Showing posts with label கலப்படம். Show all posts
Showing posts with label கலப்படம். Show all posts

Monday, 18 December 2017

கலப்படம் கலப்படம்



நான் பள்ளி மாணவனாக இருந்த காலத்தில், அப்போதைய நாளிதழ்களில், உணவுப் பொருட்களில் கலப்படம் செய்தவர்களைக் கண்டறிந்து, தண்டனை கொடுத்ததாக செய்திகள் வரும். ஆனால் இப்போது அது மாதிரியான செய்திகள் அதிகம் வருவதில்லை. அப்படியானால் நாட்டில், கலப்படம் குறைந்து விட்டதா? என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும்.

ஆனால் முன்பு போல சிறுசிறு கடைகளை விட, இப்போது சூப்பர் மார்க்கெட்டுகளும் ஷாப்பிங் மால்களும் பெருகி விட்டன. இங்கு விற்கப்படும் பாக்கெட் பொருட்களைப் பற்றி யாரும் ஆராய்ச்சி செய்வதில்லை. சில இடங்களில், காலாவதியான பொருட்களைக் கூட சந்தடி சாக்கில் அல்லது தள்ளுபடி என்ற பெயரில் தள்ளி விடுகின்றனர். 

கலப்படம் எத்தனை

கலப்படம் என்றால் என்ன? “ ஒரு பொருளில் அதே மாதிரியான, ஆனால் தரம் குறைந்த அல்லது மலிவான வேறொரு பொருளை விதி முறைகளுக்கு மாறாகக் கலந்துவிடும் செயல்; adulteration (in foodstuff, etc.) (நன்றி: க்ரியா – தமிழ் – தமிழ் – ஆங்கிலம் அகராதி) 

எவ்வெவற்றில் எந்தெந்த பொருட்கள் கலப்படம் செய்கிறார்கள் என்று பார்ப்போமானால் தலை சுற்றும்.

அரிசி (சிறு சிறு கற்கள்); மிளகு (பப்பாளி விதைகள்); பால் (தண்ணீர், சோயா பால், ஸ்டார்ச் கரைசல், சலவைத்தூள், யூரியா உரம்): ஐஸ் க்ரீம் (சலவைத்தூள்); சர்க்கரை, வெல்லம் (சாக் பவுடர், வாஷிங் சோடா); தேன் (தண்ணீர், மொலாசிஸ்); காபி (சிக்கரி, புளியங்கொட்டைத் தூள் அல்லது பேரீச்சை விதைத் தூள்); டீத்தூள் ( பிற இலைகள் அல்லது பயன்படுத்தப்பட்ட டீத் தூள்); மிளகாய்ப் பொடி (செங்கல் தூள், காய்ந்த மாட்டுச் சாணம் அல்லது குதிரைச் சாணம் ); நெய் (வனஸ்பதி) கல் உப்பு (சிறு வெள்ளை கற்கள்)

இன்னும் சமையல் எண்ணெய், இனிப்பு வகைகள் மற்றும் குளிர் பானங்கள் இவற்றில் என்று நிறையவே சொல்லலாம். இந்த கலப்பட உணவுப் பொருட்களால் ஏற்படும் உடல் சுகாதாரக் கேடுகள் பற்றி சொல்ல வேண்டியதில்லை.

என்ன தண்டனை?

என்னதான் பலரும் எடுத்துச் சொன்னாலும், உணவுப் பொருட்களில் கலப்படம் செய்வோர் மீதான தண்டனை என்பது குறைவாகவே இருக்கிறது. கடுமையாக இல்லை. இவ்வாறு குற்றம் செய்யும் பலரும் அந்த நேரத்தில் ஒரு அபராதத் தொகையினைக் கட்டிவிட்டு மீண்டும் தொடர்கிறார்கள்.

திரைப்படப் பாடல்

இப்போதெல்லாம் நாட்டில் நடக்கும் பொதுவான விஷயங்களைப் பற்றி எழுதினால் கூட, ஏதோ தேச விரோதம் என்ற அளவிற்கு போய் விடுகிறார்கள். இந்திய விடுதலைக்குப் பிறகு, அப்போதைய காங்கிரஸ் சர்க்கார் ஆட்சியின் போது இருந்த கலப்படத்தைப் பற்றி ஒரு பாடல் திரும்பிப்பார் (1953 இல் வெளிவந்த) என்ற படத்தில் வருகிறது.

இந்த பாடலில், எப்படியெல்லாம் கலப்படம் செய்யப்படுகிறது என்பது குறித்து நையாண்டி செய்யப்படும். பாடலாசிரியர்: கவிஞர் கண்ணதாசன் - பாடியவர் : எஸ் சி கிருஷ்ணன் - இசை: ஜி.ராமநாதன் - நடிப்பு : குலதெய்வம் ராஜகோபால். - இந்த படத்திற்கு கதை - வசனம் எழுதியவர் கலைஞர் மு.கருணாநிதி என்பது குறிப்பிடத்தக்க விஷயம். நடிகர் திலகம் சிவாஜி கணேசன், பண்டரிபாய், கே.ஏ.தங்கவேலு நடித்தது. – கீழே பாடல் வரிகள்.

கலப்படம் கலப்படம்
எங்கும் எதிலும் கலப்படம்
அதை எடுத்துச் சொன்னாலே புலப்படும்
கலப்படம் கலப்படம்
கஷ்டப்படும் தொழிலாளரோடு –
கருங் காலிக் கூட்டம் கலப்படம்
முதலைக் கண்ணீர் வடிக்கும் தலைவன்
முதலாளியிடம் கலப்படம்   - (கலப்படம்) 
                                                                                             
ஆழாக்குப் பாலினிலே
அரைப்படி தண்ணீர் கலப்படம்
அரிசியிலே மூட்டைக்கு
அரை மூட்டை கல்லு கலப்படம்
அருமையான நெய்யினிலே
சரிபாதி டால்டாவும் கலப்படம்
காப்பிக் கொட்டையில் புளியங்கொட்டையும்
முழுக்க முழுக்க கலப்படம் -   (கலப்படம்) 

இந்த பாடலைக் கண்டு கேட்டு மகிழ மேலே உள்ள திரையை கிளிக் செய்யுங்கள். ( நன்றி: Youtube - https://www.youtube.com/watch?v=BG2McFL6QEY  )

தொடர்புடைய எனது பதிவு:

அன்னதானம் செய்ய அரசு கட்டுப்பாடு http://tthamizhelango.blogspot.com/2014/02/blog-post_8.html