவிருது பெற்றவர்க்கும்,-ஏன்விருதுக்குமே கூட- மரியாதையற்ற நிலை உருவாகி வருகிறது! அரசுகள் மாறலாம்கட்சி-அரசியல் மாறலாம்ஆனால் மரபுசார்ந்த சிலமாண்புகளைக் காப்பாற்றும் பொறுப்பு நம் அனைவருக்குமே உண்டு. (பக்கம்.48)

பாடகர் டி.எம்.சௌந்தர்ராஜனைத் தொடர்ந்து எஸ்.பி.பால சுப்பிரமணியனும் பத்மஸ்ரீ விருது பெற்றுவிட்டார். சுசிலாம்மா பத்மவிபூஷன் விருதே பெற்றுவிட்டார். இவர்களின் தகுதியறிந்து அந்த விருதுகளைத் தந்த மத்தியஅரசுஇவர்களுக்கு முன்னோடியான எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு ஏன் இன்னும் பத்மஸ்ரீ விருதுகூடத் தரவில்லை எனும் கேள்வி எழுவது நியாயம் தானேபாவம், அவர் இந்த “விருது வாங்கும்தொழில் நுட்பம் தெரியாதவரோ என்னவோ? (பக்கம்.52)

நமது ஆசிரியர் நா.முத்துநிலவன் அவர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டதா இல்லையா என்று தெரியவில்லை. இவரிடம் படித்த மாணவன் ஒருவன் “சுட்டி விகடன்என்ற வார இதழில் எனக்குப் பிடித்த ஆசிரியர் என்ற கட்டுரையில் நமது ஆசிரியர் நா.முத்துநிலவன் அவர்களைக் குறிப்பிட்டு எழுதி இருக்கிறான். ஆசிரியரின் பெருமித வரிகள் இதோ ... ...

இதைவிட அரசு தரும் நல்லாசிரியர்விருது பெரிதா என்ன?
இது போதும்பா... நாம் விதைத்த விதைகள் வீணாவதில்லை... சரியான நிலத்தில் சரியானபடி விழுந்தது ஆங்காங்கே வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது...  நம் உழைப்பு வீணாகிவிட வில்லை என்று மனசின் ஓரத்தில் சிறு கசிவு... என் பிள்ளைகள் புரிந்து கொண்டுதான் இருக்கிறார்கள்... வேறு யாரும் புரிந்துகொண்டால் என்ன? புரியாவிட்டால் என்ன? என் தலையில் டர்பன் தலைப்பாகை முளைத்திருந்தது. (பக்கம். 138)

நூலின் தலைப்பு:

நூலின் தலைப்பாக உள்ள முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே! “ என்ற கட்டுரையில் சில வாழ்வியல் சிந்தனைகள் பற்றிய கருத்துக்களை தருகிறார். குறிப்பாக செல்போன், கம்ப்யூட்டர், பேஸ்புக் மற்றும் தொலைக்காட்சி பற்றியெல்லாம் சொல்லுகிறார். அதில் சில வரிகள்.

முகநூலில் கிடைக்கக் கூடிய மகிழ்ச்சியை விட, முகம்தெரியாத அல்லது முகத்தை மாற்றிக்கொண்ட யாரோ ஒருவரிடம் ஏமாந்துவிடக் கூடிய ஆபத்தும்உள்ளது என்பதை எந்தநேரத்திலும் மறந்துவிடக் கூடாது மகளே! உன்மேல் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நீ கவனமாகத்தான் இருப்பாய்! இருக்க வேண்டும். (பக்கம்.61)

எனது ஆசை:

கல்வி என்றால் என்ன, அந்த கல்வியை எப்படி திட்டமிட வேண்டும் என்ற அனுபவமிக்க ஒரு ஆசிரியரின் அனுபவப் பிழிவே இந்த நூல் எனலாம். இன்னும் இந்த நூலில் சமச்சீர் கல்வி, தமிழில் சரியாக எழுதுதல், தாய்மொழிக் கல்வி, தனது ஆசிரியர் பணி அனுபவங்கள் என்று நிறையவே சொல்லி இருக்கிறார். அவற்றையெல்லாம் விரித்து எழுதினால் இந்த கட்டுரையைப் படிக்கும் அன்பருக்கு சலிப்பு ஏற்பட்டுவிடும் என்பதனால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். எல்லோருடைய வீட்டு நூலகங்களிலும், தமிழ்நாட்டில் எல்லா நூலகங்களிலும் இந்த நூல் இடம்பெற வேண்டும், இன்னும் இவரது மற்றைய நூல்களைப் பற்றியும் நான் எழுத வேண்டும் என்பது எனது ஆசை.

(படம் - மேலே) ஆசிரியர் முத்துநிலவன் அவர்களுடன் நான்)

நூலின் பெயர்: முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே!
நூலாசிரியர்: நா. முத்துநிலவன்
நூலின் விலை ரூபாய் 120/=  - பக்கங்கள் : 157
வெளியீடு: அகரம், மனை எண்.1, நிர்மலா நகர்,
           தஞ்சாவூர் -613 007 போன்: 04362 239289

Monday 24 November 2014

மார்ச்சு மாதம் சம்பளம் இல்லை



உனக்கென்னப்பா ஒண்ணாம் தேதி வந்தால் கையில் டாண்ணு சம்பளம் வந்திடும் -  வார்த்தையில் கொஞ்சம், கூட குறைச்சல் இருக்கலாம். உத்தியோகத்தில் இல்லாதவர்களில் இந்த வார்த்தையை சொல்லாதவர்கள் குறைவு. மாத சம்பளக்காரர்கள் அனைவரும் அடிக்கடி கேட்டு இருப்பார்கள். ஆனால் மாதச் சம்பளக்காரர்கள் பலபேருக்கு மார்ச்சு மாதம் சம்பளம் இல்லை என்ற விஷயம் எத்தனை பேருக்கு தெரியும்.

வருமானவரி:

ஒவ்வொரு சம்பள உயர்வின் போதும் தனியார் ஊழியராகஇருந்தாலும்  சரி, அரசு ஊழியராக இருந்தாலும் சரி அவர்களுக்கு அப்படியே அள்ளி கொடுத்து விடுவதில்லை. எப்போதுமே சம்பள உயர்வு என்பது 10 சதவீதத்திற்கு மேல் போவதில்லை. இவர்கள் விலைவாசி உயர்வை காரணம் காட்டி சம்பள உயர்வு பெறுவார்கள்; அதற்கு அடுத்த நாளே இவர்கள் சம்பள உயர்வை காரணம் காட்டி அவர்கள் ஏற்றி விடுவார்கள். நிறைய பேருக்கு போனஸ் உச்சவரம்பு சட்டத்தின்படி போனஸே கிடையாது. ஆனால் வெளியில் எல்லோருக்கும் போனஸ் கிடைப்பது போன்ற செய்தி வெளிவரும். இப்படியே கண்ணாமூச்சி நடைபெறும்.

பெயருக்குத்தான் சம்பள உயர்வு. சம்பளம் உயர உயர, அதில் கால்வாசி அந்த வரி, இந்த வரி, வருமானவரி என்று போய்விடும். அரசு ஆணைப்படி சம்பளம் வாங்கும் அன்றே அந்தந்த மாதத்தில் வருமானவரி பிடித்துவிட வேண்டும். சிலபேர் மட்டும் மாதம்தோறும் வருமானவரியை சம்பளத்தில் பிடித்துக் கொள்ளச் சொல்லி எழுதி கொடுத்து விடுவார்கள். ஆனால் பலபேர் வருமான வரியை மார்ச்சு மாதத்தில் மொத்தமாகவோ அல்லது ஜனவரி மாதத்தில் இருந்து மூன்று தவணைகளாகவோ கட்டிவிடுவதாகச் சொல்வார்கள். இன்னும் சிலர் வருமானவரியை தவிர்ப்பதற்காக அரசு சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்ய பார்ப்பார்கள். அதிலும் உச்சவரம்பு உண்டு. எனவே ஒரு கட்டத்தில் வருமான வரியிலிருந்து தப்பிக்க முடியாது.

மூன்றுமாத கஷ்டம்:

எனவே ஒவ்வொரு நிதி ஆண்டும் (Financial Year), முதல் ஒன்பது மாதங்கள் வாழ்க்கைச் சக்கரம் சராசரியாக இருக்கும். ஜனவரி வந்து விட்டாலே பதட்டம்தான். சம்பளம் குறையத் தொடங்கிவிடும். சிலபேருக்கு கடைசி இரண்டு மாதங்கள் (பிப்ரவரி, மார்ச்) சம்பளமே இருக்காது. எனவே சமாளிக்க இயலாதவர்கள் வெளியில் கடன் வாஙக ஆரம்பித்து விடுவார்கள். வட்டி தொழில் நடத்துபவர்களுக்கு இந்த மாதங்களில் நல்ல தொழில் இருக்கும். சிலபேருடைய கழுத்தில், காதில், கையில் இருந்தவைகள் பள்ளிக்கூடம் போய்விடும். சில இடங்களில் இலஞ்சம் பெற்றுக் கொண்டு ஆகும் காரியங்களும் நிறையவே நடக்கும்.

திட்டமிடுதல்:

சரியாகத் திட்டமிடுதல் மூலம் இந்த மூன்றுமாத கால பதற்றத்தை தவிர்க்கலாம். 1.எப்படி இருந்தாலும் கட்ட வேண்டிய வருமான வரியை கட்டித்தானே ஆகவேண்டும் என்ற நிலையில் இருப்பவர்கள், நம்ப காசு நமக்கில்லை என்று நினைத்துக் கொண்டு மாதம்தோறும் வருமானவரியை சம்பளத்தில் பிடித்துக் கொள்ளச் சொல்லி விடலாம். அதனால் சுமை தெரியாது. 2. வருமான வரியை சேமிப்பாக மாற்ற நினைப்பவர்கள் வரிவிலக்கு தரும் PPF ( Public Provident Fund) Scheme இல் சேர்ந்து கொண்டு மாதாமாதம் கட்டலாம். இதேபோன்று R.D ( Recurring Deposit) எனப்படும், மாதாந்திர கணக்கைத் தொடங்கி , முதிர்வுத் தொகையை  வரிவிலக்கு தரும் அரசு சேமிப்பு பத்திரங்களில் முத்லீடு செயலாம். இந்த கணக்கை பிப்ரவரி மாதம் முடியுமாறு தொடங்க வேண்டும்.

ஆடம்பரத்தை தவிர்ப்பீர்:

முன்பெல்லாம் எல்லோரும் வருவாய்க்குத் தக்க செலவு செய்தார்கள். வருவாய்க்குத் தககவாறு ஆசைப் பட்டார்கள். வீட்டில் உள்ள்வர்களும் நமது குடும்பத்தில் இவ்வளவுதான் செய்யமுடியும், இவ்வளவுதான் எதிர்பார்க்க முடியும் என்று பொறுப்போடு இருந்தார்கள் இப்போதோ பலரும் கடன்பட்டாவது பகட்டான வாழ்க்கையை நடத்த ஆசைப்படுகின்றனர். ஒரு சாதாரண ஊழியராக இருப்பவர் தனது வருமானத்திற்கு தக்கவாறு வாழ ஆசைப்படுவதில்லை. தானும் ஒரு உயர் அதிகாரியைப் போன்றே வாழ்க்கையை நடத்த வேண்டும் என்று நினைக்கிறார். பிள்ளைகளை அரசு பள்ளிகளிலோ அல்லது கட்டணம் அதிகம் இல்லாத அரசு உதவி பெறும் பள்ளிகளிலோ சேர்ப்பதில்லை. வசதி படைத்தவர்கள் பிள்ளைகள் படிக்கும் அதிகக் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளைச் சேர்த்து விட்டு அல்லாடுகிறார்கள். அவர்கள் சொல்லும் பதில் இதுதான் “ ஏன் எங்கள் பிள்ளைகள் மட்டும் அங்கு படிக்கக் கூடாதா? “ என்பதுதான்.


              தம்மின் மெலியாரை நோக்கித் தமதுடைமை
             
அம்மா பெரிதென் றகமகிழ்க - தம்மினும்
             
கற்றாரை நோக்கிக் கருத்தழிக கற்றதெல்லாம்
             
எற்றே யிவர்க்குநா மென்று  
                                               (நீதி நெறி விளக்கம் 14 (குமரகுருபரர்)

இதன் பொருள்: நம்மை விட செல்வத்தில் குறைந்து இருப்பவர்களைப் பார்த்து நமது செல்வம் “ அம்மா பெரிது என்று மகிழ்ச்சி அடையுங்கள். அதேசமயம் நம்மைவிட அதிகம் படித்தவர்களைப் பார்த்து இவருக்கு முன் நாம் எம்மாத்திரம் என்று கர்வத்தை விடுங்கள்.


ALL PICTURES THANKS TO “GOOGLE”



Thursday 20 November 2014

குளம்பியும் குழப்பமான தமிழும்



காலையில் எழுந்து பல்துலக்கி , முகம், கை, கால் கழுவியவுடன் சூடாக ஒரு டம்ளர் காபி சாப்பிட்டால்தான் எனக்கு மற்ற வேலைகள் ஓடும். எனவே வீட்டில் கொஞ்சம் தாமதம் ஆகி விட்டாலும் சிரமம் பாராது வெளியே காபி கடைக்கு சென்று சாப்பிட்டு வந்து விடுவேன். பேப்பர் பையன் வர நேரம் ஆகும் என்பதால், அதுவரை இண்டர்நெட்தான். காபி சாப்பிட்டுக் கொண்டே தமிழ்மணம் போன்ற திரட்டிகள் பார்ப்பது பின்னூட்டம் எழுதுவது என்று நேரம் நகர்ந்து விடும்.

இப்போதெல்லாம் வலைப் பூக்களில் காபியை (Coffee) குறிப்பிடும் போதெல்லாம் சிலர், குறிப்பாக கவிஞர்கள்,  குளம்பி என்ற பெய்ரால் குறிப்பிடுகின்றனர். அது என்ன குளம்பி? குழப்பமாக இருக்கிறது. அதே போல பிளாஸ்டிக் (Plastic) என்பதற்கு ஞெகிலி என்ற சொல்லை பயன்படுத்துகின்றனர். அது என்ன ஞெகிலி? நெகிழும் தன்மையைக் குறிப்பது என்றால் நெகிழி என்றல்லவா வரவேண்டும். அதேபோல ஐஸ்கிரீமை (Ice Cream) பனிக் கூழ் என்றும் பனிக்களி என்றும் சொல்லுகிறார்கள்.

பயணம் செய்து என்று எழுதுவது மரபு. ஆனால் பயணித்து என்று ( ஜனித்து என்பதைப் போல) எழுதுகிறார்கள். இளம் பெண்களை இளஞி என்று குறிக்கின்றார்கள். இது தவறு.

தனித்தமிழ்:

சுமார் 90 வருடங்களுக்கு முன்னர் மறைமலையடிகள் தலைமையில் தனித்தமிழ் இயக்கம் தோன்றியது. அவரோடு பெருஞ்சித்திரனார், தேவநேயப் பாவாணர் போன்ற பெருமக்களும் இணைந்து கொண்டனர். தமிழில் பேச வேண்டும் எழுத வேண்டும் என்ற உணர்வு தோன்றியது. தங்களது பெயர்களையும் தூய தமிழில் மாற்றிக் கொண்டனர். பிறந்த குழந்தைகளுக்கும் தமிழிலேயே பெயர் சூட்டினர். தமிழில் புழக்கத்தில் இருந்த பல பிறமொழிச் சொற்களுக்கு காரணத்தோடு தமிழ் வடிவம் சொல்லப்பட்டது. இந்திய விடுதலைக்குப் பிறகு தமிழ்நாட்டில் ஆட்சித்துறைத் தமிழ் என்ற நிர்வாகத்தை அமைத்து செவ்வனே செய்து வந்தனர். இப்போது முன்பு இருந்த ஆர்வம் மற்றும் செயல்பாடுகள் இல்லை

மக்கள் தீர்ப்பு:

என்னதான் தமிழ் மக்கள் மத்தியில் தமிழில் பேச வேண்டும் எழுத வேண்டும் என்ற  உணர்வு இருந்தாலும் சில பொருட்களை அல்லது சில பெயர்களை அதன் மூலச் சொல்லிலேயே அழைக்கப்படுவதை விரும்புகின்றனர்.

சென்னை கிறிஸ்தவக் கல்லூரி தமிழ்த் துறைத் தலைவராக இருந்த, வி.கோ.சூரிய நாராயண சாஸ்திரி என்பவர் நல்ல தமிழறிஞர். தமிழ்ப்பற்றின் காரணமாக தனது பெய்ரை பதிமாற் கலைஞர் என்று மாற்றிக் கொண்டார்.. மேலும் இதனாலேயே மாக்சுமுல்லரை 'மோட்சமூலப் பட்டாசாரியார் என்றும் ஷேக்ஸ்பியரை 'ஜெகப்பிரியர்' என்றும் அழைத்தார். இதுபோன்ற தமிழ்ப்படுத்தல் மக்களிடம் எடுபடவில்லை.

தமிழர்கள் பழக்கத்தில் கொள்ளாத சில தமிழாக்க சொற்களை இங்கு பட்டியலிட்டுள்ளேன்.

AEROPLANE  - விமானம்
BANK             - வங்கி       
BUS       - பேருந்து
CAR                -
CIGARETTE - வெண்சுருட்டு
COFFEE    -
COMPUTER கணினி
CONDUCTOR -  நடத்துநர்
CYCLE     - மிதி வண்டி
DRIVER    - ஓட்டுநர்
FOOTBALL உதைபந்து
HELICOPTER  - வானூர்தி
ICE        - பனிக்கட்டி
INTERNET  - இணையம்
OXYGEN       - பிராணவாயு
PAPER     - காகிதம்
PENCIL          -
PLASTIC    -
PLATFORM - நடைமேடை
RADIO     - வானொலி
RAIL      - புகைவண்டி
SOAP              -
TEA       - தேநீர்
TELEVISION - தொலைக்காட்சி
TICKET     - பயணச்சீட்டு
TOILET            -  கழிவறை
TOKEN     - அடையாள வில்லை

மோட்டார் உதிரி பாகங்களை எடுத்துக் கொண்டால் ஆக்ஸிலேட்டர், கியர், பிரேக், சைலன்சர் என்று இன்னும் நிறைய சொல்லிக் கொண்டே போகலாம். ஒரு பொருளை அல்லது செயலைக் குறிப்பிட்டால், அந்த சொல் அதன் வடிவத்தை சட்டென்று நினைவுக்கு கொண்டு வரவேண்டும். எனவே, தமிழுக்கு, தமிழ்நாட்டிற்கு புதுமையான அதேசமயம் உலகளாவிய கண்டுபிடிப்புகளை அதே பெயரால் அழைப்பதில் தவறில்லை.  அதே சமயம் இருக்கும் தமிழ்ச் சொற்களை புறக்கணித்துவிட்டு அதற்கு மாற்றாக அயல்மொழிச் சொற்களைப் பயன்படுத்துதலும் கூடாது. (உதாரணம் முடி (HAIR), புத்தகம் (BOOK), தண்ணீர் (WATER),அடுக்களை அல்லது சமையலறை (KITCHEN) போன்றவற்றைச் சொல்லலாம்)   

உடனே நீ தமிழனா? உனக்கு தமிழ் மீது பற்று இருக்கிறதா என்று கேட்காதீர்கள். எனக்கு தாய்மொழி தமிழின் மீது பற்று உண்டு. ஆனால் வெறி கிடையாது. இது எனது தனிப்பட்ட கருத்து. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.

(ALL  PICTURES  THANKS  TO  “GOOGLE IMAGES” )


Tuesday 18 November 2014

வழுக்கைத்தலை மாப்பிள்ளைக்கு கல்யாணம்.




அண்மையில் சகோதரி அருணா செல்வம் அவர்கள் வாழ்க்கையும் வழுக்கையும்!! (அனுபவம்) என்று ஒரு பதிவினை வெளியிட்டு இருந்தார்கள்.http://arouna-selvame.blogspot.com/2014/11/blog-post_17.html  அந்த பதிவினில் வழுக்கத்தலை உள்ள ஒருவர் பெண் பார்க்க வந்தபோது, பெண் மறுத்து விட்டதாக தனது அனுபவத்தினை எழுதி இருந்தார். இதற்கு நேர் எதிர்மறையானது எனது அனுபவம்.

பேராசிரியர் வீட்டில்:

ஓய்வுபெற்ற பேராசிரியர் ஒருவரை அடிக்கடி சந்தித்து பேசுவது வழக்கம். பேராசிரியரும் அவரது மனைவியும் ( அவரும் ஓய்வு பெற்ற பேராசிரியர்) சமூக சேவைகளில் ஈடுபாடு உள்ளவர்கள். தாங்கள் பணிபுரிந்த காலத்தில் படிக்க வசதியற்ற எத்தனையோ மாணவர்களுக்கு உதவி செய்தவர்கள். அவர்கள் வீட்டிற்கு தங்கள் பிள்ளைகளுக்கு ஏதேனும் வரன் இருந்தால் சொல்லுங்கள் என்று, பேராசிரியரிடம் சொல்லிவிட்டு போக நிறையபேர் வருவார்கள்..

ஒருமுறை அவர் வீட்டிற்கு போயிருந்த போது ஒருவர் தனது பையனை அழைத்து வந்து இருந்தார். பையனின் அப்பா மத்திய அரசில் உயர் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். அரசு அதிகாரி என்பதால், பணிக்காலத்தில் அடிக்கடி பல ஊர்களுக்கும் பிற மாநிலங்களுக்கும் மாறுதல் ஆனவர். அவருக்கு இரண்டு பையன்கள். இப்போது மூத்த பையனின் திருமண விஷயமாக பேராசிரியரைப் பார்க்க வந்திருந்தனர். பையனைப் பார்த்தேன். நல்ல சிவப்பு, இளைஞர், . ஆனால் தலை வழுக்கை. தலையில் முடியே இல்லை. பூனை மயிர் போல ஒன்றிரண்டு இருந்தன. பேராசிரியரின் வீட்டில் இருந்த அவரது BIO DATA விவரங்களை என்னிடம் கொடுத்தார்கள். நல்ல படிப்பு. சாப்ட்வேர் என்ஜீனியர். கைநிறைய சம்பளம். வெளிநாடு ஒன்றில் டெபுடேஷன் வேலை பார்த்து விட்டு இப்போது இந்தியாவிற்கு வந்து வேலை பார்க்கிறார். எல்லாம் இருந்தும் இந்த தலை வழுக்கை என்பது அவருக்கும் அவரது குடும்பத்தார்க்கும் பெரிய கவலை.

அந்த பையனிடம் பேசினேன் “ இந்த தலைமுடிப் பிரச்சினை எப்போதிருந்து இருக்கிறது? சின்ன வயதிலிருந்தா? என்று கேட்டேன். அவர் “சார், சின்ன வயதில் இந்த பிரச்சினை இல்லை. தலைமுடி நன்றாகவே அடர்த்தியாக கருகரு என்று இருந்தது. ஹைஸ்கூல் படிக்கும்போது, அப்பா வடக்கே, குடும்பத்தோடு ஊரு விட்டு ஊரு மாறுதல் ஆனபோது சில ஊர் தண்ணீர் ஒத்துக் கொள்ளாததால் தலைமுடி கொட்டி எனக்கு இப்படி ஆகிவிட்டது. என்றார். உங்கள் தம்பிக்கு எப்படி என்று கேட்டேன். அவருக்கு ஒன்றும் இல்லை. எனக்கு மட்டும்தான், எந்த வைத்தியம் பார்த்தும் சரியாகவில்லை என்று கவலையோடு சொன்னார்.

ஏதாவது செயற்கையாக விக் அல்லது தொப்பி வைத்துக் கொள்ள வேண்டியதுதானே என்று கேட்டேன்.

அப்படி எல்லாம் வேஷம் போட்டு நான் யாரையும் ஏமாற்ற விரும்பவில்லை. நான் இப்போது எப்படி இருக்கிறேனோ அப்படியேதான் ப்ரோபைல் போட்டோவையும் கொடுத்து இருக்கிறேன். எனக்கு தலைமுடிதான் பிரச்சினை. மற்றபடி உடம்புக்கு ஒன்றும் இல்லை. என்னைப் பார்த்து விருப்பப்பட்டு எந்த பெண்ணாக இருந்தாலும் கட்டிக் கொள்வதாக இருந்தால் கட்டிக் கொள்ளட்டும். அல்லது எனக்கு கல்யாணமே ஆகாமல் போனாலும் பரவாயில்லை என்று பேசினார்.அவரது ம்னோ தைரியத்தையும் வைராக்கியத்தையும் பாராட்டிவிட்டு, அங்கே கொஞ்ச நேரம் எல்லோரிடமும் பேசிவிட்டு வந்து விட்டேன்.

பையனுக்கு திருமணம்:

சில மாதங்களுக்கு முன்பு அந்த பையனுடைய அப்பா, பேராசிரியரிடம் விலாசத்தை தெரிந்து கொண்டு, என்னுடைய வீட்டிற்கு அந்த பையனுக்கு திருமணம் என்று அழைப்பிதழ் வைக்க வந்தார். அவரிடம் பேசியதில், பெண் வீட்டில் எல்லோருக்கும் சம்மதம் என்றும், அந்த பெண்ணிடமே பையன் நேரில் பேசி சம்மதம் கேட்டுக் கொண்டதாகவும் சொன்னார். மறக்காமல் அந்த திருமணத்திற்கு சென்றேன். மண மேடையில் அந்த பையனும்  பெண்ணும்  சிரித்தபடி சந்தோஷமாகவே இருந்தனர். எல்லாம் இனிதே நடந்தது.

ஆண்களுக்கு மட்டுமல்ல. பெண்களிலும் தலை வழுக்கை உண்டு. அவர்கள் நிலைமைதான் ரொம்பவும் பரிதாபம். தலை வழுக்கையான  பெண்களிலும் திருமணமாகி குழந்தைகளோடு இருப்பவர்களையும் பார்த்து இருக்கிறேன். எனவே வழுக்கை வாழ்க்கைக்கு ஒரு தடைக்கல் இல்லை. எல்லாவற்றிற்கும் இந்த மனசுதான் காரணம்.

பிரபல ஹாலிவுட் வழுக்கைத் தலை நடிகர்கள்

(படம் மேலே)  பிரபல ஹாலிவுட் நடிகர்  Yul Brynner

(படம் மேலே) ஹாலிவுட் ஆக்‌ஷன் ஹீரோ  Bruce Willis

(படம் மேலே)  பிரபல ஹாலிவுட் நடிகர்  Patrick Stewart

(All Pictures Thanks to "GOOGLE IMAGES" )


Monday 17 November 2014

கில்லர்ஜியின் கனவில் வந்த காந்தி – தொடர் பதிவு.



படத்தில் கில்லர்ஜியுடன் நான் (படம் - நன்றி கில்லர்ஜி)

இனிய நண்பரே தங்களை தொடர்பதிவில் இணைத்திருக்கிறேன் எனது வலைப்பூ வந்து அறிந்து கொள்ளவும்,  -  அன்புடன் தங்களின் நண்பன்  கில்லர்ஜி. என்று ஒரு குறுஞ்செய்தி வந்தது. ந்ண்பர் கில்லர்ஜியின் கனவில் வந்த காந்தி (1) | Killergee
http://killergee.blogspot.in/2014/11/1.html  என்ற பதிவினை சென்று பார்த்தபோது என்னையும் சேர்த்து 10 பேரை ஒரு தொடர் பதிவினை எழுதச் சொல்லி கேட்டு இருந்தார். பள்ளிப் படிப்பின்போது “நான் பிரதமர் ஆனால் “ என்று கட்டுரை எழுதச் சொன்னதுண்டு. கில்லர்ஜியின் கேள்விகளையும் பதில்களையும்  படித்ததும் எனக்கு கல்லூரி மாணவப் பருவத்தில் படித்த யுடோபியா (UTOPIA) என்ற நாவலைப் பற்றிய கட்டுரை (AN ARTICLE) ஒன்றுதான் நினைவுக்கு வந்தது. அந்நூலில் THOMAS MORE அவர்கள் தனது இலட்சிய சமுதாயம் அடங்கிய கனவுலக நாட்டை படைத்துள்ளார். நமது கம்பன்கூட கனவு கண்டு இருக்கிறான்.

வண்மை இல்லை ஓர் வறுமை இன்மையால்
திண்மை இல்லை ஓர் செறுநர் இன்மையால்
உண்மை இல்லை பொய் உரை இலாமையால்
வெண்மை இல்லை பல் கேள்வி மேவலால்.
           - (கம்பராமாயணம் நாட்டுப்படலம்.53)

FOX  நிறுவனத்தார் UTOPIA கருத்தினை மையமாக வைத்து, ஒரு நேரலை காட்சி (REALITY SHOW) ஒன்றை தொடங்கி எதிர்பார்த்த வரவேற்பு இல்லாததால் பாதியிலேயே நிறுத்தி விட்டார்கள்.
                                                (படம் GOOGLE – இற்கு நன்றி)


ஞானி ஸ்ரீபூவு :

கில்லர்ஜியின் கனவில் வந்த இருவரில் மகாத்மா காந்தியை எல்லோருக்கும் தெரியும். இன்னொருவர் ஞானி ஸ்ரீபூவு என்பவர் யார் என்று தெரியவில்லை. அவருடைய வலைத் தளத்திலேயே இதற்கு விடை கிடைத்தது.  ஞானி ஸ்ரீபூவு வகையறா என்ற தலைப்பினில் http://killergee.blogspot.in/2012/05/blog-post_26.html  ஒரு பதிவை எழுதி இருக்கிறார். எனவே ஞானி ஸ்ரீபூவு பற்றிய குழப்பம் இல்லை ஆனாலும் அவரைப் பற்றிய முழு விவரம் இல்லை.. ( நண்பர் கில்லர்ஜி ஞானி ஸ்ரீபூவு பற்றிய விவரங்களை தலபுராணம் போன்று இன்னொரு பதிவாக படங்களுடன் வெளியிட்டால் நன்றாக இருக்கும் )

கேள்விகள் பத்து:

தொடர் பதிவு எழுதிட இதற்கு முன்னரும் சில அன்பு வலைப் பதிவர்கள் அழைத்து இருந்தனர். எழுத நேரம் இல்லாமல் போய்விட்டது. இப்போதும் அப்படியேதான். இருந்தாலும் ஓரளவு எனக்குத் தெரிந்த அளவில் பதில் அளித்துள்ளேன். 

1. நீ மறு பிறவியில் எங்கு பிறக்க வேண்டும் என்று நினைக்கிறாய்?

பிறவாதிருக்க வரம் ஒன்று வேண்டும் என்றார் பட்டினத்தார். எனவே மீண்டும் பிறவாமை நல்லது.

2. ஒரு வேளை நீ இந்தியாவின் ஆட்சியாளனாக வந்துவிட்டால்? சிறப்பாக ஆட்சி செய்யும் திட்டம் உன்னிடம் இருக்கிறதா?

எல்லோரும் (ஆட்சியாளர்கள் மட்டுமன்றி குடிமக்கள் உட்பட் அனைவருமே)  அரசாங்கத்தின் சொத்தாக அறிவிக்கப்படுவர். இதே போல அனைவருக்கும் கல்வி, மருத்துவம் இலவசம். மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆட்சிமன்றக்குழு மாற்றியமைக்கப்படும். ஒருவருக்கு ஒருமுறைதான் இந்த வாய்ப்பு வழங்கப்படும்.

எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் - இங்கு
இல்லாமை இல்லாத நிலை வேண்டும்
வல்லான் பொருள் குவிக்கும் தனி உடமை - நீங்கி
வரவேண்டும் திருநாட்டில் பொதுவுடமை
-            பாடல்: கண்ணதாசன் ( படம்: கருப்புப்பணம் )

இந்த பாடலை கண்டு கேட்டு களித்திட கீழே உள்ள யூடியூப் இணைய முகவரியை சொடுக்கவும் (CLICK HERE)


3. இதற்கு வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் எதிர்ப்பு தெரிவித்தால்? என்ன செய்வாய்?

எல்லோருக்கும் இங்கேயே வேலை வாய்ப்புகள் தரப்படும். வெளிநாட்டு இந்தியர்கள் என்று யாரும் இருக்க அனுமதி இல்லை. சுற்றுலா செல்ல மட்டுமே அனுமதி.

4. முதியோர்களுக்கு என்று ஏதாவது திட்டம் வைத்திருக்கின்றாயா?

முதியோர்கள் அனைவருக்கும் உண்ண உணவும் உடுக்க உடையும் இலவசமாக வழங்கப்படும். மூன்று வேளையும் அரசாங்கமே உணவளிக்கும். உணவு மற்றும் தங்கும் விடுதிகள் நாடெங்கும் தொடங்கப்படும். இதற்காக கையில் காசோ அல்லது அடையாள அட்டையோ தரப்பட மாட்டாது. வேண்டியதை எந்த விடுதியில் வேண்டுமானாலும் சாப்பிட்டுக் கொள்ளலாம். தங்கிக் கொள்ளலாம்.

5. அரசியல்வாதிகளுக்கு என்று புதிய திட்டம் ஏதாவது?

அரசியல்வாதிகள் என்று யாரும் இருக்க மாட்டார்கள். அனைவரும் மக்கள் பணியாளர்கள்

6. மதிப்பெண் தவறென, மேல்நீதி மன்றங்களுக்குப் போனால்?

சட்டத்திற்கு மதிப்பளிக்கப்படும். சட்டத்தின் முன் அனைவரும் சமம்.

7.விஞ்ஞானிகளுக்கென்று ஏதும் இருக்கிறதா?

விஞ்ஞானிகளுக்கு அரசாங்கமே வேண்டிய உதவிகளைச் செய்யும்.

8. இதை உங்களுக்குப் பிறகு வரும் ஆட்சியாளர்கள் செய்வார்களா?

தொடர்ந்து கடை பிடித்திட இந்த ஆட்சியிலேயே அடுத்து வர வேண்டியவர்கள் பட்டியல்கள் தயாரிக்கப்பட்டு  ஏற்பாடுகள் செய்யப்பட்டுவிடும். ஒரு முறைதான் ஒருவருக்கு ஆட்சிப் பணியாளராக இருக்க அனுமதி. பதவியை விட்டு இறங்கியதும் அவருக்குண்டான பணியினைச் செய்ய சென்றுவிட வேண்டும்.

9.மற்ற நாடுகளில் இல்லாத ஏதாவது புதுமையாக?

தேர்தல் செலவுகளை (அதாவது நிர்வாகச் செலவுகளை) அரசாங்கமே ஏற்றுக் கொள்ளும். தேர்தலில் வேறு செலவுகள் செய்ய யாருக்கும் அனுமதி இல்லை.

10. எல்லாமே சரியாக சொல்வது போல் இருக்கு. ஆனால் நீ மானிடனாய் பிறந்து நிறைய பாவங்களை செய்து விட்டாய். உனக்கு மீண்டும் மானிடப் பிறவி கொடுக்க முடியாது. ஆகவே வேறு என்ன பிறவி வேண்டுமென இறைவன் கேட்டால்?

பிறவியே வேண்டாம். மீண்டும் தொடக்கத்தில் இருந்து.