Saturday 29 October 2011

இதற்கெல்லாமா நன்றி சொல்வது?


திருமணம், வரவேற்பு போன்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு நன்றி தெரிவித்து தாம்பூலப்பை போன்றவற்றை தருகிறார்கள். சிலர் புதுமனை புகுவிழா நிகழ்ச்சிகளிலும், பணி ஓய்வு நிகழ்ச்சிகளிலும் நன்றி தெரிவித்து வெறுங் கையோடு செல்லாதீர்கள் என்று எதையாவது தருகிறார்கள். இதெல்லாம் தவிர கலந்து கொண்டவர்களுக்கு “நன்றி! நன்றி! என்று விளம்பரம் செய்கிறார்கள். சில பெரிய புள்ளிகள் பெரிய, பெரிய போஸ்டர் அடித்தும், பத்திரிகைகளில் முழு பக்க விளம்பரம் தந்தும் தங்களது நன்றியை முக்கியத்துவத்தை காட்டிக் கொள்கிறார்கள். இவைகள் மகிழ்ச்சியின் வெளிப்பாடுகள். எல்லாம் சரியே.

ஆனால், இப்போது துக்க காரியங்களுக்கும் நன்றியை வெளிப்படுத்தி புதிய மரபை உண்டாக்கிக் கொண்டு இருக்கிறார்கள். பொதுவாக துக்க நிகழ்ச்சியில் விசாரிக்க வருபவர்களுக்கு  உறவுமுறைகள் வரிசையாக நின்று வருபவர்களுக்கு கைகள் இரண்டையும் நீட்டுவார்கள்.வருபவர்கள் ஆறுதலாக தொட்டுவிட்டு உள்ளே வருவார்கள். அவர்களும் துக்கம் விசாரித்து விட்டு சென்று விடுவார்கள். (போய் வருகிறேன் என்று கூட சொல்லக் கூடாது என்பார்கள்) துக்கம் விசாரித்தல் என்பது மனித சமுகத்தின் கடமை. சிலருக்கு இதுமாதிரி சமயங்களில் காரியங்களை உடனடியாக எடுத்துச் செய்ய உதவிக்கு ஆள் இருக்க மாட்டார்கள். அதுமாதிரி சமயங்களில் சிலர் முன்னின்று உதவுவார்கள். அவர்களுக்கு பிற்பாடு தனிப்பட்ட முறையில் (செய்த உதவிக்கு) நன்றி சொல்லலாம். ஆனால் துக்கம் விசாரித்தமைக்காக சம்பந்தப் பட்டவர்கள்  நன்றி சொல்லி விளம்பரம் தருகிறார்கள். போஸ்டர் அடிக்கிறார்கள். பத்திரிக்கைகளில் முழு பக்க விளம்பரம் தருகிறார்கள்.(கண்ணீர் அஞ்சலி, நீத்தார் நினைவு நாள் போன்ற அறிவிப்பு விளம்பரங்கள் பற்றி ஒன்றும் இல்லை) இவை சரியா? மரபா? என்று தெரிந்தவர்கள் சொல்லவும்.

எம்ஜிஆர் ஒரு படத்தில் துக்கத்திலும், தான் இருக்கமுடியாத ஒரு சூழலில் வெளியிலிருந்து நன்றி சொல்கிறார்.
      “நாலு பேருக்கு நன்றி அந்த
       நாலு பேருக்கு நன்றி
       தாயில்லாத அனாதைக் கெல்லாம்
       தோள் கொடுத்து தூக்கிச் செல்லும் - அந்த
       நாலு பேருக்கு நன்றி

( படம்: சங்கே முழங்கு  பாடலாசிரியர்: கவிஞர் கண்ணதாசன் )


Thursday 27 October 2011

கூடங்குளம் பிரச்சினை: ஜெயலலிதா-காங்கிரஸ் கூட்டணியில் தீர்ந்து விடும்


இன்று தமிழ்நாட்டில் “பில்லியன்டாலர் கேள்வி எதுவென்றால் “கூடங்குளம் அணுமின் நிலையம் தொடங்கப்படுமா? மூடப்படுமா?என்பதுதான். நிச்சயம் தொடங்கப்படும் என்பதுதான் பதில்.

கூடங்குளம் அணுமின் நிலையம் தொடங்கப்பட்ட ஆரம்ப நிலயில் யாருமே எதுவுமே சொல்லவில்லை. இந்த திட்டம் தொடங்கப் படுவதற்கு முன் ஆலை விபத்துக்கள் உலகில் எந்த இடத்திலும் நடக்கவே இல்லை என்று சொல்ல முடியாது. செர்னோபில் அணு ஆலை விபத்து , யூனியன் கார்பைடு தொழிற்சாலை விபத்துக்கள் என்று நடக்கத்தான் செய்தன. ஊரின் நடுவே இருக்கும் ஒரு பிளாஸ்டிக் தொழிற்சாலையில் விபத்து நடந்தால் கூட அந்த ஊருக்கு அதிகம் பாதிப்புதான். அந்த பிளாஸ்டிக் தொழிற்சாலையை எதிர்த்து யாரும் போராடுவது கிடையாது.. சமூக ஆர்வலர்கள், சாதி சங்கங்கள்,உள்ளூர் அரசியல் கட்சிகள், இந்து-முஸ்லிம்-கிறிஸ்தவ மதங்களின் முக்கியமான நபர்கள் என்று எல்லோரும் போராட்டத்தை தொடங்கி விட்டார்கள். இப்போது எப்படி முடிப்பது என்று முழித்துக் கொண்டு இருக்கிறார்கள். இதுதான் உண்மை.உள்ளாட்சி தேர்தலுக்காகஒருநாள் ஒத்திவைத்தார்கள். வழக்கம் போல போராட்டத்திற்கு ஆதரவு, எதிர்ப்பு என்று மாறி மாறி காட்சிகள் நடை பெற்றுக் கொண்டு இருக்கின்றன.

ஜெயலலிதாவிற்கு ஆரம்பத்தில் இருந்தே காங்கிரஸோடு கூட்டணி வைக்க வேண்டும் என்பது தீராத ஆசை. இதனை திருச்சியில் 2011- சட்டமன்ற தேர்தல் கூட்டத்தில் பேசும் போது “தொண்டர்கள் விரும்பும் கூட்டணிஎன்று குறிப்பிட்டார். ஆனாலும் அந்த கூட்டணி ஏற்படவே இல்லை. சட்ட மன்ற தேர்தல், ஊராட்சி தேர்தல் வெற்றிகளுக்குப் பிறகு ஜெயலலிதாவுக்கு சாதகமாக அரசியல் காற்றும் வீசுகிறது.காங்கிரஸைப்  பொறுத்தவரை இன்றைய சூழ்நிலையில் திமுக என்பது அதிகப் படியான ஒரு சுமை. பாராளுமன்ற தேர்தல் வரும்போது அல்லது வருவது போல் ஒரு சமிக்ஞை தோன்றினாலும் சுமையை இறக்கி வைத்து விடுவார்கள்.
அரசியலில் யாரும் பழசை நினைத்துக் கொண்டு இருப்பதில்லை. .இன்று நிலைமை என்ன  என்பதுதான் முக்கியம். ஜெயலலிதாவிற்கு காங்கிரஸோடு கூட்டணி வைப்பதில் தனிப்பட்ட முறையிலும் ஆட்சி செய்வதிலும் அநேக அனுகூலங்கள்.  

மத்திய மாநில அரசுக்கு எதிரான போராட்டம் எதுவாயினும் அதைக் கையாள வேண்டிய பொறுப்பு மாநில அரசுக்கு அதிகம் உண்டு. 
அதிலும் பாதுகாப்புத் துறை சம்பந்தப் பட்ட கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக (முக்கியமாக அங்கு பணி செய்யும் ஊழியர்களை தடுத்தல் போன்றவை) நடக்கும் போது பாதுகாப்பு தர வேண்டியது மாநில அரசின் கடமை. காங்கிரஸ் கட்சியுடன்  ஜெயலலிதா கூட்டணி வைக்கும் சந்தர்ப்பம் அமையும் போது எல்லாம் தலை கீழாக மாறிவிடும். 

மத்தியில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், தனது ஆட்சியில் நிலவும் மின் பற்றாக்குறை நீங்க அவருக்கு கூடங்குளம் அணு மின் நிலையம் அவசியம் தேவை. பாதுகாப்பு காரணங்களை காரணம் காட்டி, அவரது பாணியில் போராடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்போது எது வேண்டுமானாலும் நடக்கும். போராட்டம் செய்யும் பாதி பேர் காணாமல் போய் விடுவார்கள். இன்னும் சிலர் மத்திய மாநில அரசுகள் இப்போது செய்திருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் திருப்தி அளிப்பதாக அறிக்கை விடுவார்கள். பொது மக்கள் பயம் தெளிந்து விடும்.

கவுண்டமணி ஒரு படத்தில் சொல்வதைப் போல “அரசியலில் இதுவெல்லாம் சகஜமப்பா”.

Wednesday 26 October 2011

புதிய பதிவர்களே! பின்னூட்டம் பற்றி கவலைப் படாதீர்கள்!


வலைப் பதிவு போடுவது எப்படி என்று தெரிந்து கொண்டவுடன் எல்லோரையும் போல் எழுதத் தொடங்குகின்றனர். வலைப் பதிவுகளை திரட்டியில் இணைத்ததும் எப்போது வரும் என்று பரபரப்பு. இணையத்தில் வெளி வந்ததும் ஒரு பரவசம். அதன்பின் நமது ஆக்கத்திற்கு வாசகர்கள் என்ன பின்னூட்டம் (Comments) போடுகிறார்கள் என்று நமது வலைப் பதிவு நீங்கும் வரை பார்த்துக் கொண்டே இருக்கிறோம். யாரும் எதுவும் சொல்லாத போது மனது அவ்வளவு தானா என்று தோன்றும். வலைப் பதிவு என்பதே நீர்க்குமிழி போல திரட்டிகளில் இருக்கப் போவது கொஞ்ச காலம்தான். இன்றைய செய்தி நாளை வராது. சாலையில் யாரும் உங்களை “அவர் பெரிய வலைப் பதிவர்என்று சொல்லப் போவது இல்லை. எனவே இதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.

ஏனெனில் வலை பதிவை பார்வையிடும்  பல வாசகர்களுக்கு பின்னூட்டம் இட நேரம் இருக்காது. இன்னும் சிலருக்கு  அவர்கள் பயன்படுத்தும் கம்ப்யூட்டரில் தமிழில் வசதி இருக்காது. அதனால் அவர்கள் படிப்பதோடு சரி. இன்னும் சிலர் விமர்சனம் செய்தால் ஏதாவது வில்லங்கம் வருமோ என்று விமர்சனம் பக்கம் செல்வதே கிடையாது. இதனால்தான் பல பதிவர்கள் குழு அமைத்துக் கொண்டு ஒருவருக்கு ஒருவர் பின்னூட்டம் போடுகின்றனர். இந்த விமர்சனங்கள் பெரும்பாலும் “சூப்பர்”. ”பிரமாதம்” “நல்ல பதிவு” என்ற போக்கிலேயே இருக்கும். படித்துவிட்டு விமர்சனம் செய்கிறார்களா இல்லையா என்றே தெரியாது. படிக்காமலேயே இந்த பாணியில் நட்புக்காக பின்னூட்டம் போடுபவர்களும்  உண்டு. உண்மையி லேயே பின்னூட்டம் தருபவர்களும் உண்டு. பிரபல  பதிவர்களின் பதிவுகளுக்கு மெனக்கெட்டு  நீங்கள் பின்னூட்டம் போடுவீர்கள். ஆனால் அவர்களுக்கோ உங்கள் பதிவுகளை படிக்க நேரமே கிடைக்காது. அதனால் அவர்களும் பின்னூட்டம் தர மாட்டார்கள்.

உங்கள் வலைப்பதிவை எத்தனை பேர் பார்வையிட்டார்கள், எந்தெந்த நாட்டிலிருந்து பார்வையிட்டார்கள், எந்தெந்த நாட்களில் பார்வையிட்டார்கள் என்பதனை உங்கள் வலைப் பதிவில் இருக்கும் வசதி (உதாரணத்திற்கு ப்ளாக்கரில் இருக்கும் STATS ) மூலம் பார்வையிட்டால் பின்னூட்டங்களைப் பற்றி கவலைப் படமாட்டீர்கள். அதுவே உங்களை ஊக்கப் படுத்தும். எனவே பதிவுகளை எழுதுங்கள். எழுதிக் கொண்டே இருங்கள். கமெண்டுகளைப் பற்றி கவலைப் படாதீர்கள்.







Saturday 22 October 2011

மரங்களை வாழ விடுங்கள்


அசோகர் செய்த தொண்டுகள் யாவை என்று கேட்டால் போதும். பள்ளிப் பிள்ளைகள் ஒப்புவிப்பது முதலில் “அசோகர் சாலைகள் போட்டார். மரங்கள் நட்டார்என்பதுதான். சாலையோர மரங்கள் அவ்வளவு நன்மையானவை. இப்போது தங்க நாற்கரச் சாலை என்ற பெயரில் இந்தியா முழுவதும் நீண்ட,அகலமான சாலைகள் அமைக்கப் பட்டன. சாலை பணிகளின்போது  சாலையோரம் இருந்த மரங்கள் வெட்டப் பட்டன.அவைகளுக்கு ஈடாக புதிய மரங்கள் நடப் பட வேண்டும். தண்ணீர் ஊற்றி பராமரிக்க வேண்டும். ஆனால் மீண்டும் மரங்கள் அதிகம் நடப் பட்டதாகத் தெரியவில்லை. மேலும் மரங்களுக்குப் பதிலாக சாலைகளின் நடுவே அரளி மலர்ச் செடிகளைத்தான் அதிகம் காண முடிகிறது.

பல நகரங்களில் திடீரென்று ஒருநாள் சிலர் ஆர்வலர்கள் என்ற பெயரில் நடச் சொல்லி மரக் கன்றுகளைத் தருவார்கள். சிலர் மரங்களைப் பற்றி மணிக் கணக்கில் பேசுவார்கள்.சிலதொண்டு நிறுவனங்களும், பள்ளிகளும், நகரசபைகளும் சாலை ஓரங்களில் இருபுறமும் மரங்கள் நடுவார்கள். பள்ளி மாணவர்களிடையே மரங்களின் அவசியம் பற்றி பாடம் சொல்வார்கள். மரம் நடு விழாக்கள் நடத்தப் படும். தினசரிகளில் புகைப் படங்களோடு செய்திகள்  வெளியிடப்படும்.இத்தனை மரங்கள் இத்தனை மணிகளில் எங்களால் நடப்பட்டன என்று புள்ளி விவரம் தருவார்கள். கொஞ்ச நாள் தண்ணீர் ஊற்றுவார்கள். மரங்களும் அப்புறம் தானாக வளரத் தொடங்கி விடும். நன்கு வளர்ந்து சாலைகளில் நிழல் தரத் தொடங்கும்.

மரங்கள் தங்களுக்கு மேலே உள்ள மின் கம்பிகளைத் தொட்டும் தொடாமலும் அப்பாவியாக நின்று கொண்டிருக்கும். திடீரென்று ஒருநாள் மின் வாரியத்திலிருந்து ஆட்கள் வருவார்கள்.  பராமரிப்பு என்ற பெயரில் சாலையோர மரங்களை யெல்லாம் மொட்டையாக்கி விட்டு சென்று விடுவார்கள். மரங்களை நட்ட புண்ணியவான்களோ பொது மக்களோ யாரும் எதுவும் கேட்க மாட்டார்கள். அவர்கள் மறுபடியும் மரங்களை நடுவார்கள். இவர்கள் மறுபடியும் வெட்டுவார்கள். ஒரு முடிவே இல்லை. பாவம் மரங்கள்.

நண்பர்களே மரங்களை நட்டதோடு உங்கள் கடமை முடிந்து விட்டதாக நினைக்காதீர்கள். மின்வாரிய ஊழியர்களே இதற்கு ஒரு வழி காணுங்கள். மரங்களை வாழ விடுங்கள்.


Wednesday 19 October 2011

தமிழ் மணம்: பதிவர்கள் சர்ச்சை


ஒரு பதிவர் நகைச்சுவை என்ற பெயரில் தமிழ் மணத்தைப் பற்றி கிண்டல் செய்து தமிழ் மணத்திலேயே பதிவிடுகிறார். அந்த பதிவரை இதைப் போலவே நையாண்டி செய்தால் அவர் சும்மா இருப்பாரா? அதே போல் இவரது நையாண்டி பதிவினை தாங்க  இயலாத ஒருவர் அவரது பதிவில் பின்னூட்டமாக பெயரிலி என்ற பெயரில் பதில் தர முற்படுகிறார். (எதிர்வினை தான்.) அவருடைய நோக்கம் அந்த பதிவருக்கு ஒரு காட்டமான பதில் தன்னால் தரப் பட வேண்டும  என்பதுதான். அப்போது சில வார்த்தைகளை கொட்டி விட்டார். இந்த விஷயம் இந்த இருவருக்கும் இடையில் நடந்தது. இருவருமே இந்த அளவுக்கு பதிவர்கள் கட்சி பிரிவார்கள் என்று எதிர் பார்த்திருக்க மாட்டார்கள். வலைப்பதிவு சமாச்சாரம் என்பதால் வெளியே வந்ததில் இப்போது பதிவுகளில் இடசாரி வலசாரியாக விளாசிக் கொண்டு இருக்கிறார்கள்..

வலைப்பதிவில் எழுதும் பதிவர்களில் பலர் புனை பெயர் போன்ற “முகமூடிஅணிந்துதான் எழுதுகின்றனர்; தன்னைப் பற்றிய முழு விவரங்களை (அச்சம் காரணமாகவோ அல்லது வேறு ஏதோ ஒன்றினாலோ) தர விரும்புவதில்லை. ஒவ்வொருவரும் ஒரு முகமூடி அணிந்துள்ளனர். இந்த சுதந்திரம்தான் எல்லோரையும் எல்லா விஷயங்களைப் பற்றியும் எழுத வைக்கிறது. மேற்படி நையாண்டி பதிவினைப் போட்டவரைப் பற்றிய விவரங்களை அவரது பதிவில் தேடினாலும் தேவையான குறிப்புகள் இருக்காது. பின்னூட்டக்காரர்களும் இவ்வாறே. இதனால்தான் இத்தனை கலகம்.

சிலர் தமிழ் மணத்தை விட்டு எல்லோரையும் வெளியே வாருங்கள் என்று சொல்கிறார்கள். சிலர் வெளியேறி விட்டதாக குட் பை சொல்கின்றனர். சிலர் ரெட் கார்டு போட்டு தடை செய்து விடுவதாகச் சொல்கிறார்கள். இன்னும் சிலர் பட்டியல் போட்டு இத்தனை பேர் வெளியேறி விட்டதாக புள்ளி விவரம் தந்து கொண்டு இருக்கிறார்கள்.

பிராமணர்களைப் பற்றியும் தலித்துகளின் இட ஒதுக்கீடு குறித்தும் ஜாதி வேற்றுமை பற்றியும், இந்து முஸ்லிம் -கிறிஸ்தவம் குறித்தும், பெரியாரைப் பற்றியும் அரசியல் கட்சிகளைப் பற்றியும், மத்திய மாநில அரசு ஊழியர்களைப் பற்றியும், சூடான  விமர்சனங்கள் வலைப்பதிவுகளில் வந்துள்ளன; வந்து கொண்டும் இருக்கின்றன.அப்போதெல்லாம் யாரும் யாருடனும் குழு சேர்த்துக் கொண்டு “மன்னிப்பு கேள்! மன்னிப்பு கேள்!என்று எழுதவில்லை. அந்த வலைப் பதிவுகளை நீக்கச் சொல்லி போராடவும் இல்லை.அந்த பதிவுகளை திரட்டியவர்களுக்கு எதிராக எதுவும் செய்து விடவில்லை.ஆனால் இப்போது யாருமே எதிர்பாராத ஒரு விஷயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வர்ணம் கொடுத்துக் கொண்டு இருப்பது தேவைதானா?

பொதுவாகவே எந்த திரட்டியிலும் யார் நடத்துகிறார்கள், யார் நிர்வாகி என்ற விவரங்களைத் தேடினால் கிடைக்காது பதிவர்கள், வாசகர்கள், திரட்டிகள் என்று எல்லோரும் தமிழ் என்ற பிணைப்பினால் இணைந்துள்ளனர். எல்லோராலும் எல்லா நேரத்திலும் எழுதிக் கொண்டே இருக்கமுடியாது. முன்பு அடிக்கடி எழுதும் பழைய பதிவர்களை இப்போது பார்க்க முடியவில்லை. பல வாசகர்கள் “படித்தவுடன் கிழித்து விடவும்என்று போய் கொண்டே இருக்கிறார்கள். பலருக்கு வலைப் பதிவுகளில் பின்னூட்டம் இட நேரமே இருக்காது.


தமிழ் மணமும் தனது விளக்கத்தினை தந்துவிட்டது.தமிழ் மணத்தின் வாசகர்களாக இருந்தவர்கள்தான் தமிழ் மணத்தின் பதிவர்களாக மாறியுள்ளனர். எனவே பதிவர்களே மீண்டும் தொடருங்கள்.



Sunday 16 October 2011

கலைஞர் கருணாநிதி மீண்டும் வருவாரா?


2011-ல் நடை பெற்ற தேர்தலில் தி.மு.க பெற்ற தோல்வி கலைஞர் கருணாநிதிக்கு ஒரு பாடமாக அமைந்து விட்டது. வெளிப்படையாக சில கருத்துக்களை அவரால் சொல்ல முடியா விட்டாலும், மனதிற்குள் எதனால் இந்த தோல்வி என்பது அவருக்கு தெரிந்தே இருக்கும். இன்றைக்கு முதலமைச்சராக இருக்கும் ஜெயலலிதா ஒரு சமயம் தமிழக மக்கள் தந்த தோல்வியால் வெளியே வராமலேயே இருந்தவர்தான். எனவே வெற்றி என்பது யாருக்கும் நிரந்தரமல்ல.

எம்ஜிஆர் தனிக் கட்சி தொடங்கிய நாளிலிருந்த கருணாநிதி  எதிர்ப்பு அரசியல் இன்றும் தொடர்கிறது. எம்ஜிஆர் செல்வாக்காக இருந்த காலத்திலேயே கருணாநிதிக்கென்று ஒரு செல்வாக்கு இருக்கத்தான் செய்தது. அப்போது நடை பெற்ற தேர்தல்களிலும் திமு.கவுக்கென எம்.பி க்கள், எம்.எல்.ஏக்கள் கணிசமாக இருந்தனர்..

எமர்ஜென்சிக்குப் பிறகு நடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்தது.இந்திரா காந்தியும் தனது தொகுதியில் தோல்வி அடைந்தார். பாராளுமன்றத்தில் நுழைய சந்தர்ப்பம் பார்த்து இருந்த போது தஞ்சாவூர் இடைத் தேர்தல் வந்தது.அப்போது தமிழ் நாட்டின் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவரிடம் இந்திரா அம்மையார் தஞ்சாவூர் இடைத்தேர்தலில் தானே நிற்கப் போவதாகவும்,எம்ஜிஆரின் ஆதரவு தேவையெனவும் கேட்டார். எம்ஜியாரும் ஆதரவு தருவதாக இருந்தார். அன்றைக்கு பிரதமராக இருந்த மொரார்ஜி தேசாய் (ஜனதா கட்சி) அவர்கள் எம்ஜிஆரிடம் ஏதோ சொல்ல, எம்ஜிஆர் பல்டி அடித்தார். இந்திரா காந்திக்கு ஆதரவு தரவில்லை. இதனால் அவர் தஞ்சாவூரில் போட்டியிடவில்லை.அப்போது இந்திரா காந்தி சொன்ன வாசகம் “கருணாநிதியை நம்பலாம்.எம்ஜிஆரை நம்பவேமுடியாது. இதனால் தமிழ் நாட்டில் காங்கிரசின் நிரந்தர கூட்டாளி அ.இ.அ.தி.மு.க என்ற நிலைப்பாடு மாறியது.காங்கிரஸ்-தி.மு.க கூட்டணி உருவாகியது. கருணாநிதியும் சந்தர்ப்பங்களை பயன் படுத்திக் கொண்டார்.இழந்து போன செல்வாக்கை தனது சாதுர்யத்தால் மீண்டும் ஏற்படுத்திக் கொண்டார்.

இப்போது மீண்டும் அதே போன்றதொரு இடைவெளி. இந்த இடைவெளி குடும்ப உறவுகளாலும், இவர்கள் பெயரைச் சொல்லி கட்சிக்காரர்கள் செய்த அளவுக்கு மீறிய அட்டகாசங்களாலும் ஏற்பட்ட வெற்றிடம். கண்டிக்க வேண்டியவற்றை இவரால் கண்டிக்க முடியவில்லை. தி.மு.க என்ற இயக்கத்திற்காக கருணாநிதிக்கும்,கலைஞர் கருணாநிதி என்ற தலைவருக்காக தி.மு.கவிற்கும்தொண்டர்கள்,அனுதாபிகள் வாக்களிப்பார்கள். ஆனால் கட்சியின் பெயரால் கட்சிக்காரர்கள்  செய்யும் எல்லாவற்றையும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்.

பிரதமர் பதவியிலிருந்து இந்திரா காந்தியை தூக்கிய அதே மக்கள்தான்  மீண்டும் நீங்கள் தான் எங்கள் பிரதமர் என்று கொண்டாடினர். ஆட்சிக்கு வரவே முடியாது கருதப்பட்ட திமுகவிற்கு ஆட்சி புரிய சந்தர்ப்பம் தந்தனர். ஜெயலலிதா வந்தால் ஆண்டவனாலும் தமிழ் நாட்டை காப்பாற்ற முடியாது என்றவர்கள்தான் இன்று அவரை மீண்டும் முதலமைச்சராக தேர்ந்தெடுத்துள்ளனர்.கருணாநிதி மீண்டும் வருவாரா இல்லையா என்பது அவரது கையில்தான் உள்ளது. ஏனெனில் அறிஞர் அண்ணா சொன்ன “எதையும் தாங்கும் இதயம்அவரிடம் உள்ளது.  

Monday 10 October 2011

ஏசி அறைக்குள் வறுமைக்கோடு போடுபவர்கள்


அரண்மனைக்குள்ளேயே அடைந்து கிடந்த மன்னன் மந்திரியைப் பார்த்து கேட்ட கேள்வி மந்திரியாரே நாட்டில் மாதம் மும்மாரி மழை பெய்கிறதா?காலம்தொறும் கிண்டலாக பேசப்படும் கேள்வி.

மேலிடத்து உத்தரவுப்படி மக்களைப் பற்றிய விவரங்களை திரட்டி தர வேண்டியது சில அலுவலகங்களின் வேலை. அங்கு பணிபுரிபவர்கள் அந்த  விவரங்களை சேகரிக்க அடிக்கடி வெளியில் சென்றுவிடுவார்கள்.. அலுவலகத்தில் அவர்கள் “கேம்ப்(camp) சென்று இருப்பதாகச் சொல்லுவார்கள்.. சில சமயம் போக முடியாவிட்டால் சென்ற மாத கணக்கையே கொஞ்சம் மாற்றி அனுப்பி வைப்பார்கள். பழைய கணக்கையே அனுப்பி வைத்தல் என்பது எல்லா துறைகளிலும் உண்டு. நாடு முழுக்க இவ்வாறு விவரங்கள்  திரட்டப்படும். ( சில சமயம் சில குறிப்பிட்ட சர்வேக்களை தனியாரிடம் ஒப்படைப்பார்கள்.) இவர்கள் கொடுக்கும் விவரங்களை வைத்துதான் நலத் திட்டங்கள் தீட்டப்படும். இந்த விவரங்கள் நடைமுறை வாழ்க்கையில் உண்மையானவையா, எதார்த்தமானவையா, சரியானவையா என்று மேலிடத்தில் யாரும் சரி பார்ப்பது கிடையாது.அவர்களுக்கு வேண்டியது ஒரு பட்டியல்.

இவர்களைப் போன்றவர்கள் கொடுக்கும் விவரங்களை வைத்து தான் மேல் மட்டத்தில் அதிகாரிகள் சில நிர்ணயங்களைச் செய்கின்றனர். இலவச பொருட்களை வாங்க குடும்ப தலைவரின் மாத வ்ருமானம், மாணவர்கள் ஸ்காலர்ஷிப் வாங்க பெற்றோர் ஆண்டு வருமானம், வருமானவரி உச்ச வரம்பு, அரசு ஊழியர் சம்பளம் மற்றும் அகவிலைப் படி, வரி விதிப்புகள்,பெட்ரோல் டீசல் மண்னெண்ணெய் விலை உயர்வுகள்- என்று எவ்வளவோ நிர்ணயங்கள்.அதேபோல மான்யம் தரலாமா வேண்டாமா, இலவச பொருட்கள் எவ்வளவு பேருக்கு கொடுக்க வேண்டும்,எவ்வளவு வாங்க வேண்டும் என்றும் முடிவு செய்வார்கள்.

உண்மையில் மக்கள் எப்படி வாழ்கிறார்கள்? எவ்வளவு கஷ்டப் படுகிறார்கள்?உண்மையில் என்ன பிரச்சினை? வெளியில் என்ன நடக்கிறது?இந்த வரையறைகள் சரியானவைகளா என்று சிந்திப்பதே கிடையாது.வெளியில் இறங்கி வந்து மக்களோடு மக்களாய் பழகி தெரிந்து கொள்வதும் கிடையாது. ஏசிஅறைக்குள் உட்கார்ந்து கொண்டு நாங்கள் சொல்வது சரியாகத்தான் இருக்கும் என்று செயல் படுகிறார்கள்.சமீபத்தில் இவர்கள் ஏசி அறைக்குள் உட்கார்ந்து கொண்டு செய்த நிர்ணயம்வறுமைக் கோட்டுக்கான வரம்பு 32 ரூபாய் என்பதாகும். அதாவது நகர்ப்புறங்களில் ஒரு நாளைக்கு ரூ32-ம் (அதாவது மாதம் ரூ960) கிராமப்புறங்களில் ஒரு நாளைக்கு ரூ26-ம் (அதாவது மாதம் ரூ780) செலவழிப்பவர்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் இருப்பவர்கள். மற்றவர்கள் வசதியானவர்கள். அதாவது இந்தியாவில் ஏழைகளே இல்லை. சித்தாள்,கொத்தனார்,பெயிண்டர், கூலிவேலை செய்பவர் (இன்னும் எத்தனையோ பேர்) எல்லோரும் வசதியானவர்கள்.

இவர்கள் போட்ட கோட்டினால் என்ன நடக்கும்? குழப்பமும், குளறுபடிகளும்தான் மிஞ்சும்..

Saturday 8 October 2011

எம்ஜிஆருக்குப் பின் சரோஜாதேவி முதலமைச்சராக.


சின்ன வயதில் அதாவது பள்ளிக்கூடம் செல்லும் நாளிலிருந்து நான் எம்ஜிஆர் ரசிகன். தீவிரமான ரசிகன் கிடையாது. படம் பார்ப்பதோடு சரி. கல்லூரிக்கு சென்ற பின்னர் விவரம் தெரிந்த பின்புதான் சிவாஜி,ஜெமினி, எம்.ஆர்.ராதா நடித்த படங்களை பார்த்தேன்.மேலும் எம்ஜிஆர் தொடங்கிய அரசியல் கட்சியிலும் சேரவில்லை.

அப்போதெல்லாம் ரசிகர்களில் சிலர் படம் வெளியான,முதல் நாளே,முதல் காட்சியை பார்த்து விட்டு ஏதோ வீர தீர செயலை செய்தது போல பெருமையாக சொல்லுவார்கள்.அவர்கள் சொல்லுவதை நம்புவதா வேண்டாமா என்று தோன்றும்.உடனே அவர்கள் தாங்கள் வாங்கிய சினிமா தியேட்டரின் டிக்கட்டை எடுத்து காண்பிப்பார்கள்.அல்லது தியேட்டரில் மட்டுமே விற்கப்படும் பாட்டு புத்தகத்தை எடுத்து நீட்டுவார்கள். இன்னும் சில ரசிகர்கள் தெருவில் உள்ள மன்றத்திலேயே பழியாக கிடப்பார்கள்..எம்ஜிஆர் படங்கள் ரிலீசாகும் தினம் மன்றத்தை அலங்கரிப்பது, மன்றத்திலிருந்து படம் வெளிவந்த தியேட்டர் வரை ஊர்வலமாக செல்வது என்று ரொம்பவும் அமர்க்களப் படுத்துவார்கள். இதனால் பள்ளிப் படிப்பை கோட்டை விட்டவர்களும் உண்டு.

அப்போது எம்ஜிஆர்- சிவாஜி இருவரும் சினிமா உலகில் கொடி கட்டி பறந்த நேரம். இரண்டு பேருக்குமே ஏராளமான ரசிகர்கள்.  தி.மு.கவில் எம்ஜிஆர் என்றால் காங்கிரஸில் சிவாஜி. இருவரது ரசிகர்களும் அப்படியே இருந்தார்கள். எம்ஜிஆர் மன்றத்திற்கு அருகிலோ அல்லது எதிரிலோ., சிவாஜி ரசிகர் மன்றம் இருக்கும். இதனால் இரண்டு மன்ற ரசிகர்களுக்கும் இடையில் அடிக்கடி மோதல் வந்து போகும்.

எம்ஜிஆருக்கு ஜோடியாக நடித்த  நடிகைகள் சிவாஜிக்கும், சிவாஜிக்கு ஜோடியாக நடித்த நடிகைகள் எம்ஜிஆருக்கும் நடித்தார்கள். இருந்தாலும் எம்ஜிஆர்-சரோஜாதேவி, சிவாஜி-பத்மினி, ஜெமினி-சாவித்திரி ஜோடிகள் அப்போது பிரசித்தம்.ஜெமினியும் சாவித்திரியும் நிஜ வாழ்க்கையிலும் ஜோடியாகி விட்டனர். அதிலும் எம்ஜிஆர் ரசிகர்கள் சரோஜாதேவியை சொந்த அண்ணியாகவே நினைத்தனர்.அப்போது அந்தநேரத்தில் எம்ஜிஆர் ரசிகர்கள் இளைஞர்களாக இருந்ததும் ஒரு காரணம். அதற்கு தகுந்தாற் போல எம்ஜிஆரும் சரோஜாதேவியும்   நெருங்கி நடித்தனர்.


காவேரி கரை இருக்கு கரைமேலே பூவிருக்கு” (தாய் சொல்லை தட்டாதே), “ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்”(அன்பே வா),
குமரிப் பெண்ணின் உள்ளத்திலே (எஙக வீட்டுப் பிள்ளை),ஏதோ ஏதோ ஒரு மயக்கம்”(குடும்ப தலைவன்),தொட்டு விடத் தொட்டு விட தொடரும்”(தர்மம் தலை காக்கும்),அன்று வந்ததும் இதே நிலா”(பணக்கார குடும்பம்),இடி இடிச்சு மழை பொழிஞ்சு எல்லாம் நின்னாச்சு”(நீதிக்குப் பின் பாசம்),தொட்டால் பூ மலரும் தொடாமல் நான் மலர்ந்தேன் (படகோட்டி), ஜவ்வாது மேடையிட்டு சர்க்கரை  பந்தலிட்டு (பணத்தோட்டம்), என்ன என்ன இனிக்குது”(பரிசு),கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா”(பறக்கும் பாவை),ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன்”(தெய்வத்தாய்),- என்று எம்ஜிஆர் சரோஜாதேவி டூயட் பாடல்களை பாடிக்கொண்டே போகலாம்.

எம்ஜிஆர்-சரோஜாதேவி திருமணம் நிச்சயம் நடக்கும் என்று எதிர்பார்த்த ஏராளமான ரசிகர்களில் நானும் ஒருவன். அது நடக்காமல் போனதில் ஏகப்பட்ட ரசிகர்களுக்கு வருத்தம்தான். ஒருவேளை அப்படி நடந்து இருந்தால் சரோஜாதேவிதான் எம்ஜிஆருக்கு பின்னர் தமிழ்நாட்டின் முதலமைச்சராக வரக்கூடிய சந்தர்ப்பம் அமைந்து இருக்கும். இப்படி ரசிகர்களைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்.





Thursday 6 October 2011

மறக்க முடியாத இலங்கை வானொலி தமிழ் ஒலிபரப்பு !


முன்பெல்லாம் தமிழ்நாட்டு வானொலி நிகழ்ச்சிகளை தமிழ் நாட்டு மக்கள் அதிகம்  கேட்க மாட்டார்கள்.இசை என்றால் கர்நாடக சங்கீதம்தான். எப்போது பார்த்தாலும் அந்த வித்துவான் பாடியது ,இந்த வித்துவான் பாடியது என்று இழுத்துக் கொண்டிருப்பார்கள்.எப்போதாவது தமிழ் திரைப் பட பாடல்களை போடுவார்கள்.அதிலும் அவர்கள் எம்ஜிஆர் படப் பாடல்களை ஒலி பரப்ப மாட்டார்கள் .காரணம்,அவர் அப்போது தி.மு.கழகத்தின் முன்னணி நடிகர்.

மக்கள் பார்த்தார்கள்.இலங்கை வானொலியின் தமிழ் ஒலி பரப்பினை கேட்க தொடங்கி விட்டனர்.அவர்களும் தமிழ் மக்களின் ரசனைக்கு ஏற்ப ஒலி பரப்பினர்.ஒவ்வொரு நிகழ்ச்சியை தொடங்கும் முன்னும் ஒரு திரைப் பட மெட்டோடு தொடங்குவார்கள்.ஒலிபரப்பும் துல்லியமாக இருக்கும்.அதிலும் ஒவ்வொரு அறிவிப்பாளரும் நிகழ்ச்சி தொடங்கும் முன்னும் , முடிக்கும் போதும் தங்கள் பெயரைச் சொல்லும் அழகே தனி. கே.எஸ்.ராஜா என்பவர் ஸ்டைலாக ஒருவிதமாக தனது பெயரைச் சொல்லுவார். இன்னும் மயில்வாகனன், அப்துல்ஹமீது,
ராஜேஸ்வரி சண்முகம் (எல்லோருடைய பெயரும் ஞாபகம் இல்லை) என்று மறக்க முடியாத அறிவிப்பாளர்கள். பொங்கும் பூம்புனல், அன்றும் இன்றும்”, புது வெள்ளம்”, பாட்டுக்குப் பாட்டு”, என்று தலைப்புகள் தந்தனர். பழைய தமிழ் திரைப் படப் பாடல்களை திரும்பத் திரும்ப போட்டு இசை இன்பத்தில் ஆழ்த்தினர். கண்ணதாசன்,வாலி என்று தமிழ் திரைப்பட பாடலாசிரியர்களின் கவிதை வரிகள் தமிழ்மக்களிடையே பிரபலமாவதற்கு இலங்கை வானொலியின் தமிழ் ஒலிபரப்பும் ஒரு காரணம்.

நான் எனது கல்லூரி பருவத்தில்,வீட்டில் இருக்கும்போது, இலங்கை வானொலியின் ஒலி பரப்பினைக் கேட்டபடியே படிக்க வேண்டிய பாடநூல்களின் குறிப்பை எடுப்பேன்.மேலும் அன்றைய நாட்களில் தமிழ் நாட்டில் ரேடியோ, டிரான்சிஸ்டர் வாங்கும் போது மக்கள் கடைக்காரரிடம் கேட்கும் முதல் கேள்வி “சிலோன் எடுக்குமா? என்பதுதான்.(இப்போது சன் டீவி வருமா என்று கேட்கிறார்கள்) சிலோன் எடுக்க வேண்டும என்பதற்காக ஒரு காலத்தில் வீட்டின் உச்சியில் ஏரியல் கட்டியிருப்பார்கள். அப்புறம் ஏரியல் இல்லாமலேயே எடுத்தது. பெட்டிக் கடை, டீக் கடை, வீடு, கிராமங்களில் மாடுமேய்க்கும் இடம் என்று தமிழ்நாட்டில் எங்கெங்கு கேட்டாலும் இலங்கை வானொலிதான். இதனால் அப்போது டிரான்சிஸ்டர் விற்பனை அமோகம். தமிழக மக்களுக்கு  இலங்கை வானொலி மீது இருந்த காதலை கண்ட தமிழ் நாட்டு வர்த்தக நிறுவனங்கள் விளம்பரங்கள் தரத் தொடங்கினர்.. உடனே இங்கும் தமிழ் நாட்டில் “தேன் கிண்ணம் என்று தொடங்கினார்கள். அதில் கிண்ணம்தான் இருந்தது. தேன் இல்லை.மக்கள் விருப்பம் எப்போதும் போல் சிலோன் தான்.

இன்று எல்லாம் பழங்கதையாய் போய்விட்டது. எங்கள் தலை முறையோடு அவை முடிந்து விட்டன.

Tuesday 4 October 2011

கூடங்குளம் அரசியல்


கூடங்குளம் அணு மின் நிலையம் மின் உற்பத்தி தொடங்கிவிடும் தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாடு நீங்கிவிடும் என்று எதிபார்த்துக் கொண்டு இருந்த நேரத்தில் “வேண்டாம்என்று கலகக்குரல்.
1988-இல் அன்றைய ரஷிய பிரதமர் கோர்ப்பசேவும், இந்திய பிரதமர் ராஜிவ் காந்தியும் ஒப்பந்தமிட்டு தொடங்கப்பட்ட திட்டத்திற்கு இப்படி ஒரு எதிர்ப்பு வரும் என்று அப்போது யாரும் நினைத்து இருக்க மாட்டார்கள்.

கூடங்குளம் அணுமின் நிலையம் மற்றும் கடற்படை தளம் கொண்டு வந்தால் அந்த பகுதி முழுக்க முழுக்க ராணுவ பாதுகாப்பு இடமாக மாறிவிடும்.கரையிலும் கடலிலும் எந்நேரமும் ராணுவ கண்காணிப்பும் நடமாட்டமும் இருக்கும். சிலர் இதை விரும்பாமலும இருக்கலாம். .உதாரணமாக ஒரு ஊருக்குள் போலிஸ் நிலையம் கொண்டு வருவதைப் போல.  இது ஒரு பக்கம்.

அணு மின் நிலையம் தொடங்கிய போது ஆரம்பத்தில் யாரும் பெரிதாக நினைக்கவில்லை. அண்மையில் ஜப்பானில் ஏற்பட்ட பூகம்பம், சுனாமியால் அங்குள்ள அணுமின் நிலையங்களுக்கு ஏற்பட்ட கதியை கண்டு மக்கள் மிரள ஆரம்பித்து விட்டனர்.பயம் இன்னும் போகவில்லை. சமூக ஆர்வலர்கள் என்று எல்லோரும் சேர்ந்தவுடன் போராட்டம் உண்ணாவிரதம் என்று ஆரம்பித்து விட்டனர்.தமிழ் நாட்டில் பாதுகாப்பான பகுதிகள் என்று சொல்லப்பட்ட இடங்களில் எல்லாம் இப்போது நில அதிர்வுகள் எட்டிப் பார்த்துள்ளன.எனவே பயம் நியாயமானது.

ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன் கூடங்குளம் அணுமின் திட்டத்தின்மீது அதிக நம்பிக்கை கொண்டு இருந்தார்.இதன் மூலம் கிடைக்கும் மின்சாரத்தை வைத்து சமாளித்து விடலாம் என்று நினைத்தார்.எனவே கூடங்குளம் மற்றும் சுற்றியுள்ள மக்கள் இதனை எதிர்த்து போராட்டம் , உண்ணாவிரதம் இருந்தபோது,முதலில்அணுமின் நிலையத்தை ஆதரித்து அறிக்கை விட்டார்.பிற்பாடு உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அப்படியே பல்டி அடித்து அமைச்சரவையில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி மத்திய அரசைக் கைகாட்டிவிட்டார்.

மற்ற மாநிலங்களில் இருக்கும் காங்கிரஸார், மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களை தங்கள் மாநில கட்சி வளர்ச்சிக்கு
விளம்பரமாக பயன்படுத்திக் கொள்வார்கள்.ஆனால் தமிழ் நாட்டு காங்கிரசார் எப்போதும் இதற்கு விதி விலக்கு. மத்தியில் உள்ள தமிழ் நாட்டு மந்திரிகளை சங்கடத்திற்கு ஆளாக்காமல் பாண்டிச்சேரியைச் சேர்ந்த மத்திய மந்திரி நாராயணசாமியை விட்டு சமாதானம் சொல்லச் செய்தனர்.அவர் வந்தார் சென்றார் அறிக்கை விட்டார்.

கருணாநிதி நினைத்து இருந்தால் அவரது ஆட்சிக் காலத்திலேயே
இந்த திட்டத்தினை பற்றிய ஒரு முடிவு எடுத்து இருக்கலாம். ஆனால் அவரோ அடுத்தமுறை ஆட்சிக்கு வரும்போது இந்த திட்டம் தமக்கு சாதகம் என்று இருந்து விட்டார்.இப்போதும் அவர் அணுமின் நிலையத்தைப் பற்றி திட்டமாக எதனையும் சொல்லவில்லை.

ஆனால் எந்த அரசியல் கட்சியும் உறுதியாக இந்த திட்டத்தினை
எதிர்க்கவுமில்லை.ஆதரிக்கவும் இல்லை. அறிக்கை,மேடைப் பேச்சு என்பதோடு சரி. உள்ளாட்சி தேர்தலுக்குள் எல்லாவற்றையும் நீர்த்துப் போகச் செய்துவிடுவார்கள்.ரஷ்யாவை சமாதானம் செய்ய பாதுகாப்பு ஏற்பாடுகளைஅதிகப்படுத்தி அணுமின் நிலையம் கொண்டுவர முயற்சி செய்வார்கள். தேர்தல் நேர சண்டைகள் மக்களை பிளவு படுத்தாது இருக்க வேண்டும். .

இவ்வுலகம் இன்னாதது! இனியது காண்பீர்!


வழி நெடுக மரங்கள்.பாதையின் இரு புறமும் சலசலத்து ஓடும் வாய்க்கால்கள்.மரங்களில் பறவைகளின் ஒலிகள்.கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஒரே பசுமை.இயற்கை அழகை ரசித்தபடி அவர் போய்க்கொண்டு இருக்கிறார்.இடையில் ஒரு சிற்றூர். பாதையிலிருந்து சற்று தள்ளி இருக்கிறது.ஊரில் சற்று இளைப்பாறிச் செல்லலாம் என்று நினைத்து உள்ளே செல்கிறார்.அவர் ஒரு புலவர். காலம் சங்க காலம்.
  
ஊரினுள் நுழைந்ததும் அவர்கேட்ட முதல் ஓசை அழுகுரல் ஓசை. ஒரு வீட்டின் முன்னர் உள்ளேயும் வெளியேயும் கும்பல்.வெளியே ஒருவன் நெய்தல் பண்ணை மெல்லிதாக இசைத்துக் கொண்டு இருக்கிறான்.வீட்டின் முற்றத்தில் அழுது கொண்டு இருக்கிறார்கள்.கணவனை இழந்த பெண் கண்களில் நீர் வழிய துயரத்தோடு இருக்கிறாள்.வீடு முழுக்க ஒரே துயரம். இதயம் கனத்தவராய் அந்த இடம் விட்டு நகருகிறார்.

சிறிது தூரம் சென்றதும் அதே ஊரில் வேறு ஒரு காட்சியை காண்கிறார்.ஒரு வீட்டின் முன் மகிழ்ச்சி ததும்பும் பாடல்களை முழவில் இசைத்துக் கொண்டும்,ஆடிக் கொண்டும் இருந்தனர். பெண்கள் பூக்களை விதம்விதமாய் அணிந்தபடி ஆடிப் பாடி மகிழ்வோடு  இருந்தனர். மணப்பெண் பூக்களைச் சூடி முகமலர்ச்சியோடு காணப்பட்டாள்.அந்த வீட்டில் எங்கும் மகிழ்ச்சி.மனதில் வாழ்த்தியவராய் அந்த இடமும் கடந்து செல்கிறார்.

இரவு நேரம் .படுத்து இருந்த புலவருக்கு தூக்கம் வரவில்லை.
பகலில் அவர் கண்ட இரு வேறு காட்சிகளே மனதில் திரும்பத் திரும்ப நிழலாடின.ஒரே நாளில்,ஒரே நேரத்தில்,ஒரே ஊரில், ஓர் வீட்டில் துன்பம்.இன்னோர் வீட்டில் இன்பம்.இவ்வுலகைப் படைத்தவன் நிச்சயம் பண்பு இல்லாதவனாகத்தான் இருக்க வேண்டும்.வாழ்க்கையில் துன்ப நினைவுகளே நிலைத்து நிற்கின்றன. இன்ப நினைவுகளை விரட்டி விடுகின்றன.எனவே இனியதை நினைத்து மனதை ஆற்றுப்படுத்தியவர் ஒரு பாடலையும் தந்து விட்டார்.இதோ அப்பாடல்....  

ஓரில் நெய்தல் கறங்க,ஓரில்
ஈர்ந்தண் முழவின் பாணி ததும்ப,
புணர்ந்தோர் பூவணி அணியப் பிரிந்தோர்
பைதல் உண்கண் பனிவார்பு உறைப்பப்
படைத்தோன் மன்ற, அப் பண்பிலாளன்!
இன்னாது அம்ம இவ்வுலகம்!
இனிய காண்க இதன் இயல்புணர்ந்தோரே!

(பாடியவர்: பக்குடுக்கை நண்கணியார்
புறநானூறு,  பாடல் வரிசை எண்-194)

Sunday 2 October 2011

அரசியல்வாதிகளுக்கு இவ்வளவு வீடுகள் தேவையா?


முன்பெல்லாம் அரசியல்வாதி என்றால் சொந்த ஊரில் ஒரு வீடு வைத்து இருப்பார்.வீட்டின் முற்றத்தில் ஒரு கொட்டகை. வந்து போகிறவர்களுக்காக போட்டு இருப்பார்கள்..வீட்டின் முன் அவர் இருக்கும் கட்சி கொடிக்கம்பம் இருக்கும்.ஆனால் இப்போதோ செய்தி தாள்களை புரட்டினால்,டிவி செய்திகளைப் பார்த்தால் ஒவ்வொருவருக்கும் இருக்கும் வீடுகளைப் பற்றியும்,வளைத்து போட்ட இடங்களைப் பற்றியும் வராத நாளே இல்லை.அதிலும் மிரட்டல் அரசியல் வேறு. ஸ்டாம்ப் கலெக்‌ஷன்,பழைய நாணயங்கள் கலெக்‌ஷன் போல வீடுகள் கலெக்‌ஷன் பலருக்கு ஹாபியாக உள்ளது. இதில் கட்சி பேதமே கிடையாது.

ஒரு மனிதன் வாழ ஒரு வீடு போதாதா?வாடகைக்கு வீடு தேடும் போது ஒரு சமையலறை,ஒரு ஹால்,ஒரு பெட் ரூம், தண்ணீர் வசதி இருந்தால் போதும் என்றுதான்  நினைக்கிறார்கள். பலர் இவ்வளவு கூட எதிர்பார்ப்பதில்லை. வீதியோரம் படுத்து வாழ்க்கை போராட்டத்தினை  எதிர் கொள்பவர்கள் உள்ளனர்.ஆனால் இந்த அரசியல்வாதிகள் வளைத்துப் போடும் இடங்கள் எத்தனை? பிள்ளைகளுக்கு சேர்த்து வைக்கிறார்கள் என்றால் கூட இவ்வளவு தேவையில்லை. தசரத மகா ராஜாவுக்கு பெண்டாட்டிகள் ஆயிரம் பேர் என்று ஒரு கதை உண்டு. அந்த கதையிலும் கூட அவன் ஆயிரம் பெண்டாட்டிகளுக்கும் ஆயிரம் வீடுகள் கட்டியதாக தெரியவில்லை. புரண்டு புரண்டு படுத்தால் கூட எத்தனை நாளைக்கு எத்தனை வீடுகளில் புரள முடியும்.

சில வருடங்களுக்கு முன்னர் கேள்விபட்ட செய்தி. அவர் பெரிய புள்ளி. பரந்த சாம்ராஜ்யம் அவருடையது. பினாமிகளின் பெயரில் பல்வேறு இடங்களில் வாங்கிப் போட்டார்.அவருக்கு வீடு வாசல் அம்புகள் என்று ஏராளம், ஏராளம். அவர் இருந்தவரை அவரிடம் அடி பணிந்து இருந்தவர்கள், அவர் மண்டையை போட்டவுடன் பினாமி சொத்துக்களை அப்படி அபபடியே அமுக்கிக் கொண்டனர். இறந்து போன அந்த பெரிய புள்ளியின் மனைவியால் ஒன்றுமே செய்ய முடியவில்லை.அந்த பெரிய புள்ளி கஷ்டப்பட்டது, ராப் பகலாய் தூக்கமின்றி சம்பாதித்தது எல்லாம் பினாமிகளுக்குத்தான் போனது.ஆக பினாமிகள்  அண்ணன் எப்போது சாவான் திண்ணை எப்போது காலியாகும்என்றுதான் இருப்பார்கள்.

ஊர் ஊராய் வளைத்துப் போட்டவர்களை உள்ளே தள்ளும்போது அவர்கள் இருக்கப் போவது ஒரு நாளாக இருந்தாலும்- பத்துக்கு பத்து அளவுள்ள அறைக்குள்தான். அதில்தான் டாய்லெட் எல்லாம்.அத்தனை வீடுகள் இருந்து என்ன பயன். அனுபவிக்க முடிவதில்லை.

பட்டினத்தார்க்கு ஞானத்தை காட்டிய ’’காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே!’’ என்ற வரிகள்தான் இப்போது நினைவுக்கு வருகின்றன.