நான் ஒரு மூத்த குடிமகன் (Senior Citizen). எனவே தினமும் காலையில்
எல்லா வேலைகளையும் முடித்து விட்டு, எங்கள் வீட்டு கம்ப்யூட்டர் முன்பு உட்கார்ந்து
இண்டர்நெட்டை பார்க்கத் தொடங்கினால், முதலில் பார்ப்பது கூகிள் (Google); அப்புறம்
தமிழ்மணம், மின்னஞ்சல் …. … என்று போகும். அதிலும் நம்ப தமிழ்மணத்தை தினமும் பார்த்து
விட்டுத்தான் எழுந்து போவேன். காரணம் இன்றைக்கு நமது வலைப்பதிவு நண்பர்கள் என்ன சொல்லி
இருக்கிறார்கள், நாட்டு நடப்பைப் பற்றி இன்றைய சூடான விமர்சனம் என்ற ஆவல்தான். தமிழ்மணம்
சிறப்பைப் பற்றியும், அது ஏன் எல்லோராலும் விரும்பப் படுகிறது என்பதனையும் இங்கு விவரித்துச்
சொல்ல வேண்டியதில்லை.
திடீர் சுணக்கமும் பராமரிப்பும்
சில மாதங்களாகவே தமிழ்மணத்தில் ஒரு சுணக்கம். தளத்தைப் படிக்க உட்கார்ந்தால்,
அது திறக்கவே ரொம்பநேரம் ஆகி விடும். நண்பர்களின் பதிவைப் படித்து விட்டு, ஓட்டுப்
பட்டையைத் திறந்து ஓட்டு போடுவதற்குள் , வேர்ட்பிரஸ்சில் கமெண்ட் எழுதும் கணக்காக,
போதும் போதும் என்று ஆகி விடும். திடீரென்று ஒருநாள் தமிழ்மணத்தில் நுழையவே முடியவில்லை.
சம்பந்தா சம்பந்தம் இன்றி ஒரு தளம் வரும். அப்புறம் ஒருநாள்,
// தளம் பராமரிப்பு வேலை தற்பொழுது
நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தளத்தின் சேவையில் ஏற்பட்டுள்ள தடங்கலுக்கு வருந்துகிறோம்.
விரைவில் தமிழ்மணம்/திரைமணம் தளங்கள் செயல்பட தொடங்கும் //
என்று ஒரு அறிவிப்பு வந்தது. அப்பாடி என்று ஒருவித மகிழ்ச்சி.
நம்ப புலவர் சா.இராமானுசம்
அய்யா அவர்கள் கூட, புலவர் கவிதைகள் என்ற தனது
வலைத்தளத்தில்,
எப்போது
நீவருவாய் தமிழ்மணமே-இங்கே
எல்லோரும் எதிர்பார்க்க தமிழ்மணமே
ஒப்பேது இல்லையது தமிழ்மணமே-பலரும்
ஓயாத கவலைமிக தமிழ்மணமே
தப்பேது
தடங்கலுக்கு தமிழ்மணமே-ஏற்ற
தடங்கண்டு சரிசெய்வாய் தமிழ்மணமே
செப்பேது
உன்சேவை தமிழ்மணமே-மேலும்
செம்மைமிக வந்திடுவாய் தமிழ்மணமே
என்று ( http://www.pulavarkural.info/2018/01/blog-post_22.html
) எழுதினார்.
புதிய பட்டியல்
ஒருவழியாக தளம் பராமரிப்பிற்குப் பின்னர், தமிழ்மணம் மீண்டும் மின்னத்
தொடங்கி விட்டது. ஆனாலும் பாவம், இந்த தமிழ்மணம் ரேங்க்தான், இப்போது பலரையும் (என்னையும் சேர்த்துதான்) உசுப்பி இருக்கும்.
என்னதான் வெளியில் பலரும் நான் தமிழ்மணம் ரேங்க் பட்டியலைப் பற்றி கவலைப் படுவதில்லை
என்று உதார் விட்டாலும், ஒவ்வொருவரும் அவரவர் ரேங்க் என்ன என்று எட்டிப் பார்க்கத்தான்
செய்கின்றனர். தமிழ்மணம் ரேங்கிற்காக அடிதடியே நடந்து இருக்கிறது என்றால் சொல்ல வேண்டியதில்லை.
// தமிழ் வலைப்பதிவுகளின் தர வரிசை
(Traffic Rank) கடந்த மூன்று மாதங்களில் ஒவ்வொரு பதிவும் பெறும் பார்வைகளை (ஹிட்ஸ்)
முதன்மையாகக் கொண்டு வெளியிடப்படுகிறது. மறுமொழிகள், வாசகர் பரிந்துரை வாக்குகள் போன்றவையும்
ஒரு காரணியாக இருக்கும் //
என்று தமிழ்மணம் சொன்னாலும், இப்போது எல்லாமே தலைகீழாக போய் விட்டது.
என்ன கணக்கு, ஏன் எப்படி இப்படி ஆனது என்று
தெரியவில்லை.
சென்ற ஆண்டு (2017) கடைசி அல்லது இந்த வருடம் (2018) முதல் வாரத்தில்
முதல் ரேங்கில் இருந்த ‘எங்கள் ப்ளாக்’ இப்போது 20 ஆவது ரேங்கில் இருக்கிறார்கள்..
புலவர் அய்யா அவர்கள் 98 இல் இருக்கிறார். எண் 5 இல் இருந்த G.M.B அவர்கள் இப்போது
266 ஆவது ரேங்க். எனது தளத்தினை எடுத்துக் கொண்டால், 9 அல்லது 12 என்று மாறி மாறி ரேங்கில்
இருந்த நான் (இன்று) இப்போது 210 ஆவது ரேங்க்கிற்கு வந்து விட்டேன்..
மறுபடியும் முதலில் இருந்து
இருந்த போதும், இப்போதுள்ள தமிழ்மணம் பட்டியலில், பழைய பதிவர்கள்
பலரையும் பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சிதான்.
எனவே தமிழ்மணம் ரேங்க் பற்றி கவலைப் படுபவர்கள், மறுபடியும் முதலில்
இருந்து தொடங்க வேண்டும் அல்லது இயல்பாகவே பழைய நிலைக்கு தமிழ்மணம் வந்துவிடும் என்று
எப்போதும் போல் எழுத வேண்டும். மறுபடியும் ஒரு வருடம் கழித்து, பராமரிப்பு என்றால்,
ரேங்க் கணக்கு அவ்வளவுதான். நடிகர் வடிவேலு காமெடி ஒன்றில் சொல்லும் “மறுபடியும்
சியர்ஸா?” என்ற வசனம்தான் நினைவுக்கு வந்தது.