Wednesday 30 July 2014

பைபிள் ஓவியங்கள்


நான் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புவரை படித்தது ஒரு கிறிஸ்தவ மிஷனரி பள்ளியில்தான். அப்போதெல்லாம் ஞானோபதேசம் எனப்படும் வகுப்புகளை கிறிஸ்தவ பிள்ளைகளுக்கும், நல்லொழுக்கம் எனப்படும் வகுப்புகளை பிற சமயம் சார்ந்த பிள்ளைகளுக்கும் அந்த பள்ளியில் நடத்தினார்கள்.  நான் நல்லொழுக்க வகுப்பிற்குச் சென்றபோதிலும் கிறிஸ்தவ நண்பர்கள் வைத்து இருக்கும் “நற்கருணை வீரன் எனப்படும் பைபிள் படக் கதைப் பிரசுரங்களையும் மற்ற நூல்களையும் வாங்கிப் படிப்பேன். அந்த வகையில் அந்த நூல்களில் உள்ள பைபிள் சம்பந்தப்பட்ட வண்ண ஓவியங்கள் எனது மனதைக் கவ்ர்ந்தன.

இந்துக் கோயில்கள் சென்றாலும் கிறிஸ்தவ தேவாலயங்கள் சென்றாலும் அங்குள்ள வண்ண ஓவியங்களை ரசிப்பவன் நான். கிறிஸ்தவ தேவாலயங்களுக்குச் சென்றால் உட் கூரை ஓவியங்கள் (CEILING PAINTINGS) , சுவர்ச் சித்திரங்கள் (WALL PAINTINGS) மற்றும் ஜன்னல்களில் உள்ள கண்ணாடி ஓவியங்கள் (GLASS PAINTINGS) முதலானவற்றைக் காணலாம். அந்த ஓவியங்கள் அனைத்தும் மைக்கேல் ஆஞ்சலோ (Michelangelo) லியனார்டோ டா வின்சி (Leonardo da Vinci) மற்றும் ரபேல்(RAPHAEL ) போன்ற இத்தாலிய ஓவியர்கள் வரைந்த ஓவியங்களின் அடிப்படையிலேயே இருப்பதைக் காணலாம். மேலும் பைபிள் சம்பந்தப்பட்ட நூல்களிலும் இந்த ஓவியங்களைக் காணலாம். அந்த வகையில் சில பைபிள் ஓவியங்கள் இங்கே.

குழந்தை இயேசு ( INFANT JESUS)

இயேசு பெத்லேகம் என்ற ஊரில் மாட்டுக் கொட்டகையில் பிறந்தார். இதனடிப்படையில் வரையப்பட்ட வண்ண ஓவியங்கள் நிறைய உண்டு. மேலே உள்ள ஓவியம் மிகவும் பிரபலமானது. வரைந்த ஓவியர் யாரென்று அறிய முடியவில்லை.

இயேசுவின் ஞானஸ்ஞானம் (BAPTISM OF JESUS CHRIST)


அந்நாட்களில் யோவான் ஸ்நானகன் என்பவர் யூதேயாவின் வனாந்தரத்தில் பொது மக்களுக்கு போதனைகள் செய்து கொண்டு இருந்தார். யோவானின் போதனையைக் கேட்க நிறைய மக்கள் வந்தனர். யோவான் அவர்களுக்கு யோர்தான் நதியில் ஞானஸ்நானம் கொடுத்தார். இயேசு கலிலேயாவிலிருந்து  யோர்தான் நதிக்கரைக்கு வருகிறார். இயேசு யோவானிடம் சென்று தனக்கு ஞானஸ்நானம் கொடுக்கும்படிக் கேட்டார். ஆனால் யோவானோ இயேசுவுக்குத் தான் ஞானஸ்நானம் கொடுக்குமளவுக்கு மேன்மையானவன் அல்ல என்று அவரைத் தடுத்தார். பின்னர் யோவான் இயேசுவின் வற்புறுத்தலுக்குப் பிறகு அவருக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறார். படம் வரைந்த ஓவியர் BARTOLOME ESTEBAN MURILLO   

இயேசு கோயில் வியாபாரிகளை விரட்டுதல்(Casting out the Money Changers)

(படம் மேலே) Christ Cleansing the Temple

இயேசு ஒருநாள் ஜெருசேலம் நகரில் உள்ள கோயிலுக்கு செல்கிறார். அங்கே ஆடு மாடுகள் அடைந்து இருப்பதையும், வியாபாரிகள் ஆக்கிரமித்துக் கொண்டு ஒரே கூச்சலாக வியாபாரம் செய்வதையும், சூதாட்ட்ங்கள் நடப்பதையும் காண்கிறார். கோயில் கொள்ளையர்கள் கூடாரானமானதைக் கண்டு, மனம் வெகுண்ட இயேசு அவர்களை விரட்டி அடிக்கிறார். அந்த காட்சியை சொல்லும் ஓவியம் இது. வரைந்த ஓவியர் CARL HEINRICH BLOCH

இயேசுவின் மலைப் பொழிவு (THE SERMON ON THE MOUNT)


(படம் மேலே) ஒரு மலைப் பகுதியில் தனது சீடர்களுக்கும் பொது மக்களுக்கும் இயேசு பிரசங்கம் செய்தார். அந்த சொற்பொழிவு இயேசுவின் மலைப் பொழிவு எனப்படுகிறது. படம் வரைந்த ஓவியர் CARL HEINRICH BLOCH

ஊதாரி மைந்தன் (The Prodigal Son)

இயேசு சொன்ன உவமைக் கதை இது. ஒருவனுக்கு இரண்டு மகன்கள். மூத்தவன் அப்பன் பேச்சை கேட்டு வீட்டில் இருக்கிறான். இளையவன் கெட்ட நண்பர்கள் சகவாசத்தால் சொத்தில் தனது பங்கைபிரித்துத் தரும்படி வாங்கிக் கொண்டு வெளிதேசம் செல்கிறான். அந்த மகன் என்றேனும் ஒருநாள் திரும்பி வருவான் என்ற நம்பிக்கையில் தகப்பன் இருக்கிறான். வெளிதேசம் சென்ற மைந்தன் அங்கு சொத்துக்களை அழித்துவிட்டு ஒரு குடியானவனிடம் பன்றி மேய்ப்பவனாக இருக்கிறான். மனம் ருந்திய அவன் தனது வீடு திரும்புகிறான். அவன் வீட்டிற்கு தொலைவில் வரும் போதே அவனை கவனித்து விட்ட அவனது தந்தை ஓடி வந்து வரவேற்கிறான். மனம் திரும்பிய அவனை அவனது தந்தை மன்னித்து ஏற்றுக் கொள்கிறான். இந்த கதையை விளக்கும் படம் இது. படத்தினை வரைந்தவர் Harold Copping

கடைசி இரவு உணவு ( LAST SUPPER)

இயேசுநாதர் தனது சீடர்களுடன் இரவு உணவு உண்ணுகிறார். அதுசமயம் யூதாஸ் என்ற அவரது சீடனே அவரைக் கன்னத்தில் முத்தமிட்டு இன்னார்தான் இயேசு என்று காட்டிக் கொடுக்கிறான். அதன் பின்னர் இயேசுவை அரண்மனைக் காவலர்கள் கொண்டு செல்கின்றனர். அடுத்தநாள் இயேசு சிலுவையில் அறையப் படுகிறார். இந்த நிகழ்ச்சியை மையமாக வைத்து கடைசி இரவு உணவு ( LAST SUPPER) எனப்படும் இந்த ஓவியத்தை மிலான் நகரில் உள்ள, சாண்டா மரியா தேவாலயத்தில் லியனார்டோ டா வின்சி வரைந்தார். நாளடைவில் இந்த ஓவியம் பழுதடைந்து போகவே பின்னாளில் சீர்திருத்தம் செய்து புதுப்பித்தனர். பிற்பாடு நிறைய ஓவியர்கள் அந்த ஓவியத்தின் நகலை வரைந்தனர்.

(படம் மேலே) இயேசு தனது சீடர்களுடன் கடைசியாகக் கலந்து கொண்ட இரவு உணவுக் காட்சி. படம் வரைந்தவர் JUAN DE JUANES  

சிலுவையில் இயேசு (JESUS’ CRUCIFIXION) மற்றும் உயிர்த்தெழுதல் (Resurrection of Jesus)


(படம்: மேலே சிலுவையில் இயேசு ஓவியர் CARL HEINRICH BLOCH ) 

சிலுவையில் அறையப்பட்ட இயேசு இறந்து போகிறார் அவரை ஒரு சிறு குகைக் கல்லறையில் அடக்கம் செய்கிறார்கள். இறந்த மூன்றாம் நாள் அவர் உயிர்த்தெழுந்தார்

மேலே உள்ள உயிர்த்தெழுதல் படத்தினை வரைந்தவர் ஓவியர் ரபேல் (RAPHAEL)

கட்டுரை எழுத துணை நின்றவை:
MY THANKS TO –
மத்தேயு சுவிசேஷம்
www.google.co.in

 

Sunday 27 July 2014

திருச்சி – பாரத ஸ்டேட் வங்கி ஓய்வூதியர் நலச் சங்க கூட்டம் (JULY.2014)ஸ்டேட் வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களின் நலனை முன்னிட்டு பாரத ஸ்டேட் வங்கி ஓய்வூதியர் நலச் சங்கம் (STATE BANK OF INDIA PENSIONERS’ ASSOCIATION) இயங்கி வருகிறது. மேலும் சங்கத்தின் சார்பாக உறுப்பினர்களுக்காக SBI ELDERS VOICE என்ற மாதப் பத்திரிகையும் வெளிவந்து கொண்டு இருக்கிறது. இந்த சங்கத்தின் உறுப்பினர் என்ற முறையில் எனக்கு அழைப்பு வந்ததால் திருச்சியில் நேற்று (26 ஜூலை 2014) மாலை நடைபெற்ற பாரத ஸ்டேட் வங்கி ஓய்வூதியர் நலச் சங்கம் (STATE BANK OF INDIA PENSIONERS’ ASSOCIATION)  கூட்டத்திற்கு சென்று வந்தேன்.

கூட்டம் , ஸ்டேட் வங்கி, திருச்சிராப்பள்ளி கிளையில் நடைபெற்றது. திருச்சி மண்டல செயலாளர்  திரு V கிருஷ்ணன் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். SBI  உதவி பொது மேலாளர் S. சீனிவாச ராகவன் தலைமை தாங்க, திருமதி சரஸ்வதி அவர்கள் இறை வணக்கம் பாட கூட்டம் இனிதே தொடங்கியது.

(படம் மேலே) SBI திருச்சிராப்பள்ளி கிளை

(படம் மேலே)  இறை வணக்கம்

முன்னதாக 80 வயது நிறைவடைந்த சங்க உறுப்பினர்களுக்கு பொன்னாடை போற்றி கவரவிக்கப் பட்டது. ( 80 வயது நிரம்பிய கூட்டத்திற்கு வர இயலாத உறுப்பினர்களுக்கு அவர்கள் வீட்டிற்கே சென்று பொன்னாடை போர்த்தியதாக திருச்சி மண்டல செயலாளர்  திரு V கிருஷ்ணன் அவர்கள் தெரிவித்தார் ) திரு K.கோமதிநாயகம் (SBI CHIEF MANAGER (HR) , V.R.உதயசங்கர் (துணைத் தலைவர்), M. அசோக் (மண்டலச் செயலாளர், SBOA), திரு R. டேவிட் ஜெயகர் ராய் ( துணைப் பொதுச் செயலாளர், SBSU) ஆகியோர் உரையாற்றினார்கள். சங்க உறுப்பினர்கள் திருவாளர்கள்  சிவஞானம், பாலகிருஷ்ணன், வாசுதேவன், சங்கர், ஜெயசிங்கம், ஜம்புநாதன், ராமமூர்த்தி, ஆறுமுகம், மற்றும் முனுசாமி ஆகியோர் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர்.

கூட்டத்தில் பென்ஷன்தாரர்களின் பிரச்சினைகள் குறிப்பாக ஸ்டேட் வங்கி டிஸ்பென்சரியில் மருந்து, மாத்திரை இல்லாதது,  மெடிக்கல் பில்கள் தாமதம் ஆவது , MUTUAL WELFARE SCHEME இல் உள்ள சங்கடங்கள் பற்றி நிறைய கருத்துரைகள் சொன்னார்கள். முக்கியமாக 7-ஆவது ஊதிய ஒப்பந்த பென்சன்தாரர்களுக்கு மட்டும் அவர்களுக்குரிய பென்ஷன் தரப்படாதது குறித்து நிறையவே ஆதங்கப்பட்டார்கள். கூட்டத்தின் இறுதியில் சிறப்புரை ஆற்றிய பாரத ஸ்டேட் வங்கி ஓய்வூதியர் நலச் சங்க தலைவர் திரு H.கணபதி அவர்கள், சங்க உறுப்பினர்களின் சந்தேகங்கள் கேள்விகளுக்கான பதில்களையும், ஸ்டேட் வங்கியின் பென்ஷன் வரலாறு மற்றும் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்தும், கோர்ட்டில் வழக்குகள் இருக்கும் நிலைமை, வழக்குகள் போடுவதால் ஏற்படும் சாதக பாதகங்கள் குறித்தும் பேசினார்.  

கூட்டத்தின் ஆரம்பத்தில் துளசி பார்மசிஸ் A/C இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தார் இலவசமாக  இரத்த அழுத்தம், சர்க்கரை பரிசோதனை நடத்தி ஆலோசனைகள் தந்தனர். மற்றும் சங்க உறுப்பினர்களுக்கு இனிப்பு, காரம் , காப்பி இவைகளோடு நினைவுப் பரிசாக சிறிய CELLO CRUNCH INSUILATED CARRIER  வழங்கப்பட்டது. திரு அண்ணாமலை அவர்கள் நன்றியுரை கூற தேசிய கீதத்துடன் கூட்டம் இனிதே முடிவுற்றது. கூட்டத்திற்கான ஏற்பாடுகளை திருச்சி மண்டல செயலாளர்  திரு V கிருஷ்ணன் அவர்கள் சிறப்பாக செய்து இருந்தார்.

(படங்கள் மேலே) வரவேற்பாளர்கள்
  
(படம் மேலே) திருச்சி மண்டல செயலாளர்  திரு V கிருஷ்ணன் அவர்கள் வரவேற்பு

(படம் மேலே) சிறப்பு அழைப்பாளர்கள்


(படங்கள் - மேலே) கூட்டத்திற்கு வந்து இருந்தவர்கள்

(படங்கள் - மேலே) 80 வயது நிரம்பிய சங்க உறுப்பினர்களுக்கு பொன்னாடை போர்த்தப்பட்டது)

(படம் மேலே) சங்க உறுப்பினர்களுக்கு இனிப்பு, காரம் , காப்பி இவைகளோடு நினைவுப் பரிசாக சிறிய CELLO CRUNCH INSUILATED CARRIER  வழங்கப்பட்டது.

(படம் மேலே) கூட்டத்தில் ஒரு காட்சி

(படம் மேலே) SBI  உதவி பொது மேலாளர் S. சீனிவாச ராகவன் அவர்கள் தலைமை உரை

(படம் மேலே) திரு K.கோமதிநாயகம் (SBI CHIEF MANAGER (HR)

(படம் மேலே) M. அசோக் (மண்டலச் செயலாளர், SBOA) அவர்கள் உரை

 
(படம் மேலே) திரு R. டேவிட் ஜெயகர் ராய் ( துணைப் பொதுச் செயலாளர், SBSU) அவர்கள் உரை

(படம் மேலே) V.R. உதயசங்கர் (துணைத் தலைவர்) அவர்கள் உரை

(படம் மேலே) சங்க தலைவர் திரு H.கணபதி அவர்கள் சிறப்புரை
Tuesday 15 July 2014

தானியம் மற்றும் பழ உணவுகள் – கவனம் தேவை!எனக்குத் தெரிந்த ஒருவரைப் பார்க்கப் போயிருந்தேன். அருகில் அவரது நண்பர். இருவருமே என்னைவிட மூத்தவர்கள். மேஜையில் ஒரு பாத்திரத்தில் ஏதோ தின்பதற்கான உணவுப் பொருள். இருவருமே அந்த உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். நான் போனதும் என்னையும் எடுத்துக் கொள்ளச் சொன்னார்கள். பாத்திரத்தில் அவித்த பச்சைப் பயறு. எனக்கு பிடிக்காத சமாச்சாரம். ரொம்பவும் நாசுக்காக இப்போதுதான் சார் மதியச் சாப்பாடு சாப்பிட்டு வந்தேன். எனவே வேண்டாம் “ என்றேன். அவரோ “ என்ன இளங்கோ பச்சைப்பயறு போன்ற தானியங்கள் உடம்புக்கு எவ்வளவு நல்லது தெரியுமா?என்று சொல்லி விட்டு அவற்றைப் பற்றி சொல்ல ஆரம்பித்து விட்டார். அருகில் இருந்த நண்பர் எனது பகுதிக்கு அருகே வசிப்பவர். அவரும் எங்கள் பகுதியில் புதிதாகத் திறந்துள்ள தானிய உணவு ஓட்டலைப் பற்றியும் அங்கே புதிதாகக் கிடைக்கும் கேழ்வரகு ரொட்டி, கம்பு ரொட்டி, கம்பங் கூழ், சோளப்புட்டு போன்றவற்றையும் சொன்னார். நான் ஏதும் சொல்லாமல் அவர்களுக்காக அந்த அவித்த பச்சைப் பயற்றில் கொஞ்சம் எடுத்துக் கொண்டேன். பச்சைப் பயறு அதிகம் சாப்பிட்டால் உடம்பில் வாயுத் தொல்லைதான்.

உணவும் மனித உடம்பும்:

சிலருக்கு ஒத்துக் கொள்ளக் கூடிய  உணவு சிலருக்கு ஒத்துக் கொள்ளாது. காரணம் ஒவ்வோரு மனிதரின் உடம்பும் ஒருவகைத் தன்மையது. அதனை வாத உடம்பு, பித்த உடம்பு, சிலேத்தும உடம்பு (வாதம், பித்தம், சிலேத்துமம்) என்று சொல்லுவார்கள்.

ஒரு கதை உண்டு. ஒரு வைத்தியர் காய்கறி வாங்கச் செல்கிறார். சென்ற இடத்தில் இது பித்தம், இது உஷ்ணம், இது வாய்வு என்று எல்லா காய்கறிகளையும் ஒதுக்கி விட்டு ஒன்றுமே வாங்காமல் வந்து சேருவார். இதுபோல் ஒவ்வொரு உணவுப் பொருளுக்கும் இருக்கும் குணங்களை விளக்கும் மருத்துவ நூல்கள் தமிழில் உள்ளன. நாம் அந்த வைத்தியர் போல் இருக்க வேண்டாம். இருந்தாலும் ஒவ்வொரு பொருளுக்கும் உள்ள பொதுக் குணத்தோடு நமக்கு ஒத்துப் போகாத குணத்தையும் தெரிந்து கொண்டு சாப்பிட வேண்டும்.

உணவின் குணம்:


பொதுவாகவே மக்கள் மத்தியில், பழங்கள் சாப்பிட்டால் உடம்புக்கு நல்லது., உணவு தானியங்களை சாப்பிட்டால் உடம்புக்கு வலிமை என்று ஒரு பொதுவான எண்ணம் உண்டு. ஆனால் நடை முறையில் அவ்வாறு இல்லை. திராட்சைப் பழம் நல்லதுதான். இரத்த விருத்தி தரும் என்பார்கள். ஆனால் சிலருக்கு மூச்சுத் திணறலை உண்டு பண்ணும். அதே போல சிலர் கீரையை நிறைய சாப்பிடுங்கள் என்பார்கள், ஆனால் சிலபேருக்கு சில கீரை வகைகள் ஒத்துக் கொள்ளாது. இதே போல அவித்த சோளக் கதிர் சாப்பிட சுவையாக இருக்கும். ஆனால் சிலருக்கு வயிற்றுப் போக்கை ஏற்படுத்தி விடும். சிறு குழந்தைகள் பலாப்பழம் சாப்பிட்டால் மாந்தம் ஏற்படும் என்பார்கள். (மாந்தம் என்பது குழந்தைகளுக்கு வருவது. குடல் செரிக்கும் தன்மையை இழந்து வயிறு வீக்கமாக இருக்கும். குழந்தை சோர்ந்து விடும்) எனவே ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு பொதுக் குணம் இருப்பது போலவே ஒவ்வாமை (ALERGY) உண்டு பண்ணும் குணமும் உண்டு.

இதனால்தான் அந்த காலத்தில் ஒரு பொருளைச் சாப்பிடும்போது எப்படி சாப்பிட வேண்டும் எவ்வளவு சாப்பிட வேண்டும் என்றும் சொன்னார்கள். உதாரணமாக வறுத்த கடலையை சாப்பிட்டால் அது சீக்கிரம் செரிமானம் ஆக ஒரு சின்ன வெல்லக் கட்டியைச் சாப்பிடச் சொன்னார்கள். சாப்பிட்ட உணவு செரிமானம் ஆவதற்கு  வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு எனப்படும் தாம்பூலம் எடுத்துக் கொண்டார்கள். கரும்பை சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிக்கக் கூடாது. வாய் வெந்து விடும்.

( இங்கே இன்னொரு விஷயம். வெறும் வயிற்றோடு அல்லது சாப்பிட்ட உடனேயே அதிக பளுவைத் தூக்குவதோ அல்லது சைக்கிள் மிதிப்பதோ அல்லது காலால் உதைத்து இரு சக்கர வாகனத்தை ஸ்டார்ட் செய்வதோ கூடாது. அவ்வாறு செய்தால் எரனியா எனப்படும் குடல் இறக்கப் பிரச்சினை வரும்)

நாவல்பழம்: - இது மருத்துவ குணம் கொண்டது. அதிகம் சாப்பிட்டால் தொண்டை கட்டிக் கொள்ளும்.
வாழைத் தண்டு: - இதற்கு சிறுநீரகத்தில் கல் இருந்தால் கரைக்கும் குணம் உண்டு. ஆனால் தொடர்ந்து அதிகம் சாப்பிட்டால் உடம்பு வலுவிழந்து விடும். இதுபோல சொல்லிக் கொண்டே போகலாம்.

வள்ளுவர் வாக்கு:

முன்பு தமிழில் ஒரு வார இதழ் வந்து கொண்டிருந்தது. அதில் ரீடர்ஸ் டைஜஸ்ட் போன்று பல சுவையான செய்திகள் இருக்கும். ஒரு வாரம் கத்தரிக்காயைப் பற்றி ஓகோ என்று எழுதி இருப்பார்கள். இன்னும் சில வாரங்கள் கழித்து அதே கத்தரிக்காய் உடம்புக்கு அரிப்பை உண்டு பண்ணும் குணம் அதிகம் என்று எழுதி இருப்பார்கள். இப்போதும் கீரைகளைச் சாப்பிடுங்கள், பழங்களைச் சாப்பிடுங்கள், தானியங்களைச் சாப்பிடுங்கள் என்று எழுதிக் கொண்டு இருக்கிறார்கள். நாம்தான் நமது உடம்புக்கு ஒத்துக் கொள்ளும் (செரிக்கும்) பொருளை எடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக குழந்தைகளுக்கும் தர வேண்டும்.

மேலே சொன்ன இந்த கருத்தினை உள்ளடக்கியே நமது வள்ளுவரும்,

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின். திருக்குறள் ( 942 )

என்றார்.

இதன் பொருள்:
(மு.வ உரை) முன் உண்ட உணவு செரித்த தன்மை ஆராய்ந்து போற்றியப் பிறகு தக்க அளவு உண்டால், உடம்பிற்கு மருந்து என ஒன்று வேண்டியதில்லை.

(நாம் முன்பு சாப்பிட்ட ஒரு உணவு செரிக்கவில்லை அல்லது உடம்பிற்கு ஒத்துக் கொள்ளவில்லை என்றால் அதனைத் தவிர்ப்பது நல்லது)

PICTURES THANKS TO GOOGLE

Saturday 12 July 2014

அதிசய புத்தகம் – A WONDER – BOOK FOR GIRLS AND BOYSபள்ளி பருவத்தில் நத்தானியல் ஹத்தான் உலக அற்புதக் கதைகள்  என்று ஒரு புத்தகம் படித்தேன். தமிழில் எழுதியவர் பெயரும் நூலை வெளியிட்ட பதிப்பகத்தாரின் பெயரும் நினைவில் இல்லை. அதில் உள்ள கதைகள் அனைத்தும் கிரேக்க பழங்கதைகள். படிக்கப் படிக்க சுவாரஸ்யம். பிற்பாடு அந்த நூலை விலைக்கு வாங்க முயற்சி செய்தும் பழைய புத்தக கடைகளில் தேடியும் கிடைக்கவில்லை. அதன் பிறகு அந்த நூலின் கதைகளை ஆங்கிலத்தில் படிக்க  நேர்ந்தது. அந்த நூலின் பெயர் A Wonder-Book for Girls and Boys.

எழுத்தாளர் நதானியேல் ஹாதோர்ன்

ந்த நூலின் மூல ஆசிரியர் நதானியேல் ஹாதோர்ன் (NATHANIEL HAWTHORNE – பிறப்பு 4 ஜூலை 1804 இறப்பு 19 மே 1864) இவர் ஒரு அமெரிக்க எழுத்தாளர். நாவல்களும சிறுகதைகளும் எழுதி உள்ளார்.

அதிசய புத்தகம் (A Wonder-Book for Girls and Boys) என்ற இந்த நூலில் ஆறு கதைகள் உள்ளன.

The Gorgon's Head
The Golden Touch
The Paradise of Children
The Three Golden Apples
The Miraculous Pitcher
The Chimæra

மெடூஸாவின் தலை (THE GORGON’S HEAD )

இந்த உலகத்திற்கு அப்பால் ஒரு இருண்ட கடல். கடல் நடுவே ஒரு தீவு. அந்த தீவில் மூன்று பெண் பூதங்கள்(GORGONS). அவர்களில் ஒருத்திக்கு மட்டும் தலையில் தலைமுடிகளுக்குப் பதில் பாம்புகள். எனவே தலை முழுக்க பாம்புகள் தொங்குகின்றன. அவள் முகம் அழகாக இருந்தாலும் அவளது உடல் அருவருப்பான இறக்கைகளால் மூடப்பட்டு இருந்தன.. அவளை நேருக்கு நேர் பார்த்தவர்கள் கல்லாக சமைந்து விடுவார்கள். அந்த பூதத்தின் பெயர் மெடூஸா (MEDUSA). அவளது தலையை வெட்டி எடுத்து வரவேண்டும். பெர்ஸியஸ் (PERSEUS) என்ற வீரன் எப்படி அந்த அரக்கியின் தலையைக் கொய்தான், தன் தாயை மீட்டான், தன் காதலியை அடைந்தான் என்பது கதை.

தொட்டால் தங்கம் (THE GOLDEN TOUCH )

மிடாஸ் (KING MIDAS) என்ற மன்னனுக்கு தங்கத்தின் மீது பேராசை. ஒரு தேவதையை சந்தித்த போது தான் தொட்டதெல்லாம் பொன்னாக வேண்டும் என்று வரம் கேட்டான். தேவதையும் அப்படியே ஆகட்டும் என்று வரம் தந்தது. ஆசை ஆசையாய் ஒவ்வொரு பொருளையும் தொட்டான். எல்லாம் பொன்னாக மாறின.. கடைசியில் அவன் தனது ஒரே மகளை அன்புடன் தொடும்போது அவளும் தங்கப் பதுமையாகி விடுகிறாள். பேராசை பெரு நஷ்டம் என்பதை விளக்கும் கதை. எல்லோருக்கும் தெரிந்த சிறு வயதில் நாம் படித்த கதைதான் இது.

குழந்தைகளின் சொர்க்கம் (THE PARADISE OF CHILDREN)

ரொம்ப ரொம்ப நாளைக்கு முன்னர் ஒரு சிறிய வீட்டில் எபீமத்தியாஸ் (EPIMETHEUS) என்ற அநாதைச் சிறுவன் வசித்து வந்தான். பல குழந்தைகள் வசித்த போதிலும் அவனுக்குத் துணையாக இன்னொரு அநாதை சிறுமியும் அங்கு வந்து சேர்ந்தாள். அந்த பெண்ணின் பெயர் பண்டோரா (PANDORA ).அந்த வீட்டில் இருந்த அனைவரும் மகிழ்ச்சியாகவே இருந்தனர். யாருக்கும் எந்த வேலையும் இல்லை. எந்த பயமும் தொல்லையும் இல்லை. உண்ணத் தேவையான அனைத்தும் கிடைத்தன. ஆடல் பாடல் என்று ஒரே மகிழ்ச்சி.அந்த இடம் குழந்தைகளின் சொர்க்கமாக விளங்கியது.

அந்த பெண் பண்டோரா வந்த நாளிலிலிருந்து அந்த வீட்டில் ஒரு பெரிய பழைய பெட்டி திறக்கப்படாமல் மூடியே இருப்பதைக் கண்டாள். எனவே அவள் எபீமத்தியாஸிடம் அந்த பெட்டியில் என்ன இருக்கிறது என்று தினமும் கேட்டுக் கொண்டே இருந்தாள். ஆனால் அவனோ அது ஒரு ரகசியம், வேண்டாம் என்று தடுத்துக் கொண்டே இருந்தான். ஆனால் அவளோ,  ஒருநாள் ஆவலின் காரணமாக அந்த பெட்டியை திறந்து விடுகிறாள். பெட்டியில் இருந்த எல்லா நல்ல (குணங்களும்) ஆவிகளும் வெளியேறி விடுகின்றன. ஒரு நல்ல ஆவி மட்டும் பெட்டியை விட்டு வெளியேறவில்லை. அதன் பெயர் நம்பிக்கை ( HOPE ) என்பதாகும். அந்த பெண்ணின் பெயராலேயே. அவள் திறந்த அந்த பெட்டியும் பண்டோரா பெட்டி ( PANDORA BOX) என அழைக்கப்பட்டது.

எல்லா நல்ல குணங்களும் வெளியேறி விட்டதால் சொர்க்கமாக இருந்த  அந்த இடம் துன்பங்களின் இருப்பிடமாகிவிட்டது. ஆனாலும் நம்பிக்கை அந்த பெட்டியிலேயே தங்கி விட்ட படியினால், யாரும் நம்பிக்கையை மட்டும் இழக்கவில்லை.

(அதனால்தான் மனிதர்கள் எல்லாவற்றையும் இழந்தாலும் நம்பிக்கையை மட்டும் இழக்காமல் வாழ்கிறார்கள் போலிருக்கிறது)

மூன்று தங்க ஆப்பிள்கள் (THE THREE GOLDEN APPLES)

ஹெர்குலிஸ் (HERCULES) அட்லஸ் (ATLAS ) கதைகளை இங்கு படிக்கலாம். மூன்று தங்க ஆப்பிள்களுக்காக ஹெஸ்பெரடீஸ் (Hesperides) என்ற தோட்டத்தை தேடிச் செல்லுகிறான் ஹெர்குலிஸ். வழியில் தென்படுவோரிடம் வழிகேட்டு இறுதியில் அட்லஸ் இருக்கும்  இடம் வருகிறான். அங்கு அட்லஸ் தனது தலைக்கு மேலே விண்ணைச் சுமந்தபடி நிற்பதைக் காண்கிறான். அவனிடம் ஹெஸ்பெரட்ஸ் தோட்டத்தைப் பற்றியும், தங்க ஆப்பிள்களைப் பற்றியும் வினவுகிறான். அட்லஸ் நானே உனக்கு அவற்றை கொண்டு வருகிறேன் அதுவரை இந்த விண்ணைச் சுமந்து இரு என்று சொல்லிவிட்டு ஹெர்குலிஸ் தோளுக்கு அதனை மாற்றி விட்டு செல்லுகிறான். மூன்று தங்க ஆப்பிள்களோடு திரும்பவரும் அட்லஸுக்கு திரும்பவும் விண்ணை சுமந்து இருக்க விரும்பவில்லை. அட்லஸின் மன ஓட்டத்தைப் புரிந்து கொண்ட ஹெர்குலிஸ் அவனிடம் தந்திரமாகப் பேசி மீண்டும் அட்லஸையே விண்ணைச் சுமந்து இருக்கும்படி செய்து விட்டு , அவனிடமிருந்த மூன்று தங்க ஆப்பிள்களை எடுத்துக் கொண்டு தப்புகிறான்.

அதிசய ஜாடி (THE MIRACULOUS PITCHER)

இரண்டு புதிய வழிப்போக்கர்கள் ஒரு ஊருக்கு வருகின்றனர். அவர்களது தோற்றத்தைக் கண்டு அந்த ஊர் மக்கள் அவர்களை விரட்டுகின்றனர். சிறுவர்கள் அவர்கள் மீது கல்லெறிகின்றனர். தெரு நாய்கள் குரைத்தபடியே துரத்தி வருகின்றன. இவர்களது நிலை கண்டு இரக்கப்பட்ட பிலேமான் (PHILEMON) பாயுசிஸ் (BAUCIS) என்ற முதிய தம்பதியினர் அவர்களுக்கு தங்கள் வீட்டில் தங்க இடம் தருகின்றனர். போதிய ரொட்டியும் பழங்களும் இல்லாத போதும் தங்களுக்கு என்று இருந்ததை கொடுத்து உபசரிக்கின்றனர். இதனால் மகிழந்த அந்த வழிப்போக்கர்கள் அங்கிருந்த ஜாடியை அற்புத ஜாடியாக மாற்றுகின்றனர். இதனால் முதிய தம்பதியினர் வீட்டு ஜாடியில் பால் எடுக்க எடுக்கக் குறையாமல் வருகிறது. மேலும் அவர்களது சிறிய வீட்டையும் ஒரு பெரிய மாளிகையாக  மாற்றி விடுகின்றனர். 

அந்த முதிய தம்பதியினர் அதன் பின்னர் பல ஆண்டுகாலம் அந்த மாளிகையில் வாழ்ந்தனர். வரும் விருந்தினர்களுக்கு தங்களிடமிருந்த அற்புதச் ஜாடி மூலம் பசியாற்றினர். ஒருநாள் இருவரும் அங்கேயே மரங்களாக மாறிவிடுகின்றனர். ஆனாலும்  “ நல்வரவு! நல்வரவு! வழிப்போக்கர்களே! நல்வரவு என்று வரவேற்றுக் கொண்டுதான் இருக்கிறார்கள்..
 
சிமேரா (THE CHIMAERA )

பறக்கும் குதிரை என்ற சுவாரஸ்யமான கதையோடு சம்பந்தப்பட்ட கதை. ஆட்டின் உடலும் பாம்பின் வாலும் சிங்கத்தின் தலை.யும் கொண்ட ஒரு கொடிய விலங்கின் பெயர் சிமேரா (CHIMAERA).  இந்த விலங்கினை பெல்லெரோபோன் (BELLEROPHON) என்ற வீரன் தனது பறக்கும் குதிரை உதவியுடன்  எவ்வாறு கொன்றான் என்பதனையும், அவனது வீரச் செயல்களையும் சொல்லும் கதை இது.

ஓவியர் வால்டேர் கிரேன்

இந்த நூலில் உள்ள கதைகள் அனைத்திற்கும் விளக்கப் படங்களை வரைந்தவர்  ஓவியர் வால்டேர் கிரேன் ( WALTER CRANE - பிறப்பு 15 ஆகஸ்ட் 1845 இறப்பு 14 மார்ச் 1915) இவர் அந்த காலத்து ஆங்கில இலக்கியத்தில் உள்ள பல நூல்களுக்கு (குறிப்பாக சிறுவர் இலக்கியத்திற்கு) கதை அல்லது நிகழ்ச்சிகளுக்கு ஏற்ப அற்புதமான வண்ண ஓவியங்களைத் தீட்டிய மிகவும் பிரபலமான ஓவியர். இந்த நூலுக்கு மட்டும் 60 படங்களை வரைந்துள்ளார்.


MY THANKS TO  
A WONDER – BOOK FOR GIRLS AND BOYS BY NATHANIEL HAWTHORNE WITH 60 DESIGNS BY WALTER CRANE