சென்ற வாரம் ” பரதேசி @ நியூயார்க்” என்ற பதிவினில்
(http://paradesiatnewyork.blogspot.com/2014/12/blog-post_4.html) ”சாம்பாரின் கதை” என்று ஒரு பதிவை வலைப்பதிவர் ஆல்ஃபிரட் தியாகராஜன்
என்கிற ஆல்ஃபி எழுதி இருந்தார். அதில்
// பழம்பெரும் நடிகர்களில் ஒருவரான காதல் மன்னன் ஜெமினி கணேசனுக்கு இன்னொரு பட்டம்
உண்டு அதுதான் 'சாம்பார்
கணேசன்". அவர் சைவ உணவு சாப்பிடு பவர் என்பதால் இந்தப்பெயர் வந்ததா என்று தெரியவில்லை. அவர் சைவ உணவு
மட்டும்தான் சாப்பிட்டாரா என்றும் தெரியவில்லை. சைவ உணவு சாப்பிடுபவர்களை இப்போதெல்லாம்
"தயிர் சாதம்"
என்று
தானே கிண்டலடிக்கிறார்கள். ஆனால்
'சாம்பார் கணேசன்' என்று ஏன் சொன்னார்கள் என்று யாருக்காவது
தெரியுமா? தெரிந்தால்
சொல்லவும். //
என்று கேட்டு இருந்தார்.
அந்த பதிவைப் படித்ததும் எனக்கு வந்த நினைவுகள் இந்த பதிவு.
நான் ஒரு
எம்.ஜி.ஆர் ரசிகன்:
(படம் மேலே: சிவாஜி
கணேசன்,ஜெமினி கணேசன், எம்.ஜி.ஆர் PHOTO
THANKS TO http://www.callcinema.com/news/detail/52 )
அப்போதைய கால
கட்டத்தில் (1960 – 70) தமிழ்
திரையுலகில், எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் – என்ற மூவரும் கொடி கட்டிப் பறந்தார்கள். எம்ஜிஆர்
நடித்த படங்களை மட்டுமே பார்த்த சாதாரண சினிமா ரசிகன் நான். அன்றைய நாட்டு நடப்பு
என்னவென்றால் எம்ஜிஆர் ரசிகர்கள், சிவாஜி நடித்த படங்களைப் பார்க்க மாட்டார்கள்.
அதேபோல சிவாஜி ரசிகர்கள், எம்ஜிஆர் நடித்த படங்களைப் பார்க்க மாட்டார்கள். அது ஒரு
காலம். இப்போது அதை நினைத்தால் சிரிப்பாகத்தான் வருகிறது. அதற்கப்புறம் பெரியவன்
ஆனதும், விவரம் தெரிந்த பிறகுதான் நான் மற்ற நடிகர்கள் நடித்த படங்களையே பார்க்கத் தொடங்கினேன். மற்றவர்களின் நடிப்புத்
திறமையையும் ரசிக்கத் தொடங்கினேன்.
பட்டப் பெயர்கள்:
அப்போது நாட்டில்
எல்லோரையும், சினிமா (இப்போது டீவி சீரியல் இருக்கும் இடத்தில்) ஆக்கிரமித்துக்
கொண்டு இருந்தது. காரணம் அன்றைய பொழுது போக்கே அதுதான். சினிமாத் திரையில்
கலைஞர்களுக்கு மக்கள் திலகம், புரட்சி நடிகர், நடிகர் திலகம், நடிகையர் திலகம்,
காதல் மன்னன் என்று சிறப்பான பட்டங்கள் இருந்தாலும், வெளியில் அவர்களைக் கிண்டலாக பட்டப் பெயர்கள் வைத்தே
சொல்வார்கள். எம்ஜிஆர் தனது வயதான காலத்திலும் வாலிபராகவே நடித்தார். இதனால் அவரை ”கிழட்டு நடிகர்” என்று
சிவாஜி ரசிகர்கள் சொல்வார்கள். இப்படி சொன்ன எனது வகுப்பு மாணவன் ஒருவனிடம், எம்.ஜி.ஆரின்
தீவிர ரசிகனான நான், சண்டையே (வாக்கு
வாதம்தான்) போட்டு இருக்கிறேன். அதேபோல சிவாஜியை எம்ஜிஆர் ரசிகர்கள் “தொப்பை” என்பார்கள். சிவாஜிக்கு தொப்பை உண்டு. கடைசிவரை அவரால்
தொப்பையை ஒன்றும் செய்ய முடியவில்லை.
சாம்பார் கணேசன்:
ஆனால் இரண்டு
ரசிகர்களுமே ஜெமினி கணேசனை “சாம்பார்” என்று கிண்டலடிப்பார்கள்.
எனக்கு அதன் அர்த்தம் புரியவில்லை. ஒருவேளை ஜெமினி கணேசன் சாம்பார் பிரியராக
இருப்பாரோ என்று சந்தேகம். சினிமா படங்களைப் பார்ப்பதில், தீவிர ரசிகராக இருந்த
சீனியர் மாணவன் ஒருவரிடம் சந்தேகத்தைக் கேட்டேன். (இவன் பள்ளிக்குப் போவதாக
வீட்டில் சொல்லி விட்டு, பள்ளியை கட் பண்ணிவிட்டு, பள்ளிப் பையை யாரேனும்
ஒருவரிடம் கொடுத்து விட்டு மார்னிங் ஷோ
பார்க்கப் போய் விடுவான். படம் முடிந்ததும் நல்ல பிளையாக மீண்டும் பையை வாங்கிக்
கொண்டு வீடு திரும்புவான்) அவன் சிரித்து விட்டு “ ஓ அதுவா? " என்று ஒரு அரசியல் காரணத்தைச் சொன்னான். அன்றைக்கு இருந்த பிராமணர் , பிராமணர்
அல்லாதார் என்ற அரசியலில் ஜெமினி கணேசன் என்ற சிறந்த நடிகருக்கு வைக்கப்பட்ட
பட்டப் பெயர் இது.
வலைப்பதிவர் மறைந்த
திரு. டோண்டுராகவன் அவர்கள், ஜெமினி கணேசனின்
ரசிகர். அவர் சொல்வதையும் பாருங்கள்.
// ஜெமினிக்கு சாம்பார் என்ற பெயர் வந்ததற்கு: கைராசி என்னும் படத்தில் அவர் டாக்டராகவும் சரோஜாதேவி
நர்ஸாகவும் நடித்தனர். அதில் ஒரு காட்சியில் ஜெமினி சரோஜாதேவின் டிபன் காரியரிலிருந்து ஒவ்வொரு
தட்டாக எடுத்து ஒரு தட்டைப் பார்த்து “சாம்பாரு” என்று திருப்தியுடன் கூவ அதுவே அவர்
பெயராகவும் நிலைத்து விட்டதாக
ஒரு கோஷ்டி சொல்லிக் கொண்டு திரிகிறது.
அன்புடன்,
அன்புடன்,
டோண்டு ராகவன் //
சினிமா
கிசுகிசுக்கள்:
அப்போது நடிகர்-நடிகைகளைப்
பற்றி கிசுகிசு செய்திகளை பகிங்கரமாக பெயர் போட்டு, வெளியிடுவதற்கென்றே ஒரு பத்திரிக்கை வந்தது.. அதன்
பெயர் ” இந்துநேசன்” . இது போன்ற பத்திரிகைகள், மஞ்சள் பத்திரிக்கைகள்
எனப்பட்டன. இதன்
ஆசிரியர் லட்சுமி காந்தன். இவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு ”லட்சுமி காந்தன் கொலை வழ்க்கு” என்று பரபரப்பாக பேசப்பட்டது.. நடிகர் – நடிகைகளுக்கு
பட்டப் பெயர் வைத்தே, (கடைகளில் தொங்கும்) வால்போஸ்டரில் போடும் வழக்கத்தை இந்த பத்திரிகை கொண்டு இருந்தது. பல
பத்திரிக்கைகள் இன்று சினிமா உலகைப் பற்றி வெளிப்படையாகவே கிகிசுக்கின்றன. இவற்றுள் குடும்ப
பத்திரிகைகள் என்று சொல்லப் படுபவைகளும் அடக்கம். காலம் மாறிப் போச்சு.