திட்டம் போட்டு பொது மக்களுக்கு தொல்லைகள் தருவதற்கு என்றே ஒரு குழு இருக்கிறது. அதற்குப் பெயர் திட்டக் குழு. அவர்கள் எதனை அறிவித்தாலும் மக்களுக்கு அதனால் குழப்பம்தான் மிஞ்சும். முன்பு வறுமைக் கோடு எது என்பதற்கு ஏசி அறையில் உட்கார்ந்து கொண்டு யோசித்தார்கள். அதில் ஏகப்பட்ட பல்டிகள்.
இப்போது எல்பிஜி மானியம் எனப்படும் சமையல் கேஸ் சிலிண்டருக்கான மானியம். ஏற்கனவே ஆதர் அட்டை ஒரு
குழப்பமாகவே இருந்து வருகிறது. நிறையபேர் இன்னும் பதிவே செய்யவில்லை. பதிவு செய்த
பலபேருக்கு அட்டைகள் வந்தபாடில்லை. இந்த நிலையில் எல்பிஜி மானியம் வங்கிகள் மூலம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு.
இதற்கு ஆதர் அட்டை எண் அவசியம் என்று அறிவித்து இருக்கிறார்கள். இந்த அட்டையை
வாங்கி, இதில் உள்ள எண்ணை ஒரு மனுவில் பூர்த்தி செய்து நமக்கு சேமிப்பு கணக்கு
உள்ள வங்கியில் கொடுக்க வேண்டும். அவர்கள் அதை சரிபார்த்த பின்னர் நமக்கு கேஸ்
வழங்கும் ஏஜென்சியிடம் கொடுக்க வேண்டும். பின்னர் அவர்கள் இந்தியாவில் உள்ள கோடான
கோடி மக்களுக்கு ஒவ்வொரு சிலிண்டருக்குமான மான்யத்தை கணக்கில் வரவு வைப்பார்கள். இதெல்லாம் உடனே
நடக்கக் கூடிய காரியமா என்பதை யாரும் யோசிக்கவில்லை தலையைச் சுற்றி மூக்கை தொடும்
கதைதான்.
இதுநாள் வரை சிலிண்டர் வந்ததா பணத்தை கொடுத்தோமா என்று இருந்தது. அதாவது கையில
காசு வாயில தோசை. இனிமேல் எப்போது பார்த்தாலும் இந்தியா முழுக்க ஆதர் அட்டைக்கு
பெரிய க்யூ, வங்கியில் ஒரு பெரிய க்யூ என்று இருந்து கொண்டே இருக்கும் மானியத்தை வங்கிக்கு
அனுப்பி விட்டதாக இவர்கள் சொல்வார்கள். அங்கே போனால் இன்னும் வரவில்லை என்பார்கள்.
நாளுக்கு நாள் ஏறும் சிலிண்டரில் பழைய மான்யமா புதிய மான்யமா என்று அவ்வப்போது
குழப்பம் ஏற்படும். வெட்டி வேலையை நாள் முழுக்க அரசு ஊழியர்கள் பார்த்துக் கொண்டு இருப்பாரகள்.
இவர்கள் செய்யும் காரியத்தைப் பார்க்கும் போது திரைப்படம் ஒன்றில் வடிவேலு
நடித்த நகைச்சுவை காட்சிதான் ஞாபகத்திற்கு வருகிறது. அதில் தெருவில் வடிவேலுவின்
வியாபாரம் நடக்கிறது. மூட்டைப் பூச்சியை
கொல்லும் நவீன மெஷின் என்று சின்ன பிள்ளைகள் தங்கள் விளையாட்டில் வைத்து
விளையாடும் மாவுக்கல் போன்ற ஒன்றையும் குழவி ஒன்றையும் விற்பனை செய்கிறார்.
வாங்கிச் சென்ற சிங்கமுத்து திரும்ப வருகிறார். இந்த எந்திரத்தை வைத்து எப்படி
மூட்டைப் பூச்சியைக் கொல்லுவது என்று கேட்பார். அதற்கு வடிவேலு, ஒவ்வொரு மூட்டைப்
பூச்சியாக பிடித்து அந்த எந்திரத்தில் போட்டு, அந்த சின்ன குழவியால் குத்தினால்
மூட்டைப் பூச்சி காலி என்பார். சிங்கமுத்து வெறியாகி வடிவேலுவை உதைப்பார்.
இப்படியாகத்தான் உள்ளது இவர்களது கேஸ் சிலிண்டர் மானிய விவகாரம்.
வீடியோவில் இந்த நகைச்சுவையைக் காண இங்கே “க்ளிக்” செய்யுங்கள்.
இப்போது சுப்ரீம் கோர்ட் ” ஆதார் அடையாள அட்டை வாங்க வேண்டும் என, நாட்டின் குடிமக்கள் யாரையும் கட்டாயப்படுத்தக்
கூடாது. அத்தியாவசிய சேவைகள் வழங்குவதற்கு, அந்த அடையாள அட்டை அவசியம் என, நிர்பந்திக்கக் கூடாது. மேலும், பிற நாடுகளில் இருந்து சட்ட விரோதமாக
ஊடுருவியவர்களுக்கு, கட்டாயம்,
இந்த அடையாள அட்டை வழங்கப்படக்
கூடாது. ” என்று உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இனி என்ன நடக்கிறது
என்பதைப் பார்ப்போம்.
PICTURES & VIDEO:
THANKS TO GOOGLE