ஒரு மாலைப் பொழுது, சிறு வயதில் உயர்நிலைப்பள்ளிப் பருவத்தில் எனக்குத் தெரிந்த ஒருவரை (என்னை விட வயதில் பெரியவர்) பார்க்க அவர் வேலை செய்யும் இடத்திற்குச் சென்றேன். அப்போது அவர் திருச்சி சிங்காரத் தோப்பில் இருந்த NCBH
எனப்படும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸில் தற்காலிக ஊழியர். அப்போது அவர் கடையில் இல்லை. எதிரே நடக்கும் அவர்களது புத்தகக் கண்காட்சியில் இருப்பதாகச் சொன்னார்கள். இப்போது திருச்சி சிங்காரத் தோப்பில் இருக்கும் பர்மா பஜார் கடைகள் அப்போது கிடையாது. காலி இடத்தில் கொட்டகை போட்டு புத்தக கண்காட்சி நடைபெற்றுக் கொண்டு இருந்தது. உள்ளே சென்று அவரைப் பார்த்தேன். உட்காரச் சொன்னார்.
அவரிடம் பேசி விட்டு உள்ளே புத்தகங்களை பார்வையிட்டேன். சிறு வயது என்பதால் அங்கிருந்த சிறுவர் கதைகளைப் படிக்க ஆசை. அதிலும் அங்கு இருந்த வண்ணமயமான தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட சோவியத் நாட்டு சிறுவர் கதைகளைப் பார்க்க பார்க்க ஆர்வம் உண்டாகியது. ஒன்றிரண்டு புத்தகங்களை அங்கேயே உட்கார்ந்து படித்தேன். அதுமுதல் தினமும் மாலை அங்கே சென்று எனது படிக்கும் ஆர்வத்தை தணித்துக் கொண்டேன். அங்கு இருந்த தோழர்களும் என்னை ஆரம்பத்தில் விசாரித்ததோடு சரி. நண்பர்கள் ஆகி விட்டனர். NCBH
நிறுவனத்தார் ஒரு இடத்தில் புத்தகக் கண்காட்சி முடிந்த கையோடு உடனே வேறு ஒரு இடத்தில் தொடங்கி விடுவார்கள்.பெரும்பாலும் பஸ் ஸ்டாண்ட், பள்ளிகளில் நடத்துவார்கள். இப்படியாக எனது நண்பர் அங்கு வேலை செய்யும் வரை புத்தகம் வாசிக்கும் பழக்கம் தொடர்ந்தது.

அவர்களிடம் தமிழாக்கம் செய்யப் பட்ட ருஷ்ய நூல்கள் அதிகம் இருக்கும். விலையும் ரொம்ப குறைவு. மற்ற பதிப்பகங்களின் நூல்களை அவ்வளவாக வைத்து இருக்க மாட்டார்கள். (ஜெயகாந்தன் நூல்களை வெளியிட்ட மீனாட்சி புத்தக நிலையம் போன்றவைகள் விதிவிலக்கு). அப்போது சிறுவர் கதைகள், இலக்கியம், மார்க்ஸிம் கார்க்கி, டால்ஸ்டாய், மிக்கயீல் ஷோலகவ், பிரேம்சந்த், புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், கி.ராஜநாராயணன் போன்றவர்களது நூல்களையும், கம்யூனிசம் சம்பந்தப்பட்ட நூல்களையும் படித்தேன். ஆனாலும் அவர்கள் கட்சியில் சேரவில்லை. இப்படியாக எனது படிக்கும் பழக்கம் அதிகமானது. இப்போதும் ஒரு மணி நேரமாவது ஏதேனும் ஒரு புத்தகத்தைப் படித்தால்தான் அன்றைய தினம் திருப்தி அடைகிறது.
ஒருநாள் எனது நண்பர் வேலையிலிருந்து நின்றுவிட நான் அங்கு அதிகம் செல்லவில்லை.அதன் பின் கல்லூரி வாழ்க்கையின் போது எப்போதாவது செல்வேன். வங்கி வேலையில் சேர்ந்த பின்பு, அப்போது வாங்க முடியாத நூல்களை ஆசை தீர வாங்கினேன். மற்ற பதிப்பக, எழுத்தாளர்களின் நூல்களையும் வாங்கினேன். மீண்டும் மீண்டும் படித்தேன்.
சோவியத் ரஷ்யா உடைந்த பிறகு அவர்கள் புத்தக நிறுவனமும் தனியார் நிறுவனம் போல் மாறிவிட்டது. இப்போது மற்ற பதிப்பகங்களின் புத்தகங்களையும் வைத்து இருக்கிறார்கள். வழக்கம் போல புத்தகக் கண்காட்சி எல்லா ஊர்களிலும் நடத்துகிறார்கள். எந்த ஊர் சென்றாலும் பஸ்ஸை விட்டு இறங்கியதும் பஸ் ஸ்டாண்டில் தென்படுவது NCBH –
இன் புத்தகக் கண்காட்சிதான். எல்லா இடத்திலும் புது ஆட்கள். நான் அங்கு புத்தகம் வாங்கச் செல்லும்போது நண்பர்கள் ஆகி விடுகிறார்கள். எனக்கு வாசிப்பு அனுபவத்தைத் தூண்டிய, முன்பு NCBH –
இன் புத்தக கண்காட்சியில் வாசித்த அந்த நாட்கள் மறக்க இயலாத நாட்கள்.
( PICTURES : THANKS TO “ GOOGLE ” )