Wednesday 27 July 2016

வைசாலி செல்வம் - கேள்வி – பதில் பதிவு



சகோதரி வைசாலி செல்வம் அவர்கள் சிறந்த வலைப்பதிவர் மற்றும் கே.எஸ்.ஆர். மகளிர் கலை அறிவியல் கல்லூரியின் ( திருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டம்) மாணவியும் ஆவார். இந்த கல்லூரியின் கணித்தமிழ் பேரவை உருவாகிட முக்கிய பணி ஆற்றிய, பேராசிரியர் முனைவர் இரா.குணசீலன் அவர்கள் இவரது வழிகாட்டி ஆவார்.
அண்மையில் வைசாலி செல்வம் அவர்கள் எனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பி இருந்தார். அதில் சில கேள்விகள் கேட்டு பதில் அனுப்பும்படி சொல்லி இருந்தார். நானும், ” அன்புள்ள சகோதரி செ.வைசாலி அவர்களுக்கு வணக்கம். நலம். தாங்கள் கேட்டுக் கொண்டபடி, மேலே சொல்லப்பட்ட கேள்விகளுக்கான எனது பதில்களை, எனது அனுபவத்தில், எனக்குத் தெரிந்தவரை எழுதியுள்ளேன்” – என்று எனது பதில்களை அனுப்பி வைத்தேன். அந்த கேள்வி – பதில் பகுதியை ”எனது ஐயங்களுடன் தி.தமிழ் இளங்கோ ஐயா...!! - என்ற தலைப்பினில்,  http://ksrcasw.blogspot.in/2016/06/blog-post_10.html தனது கல்லூரி வலைத்தளத்தில்(07.06.2016),பதிவாக வெளியிட்டார். அந்த பதிவினில் வந்த கேள்வி – பதில் பகுதியை இங்கு மீண்டும் வெளியிட்டுள்ளேன். 

                                                 +++++++++++++++++++++++ 


1.வங்கி பணிக்கான தேர்வுக்கு எப்படி  தயாராவது..?

எங்களது காலத்தில் அரசாங்க வேலைக்குமாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் (District Employment Exchange Office)” பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்த அலுவலகத்திலிருந்துதான் வங்கித் தேர்வுக்கான அழைப்பு எனக்கு வந்து எழுதினேன். அப்போதெல்லாம் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மட்டுமே. தேர்வு முறைகளும் பொதுவானவை. அப்புறம் BSRB எனப்படும் Banking Service Recruitment Board நடத்திய தேர்வுகள் மூலம் ஊழியர்களைத் தேர்வு செய்தார்கள். இப்போது கம்ப்யூட்டர், இண்டர்நெட், ஆன்லைன் என்று தேர்வு முறையே மாறிவிட்டது. மேலும் எல்லா வேலை வாய்ப்பு தேர்வுகளுக்கும் இப்போது பயிற்சி வகுப்புகள் நடத்தப் படுகின்றன. பொதுத்துறை வங்கிகளும் வேலை வாய்ப்பு அலுவலகங்களும் இலவசமாகவே பயிற்சிகள் தருகின்றன.   
இது சம்பந்தமாக நான் எனது வலைத்தளத்தில் எழுதிய பதிவு இது:

வேலை வாய்ப்பு தேர்வுகளும் பயிற்சி வகுப்புகளும் http://tthamizhelango.blogspot.com/2015/09/blog-post_5.html
நமது வலைப்பதிவர் சகோதரி அபயா அருணா (நினைவுகள்) அவர்கள் வங்கியில் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். வங்கித் தேர்வு எழுதும் மாணாக்கர்களுக்கு வேண்டி  சில இணையதள இணைப்புகள் உள்ள வலைப்பதிவு ஒன்றை தனது வலைத்தளத்தில் http://abayaaruna.blogspot.in/2015/09/blog-post_19.html  எழுதியுள்ளார்.. சென்று பார்க்கவும்.

2.விவசாயத்திற்கும்,கல்விக்கும் பெற்ற கடன் தொகையை தள்ளுபடி செய்வதால் வங்கிக்கு எவ்வித நட்டம் ஏற்படும்..?

கடன் தள்ளுபடி என்பது, அரசு கொள்கை சார்ந்த முடிவு என்பதால், இந்த தொகை அரசாங்கக் கணக்கிலிருந்து வங்கிகளுக்கு ஒரு Paper Transaction மூலம் வரவு வைக்கப்பட்டு விடும். வங்கிகளுக்கு இதனால் பெரும் நட்டமில்லை. ஆனாலும் லாப விழுக்காடு குறையும்.

3.வங்கியில் எதனை அடிப்படையாகக் கொண்டு வட்டி நிர்ணயிக்கப்படுகிறது..?

ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு மைய வங்கி உண்டு. நமது நாட்டிற்கு ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியா, நாட்டின் பொருளாதார நிலைமை, குறிப்பாக பணவீக்கம் போன்றவற்றின் அடிப்படையில் சில  வழிகாட்டுதல்களைச் செய்கிறது. இதில் வட்டி நிர்ணயமும் அடங்கும். கீழே உள்ள இணையதளத்தில் இன்னும் தகவல்கள் உண்டு.

Who sets the fixed deposit rate in India?                    http://www.keralabanking.com/who-sets-the-fixed-deposit-rate-in-india
4.ரிசர்வ் வங்கியின் கீழ் இயங்கும் வங்கிகளுக்கும்,தனியார்
வங்கிகளுக்கும் என்ன வேறுபாடுகள்..??

இந்தியாவில் பொதுத்துறை வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் என்று எல்லா வங்கிகளும் ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியாவின் கட்டுப்பாட்டின் கீழ்தான் இயங்குகின்றன.

பொதுத்துறை வங்கிகளின் லாப நஷ்டம் என்பது அரசாங்கத்தின் (பொது மக்களின்) பணம் ஆகும். அரசாங்கம் செயல்படுத்தும் நலத் திட்டங்கள் யாவும் பொதுத்துறை வங்கிகளின் மூலம்தான் செயல்படுத்தப் படுகின்றன

5.
இன்றைய இளைய சமுதாயத்தின் முன்னேற்றங்கள் குறித்த தங்களின் கருத்து என்ன..?

முதலில் தன்னலம்; அப்புறம் குடும்ப நலன்; அப்புறம் ஊர் நலன். அப்புறம் நாட்டு நலன், உலக நலன் என்று விரிகின்றது. இதனைத்தான் வீடு, வாசல், உலகம் என்றார்கள். எனவே நாமும் வாழ்ந்து மற்றவர்களையும் வாழ வைப்போம். மனிதனை மனிதனாக நினைப்போம்.

எனது ஐயங்களுக்கு விடையளித்த தி.தமிழ் இளங்கோ ஐயா அவர்களுக்கு எனது அன்பு கலந்த நன்றிகள்

(நன்றி: சகோதரி வைசாலி செல்வம் மற்றும் கே.எஸ்.ஆர். மகளிர் கலை அறிவியல் கல்லூரி ( திருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டம்)

தொடர்புடைய மற்ற பதிவுகள்:

எனது ஐயங்களுடன் முத்து நிலவன் ஐயா..!!

எனது ஐயங்களுடன் மீரா.செல்வக்குமார் ஐயா..!!

Thursday 21 July 2016

மகாத்மா காந்தியைக் கொன்றது யார்?




நேற்று (20.07.16) காலை வழக்கம் போல தினசரிகளைப் படித்துக் கொண்டு இருந்தேன். ஒரு அரசியல் செய்தி எனது கவனத்தை ஈர்த்தது. 

// ‘மகாத்மா காந்தியை கொன்றது ஆர்.எஸ்.எஸ்.’ என அவதூறாக பேசிய விவகாரத்தில், வருத்தம் தெரிவிக்காவிட்டால், வழக்கு விசாரணையை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும் என்று ராகுல் காந்தியை சுப்ரீம் கோர்ட்டு கண்டித்தது. ….. …. நீதிபதி தீபக் மிஸ்ரா, ‘‘பஞ்சாப்–அரியானா ஐகோர்ட்டு ஆவணத்தில் நாதுராம் கோட்சே ஆர்.எஸ்.எஸ். தொண்டர் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. காந்தியை கோட்சே கொலை செய்தார் என்பதற்கும், காந்தியை ஆர்.எஸ்.எஸ். கொலை செய்தது என்பதற்கும் வித்தியாசங்கள் உண்டு. நீங்கள் (ராகுல் காந்தி) ஒருபடி மேலே போய்விட்டீர்கள். நீங்கள் பொத்தாம்பொதுவாக கூறக்கூடாது’’ என கண்டித்தார்.//
-    (நன்றி : தினத்தந்தி 20.07.2016)

கோர்ட் நடவடிக்கையைப் பற்றி விமர்சனம் செய்வது கூடாது என்பதால், இங்கு இதுபற்றி ஒன்றும் சொல்வதற்கு இல்லை. எனினும் மகாத்மா காந்தி கொலை சம்பந்தமாக அன்று வந்த செய்திகளையும், இன்றைய நாட்டு நடப்பையும் ஒப்பிட்டு பார்ப்பதில் தவறில்லை என்றே நினைக்கிறேன்.

அன்றைய செய்திகள்:

மகாத்மா காந்தி சுட்டு கொல்லப்பட்டபோது வந்த செய்திகள் இவை.
                                                                                                                                                         

// இருபதாம் நூற்றாண்டில் அகில உலகத்தையும் திடுக்கிடச் செய்த நிகழ்ச்சி மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டதாகும், சுதந்திரம் பெற்ற 5 மாதத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார். காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சே, சதித்திட்டம் தீட்டிய ஆப்தே உள்பட மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டனர் //

மேலும் விவரங்களுக்கு படிக்கவும்- கீழே உள்ள இணையதள முகவரியை சொடுக்கவும் :மகாத்மா - கொல்லப்பட்ட வரலாறு- http://kannalattuthingaasaiya.blogspot.in/2012/02/blog-post_222.html 
.
காந்தி தேசமே காவல் இல்லையா?

இன்றைய காலகட்டத்தில், எல்லாவற்றையும் பார்க்கும்போது, நான் சிகப்பு மனிதன் என்ற படத்தில் வரும் ’காந்தி தேசமே காவல் இல்லையா?; என்று தொடங்கும் பாடல்தான் நினைவுக்கு வந்தது.
                                                                                                                                                  
1985 இல் வெளிவந்த இந்த படத்தில் ரஜினிகாந்த் – அம்பிகா சத்தியராஜ் ஆகியோர் நடித்து. இருக்கிற்றர்கள். டைரக்‌ஷன் – எஸ்.ஏ.சந்திரசேகர். இந்த பாடலை எழுதியவர் கவிஞர் வைரமுத்து. இசை – இளையராஜா. பாடியவர்கள் எஸ்.பி. பாலசுப்ரமணியன் குழுவினர்.கீழே பாடல் வரிகள்.

காந்தி தேசமே காவல் இல்லையா
நீதிமன்றமே நியாயம் இல்லையா
பதவியின் சிறைகளில் –
பாரதமாதா பரிதவிக்கிறாள்

சுதந்திரதேவி சுயநலப் புலிகளின்
துணி துவைக்கிறாள்
துணி துவைக்கிறாள்
தாயை மீட்க வா! தர்மம் காக்க வா!

காந்தியும் நேருவும் வாங்கிய சுதந்திரம்
ஒருசிலர் உரிமையில்லை
வளமிங்கு குறைவில்லை
ஏழைக்கு நிறைவில்லை
வறுமைக்கு வறுமையில்லை
வறுமைக்கு வறுமையில்லை

சாலையில் தனிமையில்
அழகிய இளமையில்
நடக்கவும் முடியவில்லை
நடக்கவும் முடியவில்லை
இளமையும் கலைந்தது
இருபுறம் நரைத்தது
வேலையும் கிடைக்கவில்லை
வேலையும் கிடைக்கவில்லை

ஜாதி என்கின்ற
மாயப் பேயொன்று
ரத்தம் கேட்கின்றதே
தர்மம் தப்பித்துக்
கள்வர் கோட்டைக்குள்
தஞ்சம் கேட்கின்றதே

இந்திய தேசத்தைக் காக்கின்ற வீரர்கள்
எல்லையில் நிறைந்திருப்பார்
எல்லையில் நிறைந்திருப்பார்
நாட்டினைக் காசுக்கு
காட்டியே கொடுப்பவர்
ஊருக்குள் ஒளிந்திருப்பார்
ஊருக்குள் ஒளிந்திருப்பார்

அகிம்சையைப் போதித்த தேசத்தில்
ரத்தத்தின் ஆறுகள் ஓடுதடா
ஆறுகள் ஓடுதடா
ஏழையின் கூரையில் ஏற்றிய தீக்கனல்
வான்வரை ஏறுதடா வான்வரை ஏறுதடா

விடுதலை வாங்க – அன்று நாம் தந்த
விலைகள்தான் கொஞ்சமா?
வேலியே இங்கு பயிரை மேய்கின்ற
நிலைமைதான் மாறுமா?

(பாடலில் உள்ள வரிகளுக்காகவே இந்த பாடலை இங்கு மேற்கோளாகக் காட்டி உள்ளேன். பாடலைக் கண்டு கேட்க கீழே உள்ள திரையை சொடுக்குங்கள். வீடியோ நன்றி SEPL)
                                  
                            (ALL  PICTURES COURTESY: GOOGLE IMAGES)