Tuesday, 30 October 2012

இந்திரசித்து வேலைகள்!
மாண்டவன் மீண்டான்
இருப்பவன் மாண்டான்

ஆண் பெண் ஆனான்
பெண் ஆண் ஆனாள்

குமரன் கிழவன் ஆனான்
கிழவன் குமரன் ஆனான்

குமரி கிழவி ஆனாள்
கிழவி குமரி ஆனாள்

எல்லாமே அதிசயம்!
இந்திர சித்து வேலைகள்!

வேறு எங்கும் இல்லை!
வாக்காளர் பட்டியலில்தான்! 


  
( PHOTO THANKS TO  “ Northeast Today” )

 

Tuesday, 23 October 2012

தங்கம் விலை – 86 வருட பட்டியல்.நான் வேலைக்கு சேர்ந்த புதிதில் வேறு ஒரு கிளையில் இருந்த வங்கி குமாஸ்தா ஒருவரைப் பற்றி சொன்னார்கள். அவர் வேலைக்கு சேர்ந்த நாளிலிருந்து ஒவ்வொரு மாதமும் சம்பளத்திலிருந்து ஒரு பவுன் நகை வாங்கி வைத்துக் கொள்வாராம். எங்களால்தான் முடியவில்லை நீங்களாவது அவரைப் போல மாதம் ஒரு பவுன் சேமியுங்கள் என்று ஆலோசனை சொன்னார்கள். என்னாலும் அவ்வாறு செய்ய  முடியவில்லை. நான் திருச்சியிலிருந்து வெளியூருக்கு வேலைக்கு சென்று வரும் செலவுகளையும்  மற்ற செலவுகளையும்  யோசித்ததில்  மாதா மாதம் பவுனுக்கு செலவிட முடியாமல் போய்விட்டது. அந்த மனுஷன் எப்படி சேர்த்தார் என்று தெரியவில்லை. எனவே புதிதாக வேலைக்கு செல்பவர்கள் இந்த யோசனையை முடிந்தால் மேற்கொண்டு பாருங்கள். நகைக் கடைக்காரர்களின் தங்க நகை சீட்டில் சேருவதில் பயன் இல்லை. ஏனெனில் சீட்டின் முடிவில் அன்றைய தங்கத்தின் விலைக்குத் தக்கவாறே அவர்கள் நகைகளைத் தருவார்கள். இதில் லாபமில்லை.

இன்னும் சில பெண்மணிகள். அது கிராமமாக இருந்தாலும் நகர்ப் புறமாக இருந்தாலும் சரி. அவர்கள் அடிக்கடி சொல்லும் வார்த்தை “ பவுன் நூறு ரூபாய்க்கு விற்ற காலத்திலேயே வாங்கி வைத்துக் கொள்ளலாம் என்று சொன்னேன். மனுஷன் கேட்டால்தானே “ என்பதுதான். அந்த மனுஷனைக் கேட்டால் “எங்கே சார் வீட்டுச் செலவு , பிள்ளைகள் படிப்புச் செலவு என்று இருக்கும்போது கிடைக்கிற சம்பளத்தில் என்னத்தை வாங்குவது “ என்று அலுத்துக் கொள்வார். உண்மையில் சம்பளம் ஏறும் போதே, அதற்குத் தகுந்தாற் போல தங்கத்தோடு போட்டி போட்டுக் கொண்டு மற்ற விலைகளும் ஏறி விடுகின்றன. வரவு எட்டணா! செலவு பத்தணா! கடைசியில் துந்தணா!  இதுதான் நிலைமை!


தமிழ் அறிஞர் கி.ஆ.பெ.விசுவநாதம் தனது கால நிலைமையை இவ்வாறு சொல்கிறார்.

“ மாதம் 100 ரூபா வருமானம் உள்ளவர்கள் வீட்டு வாடகை ரூபா 10, அரிசி ரூபா 15, பலசரக்கு ரூபா 15, காய்கறி ரூபா 8, பால் ரூபா 8 , பலகாரம் ரூபா 8 , எண்ணெய் ரூபா 5, விறகு ரூபா 5, வரட்டி ரூபா 2, விளக்கு ரூபா 2, துணி துவைக்க ரூ.3 , சவரம் ரூபா 2 , துணிக்காக ரூபா 5 , இதர செலவுக்காக ரூபா 7 , மீதம் ரூபா 5 எனத் திட்டமிட்டுச் செலவு செய்ய வேண்டும் “
               - கி.ஆ.பெ. விசுவநாதம். ( ஆறு செல்வங்கள் , பக்கம்.27 ) 

இதில் அவரது காலத்திற்கும் நம்முடைய காலத்திற்கும் உள்ள வசதி வாய்ப்புகளைப் பற்றியும் வேற்றுமையையும்  இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு நாடும் தனது ரிசர்வ் வங்கியில் வைத்துள்ள தங்கத்தின் இருப்புக்கு தக்கவாறு கரன்சிகளை வெளியிடுகின்றன. அந்த தங்கத்தின் விலையானது  நமது இந்தியாவில் நாளுக்கு நாள் ஏறிக் கொண்டே போகிறது. ஒவ்வொரு ஆண்டும் தங்கத்தின் விலை என்ன என்று வழக்கம் போல கூகிளில் (GOOGLE) தேடியபோது ஒரு அட்டவணை கிடைத்தது. இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த அட்டவணையை நிறைய தளங்கள் வைத்துள்ளன. எங்கிருந்து யார் முதலில் வெளியிட்டார்கள்  என்றும் தெரியவில்லை. எனவே நான் கூகிளுக்கு மட்டும் நன்றி சொல்லிக் கொள்கிறேன்.


 ( ALL PICTURES :  THANKS TO  “ GOOGLE ” )

Sunday, 21 October 2012

தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாராட்டு.இந்தியா சுதந்திரம் அடைந்த இத்தனை ஆண்டுகளில் தமிழ்நாட்டில் யாரும் எடுக்காத ஒரு துணிச்சலான காரியத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் செய்து இருக்கிறார்கள். ஒரு தொலை நோக்கு திட்டத்தோடு  தமிழ்நாடு சூரிய சக்தி கொள்கை 2012” ( Tamil Nadu Solar Energy Policy 2012 )என்ற ஆவணத்தை நேற்று ( 20.10.2012 ) தலைமைச் செயலகத்தில் வெளியிட்டுள்ளார்.பொதுவாகவே ஆட்சிக்கு வருபவர்கள் எந்த திட்டம் போட்டாலும் தங்களுக்கு இதில் என்ன லாபம் என்றுதான் கவனித்தார்கள். குறிப்பாக தாங்கள் ஒரு திட்டத்தை கொண்டுவந்து, பின்னர் தாங்கள் ஆட்சிக்கு வரமுடியாமல் எதிர்க் கட்சியினர் ஆட்சிக்கு வந்து அவர்களது காலத்தில் இந்த திட்டம் செயல்பட்டால் என்ன ஆவது என்று தெரிந்தால் அதனை செயல்படுத்த மாட்டார்கள். இதனாலேயே தமிழ்நாட்டில் பல நல்ல தொலைநோக்கு திட்டங்கள் அரசியல் காரணமாக செயல்படாமல் போய்விட்டது. இன்று தமிழ்நாடு முழுவதும்  இருக்கும் தலையாய பிரச்சினை மின்வெட்டுதான். தற்காலிகமாக இந்த பிரச்சினையைத் தீர்க்க அண்டை மாநிலங்களை மட்டுமே நம்பியிராமல் சூரிய சக்தியைக் கொண்டு தன்னிறைவு அடைவதுதான் ஒரேவழி என்பதனை அறிந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் இதனைக் கொண்டு வந்துள்ளார்கள். இதனால் அவரை உண்மையிலேயே பாராட்ட வேண்டும். இந்த திட்டத்தை இதற்கு முன்பிருந்த ஆட்சியாளர்கள் கொண்டு வந்து இருந்தால் தமிழ்நாடு இந்த அளவுக்கு மின்வெட்டால் பாதித்து இருக்காது.


இதுபற்றி தினமணி தந்துள்ள தகவல்:


தமிழ்நாடு சூரிய சக்திக் கொள்கை 2012-ன் சிறப்பு அம்சங்கள்:
சூரிய சக்தி பூங்காக்களை உருவாக்குதல்.
வீட்டு உபயோக மின் நுகர்வோர்கள் மேற்கூரை சூரியசக்தி அமைப்புக்களை நிறுவ ஊக்குவிக்கும் வகையில் மின் உற்பத்தி அடிப்படையிலான ஊக்கத்தொகை அளித்தல்.
அனைத்து புதிய அரசு கட்டடங்கள் / உள்ளாட்சி நிறுவனங்களின் கட்டடங்களில் சூரிய சக்தி மேற்கூரை சாதனங்கள் அமைப்பது கட்டாயமாக்கப்படும்.
தற்போதுள்ள அரசு மற்றும் உள்ளாட்சி நிறுவனங்களின் கட்டடங்களில் சூரிய சக்தி மேற்கூரை சாதனங்கள் அமைப்பது படிப்படியாக செயல்படுத்தப்படும்.
உள்ளாட்சி நிறுவனங்களின் அனைத்து தெரு விளக்குகள் மற்றும் குடிநீர் வழங்கும் அமைப்புகள் படிப்படியாக சூரிய சக்தியைக் கொண்டு இயக்கப்படும்.
பெரும் தொழிற்சாலைகள் மற்றும் உயர் அழுத்த மின் நுகர்வோர் குறிப்பிட்ட சதவீத மின்சாரத்தை சூரிய சக்தி மின்சாரத்திலிருந்து பயன்படுத்த வேண்டும்.
சூரிய சக்தி சாதனங்களைத் தயாரிப்பவர்களுக்கு ஊக்கத் தொகை அளிக்கப்படும்.

சூரிய சக்தி மின் உற்பத்தி தயாரிப்பாளர்களுக்கு கீழ்க்கண்ட முனைப்பான கொள்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன:
அ) நிகர அளவியல்
ஆ) மின்சாரவரி செலுத்துவதிலிருந்து விலக்களித்தல்
இ)  மின்தேவை வெட்டிலிருந்து விலக்களித்தல்

(நன்றி: தினமணி (e- Paper ) ஞாயிறு, அக்டோபர் 21, 2012)


எந்த திட்டமாக இருந்தாலும் அதனை நிறைவேற்றும் பொறுப்பு அரசு அதிகாரிகளின் பொறுப்பில் அரசு ஊழியர்கள் கையில்தான் உள்ளது. இந்த திட்டம் முறைப்படி செவ்வனே நடந்தால் நாட்டுக்கு நல்லது.

ஒரு நல்ல நோக்கத்தோடு , தொலைநோக்கோடு இந்த தமிழ்நாடு சூரிய சக்தி கொள்கை 2012” (Tamil Nadu Solar Energy Policy 2012) திட்டத்தினை கொண்டு வந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு மீண்டும் ஒருமுறை பாராட்டு.


Saturday, 20 October 2012

எனது பதிவை காப்பி அடித்த பதிவர்நகைச்சுவை நடிகர் வடிவேலு ஒரு காட்சியில் எனது கிணற்றைக் காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் செய்ய ஓடி வருவார். ஆனால் வலையுலகில்  எனது பதிவு அப்படியே என்னிடம் உள்ளது. ஆனால் அதனை ஒருவர் அப்படியே  எடுத்து தனது பெயரில் பதிவில் போட்டுள்ளார்..

நான், நேற்று   19, அக்டோபர்.2012  அன்று காலை கூகிளில் நாம் உட்கொள்ளும் ஆங்கில மருந்துகளின் விவரம் என்ற பதிவினை (http://tthamizhelango.blogspot.com/2012/10/blog-post_19.html ) பதிவிட்டு இருந்தேன். பின்னர் எங்கள் பகுதி ரேசன் கடைக்கு சென்றுவிட்டு மற்ற வெளிவேலைகளை முடித்து விட்டு வீட்டிற்கு வந்தேன். நல்ல வேளை அப்போது மின்வெட்டு இல்லை. வந்ததும்  வழக்கம் போல எனது பதிவினைத் திறந்து ஏதேனும் விமர்சனம் வந்து  இருக்கிறதா என்று பார்த்தேன். பார்த்தவனுக்கு ஒரே அதிர்ச்சி. அதில் சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்கள் கீழே கண்டுள்ள செய்தியினை தெரிவித்து இருந்தார்.


இன்று மின்சாரம் வந்தவுடன் கீழே குறிப்பிட்ட தளத்தில் கருத்திட்டேன்... உங்கள் தளத்திற்கு வந்து திடுக்கிட்டேன்... கவனிங்க சார்...

/// அனைவருக்கும் பயன் படும் பகிர்வு...

நண்பர்களிடம் பகிர்கிறேன்... நன்றி...

Google + நீங்கள் பகிர்ந்ததில் மூலம் உங்கள் தளம் தெரியும்... Followers ஆகி விட்டேன்... இனி தொடர்கிறேன்... நன்றி...

http://azifair-sirkali.blogspot.in/2012/10/blog-post_18.html ///

உடனே அவர்குறிப்பிட்ட தளத்திற்கு சென்று பார்த்தேன். அனுபவத்தில் யோசித்து யோசித்து நான் எழுதிய மேலே சொன்ன  கட்டுரையை அந்த வலைப் பதிவில் ஒரு பதிவர் , பெயர் Abdul aziz Abdul sathar  , தனது பெயரில் தான் எழுதியது போன்று போட்டுள்ளார். அவருடைய வலைத் தளத்தின் பெயர் “ சீர்காழி – azifair “ என்று இருந்தது. தலைப்பை சற்று மாற்றி கூகுளும் ஆங்கில மருந்துகளின் விளக்கங்கள் “ என்று வைத்துள்ளார். உள்ளே எனது தலைப்போடு நகல் மற்றும் ஒட்டு ( COPY AND PASTE )  முறையில் படங்களோடு  எனது கட்டுரையை போட்டுள்ளார். நன்றி என்று எனது பெயர் போட்டு  இருந்தாலும் பரவாயில்லை. கவனமாக எனது பெயரை நீக்கி உள்ளார். ஒரு பதிவரே இதுமாதிரி செய்து இருப்பது மிக்க வருத்தமாக உள்ளது. சீர்காழி என்ற பெய்ரில் உள்ள இந்த பதிவர் Abdul aziz Abdul sathar  என்பவர் அப்படியே எனது கட்டுரையை Face Book இலும் தனது பெயரில் வெளியிட்டுள்ளதாகத் தெரிகிறது. இருந்தாலும் அவருடைய பதிவிற்கு சென்று அவருடைய Comment Box – இல் நாகரிகமாக

// நண்பரே! அனுபவத்தில் யோசித்து யோசித்து நான் எழுதிய இந்த http://tthamizhelango.blogspot.com/2012/10/blog-post_19.html கட்டுரையை அப்படியே எடுத்து தங்கள் வலைப் பதிவில்  உங்களது  பெயரில் நீங்கள்  எழுதியது போன்று போட்டுள்ளீர்களே இது நியாயமா?. நன்றி என்று எனது பெயர் போட்டு இருந்தாலும் பரவாயில்லை! Face Book இலும் பகிர்ந்து இருக்கிறீர்கள் போல் தெரிகிறது. உங்கள் இறைவன் மீது உண்மையான நம்பிக்கை உள்ளவராக இருப்பின் மனசாட்சிப்படி நடந்து கொள்ளவும்! //

கருத்துரை இட்டேன். அவர் இப்பொழுது வரை எனது கருத்தினை படிக்கவில்லை போல் இருக்கிறது. அவரது தளத்தில் எனது கட்டுரை அப்படியே உள்ளது. இது மாதிரி ஆசாமிகளை என்னவென்று சொல்வது. இது போல் எனது கட்டுரைகளை எத்தனை பேர் காப்பி எடுத்து தங்களது பெயரில் போட்டுக் கொண்டார்கள் என்று தெரியவில்லை!.

மூத்த பதிவராகிய திரு VGK ( வை.கோபாலகிருஷ்ணன் ) அவர்கள்

//ஐயா, மிக நல்ல பதிவு. இன்று கூகுள் மூலம் பலவிஷயங்களை அறிய முடிகிறது என்பது மிகவும் சரியே.
தாங்கள் கஷ்டப்பட்டு எழுதின பதிவை வேறொருவர் COPY + PASTE செய்துள்ளார் என்பது கேட்க மிகவும வருத்தமாகத்தான் உள்ளது. உங்களிடம் அனுபதி பெற்று அதனை அவர் வெளியிட்டு, அதில் உங்களின் பெயரையும் எழுதிநன்றிஎனப்போட்டிருந்தால் நாகரீகமாக இருந்திருக்கும்.//

என்று எனது பதிவின் பின்னூட்டத்தில் தெரிவித்தார்.

எனவே கஷ்டப்பட்டு யோசித்து யோசித்து எழுதும் நண்பர்களே உங்கள் பதிவுகளையும் ஒருமுறை சரி பார்த்துக் கொள்ளுங்கள்!


Friday, 19 October 2012

கூகிளில் நாம் உட்கொள்ளும் ஆங்கில மருந்துகளின் விவரம்இப்போது ஊருக்கு ஊர் டாக்டர்கள். தடுக்கி விழுந்தால் ஒரு டாக்டர். கண்ணில் தூசி விழுந்தால் ஒரு டாக்டர். புரையேறினால் ஒரு டாக்டர். என்று விதம் விதமான டாக்டர்கள். முன்னேற்றமான விஷயம்தான் நான் சிறுவனாக இருந்த காலத்தில் இவ்வளவு டாக்டர்களும்,  கிளினிக்குகளும், மெடிக்கல் ஷாப்புகளும் கிடையாது. மருந்து வாங்க வேண்டுமென்றால் “பாசமலர்” சிவாஜி கணேசன் மாதிரி கடைவீதிக்கு ஓடவேண்டும். கிராமப்புறத்தில் சொல்ல வேண்டியதில்லை.டாக்டர் என்றால் ஆங்கில மருத்துவரையும் மருத்துவர் என்றால் தமிழ் வைத்தியரையும் குறிக்கும். அதேபோல மெடிக்கல் ஷாப் ( Medical Shop ) என்றால் ஆங்கில மருந்துகள் விற்கும் இடத்தையும், மருந்துக்கடை என்றால் தமிழ் மருந்து ( Tamil Medicines ) கடையையும் குறிக்கும்.பெரும்பாலும் அப்போது எல்லோருக்கும் தர்ம ஆஸ்பத்திரி எனப்படும் அரசாங்க ஆஸ்பத்திரிகள்தான். உண்மையிலேயே அன்று அவைகளை சுத்தமாக வைத்து இருந்தார்கள். நன்றாகவும் கவனித்தார்கள். என்னுடைய அப்பா ரெயில்வேயில் திருச்சி பொன்மலையில் ( அப்போது அவர் ஒரு எழுத்தர் ) இருந்தபடியினால் நாங்கள் ரெயில்வே ஆஸ்பத்திரிக்கு செல்வோம். அப்புறம் திருச்சிக்கு BHEL வந்ததும் அவர்களுக்கென்று தனியே ஒரு மருத்துவமனை. எல்லா மருத்துவ மனைகளிலும் மருந்து கொடுக்கும் இடத்தில் பள்ளிக்கூட லேப் (LAB) இல் இருப்பது போல் ஒரு பெரிய பாட்டில் இருக்கும். அதில் பெரும்பாலும் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒரு கரைசல் இருக்கும். அதனை மிக்சர் என்பார்கள்.ஆஸ்பத்திரிக்கென்று போய்விட்டால் அந்த மிகசரில் ஒரு கப் கொடுத்து விடுவார்கள். நாம்தான் கையோடு பாட்டிலையும் எடுத்துச்  செல்ல வேண்டும். பிளாஸ்டிக் பேப்பர்கள் அவ்வளவாக பயன்பாட்டில் இல்லாத காலம். அந்த மிக்சரைப் பற்றிய விவரமெல்லாம் தெரியாது. அதே போல் அவர்கள் தரும் ஆங்கில மருந்துகளைப் பற்றியும் தெரிந்து கொள்ள முடியாது. விவரம் கேடடால் டாக்டர் கோபித்துக் கொள்வாரோ என்ற பயம்.


ஒருமுறை பதிவெழுதும்போது வழக்கம்போல கூகிள் (GOOGLE) இல் ஏதோ ஒன்றை தேடிக் கொண்டு இருந்தேன்.திடீரென்று ஒரு  எண்ணம் தோன்றியது. நாம் ஏதாவது ஒன்று என்றால் டாக்டரிடம் போகிறோம். அவர்கள் எழுதித் தரும் மருந்துகளைப் பற்றி அவர்களும் சொல்வதில்லை. நாமும் கேட்பதில்லை. அந்த மருந்துகளைப் பற்றி கூகிள் இல் தேடுவோம் என்று கேட்டுப் பார்த்தேன். என்ன ஆச்சரியம்! அந்த மருந்தைப் பற்றிய அனைத்து விவரங்களும் வந்துவிட்டன. சாப்பிட்டால் என்ன மாதிரியான பக்க விளைவுகள் என்பதைக் கூடத் தெரிந்து கொள்ள முடிகிறது. மருந்து கம்பெனியின் பெயரோடு தேடினால் நமக்கு இன்னும் நல்லது.  அது மட்டுமன்றி அறுவை சிகிச்சை முறைகள் உட்பட அனைத்து சிகிச்சை முறைகளையும் அறிந்து கொள்ள முடிகிறது. இதனால் நமது பயங்களையும் சந்தேகங்களையும் தீர்த்துக் கொள்ளலாம். கூகிள் படங்கள் ( GOOGLE IMAGES )  வழியாக இன்னும் சுலபமாகத் துல்லியமாகத் தேடலாம். ஆங்கிலத்தில் மட்டுமே தேட வேண்டும். சில விவரங்கள் தமிழிலும் கிடைக்கின்றன. 

இதற்கு காரணம் இப்போது அனைத்து மருத்துவக் கம்பெனிகளும் பிரபல மருத்துவ மனைகளும் தங்களை இணையதளத்தில் இணைத்துக் கொண்டுள்ளன. நீங்களும் உங்கள் மருந்துகளைப் பற்றியும் சிகிச்சை முறைகளைப் பற்றியும் கூகிள் மூலம் தெரிந்து கொள்ளுங்கள். வாழ்க இண்டர்நெட்! ( INTERNET ) வளர்க கூகிளின் சேவை!( PICTURES :  THANKS TO  “ GOOGLE ”)Wednesday, 17 October 2012

ஊருக்குள் மழைநீர் – ஏன்?முன்பெல்லாம்  (ஐம்பது வருடத்திற்கு முன்பு) மழைக் காலம் வந்து விட்டால் குறைந்தது மூன்றுமணி நேரமாவது மழை இருக்கும். சிலசமயம் காற்றும் மழையோடு போட்டி போடும். காற்று ஓய்ந்ததும் மழை அடர்த்தியாக நின்று நிதானமாக பெய்யும். சிலசமயம் நாள் முழுக்க அல்லது விடிய விடிய கூட மழை பெய்தது உண்டு. அப்போது கூட பள்ளிக்கூடங்களுக்கு அவ்வளவு மழையிலும் விடுமுறை தரமாட்டார்கள். பிள்ளைகள் குடை பிடித்துக் கொண்டு அல்லது பெற்றோர் துணையோடு பள்ளிக்கு சென்று வருவார்கள். எவ்வளவு மழைநீர் பெய்தாலும் ஊருக்குள் தேங்காது. மழைநீர் தெருக்களில் வாய்க்கால் போல் செல்லும். பிள்ளைகள் காகித கப்பல் செய்து தண்ணீரில் விட்டு விளையாடுவார்கள். பள்ளமான இடத்தில் அல்லது ஆற்றங்கரையோரம் வீடு கட்டியவர்கள் மட்டும் துன்பத்திற்கு உள்ளாவார்கள். அதுவும் மாவட்ட நிர்வாகத்தினரால் உடனே சரி செய்யப்பட்டுவிடும்.

ஆனால் இப்போதோ ஒரு சின்ன மழை அரைமணி நேரம் பெய்தால் கூட ஊர் தாங்கமாட்டேன் என்றாகி விடுகிறது. அந்த சின்ன மழையையும் செய்தியாகப் போட்டுவிடுகிறார்கள். மழை வருவதற்கு முன்னரே எச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை தந்து விடுகிறார்கள். ஒரு மூன்று மணிநேரம் மழை பெய்தால் போதும். தெருக்களில் வெள்ளம். வீட்டிற்குள் வந்து விடுகிறது. சில இடங்களில் இடுப்பளவு தண்ணீர் தேங்குகிறது. இதற்கு காரணம் என்ன?


          ( PHOTO  THANKS TO www.photoblog.nbcnews.com )


சாலை அமைக்கும் முறை:

எப்போதும் வீடு கட்டும் போது தெருச் சாலைகளின் உயரத்தை கணக்கிட்டு, வீட்டை உயர்த்தி கட்டுவார்கள். வீட்டைச் சுற்றி சுற்றுச் சுவருக்குள் இருக்கும் காலி இடம் மற்றும் தோட்டத்தை மண்போட்டு வெளியிலிருந்து தண்ணீர் உள்ளே வராதவாறு அமைப்பார்கள். தெருச் சாலைகளையும் ஊருக்கு வெளியே உள்ள சாலைகளையும் அமைக்கும் போது ரொம்பவும் உயர்த்த மாட்டார்கள். மேலும் ஆங்காங்கே தண்ணீர் வெளியேற சின்னச்சின்ன கால்வாய்கள் அமைப்பார்கள். அதேபோல் பழைய சாலையை புதுப்பிக்கும் போதும் பழைய தார்ச் சாலையை வெட்டி எடுத்துவிட்டு பழைய உயரத்திற்கே அமைப்பார்கள். இதனால் எவ்வளவு மழை பெய்தாலும் மழைநீர் வெளியேறி விடும். ஊருக்குள் தண்ணீர் தேங்குவதில்லை. ஆனால் இப்போதோ இந்த நடைமுறைகளை கடைபிடிப்பதில்லை. பழைய தார்ச்சாலைகளை வெட்டி எடுப்பதில்லை. அப்படியே சாலையின் மேல் சாலையை அமைத்து உயர்த்திக் கொண்டே போகிறார்கள். ஊரைச் சுற்றி இருக்கும் சாலைகள் குளத்துக் கரைகள் போல் அமைந்து விடுகின்றன.. பழைய வீடுகள் இதனால் பாதிக்கப் படுகின்றன. ஒரு சின்னமழை பெய்தால் கூட தண்ணீர் வெளியேறுவதில்லை. இப்போது எங்கு பார்த்தாலும் உயரம் உயரமாக நான்குவழிச் சாலைகள். பல இடங்களில் மழைநீரோ அல்லது வெள்ளப் பெருக்கோ ஏற்பட்டால் வெளியேற வழி இல்லை. அவைகளுக்கு அடியில் பல ஊர்கள்.

ஆக்கிரமிப்புகள்:

ஒரு இடத்தில் இது இராணுவ நிலம் “ என்ற பெயர்ப் பலகை. அந்த பெயர்ப் பலகையை தவிர சுற்றி இருக்கும் இராணுவ நிலம் முழுக்க ஆக்கிரமித்து வீடுகள். அங்கு உள்ளவர்களுக்கு ரேசன் கார்டு, வாக்காளர் அட்டை, மின்சாரம் எல்லாமே உண்டு. அதேபோல ஆறு, வாய்க்கால், குளம், குட்டை என்று ஆக்கிரமித்தவர்களுக்கும் மேற்படி சொன்ன அனைத்தும் கிடைக்கும். அப்போதெல்லாம் அதிகாரிகள் ஜீப்பில் அடிக்கடி ரோந்து வருவார்கள். இதுமாதிரி ஆக்கிரமிப்புகளை அகற்றுவார்கள். முன்பு ஆக்கிரமிப்பு செய்பவர்களுக்கு ஒரு பயம் இருந்தது. இது மாதிரியான ஆக்கிரமிப்புகளை அகற்றினால் வெள்ளநீர் சரியான முறையில் வெளியேறிவிட வாய்ப்பு அதிகம்.


விளைநிலங்கள் வீட்டுமனைகளாக:

முன்பெல்லாம் ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்குச் செல்லும்போது சாலையின் இருபுறமும் ஒரே வயல்களாக. நீர் நிலைகளாக இருக்கும். கொக்குகளும் நாரைகளும் பறப்பதைக் காணலாம். இப்போதோ புதுப்புது நகர்களின் பெயரில் வண்ண வண்ண கொடிகள் பறக்கின்றன. எல்லா வயல்களும் வீட்டு மனைகளாகிக் கொண்டு வருகின்றன. இங்கு கட்டப்படும் வீடுகள் பின்னாளில் மழைக்காலங்களில் தண்ணீரால் தத்தளிக்கின்றன.  குப்பை கூளங்கள்:

திருச்சியிலிருந்து தஞ்சைக்கு செல்லும்போது வழியில் வல்லம் என்ற இடத்தில் ஒரு காட்சியை பார்க்க நேரிட்டது. ஒரு கல்லூரி சாலை ஓரத்தில் உள்ள வாய்க்கால் கரையில் அமைந்துள்ளது. சாலைக்கும் கல்லூரிக்கும் இடையில் வாய்க்கால் மேல் ஒரு சின்ன பாலம். அந்த கல்லூரியின் குப்பைகளை (தேவையற்ற காகிதங்கள், பிளாஸ்டிக் பொருட்கள் உட்பட) அந்த பாலத்திற்கு அடியில் வாய்க்காலில்தான் கொட்டுகிறார்கள். இது போன்று நாடெங்கும் நிறையபேர் செய்கிறார்கள். இதுபோல கொட்டுபவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சாக்கடை, கால்வாய்களில் தேங்கும் குப்பையை உடனுக்குடன் அகற்ற வேண்டும். 

           

Sunday, 14 October 2012

“எம்.ஆர்.ராதாவின் சிறைச்சாலை சிந்தனைகள்.”1971 - இல் தினமணி கதிரில் எம்.ஆர்.ராதாவின் பேட்டியாக வந்தது இந்த நூல். ”சிறையில் இருந்தபோது பெரியார் மனம் வைத்தால் சீக்கிரமாக விடுதலையாகி விடலாம் என்று நீங்கள் நினைத்ததுண்டா” என்ற விந்தனின் கேள்வியுடன் பேட்டி தொடங்குகிறது. சென்னையிலிருந்து மதுரைக்கு ஓடிப் போன நாள்முதல். நாடக நடிகனாக இருந்து பின்னர் திரைப்பட நடிகராக இருந்த காலம் வரை எல்லாவற்றைப் பற்றியும் பேட்டியாக தந்துள்ளார். புத்தகத்தின் தொடக்கம் முதல் முடிவு வரை எம்.ஆர்.ராதாவின் கரகரப்பான குரலும் நம்மை தொடர்ந்து வருகிறது.அவருடைய அபிமானிகளுக்கும் அவருடைய மலேசிய பேச்சைக் கேட்டவர்களுக்கும்  இந்த புத்தகத்தை படிக்கும்போது இந்த அனுபவம்தான் உண்டாகும்.
  
அண்மையில் திருச்சியில் நடைபெற்ற புத்தக கண்காட்சிக்கு சென்றபோது வழக்கம் போல வாசிப்பு ஆர்வம் காரணமாக சில புதிய நூல்களை வாங்கினேன். “எம்.ஆர்.ராதாவின் சிறைச்சாலை சிந்தனைகள். என்ற மேலே சொன்ன நூலும் அவற்றுள் ஒன்று. எம்.ஆர். ராதாவை பேட்டி கண்டு எழுதியவர் ஆசிரியர் மறைந்த எழுத்தாளர் விந்தன். எம்.ஆர். ராதா என்றாலே அவர் முரடர் என்று பிம்பம் உண்டு. ஆனாலும் பயப்படாமல் நூலில் பல இடங்களில் எழுத்தாளர் விந்தன் அவரிடம் கேள்விகள் கேட்டுள்ளார்.

 
பாத காணிக்கை“ என்று ஒரு படம். அந்த படத்தில் ராதா பட்டாளத்து பரம்பரை சுட்டுடுவேன்என்று துப்பாக்கியை தூக்கியபடி அடிக்கடி இந்த வசனத்தைச் சொல்லுவார். நிஜ வாழ்க்கையிலும் அப்படித்தான் இருந்திருக்கிறார். நாடகக் கம்பெனியில் தன்னோடு மல்லுகட்டி நின்ற போடிநாயக்கனூரான் என்ற ஸ்டண்ட் நடிகரை மேடையிலேயே நிஜமாகவே சுட்டு இருக்கிறார். திருப்பதியில் வெடிகுண்டு தயாரித்து இருக்கிறார். என்.எஸ்.கே மீது இவருக்கு ஏனோ கோபம். அவரைச் சுடுவதற்கு ஒரு துப்பாக்கியை உளுந்தூர்பேட்டை ஆசாமி ஒருவரிடம் வாங்கியிருக்கிறார். இதனைக் கேள்விப்பட்ட என்.எஸ்.கே நேரிலேயே வந்து இவரிடம் சுடச் சொல்ல இருவருமே கட்டி பிடித்தபடி நண்பர்கள் ஆனார்கள். பார்ப்பதற்கு ஆள் முரடனாக தோன்றினாலும் மற்ற சினிமாக் கலைஞர்களைப் போலவே இவரும் ஒரு காதற் பறவைதான். ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்களை செய்து இருக்கிறார். . எம்.ஆர்.ராதா அவர்கள் எல்லாவற்றையும் வெளிப்படையாகவும் சுவையாகவும் சொல்லுகிறார். பெரியார், அறிஞர் அண்ணா, கருணாநிதி, ஜி.டி.நாயுடு, டி.வி.எஸ் அய்யங்கார், என்.எஸ்.கே, தோழர் ஜீவா - என்று தான் தொடர்பும் பழக்கமும் வைத்திருந்த அனைவரைப் பற்றியும் பேசுகிறார்.


பெரியாரின் அன்புத் தொண்டராக இருந்த போதும் தனது கண்கண்ட தெய்வமாக அந்நாளில் செஷன்ஸ் கோர்ட் ஜட்ஜாக இருந்த பிராமண சமுதாயத்தைச் சேர்ந்த கணேச அய்யரைக் குறிப்பிடுகிறார். அவர் தனக்கு  செய்த உதவிகளையும் மறக்காமல் சொல்லியுள்ளார். “விமலா அல்லது விதவையின் கண்ணீர்” என்ற நாடகத்தை எம்.ஆர்.ராதா நடத்தியபோது பழமைவாதிகள் கோர்ட்டில் தடை கோரி வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதியான கணேச அய்யர் நாடகத்தைப் பார்த்து விட்டு எம்.ஆர்.ராதாவை பாராட்டியதோடு இந்தியா முழுக்க இந்த நாடகம் நடத்தப்பட வேண்டும் என்றார். அதன் பிறகும் பல்வேறு சந்தர்ப்பங்களில் ஜட்ஜ் கணேச அய்யர் எம்.ஆர்.ராதாவிற்கு இக்கட்டான பல சந்தர்ப்பங்களில் உதவி செய்துள்ளார்.


தனக்கும் எம்ஜிஆருக்கும் எதனால் தகராறு ஏற்பட்டது என்பதனையும் ஓரிடத்தில் வெளிப்படையாகவே சொல்லுகிறார். எம்ஜிஆரால் தான் பாதிக்கப்பட்டது போலவே திரைப்பட உலகத்தினரில் சிலர்  பாதிக்கப்பட்டது குறித்தும் சொல்கிறார். “அந்த சமயத்திலே ராமச்சந்திரனாலே பாதிக்கப்பட்ட சில நடிகர்களும் நடிகைகளும் என்கிட்டே வந்து, அவர் எங்க பொழப்பை அப்படிக் கெடுத்துட்டார். அவர் செய்யற தான தர்ம சாகசத்தாலே இதெல்லாம் வெளியே தெரியமாட்டேங்குதுன்னு புகார் சொல்ல ஆரம்பிச்சாங்க அதேபோல தனக்கும் எம்ஜிஆருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டை பற்றியும் சில கருத்துக்களை புத்தகத்தின் கடைசி அத்தியாயத்தில் சொல்லுகிறார்.

அதுக்கு மேலே என்ன நடந்தது, நான் ஏன் ஜெயிலுக்குப் போனேங்கிறதெல்லாம் உங்களுக்கும் தெரியும். இந்த உலகத்துக்கும் தெரியும். அதைத் திரும்பத் திரும்பச் சொல்லி மேலே மேலே கசப்பை வளர்த்துக்கிட்டிருக்க நான் விரும்பல்லே. அப்படிச் சொல்லச் சொல்லி என்னை வற்புறுத்தறவங்களுக்கெல்லாம் நான் சொல்ற பதில் இதுதான். தயவு செஞ்சி என் வழக்கு சம்பந்தப்பட்ட விவரங்களைக் கொஞ்சம் விரிவா வெளியிட்டிருக்கிற பேப்பருங்களை எடுத்து வைச்சுக்கிட்டு இன்னொரு தடவை ஊன்றிப் படியுங்க என்கிறதே அது. அதுங்களிலே இருக்கிற என் வக்கீல்களின் வாதங்கள் உங்களுக்கு உண்மையை ஓரளவாவது எடுத்துக் காட்டும்


புத்தகத்தின் தலைப்பில் சிறைச்சாலை அனுபவங்கள் என்று சொல்லப்பட்டாலும் சிறையில் தான் பட்ட அனுபவங்களையோ அல்லது அதனால் ஏற்பட்ட சிந்தனைகளைப் பற்றியோ இங்கு எம்.ஆர்.ராதா சொல்லவில்லை. முழுக்க முழுக்க அவருடைய வாழ்க்கைக் குறிப்புகளே.புத்தகத்தில் ஆங்காங்கே இருக்கும் அவரது கருத்துக்கள் சில: 

"எனக்குத் தெரிஞ்ச வரையிலே ரோசமுள்ளவனும் மானமுள்ளவனும் ஜெயில்லே இருக்கான்! அங்கே வேலை கெடைக்குது. கூலி கெடைக்குது"

"தமிழனைப் பொறுத்தவரையிலே எந்த வீரமும் சோறில்லாமல் போனாத்தான் வரும்”

"படிக்காதவனுக்குச் சட்டம் தெரியறதில்லே; படிச்சவனுக்குச் சட்டம் தெரியுது. அதனாலே படிக்காதவன் எந்தத் தப்பைச் சேஞ்சாலும் சட்டத்துக்கு விரோதமா சேஞ்சிட்டு மாட்டிக்கிறான். படிச்சவன், செய்ய வேண்டிய அயோக்கியத் தனங்களை யெல்லாம் சட்டப்படிடே சேஞ்சிட்டு என்னிக்கும் பெரிய மனுஷனா பெயர் எடுத்துக்கிட்டிருக்கான்."

"என்ன பிரயோசனம்? ஊர்ப் பெரிய மனுஷங்க ரவுடிசமெல்லாம் அந்தந்த ஊரிலேதானே செல்லும்? மற்ற ஊர்களிலே செல்லாதே" 
நூல் வெளியீடு: பாரதி புத்தகாலயம், சென்னை. நூலின் விலை ரூ 70 பக்கங்கள்: 144


Wednesday, 3 October 2012

திரைப் படம் - பத்து கட்டளைகள் (THE TEN COMMANDMENTS)நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த நேரம். எங்கள் வீட்டிற்கு அருகில் பொன்மலை ரெயில்வே தொழிற்சாலையில் தச்சு வேலை செய்த ஒரு கிறிஸ்தவ பெரியவர் இருந்தார். ஒருநாள் அவரோடு பேசிக் கொண்டு இருந்தபோது அவர் பத்து கட்டளைகள் (THE TEN COMMANDMENTS)  பட காட்சிகள் பற்றி பிரமிப்போடு சொன்னார். அன்றிலிருந்து அந்த படத்தை பார்க்க ஆவலாக இருந்தேன். பெரியவனாகி கல்லூரி சேர்ந்த பிறகுதான்  அந்த வாய்ப்பு அமைந்தது. அப்போதெல்லாம் ஆங்கிலப் படங்களை திருச்சியில் மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள பிளாஸா தியேட்டரில் போடுவார்கள். (இன்னொரு தியேட்டர் சிங்காரத் தோப்பு அருகே உள்ள கெயிட்டி) பிளாஸா தியேட்டரில் ஒரு மாலை வேளை பத்து கடடளைகள் (THE TEN COMMANDMENTS) படம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் படம் பார்த்த திருப்தி இல்லை. ஏனெனில் படம் ஆரம்பம் முதல் முடியும் வரை தியேட்டருக்குள் ஆட்கள் வருவதும் போவதுமாக வாசல் கதவுகளை திறந்தும் மூடியும் படத்தை ரசிக்க முடியாமல் செய்து விட்டார்கள். காரணம், தியேட்டருக்கு அருகில் வெளியூர் பேருந்து நிலையம் இருந்ததுதான். அப்புறம் திருச்சியில் டிஜிடல் தொழில் நுட்பத்துடன் ஏசி தியேடடர்கள் வந்தன. இருக்கின்ற தியேட்டர்களில் சிப்பியில் படம் பார்த்தால் அருமையாக இருக்கும். அந்த தியேட்டரில் இந்த படத்தை ரசித்துப் பார்த்தேன். அந்த படத்தின் காட்சிகளை அந்த பெரியவர் ஏன் அவ்வளவு பிரமிப்பாக சொன்னார் என்று அப்போதுதான்  தெரிந்தது. அதன்பிறகு சிப்பி தியேட்டரில் அந்த படத்தையும் பென்ஹர்  (BENHUR) படத்தையும் இரண்டு தடவை  பார்த்து இருக்கிறேன். இப்போது இந்த தியேட்டரை மூடி விட்டார்கள். வருத்தமான விஷயம்தான்.

படத்தின் கதையும் காட்சிகளும்:

எகிப்தை ஆண்ட மன்னன் பாரோவான் என்று அழைக்கப்பட்டான்.. ஒரு பாரோவான் எகிப்து தேசமானது எகிப்தியர்களுக்கே சொந்தம என்றும், அங்கு இருக்கும் இஸ்ரவேலர்கள் என்ற எபிரேய மக்கள் எகிப்தியர்களின் அடிமைகள் என்றும் சட்டம் வகுத்து கொடுமை செய்கிறான். அது மட்டுமல்லாது எபிரேயர்களுக்கு பிறக்கும் ஆண் குழந்தைகளை எல்லாம் கொல்ல உத்தரவிடுகிறான். ஒரு இஸ்ரவேல் தாய் தான் பெற்ற ஆண் குழந்தையை மூன்று மாத காலம் மறைத்து வளர்க்கிறாள்; பின்னர் மன்னனுக்கு பயந்து கோரையால் செய்த ஒரு பெட்டியில் வைத்து நைல் நதியில் விடுகிறாள். அந்த குழந்தையின் அக்காள் (சிறுமி) அந்த பெட்டி செல்லும் திசையிலேயே நாணல் புதர்களில் மறைந்தவாறு யாரும் அறியாவண்ணம் தொடர்ந்து செல்கிறாள். அந்த பெட்டி எகிப்து மன்னனின் மகள் தனது தோழியருடன்  குளிக்கும் பக்கம் செல்கிறது. அடிமைகளாக இருந்த தனது பணிப்பெண்களை விட்டு பெட்டியை கரைக்கு கொண்டுவரச் செய்த இளவரசி அந்த குழந்தையை வளர்க்க ஆசைப்படுகிறாள். தோழிகள் மன்னனின் சட்டத்தை நினைத்து பயப்படுகின்றனர். எனவே இளவரசி அந்த குழந்தையை ரகசியமாக வளர்க்க ஒரு தாதியை ஏற்பாடு செய்ய சொல்லுகிறாள். இதனைக் கண்ட அந்த சிறுமி ஒன்றும் தெரியாதவள் போல் சென்று தான் உதவுவதாகச் சொல்லி தனது தாயையே வளர்ப்புத்தாய் ஆக்கி அவர்களோடு இருந்து கொள்கிறாள். அந்த குழந்தைக்கு மோசஸ் ( நீரிலிருந்து எடுக்கப்பட்டவன் என்று பொருள் ) என்று பெயரிட்டு வளர்க்கின்றனர்.

மோசஸ் எகிப்தியனாக வளர்ந்தாலும்  பெரியவனாகும்போது தான் ஒரு எபிரேயன் என்று தெரிந்து கொள்கிறான். இவனைப் பற்றிய உண்மை தெரிந்த மன்னன் மோசஸை கொல்ல ஆணையிடுகிறான். மோசஸ் தப்பி வேறு ஒரு நாட்டிற்கு சென்று அங்கு ஒரு பெண்ணை மணம்புரிந்து வாழ்கின்றான். தன்னை கொல்ல உத்தரவிட்ட மன்னன் இறந்ததும் மீண்டும் எகிப்து வந்து அடிமைகளாக இருக்கும் தனது இன மக்களைச் சந்திக்கிறான். அப்போது எகிப்தில் அந்த மன்னனுக்குப் பிறகு வந்த இளவரசன் ஆட்சியில் இருக்கிறான். அவனிடமிருந்து மோசஸ் தனது இஸ்ரவேல் இன மக்களை மீட்டுச் செல்கிறான். கடவுளின் ஆணைப்படி தனது மக்களுக்காக பத்து கட்டளைகள் பொறிக்கப்பட்ட கற்பலகைகளை பெறுகிறான். ஆனால் அவனது மக்கள் அவற்றை உதாசீனப்படுத்த மோசஸ் கோபம்கொண்டு அவற்றை உடைக்கிறான்.. 


எகிப்து தேச மன்னனின் அரண்மனை, அடிமைகள் கடுமையாக உழைத்து பிருமாண்டமான கட்டடங்களை அமைத்தல், மோஸஸ் செய்யும் அற்புதங்கள், தனது மக்களை மோஸஸ் மீட்டுச் செல்லும்போது எகிப்து மன்னன் தனது படைகளுடன் அவர்களைத் துரத்தும் காட்சி, இஸ்ரவேல் மக்களுக்காக மட்டும் செங்கடல் இரண்டாகப் பிளந்து வழிவிடும் காட்சி, மோஸஸ் இறைவனிடம் பத்துக் கட்டளைகள் பெறும் காட்சிகள் அனைத்தும் கதை நடக்கும் இடத்திற்கே நம்மை அழைத்துச் செல்கின்றன. இன்றைக்கு இருக்கும் தொழில் நுட்பம் இல்லாத அன்றைய கால கட்டத்தில் இன்றும் ரசிக்கும் வண்ணம் படம் எடுத்து இருக்கிறார்கள். இது உண்மையிலேயே பெரிய விஷயம்தான்.

திரைப்படத்தின் மற்ற விவரங்கள்:


இந்த பத்து கட்டளைகள் (THE TEN COMMANDMENTS) என்ற  திரைப்படத்தை டைரக்ட் செய்தவர் Cecil B. Demile . அவரும் Henry Wilcoxo என்பவரும் இணைந்து  அதிக பொருட் செலவில் தயாரித்து இப் படத்தை வெளியிட்டுள்ளனர். படத்தினை விநியோகம் செய்தவர்கள் புகழ்பெற்ற பாரமவுண்ட் பிக்சர்ஸ் (PARAMOUNT PICTURES) இதில் நடித்த நடிகர்கள் ஒவ்வொருவரும் அந்த படத்தோடு ஒன்றி கதாபாத்திரமாகவே மாறி நடித்துள்ளனர். மோஸஸ் வேடத்தில் Charlton Heston சிறப்பாக நடித்தார். ( இவரே பென்ஹர் படத்திலும் நடித்து இருக்கிறார்) எகிப்து தேச பாரோ மன்னன் RAMESES .II வேடத்தில் கம்பீரமாக நடித்தவர் Yul Brynner. இவரது கம்பீரமான முகபாவங்கள், உடல் அசைவுகள் இன்றும் என் கண் முன் நிற்கின்றன. எகிப்து ராணியாக காதல், உருக்கம என்று நடித்தவர்  Anne Baxter. மோஸசின் மனைவியாக Yvonne De Carlo நடித்து இருந்தார். மற்றும்  Debra Paget என்ற நடிகையும்  John Derek  மற்றும் Edward G. Robinson  ஆகியோர் குறிப்பிடத் தகுந்தவர்கள். இசை  அமைத்துத் தந்தவர்  Elmer Bernstein. சினிமாடோக்ராபி  Loyal Griggs. எடிட்டிங்   Anne Bauchens.

                   (THE TEN COMMANDMENTS  திரைப்பட டைரக்டர் Cecil B. Demile )


விருதுகள் பலவற்றை  பெற்றுள்ள, இந்த திரைப் படம் வெளியிடப்பட்டு 56 ஆண்டுகள் ஆன போதும்,  இன்றும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்புள்ளதாகவே உள்ளது. படம் வெளியான தேதி: அக்டோபர் 5, 1956.


       
( ALL PICTURES :  THANKS TO  “ GOOGLE ” )