Showing posts with label ஜெயகாந்தன். Show all posts
Showing posts with label ஜெயகாந்தன். Show all posts

Friday, 24 April 2015

கவிஞர் வைரமுத்து – மவுனம் கலைய வேண்டும்.



இலக்கிய உலகில் சர்ச்சை என்பது காலம் காலமாக இருந்து வருவதுதான். அஞ்சு தமிழ்ப் புலவர்கள் இருக்கும் இடத்தில், ஒரு போலீஸ் ஸ்டேஷன் தேவைப்படும் என்று கிண்டலடித்த காலமும் உண்டு. அதாவது அந்த அளவிற்கு அவர்களுக்கு இடையில் வாதங்கள் அனல் பறக்கும் என்பதுதான். அந்த வகையில் இப்போது சிக்கி இருப்பவர் கவிஞர் வைரமுத்து அவர்கள். கவிஞருக்கு என்று இருக்கும் புகழ் மற்றும் மரியாதைக்கு அவர் தானாக விளம்பரம் தேடிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. கவிஞர் வைரமுத்துவின் கவிதைகளை ரசிக்கும் ஆயிரக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன். 

     (ஒரு விழாவில் கமல்ஹாஸன், ஜெயகாந்தன், வைரமுத்து) 

குமுதத்தில் வந்த கடிதம்:

கவிஞர் வைரமுத்துவும், மறைந்த எழுத்தாளர் ஜெயகாந்தனும் இலக்கிய நண்பர்கள். இலக்கிய உலகில் ஒரு எழுத்தாளரின்  நூலுக்கு இன்னொரு எழுத்தாளர் பாராட்டி அணிந்துரை தந்து கொள்வது என்பது புதிய விஷயமன்று. அந்த வகையில், குமுதம் (27.04.2015) வார இதழில் கவிஞர் வைரமுத்துவின் சிறுகதைகளை ஜெயகாந்தன் பாராட்டி எழுதியதாக ஒரு கடிதம் வந்தது. அத்தோடு அதுதான் ஜெயகாந்தனின் கடைசி எழுத்தும் என்று சொல்லி இருந்தார்கள்.



 
பேஸ்புக்கில் ஜெயகாந்தனின் மகள் :

விஷயம் அத்தோடு முடிந்து போயிருக்கும். ஆனால் இது விஷயமாக எழுத்தாளர் ஜெயகாந்தனின் மகள் தீபா லட்சுமி அவர்கள், அப்படி ஒரு கடிதம் அப்பா எழுதவில்லை, அப்பாவே பாராட்டி கையெழுத்து போட்டது போன்று வெளியிட்டு விட்டார்கள் என்பதாகும். இதற்கு அவர் சொல்லும் காரணம், கடந்த ஓராண்டு காலமாகவே எழுத்தாளர் ஜெயகாந்தன் எதனையும் நினைவில் வைத்துக் கொள்ளவோ எழுதவோ அல்லது வாசிக்கவோ முடியாத நிலையில் இருந்தார் என்பதுதான். தீபா லட்சுமி அவர்கள் தனது பேஸ்புக்கில் (FACEBOOK) https://www.facebook.com/deepajoe கொடுத்த விளக்கம் இது.


கேட்டு வாங்கும் பாராட்டுக்கள்:

சகோதரி மு.வி.நந்தினி அவர்கள் குமுதம்-வைரமுத்து-ஜெயகாந்தன்  என்ற தலைப்பினில் (http://mvnandhini.com/2015/04/22 )ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார். அதில் காலம் காலமாக நடந்துவரும், இதழியல் துறை சாராத, மற்றவர்களுக்குத் தெரியாத ஒரு விஷயத்தை போட்டு உடைத்து இருக்கிறார். சகோதரி மு.வி.நந்தினி அவர்கள் எழுத்தாளர், வலைப்பதிவர் மற்றும் ஊடக பணியில் ஒன்பதாவது ஆண்டினை எட்டி இருப்பவர் என்பது இங்கு குறிப்பிட வேண்டிய ஒன்று. அவர் மேலே சொன்ன தனது பதிவினில்,

குமுதம்-வைரமுத்து-ஜெயகாந்தன் சர்ச்சையில் வைரமுத்துவை இந்த அளவுக்கு தூற்ற அவசியமில்லை. காலம்காலமாக ஒரு தொடரை பிரபலமாக்கும் பொருட்டு பிரபலங்களின் பாராட்டை கேட்டு வாங்கிப் போடுவது இதழியலில் இருந்து வருவதுதான்

என்று கருத்து தெரிவித்து இருந்தார்கள். அதில் நான் எழுதிய கருத்துரை இது.


 மக்கள் மத்தியில் நன்கு பிரபலமான ஒரு நல்ல கவிஞர் வைரமுத்து. இவர் விளம்பரத்திற்காக ஒரு காரியத்தை செய்தார் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை.

// காலம்காலமாக ஒரு தொடரை பிரபலமாக்கும் பொருட்டு பிரபலங்களின் பாராட்டை கேட்டு வாங்கிப் போடுவது இதழியலில் இருந்து வருவதுதான். //

இலக்கிய உலகில் பத்திரிகைகள் மத்தியில் பிரபலங்களின் கையெழுத்தை அவர்களது அனுமதியோடு மற்றவர்கள் பயன்படுத்திக் கொள்ளும் வழக்கத்தை இப்போதுதான் உங்கள் பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன். இந்த நடைமுறை தெரியாத ஜெயகாந்தன் மகள் தீபா லட்சுமி, கவிஞர் வைரமுத்து விஷயத்தை பெரிதுபடுத்தி விட்டாரோ என்னவோ? தெரியவில்லை. கவிஞர் வைரமுத்து மவுனம் கலைய வேண்டும்.
  
எனவே கவிஞர் வைரமுத்து அவர்கள் தனது மவுனத்தைக்  கலைத்து உண்மை என்ன என்பதனை விளக்க வேண்டும் எது எப்படியோ பேஸ்புக்கில் வலம் வந்த ஜெயகாந்தன் மகளை ஊடகங்கள் இனிமேல் பிரபலமாக்கி விடும்.

                    ( ALL PICTURES - COURTESY: “ GOOGLE IMAGES )




Monday, 20 April 2015

ஜெயகாந்தன் – எனது பார்வை


எனக்கு ஜெயகாந்தன் என்றாலே அன்றைய காலத்து அச்சகங்களில் இருந்த டிரெடில் எந்திரமும் அதன் ஓசையும் தான் ஞாபகம் வரும். காரணம் அந்த தலைப்பில் அவர் எழுதிய சிறு கதையோடு ஒன்றிப் போய் படித்தேன். ஒரு காலத்தில் இந்த டிரெடில் எந்திரம் இயக்கும் அச்சக வேலையாள் பணியையும் ஜெயகாந்தன் செய்து இருக்கிறார் என்பதனை பிற்பாடு தெரிந்து கொண்டேன்.

என்.சி.பி.எச் புத்தகக் கடையில்:

நான் கல்லூரி மாணவனாக இருந்தபோது திருச்சி சிங்கார தோப்பில் இருந்த NCBH எனப்படும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸிற்கு அடிக்கடி போவது வழக்கம். அன்றைய தினம் அங்கே பணி புரிந்த தோழர்கள் எனக்கு நல்ல பழக்கம். எனவே அங்கு போவதோடு அவர்கள் நடத்தும் புத்தக கண்காட்சிகளுக்கும் செல்வதுண்டு. அப்போது அங்கேயே உட்கார்ந்து நிறைய புத்தகங்களை படித்து எனது இலக்கிய தாகத்தை தணித்துக் கொண்டேன். அங்கே தொடர்ந்த வாசிப்பு பழக்கம் இன்றும் எனக்குள் தொடர்கிறது.

அந்த NCBH புத்தகக கடையில் அவர்கள் வெளியிட்ட நூல்களோடு கம்யூனிஸ்டு புத்தகங்கள் மற்றும் சோவியத் ரஷ்யாவிலிருந்து வந்த தமிழாக்கம் செய்யப்பட்ட ருஷ்ய நூல்கள் மட்டுமே இருக்கும். மற்றைய பதிப்பகங்களின் நூல்கள் விற்க அனுமதி இல்லை. ஆனாலும் விதி விலக்காக மீனாட்சி புத்தக நிலையம், புதுக்கோட்டை  வெளியிட்ட  எழுத்தாளர் ஜெயகாந்தன் எழுதிய நூல்களை மட்டும் அனுமதித்து இருந்தார்கள். காரணம் தோழர்களுடன் அவருக்கு இருந்த தொடர்புதான்.அந்த வகையில் ஜெயகாந்தன் நூல்களில் பெரும்பாலானவற்றை ரசித்து படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த புத்தகக் கடையுடன் எனக்கு ஏற்பட்ட தொடர்பு குறித்து நானும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸும்! என்ற தலைப்பில் http://tthamizhelango.blogspot.com/2012/07/blog-post_16.html ஒரு பதிவும் எழுதியுள்ளேன்.

ஜெயகாந்தன் காலம்:

ஜெயகாந்தன் தனது எழுத்துக்களை எழுதிய காலம் என்றால், அப்போதுதான் இந்தியா சுதந்திரம் அடைந்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறிக் கொண்டு இருந்த நேரம். சாதாரண தொழிலாளர்கள் கம்யூனிச தொழிற்சங்களில் இணைந்து உணர்வுப் பூர்வமாக பாட்டாளி வர்க்கமாக இயங்கிய காலம். இன்றைய காலம் போன்று டீவி, செல்போன், இண்டர்நெட், பேஸ்புக், ட்விட்டர் போன்ற குறுக்கீடுகள் மக்களுக்கு இல்லாத காலம். சினிமா பார்த்தல், பத்திரிகைகளில் வரும் சிறுகதைகள், தொடர் நாவல்கள், புத்தகங்கள் வாசித்தல் என்று வாசிப்பில் மக்கள் பொழுது போக்கிய காலம். எனவே ஜெயகாந்தன் படைத்திட்ட சாதாரண கதாபாத்திரங்கள் மக்களைப் பெரிதும் கவர்ந்தன.

பாத்திரப் படைப்புகள்:

சாதாரணமாக மற்ற எழுத்தாளர்கள் வந்தது, போனது என்று குடும்பக் கதைகளை எழுதிக் கொண்டு இருந்த நேரத்தில் இவர் சமுதாய சிக்கல்களை மய்யமாக வைத்து எழுதிய கதைகள் வாசகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டன. உதாரணமாக யாருக்காக அழுதான்? , கோகிலா என்ன செய்துவிட்டாள்?, சில நேரங்களில் சில மனிதர்கள், பாவம், இவள் ஒரு பாப்பாத்தி , ஒரு மனிதனும் சில எருமை மாடுகளும், உன்னைப் போல் ஒருவன் போன்ற நாவல்களைச் சொல்லலாம். இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். (இந்த நாவல்களின் கதைச் சுருக்கங்களை மற்றவர்களைப் போல மீண்டும் மீண்டும் சொல்லி உங்களுக்கு அலுப்பு உண்டாக்க விரும்பவில்லை). தன்னுடைய படைப்புகளுக்கும் வித்தியாசமான  தலைப்புகளையே வைத்து வாசகர்களைக் கவர்ந்தார்.

ஜெயகாந்தன் வீட்டை விட்டு வெளியேறிய நாளில் ஆரம்ப காலத்தில் பேப்பர் விற்கும் பையன் ,கடைச் சிறுவன், அச்சக தொழிலாளி என்று பல வேலைகளை செய்து இருக்கிறார். மேலும் கம்யூனிஸ்டு தோழர்களிடமும் பழக்கம். எனவே அவரது பாத்திரப் படைப்புகளில் கொஞ்சம் சிவப்பு நெடி வீசியது.  இவரது சில பாத்திரப் படைப்புகள், எழுத்தாளர் புதுமைப் பித்தனின் கதைகளை நினைவு படுத்தின.( உதாரணம் புதுமைப் பித்தனின் பொன்னகரம்)

டிரெடில்  என்ற சிறு கதை, ஒரு சிறிய அச்சகத்தில்  கம்பாஸிட்டர், பைண்டர், மெஷின்மேன் என்று எல்லா வேலைகளையும் பார்க்கும் வினாயக மூர்த்தி என்ற தொழிலாளியின் நிலைமையோடு, அந்தக் கால பிரிண்டிங் பிரஸ் இருந்த காலத்து சமூக சூழலையும் காட்டுகிறது.

நந்தவனத்தில் ஓர் ஆண்டி என்று ஒரு சிறுகதை. நந்தவனம் எனப்படும் சுடுகாட்டில் ஒரு குடிசை போட்டுக் கொண்டு, மயான வேலைகள் பார்த்த ஆண்டி மற்றும் அவனது மனைவி முருகாயி பற்றிய கதை இது. அடுத்தவர் பிணங்கள் வரும்போதெல்லாம், காரணம் புரியாமலேயே

"நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி - அதைக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி."

என்ற பாடலைப் பாடுவான்; அழக்கூட மாட்டான். தனது கருமத்திலேயே கண்ணாக இருப்பான். அவனுக்கு தனது மகன் இருளனின் இறப்புக்குப் பிறகுதான் இறப்பின் சோகம் வலிக்கிறது. அப்போது முதல் ஒவ்வொரு பிணமும் மயானத்திற்கு வரும் போதெல்லாம் அழத் தொடங்கியவன், அழுது கொண்டே இருக்கிறான்.

கீழ்ஜாதி என்றழைக்கப்பட்ட ஜாதியில் பிறந்த அம்மாசி என்ற கிழவனிடம், ஒரு பிராமணப் பெண் தனது குழந்தையை ஒப்படைத்து விட்டு இறந்து போகிறாள். அவன் அந்த குழந்தையை ஏற்றுக் கொண்டு அவளுக்கு செய்ய வேண்டிய காரியங்களைச் செய்கிறான். ஒரு பகல் நேரப் பாசஞ்சர் வண்டியில்  என்ற கதை சொல்லும் கதை இது.
                                                       
அக்கினிப் பிரவேசம் என்ற கதையில், தனது கெட்டுப் போன (அறியாத பருவம்) மகளை, அவள் தலையில் தண்ணீரை ஊற்றி, தூய்மைப் படுத்திவிட்டு ஜீரணித்துக் கொள்ளும் ஒரு தாய் அப்போது பரபரப்பாக பேசப்பட்டாள்.

ஜெயகாந்தனின் அரசியல்:

காம்ரேடுகளிடம் இருந்தாலும் இவர் கம்யூனிஸ்டு இயக்கத்தில் முழுமையாக தன்னை ஒரு முழுநேரத் தொண்டனாக ஈடுபடுத்திக் கொண்டு கட்சி மேடைகளில் பேசியதாக எனக்குத் தெரியவில்லை. ஆனாலும் காம்ரேடுகள் இவரது எழுத்துக்களில் உள்ள ஈர்ப்பின் காரணமாக அவரை அங்கீகரித்தனர் என்பதே உண்மை. இவர் அணிந்த ஆடை, கண்ணாடி மற்றும் இவரது முரட்டுத்தனமான மீசை இவரை வித்தியாசமாகவே காட்டின. எனக்குத் தெரிந்து ஒரு கல்லூரி பேராசிரியர் ஒருவர், இவரைப் போலவே தோற்றம் நடை உடை பாவனையோடு இவரைப் போலவே நீண்ட மீசையும் வைத்து இருந்தார்.

ஆரம்பத்தில் இருந்தே ஜெயகாந்தனுக்கு திராவிட அரசியல் என்றால்  கொஞ்சமும் பிடிக்காது. எனவே அவ்வப்போது தி.மு.க தலைவர்களைப் பற்றி சர்ச்சையான தனது கருத்துக்களை வெளிப்படையாகவே சொல்லுவார். ஒரு கட்டத்தில் காங்கிரஸில் தன்னை இணைத்துக் கொண்டபோது ரொம்பவும் உணர்ச்சி வசப்பட்டே (கண்ணதாசனுக்கும் இவருக்கும் இந்த விஷயத்தில் ரொம்பவே ஒற்றுமை ) திமு.கவை எதிர்த்தார். குறிப்பாக சினிமாவுக்குப் போன சித்தாளு என்ற நூல் எம்ஜிஆர் ரசிகர்களை மிகவும் கோபப்பட வைத்தது. இந்த நாவலில் வாத்தியார் என்ற பாத்திரப் படைப்பின் பெயரில் கடுமையான விமர்சனங்கள். (பின்னாளில் கலைஞர் மு.கருணாநிதியும் இவரும் பகைமை இல்லாது நண்பர்களாக மாறியது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான்) ஜெய ஜெய சங்கர..., ஹர ஹர சங்கர என்ற நூல்கள் இவர் முற்றிலும் ஆத்திகத்திற்கு மாறியதை உணர்த்துபவை.

                                                                 
ஜெயகாந்தன் என்றால் ஒரு கம்பீரமான எழுத்தாளர் என்பதில் ஐயமில்லை. இன்றைக்கும் என்னிடம் இருக்கும் ஜெயகாந்தன் எழுதிய படைப்புகளை சில சமயம் மீள் வாசிப்பு செய்வதுண்டு. அண்மையில் நான் வாங்கிய நூல் ஆனந்த விகடன் வெளியிட்ட “ஜெயகாந்தன் கதைகள்


                                         (  PICTURES - COURTESY: “ GOOGLE IMAGES  )