Wednesday 30 December 2015

ஆரவல்லி சூரவல்லி கதை - இலக்கியமும் சினிமாவும்” ஆண்கள் செய்யும் வேலைகளை எல்லாம் பெண்கள் பார்த்துக் கொள்வார்கள்; பெண்கள் செய்யும் வேலைகளை எல்லாம் ஆண்கள் செய்ய வேண்டும்; ஆண்கள் இனி பெண்களுக்கு அடிமைகள் ‘ – இப்படி ஒரு ஆணை பிறப்பித்தால் எப்படி இருக்கும்? ஆனால் காலங் காலமாக பேசப்பட்டு வரும் ’ஆரவல்லி சூரவல்லி’ கதையின் மையக்கருத்துதான் இது. அண்மையில் Youtube இல் ’ஆரவல்லி’ என்ற பழைய சினிமாவைப் பார்த்தேன் அதன் எதிரொலி இந்த கட்டுரை.

பெரிய எழுத்து கதைகள்:

பள்ளிப்பருவத்தில், எங்கள் தாத்தாவின் (அம்மாவின் அப்பா} கிராமத்திற்கு போயிருந்தபோது, அங்கே வீட்டு இறவாணத்தில் (பேச்சு வழக்கில் எறவாணம் ; உட் கூரையின் கீழ்ப்புறம்)  ‘ஆரவல்லி  சூரவல்லி கதை’ என்ற B. இரத்னநாயகர் அண்ட் ஸன்ஸ் வெளியிட்ட பெரிய எழுத்து கதை புத்தகம் இருந்தது. (அந்த காலத்தில்: இந்த புத்தக கம்பெனியார் - ராமாயணம். மகாபாரதம், விக்கிரமாதித்தன் கதைகள், மதனகாமராஜன் கதைகள், பொன்னர் சங்கர் கதை போன்றவற்றை பெரியவர்களும் படிக்கும் வண்ணம் பெரிய பெரிய எழுத்துக்களில், ஐதீகப் படங்களுடன் வெளியிட்டு வந்தார்கள். இவை பெரிய எழுத்து கதைகள் எனப்படும்.) அந்தக் கால தெருக்கூத்து கலைஞர்களுக்கு இந்த புத்தகங்கள் நன்றாகவே உதவி புரிந்தன. அந்த நூல்களின் உரைநடையை ஆரம்பத்தில் படிக்க எனக்கு, கஷ்டமாக இருந்தது. ஆனால் அதுபோன்ற புத்தகங்களை அடிக்கடி படித்து பழக்கம் வந்துவிட்டதால், இந்த ஆரவல்லி  சூரவல்லி கதையையும் படித்து கதையைப் புரிந்து கொள்வதில் சிரமம் ஏற்படவில்லை.

மகாபாரதம் எனப்படும் பாரதக்கதைகளில் கிளைக்கதை இது என்கிறார்கள். இதனை எழுதியவர் புகழேந்திப் புலவர் என்று சொல்கிறார்கள்இந்த புகழேந்திப்புலவர் எழுதியதாக இன்னும் சில நூல்கள் உண்டு. . ( நூலின் நடையைப் பார்க்கும்போது,  புகழேந்தி என்ற பெயரில், மணிப்பிரவாள உரைநடையாக  புத்தக பதிப்பிற்காக  ஒரு  தமிழ்ப் புலவர் இதனை எழுதியிருப்பதாகவேத் தெரிகிறது)

கதைச்சுருக்கம்:

பஞ்சபாண்டவர்களுக்கும் துரியோதனன் வகையறாக்களுக்குக்கும் பகைமை உண்டாகாத நாளில், தருமன் தனது தம்பிகளுடன் அரசாண்டு கொண்டு இருந்த சமயம், துவாரகையிலிருந்து வந்த கிருஷ்ணன் ஒரு சேதி சொன்னார். அதாவது, “ஆரவல்லி, சூரவல்லி, வீரவல்லி என்ற பெண்கள் நெல்லூரு பட்டணம் எனப்பட்ட ஆரவல்லி நாட்டை ஆண்டு வருகின்றனர். அவர்கள் மொத்தம் ஏழு பேர்; ரெட்டிப் பெண்கள். மாயவித்தைகள் தெரிந்த அவர்கள் வஞ்சகமான போட்டிகள் வைத்து ஆண்களை அடிமையாக்கி வைத்து இருக்கிறார்கள்; அவர்களை அடக்கி அடிமையானவர்களை விடுதலை செய்தால் உங்களுக்கு கீர்த்தி உண்டாகும்”.  என்று சொல்கிறார். உடனே வீமன் வீரிட்டு கிளம்புகிறான். ஆனால் அவனுடைய வீரம் ஆரவல்லி, சூரவல்லி சகோதரிகளின் மந்திர தந்திர மாயாஜாலங்கள் முன் செல்லுபடி ஆகவில்லை. அவர்கள் வீமனை கைது செய்து சிறையில் அடைத்து விடுகின்றனர். கிருஷ்ணன் ஒரு யானை வடிவம் கொண்டு வீமனைக் காப்பாற்றி மீண்டும் தனது நாட்டுக்கே தப்பி வரச் செய்கிறார். ஆரவல்லி, சூரவல்லி சகோதரிகள் , எங்களிடம் தோற்றுப் போன வீமனை தங்களிடமே ஒப்படைக்க கூறுகின்றனர். தருமனும் வீமனை மீண்டும் அவர்களிடம் ஒப்படைத்துவிடுகிறார்.

ஆரவல்லி, சூரவல்லிகளை போட்டியில் வெல்ல யாரால் முடியும் என்று ஜோதிடம் பார்க்கும் போது , ஆரவல்லியின் ஒரே மகளான அலங்காரவல்லி எனப்படும் பல்வரிசை என்பவளை மணம்புரிபவனுக்கே அந்த வெற்றி கிட்டும்’ அவன் பெயர் அல்லிமுத்து என்று இருக்கும் என்றும் குறிப்பு சொல்லிற்று. அந்த பெயர் கொண்ட ஒருவன் பஞ்சபாண்டவர்களின் தங்கை சங்கவதியின் மகன் என்று கண்டு, அந்த அல்லிமுத்துவை அனுப்பி வைக்கிறார்கள். அவன் தனது இஷ்ட தெய்வமான வனபத்ரகாளியை வணங்கிச் செல்லுகிறான். அப்போது காளியானவள், அல்லிமுத்துவுக்கு மந்திரித்த திருநீறையும் (விபூதி) ஒரு நீண்ட வாளையும், தந்து, ‘ வெற்றி பெற்று வரும்வரை, இவை இரண்டையும் எந்ததருணத்திலும் மறந்து விடாதே” என்று வாழ்த்தி அனுப்பி வைக்கிறாள். அல்லிமுத்து அவ்வாறே அவற்றின் துணையால், போட்டிகளில் வெற்றி பெற்று எல்லோரையும் விடுவிக்கிறான். ஆரவல்லி மகள் அலங்காரவல்லி (பல்வரிசை)யை தனது மாமன்கள் (பஞ்சபாண்டவர்) முன்னிலையில் மணம்புரிய அழைத்துச் செல்கிறான். அதற்குமுன்னர் ஆரவல்லி, விஷம் கலந்த எலுமிச்சை பழ தண்ணீரை, ”போகும் வழியில் தாகத்தை தீர்க்க இந்த தண்ணீரை உன் புருசனுக்கு கொடு “ என்று சொல்லி ஒரு குடுவையைக் கொடுக்கிறாள். இது அலங்காரவல்லிக்கு தெரியாது. வழியில் தாகம் எடுக்க இந்த தண்ணிரை அருந்திய அல்லிமுத்து இறந்துவிடுகிறான். சூது அறியாத அலங்காரவல்லி, அவனை அங்கேயே விட்டுவிட்டு தாய் சூரவல்லியிடம் வந்து நடந்ததைச் சொல்லி புலம்புகிறாள். ஆரவல்லியோ மனம் மகிழ்கிறாள். அலங்காரவல்லி இறந்த தன் கணவனுக்காக புலம்பிக்கொண்டே இருக்க, அல்லிமுத்துவின் குதிரை, பஞ்சபாண்டவர்களிடம் சென்று விவரம் சொல்ல, அவர்கள் ஆரவல்லி, சூரவல்லி இருக்கும் நெல்லுர் பட்டணம் மீது படையெடுத்து போனார்கள். ஆரவல்லி சூரவல்லி சகோதரிகள் ஏழுபேரில் ஒருத்தி தப்பிவிட, மற்ற ஆறுபேரும் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். இதற்கிடையே அபிமன்யு மேலுலகம் சென்று அல்லிமுத்துவின் உயிரை ஒரு குடுவையில் மீட்டெடுத்து வந்து காப்பாற்றுகிறான். அலங்காரவல்லி நிரபராதி என்று தெரியவர அவளை அல்லிமுத்து ஏற்றுக் கொள்கிறான்.

சினிமாக் கதை:

தமிழ் சினிமா என்று எடுத்துக் கொண்டால், இந்த ஆரவல்லி, சூரவைல்லி கதையை வைத்து இரண்டு படங்கள் வெளி வந்துள்ளதாகத் தெரிகிறது. 1946 ஆம் ஆண்டு, வி.ஏ.செல்லப்பா, செருகளத்தூர் சாமா ஆகியோர் நடித்த ‘ஆரவல்லி சூரவல்லி’. இதனை இயக்கியவர் சி.வி.ராமன்.

அப்புறம் 1957 ஆம் ஆண்டு வெளிவந்த, மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த ‘ஆரவல்லி’ என்ற திரைப்படம் – இதன் திரைக்கதை, வசனம் – V N சம்மந்தம் டைரக்‌ஷன் – கிருஷ்ணராவ் (இந்த படத்தைத்தான் நான் இப்போது பார்த்தது)

(படம் மேலே) - ஆரவல்லி (G.வரலஷ்மி) சூரவல்லி (S.மோகனா)

(படம் மேலே) - ஆராய்ச்சி (காகா ராதா கிருஷ்ணன்) அல்லிமுத்து (S.G.ஈஸ்வர்)

(படம் மேலே) - அலங்காரவல்லி(M. மைனாவதி)

இதில் நடிகர்கள் – S.G.ஈஸ்வர், V.கோபாலகிருஷ்ணன், காகா ராதாகிருஷ்ணன், A. கருணாநிதி, K.சாய்ராம் முதலானவர்கள் மற்றும்  நடிகைகள் – G.வரலஷ்மி, M. மைனாவதி, M.S.துரௌபதி, S.மோகனா,
T.P. முத்துலக்ஷ்மி, G.சகுந்தலா,  M. சரோஜா ஆகியோர் நடித்துள்ளனர். இசை G. ராமனாதன் பாடல்களை எழுதியவர்கள் – A. மருதகாசி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், வில்லிபுத்தன் ஆகியோர். பின்னணி பாடியவர்கள் – சி.எஸ்.ஜெயராமன், டி.எம்.சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், ஏ.எம்.ராஜா, ஜிக்கி, டி,வி.ரத்னம், மற்றும் ஏ.ரத்னமாலா வழக்கம் போல, இந்த படத்திலும். திரைக்கதை என்பது மூலக்கதையினின்று வேறுபட்டு நிற்கிறது. அங்கு அல்லிமுத்து எலுமிச்ச பழரசம் சாப்பிட சாகிறான். இங்கு அதிரசம் சாப்பிடுவது போல காட்டியுள்ளனர்.

இந்த படத்தில், ஆரவல்லி, சூரவல்லி ஆட்சியில் ஆண்கள் எப்படி அடிமைகளாக இருந்தனர் என்பதைக் காட்டும் ”கும்மாளம் போட்டதெல்லாம் அடங்கியதா’ என்ற பாடல் படு தமாஷாவாக இருக்கும். இந்த பாடலைப் பாடியவர் ஏ.ரத்னமாலா எனப்படும் ரத்னமாலா கணேசன். (இவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களது இரண்டாவது மனைவி என்பது பலரும் அறியாத செய்தி). இதோ அந்த பாடல் …. கண்டு கேட்டு மகிழ சொடுக்குங்கள். (CLICK)காகா ராதா கிருஷ்ணன் செய்யும் நகைச்சுவையை மறக்க முடியாதது. கதாநாயகன் அல்லிமுத்துவின் தோழன் வேடம். பெயர் ஆராய்ச்சி. எதற்கெடுத்தாலும் காதிற்குள் ஒரு நீண்ட நூலை விட்டு ஆராய்ச்சி செய்து பதில் சொல்லுவார்.  ’துணிந்தவனுக்குத் துக்கமில்லை அழுதவனுக்கு வெட்கமில்லை’ நீ சமாளி – என்ற வசனத்தை அடிக்கடி சொல்லி படத்தில் கலகலப்பை உண்டு பண்ணுவார். (வசூல் சக்கரவர்த்தி படத்தில் கமல்ஹாசனோடு கேரம் விளையாடும் அந்த தாத்தா தான் இந்த காகா ராதா கிருஷ்ணன்)

(படம் மேலே) - அடுப்பங்கரை புருஷனாக K.சாய்ராம்

இன்னொரு சிரிப்பு நடிகர் K.சாய்ராம் பெண்ணைப் போல உடை அணிந்து கொண்டு, வீட்டு வேலைகளைக் கவனிக்க, அவரது மனைவி  G.சகுந்தலா அரண்மனை உத்தியோகம் சென்று வருவார். படம் முழுக்க இவர் தனது கணவரை “புருஷா … புருஷா … “ என்று அழைப்பார். 

(படம் மேலே) - பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தங்கள் குழுவினருடன் நாடகம் நடத்திவிட்டு, சரியான வசூல் இல்லை. எனவே சாப்பிடாமல் பசியோடு திரும்பிக் கொண்டு இருந்தனர். அப்போது அவர்களை சோர்வடையாமல் இருக்க பட்டுக்கோட்டையார் எழுதி பாடிய

‘சின்னக்குட்டி நாத்தனா
சில்லறைய மாத்துனா
குன்னக்குடி போற வண்டியில்
குடும்பம் பூரா ஏத்துனா!”

என்ற பாடலை இந்த படத்திற்கு கொடுத்து விட்டார். (தகவல் நன்றி: தினகரன் (இலங்கை) ஆகஸ்ட்,19,2014)

இந்த கட்டுரையை எழுத துணை நின்றவை (நன்றியுடன்)
Google
Youtube (Modern Theatre’s ‘Aravalli’ (Movie)
புகழேந்திப் புலவர் இயற்றிய – பெரிய எழுத்து - ‘ஆரவல்லி  சூரவல்லி கதை’ (B. இரத்னநாயகர் அண்ட் ஸன்ஸ்) மின்னூல் வடிவம் (போட்டோ காப்பி) tamilnavarasam.com
(படங்கள் யாவும் Youtube இலிருந்து Snapshot முறையில் எடுக்கப்பட்டவை)

Monday 28 December 2015

இந்து – தீபாவளி மலர் 2015இந்த வருட (2015) புயல்,மழை,வெள்ளம் காரணமாக தமிழ் வலைப்பதிவில் ’தி இந்து – ‘தீபாவளி மலர் 2015’ பற்றி, உடனே எழுத இயலாமல் போயிற்று. எப்போதும் எழுதும் அன்பர்களும் எழுதவில்லை. கடந்த ஒரு வார காலமாக இந்த மலரை அவ்வப்போது படித்து வந்தேன். ‘உள்ளே” என்று பொருளடக்கத்துடன் தொடங்கும் இந்த புத்தகம், அழகிய வண்ணப் படங்களுடன் சிறந்த வடிவமைப்புடன் உள்ளது.  

ஊர்மணம்:

இந்த தலைப்பினில் - ஒரு பக்கக் கட்டுரைகள் அந்தந்த ஊரின் சிறப்பான ஒன்றைப்பற்றி பேசுகின்றன. இவற்றைப் படைத்திட்ட அனைவரும் வெவ்வேறு படைப்பாளிகள்; சுருங்கச் சொல்லி படங்களுடன் விளங்க வைத்து இருக்கிறார்கள். பாராட்டுக்கள்.

// சீமைக் கருவேல மரங்கள் தொடர்பான வெறுப்பு இப்போது அதிகரித்திருக்கிறது. ஆனால், சீமைக் கருவேல மரங்களை எதிர்ப்பவர்கள் அது தரும் பொருளாதாரப் பலன்களுக்கு மாற்றாக எதையும் பரிந்துரைக்கவில்லை //  

என்று சொல்லி, சீமைக்கருவை மர கரியினால் வளர்ந்த தொழில்கள் பற்ரி விவரிக்கிறது ‘விளாத்திக்குளம் கரி’ என்ற கட்டுரை. (பக்கம்.14)

// சென்னையின் அடையாளமான நடுத்தர, சிறிய உணவுக்கடைகளின் காலை நேரத்தை மணக்க வைக்கிறது வடகறி. இதற்குப் பாடல் பெற்ற தலம் சைதாப்பேட்டை! காலை நேரத்தில் சைதாப்பேட்டை வி.எஸ்.முதலி தெரு வழியாகம் போக முடியாத அளவிற்கு வாகனங்களும் மனிதர்களும் மாரி ஓட்டலின் முன்பாக நெருக்கியடித்து நிற்கிறார்கள். எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக வடகறி விற்பனையால் இவர்களுடைய கொடி உச்சத்தில் பறக்கிறது //

என்று ‘சைதாப்பேட்டை வடகறி” மகாத்மியம் படிக்கும் போதே சாப்பிடும் ஆர்வத்தைத் தூண்டுகிறது (பக்கம்.26)

ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம் போன்ற பிறமொழிப் படங்களை தமிழ்நாட்டில் திரையிடுவதைப் பார்த்து இருக்கிறோம். ஆனால் பலகாலமாக தமிழகத்தில் இருந்துவரும் சௌராஷ்டிர மக்களுக்காக, அவர்கள் மொழியில் தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட, மதுரையில் வெளியிடப்படும், ‘கையைக் கடிக்காத சௌராஷ்டிர சினிமா’ பற்றி ஒரு கட்டுரை விவரிக்கிறது. (பக்கம்.38)

இன்னும்  மதுரை விவேகாநந்தா நாட்காட்டி, காங்கேயம் காளைகள், நாச்சியார்குளம் குத்து விளக்கு, தைக்கால் பிரம்பு, விளாச்சேரி பொம்மைகள், ஆரணி நாடகக் குழுக்கள், பணகுடி ஆர்மோனியம், செல்லூர் மிட்டாய் கடைகள், மருதமலை இலந்தை வடை, வாடிப்பட்டி மேளம், ஆனைக்கட்டி இருளர் இசை, மெட்ராஸ் கானா, சுங்குடி சேலைகள், சிறுமுகைப் பட்டு, நைட்டி நகரம் தளவாய்புரம், விக்டோரியா மகாராணி அரசுப்பள்ளி (பெரியகுளம்), வாலாஜாப்பேட்டை ‘காந்தி மிஷன் வித்யாலயம்’, ‘கோகோ’ மேலப்பட்டி, மதுரை வண்டியூர் தெப்பக்குளம், வேட்டங்குடி பறவைகள் சரணாலயம், பல்லாவரம் வெள்ளிக்கிழமை வெள்ளிக்கிழமை சந்தை, தஞ்சாவூர் வீணை – என்று பல பக்கங்கள் ஊர் மணம் பரப்புகின்றன.

சினிமா, இலக்கியம்:

வழக்கம் போல சினிமா என்றால், எம்ஜிஆர் – சிவாஜி. என்று ஆகிய இருவரைப் பற்றியும், அன்றைக்கு இளம் கதாநாயகர்களாக நுழைந்த முத்துராமன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், சிவக்குமார், ஏ.வி.எம்.ராஜன், விஜயகுமார், ஸ்ரீகாந்த் ஆகியோர் பற்றியும், கதாநாயகிகளான லட்சுமி, மஞ்சுளா, ஸ்ரீவித்யா, ஸ்ரீதேவி, ஆகியோர் பற்றியும் சில செய்திகள்.

இன்னும் சிறுகதைகள், புதுக்கவிதைகள் என்று ஏராளமான தகவல்கள்.

// அமெரிக்கக் கவிஞர் வால்ட் விட்மனை (1815 – 1892 ) பின்பற்ரி உலகெஙும் புதுக்கதிதை இயக்கம் தோன்றியது. இது மொழிகளில் வெறுமனே புறத்தில் நிகழ்ந்த மாறுதல் என்பதை விட சமூகத்திலும் மனோநிலைகளிலும் நிகழ்ந்த மாறுதல் என்றே சொல்ல வேண்டும். நல்லதோ கெட்டதோ, ஆனால் பழமை ஒரு சுமை என்றெண்ணி உலகெங்கும் பழமையை விடுத்துப் புதுமையை, நவீனத்தை நோக்கி பயணிக்க ஆரம்பித்ததின் பிரதிபலிப்புதான் புதுக்கவிதை. யாப்பறிந்தவர்கள் மட்டுமல்லாமல் யார் வேண்டுமானாலும் கவிதை எழுதலாம் என்ற ஒரு ஜனநாயக இயல்பைக் கொண்டிருந்ததால் புதுக்கவிதை முதலில் வழக்கமான கண்டனங்களையும் பின்னர் வரவேற்பையும் பெற்றது. இதன் சாதகபாதங்களைப் புதுக்கவிதை இன்றுவரை அனுபவித்துக் கொண்டிருக்கிறது. // - ( பக்கம்.225 புதுக்கவிதையின் வேர்கள்)

அம்மாவின் பொய்கள் என்ற தலைப்பில், கவிஞர் ஞானக்கூத்தன் எழுதிய வரிகள் இவை ---
தவறுகள் செய்தால் சாமி                                                                              
கண்களைக் குத்தும் என்றாய்                            
தின்பதற்கேதும் கேட்டால்                                 
வயிற்றுக்குக் கெடுதல் என்றாய்                             
ஒருமுறை தவிட்டுக்காக                                  
வாங்கினேன் உன்னை என்றாய்                             
எத்தனைப் பொய்கள் முன்பு                                 
என்னிடம் சொன்னாய் அம்மா
அத்தனைப் பொய்கள் முன்பு                                
என்னிடம் சொன்ன நீ எதானிலின்று                        
பொய்களை நிறுத்திக் கொண்டாய்.

கட்டுரைகள்:

// தமிழக விழாக்களில் செய்யப்படும் உணவு வகைகளில் அசைவம் முழுவதும் இடம் பெறாத நிலையில் தீபாவளியில் மட்டும் ஏன் அசைவம் ஒட்டிக்கொண்டது. மரபுவழியாக சைவ உணவை உண்பவர்களைத் தவிர மற்றவர்கள் எல்லோருமே இந்த விழாவில் மட்டும் அசைவ உணவைச் சேர்ப்பதில் முனைப்புக் காட்டுவது ஏன்? //

என்று கேள்வி கேட்டு கட்டுரையில் (காலந்தோறும் தீபாவளி) விடையளிக்கிறார் அ.கா.பெருமாள்.

“ ஒரு கிராமத்தின் கதை” யில் அன்றைய கிராமத்து நினைவுகளைக் கொண்டு வருகிறார் ப.கோலப்பன்.

ஆன்மீக வரிசையில், கவுதம புத்தர், ஆதிசங்கரர், ஸ்ரீமத்வாசாரியர்,, மகாவீரர், என்று பல மகான்களைப் பற்றிய கட்டுரைகள். ”புரட்சித் துறவி” என்ற தலைப்பில் ஸ்ரீ ராமானுஜர் பற்றி இந்திரா பார்த்தசாரதி எழுதியுள்ளார். கட்டுரையின் முடிவில்

// அவர் சமாதி அடைந்த பிறகு, அவர் திருவரங்கம் கோயிலிலேயே புதைக்கப்படுகிறார். இதை இன்னொரு புரட்சி என்றும் குறிப்பிடலாம். இந்து மதக் கோயில் எல்லைக்குள் புதைக்கப்பட்டவர் இராமானுஜர் ஒருவரே! “ (பக்கம் 103)

என்று குறிப்பிடுகிறார்.

’பெண் இன்று’ என்ற வகையின் கீழ், விரியும் பெண்களின் எல்லை (பிருந்தா சீனிவாசன்), கர்னாடக இசைப் பாடகர் மும்பாய் டாக்டர் வசுமதி பத்ரிநாத் பற்றி வா.ரவிக்குமார், ஹாரிபாட்டர் கதையினை உருவாக்கிய ‘ஜே.கே.ரவுலிங்’ பற்றி எஸ்.சுஜாதா, இடுகாட்டில் மயானகாரியங்களைப் பார்க்கும் ‘பிதாமகள்’ கிருஷ்ணவேணி (புதுச்சேரி துப்ராயப்பேட்டை) பற்றி செ. ஞானபிரகாஷ், ஃபேஸ்புக் நிறுவன முதன்மைச் செயல் அதிகாரி ஷெரில் சாண்ட்பர்க் பற்றி எஸ்.சுஜாதா, ஆசை என்பவர் எழுதிய, காட்டுரியல் துறையில் சிறந்த ‘யானைகளின் தோழி’ எனப்படும் டி.என்.சி.வித்யா பற்றிய கட்டுரை, கணிதராணி எனப்படும் மரியம் மிர்ஸாகவி பற்றி எஸ்.சுஜாதா, இந்தியிலிருந்து தமிழுக்கும் தமிழிலிருந்து இந்திக்கும் நூல்களை மொழிபெயர்த்து இருமொழிகளுக்கும் இடையில் பாலமாக இருப்பவர் சாரு ரத்னம்; இவரைப் பற்றி எழுதி இருக்கிறார் ஆசை. இன்னும் எடிட்டர் மோனிகா ( யுகன் எழுதிய கட்டுரை), டி.கார்த்திக் அவர்களின் வான்மதி (கண்டெய்னர் தொழில்) ஆகிய கட்டுரைகளும், சிறப்பு நேர்காணல்களும் உண்டு. ”வெறுமனே பிரிஸ்கிரிப்ஷன் எழுதுவதல்ல மருத்துவம்” என்று சொல்கிறார் சித்த மருத்துவர் கு.சிவராமன்.  எழுத்துச் சித்தர் பாலகுமாரன் அவர்கள் ‘தாயல்ல அவள் தோழி” என்ற தலைப்பில் தன்னை வளர்த்து ஆளாக்கிய அம்மாவின் பெருமைகள் பற்றி பேசுகிறார்.


இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். விரிப்பின் பெருகும். இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

( அட்டைப்படம் நன்றி: தி இந்து (தமிழ்) / மற்ற படங்கள் யாவும் ” தி இந்து – தீபாவளி மலர் 2015” இலிருந்து Canon PowerShot A800 Camera வினால் எடுக்கப்பட்டு, எடிட் செய்யப்பட்டவை, தி இந்து (தமிழ்) பத்திரிகைக்கு மீண்டும் நன்றி!)


Saturday 26 December 2015

சிம்புவின் கழிவறைப் பாடல்இப்போது கொஞ்ச நாட்களாகவே நாட்டில் இருக்கின்ற பிரச்சினைகளை எல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு சிம்பு பாடிய ஒரு பாடலை எல்லோரும் பேசிக் கொண்டு இருக்கிறார்கள். போயும் போயும் இந்த பாடலை கேட்பதா என்று எனக்கு அதில் கேட்க ஆர்வம் இல்லை. அய்யா ஆசிரியர் நா.முத்துநிலவன் அவர்கள் பகிர்ந்த ஒரு பதிவை வைத்து “ தடை செய்ய வேண்டிய சிம்பு-அனிருத் பாடல்” என்ற பதிவைப் படித்தவுடனேயே (http://valarumkavithai.blogspot.com/2015/12/blog-post_82.html ) அது எப்பேர்பட்ட பாடல் என்பதனைப் புரிந்து கொண்டேன். ஆனால் இப்போது சிம்புவுக்கு ஆதரவாக சிலர் விடும் அறிக்கைகளைப் பார்க்கும் போது பாடலை முதலில் கேட்டுவிட்டு, அப்புறம் எழுதலாம் என்பதால் YOUTUBE இல் இந்த பாடலைக் கேட்டேன்

கழிவறைக் கிறுக்கல்கள்
 
மூன்று மாதங்களுக்கு முன்பு நான் எழுதிய “கழிவறைக் கிறுக்கல்கள்http://tthamizhelango.blogspot.com/2015/09/blog-post_54.html என்ற எனது பதிவினில்,

/// இந்த கிறுக்கல்களை பொதுவாக பொதுக் கழிவறைகளில் அல்லது பொது குளியல் அறைகளில் மட்டுமே காணலாம். இவ்வாறு எழுதுவதை கழிவறைக் கிறுக்கல்கள் (Latrinalia) என்று சொல்கிறார்கள். உடம்பில் அரிப்பெடுத்தால் சொறிந்து கொள்வதைப் போல, மனதில் உண்டாகும் அரிப்பை போக்கிக் கொள்ள அல்லது தன்னுடைய இயலாமைக்கு வடிகாலாக சிலர் எழுதும் கிறுக்கல்கள்தான் இவை. சிலரின் மனக்குமுறல்களாகவும் இருக்கும். சிலரின் குறுங்கவிதைகளையும் இங்கே காணலாம். பெரும்பாலும் அவசரம் அவசரமாக சாக்பீசாலோ, கரித்துண்டினாலோ, அல்லது ஸ்கெட்ச் பென்சிலாலோ எழுதப்பட்ட குறுஞ்செய்திகள் (SMS என இவற்றை சொல்லலாம். சிலசமயம் சிறிய படங்களாகவும் இருக்கலாம். எழுதுபவரின் மனநிலையைப் பொறுத்தது.///

என்று எழுதி இருந்தேன். 

சிம்புவின் ‘பீப்’ பாடல் 

ஆனால் சிம்புவின் ‘பீப்’ பாடல் என்பது கழிவறையோடு முடிந்து இருந்தால் பரவாயில்லை. கழிப்பறைக்கு வெளியேயும் நாற்றமடிக்கத் தொடங்கியதால்தான் இந்த பிரச்சினை. இந்த பாடலில் அவர் யாரையோ நினைத்து, ஒரு கோபத்தோடு பாடுவதாகவே தெரிகிறது. அந்த சொல்லை மறைப்பதற்கு ‘பீப்’ ஒலி வருகிறது என்கிறார்கள்; ஆனால் காதில் அந்த ‘பீப்’பையும் மீறியே என்ன சொல்லி திட்டுகிறார் என்பது தெரிகிறது. தண்ணி அடித்துவிட்டு ஒருவன் நடுரோட்டில் ஆபாசமாக கத்திக் கத்தி, திரும்பத் திரும்ப , ஆவேசமாக திட்டும் காட்சியை நினைவு படுத்தியது.

/// இது குறித்து சிம்புவிடம் கேட்டபோது, "'பீப் பாடல்' வெளியானது பற்றி பலரும் என்னிடம் கேள்வி எழுப்பி வருகிறார்கள். அப்பாடலை முதலில் நான் அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை. நானும் அனிருத்தும் இணைந்து பல்வேறு தளங்களில் சுமார் 150 பாடல்களை தயார் செய்து வைத்திருக்கிறோம். அதில் இருந்து ஒரு பாடலை திருடி வெளியிட்டு இருக்கிறார்கள்

முதலில் அப்பாடல் ஏதாவது ஒரு படத்திலோ, ஆல்பத்திலோ இடம்பெறவில்லை. அது இணையத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது. அப்பாடல் குறித்து ஒரு சிலர் நன்றாக இருக்கிறது என்றும், பலரும் அதற்கு எதிராகவும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். நான் ஒரு கேள்வி கேட்கிறேன்... அதே இணையத்தில் தானே போர்ன் (ஆபாச வீடியோ) வீடியோக்களும் இருக்கிறது. தேவை என்றால் தானே போய் பார்க்கிறீர்கள். அதேபோல் தான் பாடல் பிடிக்கவில்லை என்றால் கேட்காதீர்கள்.

நான் எனது வீட்டின் படுக்கையறையிலும், பாத்ரூமிலும் என்ன வேண்டுமானாலும் செய்வேன். அதை எட்டிப் பார்க்கும் அதிகாரம் நான் யாருக்கும் அளிக்கவில்லை. என்னைக் கேள்வி கேட்பவர்கள் வீடுகளில் நான் கேமராவை வைத்து அவர்கள் பண்ணும் விஷயங்களைப் பார்த்து "நீங்கள் ஏன் இப்படி எல்லாம் பண்ணுகிறீர்கள்" என்று கேட்டால் என்னவாகும் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.  /// 

இது சிம்பு என்கிற சிலம்பரசன் தந்த பதில் (நன்றி தி இந்து (தமிழ்) தேதி: டிசம்பர்,12,2015)

கழிவறைக் கிறுக்கலும், குடிகாரன் பேச்சும் அத்தோடு சரி. ஆனால் சிம்புவின் ‘பீப்’ பாடலை அர்த்தம் புரியாமலேயே சிறுவர்களும், அர்த்தம் தெரிந்தே வாலிபர்களும் பொதுவில் ஒலிபரப்ப சாத்தியம் அதிகம். சமுதாயத்தில் மோசமான பின்விளைவுகளை விளைவிக்கக் கூடிய பாடல் என்பதில் சந்தேகம் இல்லை.

தமிழன் சிம்பு :

இப்போது சிம்புவின் பாடலுக்கு ஆதரவாக குரல்கள் ஒலிக்கத் தொடங்கி உள்ளன. T. ராஜேந்தரும், உஷா ராஜேந்தரும் தங்கள் மகனுக்காக பரிந்து பேசுவதிலாவது அர்த்தம் உள்ளது. அதிலும் ஒரு ’தைரிய லட்சுமி’ சிம்புவை தமிழன் என்பதற்காக பழி வாங்குகிறார்கள் என்று கொதித்தெழுகிறார். (சிலம்பரசன் என்ற அழகான அவரது தமிழ்ப் பெயரை  சிம்புவாக மாற்றிக் கொண்டது அவரது சொந்த விஷயம்) தமிழ், தமிழன் என்று எதற்கெடுத்தாலும் வர்ணம்பூசும் வேலை. இன்னும் சிலர் சிம்புவுக்கு ஆதரவு என்ற பெயரில், மேலும்மேலும் அவருக்கு சிக்கல் உண்டு பண்ணிக் கொண்டு இருக்கிறார்கள். விளம்பரத்திற்காக இப்படிப் பேசும் இவர்களை என்னவென்று சொல்வது.? பொதுவில் நாகரிகமாகப் பேசவேண்டும் என்பதற்காக, எந்த வார்த்தைகளை எப்படிப் பேசவேண்டும் என்பதற்கு தமிழில் ‘இடக்கரடக்கல்’ என்று ஒரு மரபே உண்டு.. ஆனால் சிம்பு பயன்படுத்தியது இந்த இடக்கரடக்கல்லிலும் வராத பச்சை என்பது வெளிப்படை. இன்னும் சிலர் பழைய தமிழ் சினிமாப் பாடல்களில் எழுதவில்லையா என்று கேட்கிறார்கள். ஆனால் யாரும் இதுபோல் பச்சையாக பாட்டு வடிவில் இசையோடு எழுதவில்லை என்பதே உண்மை.  

சட்டப்படி நடவடிக்கை:

ஆரம்பத்திலேயே சம்பந்தப்பட்டவர்கள், இந்த பாடல் பற்றிய பிரச்சினை தொடங்கியவுடனேயே, வருத்தம் தெரிவித்து விட்டு பாடலை நீக்க முயற்சி செய்து இருக்கலாம். இதில் ஒருவர் புத்திசாலி. நான் இசை அமைக்கவில்லை என்று சொல்லி விட்டார். இன்னொருவர் வீரத்தமிழன். அதனை விட்டு விட்டு, ஆமாம் நான்தான் செய்தேன் என்றதும், இதில் என்ன தப்பு என்று அவருக்காக சிலர் தூபம் போட்டதிலும் பிரச்சினை வேறுமாதிரி வளர்ந்து விட்டது. எனவே சட்டப்படி என்ன நடவடிக்கை என்பதனை நீதிமன்றம்தான் இனி முடிவு செய்யும். (அபராதம் மட்டும் விதித்து விட்டுவிடுவார்கள் என்றே நினைக்கிறேன்.) பார்ப்போம்.