ஏப்ரல் ஒன்று உலக முட்டாள்கள் தினம் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். தனது சொந்த பெயரை “முட்டாள் முத்து” என்று மாற்றிக் கொண்டு, வருடம் தோறும் ஏப்ரல் முதல் தேதியன்று மொட்டையடித்துக் கொண்டு 25 வருடங்களுக்கும் மேலாக, அந்த நாளைக் கொண்டாடி வருகிறார் ஒருவர். அவர் பெயர் பரமசிவம். திருச்சி K.K. நகரில் யூனியன் பாங்க் (பஸ் டெர்மினஸ்) அருகில் ” உயர்தர பஞ்சாப் சப்பாத்தி சென்டர்” என்ற பெயரில் தனி ஆளாகக் கடை நடத்தி வருகிறார்.
சப்பாத்தி வாங்கச் சென்றேன்:
நாங்கள் இருப்பது புறநகர்ப்பகுதி. ஏதாவது வாங்க வேண்டும், என்றால் அருகிலுள்ள
கருணாநிதி நகர் ( K.K. நகர்) அல்லது சுந்தர்நகர் செல்ல வேண்டும். மனைவி
சென்னைக்கு மகள் வீட்டிற்கு சென்றுள்ளார். எனவே எனக்கும் மகனுக்கும் வெளியே கடையில்தான் சாப்பாடு. சென்றவாரம் ஒருநாள் இரவு
மகன் சப்பாத்தி வாங்கலாம் என்று சொன்னார் நான் சப்பாத்தி சாப்பிடுவதில்லை. காரணம்
நான் வயிறார சாப்பிடுபவன். சப்பாத்தியை சாப்பிட்டால் எனக்கு சாப்பிட்டது போலவே
இருக்காது. இருந்தாலும் இரவு 8 மணிக்கு மேல் ஆகி விட்டதால் அருகிலுள்ள K.K. நகரில் பரமசிவம் நடத்தி
வந்த சப்பாத்தி சென்டருக்கு
சென்றேன். கடைக்காரர் பரமசிவத்தை எனக்குத் தெரியும் என்றாலும் கடையில் சப்பாத்தி
வாங்கியதில்லை. நான் கடைக்குச் சென்றதும் நான்கு சப்பாத்தி பார்சல் என்று ஆர்டர் செய்துவிட்டு, விலையைக் கேட்டேன்.
“ சப்பாத்தி என்ன விலை? “
“ ஒரு சப்பாத்தி பதினைந்து ரூபாய். நேற்று வராமல் போய் விட்டீர்களே. நேற்று
ஒருநாள் மட்டும் சப்பாத்தி ஒன்று பத்து ரூபாய் என்று கொடுத்தேன்”
“ அப்படியா? நேற்று மட்டும் அப்படி என்ன விசேஷம்” என்று நான் விசாரித்தேன்.
“ நேற்று பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு சப்பாத்தி ஒன்று பத்து ரூபாய். நான்
கடை வைத்து ஏழு ஆண்டுகள் ஆகின்றன. அன்றிலிருந்து வருடம் தோறும் பெரியார் பிறந்த
நாள் அன்று மட்டும் சப்பாத்தியில் விலை குறைப்பு ” என்றார்.
அவரைப் பற்றி அவரிடம் விசாரித்தேன். கடையில் அவர் ஒருவர் மட்டும்தான். அவரே
சப்பாத்தியை சுட்டு விற்கிறார். எனவே அவர் என்னை நாற்காலியில் உட்கார வைத்து
விட்டு தன்னைப் பற்றி தினமணி, விகடனில் வந்த செய்திக் குறிப்புகளைத் தந்தார்.
மேலும் தன்னைப் பற்றிய விவரங்களயும் சொன்னார்.
தற்சமயம் திருச்சி K.K. நகரில் பஞ்சாப்
சப்பாத்தி சென்டர் வைத்து இருக்கும் எஸ் பரமசிவம் அவர்கள் இதற்கு முன் யூகோ
வங்கியில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்தவர். பின்னர் புதுக்கோட்டை மார்க்கெட்டில்
வாடகைவேன் ஓட்டினார். இவரது சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில்,
பேரையூர் அருகில் உள்ள கோயில்பட்டி ஆகும்.
தினமணியில் வந்த பேட்டி:
“ எனது 13 ஆவது வயதில் பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கைகளால்
ஈர்க்கப்பட்டேன். மனிதாபிமானத்துடன் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ்வதை
விட்டுவிட்டு கடவுளைக் காரணம் காட்டிச் சண்டையிடுதல் மற்றும் தீமிதித்தல், வேல்
குத்துதல் போன்ற சடங்குகளை எல்லாம் கிராம மக்களிடம் விமர்சிக்கவே, அவர்கள்
எல்லாரும் என்னை “முட்டாள்” என்று திட்டினர்.
இவர்கள் என்ன என்னை முட்டாள் என்று கிண்டல் செய்வது, இந்தக் கிண்டலுக்கு நிரந்தரமாக முடிவு காண்பது என்ற எண்ணத்தில் எனக்கு நானே பரமசிவம்
என்ற என்னுடைய பெயரை முட்டாள் முத்து என மாற்றிக் கொண்டு விட்டேன்.
எனக்கு வரும் அஞ்சல்களைப் பார்க்கும் போஸ்ட்மேன், கூரியர் சேவை நிறுவனத்தினர் முதலில்
இந்தப் பெயரைக் கண்டு வியந்தனர். ஆனால் இப்போது எல்லாருக்கும் பழகிப் போய்விட்டது.
இந்தப் பெயருக்காக எனது மனைவியும் குழந்தைகளும் முதலில்
சங்கடப்பட்டனர். நாள்களானதும் அவர்களும் முட்டாள் மனைவி, முட்டாள் பிள்ளைகள் எனப்
பழகிப் போய் விட்டனர்.
பகுத்தறிவாளர் என்று கூறினாலும் மொட்டையடிப்பது ஏன்? எனக்
கேட்டதற்கு, “ஆண்டுதோறும் ஏப்ரலில் தொடங்கி கோடைக்காலம். இதைச் சமாளிக்க மற்றவர்கள் கோயிலில் நேர்த்திக் கடனாக மொட்டை அடித்துக்
கொள்கின்றனர்.
என் வழியில் கோடையைச் சமாளிக்க ஏப்ரல் முதல் தேதியில் மொட்டையடிப்பதும்
பகுத்தறிவுதான், என்று தன் பெயரை முறைப்படி மாற்றி, அரசிதழில் அறிவித்துக்
கொள்வதற்காகவும் பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளதாகத் தெரிவித்தார் பரமசிவம் அல்ல
முட்டாள் முத்து. – (நன்றி
தினமணி – 02.04.2004 )
தினமணியில் பத்து வருடங்களுக்கு முன்னர் வந்த பேட்டி இது.
சப்பாத்திக் கடையில்:
முக்குலத்தோர் சமுதாயச் சேர்ந்த இவர், பெரியாரின் சீர்திருத்த கொள்கைகளால் ஈர்க்கப் பெற்று ஜாதி சமயங்களுக்கு எதிராக தன் வழியே பிரச்சாரம் செய்கிறார். மேலும் மனித உரிமை, ஆதார் அட்டை போன்ற பொதுமக்கள் சம்பந்தப்பட்ட விவரங்களையும் சொல்லுகிறார். மற்றபடி கட்சிக்காரர் இல்லை. இப்போது சப்பாத்திக் கடையில் அவரே ஒன் மேன் ஆர்மியாக இருந்து எல்லா வேலைகளையும் பார்த்துக் கொண்டு வருகிறார். வந்து கேட்பவர்களுக்கு சுடச் சுட போட்டு தருகிறார். சப்பாத்தியும் குருமாவும் நல்ல சுவை. இவருக்கென்று இருக்கும் வாடிக்கையாளர்கள் செல்போனில் முன்கூட்டியே ஆர்டர் தந்து விடுகிறார்கள். சிலர் இவரை “முட்டாள் முத்து” என்று அழைப்பதற்கு சங்கடப்பட்டுக் கொண்டு “எம் எம் (M.M) என்று அழைக்கின்றனர். வாழ்க பரமசிவம்! இல்லையில்லை முட்டாள் முத்து!
உலகில் இப்படியும சில கொள்கைகளோடு சிலபேர் இருக்கத்தான் செய்கின்றனர். காலம் ஓடிக் கொண்டு இருக்கிறது.
( பல பதிவர்கள் A to Z பல தலைப்புகளில் பலரைப் பற்றியும் எழுதுகிறார்கள். நாம் நமக்குத் தெரிந்த ஒரு வித்தியாசமான மனிதரைப் பற்றி எழுதுவோம் என்று எழுதினேன்)