Monday 5 February 2018

வேதம் புதிது - கபிலரும் பாரதிராஜாவும்



குறிஞ்சிக்கலி பாடிய சங்ககாலப் புலவர் கபிலர் பாடிய பாடல்களைப் படித்து இருக்கிறேன். ஆனால் இதே கபிலர் என்ற பெயர் கொண்ட மற்றவர்கள் எழுதிய பாடல்களைப் படித்ததில்லை. அண்மையில் ‘கபிலர் அகவல்’ என்ற நூலை இண்டர்நெட்டில் படிக்கும் வாய்ப்பு அமைந்தது இந்த நூலைப் பாடியவர் 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கபிலதேவ நாயனார் எனும் புலவர். தமிழ் இலக்கிய வரலாற்றில் காலந்தோறும் ஒரு கபிலர் இருக்கக் காணலாம். காலப்போக்கில் கபிலர் என்பவர் ஒருவர் போலவே கதை சொல்லும் போக்கு அதிகம் உள்ளது.


கபிலரின் பிறப்பு

கபிலரைப் பற்றிய ஒரு பழைய கதை ஒன்று உண்டு. அந்த கதைப்படி ஒருமுறை ப்ரம்மா எனப்படும் நான்முகன் ஒருமுறை யாகம் ஒன்று செய்கின்றான். அந்த வேள்வியில் இருந்த கும்பத்திலிருந்து கலைமகளும் அடுத்து அகத்தியனும் தோன்றுகிறார்கள். அந்த கலைமகளை நான்முகனே மணந்து கொள்கிறான், 

கலைமகளின் உடன்பிறப்பான அகத்தியன் சமுத்திரக் கன்னியை மணந்து கொள்ள, இவர்கள் இருவருக்கும் பெருஞ்சாகரன் என்ற மகன் பிறக்கிறான். இந்த பிரம்மபுத்திரன் (பெருஞ்சாகரன்) திருவாரூரைச் சேர்ந்த புலைச்சாதிப் பெண் ஒருத்தியை மணந்து கொள்ள, இருவருக்கும் பகவன் என்ற மகன் பிறக்கிறான். 

ஒவ்வொரு ஊராக தலயாத்திரை செல்லும் பகவன் வழியில், உறையூரைச் சேர்ந்த ஆதி என்ற தாழ்த்தப்பட்ட ஜாதி பெண்ணை மணந்து கொண்டு, அவளையும் அழைத்துக் கொண்டு  யாத்திரையை தொடர்கின்றான்.
                                                                                                                                                          
கதைப்படி, ஆதியும் பகவனும், யாத்திரைக்கு இடைஞ்சலாக குழந்தைகள் இருக்கக் கூடாது என்று, தங்களுக்கு பிறந்த ஏழு குழந்தைகளையும் அந்தந்த ஊரிலேயே விட்டுச் செல்கின்றனர். அந்த ஏழு குழந்தைகளையும் வெவ்வேறு ஜாதியைச் சேர்ந்த ஏழு பேர் எடுத்து வளர்க்கின்றனர் உப்பை என்ற பெண் குழந்தையை ஊற்றுக் காட்டில் வளர்த்தவர்கள் வண்ணார்:. அவ்வையை எடுத்து வளர்த்தவர்கள் ஒரு பாணர் குடும்பம்.: உறுவை என்ற குழந்தையை எடுத்து வளர்த்தவர்கள் சாணார்: வள்ளி என்ற குழந்தையை வளர்த்தவர்கள் குறவர்கள்: அதிகமான் இல்லத்தில் அதிகமான் என்ற குழந்தை வளர்ந்தது.:கபிலனைக் கண்டெடுத்து வளர்த்தவர் திருவாரூர் வேதியர் குடும்பம். வள்ளுவனை எடுத்து வளர்த்தது தொண்டை மண்டலம் சேர்ந்த மயிலாப்பூர் பறையர் எனப்படுபவர்.

கபிலரின் கேள்வி

திருவாரூர் சிவன் கோயிலில் ஆதி – பகவனால் விட்டுச் செல்லப்பட்ட, அவர்களது  குழந்தையை குழந்தைப் பேறு இல்லாத ஒரு பிராமண தம்பதியினர் எடுத்து, கபிலன் என்று பெயரிட்டு வளர்க்கின்றனர். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கிய தங்களது வளர்ப்பு மகனுக்கு, தங்கள் குல வழக்கப்படி உபநயனம் செய்ய (பூணூல் அணிவிக்க) ஆசைப்பட்டு, தங்கள் உறவினர்களான, அவ்வூர் வேதியர்களை அணுகுகின்றனர். ஆனால் அவர்களோ, இந்த குழந்தை நமது ஜாதியில் பிறந்தது இல்லை என்று சொல்லி, உபநயனம் செய்து வைக்க மறுக்கின்றனர். இது பற்றி அறிந்த கபிலன், அவர்களிடம் வந்து 

// நான்முகன் படைத்த இவ்வுலகில், ஆண் முந்தியதா, பெண் முந்தியதா அல்லது அலி முந்தியதா? எல்லா பிறப்பும் இயற்கையா அல்லது செயற்கையா? உணவை உண்பது உடலா அல்லது உயிரா? மனிதருக்கு வயது நூறுதான். அதற்கு அதிகம் இல்லை. அதிலும் ஐம்பது ஆண்டுகள் தூக்கம் காரணமாக இரவில் கழிந்து விடுகின்றன. மேலும் குழந்தைப் பருவம் ஐந்து ஆண்டுகளும், இளமைப் பருவம் பதினைந்து ஆண்டுகளும் போக மீதி இருப்பது முப்பதே. இதனுள்ளும் இன்புறும் நாட்களும், துன்புறும் நாட்களும் சிலவே. ஆதலினால்,

ஒன்றே செய்யவும் வேண்டும் அவ்வொன்றும்
நன்றே செய்யவும் வேண்டும் அந்நன்றும்
இன்றே செய்யவும் வேண்டும் அவ்வின்றும்
இன்னே செய்யவும் வேண்டும்
       (கபிலர் அகவல் வரிகள் 29 முதல் 32 முடிய )

என்றெல்லாம் தருக்கம் செய்கிறான்.

மேலும்

”எப்போது கூற்றுவன் வருவான் என்று யாருக்கும் தெரியாது. ஒருவர் இறந்தால் நீங்கள் அழுவது அவருடைய உயிரற்ற, உடலுக்கா அல்லது உடலை விட்டுப் பிரிந்த உயிருக்கா? நீங்கள் இறந்தவர் சார்பாக, அவர் பிள்ளைகள் தரும் உணவை பெற்றுக் கொள்ளும் போது, இறந்தவர் உண்மையிலேயே பசி அடங்கினாரா? உண்மையில் யார் பசி அடங்கியது? மனிதருள் பேதம் உண்டோ?” – என்றெல்லாம் வேதியர்கள் செய்யும் மூட செயல்களையும் கண்டிக்கிறான். அத்தோடு தனது பிறப்பு – வளர்ப்பு பற்றியும் சொல்லுகிறான்.

அருந்தவமாமுனி
            யாம்பகவற்கூழ்
இருந்தவாறிணைமுலை
            ஏந்திழைமடவரல்
ஆதிவயற்றினில்
            அன்றவதரித்த
கான்முளையாகிய
            கபிலனும்யானே
என்னுடன்பிறந்தவர்
            எத்தனைபேரெனில்
ஆண்பான்மூவர்
            பெண்பானால்லர்
யாம்வளர்திறஞ்சிறி
            தியம்புவன்கேண்மின்
ஊற்றுக்காடெனும்
            ஊர்தனிற்றங்கியே
வண்ணாரகந்தனில்
            உப்பைவளர்ந்தனள்
காவிரிப்பூம்பட்டினத்திற்
            கள்விலைஞர்சேரியில்
சான்றாரகந்தனில்
            உறுவைவளர்ந்தனள்
நரப்புக்கருவியோர்
            நண்ணிடுஞ்சேரியில்
பாணரகந்தனில்
            ஒளவைவளர்ந்தனள்
குறவர்கோமான்
            கொய்தினைப்புனஞ்சூழ்
வண்மலைச்சாரலில்
            வள்ளிவளர்ந்தனள்
தொண்டைமண்டலத்தில்
            வண்டமிழ்மயிலையில்
நீளாண்மைக்கொளும்
            வேளாண்மரபுயர்
துள்ளுவரிடத்தில்
            வள்ளுவர்வளர்ந்தனர்
அரும்பார்சோலைச்
            சுரும்பார்வஞ்சி
அதிகமானில்லிடை
            அதிகமான்வளர்ந்தனன்
பாரூர்நீர்நாட்
அந்தணர்வளர்க்க
            யானும்வளர்ந்தேன்
                      ( கபிலர் அகவல் வரிகள் 96 முதல் 118 முடிய )

இது கபிலரே சொல்வதாக அமைந்த “கபிலர் அகவல்’ பாடல் வரிகள்.
பின்னர் அந்த வேதியர்கள், ஒரு வகையாக சமாதானம் அடைந்து  கபிலனுக்கு உபநயனம் செய்து வைக்கிறார்கள்.

பாரதிராஜாவின் வேதம் புதிது


பாரதிராஜா டைரக்ட் செய்து 1987 இல் வெளிவந்த தமிழ் திரைப்படம் வேதம் புதிது (சத்தியராஜ், சரிதா, சாருஹாசன், ராஜா, அமலா ஆகியோர் நடித்த படம். கதை - வசனம் K. கண்ணன்  -  படத்தின் முடிவில்  a film by bharathirajaa என்று காட்டுகிறார்கள்.

மேலே சொன்ன ‘கபிலர் அகவல்’ என்ற நூலைப் படித்து முடித்தவுடன், கூடவே, எனக்கு இந்த வேதம் புதிது திரைப்படமும் இப்போது நினைவுக்கு வந்தது. ஏனெனில், இந்த படத்தில், மேலே சொன்ன, கபிலர் கதையும், இந்த படத்தில் வரும் சங்கரன் என்ற சிறுவனின் கதையும் ஒன்று போலவே இருக்கும். அதிலும் நதிக்கரையில் சத்யராஜ் – வேதியர்கள் தர்க்கம் செய்யும் ஒரு காட்சியைப் பற்றி இங்கு கூறுவது அவசியம்.

தனது தந்தை நீலகண்ட சாஸ்திரியின் (சாருஹாஸன்) மறைவிற்குப் பிறகு, அவரது மகன் சங்கரன் அனாதை ஆகிறான். அவனை யாரும், அவன் பிறந்த சமுதாயமும் ஏற்றுக்கொள்ளாத நிலையில், அவ்வூர் பெரியமனிதர் பாலுத்தேவர் ( சத்யராஜ் ) அவனுக்கு, தன் வீட்டிலேயே புகலிடம் தந்து ஆதரவு தருகிறார். 

சங்கரன் தேவர் குடும்பத்தில் வளர்ந்தாலும், தன் அப்பாவின் குல ஆச்சாரப்படி பூணூல் அணிந்து கொள்ள விரும்புகிறான். ஆற்றங் கரையில் உபநயனம் (பூணூல் போடும் நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. அப்போது அங்கே வந்த சிறுவன் சங்கரன்,  உறவினர்களான, அவ்வூர் வேதியர்ர்களிடம் தனக்கும் பூணூல் போட்டு விடும்படி கேட்கிறான். அவர்களோ மறுக்கிறார்கள். அப்போது அங்கே வந்த  பாலுத் தேவருக்கும், அந்த ஊர் வேதியர்களுக்கும் நடக்கும் விவாதம், கபிலர் – வேதியர்களிடம் கேள்வி கேட்ட நிகழ்ச்சியையே நினைவுறுத்தும்.