Sunday 30 July 2017

வறண்டாய் வாழி காவேரி!



வலைப்பதிவு, ஃபேஸ்புக், வாட்ஸ்அப் என்று இவை மூன்றிலும் எனக்கு தொடர்பு இருந்தாலும் நான் முதலிடம் கொடுப்பது வலைத்தளத்திற்கு மட்டுமே. ஏனெனில் வலைத்தளத்தில் பதியப்படும்  முக்கியமான செய்திகள் அடங்கிய ஒவ்வொரு பதிவும், ஒரு ஆவணமாகவே கூகிளில் பிற்காலம் அறிய வாய்ப்பு அதிகம். எனினும் கடந்து மூன்றரை மாத காலமாக, எனது தந்தையின்(92) உடல்நிலையை முன்னிட்டு, அவர் அருகிலேயே இருந்து கவனித்து வந்த படியினால், அடிக்கடி என்னால் வலைப்பக்கம் வர இயலவில்லை. (அப்பா கடந்த 08.07.17 அன்று இயற்கை எய்தினார்)  எனினும் ஒன்றிரண்டு குறுஞ் செய்திகளை அல்லது கருத்துரைகளை ஃபேஸ்புக்கில் எழுதி வந்தேன். அண்மையில் நான் ஃபேஸ்புக்கில் காவிரி ஆறு பற்றிய எழுதிய, ஒன்றை வலைப்பக்கம் ஆவணமாக்கும் எண்ணத்தில் மீண்டும் இங்கு விரிவாக்கம் செய்து வெளியிட்டுள்ளேன்.. (ஏற்கனவே அங்கு படித்தவர்கள், மறுபடியுமா என்று சினம் கொள்ளற்க. மன்னிக்கவும்)

தான் பொய்யாத காவிரி

ஆறு என்றால், வான் மழை பெய்தாலும் பெய்யா விட்டாலும், ஊற்று நீராலும், அதில் நீர் ஓடிக் கொண்டே இருக்க வேண்டும். இவற்றை ’ஜீவநதிகள்’ என்று சொல்வர். இத்தகு ஜீவநதிகளில் ஒன்றான காவிரியை,

வான்பொய்ப்பினும் தான்பொய்யா
மலைத்தலைய கடற்காவிரி
புனல்பரந்து பொன்கொழிக்கும்
– (பட்டினப்பாலை ( 5 – 7 )

என்று புகழ்ந்து பாடுகிறார் கடியலூர் உருத்திரங் கண்ணனார் எனும் புலவர். அந்த காவிரி, இன்றைக்கும் கர்நாடக எல்லை வரை வற்றாத ஜீவநதியாகவே இருக்கிறது. தான் பொய்க்கவில்லை. ஆனால் இந்திய மண்ணின் அரசியல் காரணமாக தமிழ்நாட்டில் மட்டும் பொய்த்துப் போய் விட்டது.

கல்லணை வேதனை:

கடந்த ஜூன் மாதம் 25.06.17 ஞாயிறு அன்று, ஒரு அவசர வேலையாக, தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள எனது அம்மா ஊருக்கு நான் மட்டும் சென்று வந்தேன். முன்பெல்லாம் அந்த ஊருக்கு போய் வருவது என்றால் திருச்சியிலிருந்து கல்லணை, கோயிலடி வழியாகத்தான் செல்வது வழக்கம்.. அப்போது போகும்போதும், வரும்போதும் வழிந்தோடும் காவிரி கண்கொள்ளா காட்சி. ஆனால் இப்போதெல்லாம் அந்த வழியாக இல்லாமல் திருச்சி, திருவெறும்பூர், செங்கிப்பட்டி, பூதலூர், திருக்காட்டுப்பள்ளி என்று அடிக்கடி பயணம் இந்த தடவை திரும்பி வரும்போது, கல்லணை வழியாக வந்தேன். இப்போது நான் கண்ட. கல்லணையும் காவிரியும் வறட்சியின் பிடியில்; கண்கலங்க அப்போது எடுக்கப்பட்ட படங்கள் சில.

                                                                                                                                                          
அம்மாமண்டபம் சோகம்:

அப்பா இறந்த பிறகு அப்பாவுக்கான காரியங்கள் முன்னிட்டு சென்ற வாரம், ஸ்ரீரங்கம் - அம்மா மண்டபம் செல்ல வேண்டி இருந்தது. அப்போதும் அங்கும் காவிரியின் துயரத்தைக் காண முடிந்தது. அப்போது அங்கு எடுத்த படங்கள் இவை.

(படம் மேலே) அம்மா மண்டபம் நுழைவு வாயில்

(படம் மேலே) வறண்ட காவேரி

(படம் மேலே) பக்தர்கள் விட்டெறிந்த பழைய துணிகள்

(படம் மேலே) எதிரே தெரிவது கம்பரசம்பேட்டை குடிநீர் திட்ட கிணறு

(படம் மேலே) பக்தர்களுக்கு ஆசி வழங்கும் யானை

நதியின் பிழையன்று:

கம்பராமாயணத்தில் ஒரு காட்சி. தான் எப்போதோ கேட்ட வரம் ஒன்றை, மன்னன் தசரதனிடம் நினைவூட்டி, இராமன் மகுடம் சூட்டுவதை தடுத்து, இராமனிடமும் சொல்லுகிறாள் அவனது சிற்றன்னை கைகேயி. இராமனும் ”எந்தையே ஏவ, நீரே உரைசெய இயைவது உண்டேல்,உய்ந்தனன் அடியேன்என்று கானகம் செல்லத் தயாராகிறான். செய்தி கேட்ட இலக்குவன் போர்க்கோலம் பூணுகிறான். இதனை அறிந்த இராமன், இலக்குவன் இருக்குமிடம் சென்று அவன் கோபத்தை தணிக்கிறான். அப்போது இராமன் சொல்லுவதாக ஒரு பாடல். 

'நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை; அற்றே
பதியின் பிழையன்று; பயந்து நமைப் புரந்தாள்
மதியின் பிழை அன்று; மகன் பிழை அன்று; மைந்த!
விதியின் பிழை; நீ இதற்கு என்னை வெகுண்டது?' என்றான்.
              ( கம்பராமாயணம் – அயோத்தியா காண்டம் – நகர் நீங்கு படலம்.129)

இந்த பாடலில் ஒரு நதியில், தண்ணீரே இல்லாமல் போவதற்கு காரணம் விதியின் பிழை என்று விதி மேல் பழி சொல்லப்படுகிறது. ஆனால் நமது காவிரி கர்நாடகத்தில் கரைபுரண்டு ஓடி, தமிழ்நாட்டிற்கு மட்டும் வராமல், வறண்டு போனதற்கு காரணம் இந்த அரசியல்வாதிகள் அன்றி வேறு யாரைச் சொல்ல முடியும். எனினும்,

உழவர் ஓதை, மதகு ஓதை,
    உடை நீர் ஓதை, தண்பதம் கொள்
விழவர் ஓதை, சிறந்து ஆர்ப்ப,
    நடந்தாய்; வாழி, காவேரி
   (சிலப்பதிகாரம்)

என்றே வாழ்த்துவோம். நம்பிக்கையோடு இருப்போம்.