அண்மையில் ”வலைப்பதிவர்
பயணம் - சரிபார்ப்பு பட்டியல்” என்று ஒரு பதிவினை
எழுதி இருந்தேன். அதற்கு கருத்துரை தந்த முனைவர் B. ஜம்புலிங்கம் அவர்கள் ”இப்பதிவைப் படித்ததும் ஒரு மூத்த தமிழறிஞர் பயணத்தின்போது வைத்துக் கொள்ள வேண்டியது என்பது தொடர்பாக எழுதியிருந்ததாக நினைவு. உரிய நேரத்தில் உரிய யோசனை. நன்றி.” என்று எழுதி இருந்தார். நானும்
எனது மறுமொழியாக “ முனைவர் அய்யாவின் கருத்துரைக்கு நன்றி. ஒரு பழைய பாடல் கூட இதுபற்றி உண்டு. சட்டென்று நினைவுக்கு வரமாட்டேன் என்கிறது. அப்புறம் நினைவுக்கு வந்ததும் ஒரு பதிவாய் போட்டு விட வேண்டியதுதான்.” என்று சொல்லி இருந்தேன்.
ஒரு வழியாக வீட்டு நூலகத்தில் இருந்த பாடல் நூல்களைப் புரட்டியதில், பாரதிதாசன் வந்து
நான்தான் அது என்று வந்தார். “ யாத்திரை போகும் போது! “ என்ற தலைப்பில் அவர் எழுதிய
பாடல் இது.
சீப்புக் கண்ணாடி ஆடை சிறுகத்தி கூந்தல் எண்ணெய்
சோப்புப் பாட்டரி விளக்குத் தூக்குக்கூஜாதாள் பென்சில்
தீப்பெட்டி கவிகை சால்வை செருப்புக் கோவணம் படுக்கை
காப்பிட்ட பெட்டி ரூபாய் கைக்கொள்க யாத்திரைக்கே.
சோப்புப் பாட்டரி விளக்குத் தூக்குக்கூஜாதாள் பென்சில்
தீப்பெட்டி கவிகை சால்வை செருப்புக் கோவணம் படுக்கை
காப்பிட்ட பெட்டி ரூபாய் கைக்கொள்க யாத்திரைக்கே.
- புரட்சிக்
கவிஞர் பாரதிதாசன்
அவர் பட்டியலிட்ட பொருட்கள் இவை. இனி அவற்றின் பயன்பாட்டை தற்காலத்திற்குத் தகுந்தவாறு, ஒவ்வொன்றாகக் காண்போம்.
1.சீப்பு 2.கண்ணாடி (பெரும்பாலும்
இவையிரண்டையும் ஆண் பெண் என்று எல்லோரும் வைத்துக் கொள்கிறார்கள்.)
3.ஆடை ( இதனை மேலாடை, கீழாடை, உள்ளாடை என்று வைத்துக் கொள்ளலாம்)
4.சின்ன கத்தி ( நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு பாரதிதாசன் வாழ்ந்த
இடம் புதுச்சேரி. அப்போது வழிப்பறி, கொள்ளை அதிகம். எனவே தற்காப்பிற்காகவும், அவ்வப்போது
பழங்கள் உண்ண விரும்பினால் அவற்றை நறுக்கிக் கொள்வதற்காகவும் இது பயன்பட்டது. இப்போதும்
இதனை எடுத்துச் செல்லலாம். ஆனால் வழிப்பயணத்தில் போலீஸ் சோதனையில் இதனை ஒரு ஆயுதமாக
கணக்கில் எடுத்துக் கொள்ளவும் வாய்ப்புண்டு.
5.கூந்தல் எண்ணெய் (நாம் இப்போது ஆங்கிலத்தில் ‘ஹேர் ஆயில்’
(Hair Oil) என்று சொல்லுகிறோம்.
6.சோப்பு (தேவைப் படுவோர் எடுத்துச் செல்லலாம்)
7.பாட்டரி விளக்கு (மின்சாரப் பயன்பாடு அவ்வளவாக இல்லாத அந்த நாட்களில்,
டார்ச் லைட் எனப்படும் இந்த விளக்கின் பயன்பாடு அதிகம். இப்போது செல்போனிலேயே இந்த விளக்கு வந்து விட்டது)
8.தூக்குக் கூஜா ( அப்போது ஒவ்வொரு வீட்டிலும் இந்த தண்ணீர் கூஜா
இருக்கும். ரெயில் பயணங்களின்போது , தேவைப்படுவோர் வழியில் நிற்கும் ஸ்டேசன்களில் உள்ள குடிநீர்க்
குழாய்களில் இந்த கூஜாவில் தண்ணீர் பிடித்துக் கொள்வார்கள். இதனை ரெயில் கூஜா என்றே
அப்போது அழைத்தார்கள். இப்போது பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில் வந்த பிறகு இதன் பயன்பாடு
குறைந்து விட்டது)
9.தாள் ( கவிஞர் காலத்தில், கவிதை எழுத அவருக்கு தேவைப்பட்டது;
இப்போதும் சிலர் பாக்கெட் நோட் ஒன்றை வைத்துக் கொள்கிறார்கள்)
10.பென்சில் ( இப்போது பேனா)
11.தீப்பெட்டி ( கவிஞருக்கு புகைபிடிக்கும் பழக்கம் இருந்தது என்று
நினைக்கிறேன். குறிப்பாக சுருட்டை பற்ற வைக்க அவருக்கு தேவைப்பட்டு இருக்கும். இப்போது
அதிகம் யாரும் இதனை எடுத்துச் செல்வதில்லை.)
12.கவிகை - ( குடை (Umbrella) – அந்த காலத்தில், மழை, வெய்யில் என்று
எல்லா நேரத்திற்கும் (குறிப்பாக வயதான பெரியவர்களுக்கு) பயன்பட்டது. இப்போது எல்லோரும்
கையை வீசிக் கொண்டு செல்வதிலேயே ஆர்வம் காட்டுகின்றனர். நடைபயணமும் குறைந்து வருகிறது. )
13.சால்வை ( குளிர்காலத்திற்கும், குளிர்தேசம் செல்லும்போதும் நிச்சயம்
தேவை. கவிஞர் வெளியில் சென்றால் எப்போதுமே சால்வை அணியும் வழக்கம் உள்ளவர்)
14.செருப்பு ( பயன்பாடு அதிகம் உள்ள, இதுபற்றி அதிகமாக விளக்க வேண்டியதில்லை)
15.கோவணம் ( இந்த காலத்துப் பிள்ளைகளிடம் கோவணம் அல்லது கோமணம்
என்று சொன்னால் சிரிப்பார்கள். அந்தகாலத்தில் இது எவ்வளவு முக்கியமானது என்பதனை, சிவன்
ஒரு கோவணத்தை வைத்து ஒரு சிவனடியாரை (அமர்நீதி நாயனார்) சோதித்த பெரியபுராணக் கதை கொண்டு
தெரிந்து கொள்ளலாம். இப்போது கோவணம் ‘என்பது ஜட்டி’ ரூபத்திற்கு மாறி விட்டது.
16. படுக்கை (இப்போது வெளியூர்ப் பயணங்களில் தங்கும் விடுதிகளிலேயே
தந்து விடுகிறார்கள்0
17.காப்பிட்ட பெட்டி ( பூட்டுடன் கூட்டிய பெட்டி. இப்போது சூட்கேஸ்
பெட்டி)
18.ரூபாய் ( ஒரு பயணத்திற்கு போய்வரத் தேவையான பணம். இப்போது வங்கிகளின்
ATM அட்டை பாதுகாப்பாக வந்து விட்டது. நமது மூத்த வலைப்பதிவர் முனைவர் பழனி.கந்தசாமி
அய்யா அவர்கள் தனது பின்னூட்டம் ஒன்றில் “தேவையானதைப் போல் மூன்று பங்கு பணம். இதை உங்கள்
உடம்பில் மூன்று இடங்களில் வைத்துக் கொள்ளவும்” என்று சொல்லுகிறார். ஒன்று காணாமல் போனாலும் இன்னொன்று உதவும் அல்லவா? நல்ல யோசனை.
இவை யாவும் அவர் காலத்தில், அவருடைய பயணத்திற்குத் தேவையான அவருடைய பட்டியல். இந்த காலத்திற்கு இவை
பொருந்துமா என்பது அவரவர் தேவையைப் பொருத்தது.
நன்று நண்பரே அடுத்த பதிவர் விழாவுக்கு நான் இதன் பிரகாரமே வருவேன் நன்றி
ReplyDeleteதமிழ் மணம் 1
நண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்களுக்கு நன்றி. பாரதிதாசன் பாடலை மனனம் செய்து கொள்ளுங்கள்.
Deleteகாலத்துக்கு ஏற்ற மாற்றம் தெரிகிறது ,குடைக் கம்பிதான் குத்துகிறது :)
ReplyDeleteஜோக்காளி பகவான்ஜீ அவர்களுக்கு நன்றி. நீங்கள் குத்தும் குடைக்கம்பியை சரிசெய்து விட்டு எடுத்துச் செல்லலாம்.
Deleteபொருட்களின் சைஸ் வேண்டுமானால்
ReplyDeleteமாறி இருக்கலாம்
மற்றபடி எல்லா காலத்திற்கும் ஏற்ற கவிதையே
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
கவிஞர் எஸ் ரமணி அவர்களுக்கு நன்றி.
Deleteநல்ல கவிதை . பல இக்காலத்துக்கும் பொருந்தும்
ReplyDeleteகல்வி அதிகாரி அவர்களுக்கு நன்றி.
Deleteகவிஞர் அழகாகச் சொன்ன அறிவுரையை இன்றைய நிலைக்குத் தக்க விளக்கி உரைத்துள்ளீர்கள்
ReplyDeleteமூத்த வலைப்பதிவர் அய்யா சென்னை பித்தன் அவர்களுக்கு நன்றி.
Deleteஇந்தக் கவிதையைப் படிக்கும்போது எப்போதோ படித்தது நினைவுக்கு வருகிறது அனைத்துமே தேவையானவைதான் அவற்றி ரூபம் வேண்டுமானால் மாறி இருக்கலாம் பகிர்வுக்கு நன்றி ஐயா
ReplyDeleteஅய்யா G.M.B அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
Deleteஅன்புள்ள அய்யா,
ReplyDeleteபாரதிதாசனின் பயணப் பட்டியல் கவிதையைச் சுட்டிக் காட்டி விளக்கம் கொடுத்தது பல பயன் படக்கூடியன.
த.ம.6
ஆசிரியர் மணவை ஜேம்ஸ் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
Deleteஇப்பட்டியல் பற்றி முன்னரே அறிந்துள்ளேன். இருந்தாலும் தங்கள் பதிவின் மூலமாக கூடுதல் செய்திகள், புகைப்படங்களுடன் நிறைய அறிந்தேன். நன்றி.
ReplyDeleteஇந்த கட்டுரையை நான் எழுதுவதற்கு காரணமாக இருந்த தங்களுக்கு நன்றி.
Delete
ReplyDeleteமதுரைக்கு 1961ம் வருடம் வேலைக்குச் சேர நான்
ரயிலுக்கு புறப்படும் நேரத்தில், என் தந்தை
இந்தப் பாடலை மேற்கோள் காட்டிச் சொன்ன நினைவு
வருகிறது.
அவரும் சுப்பு ரத்தினம், நீயும் சுப்பு ரத்தினம்.
என்று சொன்னதும் நினைவுக்கு வருகிறது.
பிற்காலத்தில், தஞ்சையில் எங்கள் அலுவலக நண்பர் திரு அரசிறைவன் அவர்கள் எனக்கு பாரதிதாசன் அவர்கள் எழுதிய கவிதைத் தொகுப்பு ஒன்றினைப் பரிசாக ஒரு விழாவிலே தந்தார்கள். குடும்ப விளக்கு என்று நினைக்கிறேன்.
அவரும் இந்த பாட்டைச் சொல்வார்.
நிற்க.
இப்போதெல்லாம் சர்வீஸ் அபார்ட்மெண்ட் மாத, தினசரி வாடகைக்கு கிடைக்கிறது. அங்கே அடுத்த இரண்டு நாட்கள் நாம் அணியும் உடைகளையும் அவர்களால் தர முடிகிறது. ஏ .டி. எம்.பிளாஸ்டிக் அட்டை மட்டும் போதும்.
சுப்பு தாத்தா. (சுப்பு ரத்தினம் : என் தாத்தா எனக்கு இட்ட பெயர் )
நீண்ட அன்பான கருத்துரை தந்த சுப்புத் தாத்தா அவர்களுக்கு நன்றி. நீங்கள் குறிப்பிட்ட “சர்வீஸ் அபார்ட்மெண்ட்” எனக்கு புதிய செய்தி. ATM கார்டை மட்டும் முழுக்க,முழுக்க நம்பி, பணம் இல்லாமல் பயணம் சென்றுவிடக் கூடாது அய்யா. காரணம் இப்போதெல்லாம் அடிக்கடி ATM இல் தொழிநுட்பக் கோளாறு காரணமாக பணம் எடுக்க முடிவதில்லை.
Deleteவணக்கம்.
ReplyDeleteஇதனை நீங்கள் கவிதை என்று சொல்லாமல் பாடல் என்று சொல்லி இருப்பதை மிக ரசித்தேன்.
தொடர்கிறேன்.
நன்றி.
ஆசிரியர் ஜோசப் விஜூ அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி. நான் பள்ளியில் படிக்கும் போது நீதிநூல்களைப் பற்றி சொல்லும் போது செய்யுள் என்றார்கள். (செய்யுள் பாடம் என்றே சொன்னோம்) என்னைக் கேட்டால் செய்யுள், கவிதை, பாடல் எல்லாம் ஒன்றேதான். . எட்டுத்தொகையில் ஒன்று “ஓங்கு பரிபாடல்” என்று அழைக்கப்படுகிறது. ஆனாலும் இலக்கண சுத்தியாக எழுதப்படுனவற்றை “மரபுக் கவிதைகள்” என்கிறோம். மற்றவற்றை கவிதை (புதுக் கவிதை, வசன கவிதை), பாடல் (சினிமா பாடல்). என்கிறோம். அவ்வையார், காளமேகம், கம்பர் போன்ற புலவர்கள் எழுதியவை ‘தனிப்பாடல்கள்” என்றும் காட்டப் பெறுகின்றன.
Deleteவணக்கம்
ReplyDeleteஐயா
தெளிவான விளக்கம் கண்டு மகிழ்ந்தேன் த.ம 7
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கவிஞர் ரூபன் அவர்களுக்கு நன்றி. உங்கள் கவிதை நூலை படித்து முடித்து விட்டேன். எனக்கு முன்னர் கரந்தை ஜெயக்குமார் அவர்கள் உங்கள் நூல் பற்றிய விமர்சனம் வெளியிட்டு விட்டார்; எனவே சற்று தாமதம் செய்து எனது நூல் விமர்சனம் வரும்.
Deleteஇப்போது செல்போன், கிரெடிட் கார்டு என்று மாறிவிட்டார்கள்...
ReplyDeleteசகோதரர் கார்த்திக் சரவணன் (ஸ்கூல் பையன்) அவர்களின் கருத்துரைக்கு நன்றி. நீங்கள் சொல்வது சரிதான். மாறி வரும் உலகில் இப்போது செல்போனும், கிரிடிட் கார்டும் அதன் அடையாளங்கள்.
Deleteஅருமையான கவிதையும் விளக்கமும் . நன்றி
ReplyDeleteகவிஞர் நாகேந்திர பாரதி அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
Deleteவிளக்கமும் அருமை ஐயா...
ReplyDeleteசகோதரர் அவர்களுக்கு நன்றி.
Deleteவெளியூர் செல்லும்போது என்னென்ன எடுத்து செல்லவேண்டும் என புரட்சிக்கவிஞர் பாடல் மூலம் பட்டியல் இட்டிருப்பது வியப்பைத் தருகிறது. அந்த பாடலை பகிர்ந்தமைக்கும் தங்களின் விளக்கத்திற்கும் நன்றி!
ReplyDeleteஅய்யா V.N.S அவர்களின் கருத்துக்கு நன்றி.
Deleteநல்லதொரு விளக்கம்.
ReplyDeleteகவிகை - பாடலைப் படித்த போது கவிதை என்பதை கவிகை என்று எழுதி இருக்கிறதோ என நினைத்தேன். விளக்கம் படித்து குடை என தெரிந்து கொண்டேன். நன்றி ஐயா.
Deleteசகோதரர் வெங்கட்நாகராஜ் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. எனக்கும் பாரதிதாசனின் இந்த பாடலைப் படித்தவுடன் ‘கவிகை” என்பதன் அர்த்தம் தெரியவில்லை. அப்புறம் க்ரியா தமிழ் – தமிழ் – ஆங்கிலம் அகராதியைக் கொண்டு கவிகை என்றால் குடை என்பதனைத் தெரிந்து கொண்டேன்.
இளங்கோ சார்! இந்தப் பாடலை எங்கள் தமிழையா தியாகராஜா தேசிகர் வகுப்பில் சொல்லியது மனதில் நிழலாடுகிறது. இன்றி யே.டி.எம் கார்டும் அலைப்பேசியும் கையிலிருந்தால் போதும் என்பதே இளசுகளின் எண்ணம்.
ReplyDeleteமோகன்ஜி அவர்களின் அன்பான வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.
Deleteஉங்கள் கருத்துரையைக் கண்டதும், ஆரண்ய நிவாஸ் ஆர்.ராமமூர்த்தி அவர்களது நூல் விமர்சனத்தில் “ மோகன்ஜி (வானவில் மனிதன்) அவர்கள் நூலிலுள்ள சிறுகதைகளின் எதார்த்தத்தை அணிந்துரையாக தந்துள்ளார்.” என்று நான் எழுதியது நினைவுக்கு வந்தது.
உங்கள் தேடலும் ஞாபகசக்தியும் ஆச்சரியப்பட வைத்தது. ஒவ்வொன்றையும் படங்களுடன் விளக்கிச் சென்ற விதமும் கவர்ந்தது.
ReplyDeleteசகோதரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
Deleteஇதற்குக் கூட பாவேந்தர் கவிதை எழுதியிருக்கிறாரா
ReplyDeleteவியந்தேன் ஐயா
நன்றி
தம +1
ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. பாரதிதாசன் கவிதைகளில் இன்னும் இதுபோல் நிறைய இருக்கின்றன. நம்மைப் போன்ற வலைப்பதிவர்கள்தான் இதனை வெளிப்படுத்த வேண்டும் அய்யா.
Deleteதமிழியக்கம் என்ற நூல் மதுரையில் இயற்றப்பட்டதாக புரட்சிக் கவிஞரைப்போற்றும் செந்திலை கவுதமன்
ReplyDeleteஉலகத்தமிழ்ச்சங்கவருகைசிறப்புரையின் போதுகூறி மதுரையின் தெருக்களில் தமிழ் இல்லை என்று இளக்காரமாகக்கூறினார்.
உண்மைதான்.தலைகுனிவுதான்.
ஆனால் புரட்சிக் கவிஞர் இவ்வெண்பாவில்
சீப்பு,சோப்பு,பாட்டரி,கூஜா,பென்சில் &சால்வை போன்ற பிறமொழிச்சொற்களைப்பயன்படுத்தியது தவறுதானே!