அண்மையில் சமூக வலைத் தளங்களிலும் விவாதக் களங்களிலும் ‘சேரி பிகேவியர்’
(Cheri behaviour) என்ற வார்த்தை அடிபட்டுக் கொண்டு இருந்தது. அப்போது சில குறிப்புகள்
மட்டும் எடுத்து வைத்து இருந்தேன். வீட்டு சூழ்நிலை காரணமாக, கட்டுரையாக அப்போதே வெளியிட
இயலவில்லை.
சேரி என்ற சொல்
உண்மையில் சேரி என்பது மக்கள் வசிக்கும் பகுதியைக் குறிக்கும் சொல்லாகும்.
சங்க காலத்தில் உயர்ந்த பொருளில் பொதுப் பெயராக இருந்த அது, இன்றைக்கு குறிப்பிட்ட
சாரர் மட்டும் இருக்கும் இடத்தை குறிப்பதாக இருக்கிறது.
பிக்பாஸ் எனும் டீவி தொடரில் ( நான் இந்த பக்கம் போவதே கிடையாது
) காயத்ரி என்பவர் ஓவியா என்பவரைத் திட்டும்போது இந்த சேரி பிகேவியர் என்ற வார்த்தையைச்
சொன்னதாக சொல்லுகிறார்கள். இவரும் இந்த வார்த்தையை உள் நோக்கத்தோடு சொன்னதாகத் தெரியவில்லை.
திட்டு வாங்கிய ஓவியா என்பவரும் இதுபற்றி வருத்தம் அடைந்ததாகத் தெரியவில்லை.
ஒவ்வொருவருக்கும் ஒரு புத்தி இருக்கிறது. சிலர் சில காரியங்களைச்
செய்தால் “ஒன்னோட புத்தி ஒன்னை விட்டு போகலே” என்று சொல்லுவார்கள். இதையே தொழில் ரீதியாக,
குழு அடிப்படையில் இப்படியே வாத்தியார் புத்தி, போலீசு புத்தி என்று சொல்லிக் கொண்டே
போகலாம். இந்த அடிப்படையில், அந்த அம்மணி ‘சேரி பிகேவியர்’ (Cheri behaviour) என்ற
வார்த்தையை பயன்படுத்தி இருக்கிறார்.
அதற்குள் நாட்டு நடப்பில் ஒருவர் இந்த பிக் பாஸ் டீம் மீது வழக்கு
போடுவேன் என்கிறார்; இன்னொருவர் கோடி கொடுத்தால் தான் ஆச்சு என்கிறார். மற்றவர்கள்
‘கம்முனு’ இருக்கிறார்கள். கோர்ட்டுக்குப் போனால் இவை எல்லாம் நிற்காது. ஏனெனில் நம்நாட்டில்
ஜாதியைச் சொல்லி உள்நோக்கத்தோடு திட்டினால்தான் கேஸ்.
பழைய செய்திகள்
’ஹரிச்சந்திரா’ என்ற தமிழ் திரைப்படம் 1968 இல் வெளிவந்தது. நடிகர்
திலகம் சிவாஜி கணேசன் அரிச்சந்திரனாக நடித்து இருக்கிறார். அந்த படத்தில், மயானத்தில்
அரிச்சந்திரன் பாடுவதாக ஒரு காட்சி. அதில் ‘பேய் உலவும் காட்டில் திரியும் ஈனப் பறையனே’
என்று சந்திரமதி வசனம் பேசுவாள். அதற்கு மறுமொழியாக அரிச்சந்திரன் பாடும் பாடலின் துவக்க
வரிகள் இவைதான்.
ஆதியிலும் பறையன் அல்ல
ஜாதியிலும் பறையன் அல்ல
நீதியிலும் பறையன் அல்லவே – நானே
பாதியில் பறையன் ஆனேனே
‘பாடும் வானம்பாடி’ 1985 இல் நடிகர் ராஜிவ் நடிகை ஜீவிதா நடித்து
வெளிவந்த படம். இதில் ’வாழும்வரை போராடு’ என்று
துவங்கும் பாடலில்,
மாடி வீட்டு ஜன்னலும் கூட
சட்டைய போட்டிருக்கு – அட
சேரிக்குள்ள சின்னப்புள்ள
அம்மணமா இருக்கு
என்ற வரிகள் வரும். பாடலை எழுதியவர் கவிஞர் வைரமுத்து.
அடுத்து ‘ஒன்னா இருக்கக் கத்துக்கனும்’ (1992 இல் வெளிவந்தது) என்ற
படத்தில் நடிகர் கவுண்டமணியும், அடுத்து ‘பிறகு’ என்ற படத்தில் (2007 இல் வெளிவந்தது)
வடிவேலுவும் வெட்டியான்கள் வேஷத்தில் நடித்து இருக்கிறார்கள். இருவரும் பேசும் வெட்டியான்
வசனங்கள் நகைச்சுவை என்ற பெயரில் நிறையவே நையாண்டிகள்.
நம்ம ஊர் என்று சொல்லிக் கொள்ளும் சுப்ரமண்யன் சுவாமி ஒருமுறை இண்டர்நேஷனல்
பறையா (International Pariah) என்று சொல்லி சிக்கலுக்கு ஆளானார். அப்போது அவர் “கேம்பிரிட்ஜ்
அகராதியில் இருப்பதைத்தான் நான் சொன்னேன்; தலித்துகளைக் குறிப்பிட்டு சொல்லவில்லை.
அந்த அகராதியில் Pariah என்பதற்கு சொல்லப்படும் பொருளை நீக்க முயற்சி செய்வேன்” என்றும்
சொன்னார்.
மேலே சொன்ன செய்திகளில் யாரும் பெரிதாக தண்டிக்கப்பட்டதாக தெரியவில்லை.
பெரும்பாலும் இவற்றை சம்பந்தபட்ட சமூகத்தினரும் அப்போது பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
உதாசீனம் செய்து விட்டார்கள்.
போராட்டம் போராட்டம்
இன்றைக்கு எதற்கெடுத்தாலும் மறியல், போராட்டம், வழக்கு என்று தமிழ்நாடு
அல்லோல கல்லோல பட்டுக் கொண்டு இருக்கிறது. சாதாரணமாக ஒரு மனு கொடுத்து தடுத்து நிறுத்த
வேண்டியவற்றிற்கு எல்லாம் ரத்தக்களரியாக போராடிக் கொண்டு இருக்கிறார்கள். ஒரு பிரச்சினையை
முழுதாக தீர்ப்பதற்குள் அடுத்த ஒன்றிற்கு தாவி விடுகிறார்கள். சிம்புவின் பீப் சாங்
போன்று இந்த ‘சேரி பிகேவியர்’ (Cheri Behaviour) கொஞ்ச நாளைக்கு பேசப்படும். மக்களுக்கு
இருக்கும் எவ்வளவோ பிரச்சினைகளை மக்கள் நினைக்காமல் இருக்கவும், திசை திருப்பவும் இது
போன்ற மடை மாற்றும் வேலைகள் எப்போதும் நடந்து கொண்டுதான் இருக்கும்.