அண்மையில் ”வலைப்பதிவர்
பயணம் - சரிபார்ப்பு பட்டியல்” என்று ஒரு பதிவினை
எழுதி இருந்தேன். அதற்கு கருத்துரை தந்த முனைவர் B. ஜம்புலிங்கம் அவர்கள் ”இப்பதிவைப் படித்ததும் ஒரு மூத்த தமிழறிஞர் பயணத்தின்போது வைத்துக் கொள்ள வேண்டியது என்பது தொடர்பாக எழுதியிருந்ததாக நினைவு. உரிய நேரத்தில் உரிய யோசனை. நன்றி.” என்று எழுதி இருந்தார். நானும்
எனது மறுமொழியாக “ முனைவர் அய்யாவின் கருத்துரைக்கு நன்றி. ஒரு பழைய பாடல் கூட இதுபற்றி உண்டு. சட்டென்று நினைவுக்கு வரமாட்டேன் என்கிறது. அப்புறம் நினைவுக்கு வந்ததும் ஒரு பதிவாய் போட்டு விட வேண்டியதுதான்.” என்று சொல்லி இருந்தேன்.
ஒரு வழியாக வீட்டு நூலகத்தில் இருந்த பாடல் நூல்களைப் புரட்டியதில், பாரதிதாசன் வந்து
நான்தான் அது என்று வந்தார். “ யாத்திரை போகும் போது! “ என்ற தலைப்பில் அவர் எழுதிய
பாடல் இது.
சீப்புக் கண்ணாடி ஆடை சிறுகத்தி கூந்தல் எண்ணெய்
சோப்புப் பாட்டரி விளக்குத் தூக்குக்கூஜாதாள் பென்சில்
தீப்பெட்டி கவிகை சால்வை செருப்புக் கோவணம் படுக்கை
காப்பிட்ட பெட்டி ரூபாய் கைக்கொள்க யாத்திரைக்கே.
சோப்புப் பாட்டரி விளக்குத் தூக்குக்கூஜாதாள் பென்சில்
தீப்பெட்டி கவிகை சால்வை செருப்புக் கோவணம் படுக்கை
காப்பிட்ட பெட்டி ரூபாய் கைக்கொள்க யாத்திரைக்கே.
- புரட்சிக்
கவிஞர் பாரதிதாசன்
அவர் பட்டியலிட்ட பொருட்கள் இவை. இனி அவற்றின் பயன்பாட்டை தற்காலத்திற்குத் தகுந்தவாறு, ஒவ்வொன்றாகக் காண்போம்.
1.சீப்பு 2.கண்ணாடி (பெரும்பாலும்
இவையிரண்டையும் ஆண் பெண் என்று எல்லோரும் வைத்துக் கொள்கிறார்கள்.)
3.ஆடை ( இதனை மேலாடை, கீழாடை, உள்ளாடை என்று வைத்துக் கொள்ளலாம்)
4.சின்ன கத்தி ( நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு பாரதிதாசன் வாழ்ந்த
இடம் புதுச்சேரி. அப்போது வழிப்பறி, கொள்ளை அதிகம். எனவே தற்காப்பிற்காகவும், அவ்வப்போது
பழங்கள் உண்ண விரும்பினால் அவற்றை நறுக்கிக் கொள்வதற்காகவும் இது பயன்பட்டது. இப்போதும்
இதனை எடுத்துச் செல்லலாம். ஆனால் வழிப்பயணத்தில் போலீஸ் சோதனையில் இதனை ஒரு ஆயுதமாக
கணக்கில் எடுத்துக் கொள்ளவும் வாய்ப்புண்டு.
5.கூந்தல் எண்ணெய் (நாம் இப்போது ஆங்கிலத்தில் ‘ஹேர் ஆயில்’
(Hair Oil) என்று சொல்லுகிறோம்.
6.சோப்பு (தேவைப் படுவோர் எடுத்துச் செல்லலாம்)
7.பாட்டரி விளக்கு (மின்சாரப் பயன்பாடு அவ்வளவாக இல்லாத அந்த நாட்களில்,
டார்ச் லைட் எனப்படும் இந்த விளக்கின் பயன்பாடு அதிகம். இப்போது செல்போனிலேயே இந்த விளக்கு வந்து விட்டது)
8.தூக்குக் கூஜா ( அப்போது ஒவ்வொரு வீட்டிலும் இந்த தண்ணீர் கூஜா
இருக்கும். ரெயில் பயணங்களின்போது , தேவைப்படுவோர் வழியில் நிற்கும் ஸ்டேசன்களில் உள்ள குடிநீர்க்
குழாய்களில் இந்த கூஜாவில் தண்ணீர் பிடித்துக் கொள்வார்கள். இதனை ரெயில் கூஜா என்றே
அப்போது அழைத்தார்கள். இப்போது பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில் வந்த பிறகு இதன் பயன்பாடு
குறைந்து விட்டது)
9.தாள் ( கவிஞர் காலத்தில், கவிதை எழுத அவருக்கு தேவைப்பட்டது;
இப்போதும் சிலர் பாக்கெட் நோட் ஒன்றை வைத்துக் கொள்கிறார்கள்)
10.பென்சில் ( இப்போது பேனா)
11.தீப்பெட்டி ( கவிஞருக்கு புகைபிடிக்கும் பழக்கம் இருந்தது என்று
நினைக்கிறேன். குறிப்பாக சுருட்டை பற்ற வைக்க அவருக்கு தேவைப்பட்டு இருக்கும். இப்போது
அதிகம் யாரும் இதனை எடுத்துச் செல்வதில்லை.)
12.கவிகை - ( குடை (Umbrella) – அந்த காலத்தில், மழை, வெய்யில் என்று
எல்லா நேரத்திற்கும் (குறிப்பாக வயதான பெரியவர்களுக்கு) பயன்பட்டது. இப்போது எல்லோரும்
கையை வீசிக் கொண்டு செல்வதிலேயே ஆர்வம் காட்டுகின்றனர். நடைபயணமும் குறைந்து வருகிறது. )
13.சால்வை ( குளிர்காலத்திற்கும், குளிர்தேசம் செல்லும்போதும் நிச்சயம்
தேவை. கவிஞர் வெளியில் சென்றால் எப்போதுமே சால்வை அணியும் வழக்கம் உள்ளவர்)
14.செருப்பு ( பயன்பாடு அதிகம் உள்ள, இதுபற்றி அதிகமாக விளக்க வேண்டியதில்லை)
15.கோவணம் ( இந்த காலத்துப் பிள்ளைகளிடம் கோவணம் அல்லது கோமணம்
என்று சொன்னால் சிரிப்பார்கள். அந்தகாலத்தில் இது எவ்வளவு முக்கியமானது என்பதனை, சிவன்
ஒரு கோவணத்தை வைத்து ஒரு சிவனடியாரை (அமர்நீதி நாயனார்) சோதித்த பெரியபுராணக் கதை கொண்டு
தெரிந்து கொள்ளலாம். இப்போது கோவணம் ‘என்பது ஜட்டி’ ரூபத்திற்கு மாறி விட்டது.
16. படுக்கை (இப்போது வெளியூர்ப் பயணங்களில் தங்கும் விடுதிகளிலேயே
தந்து விடுகிறார்கள்0
17.காப்பிட்ட பெட்டி ( பூட்டுடன் கூட்டிய பெட்டி. இப்போது சூட்கேஸ்
பெட்டி)
18.ரூபாய் ( ஒரு பயணத்திற்கு போய்வரத் தேவையான பணம். இப்போது வங்கிகளின்
ATM அட்டை பாதுகாப்பாக வந்து விட்டது. நமது மூத்த வலைப்பதிவர் முனைவர் பழனி.கந்தசாமி
அய்யா அவர்கள் தனது பின்னூட்டம் ஒன்றில் “தேவையானதைப் போல் மூன்று பங்கு பணம். இதை உங்கள்
உடம்பில் மூன்று இடங்களில் வைத்துக் கொள்ளவும்” என்று சொல்லுகிறார். ஒன்று காணாமல் போனாலும் இன்னொன்று உதவும் அல்லவா? நல்ல யோசனை.
இவை யாவும் அவர் காலத்தில், அவருடைய பயணத்திற்குத் தேவையான அவருடைய பட்டியல். இந்த காலத்திற்கு இவை
பொருந்துமா என்பது அவரவர் தேவையைப் பொருத்தது.