Wednesday 31 December 2014

விடை தெரியாத கேள்விக்கு விடை


ஒரு தமிழ் திரைப்படம் ஒன்றில் வரும் வரிகள் இவை.

                   கேள்வி பிறந்தது அன்று நல்ல
                   பதில் கிடைத்தது இன்று
                   ஆசை பிறந்தது அன்று
                   யாவும் நடந்தது இன்று
                          - பாடல் கண்ணதாசன் (படம்: பச்சை விளக்கு)

அதுபோல சுமார் 35 வருடங்களுக்கு முன்னர், எனக்கு தெரியாத கேள்வி ஒன்றிற்கு இப்போதுதான் சரியான பதில் கிடைத்தது. இந்த விடையைச் சொன்ன,  வலைப் பதிவர் ஆசிரியர் ஜோசப் விஜூ (ஊமைக் கனவுகள்) அவர்களுக்கு முதலிலேயே நன்றியைச் சொல்லி விடுகிறேன். விவரம் இதுதான்.

டெபாசிட் சேகரித்தல் (DEPOSIT MOBILIZATION)

என்னதான் விளம்பரம் செய்தாலும், துண்டுப் பிரசுரங்கள் கொடுத்தாலும், பணம் வைத்து இருப்பவர்கள் வங்கியில் டெபாசிட் செய்ய முன் வர மாட்டார்கள். அதிலும் சில பெரிய மனிதர்கள் “பூதம் காத்த புதையல்போல வீட்டிலேயே வைத்து இருப்பார்கள். காரணம் வங்கியில் டெபாசிட் செய்தால், அரசாங்கம் திடீரென்று எடுத்துக் கொண்டால் என்ன செய்வது என்ற பயம்தான். எனவே அவர்களின் பயத்தினைப் போக்கி, வங்கியில் டெபாசிட் செய்தால், பணம் பாதுகாப்பாக இருக்கும், நாட்டு மக்களுக்கும் பயன்படும், நாட்டில் புதிய தொழில்கள் தொடங்க உதவும், வட்டியும் கிடைக்கும் என்று நேரில் போய் சொல்ல வேண்டும். அதாவது டெபாசிட் பிடிக்க வேண்டும். மேலும் எப்படி எப்படியெல்லாம் பிரித்து, டெபாசிட் செய்தால ( கூட்டுக் கணக்குகள்) வரி பிடித்தம் இருக்காது என்றும் சொல்வோம். வங்கிக்கும் டெபாசிட் சேரும். இதற்கு வங்கியில் அனுமதி உண்டு.   

அப்போதுதான் நான் வங்கியில் வேலைக்கு சேர்ந்து இருந்தேன்.  (அப்போது வயது 23; இப்போது 60 முடியப் போகிறது) எங்கள் வங்கியிலிருந்து, ஒரு ஞாயிற்றுக் கிழமை, வைப்புத் தொகை (FIXED DEPOSITS) திரட்ட (Deposits mobilization) காரில் கிளம்பினார்கள். அப்போது என்னையும் வரச் சொன்னதால் நானும் அவர்களுடன் புறப்பட்டுச் சென்றேன். எங்கள் வங்கியைச் சுற்றியுள்ள ஊர்களில் இருக்கும் பெரிய தனக்காரர்களைக் கண்டு, எங்கள் வங்கியில் டெபாஸிட் செய்யச் சொல்லி ஒவ்வொரு ஊராகச் சென்றோம்.

கேள்வி இதுதான்

அவ்வாறு செல்லும்போது, ஆலம்பட்டி புதூர் (மணப்பாறை) என்ற ஊரினுள் இருக்கும்  ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் (தமிழாசிரியரும் கூட) ஒருவரைப் பார்க்கச் சென்றோம். அவர் நுங்கும், மணப்பாறை முறுக்கும் கொடுத்து உபசரித்தார். அவரிடம் எங்கள் ஊழியர் ஒருவர் என்னை அறிமுகம் செய்யும்போது “இவர் தமிழ் எம்.ஏ படித்தவர்என்று சொல்லி விட்டார். வந்தது வினை. அவர் தமிழாசிரியராக இருந்தவர் அல்லவா? எனவே என்னைப் பார்த்து ஙப்போல் வளை என்று யார் சொன்னது? என்று கேட்டார். சரியான பதில் தெரியும் என்பதால் சட்டென்று “ஆத்திச்சூடி - ஔவையார் என்று சொல்லி விட்டேன். இருந்தாலும் அவர் என்னை அத்தோடு விட்டு விடவில்லை ஙப்போல் வளை என்று ஏன் அந்த எழுத்தை மட்டும் சொன்னார்கள்? என்று கேட்டார். நானும் எல்லோரும் சொல்வது போல ங “ என்ற எழுத்தைப் போல வளைந்து பணிவுடன் அடக்கமாக இருக்க வேண்டும் “ என்று சொன்னேன். அவர் உடனே , சரியான பதில் இது கிடையாது என்று சொல்லி விட்டு, சில விளக்கங்கள் சொன்னார். எனக்கோ ஒன்றும் விளங்கவில்லை. ஙே என்று விழித்தேன். இருந்தாலும் விட்டால் போதும் என்று, அவரிடம் புரிந்தது போல் தலையாட்டினேன். என்னை அழைத்து வந்த சீனியர் ஊழியர்கள் சிரித்தனர்.


                                  (Picture thanks to www.kathukutti.com/tamil/aathichudi )

அன்று முதல் அந்த கேள்விக்கான பதிலை கேட்டு தெரிந்து கொள்ள முயன்றேன். ஆலம்பட்டி புதூர் வழியே செல்லும் போதும், இந்த ஙப் போல் வளைஎன்ற ஆத்திச்சூடி வரியைப் படிக்கும் போதும், இந்த சம்பவம் நினைவுக்கு வந்து கொண்டே இருக்கும். 


பதில் கிடைத்தது:

ஆத்திச்சூடிக்கு பொருள் சொன்னவர்கள் கூட “ ங போல வளைய வேண்டும்என்று முடித்துக் கொண்டார்கள். ஆசிரியர்கள் சிலரிடம் கேட்டுப் பார்த்ததில் திருப்தியான பதில் இல்லை. அபிதான சிந்தாமணியிலும் இதனைப் பற்றி ஒன்றும் இல்லை. கூகிளில் தேடிப் பார்த்தும் ஒன்றும் ஆகவில்லை. அண்மையில் வலைப் பதிவர் ஆசிரியர் ஜோசப் விஜூ (ஊமைக் கனவுகள்) அவர்கள் பதிவு ஒன்றினை படித்தேன். யுரேகா (EUREKA)  என்று கத்த வேண்டும் போலிருந்தது. ஏனெனில் இத்தனை ஆண்டுகளாக எந்த கேள்விக்கு விடை தேடி அலைந்தேனோ, அந்த கேள்விக்கு அவர் தனது பதிவினில், விளக்கமாக அற்புதமாகச் சொல்லி இருந்தார். அவருக்கு மீண்டும் மனதார எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வலைப் பதிவர் ஆசிரியர் ஜோசப் விஜூ (ஊமைக் கனவுகள்) சொன்ன விளக்கம் இதுதான்.

// மெய்யின் வரிசையில், இருக்கும், ‘ங்எனும் எழுத்தைத் தவிர, அதன் உயிர்மெய் வடிவங்கள் பெற்று வரும் சொல்  ஏதும் தமிழில் இல்லை.

, ஙா, ஙி, ஙீ,…….

இந்த வரிசையில் இடம் பெற்ற எந்த எழுத்துகளைக் கொண்ட தமிழ்ச்சொல் ஒன்றையேனும் நீங்கள் பார்த்திருக்கிறீர்களா

( அங்ஙனம், இங்ஙனம், என்னும் சொற்களில் ங எனும் எழுத்து வருகிறதே என்கிறீர்களா..? அது ஙனமா..கனமா என்ற விவாதமும் நடந்து வருகிறது என்பதால் அதை இங்கு எடுத்துக் கொள்ளவில்லை )

ஆனால் இந்த ங்எனும் எழுத்தை விட்டுத் தமிழின் இயக்கத்தைக் கற்பனை செய்ய முடியவில்லை. அவ்வளவு முக்கியமான எழுத்துத்தான் இது.

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், இந்த ஒரு மெய்யெழுத்து மட்டுமே பயன்படுகிறது. ஆனால் இதை விட்டுவிட முடியாததால், எந்தப்பயன்பாடும் இல்லாத, இதன் உயிர்மெய் வரிசையையும், ( , ஙா, ஙி, ஙீ,……. ) சேர்த்து, இந்த ஓர் எழுத்திற்காகத்  தமிழ் தனது எழுத்து வரிசையில் வைத்திருக்கிறது.

அப்படியானால் ங் போல் வளை என்றுதானே சொல்லி இருக்க வேண்டும்? ஙப்போல் வளை என்றது ஏன் என்கிறீர்களா?

முதல்காரணம்,

 பழைய வாசிப்பில், ஙப்போல் இன்றிருப்பதை, ங் போல் என்றும் படிக்கலாம். புள்ளி இருக்காது.

இரண்டாவது காரணம், தமிழ் மரபில் மெய்யெழுத்துகள், சொல்லுக்கு முதலில் வராது.

மூன்றாவது காரணம், அவ்வையார், உயிர்மெய்வரிசையில் ஆத்திச்சூடியை அமைக்கும் போது, எனும் எழுத்தில் தொடங்கும் சொல்லைக் காணாமல், அவ்வெழுத்தையே பயன்படுத்தி விட்டது.

திருக்குறளில் சுற்றந்தழால், என்றொரு அதிகாரம் உள்ளது. அதன் பொருள், ஒருவன் தன்னுடைய சுற்றத்தை நீங்காமல் தன்னோடு வைத்துப் பாதுகாத்துக் கொள்ளுதல்.

இதைத்தானே ங்செய்து கொண்டிருக்கிறது?

ஙப்போல் வளை

ங எனும் ஓரெழுத்து தனது பயன்பாட்டினால், தன்னைச் சார்ந்த உயிர் மெய்களையும் தன்னுடன் வைத்துக் காப்பது போல, ஒருவன் தன்னுடைய சுற்றத்தை அணைத்துக் காக்க வேண்டும்.//


ஆசிரியர் அவர்கள் எழுதிய பதிவு இது

ங்சொல்வது என்ன? http://oomaikkanavugal.blogspot.com/2014/12/blog-post_29.html  


கேள்வி பிறந்தது அன்று நல்ல பதில் கிடைத்தது இன்று” –  என்ற பாடலை, கண்டு கேட்டு களித்திட கீழே உள்ள யூடியூப் இணைய முகவரியை சொடுக்கவும் (CLICK HERE)



               (ALL PICTURES THANKS TO “GOOGLE”)


Monday 29 December 2014

நான் ரசித்த ஆங்கில கவிதைகள்.1



நான் படித்த ஆரம்பப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் தமிழும் (முதல்தாள்) ஆங்கிலமும் (இரண்டாம் தாள்) இணைந்தே வந்தன. ஆரம்பத்தில் தமிழை மட்டுமே ரசித்த நான், பள்ளிப் பருவத்திலிருந்து ஆங்கிலக் கவிதைகளையும் ரசித்தேன். நான் தமிழ் மீடியத்தில் படித்ததால், தெரியாத ஆங்கில சொற்களுக்கு, ஆங்கில தமிழ் அகராதியை அடிக்கடி பார்க்கும் வாய்ப்பு ஏற்பட்டது. கல்லூரி நாட்களில் விளையாட்டாக ஒரு சில கவிதைகளை, ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து நண்பர்களிடம் காட்டியதும் உண்டு. அந்த வகையில் அன்றைய மாணவப் பருவத்தில், நான் ரசித்த, பாடத் திட்டத்தில் வந்த சில ஆங்கில கவிதைகளை இங்கே காணலாம்.

சாலமன் க்ரண்டி பானுமதி கொண்டை:

ஆறாம் வகுப்பு படித்த போது சாலமன க்ரண்டி (SOLOMON GRUNDY) என்பவனைப் பற்றிய ஒரு கவிதை.

Solomon Grundy,
Born on a Monday,
Christened on Tuesday,
Married on Wednesday,
Took ill on Thursday,
Grew worse on Friday,
Died on Saturday,
Buried on Sunday.
That was the end,
Of Solomon Grundy.

இவன் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தான் என்பதை விட, அவன் வாழ்நாளில் ஒவ்வொரு முக்கிய நிகழ்ச்சியும் ஒவ்வொரு கிழமையில் வரிசையாக நடப்பதாக பாடி இருப்பதே கவிதையின் சிறப்பு அம்சம் ஆகும். அவன் பிறந்தது திங்கட் கிழமை. அவனுக்கு பெயர் சூட்டப்பட்டது செவ்வாய் அன்று. அவனது திருமணம் புதன் கிழமை நடந்தது. ஒரு வியாழக் கிழமை நோயில் படுத்தான். வெள்ளிக் கிழமை இன்னும் மோசமானான். சனிக் கிழமை இறந்து விட்டான். அடுத்தநாள் ஞாயிறன்று அவனை புதைத்தார்கள். இதுவே சாலமன் க்ரண்டியின் முடிவு. இதுவே இந்த கவிதை தரும் செய்தி. இந்த கவிதையை 1842 – இல்  முதன் முதலில் தொகுத்து வெளியிட்டவர் James Orchard Halliwell என்பவர்.

நான் சிறுவனாக இருந்தபோது எம்ஜிஆர் பானுமதி ஜோடி பிரபலம். பள்ளி இடைவேளையில் நண்பர்களுக்குள் சத்தமாக இந்த கவிதையைப் பாடுவோம். அப்போது கடைசியாக, அந்த ஆங்கிலக் கவிதையினை முடிக்கும் போது,  அதே ராகம் (rhythm) போன்று , எம்ஜிஆர் சண்டை பானுமதி கொண்டைஎன்று சேர்த்து சொல்வோம்.

சில்லென்ற சிறுநெருஞ்சிக் காட்டினிலே:

எனது மாணவப் பருவத்தின் போது,நாங்கள் திருச்சி டவுன் பகுதியில் குடியிருந்தோம். நான் எஸ்.எஸ்.எல்.சி மற்றும் கல்லூரி படிப்பின்போது, புத்தகங்களை எடுத்துக் கொண்டு அருகிலுள்ள ஜோசப் கல்லூரி (நான் அந்த பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கவில்லை) மைதானத்திற்கு, எடுத்துக் கொண்டு போய், புல்வெளியில் அமர்ந்து படிப்பது வழக்கம். அப்போது அங்கே அழகழகாக சிறு நெருஞ்சிப் பூக்கள் மஞ்சள் வண்ணத்தில் பூத்துக் குலுங்கும். அந்த புல்தரையில் நடந்து கொண்டே, மலர்களை ரசித்துக் கொண்டே மனப்பாடம் செய்த பாடல், வில்லியம் வேர்ட்ஸ் ஒர்த் (William Wordsworth) எழுதிய I Wandered Lonely as a Cloud “ என்ற பாடலாகும். அதிலிருந்து சிலவரிகள்.

இப்போதும், நம்நாட்டிலுள்ள, அழகான, சிறு நெருஞ்சிப் பூக்கள் மலர்களைப் பார்க்கும் போதெல்லாம் இந்த ஆங்கிலக் கவிதையோடு, T.R. மகாலிங்கம் கணீரென்று பாடிய,

சில்லென்று பூத்த சிறுநெருஞ்சிக் காட்டினிலே
நில்லென்று கூறி நிறுத்தி வழி போனாளே
நின்றது போல் நின்றாள் நெடுந்தூரம் பறந்தாள்
நிற்குமோ ஆவி நிலைக்குமோ நெஞ்சம்
மணம் பெறுமோ வாழ்வே ஆ.ஆ. ஆஆஆஆஆ

செந்தமிழ்த் தேன் மொழியாள் நிலாவென
சிரிக்கும் மலர்க் கொடியாள் நிலாவென
சிரிக்கும் மலர்க் கொடியாள்
பைங்கனி இதழில் பழரசம் தருவாள்
பருகிடத் தலை குனிவாள்
-          பாடல் கண்ணதாசன் (படம்: மாலையிட்ட மங்கை)

என்ற பாடலும் நினைவுக்கு வரும்.

இது மாலைநேரத்து மயக்கம்:

கவிஞர் அந்த கானகத்தின் வழியே குதிரை மீது பயணம் செய்து கொண்டு இருக்கிறார். கவிஞரல்லவா. வழிநெடுக இருக்கும் இயற்கை காட்சிகளை ரசித்துக் கொண்டே வந்தவர், ஓரிடம் வந்ததும் நின்று விட்டார்.

அழகான ஒரு தோப்பு. அந்த மாலைப் பொழுதினிலே பனிப் பொழிவோடு அங்கே ஒரு ரம்யமான காட்சி. பண்ணை வீடு ஏதும் அருகில் இல்லாத நிலையில், தனது எஜமானன் ஏன் அங்கு தனது பயணத்தை நிறுத்த வேண்டும் என்று குதிரைக்கோ குழப்பம்.  பனிக்காற்று வீசும் ஓசையைத் தவிர வேறு எதுவும் இல்லை. எனவே என்ன குழப்பம்?என்று கேட்பதைப் போல, தனது மீதுள்ள சேணத்தின் மணிகளை ஆட்டுகிறது. கவிஞருக்கோ அந்த இடத்தை விட்டு வர மனவில்லை. கவிஞரல்லவா? தனது மனநிலையை கவிதையாக பொழிந்து விட்டார். அவர் Robert Frost என்ற ஆங்கிலக் கவிஞர். கவிதையின் தலைப்பு  “ Stopping by Woods on a Snowy Evening


நாடகமே இந்த உலகம்:

வாழ்க்கை என்றால் என்ன? இந்த கேள்வியை யாரிடமாவது கேட்டுப் பாருங்கள். சட்டென்று பதில் கிடைக்காது. என்ன பதில் சொல்வது என்று திகைப்பார்கள். அப்புறம் யோசித்து ஏதாவது சப்பைகட்டு கட்டுவார்கள்.

ஆங்கில நாடக ஆசிரியர் வில்லியம் ஷேக்ஸ்பியர் (William Shakespeare) மனித வாழ்க்கையை ஏழு நிலைகளாகப் பிரித்து காட்டியிருக்கிறார். அவை 1. குழந்தைப் பருவம் ( INFANT ) 2. பள்ளிச் சிறுவன் (SCHOOL BOY) 3.  காதலன் / காதலி (LOVER ) 4. போர்வீரன் ( SOLDIER) 5. நீதிமான் ( JUSTICE)  6. முதுமை (OLD STAGE) 7. தள்ளாத வயது (VERY VERY OLD) கீழே நான் ரசித்த அந்த பாடல் வரிகள்.

All the world's a stage,
And all the men and women merely players;
They have their exits and their entrances,
And one man in his time plays many parts,
His acts being seven ages. At first, the infant,
Mewling and puking in the nurse's arms.
Then the whining schoolboy, with his satchel
And shining morning face, creeping like snail
Unwillingly to school. And then the lover,
Sighing like furnace, with a woeful ballad
Made to his mistress' eyebrow. Then a soldier,
Full of strange oaths and bearded like the pard,
Jealous in honor, sudden and quick in quarrel,
Seeking the bubble reputation
Even in the cannon's mouth. And then the justice,
In fair round belly with good capon lined,
With eyes severe and beard of formal cut,
Full of wise saws and modern instances;
And so he plays his part. The sixth age shifts
Into the lean and slippered pantaloon,
With spectacles on nose and pouch on side;
His youthful hose, well saved, a world too wide
For his shrunk shank, and his big manly voice,
Turning again toward childish treble, pipes
And whistles in his sound. Last scene of all,
That ends this strange eventful history,
Is second childishness and mere oblivion,
Sans teeth, sans eyes, sans taste, sans everything.

                                   - William Shakespeare
(As You Like It, Act II, Scene VII [All the world’s a stage)


இந்த பாடல் வரிகளை கண்டு கேட்டு களித்திட கீழே உள்ள யூடியூப் இணைய முகவரியை சொடுக்கவும் (CLICK HERE)


               அனைவருக்கும் எனது உளங்கனிந்த
                  ஆங்கிலப் புத்தாண்டு (2015)
                      நல் வாழ்த்துக்கள்!



   
                                                 (ALL PICTURES THANKS TO “GOOGLE”)



Sunday 28 December 2014

தலித்துகளும் பிராமணர்களும் - கே.சி. லட்சுமி நாராயணன் (நூல் விமர்சனம்)




திராவிட இயக்கங்களின் தாக்கத்தால் தமிழ்நாட்டில் ஒரு பொதுவான கருத்து நிலவுகிறது. அதாவது ஜாதியை படைத்தவன் பிராமணன்; ஜாதியை வைத்து தமிழர்களிடையே பிரிவினையை உண்டாக்கியவன் பிராமணன்; தலித்துகளிடம் தீண்டாமையை ஏற்படுத்தியவன் பிராமணன்: என்று ஜாதியின் பெயரால் நிகழும் அனைத்திற்கும் பிராமணர்களே காரணம் என்ற கருத்து மையப்படுத்தப்பட்டது.

தலித்துகளும் பிராமணர்களும் என்ற இந்த நூலை எழுதிய கே.சி. லட்சுமி நாராயணன் அவர்கள் மூத்த பத்திரிகையாளர். நிறைய படித்தவர்.நிறைய கட்டுரைகள், நூல்கள் எழுதியுள்ளார். எனவே அவரது நூலைப் பற்றிய எனது விமர்சனம் என்பதே தவறு. எனினும் தற்போதைய வழக்கப்படி வாசகர்களுக்கு தெரிய வேண்டி நூல் விமர்சனம் என்றே சொல்ல வேண்டியதாயிற்று.

 எல்லாச் சாதிகளைச் சேர்ந்தவர்களும் தீண்டாமையைப் பேணிப் பின்பற்றினார்கள்; அவர்களில் பிராமணர்களும் இருந்தார்கள். தமிழகத்தில் தீண்டாமையை ஒரு கொள்கையாகப் பிராமணர்கள் மட்டுமே பின்பற்றினார்கள் என்றும், இதர சாதிகளைச் சேர்ந்த எவரும் பின்பற்றவில்லை என்றும் கூறுவது சரியன்று “

என்பதனை நூலாசிரியர் (பக்கம் 5 ) அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளார். இதிலிருந்து  இந்த நூல்  எதனை நோக்கி நகர்கின்றது என்பதனைத் தெரிந்து கொள்ளலாம்.

ஆசிரியரின் நோக்கம்:

இந்த நூல் மட்டுமன்றி  சுக்கிரநீதி, தமிழக அந்தணர் வரலாறு, ஒரு பத்திரிகையாளனின் பயணமும் பார்வையும் என்று நிறைய நூல்களையும் ஆசிரியர் எழுதியுள்ளார்.

இந்த நூலில் கே.சி.லட்சுமி நாராயணன் அவர்கள் தனிப்பட்ட முறையில் யாரையும் அல்லது எந்த இயக்கத்தையும் தாக்கி எழுதவில்லை என்பது பாராட்டத்தக்க விஷயம் ஆகும். நூல் முழுக்க பிராமணர்கள் ஜாதியை உண்டு பண்ணவில்லை; பிராமணர்களுக்கும் தலித்துகளுக்கும் விரோதமில்லை; தலித்துகளுக்கு உதவிய பிராமணர்கள் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் - என்று நிறுவுவதிலேயே நூல் தொடர்ந்து செல்கிறது.

யார்? யார்?

ஆரம்பத்தில் பொதுவான கருத்துக்களைச் சொன்ன நூலாசிரியர் கே.சி.லட்சுமி நாராயணன் அவர்கள், தலித்துகளுக்கு உதவிய மற்றும்  காந்திஜியின் அரிஜன சேவை மூலம் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட பிராமணர்களைப் பற்றியும் அவர்களது தொண்டினைப் பற்றியும் விளக்கியுள்ளார்.

திருஞான சம்பந்தர் தனது பாடல்களுக்கு பண்ணமைக்க பாணர் குலத்தவரான திருநீலகண்டரை தான் போகுமிடமெல்லாம் அழைத்துச் சென்றதையும், வைணவர்களில் முக்கியமானவரான ஸ்ரீராமானுஜர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு செய்த தொண்டினைப் பற்றியும் குறிப்பிடுகிறார்.

பெரியார் கொள்கைகளில் ஈடுபாடு உடையவர் பாரதிதாசன். ஆனாலும் அவர் சுப்ரமணிய பாரதியாரின் மீதுள்ள பற்றால், கனக சுப்புரத்தினம் என்ற தனது பெயரை பாரதிதாசன் என்று வைத்துக் கொண்டார். இதற்குக் காரணம் சாதிக் கொள்கையை நன்றாக உண்மையாக எதிர்த்தவர் பாரதியார்தாம் “ என்று பாரதிதாசனே சொல்கிறார். ( பக்கம் 43)  

ஹரிஜன சேவா சங்கம்:

ஹரிஜன் என்ற சொல்லை நல்ல எண்ணத்திலேயே மகாத்மா காந்தி பயன்படுத்தினார் எனவும், அந்த பெயரை வைக்கச் சொன்னதே ஒரு தலித்துதான் என்பதையும் சொல்லி, காந்தி செய்த ஹரிஜன சேவை காங்கிரஸ் இயக்கத்தில் என்ன என்பதனையும் நூலாசிரியர் விளக்குகிறார். அதன்படி காங்கிரசில் நிறையபேர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு  தொண்டாற்றினர் அவர்களுள் தமிழகத்தில் ஹரிஜன சேவை ஆற்றிய பிராமணர்களைப் பற்றியும், இதனால் இவர்கள் தங்களது உறவினர்களால் ஜாதி விலக்கம் போன்ற சங்கடங்களை அடைந்தது குறித்தும் நூலில் காணலாம்

காந்தியடிகள் வழியில் தான் செய்த தொண்டிற்காக ஹரிஜன அய்யங்கார் என்று அழைக்கப்பட்டவர் பி.எஸ்.கிருஷ்ணசுவாமி அய்யங்கார். இவர் மானாமதுரையில் சம்பந்தம் என்ற ஒரு தாழ்த்தப்பட்ட மாணவனை தத்தெடுத்து படிக்க வைத்து ஒரு அரசாங்க அதிகாரியாக்கியவர். இந்த நூலில் அய்யங்கார் செய்த ஹரிஜன சேவைகளையும் இதனால் அடைந்த சங்கடங்கள் மற்றும்  அவமானஙகளை நன்கு விளக்கியுள்ளார். 

குலக்கல்வி முறையை ஆதரித்தவர் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளானவர் ராஜாஜி அவர்கள். அவர் சேலத்தில் காந்தி ஆசிரமம் மூலம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு செய்த சேவையைப் பற்றியும், அவர் சென்னையில் ஆட்சியில் இருந்தபோது நிறைவேற்றிய தாழ்த்தப்பட்டோர் ஆலயப் பிரவேசம் சட்டம் பற்றியும் இந்த நூலில் குறிப்புகள் உள்ளன.   

வாலாஜா - ராணிப் பேட்டையில் தீனபந்து ஆசிரமம் நடத்தியவர் கே.ஆர்.கல்யாணராம ஐயர். இவர் வட ஆர்க்காடு முழுவதும் கிராமம் கிராமமாக ஒரு மிதிவண்டி மூலம் ஹரிஜனங்களின் நல்வாழ்விற்காகப் பிரச்சாரம் செய்தார்; கல்விப் பணியும் செய்தார்.

தமிழ்நாட்டில் காமராஜர் அமைச்சரவையில் காவல்துறை அமைச்சராக இருந்தவர் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த கக்கன் அவர்கள். அவருடைய குருநாதர் மதுரை வக்கீல் ஏ.வைத்தியநாத ஐயர். அந்தக் காலத்தில் நாடார்களுக்கும் தாழ்த்தப்பட்டவர்கள் போலவே கோயிலில் நுழைய அனுமதி இல்லை. இவர் இந்த  இரு சமூக மக்களோடும்  மீனாட்சியம்மன் ஆலயப் பிரவேசம் செய்ய பெரும் முயற்சிகள் எடுத்தவர். இந்த மதுரை ஆலயப் பிரவேசம் குறித்த தகவல்களையும்,  முன்னின்ற மதுரை ஏ.வைத்தியநாத ஐயர் அவர்கள் பற்றியும் ஆசிரியர் சிறப்பாக சொல்லி இருக்கிறார்.

மேலே சொன்னவர்களோடு இன்னும் திருச்சி டாக்டர் சுவாமிநாத சாஸ்திரி போன்ற பல பிராமணர்கள் ஹரிஜன சேவா சங்கத்தில் தங்களை ஐக்கியப்படுத்திக் கொண்டதையும் நூலாசிரியர் தெரிவிக்கிறார்.. திருச்சி டாக்டர் சுவாமிநாத சாஸ்திரி பற்றி நான் எழுதிய பதிவு - திருச்சி டாக்டர் சுவாமிநாத சாஸ்திரி சாலை http://tthamizhelango.blogspot.com/2014/10/blog-post_12.html

மேலும் பலர்:

மேலே சொன்னவர்கள் மட்டுமல்லாது இன்னும் கம்யூனிச இயக்கங்களில் இருந்து கொண்டு தலித் மக்களுக்கு ஆதரவாகப் போராடிய தோழர்கள் பி.ராமமூர்த்தி, எம்.ஆர்.வேங்கடராமன், ஏ.பாலசுப்ரமணியன், பி.சீனிவாசராவ், ஏ.எஸ்.கே.ஐயங்கார்., தொழிற்சங்கத் தலைவர் கே.எஸ்.ஜானகிராமன் ஆகியோர் பற்றியும் குறிப்பிடுகிறார். தான் படித்த பள்ளியில் தனக்கு பல்வேறு வகையிலும் உதவிய அம்பேத்கர் என்ற பிராமண ஆசிரியரின் பெயரை தனது பெயருக்குப் பின்னால் டாக்டர் அம்பேத்கர் சேர்த்துக் கொண்டார் என்பதனை நூலாசிரியர் குறிப்பிடுகிறார். மேலும் அம்பேத்கரின் கல்லூரி படிப்பிற்காக கிருஷ்ணாஜி அர்ஜுன் கேலுஸ்கர் என்ற பிராமணர் பரோடா மன்னரை சந்திக்க உதவியதையும், தனது முதல் மனைவி ரமாபாய் இறந்தவுடன் டாக்டர் சாரதா என்ற பிராமணப் பெண்மணியை அம்பேத்கர் மணந்து கொண்டதையும் குறிப்பிடுகிறார்.

நூலாசிரியரின் விருப்பம்:

நூலின் துவக்கத்தில் நூலாசிரியர் கே.சி. லட்சுமி நாராயணன் அவர்கள், தனது விருப்பமாக,

“தமிழகத்தில் எட்டாப்பட்டிகளாக உள்ள கிராமப் பகுதிகளில் உழன்று கொண்டிருக்கும் தலித்துகளை இருளிலிருந்து, ஒளியை நோக்கி அழைத்து வருவதற்காக உழைக்கும் தலித் தலைவர்கள், எனது இந்த நூலை அவசியம் படிக்க வேண்டும் என்பது என் விருப்பம்

என்று தெரிவிக்கிறார். அவரது நோக்கம் நிறைவேறட்டும்.

நூலின் பெயர்: தலித்துகளும் பிராமணர்களும்
நூலாசிரியர்  : கே.சி.லட்சுமிநாராயணன்
வெளியீடு    : எல்.கே.எம். பப்ளிகேஷன், பழைய எண் 15/4,
               புதிய எண் 33/4, ராமநாதன் தெரு,
               தியாகராய   நகர், சென்னை 600 017 
நூலின் பக்கங்கள்: 284  விலை ரூ. 120/=


(குறிப்பு: இது அரசியல் கட்டுரையோ அல்லது யாருக்காகவும் வக்காலத்து வாங்குவதற்காகவோ எழுதப்பட்ட கட்டுரை அல்ல. நூலாசிரியரின் பிற கட்டுரைகளைப் பற்றி கடுமையான அரசியல் விமர்சனங்களும் உண்டு. எனவே, நூலாசிரியரின் கருத்தெல்லாம் நம் கருத்தல்ல. ஒரு நூல் விமர்சனம் என்ற அளவில் இந்த கட்டுரையைப் பார்க்கும்படி கேட்டுக் கொள்கிறேன்)





Friday 26 December 2014

நான் வாங்கிய ஆன்ட்ராய்ட்.1 போன்



ரொம்ப நாளாகவே எனக்கு ஸ்மார்ட் போன் (SMART PHONE)’ வாங்க வேண்டும் என்று ஆசை. கல்லூரியில் படிக்கும் எனது மகன் ஒன்று வைத்து இருக்கிறார். “ அப்பா, ஸ்மார்ட் போனெல்லாம் உங்களுக்கு ஒத்து வராது. உங்களுடைய பதட்ட குணத்திற்கு, அவசரத்திற்கு, சட்டென்று உங்களால் எடுத்து ஆப்ரேட் பண்ண வராது. சாதாரண செல்போனே போதும் என்று அடிக்கடி சொல்வார். எனக்கோ சிரிப்பாகவும் சில சமயம் கோபமாகவும் இருக்கும். இருந்தாலும் ஸ்மார்ட் போன் மீதுள்ள விருப்பம் குறைந்த பாடில்லை.

நாளுக்கு நாள் மாறி வரும் தொழில் நுட்பம் (TECHNOLOGY) காரணமாக, சந்தையில் புதுப்புது பொருட்கள் வந்து கொண்டே இருக்கின்றன. ஸ்மார்ட் போனும் அவ்வாறே. விலையும் அதிகம். ஏற்கனவே கையில் இருக்கும் செல்போன் வாங்கி இரண்டு ஆண்டுகள்தான் இருக்கும். எனவே ஸ்மார்ட் போனெல்லாம் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று இருந்தேன்.

இப்போது கூகிள் (GOOGLE) நிறுவனத்தார்  ஆன்ட்ராய்ட் (ANDROID) என்னும் தொழில்நுட்ப முறையை கண்டு பிடித்துள்ளனர். இந்த தொழில் நுட்பமுறை உள்ள ஸ்மார்ட் போன்களை, பல செல்போன் நிறுவனங்கள் விற்பனைக்கு விடுத்துள்ளன. எல்லாமே விலை அதிகம்.

மைக்ரோமாக்ஸ் கேன்வாஸ் ஏ.1

அண்மையில் மைக்ரோமாக்ஸ் கேன்வாஸ் ஏ.1 (MICROMAX  CANVAS A.1) என்ற ஸ்மார்ட் போன் விளம்பரம் பார்த்தேன். ஆன்ட்ராய்ட் (ANDROID) தொழில் நுட்பத்துடன் விலை ரூ 6999/= என்று இருந்தது.

படம் (மேலே) மைக்ரோமாக்ஸ் கேன்வாஸ் ஏ.1


படம் (மேலே) போன் இருந்த அட்டைப் பெட்டி

ஆன் லைன் வர்த்தகத்தில் வாங்கினால் இன்னும் குறையும் என்றார்கள். ஆன் லைன் வர்த்தகத்தில் TECHNOLOGY சம்பந்தப்பட்ட பொருட்களை வாங்குவதில் உள்ள, சில சிக்கல்கள் காரணமாக அந்த பக்கம் போகவில்லை.ஆன் லைன் வர்த்தகத்தில் தனக்கு கிடைத்த அனுபவம் ஒன்றினை, அய்யா வே.நடனசபாபதி அவர்கள், தனது வலைப் பதிவினில் அண்மையில் எழுதி இருந்தார். இங்கு எனக்கு தெரிந்த ஒருவரது கடையில் 6900/= க்கு வாங்கினேன்.  குறைந்த விலையில் இருந்த போதிலும் அதிக விலை ஸ்மார்ட் போனில் உள்ள பயன்பாடுகள் உள்ளன. ஒரு நடுத்தரமான ஓட்டலில் சாப்பிடுவதற்கும், ஸ்டார் ஓட்டலில் (அதிகம் பணம் கொடுத்து) சாப்பிடுவதற்கும் என்ன வித்தியாசம்? சுவை (TASTE) எல்லா இடத்திலும் ஒன்றுதான்.

பயன்பாடுகள்:

ஆன்ட்ராய்ட் (ANDROID) ஸ்மார்ட் போன் வாங்கியதும் என்னவோ ஏதோவென்று பயந்தேன். சாதாரண செல்போனிலிருந்து இந்த வகைப் போனிற்கு வந்தவுடன் கொஞ்சம் தடுமாற்றம்தான். நல்லவேளை, அப்படி ஒன்றும் இல்லை. பொதுவாகவே எல்லாவற்றிற்கும் அந்தந்த போனில் அதில் உள்ள சாவிகளை (KEYS) இயக்கத் தெரிந்து கொண்டாலே போதுமானதாகும். எல்லாம் தொடு திரை (TOUCH SCREEN) இயக்கம்தான். எனவே ஸ்மார்ட் போனை இயக்குவதும் சுலபமாகவே உள்ளது. வங்கியில் ஏற்கனவே கம்ப்யூட்டரிலேயே பணியாற்றிய அனுபவம் இருப்பதால் பிரச்சினை ஏதும் இல்லை.

இந்த ஆன்ட்ராய்ட் போனில் தமிழில் படிக்க முடிகிறது. ஆனாலும் தமிழில் எழுத, NHM WRITER போன்ற தமிழ் எழுதி மென்பொருட்களை பயன்படுத்த முடியாது போலிருக்கிறது. நாம் ஏதேனும் தரவிறக்கம் (DOWNLOAD) செய்யப் போக, போன் செயல்படாமல் போகவும் வாய்ப்புகள் உண்டு. இதுபற்றிய விவரம் தெரிந்தவர்கள் அல்லது ஆன்ட்ராய்ட் போன் வைத்திருக்கும் வலைப்பதிவர்கள், இங்கே சொன்னால் எல்லோருக்கும் பயன்படும் சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்கள் போனில் சில விவரங்கள் சொன்னார். முயன்று பார்க்க வேண்டும்.

யூ டியூப்பில் (YOUTUBE) தமிழில் விமர்சனம் (TAMIL REVIEW) ஒன்றை வீடியோவில் காண கீழே உள்ள இணையதள முகவரியை க்ளிக் (CLICK) செய்யவும்.


MICROMAX  CANVAS A.1 – ஸ்மார்ட்போன் பற்றிய அனைத்து விவரங்களையும் http://www.micromaxinfo.com/canvasa1 என்ற இணையதளத்தில் காணலாம். இந்த இணையதளத்தில் ஒரு PDF பைலை இதில் இணைத்துள்ளார்கள்.

சில முக்கிய ஐகான்கள் (ICON) அல்லது சாவிகள் (KEYS)


ஸ்மார்ட் போனை ஆன் செய்தவுடன் மற்ற் APPS – களுக்கு செல்ல இந்த ஐகானைத் (ICON) தொடவும்.

இதற்கு முன்னர் பார்த்த திரைகளைக் (SCREENS) காணவும் அவற்றை நீக்கவும் இந்த ஐகானைத் (ICON) தொடவும்

மீண்டும் மீண்டும், அடிக்கடி  HOME SCREEN செல்ல இந்த ஐகானைத் (ICON) தொடவும்.

இதற்கு முன்னர் பார்த்த திரைகளைக் (SCREENS) காண இந்த ஐகானைத் (ICON) தொடவும்.

                               (ALL PICTURES THANKS TO “GOOGLE”)




Tuesday 23 December 2014

என்னே கம்ப்யூட்டருக்கு வந்த சோதனை?



திருவிளையாடல் படத்தில் நடிகர் பாலையா சொல்லும் ஒரு வசனம். “என்னே மதுரைக்கு வந்த சோதனை?என்பதாகும். அதே போன்று எங்கள் வீட்டு கம்ப்யூட்டருக்கும் சில சோதனைகள். என்னே கம்ப்யூட்டருக்கு வந்த சோதனை?. சில மாதங்களாகவே வீட்டிலுள்ள கம்யூட்டர் ரொம்பவும் மெதுவாகவே இயங்கிக் கொண்டு இருந்தது. நானும் கம்ப்யூட்டரில் DISK CLEANUP, SYSTOM RESTORE – என்று எனக்கு தெரிந்த வித்தைகளை எல்லாம் காட்டி வந்தேன். அது எதற்கும் மசியவில்லை. எங்கள் வீட்டு கம்யூட்டரை அடிக்கடி வந்து பழுது நீக்கும், சர்வீஸ் சென்டர்காரர்கள் புதிதாக ஒன்று வாங்கும்படி சொன்னார்கள். எனது மகனும் அவ்வாறே புதிதாக ஒன்றை வாங்கி விடலாம்என்றே சொன்னார்.

நானும் ஒரு சராசரி இந்தியன்

பொதுவாகவே இந்தியர்களுக்கு ஒரு நல்ல குணம். பொருட்களை உபயோகப் படுத்தும் விஷயத்தில் இழுக்க இழுக்க இறுதிவரை இன்பம் காண்பவர்கள். ஜப்பானியர்,அமெரிக்கர் போன்று, இந்த பயன்படுத்து / தூக்கியெறி (USE  & THROW)  என்ற சித்தாந்தத்தை கடை பிடிக்க விரும்பாதவர்கள்.. என்ன ரிப்பேர் ஆனாலும், ஸ்பேர் பார்ட்ஸ் (SPARE PARTS) வாங்கிப் போட்டு ஓட்ட பார்ப்பார்கள். சிலசமயம் ஒவ்வொரு முறையும் செய்யும் ரிப்பேர் செலவை மொத்தமாக கூட்டிப் பார்த்தால், அந்த பொருளின் வாங்கிய விலையை விட அதிகம் போய்விடும்.

இப்போதுதான் ஸ்மார்ட் போன் ஒன்று வாங்கினேன். மேலும் எதிர்பாராத செலவுகள்.  எனவே இப்போதைக்கு வேண்டாம் என்று கம்ப்யூட்டர் வாங்கும் விஷயத்தை தள்ளிப் போட்டேன். நானும் ஒரு சராசரி இந்தியன் தானே. இந்த கொள்கை காரணமாக அடிக்கடி செலவு.

NHM தமிழ் எழுதியை மீட்டேன்

ஆரம்பத்தில் தமிழ்வலையுலகில் கருத்துரை எழுதுவதற்கு இகலப்பை (‘ikalappai) என்னும் தமிழ் எழுதியை பயன்படுத்தினேன். சில மாதங்கள் கழித்து அது எனது கம்யூட்டரில் டக்கப்போர்  செய்ய ஆரம்பித்து காணாமலே போய்விட்டது. அப்புறம் ஒரு வழியாக NHM Writer  பற்றி தெரிந்து கொண்டு அதன் தமிழ் எழுதியை தரவிறக்கம் செய்து, ஐந்து வருடங்களுக்கும் மேலாக பயன்படுத்தி வருகிறேன். இதற்கும் என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. இதுவும் சென்ற மாதம் சில நாட்கள் டக்கப்போர்செய்து கம்ப்யூட்டரை விட்டு காணாமல் போனது. சரி, என்று வழக்கம் போல் கூகிள் (GOOGLE) உதவியுடன் NHM Writer 2.0 என்ற புதிய பதிப்பை (New version) தரவிறக்கம் செய்தேன். ஆனால் இது கடைசிவரை எனது கம்ப்யூட்டர் திரைக்கு வரவில்லை. எனது மகன் “ நமது கம்ப்யூட்டர் வாங்கி ரொம்ப நாள் ஆகி விட்டது. அதனால் அது புதியவற்றை (LATEST DOWNLOADS)  ஏற்றுக் கொள்ளாது. ஒன்று கம்யூட்டரை மாற்றுங்கள். இல்லையேல் பழைய பதிப்பையே (Old Version) வைத்துக் கொள்ளுங்கள்என்றார். (அவருக்கென்று தனியே லேப் டாப் இருப்பதால், அவருக்கு பிரச்சினை இல்லை.) எனக்கு மின்னல் வெட்டாய் அப்போதுதான் “ AUTOMATIC DOWNLOAD “ காரணமாக, புதியவை வந்து நமது பழைய கம்ப்யூட்டரில் பழைய தமிழ் எழுதிகளை காலியாக்கி விட்டன, என்ற ஞானோதயம் வந்தது. உடனே “ AUTOMATIC DOWNLOAD “ இற்கு வேண்டாம் (NO) சொல்லி விட்டு NHM Tamil Writer இன் பழைய பதிப்பையே (NHM Writer 1.5.1.1 Beta) தரவிறக்கம் செய்தேன். இப்போது எல்லாம் சரியாகி விட்டது. இப்போது வலைப்பக்கம் எனக்கு எங்கும் தமிழ்; எதிலும் தமிழ் என்று மீண்டும் வந்து விட்டேன்.

BSNL நெட்நொர்க் காலி

தமிழ் எழுதி பிரச்சினை முடிந்த கையோடு அடுத்த பிரச்சினை BSNL BROADBAND வடிவில் வந்தது. நாங்கள் குடியிருக்கும் பகுதிக்கு அடுத்த பகுதியில், இரண்டு வாரத்திற்கு முன்னர், மாநகர கார்ப்பரேசன் ஊழியர்கள், குடிநீர் பதிப்பதற்காக சாலைகளில் பொக்ளின் உதவியோடு பள்ளங்கள் தோண்டினார்கள். இதில் B.S.N.L நெட்வொர்க் முழுதும் காலி. எனவே எனது மகனிடம் லேப்டேப்பில் இருக்கும் TATA நெட்வொர்க்கை அவ்வப்போது இரவலாக வாங்கி பயன்படுத்த வேண்டி இருந்தது. இதனால் வலைப்பக்கம் அதிகம் வர முடியாமலும், கருத்துரைகள் அதிகம் எழுத இயலாமலும் போய்விட்டது. நேற்று மாலைதான் BSNL ஊழியர்கள் சரி செய்தனர்.

திரையின் ஆட்டம்

வரிசையில் வந்த அடுத்த பிரச்சினை இது. கடந்த மூன்று நாட்களாக  கம்ப்யூட்டர் மானிட்டரின் திரை ஆடிக் கொண்டிருந்தது.

நான் வங்கிப் பணியில் இருந்தபோது, இது மாதிரி ஆட்டம் போடும் கம்ப்யூட்டர் மானிட்டரின் தலையிலும், பக்கவாட்டிலும் என்னடா கண்ணுஎன்று செல்லமாக தட்டுவோம். சரியாகி விடும். எல்லாம் மாலைநேரம் வரைதான். சிலசமயம் சில ரொம்பவே அடம் பிடிக்கும். அப்புறம் சர்வீஸ் என்ஜீனியர்கள் வந்து வேறு ஒன்றை வைத்து விடுவார்கள்.

எங்கள் வீட்டு கம்ப்யூட்டரை சரி பார்க்கும்  சர்வீஸ் சென்டர்காரர்களும் வேறு மானிட்டரை வைக்க வேண்டும் என்றார்கள். நான் முன்பு இருந்த COMPAQ  கம்பெனி மானிட்டரையே வைக்கச் சொன்னேன். அவர்களோ DELL 21.5 மானிட்டர்தான் தங்களிடம் கிடைக்கும் என்று சொல்லி அதனை வைத்து விட்டார்கள் விட்டாலாச்சாரியா படத்தில் வருவது போல, இப்போது எங்கள் வீட்டு கம்ப்யூட்டரில் DELL மானிட்டரும் COMPAQ – CPU வும் உள்ளன. கம்ப்யூட்டரும் வேகமாக செயல்படுகிறது. எல்லாம் நன்மைக்கே. கடந்த இரண்டு வார காலமாக விட்டுப்போன கம்ப்யூட்டர் பணிகளை முடிக்க வேண்டும்.

ஒரு வழியாக கம்ப்யூட்டருக்கு வந்த எல்லா பிரச்சினைகளும்  இப்போதைக்கு முடிந்துள்ளன. அலைகள் ஓய்வதில்லை. அடுத்து என்ன? (What is next?) 


                    (ALL PICTURES THANKS TO GOOGLE)