ஏன் இந்த நூல்?
நீதிபதி K. சந்துரு அவர்கள் வழக்கறிஞராக இருந்த காலத்தில் இவரைப்
பற்றிய செய்திகளை, இவரது பேட்டிகளை பத்திரிகைகளில் படித்து இருக்கிறேன். தொழிலாளர்களின்
நலனில் அக்கறை கொண்டவர், இடதுசாரி சிந்தனை உள்ளவர், நேர்மையானவர் என்று கேள்விப் பட்டு
இருக்கிறேன். “
/// ’குற்றம் செய்தவரைக்கூடத் தமது வாதத்
திறமையால் நிரபராதி என நிரூபித்துக் காட்டுபவர்தான் நல்ல வழக்கறிஞர்’ என்பது நமது பொதுப்
புத்தியில் பதிந்திருக்கும் கருத்து. அதற்கு மாறாக ‘குற்றம் செய்தவர் எனத் தனக்குத்
தெரிந்த எவருக்காகவும் வாதாடுவதில்லை’ என்ற கொள்கையைக் கொண்ட வழக்கறிஞராக இருந்தவர்
திரு. சந்துரு /// -
(இவர்தான் சந்துரு, (ஆசிரியர் ரவிக்குமார் - நூல் – பக்கம்.4
-5 )
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய K.சந்துரு
அவர்கள் பணியில்
இருந்து ஓய்வு பெற்றவுடன், தனக்கு பிரிவு உபசார விழா ஏதும் வேண்டாம் என்று மறுத்ததோடு,
உயர்நீதிமன்றம் வழங்கிய காரை ஒப்படைத்துவிட்டு நண்பர்களுடன்
மின்சார ரயிலில் வீட்டுக்கு சென்றார். “ – என்பது செய்தி.
இந்த நூல் எதற்கு என்று சிலர் மனதில் எழலாம். அவர்களுக்கு பதில்
அளிப்பது போல் இந்த நூலின் ஆரம்பத்தில் ’ஏன் இந்த நூல்?’ என்ற தலைப்பில் விடை தந்துள்ளார்.
நீதிபதி K. சந்துரு அவர்கள் நீதிபதியாக இருந்த காலத்தில் ஜாதி, மதம், தீண்டாமை, தலித்துகளின்
சம்பந்தப்பட்ட உரிமை வழக்குகளிலும் தீர்ப்புகள் எழுதியுள்ளார். இந்த தீர்ப்புகளை தருவதற்கு
பெரிதும் உதவியது டாக்டர் அம்பேத்கரின் எழுத்துக்களும் அவரது உரைகளுமே என்று சொல்லும்
இவர், தனது தீர்ப்புகளை பலரும் பாராட்டிய நிலையில், சட்ட சஞ்சிகைகளில் (LAW
JOURNALS) இந்த தீர்ப்புகள் வெளியிடப்படவில்லை என்றும், இது ஒரு நவீன தீண்டாமை என்றும்
குறிப்பிடுகிறார்.
/// இன்றிருக்கும் சூழ்நிலையில் அப்படிப்பட்ட
தீர்ப்புகளை ஆவணப்படுத்தாவிட்டால் அவை சட்ட சரித்திரங்களிலிருந்து மறைக்கப்பட்டுவிடும்
வாய்ப்புகளுமுண்டு. அந்நேரத்தில்தான் தலித் சமூக சிந்தனையாளர் ரவிக்குமார் இந்நூலை
எழுதுவதற்கு என்னை ஊக்கப்படுத்தினார். அவருக்கு எனது நன்றி. /// (இந் நூல் பக்கம் - 20)
எனவே, இதுவே இந்த நூல் வெளிவந்ததற்கான காரணம் எனலாம்.
நூலின் அமைப்பு:
நீதிபதி K. சந்துரு அவர்கள் எழுதிய இந்த நூலின் முதற்பதிப்பு ஏப்ரல்
– 2014 இல் வெளிவந்தது. திருத்திய மூன்றாவது பதிப்பாக அண்மையில் (நவம்பர், 2014) வெளிவந்துள்ளது.
இந்த பதிப்பினில் ரவிக்குமார் அவர்களின் பதிப்புரை, நூலாசிரியரின் ”ஏன் இந்த நூல்?”
என்ற தலைப்பில் விளக்கவுரை மற்றும் வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ் அவர்களின் அணிந்துரையோடு நூலாசிரியரின்
முன்னுரை ஆகியவை நூலின் ஆரம்பத்தில் இருக்கின்றன. நூலின் பிற்பகுதியில் கலைஞர் மு.கருணாநிதி,
தொல்.திருமாவளவன், ‘இந்து’ என்.ராம், பத்திரிகையாளர் போன்றோரது மதிப்புரைகள் இணைக்கப்
பட்டுள்ளன. இந்த நூலில் கீழ்க் கண்ட பதினைந்து கட்டுரைகள் உள்ளன
1.பெளத்தம் ஏன்?
2.மத மாற்றம்.
3.பஞ்சமி நிலம்
4.கல்லறையில் சமத்துவம்
5.பொதுச் சேவைகளில் பாரபட்சமற்ற தன்மை
6.இடஒதுக்கீடு
7.நூலகத்திற்கு வந்த கேடு
8.கழிப்பறைகளுக்கு வந்த கஷ்டம்
9.சாதி மறுப்புத் திருமணங்கள்
10.பாலியல் கொடுமைக்குள்ளாக்கப் பட்ட தலித் சிறுமிகள்
11.உணவு உண்ணும் உரிமை
12.வன்கொடுமை இழைத்த காவலர்களுக்கு நிவாரணம் மறுப்பு 13.தீண்டாமைச் சுவர் தகர்ந்தது
14.கோவில்களில் வழிபாட்டுரிமை
15.தலித்துகளின் வாழ்வுரிமை
ஒவ்வொரு கட்டுரையின் தலைப்பையும் வைத்தே, அவை இன்ன பொருள் உள்ளடக்கியவை
என்று புரிந்து கொள்ளலாம்.
சில தகவல்கள்:
மதம் மாறிய பௌத்தர்களுக்கு இட ஒதுக்கீடு: இந்திய
அரசியலமைப்பு சட்டத்தின் கீழ், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு
இருந்தாலும், இந்து மதத்திலிருந்து பௌத்தத்திற்கு மாறியவர்களுக்கு இந்த உரிமை மறுக்கப்பட்டது.
34 வருட போராட்டத்திற்குப் பிறகு,. மதம் மாறிய பௌத்தர்களுக்கும் இடஒதுக்கீடு உரிமை
உண்டு என்று 1990 ஆன் ஆண்டு சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. ஆனால் தமிழ்நாடு அரசுப்
பணியாளர் தேர்வாணையம் (Tamilnadu Public Service Commission) இந்த உண்மையை மறைத்துவிட்டு
மதம் மாறிய பௌத்தர்களுக்கு இடஒதுக்கீடு இல்லை என்றே சொல்லி வந்தது. நீதிபதி K. சந்துரு
அவர்கள் TNPSC இன் இந்த போக்கைக் கண்டித்ததோடு, அதன் உத்தரவையும் ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளார்.
மீனாட்சிபுரம் ரஹமத் நகராக மாறிய சம்பவம்:
1981 ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில் சுமார்
நூறு இந்து தலித் குடும்பத்தினர் இஸ்லாம் மதம் தழுவினர். மீனாட்சிபுரம் என்ற பெயர்
ரஹமத் நகர் என்று மாறியது. அன்றைய காலகட்டத்தில் இந்த சம்பவம் இந்தியா முழுக்க பரபரப்பாக
பேசப்பட்டது. இதனையொட்டி தமிழ்நாட்டில் வந்த மதமாற்ற தடைசட்டம் (2002) பற்றியும், அது
திரும்பப்பெறப்பட்டதையும் நினைவுகூர்ந்த நூலாசிரியர், மீனாட்சிபுரங்கள் உருவானதைப்
பற்றி கவிஞர் வாலி அவர்கள் எழுதிய கவிதை வரிகளை சுட்டிக்காட்டுகிறார் ( இந்நூல் பக்கம்
– 42 )
ஆறுமுகம் என்றிருந்தோன்
அப்துல்லா ஆனதுவும்
அய்யனார் என்றிருந்தோன்
அந்தோனி ஆனதுவும்
வேறுமுகம் நாம் காட்டி
வித்தியாசம் பல பேசி
உடன் பிறந்தோரையெல்லாம்
ஒதுக்கியதால் வந்த வினை
- கவிஞர் வாலி
கல்லறையில் சமத்துவம்: மதுரை தத்தநேரி
என்ற மாநகராட்சி சுடுகாட்டில் ஜாதி அடிப்படையில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆரிய வைசிய
சமூகத்தினர் தங்களுக்கு தனியிடம் வேண்டுமென கேட்க, அவர்களுக்கும் இவ்வாறே ஒதுக்கப்பட்டது.
மாநகராட்சி கூட்டத்தில் இது பிரச்சினையானதும், இந்த உத்தரவை மாநகராட்சி ஆணையர் ரத்து
செய்தார். இந்த உத்தரவை எதிர்த்து அவர்கள் வழக்கு தொடுத்தனர். கோர்ட்டுக்கு போனார்கள். இந்த வழக்கை விசாரித்த
உயர்நீதிமன்றம் ( மதுரைக் கிளை ) மாநகராட்சி சட்டத்தில் ஜாதிக்கொரு இடம் சுடுகாட்டில்
ஒதுக்க வழியேதுமில்லை என்று சொல்லி, தமிழகத்திலுள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி சுடுகாடுகளிலும் முதலில் வருபவருக்கு முதலிடம் என்ற அடிப்படையில்
இறந்தவர்களின் உடலை எரியூட்ட வசதி செய்ய ஆணையிட்டது. இந்த தீர்ப்பை வழங்கிய நீதிபதி
K. சந்துரு அவர்கள், தமது தீர்ப்பினில் ‘ரம்பையின் காதல்’ என்ற திரைப்படத்தில் வரும்
சமரசம் உலாவும் இடமே,
நம் வாழ்வில் காணா
சமரசம் உலாவும் இடமே,
ஜாதியில் மேலோரென்றும்,
தாழ்ந்தவர் கீழோரென்றும்,
பேதமில்லாது எல்லோரும்,
முடிவினில் சேர்ந்திடும் காடு
தொல்லையின்றியே தூங்கிடும் வீடு
என்ற பாடலை (பாடலாசிரியர் மருதகாசி), மேற்கோளாக எடுத்துக் காட்டியதையும்
இங்கு குறிப்பிட்டு இருக்கிறார்.(இந்நூல் பக்கம் 49 – 51 )
மேலே சொன்ன தகவல்களோடு இன்னும் நிறைய செய்திகள், சட்ட நுணுக்கங்கள்
இந்த நூலில் இருக்கின்றன. ஒவ்வொரு வழக்கைப் பற்றியும் சொல்லி, அந்த வழக்குகளுக்கான
தீர்ப்புகள் எப்படி சட்டப்படி அம்பேதகர் வழியில் அமைந்தன என்பதையும் நூலாசிரியர் சொல்லி
இருக்கிறார். நூலிலுள்ள ஒவ்வொரு கட்டுரையும் ஒரு ஆவணம் எனலாம். இந்த நூலின் மூன்றாம்
பதிப்பே இந்த நூலுக்கு இருக்கும் வரவேற்பினை எடுத்துக் காட்டும். வழக்கறிஞர்களுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும் இந்த நூல். ஒரு நல்ல கையேடாகவும், வழிகாட்டியாகவும் விளங்கும்
நூலாசிரியர்: நீதிபதி K. சந்துரு
பக்கங்கள்: 208 விலை ரூ 150/= (திருத்திய மூன்றாம் பதிப்பு)
நூல் வெளியீடு: மணற்கேணி
பதிப்பகம்,
முதல்
தளம், புதிய எண்.10 (பழைய எண்: 288),
டாக்டர்
நடேசன் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை - 600005
செல் போன்: 944033305