Thursday 16 May 2013

அய்யா! …. நீங்க! நல்லவரா? கெட்டவரா?



ஒரு கால கட்டத்தில், தமிழ் திரைப்பட உலகில் திரும்பத் திரும்ப பார்த்த முகங்களையே கதாநாயகர்களாக ரசிக்க வேண்டி இருந்தது..   எழுபது தொடங்கிய போது கமல்ஹாசன், ரஜினிகாந்த்த், விஜயகுமார் போன்ற துடிப்புள்ள இளம் கதாநாயகர்கள் வந்தனர். திரைப்பட உலகமே தலைகீழாகிப் போனது. இளம் கலைஞர்களுக்கு நல்ல வரவேற்பு தொடங்கியது


கமல்ஹாசன்:

இதில் நடிகர் கமல் பிறவி கலைஞர். இவர் நடித்த, களத்தூர் கண்ணம்மா
படத்தை சின்ன வயதில் பார்த்தது. “அம்மாவும் நீயே! அப்பாவும் நீயேஎன்ற பாடலில் அவர் வந்த காட்சி இன்றும் ஒலிக்கிறது. எனது கல்லூரி நாட்களில் எனது நண்பர்களோடு, பாலச்சந்தர் டைரக்‌ஷனில் உருவான இவரது படங்களை விரும்பி பார்ப்போம். எழுபது தொடங்கி இன்றுவரை அவர் தனது படங்கள் ஒவ்வொன்றிலும் தனி முத்திரை பதித்து வருகிறார். அதில் நாயகன் படத்தில் ( 1987 இல் வந்த படம் ). கமல், பம்பாயில் தாதாவாக வாழ்ந்த ஒருவராகவே மாறி,  நடித்து இருக்கிறார். படத்தை தத்ரூபமாக இயக்கியவர் டைரக்டர் மணிரத்னம். இசை இளையராஜா.


நாயகனில் எனக்குப் பிடித்த காட்சி:


நாயகன் திரைப்படம். கிளைமாக்ஸ் காட்சி. தாதாவான, வேலு நாயக்கரை
( கமல்ஹாசன்) கோர்ட்டுக்கு அழைத்து வருகிறார்கள். அவருக்கு ஆதரவாக கோர்ட்டு வாசலில் ஆதரவாளர்கள் கோஷம் செய்கிறார்கள். பலத்த போலீஸ் பாதுகாப்பு. அவர்களைக் கடந்து கோர்ட் நுழைவு வாயில் வருகின்றனர். அங்கே வேலுநாயக்கரின் மகள் ( கார்த்திகா ) தனது மகனுடன் நின்று கொண்டு இருக்கிறார். நாயக்கர் அப்போதுதான் தனது பேரனை முதன்முதலாக பார்க்கிறார். அவன் அம்மா அனுப்ப பேரன் தாத்தாவைப் பார்க்கிறான். தாத்தாவிடம் கேட்கும் கேள்விகள் ... ...

“உன்னை ஏன் ஜெயில்ல வச்சிருக்காங்க?
“நீங்க ஏதாவது தப்பு பண்ணீனிங்களா?
“நீங்க நல்லவரா? கெட்டவரா?
“சொல்லுங்க!
“நீங்க நல்லவரா? கெட்டவரா?


அப்போது வேலுநாயக்கரின் பதில் “ தெரியலியேப்பா... .. தெரியலே! அடுத்தவர்களுக்கு ஏதேனும் கொடுத்தே பழக்கப்பட்ட வேலுநாயக்கர், தனது பேரனுக்கு கொடுப்பதற்காக மேல் சட்டைப் பாக்கெட்டில் துழாவுகிறார். ஒன்றுமே இல்லை. கை விரலில் அணியும் மோதிரமும் இல்லை. யோசித்துவிட்டு தனது கழுத்தில் இருந்த ருத்திராட்சக் கொட்டை மாலையை பேரனுக்கு தருகிறார்.

அடுத்து நாயக்கர் உள்ளே கொண்டு செல்லப்படுகிறார். அப்போது அவருக்கு நெருக்கமான செல்வம் என்ற தொண்டர் ஒருவர் (ஜனகராஜ்) வேகமாக வருகிறார் “நாயக்கரே! நாங்க இருக்கோம் நாயக்கரே! நாங்க இருக்கோம்! உனக்கு ஒன்னும் ஆகாது.. போயிட்டு...  வா என்று கத்துகிறார். அவரை போலீசார் அப்புறப் படுத்துகிறார்கள்.

கோர்ட்டில்  சாட்சியங்கள் சரியில்லை என்று, வேலு நாயக்கரை  விடுதலை செய்கிறார்கள். நாயக்கர் கோர்ட்டுக்கு வெளியே வருகிறார். அவரது ஆதரவாளர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் கோஷமிடுகிறார்கள். அப்போது நாயக்கரால் கொல்லப்பட்ட், போலீஸ் அதிகாரியின் மகன் (மனநிலை பாதிக்கப்பட்டவன்), தனது தந்தை போட்டு இருந்த போலீஸ் யூனிபார்மில் அங்கு வருகிறான். துப்பாக்கியால் வேலு நாயக்கரை சுடுகிறான். நாயக்கர் மரணம் செய்தியாகிறது. திரைப்படம் முடிவடைகிறது..


படம் முடிந்து வெளியே வரும்போது எல்லோருடைய மனதிலும் கேட்கப்படும் கேள்வி “நீங்க நல்லவரா? கெட்டவரா?. உதடுகள் முணுமுணுத்த பாடல் ... “ தென்பாண்டிச் சீமையிலே! தேரோடும் வீதியிலே! ‘.


கதையின் முடிவு:

வேலுநாயக்கர் போன்றவர்கள் இன்றும் ஏதாவது ஒரு ரூபத்தில், எங்காவது ஆதிக்கம் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். திரைப்படத்தில் அவர்களை என்னதான் வள்ளல்களாக, நல்லவர்களாக,பெரிய மனுஷன்களாக சித்தரித்தாலும் கதையின் முடிவை மாற்றி எழுத யாருக்கும் மனது ஏனோ வருவதில்லை.. அவர்கள் எடுத்த வன்முறை என்ற ஆயுதத்தாலேயே அவர்களது வாழ்வும் முடிவடைகிறது. “கத்தியை எடுத்தவன் கத்தியாலேயே சாவான் . என்பது முதுமொழி.  அவரைப் போன்றவர்களிடம், நாம் அய்யா! நீங்க! நல்லவரா? கெட்டவரா? என்று நாம் கேட்க முடியாது. அப்படி கேட்டால் அவரைச் சுற்றி உள்ள அடிப்பொடிகளின் கேள்விகளுக்கு நம்மால் பதில் சொல்ல் முடியாது. அவரை  கேட்பதைவிட நமக்கு நாமே நீங்க! நல்லவரா? கெட்டவரா? கேட்டுக் கொள்வதும் ஒருவிதத்தில் நமக்கும் நல்லதுதான்.

தென்பாண்டி சீமையிலே!
தேரோடும் வீதியிலே!
மான் போல வந்தவனை
யார் அடித்தாரோ!
யார் அடித்தாரோ!

வளரும் பிறையே தேயாதே!
இனியும் அலுத்து தேம்பாதே!
அழுதா மனசு தாங்காதே!
அழுதா மனசு தாங்காதே!



தென்பாண்டி சீமையிலே!
தேரோடும் வீதியிலே!
மான் போல வந்தவனை
யார் அடித்தாரோ!
யார் அடித்தாரோ!


           - இசையமைத்து பாடியவர்: இளையராஜா





( PICTURES :  THANKS TO  “ GOOGLE ” )

Wednesday 8 May 2013

தபால் துறை: அழைப்பிதழ்கள் போய்ச் சேர்வதில்லை



முன்பெல்லாம் ஒரு தபாலை வெளியூருக்கு அனுப்பினால் ஒரு வாரத்திற்குள் சென்று சேர்ந்து விடும். உள்ளூர் தபால்களுக்கு இரண்டு நாட்கள். அடுத்த நாளே போய்ச் சேர்ந்த அதிசயமும் உண்டு. இப்போது அப்படி இல்லை.  நாம் அனுப்பும் தபால்கள் சரியாகச் சென்று சேர்வதில்லை. மற்றவர்கள் அனுப்பும் தபால்களும் சரியாக வந்து சேர்வதில்லை.

என்னோடு பணிபுரிந்த நண்பர்  ஒருவர் தனது மகள் திருமணத்திற்காக அழைப்பிதழை எனக்கு நேரில் கொடுக்க விரும்பினார். நான் வீட்டில் இருப்பதை உறுதி செய்துகொள்ள என்னை செல்போனில் அழைத்தபோது, நான் வெளியூரில் இருந்தபடியினால் அழைப்பிதழை வீட்டு முகவரிக்கு தபாலில் அனுப்பச் சொன்னேன். அவர் சொல்லி பதினைந்து நாட்கள் ஆகியும் தபாலில் எதுவும் வரவில்லை. அவரிடம் போனில் விசாரித்ததற்கு அப்போதே அனுப்பி விட்டதாகச் சொன்னார். அப்புறம் அவரை நேரில் சென்று பார்த்து ஒரு அழைப்பிதழைப் பெற்றுக் கொண்டேன். அவரோ இதே போல் பலருக்கும் தபாலில் அனுப்பியவை சென்று சேரவில்லை என்று வருத்தப்பட்டார்.

இதே போல இன்னொரு நண்பர், தனது மகள் திருமணத்திற்கு தபாலில் பத்திரிகையை அனுப்பி வைத்தார். வரவில்லை. அவரிடம் செல்போனில் திருமண நாள், நடக்கும் இடம், நேரம் தெரிந்து கொண்டு சென்று வந்தேன். அவருக்கும் முன்னவர் போல் இதே அனுபவம். அவர் தபாலில் அனுப்பிய பல பத்திரிகைகள் சென்று சேரவில்லை. திருமணம் முடிந்து நான்கு நாட்கள் கழித்து எனக்கு அவர் அனுப்பிய அழைப்பிதழ் வந்து சேர்ந்தது. அவர் சொன்ன தகவல்.  அவரது கிராமத்து கோயிலில் கும்பாபிஷேகம். கிராமத்தார் அனுப்பிய அழைப்பிதழ் நிகழ்ச்சி முடிந்து ஒருவாரம் சென்ற பிறகுதான் வந்தது.

எனக்கும் இதே அனுபவம். இரண்டு வருடங்களுக்கு முன்னர் எனது மகள் திருமணம் நடந்தது.அழைப்பிதழ்களை நேரில் கொடுகக முடிந்தவர்களுக்கு நேரில் கொடுத்தேன். மற்றவர்களுக்கு, குறிப்பாக வெளியூர் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும், தபாலில் பத்திரிகைகளை இரண்டு வாரங்களுக்கு முன்னரே அனுப்பவேண்டும் என்று தபால் அலுவலகம் சென்று நேரில் கொடுத்துவிட்டு வந்தேன்.. ஆனால். நிறையபேருக்கு தபால் சென்று சேரவில்லை; சிலருக்கு திருமணம் முடிந்து சில நாட்களுக்குப் பிறகுதான் கிடைத்தது.

இதில் எங்கள் மூவருக்கும் ஒரே மாதிரியான அனுபவம். மேலும் நாங்கள் தனியார் கூரியர் மூலம் அனுப்பிய அழைப்பிதழ்கள் சரியாக சென்று சேர்ந்து விட்டன. இதே போன்ற  அனுபவம் உங்களுக்கும் நேர்ந்து இருக்கலாம்.

பெரும்பாலும் நகர்ப்புற தபால் அலுவலகங்களில் மட்டுமே இவ்வாறு நடக்கிறது. காரணம் கட்டு கட்டாக ஒவ்வொருவரும் தங்கள் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு ஒரே சமயத்தில் தந்து விடுகிறார்கள். அதிக தபால்களைப் பார்த்தவுடன் அவர்கள் பதற்றம் ஆகிவிடுகிறார்கள் போலிருக்கிறது.  நமது இந்திய தபால் துறையின் சேவை இவ்வாறு இருக்கிறது. தபால் ஊழியர்களிடம் இதுபற்றி விசாரித்தால், எங்கள் துறையில் ஆட் பற்றாக் குறையும், அதிக வேலைப் பளுவும் இருப்பதாகச் சொல்கிறார்கள். ( மின்னஞ்சல், செல்போன் வந்தபிறகு வாழ்த்து அட்டைகள் அனுப்புதல், கடிதம் எழுதுதல், தந்தி அனுப்புதல் போன்றவைகளை மக்கள் அதிகமாக நாடுவதில்லை. இதனால் ஊழியர்களுக்கு வேலை அதிகம் இல்லை என்று தங்கநாணயம் (GOLD COIN) விற்றல் போன்ற வணிகரீதியான (COMMERCIAL) செயல்களை தபால் இலாகா மேற்கொண்டுள்ளது. இதனால் வேலைப்பளு அதிகம் ஏற்பட்டு விட்டதாக சொல்கிறார்கள்.) மேலும் பல இடங்களில் பல தபால்கள், டெலிவரி செய்யாமலேயே  கட்டுகட்டாக ஊருக்கு வெளியே கிடந்த் செய்திகளையும் அவ்வப்போது பார்க்க நேரிடுகிறது.  

இதுகுறித்து யாரும் புகாரும் செய்வதில்லை. காரணம் எல்லாமே சாதாரண தபாலகள். இதற்கான தீர்வை, தபால் இலாகாதான் செய்ய வேண்டும். “ஒன்றுபடுவோம்! போராடுவோம்என்று முழக்கமிடும் தொழிற்சங்க நிர்வாகிகளும், ஊழியர்களும் இதுகுறித்து சேவை மனப்பான்மையோடு யோசிக்க வேண்டும்.


( PICTURES :  THANKS TO  “ GOOGLE ” )