நான் சிறு வயது முதல் திமுக அனுதாபியாக இருந்தவன். கட்சி உறுப்பினர் கிடையாது.
ஆனாலும் எம்ஜிஆரின் ரசிகன். கண்மூடித்தனமான ரசிகன் கிடையாது. படங்களை ரசித்தவன். அப்பொழுதெல்லாம்
திமுகவின் பிரச்சாரம் என்பது மேடைப் பேச்சுதான். பள்ளி மாணவனாக இருந்தபோது
என்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு வீதி வீதியாக “ போடுங்கம்மா ஓட்டு உதய
சூரியனைப் பார்த்து” என்று முழங்கியபடி சென்றவன். கட்சியிலிருந்து ஒன்றையும்
எதிர்பார்த்தது கிடையாது. ஒரு சிங்கிள் டீ சாப்பிட்டுவிட்டு சுவர் விளம்பரம்
எழுதும் கட்சிக்காரர்களோடு இரவு நேரம் உதயசூரியனை வரைந்தது ஒரு காலம்.
எம்ஜிஆர் பிரிந்த போது:
அறிஞர் அண்ணா மறைந்தபோது கட்சிக்கு அப்படி ஒன்றும் பெரிய நெருக்கடி ஏற்பட்டுவிடவில்லை. ஏனெனில் அவருக்குப் பின் கலைஞர் பொறுப்பேற்றவுடன் எல்லாமே சுமுகமாகவே முடிந்தது. எம்ஜிஆரே கருணாநிதிக்கு ஆதரவு என்றவுடன் எல்லாம் அடங்கிப் போனார்கள். நாவலர் நெடுஞ்செழியனுக்கு என்று அவர் பின்னால் ஒரு கூட்டம் கிடையாது. ஈ.வெ.கி. சம்பத்தை உசுப்பி விட்டதுபோல் அவரையும் உசுப்பி விட்டார்கள். அவர் புத்திசாலித்தனமாக இருந்து விட்டார்.
அறிஞர் அண்ணா மறைந்தபோது கட்சிக்கு அப்படி ஒன்றும் பெரிய நெருக்கடி ஏற்பட்டுவிடவில்லை. ஏனெனில் அவருக்குப் பின் கலைஞர் பொறுப்பேற்றவுடன் எல்லாமே சுமுகமாகவே முடிந்தது. எம்ஜிஆரே கருணாநிதிக்கு ஆதரவு என்றவுடன் எல்லாம் அடங்கிப் போனார்கள். நாவலர் நெடுஞ்செழியனுக்கு என்று அவர் பின்னால் ஒரு கூட்டம் கிடையாது. ஈ.வெ.கி. சம்பத்தை உசுப்பி விட்டதுபோல் அவரையும் உசுப்பி விட்டார்கள். அவர் புத்திசாலித்தனமாக இருந்து விட்டார்.
ஆனாலும் அந்த எம்ஜிஆரே திமுகவை விட்டு விலக்கப்பட்ட (விலகிய) போது கட்சியில்
ஒரு பூகம்பம். எம்ஜிஆரின் தீவிர ரசிகர்கள், கருணாநிதியின் எதிர்ப்பாளர்கள் அனைவரும்
அப்படியே சென்று விட்டனர். ஆனாலும் திமுகவுக்கென்று இருந்த தீவிர தொண்டர்களும்
திமுக அனுதாபியாக இருந்த எம்ஜிஆர் ரசிகர்களும் கட்சியை விட்டு போய்விடவில்லை.
இதனால் திமுக முற்றிலும் சிதைந்து விடவில்லை. என்னைப் போன்ற கட்சி அனுதாபியான எம்ஜிஆர் ரசிகர்கள், எம்ஜிஆருக்காக அவருடைய கட்சியின்
அனுதாபியாகப் போனது கிடையாது.
நெருக்கடி நிலைமையில்:
இந்தியாவில் நெருக்கடி நிலைமை இருந்த நேரம். திமுக ரொம்பவே நெருக்கடிக்கு
உள்ளானது ஆனாலும் திமுகவை தனது சாமர்த்தியத்தால், தான் கலந்து கொண்ட திருமண
நிகழ்ச்சிகளில் தொண்டர்களையும், மக்களையும் சந்தித்து, சிதறாமல் பார்த்துக்
கொண்டவர் கலைஞர் கருணாநிதி.
கோபால்சாமி ஸ்டண்ட்:
கட்சிக்கு கடுமையாக உழைத்த எத்தனையோ பேர் இருக்க வை கோபால்சாமியை மூன்றுமுறை ராஜ்யசபா எம்பியாக்கி பிரபலப் படுத்தியவர் கலைஞர். ஒரு கட்டத்தில் கருணாநிதிக்கும் வை கோபால்சாமிக்கும் உரசல் ஏற்பட்டது. தான் எப்போதும் எம்பியாகவே இருந்து டெல்லியில் லாபி செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் அவர். சினிமா ரசிகர்கள் தங்கள் அபிமான நடிகர்களோடு படம் எடுத்துக் கொண்டு பெருமைப் பட்டுக் கொள்வார்கள். அதைப்போல விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை சந்தித்ததை ஒரு விளம்பரமாக்கியவர் வை கோபால்சாமி அவர்கள். உண்மையில் அவர் ஒரு அட்வகேட். அவர் தொழிலை அவர் செய்து வருகிறார். இலங்கைத் தமிழர் பிரச்சினை என்பது அவருக்கு அரசியல்.. தேவைக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்வார். தமிழ்நாட்டில் யாரும் இலங்கைத் தமிழர் பிரச்சினையை மனதில் வைத்து, தேர்தலில் ஓட்டு போடுவதில்லை. நேற்று திமுக. இன்று அதிமுக. நாளை எப்படியோ? இப்படித்தான் அரசியல் மாறிக் கொண்டு இருக்கிறது.. ஆனாலும் வை கோபால்சாமி அதனை மையப்படுத்தி தனிக்கட்சி தொடங்கி திமுகவை பிளவுபடுத்திட முயன்றபோது கட்சியைக் காப்பாற்றியவர் கருணாநிதி.
கருணாநிதிக்கு எதிரி கருணாநிதி:
திமுகவில் கருணாநிதிக்குப் பின் யார் என்று அடையாளம் காணப்பட்டவர் ஸ்டாலின் . கலைஞரின் மகன் என்ற ஒரே காரணத்திற்காக அதிகமாகவே விமர்சிக்கப்பட்டவர். அதிக தாக்குதல்களுக்கு ஆளானவர். ஆனாலும் கருணாநிதி தனது குடும்பத்தாரின் நிர்ப்பந்தத்தின் பேரில் மற்ற குடும்ப உறவுகளையும் கட்சியில் திணித்தார். இந்த விஷயத்தில் கருணாநிதியை யாராலும் கண்டிக்க இயலவில்லை. குடும்ப நெருக்கடி காரணமாக கட்சியினரையும் அவரால் கட்டுப்படுத்த இய்லவில்லை. கடந்த திமுக ஆட்சியில்,கேட்க ஆளில்லாததால், சாதாரண கவுன்சிலரிலிருந்து மேல்மட்டம் வரை புகுந்து விளையாடினார்கள். அவர்களைக் கண்டிக்க ஆளில்லை. பொது மக்களின் வெறுப்பு காரணமாக திமுக ஆட்சியை இழந்தது.
இப்போது கட்சிக் கட்டுப்பாடு என்பது நீர் மேல் எழுதிய எழுத்தாக, கலைஞரின் கையை
விட்டு போய்க் கொண்டு இருக்கிறது. அதன் எதிரொலிதான் ஸ்டாலின் – அழகிரி உச்சகட்ட பூசல். அரசியல் தலைவர்கள் சிலர் கனிமொழியையும்
உசுப்பிவிட வாய்ப்புகள் அதிகம். எனவே எதிர்காலத்தில்
திமுக.வானது 1.ஸ்டாலின் திமுக 2. அழகிரி
திமுக 3. கனிமொழி திமுக. என்று மூன்றாக உடைய வாய்ப்புகள் அதிகம்.அப்போது உண்மையான
தி.மு.க விசுவாசிகள் வெறும் பார்வையாளர்களாக இருப்பார்கள் காலப்போக்கில் கனிமொழி
அரசியலை விட்டே விலகவும் நேரலாம்..
( நான் இப்போது எந்த கட்சியின் அனுதாபியும் கிடையாது ஒரு காலத்தில் என்னைப்
போன்றவர்கள் அனுதாபியாக இருந்த திமுக இப்போது இப்படி ஆகிவிட்டதே என்ற ஆதங்கம்தான்
இந்த கட்டுரை )
( PICTURES : THANKS TO “ GOOGLE ” )