Showing posts with label அன்னதானம். Show all posts
Showing posts with label அன்னதானம். Show all posts

Wednesday, 17 August 2016

சமயபுரம் – நண்பர்களின் அன்னதானம் (2016)



நேற்று முன்தினம் செவ்வாய்க் கிழமை (15.08.16), இந்திய சுதந்திர தினத்தன்று பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோயில் இருக்கும் திருத்தலத்தில், கடைவீதியில்  29 ஆவது வருடமாக ஒரு அன்னதானம். ஆண்டுதோறும் நண்பர்கள் செய்து வருவது. நான் கடந்த ஒன்பது வருடங்களாக அவர்களோடு இணைந்துள்ளேன். திரும்பத் திரும்ப இதே விஷயத்தைப் பற்றி வருடம் தோறும் எழுத வேண்டுமா? என்று எனக்குள் ஒருவன் கேட்டான். அன்று புதுக்கோட்டையில் “வரலாறு முக்கியம் நண்பரே!” என்று என்னிடம் சொன்ன கவிஞர் வைகறையின் குரல் மனதுக்குள் ஒலித்ததால் இந்த கட்டுரை.

அன்னதானமும் அரசின் கட்டுப்பாடுகளும்:

முன்பெல்லாம் ஸ்ரீரங்கம். சமயபுரம் போன்ற இடங்களில்; தனிப்பட்ட முறையில் அன்னதானம் என்பது மதிய உணவாகவே இருந்தது. சிலர் ஒரு பெரிய பந்தல் போட்டு அல்லது கல்யாண சத்திரங்களை வாடகைக்கு எடுத்து சாப்பாடு போட்டனர். தயிர்சாதம், சாம்பார் சாதம் என்று கொடுத்தனர். தமிழ்நாடு அரசு, திருக்கோயில்களில் அன்னதானம் என்ற திட்டத்தைத் தொடங்கிய பிறகு, நிறையபேர் மதிய உணவை அன்னதானமாக வழங்குவதற்கு பதிலாக, திருக்கோயில் அன்னதான திட்டத்திற்கு நன்கொடை வழங்குவதோடு நின்று விட்டனர். எங்களது நண்பர்கள், ஆரம்பத்தில் புளிசாதத்தோடு , இனிப்பு பன், தண்ணீர் பாக்கெட், சூடான பாதாம்பால் கொடுத்து வந்தனர். மத்திய அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய சட்டம் கடுமையாக்கப் பட்டதால். தமிழக அரசு அன்னதானம் செய்பவர்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன்படி மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்றுள்ள, கோகுல சமாஜம் அறக்கட்டளை மூலம், சமயபுரம் கடைவீதியில் பக்தர்களுக்கு காலை உணவை (இட்லி, பொங்கல், காபி) அன்னதானமாக நண்பர்கள் வழங்கினார்கள்.. அப்போது என்னால் எடுக்கப்பட்ட ஒருசில புகைப்படங்கள் மட்டும் இங்கே. 
 
சமயபுரம் கடைவீதியில்:

(படம் மேலே) அன்னதானம் நடந்த கருப்பண்ண சாமி கோயில் வாசல்






 



(படம் மேலே) பால்குடம் கொண்டு வந்த பக்தர்கள் தேர்.

சமயபுரம் கோயில் முன்பு:

எப்போதுமே, வருடம் முழுவதும், சமயபுரம் கோயில் பக்தர்களால் நிரம்பி வழியும். கோயிலுக்குள் நுழைய முடியாது. அம்மன் தரிசன வரிசையும் நீண்டு காணப்படும் எனவே பல பக்தர்கள் கோயில் வாசலிலேயே (கிழக்கு) தேங்காய் உடைப்பு, சூடம் கொளுத்துதல், அகல் விளக்கு ஏற்றுதல் என்று வழிபட்டு சென்று விடுவார்கள். நானும் அவ்வாறே அன்று சூடம் ஏற்றி வழிபட்டு வந்தேன். அங்கு கோயில் வாசலில் எடுக்கப்பட்ட சில படங்கள் (கீழே) 





ஒரு முக்கிய அறிவிப்பு:

சமயபுரம் மாரியம்மன் கோயில் குடமுழுக்கை முன்னிட்டு, 11.07.2016 முதல் மூலவரான அம்மன் தரிசனம் கிடையாது. அதற்குப் பதில் மகாமண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள அம்மனின் வண்ணப்படம் மட்டுமே தரிசனமாக வைக்கப்பட்டுள்ளது. எனவே சமயபுரம் அம்மனை நேரடி தரிசனம் செய்ய விரும்புபவர்கள் குடமுழுக்கு நடந்த பின்னர் (தேதி இன்னும் அறிவிக்கப்பட வில்லை) செல்வது நல்லது. (படம் கீழே)


                                                                                                                                                                     
இதன் தொடர்ச்சியான முந்தைய பதிவுகள்:

சமயபுரம் கோயில்: நண்பர்கள் அன்னதானம் http://tthamizhelango.blogspot.com/2012/08/blog-post_13.html
சமயபுரத்தில் நண்பர்களின் அன்னதானம் (2013) http://tthamizhelango.blogspot.com/2013/08/2013.html   
அன்னதானம் செய்ய அரசு கட்டுப்பாடு http://tthamizhelango.blogspot.com/2014/02/blog-post_8.html 
சமயபுரம் - நண்பர்களின் அன்னதானம் (2014) http://tthamizhelango.blogspot.com/2014/08/2014.html 
சமயபுரம் – நண்பர்கள் செய்த அன்னதானம் (2015) http://tthamizhelango.blogspot.com/2015/08/2015.html 

Tuesday, 18 August 2015

சமயபுரம் – நண்பர்கள் செய்த அன்னதானம் (2015)



பத்து நாட்களுக்கு முன்னர் நண்பர் சங்கர் அவர்களிடமிருந்து செல்போன் அழைப்பு (இவரும் நானும் ஒன்றாக பணிபுரிந்தோம்) “ இந்த ஆண்டு ஆகஸ்டு 17 ஆம் தேதி சமயபுரத்தில் அன்னதானம். காலையிலேயே வந்து விடுங்கள்.” என்று தகவல் சொன்னார். நானும் “சரி வழக்கம் போல வந்து விடுகிறேன்” என்றேன். எப்போதும் தினமும் காலையில் 5 மணிக்கு உறக்கத்திலிருந்து எழுவது வழக்கம். அன்றைக்கு (17.08.2015, ஞாயிறு) 4 மணிக்கே எழுந்து காலைக் கடன்களை முடித்து, குளித்து விட்டு சமயபுரம் செல்ல கே.கே.நகர் (திருச்சி) பஸ் ஸ்டாண்ட் வந்தேன். இதற்கு முன்னர்  எனது TVS மொபெட்டில் செல்வேன். இப்போது எங்கு சென்றாலும் பஸ் பயணம்தான். மக்களோடு மக்களாய் சிறுபிள்ளை போல் வேடிக்கை பார்த்துக் கொண்டு பஸ் பயணம் செய்வதிலும் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது.

சத்திரம் பஸ் நிலையம் வந்தேன். சமயபுரம் பஸ் நிற்கும் இடத்தில் மஞ்சள் ஆடை அணிந்த பக்தர்கள் கூட்டம். முன்பெல்லாம் சமயபுரத்திற்கு சில சிறப்பு தினங்களில் மட்டும் செல்வார்கள். இப்போது வருடம் முழுக்க பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.  காலியாக நின்ற பஸ்சில் ஏறி பயணத்தை தொடர்ந்தேன். காவிரிப் பாலம் வந்தது. ஆடி  பதினெட்டிற்காக திறந்து விடப்பட்ட தண்ணீர் குறைந்து அரை ஆறாக காவிரி சலசலத்துக் கொண்டு இருந்தது. காவிரி பாலத்திலிருந்து சமயபுரம் வரை நிறைய பக்தர்கள் நடை பயணமாக சென்று கொண்டிருந்தார்கள். பக்தர்களின் அடையாளமாக மஞ்சள் ஆடை, துண்டு அணிந்து இருந்தார்கள். பல பெண்கள் தலை முடியில் வேப்பிலையை சூடி இருந்தனர்.  எல்லோரும் தனித்தனி குழுவாக சென்று கொண்டிருந்தார்கள். சமயபுரத்திற்கு முன்னர் உள்ள வாய்க்கால் எப்போதும் ஆறுபோல் இருக்கும். பெரும்பாலான நடை பக்தர்கள் அதில்தான் குளியல் போடுவார்கள். இன்று வாய்க்காலில் தண்ணீரே இல்லை. எல்லோரும் வழியில் கிராமங்களில் இருந்த தண்ணீர் தொட்டி குழாய்களிலும் அடி பம்புகளிலும் குளியல் போட்டுக் கொண்டும் துணிகளை பிழிந்து கொண்டும் இருந்தனர்.

பஸ் சமயபுரம் நெருங்கியதும் காலை நேரம் என்பதால் கடைத்தெருவில் எல்லா கடைகளிலும் ஊதுவத்தி சாம்பிராணி மணத்தோடு பக்திமணம் நிரம்பிய பாடல்கள் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தன. நீர் நிலைகளில் தண்ணீர் இல்லாதபடியினால், சமயபுரம் கோயில் குளத்திலும் கட்டணக் குளியல் இடங்களிலும்  குளிக்க கும்பல் அலை மோதியது.

நண்பர்கள் அன்னதானம் செய்யும் இடத்திற்கு வந்து சேர்ந்தேன் காலை நேரம் என்பதால் பக்தர்களுக்கு பன்னும் டீயும் கொடுத்துக் கொண்டு இருந்தார்கள். அதற்கப்புறம் இட்லியும் சாம்பாரும் சுடச்சுட கொடுக்கப்பட்டன.

இந்த வருடமும் வழக்கம் போல,  இன்று அருள்மிகு கருப்பண்ணசாமி மதுரைவீரன் சாமி கோயில்கள் வாசல் அருகே அன்னதானம் வழங்கப்பட்டது. இதனை ஆரம்ப காலத்தில் தனியாக தொடங்கி வைத்தவர் திரு A.கலைச் செல்வம் அவர்கள். இவர் திருமயம் அருகே உள்ள சிறுகூடல் பட்டி (கவிஞர் கண்ணதாசன் ஊர்) அருகே உள்ள அரிபுரம் என்ற ஊரைச் சேர்ந்தவர். கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக இந்த அன்னதானம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.. இவரோடு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் பணிபுரியும் ஊழியர்கள் சிலரும் மற்றும் ஓய்வு பெற்ற நண்பர்கள் சிலரும் இணைந்துள்ளனர். நான் ஸ்டேட் வங்கியிலிருந்து, விருப்ப ஓய்வில் வந்த பின்னர் இந்த நண்பர்களோடு இணைந்துள்ளேன். இந்த நற்பணியில் என்னை இணைத்து வைத்தவர் என்னோடு பணிபுரிந்த திரு V சங்கர் (ஸ்ரீரங்கம்) மற்றும் மேலே சொன்ன செல்வம் இருவரும்தான். நேற்றைய நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சிலவற்றை கீழே தந்துள்ளேன்.


















இதன் தொடர்ச்சியான முந்தைய பதிவுகள்:

சமயபுரம் கோயில்: நண்பர்கள் அன்னதானம்.
சமயபுரத்தில் நண்பர்களின் அன்னதானம் (2013)
சமயபுரம் - நண்பர்களின் அன்னதானம் (2014)


Friday, 22 August 2014

சமயபுரம் - நண்பர்களின் அன்னதானம் (2014)



(படம் மேலே) அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் கோயிலின் கிழக்கு வாசல் 

எனது நண்பர்கள் சிலர் 25 வருடங்களுக்கும் மேலாக ஆண்டுதோறும் ஆவணி மாதத்தில் ஒருநாள் சமயபுரத்தில் அன்னதானம் செய்து வருகின்றனர். இதனை ஆரம்ப காலத்தில் தனியாக தொடங்கி வைத்தவர் திரு A.கலைச் செல்வம் அவர்கள். இவர் திருமயம் அருகே உள்ள சிறுகூடல் பட்டி அருகே உள்ள அரிபுரம் என்ற ஊர்க்காரர். நான் ஸ்டேட் வங்கியிலிருந்து, விருப்ப ஓய்வில் வந்த பின்னர் இந்த அன்னதானத்தில் கடந்த ஆறு ஆண்டுகளாக இணைந்துள்ளேன்.

ஆரம்பத்தில் சமயபுரத்தில் கடைத் தெருவில் உள்ள ஏதேனும் ஒரு சிறிய சத்திரத்தை வாடகைக்கு எடுத்துக் கொண்டு இந்த அறப்பணி நடைபெற்றது. அந்த சத்திரத்துக்கு முதல்நாள் மாலையிலேயெ சென்று விடுவோம். சத்திரம் என்றால் ஒவ்வொன்றும் ஒரு கல்யாண மண்டபம். ஒரு விஷேச நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்வது போன்று சமையல்காரர்களை வைத்து சமையல் வேலை நடக்கும். பெரும்பாலும் புளி சாதம்தான். நண்பர்கள் எல்லோரும் ஒரு குழுவாக ஆளுக்கு ஒரு வேலையாக புளிசாதத்தை 500 அல்லது 600 பொட்டலங்களாக போட்டுவிடுவோம். அடுத்தநாள்  புளிசாதத்தோடு , இனிப்பு பன், தண்ணீர் பாக்கெட், சூடான பாதாம்பால் ஆகியவை அந்த சத்திரத்து வாசல் படியிலேயே சமயபுரம் வரும் பக்தர்களுக்கு வழ்ங்கப்படும். ஆனால் சமீப காலமாக சுகாதாரத்தை முன்னிறுத்தி அன்னதானம் செய்வதில் அரசு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.     

சென்ற ஆண்டு ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு திருச்சி மாவட்ட கலெக்டர் அவர்கள் ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதில்

// அன்னதானம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் உணவு பாதுகாப்பு துறையினரிடம் பதிவு செய்து, உரிமம் பெற்ற பின்பே உணவு வழங்குதல் வேண்டும். உணவு தயாரிக்கப்படும் இடம் சுத்தமானதாகவும், சுகாதாரமானதாகவும் பராமரிக்கப்பட வேண்டும். பாலிதீன் பைகளில் அடைக்கப்பட்ட குடிநீரை வழங்குவதை தவிர்க்க வேண்டும் மற்றும் சமைக்க பயன்படுத்தப்படும் தண்ணீர் சுகாதாரமாகவும், பாதுகாக்கப்பட்டதாகவும் இருக்க வேண்டும். மேலும் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை மூடி வைத்து பாதுகாப்பாக பரிமாற வேண்டும். சமையல் செய்பவர்கள், உணவுப் பொருட்களை பரிமாறி கையாள்பவர்கள் தொற்றுநோய் அற்றவர்களாக இருத்தல் மற்றும் தன்சுத்தம் பேணுபவர்களாக இருக்க வேண்டும். அன்னதானம் செய்பவர்கள் வழங்கும் உணவினால் ஏற்படும் உபாதைகளுக்கு தாங்களே பொறுப்பானவர்கள் மற்றும் துறை ரீதியான நடவடிக்கைக்கும் உட்படுத்தப்படுவார்கள் //

என்று குறிப்பிட்டு இருந்தார்.

எனவே சென்ற ஆண்டு முதல் முறைப்படி உணவுக் கட்டுப்பாட்டு சட்டத்தின்படி கோகுல சமாஜம் அறக்கட்டளை தயார் செய்து கொண்டு வந்த உணவு வகைகளை காலை உணவாக பக்தர்களுக்கு அளிக்கப்பட்டது. இந்த அறக்கட்டளை தினசரி அன்னதானம், கல்வி, மருத்துவம் மற்றும் கோசாலை சம்பந்தப்பட்ட தொண்டுகளை செய்து வருகின்றனர்.  இந்த ஆண்டும் 27 ஆவது வருடமாக சென்ற ஆண்டைப் போலவே 18.08.14 திங்கட் கிழமை அன்று காலை அன்னதானம் வழங்கப்பட்டது. சமயபுரம் கடைத் தெருவில் உள்ள அருள்மிகு கருப்பண்ணசாமி, மதுரைவீரன் சாமி கோயில்கள் வாசல் அருகே இந்த அன்னதானம் செய்யப்பட்டது. காலை இனிப்பு பன், இட்லி சாம்பார் மற்றும் காபி ஆகியவை சமயபுரம் வந்த பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.  (அப்போது எடுக்கப்பட்ட படங்கள் கீழே)

(படம் மேலே) அன்னதானம் நடைபெற்ற அருள்மிகு கருப்பண்ண சாமி மதுரைவீரன் சாமி கோயில் வாசல்

(படம் மேலே) கோயில் உள்ளே வேனில் கொண்டு வரப்பட்ட உணவு வகைகள்.)

 

   

(படங்கள் மேலே) அன்னதானம் நடைபெறுகிறது

(படம் - மேலே) அன்னதானம் - பக்தர்கள் வரிசை

(படம் - மேலே) வரிசைப்படுத்தும் அன்பர்கள்

(படம் - மேலே) வரிசைப்படுத்தும் அன்பரோடு நான்

(படம் - மேலே) சமயபுரம் கடைவீதி

  

Saturday, 8 February 2014

அன்னதானம் செய்ய அரசு கட்டுப்பாடு


கோயில் திருவிழா அல்லது ஊரில் ஏதாவது விஷேசம் என்றால் பல ஊர்களில் அன்னதானம் வழங்குதல் , நீர்மோர் அல்லது பானகம் கொடுத்தல் என்பது நடைபெறும். ஏற்பாடு செய்த சில மணி நேரங்களில், ஒரு இடத்தில் சாலை ஓரத்தில் இவை நடைபெறும். சிலசமயம் சிலர் மண்டபங்களில், சத்திரங்களில் பந்தி பரிமாறி அன்னதானம் செய்வதும் உண்டு. ஸ்ரீரங்கம், பழனி போன்ற பல முக்கியமான திருக்கோயில்களில், அரசே அன்னதானம் செய்ய ஏற்பாடுகளைச் செய்துள்ளது.  

அரசு விதிமுறைகள்;

கட்டுப்பாடுகள் இல்லாது இருந்தது. ஆனால் இப்போது மத்திய அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய சட்டம் (2006ம் ஆண்டு) மற்றும் விதிமுறைகள்படி, தமிழக அரசு அன்னதானம் செய்பவர்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. எனவே இனிமேல் அன்னதானம் செய்ய விரும்புபவர்கள்,  அந்தந்த மாவட்ட உணவு பாதுகாப்பு  அதிகாரிகளிடம் அனுமதி பெற்றே இவற்றை செய்ய வேண்டும்.

சென்ற மாதம் ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு திருச்சி மாவட்ட கலெக்டர் அவர்கள் ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதில்

// அன்னதானம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் உணவு பாதுகாப்பு துறையினரிடம் பதிவு செய்து, உரிமம் பெற்ற பின்பே உணவு வழங்குதல் வேண்டும். உணவு தயாரிக்கப்படும் இடம் சுத்தமானதாகவும், சுகாதாரமானதாகவும் பராமரிக்கப்பட வேண்டும். பாலிதீன் பைகளில் அடைக்கப்பட்ட குடிநீரை வழங்குவதை தவிர்க்க வேண்டும் மற்றும் சமைக்க பயன்படுத்தப்படும் தண்ணீர் சுகாதாரமாகவும், பாதுகாக்கப்பட்டதாகவும் இருக்க வேண்டும். மேலும் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை மூடி வைத்து பாதுகாப்பாக பரிமாற வேண்டும். சமையல் செய்பவர்கள், உணவுப் பொருட்களை பரிமாறி கையாள்பவர்கள் தொற்றுநோய் அற்றவர்களாக இருத்தல் மற்றும் தன்சுத்தம் பேணுபவர்களாக இருக்க வேண்டும். அன்னதானம் செய்பவர்கள் வழங்கும் உணவினால் ஏற்படும் உபாதைகளுக்கு தாங்களே பொறுப்பானவர்கள் மற்றும் துறை ரீதியான நடவடிக்கைக்கும் உட்படுத்தப்படுவார்கள் //

என்று குறிப்பிட்டு இருந்தார்.

மேலும், தகவல்கள் பெறுவதற்கும் மற்றும் புகார்கள் கொடுப்பதற்கும் மாவட்ட நியமன அலுவலர், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை (உணவு பிரிவு) ஜமால் முகம்மது கல்லூரி அருகில், ரேஸ் கோர்ஸ் ரோடு, (ஆயுதப்படை எதிர்புறம், துணை இயக்குனர், சுகாதாரப்பணிகள் வளாகம், டி.வி.எஸ் டோல்கேட், திருச்சி என்ற முகவரியில் அணுகலாம். என்றும் சொல்லி இருந்தார்.

நண்பர்களின் அன்னதானம்

ஆண்டுதோறும் எனது நண்பர்கள் சிலர் ஒன்று சேர்ந்து சமயபுரம் கோயில்
கடைவீதியில் காலையில் குடிதண்ணீர் வழங்கல், சூடான பால் தருதல் மற்றும் அன்னதானம் செய்தல் முதலானவற்றை லைசென்ஸ் பெற்ற உணவு தயாரிப்பாளர்கள் மூலம் செய்து வருகின்றனர். இந்த அன்னதான நிகழ்ச்சிகள் பற்றியும் எனது வலைப்பதிவில் எழுதியுள்ளேன்.
 
எனவே அன்னதானம் பற்றிய அரசின் விதிமுறைகளை இன்னும் விவரமாகத் தெரிந்து கொள்வதற்காக, மேலே சொல்லப்பட்ட அலுவலகம் சென்றேன். அங்குள்ளவர்கள் நீங்கள் அன்னதானம் செய்ய இருக்கும் பகுதிக்கு (Area) என்று ஒரு உணவு பாதுகாப்பு அதிகாரி இருக்கிறார். அவரோடு தொடர்பு கொள்ளுங்கள் “ என்று மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பட்டியலையும், அவர்களது செல்போன் எண்களையும் காண்பித்தார்கள். நான் குறித்துக் கொண்டேன். சம்பந்தப்பட்ட அலுவலரோடு தொடர்பு கொண்டபோது, அன்னதான விண்ணப்பம் பற்றியும், பணம் கட்ட வேண்டிய சலான் பற்றியும், மற்ற விவரங்கள் குறித்தும் சொன்னார். மேலும் இதுபற்றி அனைவரும் தெரிந்து கொள்ளும் வண்ணம் ஒரு கூட்டம் நடக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.

 
( படம் மேலே) தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு . தற்போது மத்திய அரசு, 2014–ம் ஆண்டு பிப்ரவரி 4–ந்தேதி வரை இருந்த காலக் கெடுவை, மேலும் ஆறு மாத காலத்திற்கு நீட்டிப்பு செய்துள்ளது.

பெரிய அமைப்பு அல்லது தொண்டு நிறுவனம் மூலம் அன்னதானம் செய்பவர்களுக்கு பெரும்பாலும் சிக்கல்கள் வர வாய்ப்பில்லை. ஏனெனில் அவர்களே உணவு பாதுகாப்புத் துறையில் உரிமம் (Licence) பெற்று இருப்பார்கள். அல்லது உரிமம் பெற்ற உணவு தயாரிப்பாளர்களை (Catering Service) ஏற்பாடு செய்து இருப்பார்கள். ஆனால் ஆர்வக் கோளாறு காரணமாக கோயில் திருவிழா, சிலரது பிறந்தநாள் விழா சமயங்களில் மன்றங்கள் சார்பாக, அனுமதி பெறாமல், அன்னதானம் செய்யும் நண்பர்களுக்கு  சிக்கல்கள் நேரிடலாம். எனவே பொதுவாக அன்னதானம் செய்ய விரும்புவோர் அதற்கான அரசுவிதி முறைகளைக் கடைபிடித்து, பொது சுகாதாரம் கெடாதபடி  செய்யவும். இல்லையேல் “ குளிக்கப் போய் சேறு பூசிய கதையாக , நல்லது செய்யப்போய் வீண் சிக்கல்களில் மாட்டிக் கொள்ள நேரிடும்.
மேலும் அதிக விவரங்களுக்கு http://www.tnhealth.org/FoodSafety.htm 

 
(PICTURES: THANKS TO “GOOGLE ”)