Showing posts with label ஒப்பாரி. Show all posts
Showing posts with label ஒப்பாரி. Show all posts

Tuesday, 3 February 2015

ஒப்பாரிப் பாடல்கள்



திருச்சி டவுன் கடைவீதி பக்கம் போய் ரொம்ப நாளாகி விட்டது. அண்மையில் டவுன் பக்கம் போயிருந்த போது, சத்திரம் பஸ் நிலையம் அருகே (நேஷனல் ஹைஸ்கூல் வாசலில்) சினிமா பாட்டு, வசன புஸ்தகங்கள் விற்கும் பெரியவரிடம் “ என்னங்க நான் போன மாசம் எடுத்து வைக்கச் சொன்ன ரத்தக்கண்ணீர் வசன புத்தகம் வந்ததா? “ என்று கேட்டேன். அவர் இல்லைஎன்றார். அவரிடம்தான், முன்பு சில பழைய சினிமா பாட்டு, வசன புஸ்தகங்கள் வாங்கினேன். சரி, வந்தததற்கு அவரிடம் வேறு ஏதாவது வாங்குவோம் என்று, அவரது  தரைக் கடையை ஒரு பார்வை பார்த்ததில் “நவீன ஒப்பாரி கோர்வைஎன்ற புத்தகம் தென்பட்டது. வாங்கினேன்.

ஒப்பாரி வைத்தல்:

ஒருவர் இறந்து போனால் அவரது நெருங்கிய உறவினர்கள், அவரது உடலைச் சுற்றி ஒப்பாரி வைத்து அழுவது வழக்கம். அதிலும் கிராமத்தில் வயதான பாட்டிமார்கள் அழும்போது தனக்குத் தெரிந்த அல்லது பழைய பாடல்களை ஒப்பாரியாக சத்தமிட்டு பாடுவார்கள். இன்னும் சிலர் அவர்களாகவே இட்டுக் கட்டி பாடுவதும் உண்டு. இப்படி பாடுபவர்களை உறவினர்களே பாடச் சொல்லி கேட்டுக் கொள்வார்கள். அதே போல இந்த பாடல்களை கூலிக்கு பாடுபவர்களும் உண்டு. அவர்கள் மார்பிலே அடித்துக் கொண்டு பாடுவார்கள். இவர்களை “கூலிக்கு மாரடிப்பவர்கள்?என்று சொல்வார்கள். அப்போதெல்லாம் இந்த வேலையை, கூட்டமாக வாழும் ஒருசில அரவாணிகள் செய்தார்கள். (இப்போது இந்த வழக்கம் அவ்வளவாக இல்லை; படிப்படியாக குறைந்து வருகிறது) ஆனாலும் அத்தனை பேருக்கும், சொல்லி வைத்தாற்போல மளமள என்று கண்ணீர் வருவதைப் பார்க்கும் போது ஆச்சரியமாகவே இருக்கும்.

கூலிக்கு மாரடிப்பதை பற்றி ஒரு கிராமப்புற கதை ஒன்று உண்டு. ஒரு இழவு வீடு. எல்லோரும் அழுது கொண்டு இருக்கிறார்கள். அந்த வீட்டில் பாகற்காய் பந்தல் ஒன்று இருக்கிறது. பந்தலில் பாவற்காய்கள். அங்கே கூலிக்கு மாரடித்து அழ வந்த, இரண்டு பெண்டுகளில் ஒருவள் அழுகையோடு அழுகையாக பாடும்போது,

பந்தலிலே பாவக்கா
பந்தலிலே பாவக்கா

என்று குறிப்பாக, இன்னொருத்திக்கு தெரிவிக்கிறாள்.. அவளும்,

போகையிலே பாத்துக்குவோம்
போகையிலே பாத்துக்குவோம்

என்று பதில் பாட்டு பாடுகிறாள். இதனைக் கேட்டதும், வீட்டுக்கார அம்மாள்,

அது விதைக்கல்லோ விட்டிருக்கு
அது விதைக்கல்லோ விட்டிருக்கு

என்று எதிர்பாட்டு பாடினாளாம். ( இந்த கதையை அறிஞர் அண்ணா அவர்கள் தனது கம்பரசம் என்ற நூலில் மேற்கோளாக கூறியுள்ளார். அதன் சுருக்கம்தான் இங்கே தரப்பட்டுள்ளது)

இன்னும் சில ஊர்களில், ரொம்பவும் வயதானவர்கள் இறந்தால், மைக் செட் கட்டி, இரவு நேரம் டியூப் லைட் வெளிச்சத்தில் விடியவிடியவும் காலையிலும்,  ஒப்பாரி வைப்பார்கள். இன்னும் சிலர், சவுண்ட் சர்வீஸ் வைத்து, கிராமபோன் (  ) இசைத்தட்டு மூலம் ஏழூருக்கும் கேட்க ஒலிபரப்பிய நாட்களும் நினைவுக்கு வருகின்றன.

நவீன ஒப்பாரி கோர்வை

அன்றைய காலகட்டத்தில், ரத்ன நாயக்கர் & சன்ஸ் மற்றும் ஸ்ரீமகள் கம்பெனி வெளியிட்ட பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதை, பஞ்ச தந்திரக் கதைகள், அல்லியரசாணி மாலை போன்ற கதை நூல்களை வாசித்து இருக்கிறேன். இன்றைக்கு அவை கிடைக்கின்றனவா என்று தெரியவில்லை. ஆனாலும் ஒரு சிலர் அந்த பழைய பாணியில் வெளியிடும் ஒருசில கதைகள், பாட்டு புஸ்தகங்கள் இன்றும் சாலையோர கடைகளில் கிடைக்கின்றன.

நான் இப்போது, வாங்கியது ஸ்ரீ தனலட்சுமி புத்தக நிலையம், சென்னை வெளியிட்ட “நவீன ஒப்பாரி கோர்வைஎன்ற நூலாகும். உள்ளடக்கமாக பஞ்ச கல்யாணி ஒப்பாரி, சிங்கப்பூர் ஒப்பாரி, நவரச ஒப்பாரி என்று நிறைய ஒப்பாரி பாடல்கள். (LAMENTATIONS)  தகப்பனாருக்குப் புலம்பல், தாயாருக்குப் புலம்பல், புருஷனுக்கு புலம்பல், அண்ணனுக்குப் புலம்பல் என்று நூல் முழுக்க புலம்பல் மயம்.

பாடல்களை எழுதியவர் பூர்வீகம் ஒன்றும் தெரியவில்லை. நூலின் இடையிடையே, ஜெகமெங்கும் புகழ்பெற்ற இன்பகான கீதமணி, திரிசிரபுரம் ஸ்ரீமான் ஆர்டி.தங்கமுத்து தாஸ் அவர்கள் இயற்றிய என்று பாடலாசிரியர் புகழ் பாடக் காணலாம். அவர் எழுதிய சில வரிகள் இங்கே.

தகப்பனாருக்கு புலம்பல் இது _

வண்ணமணி தந்திமரம்
என்னைப் பெற்ற அப்பா
வார்த்தை மிக பேசுமரம்
என்னை ஈன்றவர் துரை
மாண்டீர் என்று
எனக்கு வார்த்தை வந்து கேட்டவுடன்
என்னைக் கொண்ட வல்லவரை முன்னே விட்டு
வந்து சேரும் முன்னாலே
நீங்கள் பெற்ர பெரியமகள் நின்றழுதால்
பேசாது வன்னிமரம்
நடுமகள் நின்றழுதால்
நடுங்காது வன்னிமரம்
கடமகள் நின்றழுதால்
கலங்காது வன்னிமரம்
நீபெற்ற செல்வி நான்
வாய்க்கரிசி கொண்டு
சீயக்காயரப்புக் கொண்டு
சீயாளி மேளம் சிதம்பரத்து மாலை கொண்டு
சிகப்புநிற பட்டுக் கொண்டு
நான் தாங்கி அடியை வைத்து
தலைமீது கையை வைத்து
ஓங்கியழுது வந்தால்
உங்கள் வாசல்
உயர்ந்த மரம் ஓசையிடும்  (பக்கம்.10)


ஒப்பாரி இலக்கியம்:

எனது கல்லூரி நாட்களில், நாட்டுப்புற இலக்கிய வரிசையில், நாட்டுப்புற பாடல்களின் தொகுப்புகளை படித்து இருக்கிறேன். அவற்றுள் சிறந்த தொகுப்பாக நா.வானமாமலை தொகுத்த, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்வெளியிட்ட “தமிழர் நாட்டுப் பாடல்கள் என்ற நூலினைச் சொல்லலாம். அந்த நூலின் இறுதியில் நிறைய ஒப்பாரிப் பாடல்கள் தொகுக்கப் பெற்றுள்ளன. அதிலிருந்து ஒரு பாடல் இங்கே

ஆண்டுதோறும் மகளையும், மருமகனையும் அழைத்து மணைபோட்டு வரிசை கொடுத்து தந்தை வீட்டில் உபசாரம் செய்வது வழக்கம். தந்தை இறந்துவிட்டார். அடுத்த ஆண்டில் மாரியம்மன் திருவிழா வரும். ஆனால் அவளை அழைத்து அன்போடு பாராட்ட யார் இருப்பார்கள்?

          வாரம் ஒரு நாளு
         
வள்ளியம்மை திருநாளு
         
வள்ளியம்மை திருநாளில்
         
வரிசையிட ஒருவரில்லை
         
மாசம் ஒரு நாளு
         
மாரியம்மன் திருநாளு
         
மாரியம்மன் திருநாளில்
         
மாலையிட யாருமில்லை
         
மணைப்போட ஒருவரில்ல.

இலக்கிய நூல்களில்:

கம்பராமாயணத்தில் ஒருகாட்சி. இராவணனின் மகன் இந்திரஜித்தை, போரில் இலக்குவன் கொன்று அவனது தலையை இராமனின் காலடியில் சமர்ப்பிக்கிறான். இந்திரஜித்தின் தலையில்லாத முண்டம் போர்க்களத்தில் கிடக்கிறது. மகன் இறந்த செய்தி கேட்டு போர்க்களம் வந்த இராவணன் தனது மகன் இந்திரஜித்தின் உடலைக் கட்டிக் கொண்டு அழுகிறான். அப்போது  மகனே! எனக்கு நீ செய்யத் தக்க இறுதிக் கடன்களை எல்லாம் நான் உனக்கு செய்யும் நிலைமையை அடைந்தேன். என்னை விட இழிந்தவர்கள் யாருமில்லைஎன்று புலம்புகிறான்.

'சினத்தொடும் கொற்றம் முற்ற,
      இந்திரன் செல்வம் மேவ,
நினைத்தது முடித்து நின்றேன்;
      நேரிழை ஒருத்தி நீரால்,
எனக்கு நீ செய்யத்தக்க கடன் எலாம்,
      ஏங்கி ஏங்கி, உனக்கு
நான் செய்வதானேன்! என்னின்
      யார் உலகத்து உள்ளார்?' 39

                    - கம்பராமாயணம் (யுத்த காண்டம், இராவணன் சோகப் படலம்)

அரிச்சந்திரன் புராணத்தில் “சந்திரமதி புலம்பல்பெரிதாக பேசப்படும். வாய்மையையே வாழ்க்கை நெறியாகக் கொண்டவன் மன்னன் அரிச்சந்திரன். விதிவசத்தால் அவன் ஒரு பக்கமும் அவனது மனைவி சந்திரமதியும் மகன் தேவதாசன் வேறு ஒரு பக்கமும் பிரிகின்றனர். ஒருநாள் மகன் தேவதாசன் பாம்பு கடித்து மரணம் அடைகிறான். அப்போது சந்திரமதி, அவனது உடலை மடியில் வைத்துக் கொண்டு ஆற்றாது புலம்புகின்றாள். இந்த புலம்பலை கிராமப்புறக் கூத்துக்கள் நடைபெறுகையில், உருக்கமாகச் சொல்லுவார்கள். நல்லூர் (இராமநாதபுரம்) வீரகவிராயர் இயற்றிய அரிச்சந்திர புராணம்என்னும்  நூலில் சந்திரமதி புலம்பும் பாடல் இது.

நிறை யோசை பெற்ற பறையோசை யற்று
   
நிரையாய் நிறைந்த கழுகின்
சிறையோசை யற்ற செடியூ டிறக்க
   
விதியா ரிழைத்த செயலோ
மறையோ னிரக்க வளநாட னைத்தும்
   
வழுவா தளித்த வடிவேல்
இறையோ னளித்த மகனே உனக்கு
  
மிதுவோ விதித்த விதியே.

                        - அரிச்சந்திர புராணம் (பாடல் எண். 998)