Thursday 25 September 2014

தி இந்து – நவராத்திரி மலர் – 2014



நேற்று, வீட்டிற்கு பேப்பர் போடும் தம்பி “சார், இந்து நவராத்திரி மலர் வாங்குவீர்களா? “ என்று தயங்கியபடியே கேட்டார். அவரது கையில் தி இந்து நவராத்திரி மலர் 2014. “சரிப்பா வாங்கிக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு வாங்கினேன். தீபாவளி மலர் அளவில் இருந்தது. விலை ரூ80/= (பக்கங்கள் 132).

வண்ணமும் வாசமும்:

ஆசிரியர் கே.அசோகன் அவர்கள் செப்டம்பர் 16,2014 அன்றுடன் தி இந்து தமிழ் நாளிதழ் தொடங்கி , வாசகர்களாகிய உங்களின் நல்லாதரவோடு ஓராண்டைப் பூர்த்தி செய்யும் நிறைவோடு வாசம் மிக்க இந்தமலரை சமர்ப்பிப்பதில் உவகை அடைகிறோம் “ என்று முன்னுரை படிக்கிறார்.

ஓவியர் சிவா வரைந்த பிள்ளையார் படத்துடனும், தெய்வத்தின் குரலில் மகா பெரியவர் சொன்ன அருள்வாக்கோடும் மலர் துவங்குகிறது. தீபாவளி மலர் போன்று நிறைய வண்ணப் படங்கள், கட்டுரைகள், அனுபவம், சிறுகதை என்று இந்த நவராத்திரி மலர் விரிகின்றது.

நவராத்திரி சிறப்புக்கள்:

புராணங்களில் சொல்லப்பட்ட விளக்கம் மற்றும் சோழர் காலம் முதல் மராட்டியர் காலம் வரை நவராத்திரி விழா கொண்டாடப் பட்ட வரலாற்றைச் சொல்லுகிறார் (கலையின் நாயகிக்கு ஒரு விழா) அ.கா.பெருமாள்.
இந்த நவராத்திரி மலரில் என்.ராஜேஸ்வரி அவர்களின் நான்கு கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன என்பது தனிச் சிறப்பு. கூடவே வண்ணப்படங்கள். ஒவ்வொரு நாளும் கொண்டாடும் முறைகள்  பற்றி குறிப்பிடும் அவர் இந்த மலரின் இறுதியில் கொலு வைக்கப்படும் ஒவ்வொரு படிக்கும் ஒவ்வொரு தத்துவம் உண்டு என்கிறார். 
(படம் மேலே) “கொலு உருவான கதையில் கொலுவில் சுண்டல் வைக்கும் வழக்கம் எப்படி வந்தது என்பதற்கு, வட இந்திய கிராமப்புறங்களில் சொல்லப்படும் அனுசூயா கதையை அழகாகச் சொல்லுகிறார்

கொலு வைத்தல்:

மதுரையில் மீனாட்சி அம்மன் கோயிலில் நடக்கும் நவராத்திரி வைபவங்கள் பற்றி சொல்லுகிறார் கே.கே மகேஷ். நம் ஊர் தசரா போன்று வேறு பல நாடுகளில் நடக்கும் கொண்டாட்டத்தை தரணி எங்கும் தசரா வில் (ஸ்ரீஜா வெங்கடேஷ்) காணலாம். இன்னும் சாரி எழுதிய “பன்னிரு நவராத்திரிகள்,  கா.சு.வேலாயுதன் எழுதிய “கோவையின் தசரா கோலங்கள் ஆகியன.

குள.சண்முகசுந்தரம் எழுதும் நாட்டார் வரிசைக் கட்டுரைகள் மிகவும் சுவாரஸ்யமானவை. இந்த மலரில் மெச்சி ஆச்சி வீட்டு கொலுவைப் பற்றி சொல்லுகிறார். மைசூர் தசரா போன்று ராமநாதபுரம் அரண்மனை வளாகத்தில் கொண்டாடப்படும் தசரா பற்றிய விவரத்தினைத் தருகிறார் ராமேசுவரம் ராஃபி. நவராத்திரிக்கு ஏற்ற ஒவ்வொரு நாளும் ப்டைக்கப்படும் சுண்டல் போன்ற நிவேதனங்கள் பற்றி சொல்லுகிறார் விருகம்பாக்கம் மீனலோசனி. இன்னும்,  கொலு பொம்மைகள் தங்களுக்குள் பேசினால் எனன பேசும் என்று கற்பனை செய்து பார்க்கிறார் தேனுகா.

வேறு கட்டுரைகள்:

இடையிடையே வேறு சில கட்டுரைகள். ஒரு வரவேற்பறை எப்படி அமைய வேண்டும் என்பதனை விளக்குகிறார் குமார். நடனமாடும் வீடு ஒன்றைப் பற்றிச் சொல்லுகிறார் ம.சுசித்ரா. ரசிகமணி டி.கே.சி யின் “ என்னைக் கவர்ந்த புஸ்தகங்கள் “ என்ற மறுவாசிப்பு கட்டுரை இலக்கிய வாசகர்களை மனம் குளிரச் செய்யும். நவீன கவிதைகளுக்கு மெட்டமைத்து பாடுவது குறித்து பேசுகிறார் ரவிசுப்பிரமணியன். சென்னையில் நடக்க இடம் உண்டா? என்று அங்காலாய்த்துக் கொள்கிறார் ஆசை என்ற புனைபெயர்க்காரர்.


தி இந்துவின் இந்த நவராத்திரி மலரின் வண்ணமும் வாசமும் வரப்போகும் தீபாவளி மலருக்கான முன்னோட்டம் எனலாம். வாங்கி படியுங்கள்!

அனைவருக்கும் எனது உளங்கனிந்த நவராத்திரி வாழ்த்துக்கள்!

( நன்றி: தி இந்து - மேலே உள்ள படங்கள் அனைத்தும் தி இந்து நவராத்திரி மலர் 2014 புத்தகத்திலிருந்து CANON POWER SHOT A800 கேமரா மூலம் காப்பி செய்யப்பட்டு எடிட் செய்யப் பெற்றவை. )






Tuesday 23 September 2014

திருச்சி - ” முட்டாள் முத்து “ எனப்படும் பரமசிவம்



ஏப்ரல் ஒன்று உலக முட்டாள்கள் தினம் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். தனது சொந்த பெயரை “முட்டாள் முத்துஎன்று மாற்றிக் கொண்டு, வருடம் தோறும் ஏப்ரல் முதல் தேதியன்று மொட்டையடித்துக் கொண்டு 25 வருடங்களுக்கும் மேலாக, அந்த நாளைக் கொண்டாடி வருகிறார் ஒருவர். அவர் பெயர் பரமசிவம். திருச்சி K.K. நகரில் யூனியன் பாங்க் (பஸ் டெர்மினஸ்) அருகில் உயர்தர பஞ்சாப் சப்பாத்தி சென்டர்என்ற பெயரில் தனி ஆளாகக் கடை நடத்தி வருகிறார்.

சப்பாத்தி வாங்கச் சென்றேன்:

நாங்கள் இருப்பது புறநகர்ப்பகுதி. ஏதாவது வாங்க வேண்டும், என்றால் அருகிலுள்ள கருணாநிதி நகர் ( K.K. நகர்)  அல்லது சுந்தர்நகர் செல்ல வேண்டும். மனைவி சென்னைக்கு மகள் வீட்டிற்கு சென்றுள்ளார். எனவே எனக்கும் மகனுக்கும் வெளியே  கடையில்தான் சாப்பாடு. சென்றவாரம் ஒருநாள் இரவு மகன் சப்பாத்தி வாங்கலாம் என்று சொன்னார் நான் சப்பாத்தி சாப்பிடுவதில்லை. காரணம் நான் வயிறார சாப்பிடுபவன். சப்பாத்தியை சாப்பிட்டால் எனக்கு சாப்பிட்டது போலவே இருக்காது. இருந்தாலும் இரவு 8 மணிக்கு மேல் ஆகி விட்டதால் அருகிலுள்ள  K.K. நகரில் பரமசிவம் நடத்தி வந்த  சப்பாத்தி சென்டருக்கு சென்றேன். கடைக்காரர் பரமசிவத்தை எனக்குத் தெரியும் என்றாலும் கடையில் சப்பாத்தி வாங்கியதில்லை. நான் கடைக்குச் சென்றதும் நான்கு சப்பாத்தி பார்சல் என்று  ஆர்டர் செய்துவிட்டு, விலையைக் கேட்டேன்.

“ சப்பாத்தி என்ன விலை? “

“ ஒரு சப்பாத்தி பதினைந்து ரூபாய். நேற்று வராமல் போய் விட்டீர்களே. நேற்று ஒருநாள் மட்டும் சப்பாத்தி ஒன்று பத்து ரூபாய் என்று கொடுத்தேன்

“ அப்படியா? நேற்று மட்டும் அப்படி என்ன விசேஷம்என்று நான் விசாரித்தேன்.

“ நேற்று பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு சப்பாத்தி ஒன்று பத்து ரூபாய். நான் கடை வைத்து ஏழு ஆண்டுகள் ஆகின்றன. அன்றிலிருந்து வருடம் தோறும் பெரியார் பிறந்த நாள் அன்று மட்டும் சப்பாத்தியில் விலை குறைப்பு  என்றார்.

அவரைப் பற்றி அவரிடம் விசாரித்தேன். கடையில் அவர் ஒருவர் மட்டும்தான். அவரே சப்பாத்தியை சுட்டு விற்கிறார். எனவே அவர் என்னை நாற்காலியில் உட்கார வைத்து விட்டு தன்னைப் பற்றி தினமணி, விகடனில் வந்த செய்திக் குறிப்புகளைத் தந்தார். மேலும் தன்னைப் பற்றிய விவரங்களயும் சொன்னார்.

தற்சமயம் திருச்சி K.K. நகரில் பஞ்சாப் சப்பாத்தி சென்டர் வைத்து இருக்கும் எஸ் பரமசிவம் அவர்கள் இதற்கு முன் யூகோ வங்கியில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்தவர். பின்னர் புதுக்கோட்டை மார்க்கெட்டில் வாடகைவேன் ஓட்டினார். இவரது சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில், பேரையூர் அருகில் உள்ள கோயில்பட்டி ஆகும்.

தினமணியில் வந்த பேட்டி:

“ எனது 13 ஆவது வயதில் பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டேன். மனிதாபிமானத்துடன் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ்வதை விட்டுவிட்டு கடவுளைக் காரணம் காட்டிச் சண்டையிடுதல் மற்றும் தீமிதித்தல், வேல் குத்துதல் போன்ற சடங்குகளை எல்லாம் கிராம மக்களிடம் விமர்சிக்கவே, அவர்கள் எல்லாரும் என்னை “முட்டாள்என்று திட்டினர்.

இவர்கள் என்ன என்னை முட்டாள் என்று கிண்டல் செய்வது, இந்தக் கிண்டலுக்கு நிரந்தரமாக முடிவு காண்பது என்ற எண்ணத்தில் எனக்கு நானே பரமசிவம் என்ற என்னுடைய பெயரை முட்டாள் முத்து என மாற்றிக் கொண்டு விட்டேன்.

எனக்கு வரும் அஞ்சல்களைப் பார்க்கும் போஸ்ட்மேன், கூரியர் சேவை நிறுவனத்தினர் முதலில் இந்தப் பெயரைக் கண்டு வியந்தனர். ஆனால் இப்போது எல்லாருக்கும் பழகிப் போய்விட்டது.

இந்தப் பெயருக்காக எனது மனைவியும் குழந்தைகளும் முதலில் சங்கடப்பட்டனர். நாள்களானதும் அவர்களும் முட்டாள் மனைவி, முட்டாள் பிள்ளைகள் எனப் பழகிப் போய் விட்டனர்.

பகுத்தறிவாளர் என்று கூறினாலும் மொட்டையடிப்பது ஏன்? எனக் கேட்டதற்கு, “ஆண்டுதோறும் ஏப்ரலில் தொடங்கி கோடைக்காலம்.  இதைச் சமாளிக்க மற்றவர்கள் கோயிலில் நேர்த்திக் கடனாக மொட்டை அடித்துக் கொள்கின்றனர்.

என் வழியில் கோடையைச் சமாளிக்க ஏப்ரல் முதல் தேதியில் மொட்டையடிப்பதும் பகுத்தறிவுதான், என்று தன் பெயரை முறைப்படி மாற்றி, அரசிதழில் அறிவித்துக் கொள்வதற்காகவும் பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளதாகத் தெரிவித்தார் பரமசிவம் அல்ல முட்டாள் முத்து. (நன்றி தினமணி 02.04.2004 )

தினமணியில் பத்து வருடங்களுக்கு முன்னர் வந்த பேட்டி இது.

சப்பாத்திக் கடையில்:


முக்குலத்ோர் சமுதாயச் சேர்ந்த இவர்,  பெரியாரின் சீர்திருத்த  கொள்கைகளால் ஈர்க்கப் பெற்று  ஜாதி சமயங்களுக்கு எதிராக தன் வழியே பிரச்சாரம் செய்கிறார். மேலும் மனித உரிமை, ஆதார் அட்டை போன்ற பொதுமக்கள் சம்பந்தப்பட்ட விவரங்களையும் சொல்லுகிறார். மற்றபடி கட்சிக்காரர் இல்லை. இப்போது சப்பாத்திக் கடையில் அவரே ஒன் மேன் ஆர்மியாக இருந்து  எல்லா வேலைகளையும் பார்த்துக் கொண்டு வருகிறார். வந்து கேட்பவர்களுக்கு சுடச் சுட போட்டு தருகிறார். சப்பாத்தியும் குருமாவும் நல்ல சுவை.  இவருக்கென்று இருக்கும் வாடிக்கையாளர்கள் செல்போனில் முன்கூட்டியே ஆர்டர் தந்து விடுகிறார்கள். சிலர் இவரை “முட்டாள் முத்துஎன்று அழைப்பதற்கு சங்கடப்பட்டுக் கொண்டு “எம் எம் (M.M) என்று அழைக்கின்றனர். வாழ்க பரமசிவம்! இல்லையில்லை முட்டாள் முத்து!


 
உலகில் இப்படியும சில கொள்கைகளோடு சிலபேர் இருக்கத்தான் செய்கின்றனர். காலம் ஓடிக் கொண்டு இருக்கிறது.

   ( பல பதிவர்கள் A to Z பல தலைப்புகளில் பலரைப் பற்றியும் எழுதுகிறார்கள். நாம் நமக்குத் தெரிந்த ஒரு வித்தியாசமான மனிதரைப் பற்றி எழுதுவோம் என்று எழுதினேன்)  

  

Wednesday 17 September 2014

திருச்சி மாவட்ட வலைப் பதிவர்களே!



அன்பார்ந்த திருச்சி மாவட்ட வலைப் பதிவர்களுக்கு வணக்கம்!   ஒரு மாவட்டத்தில் எத்தனை வலைப் பதிவர்கள் இருக்கிறார்கள் என்று கணக்கெடுப்பது சிரமமான விஷயம்தான். ஏனெனில் பல வலைப் பதிவர்கள் தன்விவரம் (PROFILE ) தருவதில்லை. அதிலும் சூடான கருத்துக்களை மையமாகக் கொண்டு எழுதுபவர்களும், முகமூடி வலைப் பதிவாகளும் எழுதும் பதிவுகளில் அவர்களைப் பற்றிய விவரம் ஏதும் கிடைப்பதில்லை. இங்கு நான் பல நாட்களாக குறித்து வைத்திருந்த மற்றும் அண்மையில் அறிந்த திருச்சி மாவட்ட வலைப் பதிவர்களை மட்டும் குறிப்பிட்டு இருக்கிறேன்! எனக்குத் தெரியாத விடுபட்டவர்கள் பெயரைச் சொன்னால் இணைத்து விடுகிறேன்.   

திரு வை கோபாலகிருஷ்ணன்:
திரு V.G.K என்றும் கோபு அண்ணா என்றும் அன்பாக அழைக்கப்படும், திரு வை கோபாலகிருஷ்ணன் அவர்கள், திருச்சி பெல் நிறுவனத்தில் அக்கவுண்ட்ஸ் ஆபீஸர் ஆக (ACCOUNTS OFFICER/CASH, BHEL, TIRUCHI) இருந்து ஓய்வு பெற்றவர். தனது பெயரிலேயே “வை.கோபாலகிருஷ்ணன்என்ற வலைப் பதிவினை ( http://gopu1949.blogspot.in ) எழுதிவரும் திருச்சியில் உள்ள மூத்த வலைப் பதிவாளர். நகைச்சுவையாக எழுதுவார். தனது பின்னூட்டங்கள் மூலம் வலைப் பதிவர்களுக்கு இன்னும் எழுத உற்சாகம் தருபவர். பல விருதுகள் பெற்று அவற்றை மற்ற வலைப் பதிவர்களுக்கு பகிர்ந்தளிப்பவர். இந்த ஆண்டு (2014) தொடக்கம் முதல் V.G.K சிறுகதை விமர்சனப் போட்டிகளை நடத்தி பரிசுகள் வழங்கி வருகிறார். பத்திரிகைகளிலும் எழுதி பல நூல்களையும் வெளியிட்டுள்ளார். அவற்றிற்கு பரிசுகளும் வென்றுள்ளார்.

திரு ஆரண்ய நிவாஸ்ஆர்.ராமமூர்த்தி:
திருச்சி திருவானைக் கோவிலில் வசித்துவரும் திரு ஆரண்ய நிவாஸ்ஆர்.ராமமூர்த்தி அவர்கள் தனது பெயரிலேயே ஆரண்ய நிவாஸ்ஆர்.ராமமூர்த்தி( http://aaranyanivasrramamurthy.blogspot.in )
என்ற வலைப்பதிவினில் எழுதி வருகிறார். ஆரண்ய நிவாஸ்என்ற பெயரிலேயே தனது படைப்புகள் அடங்கிய நூலினை வெளியிட்டுள்ளார். நகைச்சுவையாக எழுதுவதில் வல்லவர்.

திரு ரிஷபன்:
பட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர் திரு ரிஷபன் அவர்கள். திருச்சி பெல் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். சிறந்த எழுத்தாளரான
இவரது படைப்புகள் கல்கி, விகடன் முதலான பத்திரிககளில் வெளிவந்துள்ளன. திரு வை கோபாலகிருஷ்ணன் அவர்கள் இவரை தனது மானசீக குரு என்று சொல்லுவார். இருவரும் நெருங்கிய நண்பர்கள்.  இவர் ரிஷபன் (http://rishaban57.blogspot.com ) என்ற பதிவினில் வலம் வருகிறார்.

திரு இரா.எட்வின்:
நோக்குமிடமெல்லாம் நாமன்றி ( www.eraaedwin.com ) என்ற வலைப்பதிவினை எழுதி வரும் திரு இரா.எட்வின் அவர்கள் SMHSS எனப்படும் பள்ளியில் (திருச்சி மாவட்டம்) ஆசிரியர். இவனுக்கு அப்போது மனு என்று பேர் , எப்படியும் சொல்லலாம்  மற்றும்
என் கல்வி என் உரிமை “ ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.

திருமதி கீதா சாம்பசிவம்:
மூத்த வலைப்பதிவர் திருமதி கீதா சாம்பசிவம்: அவர்கள் “எண்ணங்கள்என்ற தலைப்பினில் (http://sivamgss.blogspot.in) வலைப் பதிவினை எழுதி வருகிறார். சென்னை, மதுரை, ராஜஸ்தான், குஜராத், செகந்திராபாத், அரவன் காடு, ஊட்டி மற்றும் அமெரிக்கா முதலான இடங்களில் வசித்தவர். தற்சமயம்  திருவரங்கத்தில் வசித்து வருகிறார். இன்னும் கண்ணனுக்காக, சாப்பிடலாம் வாங்க, பேசும்பொற்சித்திரமே, என் பயணங்களில், ஆன்மீக பயணம் என்ற பதிவுகளையும் எழுதி வருகிறார்.

திருமதி ராதாபாலு:
“எண்ணத்தின் வண்ணங்கள் ( http://radhabaloo.blogspot.com ) மற்றும் அறுசுவைக் களஞ்சியம் http://arusuvaikkalanjiyam.blogspot.com  இரண்டு பதிவுகளையும் எழுதி வருபவர் திருச்சியைச் சேர்ந்த திருமதி ராதாபாலு அவர்கள். திரு வை கோபாலகிருஷ்ணன் அவர்கள் நடத்தி வரும் போட்டிகளில் பரிசுகளை வென்றவர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக இவர் எழுதிய கதை,கட்டுரை,ஆலய தரிசனம்,சமையல் குறிப்புகள் பல தமிழ் இதழ்களில் வெளிவந்துள்ளன.

திரு ஆ.ஞானசேகரன்:
திரு ஆ.ஞானசேகரன் அவர்கள் அம்மா அப்பா என்ற  
( http://aammaappa.blogspot.in ) வலைப்பதிவினை எழுதி வருகிறார். அவர்  வலைப்பதிவில் தன்விவரம் (PROFILE ) பற்றி பின்வருமாறு குறிப்பிடுகிறார். “ நான் பிறந்தது தஞ்சை மாவட்டதில் உள்ள ஒரு சிறிய கிராமம், பாரதிராஜா பார்க்கவில்லை பார்த்திருந்தால் எங்கள் ஊருக்கு நடிகர்கள் வந்துருப்பார்கள். வளர்ந்தது திருச்சியில் தற்பொழுதும் திருச்சிதான்.இவருடைய மற்றொரு வலைப் பூ “கண்டதும் சுட்டதும் ( http://kandathumsuddathum.blogspot.in )

டாக்டர் பாலசுப்ரமணியன்:
அர்த்தமுள்ள இனியமனம் ( http://dbs1205.blogspot.in & http://arthamullainiyamanam.wordpress.com ) என்ற வலைப் பதிவுகளில் மனநல மருத்துவர் பாலசுப்ரமணியன் (CONSULTANT PSYCHIATRIST TRICHY) அவர்கள் மனநலம் சம்பந்தமான கட்டுரைகளை எழுதி வருகிறார்.

பேராசிரியர் B மதிவாணன்:
“இனிது இனிது ( http://inithuinithu.blogspot.in ) என்ற வலைப் பதிவினை எழுதி வரும் பேராசிரியர் B மதிவாணன் அவர்கள் பாரதிதாசன் பல்கலைக் கழகம், திருச்சியில் பணிபுரிந்து வருகிறார். இவர் அடிவானம் நோக்கிச் சில அடிகள்மற்றும் தொல்காப்பியம் பால.பாடம்”- ஆகிய நூல்களை எழுதியுள்ளார். இவரது தந்தை மறைந்த தமிழறிஞர் பாவலரேறு பாலசுந்தரம் ஆவார்.

திரு ம ஞானகுரு:
அறிவியல் விந்தைகள் ( www.life-is-sciencee.blogspot.in )
மற்றும் “தொழிற்களம் ( www.thozhirkalam.com ) என்ற பதிவினை எழுதி வருபவர் ம ஞானகுரு அவர்கள்  தனது வலைப்பதிவில் தன்விவரம் (PROFILE ) பற்றி சொல்லும்போது திருச்சி என்று குறிப்பிட்டுள்ளார்.

வலைப்பதிவர் குடும்பம்:
திருவரங்கத்தைச் சேர்ந்த திரு வெங்கட் நாகராஜ் அவர்கள் தனது பெயரினிலேயே http://venkatnagaraj.blogspot.com என்ற வலைப் பதிவினை எழுதி வருகிறார். வெங்கட் நாகராஜ் பிறந்ததும் வளர்ந்ததும் நெய்வேலியில். தற்பொழுது இருப்பது தலைநகர் தில்லியில். சிறந்த போட்டோகிராபர். சென்ற ஆண்டு சென்னையில் நடைபெற்ற வலைப்பதிவர் சந்திப்பினை பற்ரிய நிறைய வண்ணப்படங்களை தனது பதிவினில் சிறப்பாக வெளியிட்டவர்.

இவரது மனைவி திருமதி ஆதி வெங்கட். பிறந்தது சிவகங்கைச் சீமையில், வளர்ந்தது கோவையில், தற்போது வசிப்பது மகளின் படிப்பிற்காக வசிப்பது திருவரங்கத்தில்... இவர் கோவை 2 தில்லி ( http://kovai2delhi.blogspot.in) என்ற வலைப் பதிவினை எழுதி வருகிறார்.

வெங்கட் நாகராஜ் - ஆதி வெங்கட் தம்பதியினரின் மகள் செல்வி ரோஷிணி வெங்கட் http://roshnivenkat2.blogspot.in வெளிச்சக் கீற்றுகள் என்ற பதிவினை எழுதி வருகிறார்.

திரு ஜோசப் விஜி :
ஊமைக்கனவுகள் ( http://oomaikkanavugal.blogspot.in )மற்றும் “மனம்கொண்டபுரம் ( http://manamkondapuram.blogspot.in ) என்ற இரண்டு
வலைப் பதிவுகளை எழுதும் ஜோசப் விஜி அவர்கள் திருச்சியைச் சேர்ந்தவர், நல்ல தமிழறிஞர்  என்பது மட்டும் எனக்குத் தெரியும். மற்ற விவரங்களை அறியக் கூடவில்லை.

திரு அ பாண்டியன்:
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் இருக்கும் திரு அ பாண்டியன் அவர்கள் “அரும்புகள் மலரட்டும் (http://pandianpandi.blogspot.com ) என்ற வலைப் பதிவினை
எழுதி வருகிறார். இவர் தமிழ்நாடு அரசுப் பள்ளியில் தமிழாசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

திரு ராஜகோபாலன் நாகநாதன்:
“சாய் மந்திரம் (http://saimantram.blogspot.in) என்னும் பதிவினைத் தொடங்கி எழுதி வரும் திரு ராஜகோபாலன் நாகநாதன் அவர்கள் திருச்சி திருவானைக் கோவிலைச் சேர்ந்தவர். High Energy Batteries (India) Limited, திருச்சியில் பணிபுரிந்து வருபவர்.

திரு ஸ்ரீரங்கம் ஸ்ரீதர் :
தனது பெயரிலேயே “ஸ்ரீரங்கம் ஸ்ரீதர்(http://srirangamsridhar.blogspot.in)
என்ற பெயரில் வலைப்பதிவினை எழுதி வரும் திரு ஸ்ரீரங்கம் ஸ்ரீதர் அவர்கள் சார்ட்டர்டு அக்கவுண்டண்ட் படித்தவர். பஹ்ரைனில் ட்ராப்கோ குழுமத்தில் பணிசெய்து வருகிறார்.

திரு T ராமகிருஷ்ணன்
திருச்சியைச் சேர்ந்த திரு T  ராமகிருஷ்ணன் அவர்கள் “நம் ஊர்( http://numvoor.blogspot.in ) என்ற வலைப் பதிவினை எழுதி வருகிறார். இவர் IT துறையைச் சேர்ந்தவர். Technology, Research & Innovation இல் DIRECTOR  பதவியில் இருக்கிறார்.

திரு ராஜா ராமதாஸ்:
“பத்த வச்சிட்டியே பரட்டை ( http://parattai.blogspot.in ) என்ற வலைப் பதிவினை எழுதி வருபவர் திரு ராஜா ராமதாஸ்
அவர்கள்

திரு சத்யபிரியன்:
“பதிவுகள் என்ற வலைப் பதிவினை (http://sathyapriyan.blogspot.in) எழுதி வரும் திரு சத்யபிரியன் அவர்கள் தன்னைப் பற்றி I was born and brought up in Trichy a beautiful town in Tamil Nadu, India.என்று சொல்லிக் கொள்கிறார்.

திரு பழூர் கார்த்தி:
“பழூரானின் பக்கங்கள்  (http://lazyguy2005.blogspot.in ) என்று எழுதி வரும் திரு பழூர் கார்த்தி அவர்கள் நம்ம ஊர் திருச்சிஎன்றே ஒரு பதிவினை எழுதியுள்ளார்.

திருச்சி சந்தானம்:
“ TRICHY SANTHANAM” ( http://gsanthanam1610.blogspot.in ) என்று தனது பெயரிலேயே வலைப்பதிவை எழுதிவரும் திருச்சி சந்தானம் அவர்கள் வங்கியில் கும்பகோணத்தில் பணிபுரிந்து வருகிறார்.
  
திரு ரவி :
வசந்தமுல்லை ரவி( http://vasanthamullairravi.blogspot.in ) என்ற வலைப் பதிவினை எழுதி வரும் திரு ரவி அவர்கள், திருச்சி BHEL நிறுவனத்தில் சீனியர் அடிஷனல் என்ஜீனியர் ஆவார்.

தி தமிழ் இளங்கோ :
என்னைப் பற்றி. நானே என்ன சொல்வது? வலைப் பதிவினில் “எனது எண்ணங்கள்( http://tthamizhelango.blogspot.com) என்ற தலைப்பினில் வலைப்பதிவை எழுதி வருகிறேன். 29 ஆண்டுகள் ஸ்டேட் வங்கியில்  பணிபுரிந்து ஓய்வு பெற்றவன்.

அன்பார்ந்த திருச்சி மாவட்ட வலைப் பதிவர்களே! தாங்கள் அனைவரும் மதுரையில் வரும் அக்டோபர் 26 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை  காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்க இருக்கும் வலைப் பதிவர் சந்திப்பு திருவிழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு  அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.! 

 

Monday 15 September 2014

தமிழ் வலையுலகில் விருதுகள்



நீண்ட இடைவேளைக்குப் பின் மீண்டும் இப்போது வலைப் பதிவில் விருதுச் செய்திகள். சகோதரி திருமதி ரஞ்சனி நாராயணன் அவர்கள்  http://ranjaninarayanan.wordpress.com/2014/09/08  தொடங்கி வைத்த  THE VERSATILE BLOGGER AWARD இப்போது பதிவர்கள் மத்தியில் சங்கிலித் தொடராக பரிமாறலில் இருக்கிறது. (இதே விருது எனக்கு இப்போது மூன்றாம் முறையாக கிடைத்துள்ளது ) வலைப் பதிவர்கள் சந்திப்பு மதுரையில் நடக்க இருக்கும் இந்தசமயம் அவர்களை ஊக்குவிக்கும் வண்ணம் விருது என்னும் விருந்து பரிமாறலைத் தொடங்கி வைத்த சகோதரி திருமதி ரஞ்சனி நாராயணன் அவர்களுக்கு நன்றி! 

விருதுகள் பலவிதம்:

வலைப்பதிவு எழுதுவது என்பது தமிழில் அதிகம் புழக்கம் ஆனவுடன் மேனாட்டாரின் ஆங்கில வலைப்பதிவர்கள் தந்த  விருதுகள் இங்கும் வந்துவிட்டன்.. நான் வலைப் பதிவில் வந்தநேரம் அய்யா திரு V.G.K அவர்கள் தான் வாங்கும் விருதுகளை (வை கோபாலகிருஷ்ணன்) மற்றவர்களுக்கு பகிர்ந்தளித்து வலையுலகை கலகலப்பாக்கிக் கொண்டிருந்தார். அவர் தான் வாங்கிய மற்றும் மற்றவர்களுக்கு பகிர்ந்தளித்த விருதுகளின் பட்டியலை மேலே குறிப்பிடப்பட்டுள்ள திருமதி ரஞ்சனி நாராயணன் அவர்களது பதிவின் பின்னூட்டதில் குறிப்பிட்டுள்ளார். அவை:

FABULOUS BLOG RIBBON AWARD
SUNSHINE BLOGGER AWARD
THE BEST ENCOURAGER AWARD
AWESOME BLOGGER AWARD
LIEBSTER BLOG AWARD [GERMAN]
THE VERSATILE BLOGGER AWARD

இவையல்லாது இன்னும் நிறைய விருதுகளைப் பற்றியும் இண்டர்நெட்டில் காணலாம்.

நான் பெற்ற விருதுகள்:

முதன் முதல் வலைப்பதிவை எழுதத் தொடங்கிய நேரம் சீனியர் பதிவர்கள் ( வலைப்பதிவு சர்வீஸில்தான்) பலர் பெற்ற விருதுகளின் படங்களையும் விவரங்களையும் பார்க்கும்போது பிரமிப்பாக இருக்கும். நமக்கெல்லாம் எங்கே கிடைக்கும் யார் கொடுக்கப் போகிறார்கள் என்று நினைத்ததுண்டு. அதனால் நான உண்டு என் வலை (வளை) உண்டு என்று எழுதி வந்தேன். எனக்கு முதன்முதலாக சகோதரி கவிஞர் சசிகலா (தென்றல்) அவர்கள் VERSATILE BLOGGER AWARD (நாள் 21.02.12) கொடுத்து வலைப்பதிவில் இன்னும் நன்றாக எழு எனக்கு ஊக்கம் தந்தார்கள். இதே விருதினை சகோதரி யுவராணி தமிழரசன் அவர்களும் (கிறுக்கல்கள் 10.06.12 ) இரண்டாம் முறையாகத் தந்தார். அப்புறம் அய்யா திரு V.G.K அவர்கள் (வை கோபாலகிருஷ்ணன்)  Sunshine Blogger Award,  Liebster Blog Award, Fabulous Blog Ribbon Award  என்று எனக்கு அளித்து ஊக்கம் தந்தார்.  எனக்கு கிடைத்த விருதுகளைப் ( விருதின் வரலாறு, வழங்கும் முறைமை) பற்றி நான் எழுதிய பதிவுகள் இவை.

எனக்குக் கிடைத்த “FABULOUS BLOG RIBBON AWARD “

எனக்குக் கிடைத்த லிப்ஸ்டர் விருது (LIEBSTER AWARD)

எனக்கு கிடைத்த சன்சைன் ப்ளாக்கர் விருது (SUNSHINE BLOGGER AWARD) “

வலைப்பதிவும் விருதும்


ஒரு வேண்டுகோள்:

பல வலைப்பதிவர்கள் தாங்கள் பகிர்ந்தளிக்கும் அதே விருது மற்றவருக்கு ஏற்கனவே அவருக்கு வழங்கப்பட்டு இருக்கிறதா என்று கவனிப்பதில்லை. ஆர்வக் கோளாறு அல்லது அன்பின் மிகுதியால் அதே விருதினை திரும்பவும் அவருக்கு வழங்கி விடுகின்றனர். இதனை தவிர்த்தால் இன்னொருவருக்கு அதே விருது கிடைக்க வாய்ப்பு வரும்.  

 ( PICTURES THANKS TO "GOOGLE")
.  

Monday 8 September 2014

பட்டதெல்லாம் போதுமா பட்டினத்தாரே …



பகலில் மனைவி அலுவலகத்திற்கு சென்று விடுவார். பையன் கல்லூரி சென்று விடுவார். அப்போது வீட்டில் நான் மட்டும்தான்  அப்போது மட்டும் டீவியை பார்ப்பதுண்டு. அதிலும் அதிக நேரம் பார்க்க முடிவதில்லை.. ஏனெனில் வீட்டு வேலையோ அல்லது வெளிவேலையோ ஏதாவது இருந்து கொண்டே இருக்கும். மதியவேளை உணவு உண்ணும்போது மட்டும் பழைய பாடல்களை, திரைப்படங்களை பார்ப்பதுண்டு. அன்றும் அப்படித்தான்.... 

வழக்கம் போல மேஜையில் சாப்பாட்டை எடுத்து வைத்துக் கொண்டு டீவியை ஆன் செய்தேன். ஒரு பெரிய மாளிகையின் ஹாலில் ஒரு காட்சி. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தனது மகன் மாஸ்டர் சேகரை படார் படார் என்று அடிக்கிறார். ஒரு கட்டத்தில் பையனும் பொறுமையை இழந்து அப்பாஎன்று கையை ஓங்கி விடுகிறான். ஆனாலும் அடிக்காது வெளியேறுகிறான். அங்கிருப்பவர்கள் திகைத்து நிற்கிறார்கள். (கதைப்படி சிவாஜி கணேசன் மாளிகையில் வசிக்கும் பணக்காரர்) 
திடீரென்று பின்னணியில் பட்டதெல்லாம் போதுமா பட்டினத்தாரே . .... என்று உச்ச ஸ்தாயியில் ஒரு பாடல் ஒலிக்கிறது. (படம்: நல்லதொரு குடும்பம்.)   படத்தில் சிவாஜி கணேசனுக்கு ஜோடி வாணிஸ்ரீ. நடிகர் சிவாஜி வசந்த மாளிகை ஸ்டைலில் மேலே ஒரு சால்வையைப் போர்த்திக் கொண்டு பாட்டையும் மிஞ்சும் வண்ணம் இங்கும் அங்கும் உணர்ச்சிப் பிழம்பாக நடை போடுகிறார். இங்கு வசந்த மாளிகைபடத்தில் சிவாஜி யாருக்காக இது யாருக்காக “ என்று பாடும் காட்சி நினைவுக்கு வருகிறது. இரண்டு படத்திலும் வாணிஸ்ரீ, சால்வை போர்த்திய சிவாஜி. அங்கு சிவாஜியே பாடுவதாக காட்சியமைப்பு. இங்கு பின்னணிக்கு ஏற்ப உடல் பாவம்.

பாடலை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன். பாட்டு சிறியதே என்றாலும் அதில் வரும் தத்துவ வரிகள் மற்றும் உச்ச ஸ்தாயியில் ஒலித்த T.M.சௌந்தரராஜன் குரல் என்னை மிகவும் கவர்ந்தன. பாட்டில் பட்டினத்தாரே பட்டினத்தாரே என்று அடிக்கடி சொல்கிறார்கள். ஆனால் பட்டினத்தார் வாழ்க்கைக்கும் இந்த பாடலுக்கும் எந்த ஒப்புவமையும் இருப்பதாகத் தெரிய்வில்லை. தத்துவம், குடும்பத்தின் மீது வெறுப்பு என்றால் பட்டினத்தார் என்று கவிஞர் முடிவு செய்து விட்டார் போலிருக்கிறது. உண்மையில் பட்டினத்தார் தனது குடும்பத்தை குறிப்பாக மனைவி சிவகலையை ரொம்பவும் நேசித்தவர். தனது (வளர்ப்பு) மகன் மீது அளவு கடந்த பாசத்தை வைத்து இருந்தவர். அவன் "காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே''  என்று மாயமாய் மறைந்து போனதால் மனம் வெதும்பி துறவியானவர். தனது அர்த்தமுள்ள இந்து மதத்தில் பட்டினத்தார் பற்றி கவிஞர் கண்ணதாசன் “ஞானம் பிறந்த கதைஎன்ற தலைப்பில் சொல்லி இருக்கிறார்.

இந்த பாடலை கண்டு கேட்டு களித்திட கீழே உள்ள யூடியூப் இணைய முகவரியை சொடுக்கவும் (CLICK HERE)


பாடலைக் கேட்டு கேட்டு பாடலின் வரிகளை இங்கு டைப் செய்து தந்துள்ளேன். வரிகளில் ஏதேனும் மாற்றம் இருந்து தெரிவித்தால் திருத்தி விடுகிறேன்.

பாடல் முதல் வரி: பட்டதெல்லாம் போதுமா பட்டினத்தாரே!
படம்: நல்லதொரு குடும்பம்
பாடல்: கவிஞர் கண்ணதாசன்
பாடியவர்: டி.எம்.சௌந்தரராஜன்
இசை: இளையராஜா
நடிகர்கள்: சிவாஜி கணேசன், மாஸ்டர் சேகர், வாணிஸ்ரீ

பட்டதெல்லாம் போதுமா பட்டினத்தாரே!
அந்த பரமனையும் வாழ வைக்க
சக்தி வந்தாளே!
உன் ஆணவம் எங்கே? வீரம் போனது எங்கே?
ஆரவாரம் கோபம் எல்லாம் அடங்கியதெங்கே?

பட்டதெல்லாம் போதுமா பட்டினத்தாரே!
அந்த பரமனையும் வாழ வைக்க
சக்தி வந்தாளே! சக்தி வந்தாளே!
பட்டதெல்லாம் போதுமா பட்டினத்தாரே!

சுதி இழந்த ராகத்திலே சுகம் இருக்காது
நல்ல சொந்தம் கொஞ்சம்
விலகி நின்றால் உறவிருக்காது
இரண்டும் கெட்ட நிலையினிலே
அன்பிருக்காது
அந்த இடைவெளியில் வளர்ந்த பிள்ளை
ஒழுங்கு பெறாது  ..... ஒழுங்கு பெறாது .....

உன் ஆணவம் எங்கே? வீரம் போனது எங்கே?
ஆரவாரம் கோபம் எல்லாம் அடங்கியதெங்கே?
பட்டதெல்லாம் போதுமா பட்டினத்தாரே!

அடிக்க ஒன்று அணைக்க ஒன்று
இல்லறத்திலே
இங்கு அவையிரண்டும் பிரிந்ததுதான்
இந்த நிலையிலே
குடித்தனத்தில் தவறு வந்தால்
திருத்திக் கொள்ளலாம்
ந்ம் குடும்பத்தையே பிரித்துக் கொண்டால்
கிணற்றில் வீழலாம் கிணற்றில் வீழலாம்
பட்டதெல்லாம் போதுமா பட்டினத்தாரே!

ரத்தம் உள்ள காலத்திலே புத்தி மாறுது
அந்த புத்தி கெட்ட பிறகுதானே
அந்த ரத்தம் பேசுது
சத்தியோடு சிவனைச்
சேர்த்த சைவ தத்துவம்
நல்ல தம்பதிகள் வாழ்வதற்கோர்
தர்ம தத்துவம் .... தர்ம தத்துவம் ....

பட்டதெல்லாம் போதுமா பட்டினத்தாரே!
அந்த பரமனையும் வாழ வைக்க
சக்தி வந்தாளே! சக்தி வந்தாளே!
பட்டதெல்லாம் போதுமா பட்டினத்தாரே!