Tuesday 31 July 2012

திருச்சி மலைக் கோட்டை - விபீஷணர் பாதம்


நான் அப்போது உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த நேரம். நான் படித்த பள்ளி திருச்சி நகருக்கு மத்தியிலும் மலைக் கோட்டைக்கு அருகாமையிலும் உள்ளது. அக்கம் பக்கம்,  குறிப்பாக மலைக் கோட்டையைச் சுற்றி இருந்த பகுதிகளைச் சேர்ந்தவர்கள் அந்த பள்ளியில் அதிகம் படித்தனர். அவர்களில் சிலர் எனது வகுப்பு நண்பர்கள் ஆனார்கள். அவர்களோடு மதியம் சாப்பாட்டு இடைவேளையின் போதோ அல்லது ஆசிரியர் வராத வகுப்புகளிலோ அரட்டை நடக்கும். அப்போது  அவர்கள்  மலைக் கோட்டையிலிருந்து தஞ்சைக்கு செல்லும் ரகசிய சுரங்க வழிகளைப் பற்றியும், மலைக் கோட்டையில் இருக்கும் குகைகளைப் பற்றியும் சுவாரஸ்யமாக   சொல்வார்கள். அதேபோல் மலைக் கோட்டையின் வடக்குப் பக்கத்தில் வெளிப் புறத்தினை ஒட்டிய நீண்ட இடுக்கின் வழியே சென்றால் கடைசியில் ஒரு குகை இருப்பதாகவும் அங்கு விபீஷணர் பாதம் இருப்பதாகவும் அங்கு செல்ல குனிந்து கொண்டே செல்ல வேண்டும் என்றும் ஆவலைத் தூண்டினார்கள். மேலும் நாங்கள் படிக்கும் பள்ளியின் மைதானத்திலிருந்து அந்த இடத்தைப் பார்க்கும் போது எப்போதாவது  சிலர் குனிந்து கொண்டே அந்த இடுக்கில் செல்வது தெரியும்.
 
அப்போதெல்லாம் மலைக் கோட்டையைச் சுற்றி கீழேயுள்ள இடங்களில் வெட்ட வெளி இடங்களும், நீட்டிக் கொண்டு இருக்கும் பாறைகளும் , சின்னச் சின்ன பள்ளங்களும், ஒன்றிரண்டு பெரிய பள்ளங்களும் இருக்கும். அந்தப் பகுதியில் உள்ளவர்கள் வளர்க்கும் ஆடுகள் திரிந்து கொண்டு இருக்கும். இப்போது அந்த இடங்களை தூர்த்து ஆக்கிரமிப்பு செய்து விட்டார்கள். 
 
ஒரு நாள் நண்பர்களுடன் அந்த இடங்களைப் பார்க்க முடிவாயிற்று. வீட்டில் சொன்னால் விட மாட்டார்கள். எனவே நண்பனைப் பார்க்கச் செல்வதாகச் சொல்லிவிட்டு மலைக்கோட்டை உள்வீதியில் இருந்த  நண்பனைப் பார்க்க நானும் இன்னொரு நண்பனும் சென்றோம். அங்கிருந்து மலக்கோட்டையின் மேற்குப் புறம் பளீரென்று பாறை தெரியும் பகுதியில் ஏறி விளையாடினோம்.. அங்கு பொம்மக்கா எனப்படும் சிறு செடிகளும் பொன்வண்டு எனப்படும் பச்சை நிற வண்டுகளும் அதிகம் இருந்தன. அங்கிருந்து தெப்பக் குளத்தினையும் கிறிஸ்தவ தேவாலயத்தையும் கண்டு ரசித்தோம். அதன் பிறகு கீழே இறங்கி மலைக் கோட்டையின் கிழக்குப் பகுதிக்குச் சென்றோம். அங்குள்ள ஒரு இடத்தின் பெயர் சறுக்குப் பாறை. பெயருக்கு ஏற்ப இருந்தது  அந்த இடம். அங்கு விளையாடியபோது கீழே ஒரு பெரிய பள்ளம். நல்லவேளை அதற்குள் விழுந்து விடவில்லை. எனது நண்பன் அங்கிருந்து மேலே பாறை இடுக்கில் ஒரு ஆள் குனிந்து கொண்டே செல்லும் ஒரு வழியைக் காட்டினான். அங்கு செல்வதற்கு உச்சிப் பிள்ளையார் கோயில் வந்து  கீழே இறங்க வேண்டும் என்று சொன்னான். அவனும் இதுவரை அங்கு சென்றதில்லை. அப்போது அங்கு வந்த ஒரு பெரியவர் எங்களை அதட்டி அந்தப் பக்கம் எல்லாம் போகக் கூடாது என்று விரட்டி விட்டார். இன்னோரு நாள் பார்த்துக் கொள்ளலாம் என்று பிரிந்தோம்.

அதற்குள் எங்கள் வீட்டில் நான் ரொம்ப நேரம் இல்லாததால் தேடி இருக்கிறார்கள். நான் வந்ததும் பெரிதாக ஒன்றும் நடக்கவில்லை. நான் சும்மா இருக்காமல் எங்கள் வீட்டிற்கு அருகில் இருந்த சித்தப்பா வீட்டில் நான் சென்று வந்த விவரங்களை உளறி விட்டேன். அவர்கள் மூலம் இதனைக் கேட்ட என் அம்மா ரொம்பவும் பதறிப் போனார். என் அப்பா என்னைக் கூப்பிட்டு அறிவுரை சொல்லியதோடு அந்த இடத்தைப் பற்றிய அவரது அனுபவத்தினையும் சொன்னார். அவர் லால்குடி பள்ளியில் படிக்கும்போது நண்பர்கள் இருவரோடு மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார் கோயில் சென்று அங்கிருந்து கீழே இறங்கி ( அப்போது சுற்றுச் சுவர் கிடையாது ) அந்த நீண்ட இடுக்கின் வழியே செருப்பில்லாமல் குனிந்து கொண்டே சென்றனர். கடைசிவரை ( உச்சிப் பிள்ளையார் கீழ்புறம் ) சென்று விபீஷணர் பாதம் கண்டு வந்தனர். திரும்ப வரும்போது அனுபவம் இல்லாத படியினாலும் பயத்தின் காரணமாகவும் என் அப்பாவிற்கு கால் பாதங்கள் வேர்க்கத் தொடங்கி விட்டன. மேலும் பாறையும் வழுக்கத் தொடங்கி விட்டது. எப்படியோ மலையிலிருந்து கீழே விழாமல் திரும்ப வந்து சேர்ந்து விட்டார்.   

என் அப்பா சொன்னதைக் கேட்டு நானும் அப்புறம் அங்கு செல்லவே இல்லை.. இப்போது அந்த இடத்திற்கு யாரும் செல்வதாகத் தெரியவில்லை. இப்போதும் நீங்கள் திருச்சி மலைக் கோட்டையின் வடக்குப் பக்கத்தை எங்கிருந்து பார்த்தாலும் விபீஷணர் பாதம் இருக்கும் குகைக்குச் செல்லும்,  நீளமான அந்த இடுக்கு வழியைப் பார்க்கலாம்.

விபீஷணர் பாதம் வரலாறு:

இலங்கை போருக்குப் பின்னர் ராமனுக்கு பட்டாபிசேகம் நடக்கிறது. அதில் கலந்து கொண்டு திரும்பும் விபீஷணனுக்கு ராமன் தன் நினைவாக ஸ்ரீரங்கநாதர் சிலையை பரிசாகத்  தருகிறான்.  எடுத்துச் செல்லும்போது கீழே எங்கும் வைக்கக் கூடாது என்ற நிபந்தனையையும் சொல்கிறான். ஆகாய மார்க்கமாக வரும் விபீஷணன், வழியில் சோலைகளோடு கூடிய காவிரியைக் கண்டு நீராட விரும்புகிறான். கீழே இறங்கி சிலையை தரையில் வைக்கக் கூடாதே என்று எண்ணும்போது அங்கே சிறுவன் வடிவில் வந்த விநாயகரிடம்  சிலையை  வைத்திருக்கச் சொல்லிவிட்டு காவிரியில் நீராடுகிறான். சிறுவன் சிறிது நேரம் அந்த சிலையை கைகளில் வைத்திருந்து விட்டு தரையில் வைத்து விடுகிறான். காவிரியில் நீராடி முடித்த விபீஷணன் தரையில் வைக்கப் பட்ட சிலையை எடுக்கும் போது எடுக்க முடியவில்லை. தரையோடு ஒட்டிக் கொண்ட அந்த சிலையை பெயர்த்தெடுக்கவும் முடியவில்லை. கோபம் கொண்ட விபீஷணன் அந்த சிறுவனை அடிக்க முற்படும்போது அவன் ஓடிப் போய் அருகிலுள்ள மலையின் (திருச்சி மலைக்கோட்டை) உச்சியில் உட்கார்ந்து கொள்கிறான். விபீஷணன் துரத்திச் சென்று சிறுவன் தலையில் குட்டுகிறான். சிறுவன் மலை உச்சியில் அமர்ந்த இடம் திருச்சி உச்சிப் பிள்ளையார் கோயில் என்றும், விபீஷணன் அவர் தலையில் குட்டும்போது நின்ற இடத்தில் உருவான பாதம் இரண்டும்  “ விபீஷணர் பாதம் “  என்றும் அழைக்கப் பெற்றது. உச்சிப் பிள்ளையாருக்கு இதனால் தலையில் பள்ளம் ஏற்பட்டது. காவிரியில் சோலைகள் நடுவே வைக்கப்பட்ட ஸ்ரீரங்கநாதர் சிலை இருந்த இடம் ஸ்ரீரங்கம் ஆயிற்று.

பச்சை மாமலைபோல் மேனி பவளவாய் கமலச்செங்கண்
அச்சுதா! அமரேறே! ஆயர் தம் கொழுந்தே என்னும்

இச்சுவை தவிர யான்போய் இந்திரலோகம் ஆளும்

அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே.
 
                                                            
                                                         - தொண்டரடிப்பொடியாழ்வார்   .


( PHOTOS  THANKS TO  “ GOOGLE ” )




 

Thursday 26 July 2012

எனது பெயர் – பெற்றோர் வைத்த பெயர்தான்.

பெயரில் என்ன இருக்கிறது?  ( WHAT’S IN A NAME? )  இது ஷேக்ஸ்பியர் நாடகத்தில் ஓரிடத்தில் வரும் வாசகம். எனது பெயரைச் சொன்னவுடன் நிறையபேர் கேட்கும் கேள்வி (புனைபெயரோ என்ற அர்த்தத்தில்) “நீங்களாகவே உங்கள் பெயரை மாற்றி வைத்துக் கொண்டீர்களா? என்பதுதான். இல்லை எனது அப்பா வைத்த பெயர்தான் என்று சொல்லி நான் சலித்துக் கொள்வதில்லை. சொல்ல வேண்டியது என் கடமை. எனது தந்தை தமிழார்வம் உள்ளவர். தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்ற கொள்கை கொண்டவர். வடமொழியில் இருந்த சண்முகம் என்ற தனது பெயரை திருமுகம் என்று தமிழில் மாற்றம் செய்து கொண்டவர். ஊர் பெயரினையும் சேர்த்து திருமழபாடி திருமுகம் என்றுதான் எழுதுவார். நான் பிறப்பதற்கு முன் நல்லபடியாக ஆக வேண்டும் என்று திருச்சி திருவெறும்பூர் மலைக்கோவில் ஈசனை வேண்டிக் கொண்டதாகச் சொல்வார். தமிழ், சிலப்பதிகாரம் என்பதனை கருத்தில் கொண்டு நான் பிறந்தவுடன் (01.03.1955) அவரே எனக்கு வைத்த பெயர்தான் தமிழ் இளங்கோ” . வித்தியாசமான பெயர்தான்.

எங்கள் உறவினர்கள் அனைவரும் என்னை இளங்கோ என்றுதான் அழைப்பார்கள். கிராமத்தில் எனது அப்பாயி (அப்பாவின் அம்மா), அம்மாச்சி (அம்மாவின் அம்மா) இருவரும் இளங்கோவே ….. என்றுதான் விளிப்பார்கள். சிலர் என்னை தமிழ் என்றும் அழைத்ததுண்டு.

எனது படிப்பு முழுதும் திருச்சியில்தான்.முதல் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு முடிய (ஆர்.சி நடு நிலைப் பள்ளி), 6.ஆம் வகுப்பு முதல் S.S.L.C முடிய (நேஷனல் உயர்நிலைப் பள்ளி), புகுமுக வகுப்பு (நேஷனல் கல்லூரி), பி.ஏ.- தமிழ் இலக்கியம் (பெரியார் ஈ.வெ.ரா.கல்லூரி). எம்.ஏ தமிழ் இலக்கியம் (நேஷனல் கல்லூரி). கல்லூரிப் படிப்பும் எனது  அப்போதைய விருப்பமாக தமிழ் இலக்கியமே அமைந்து விட்டது. எனவே, எனது படிப்பு முடியும் வரை எனது பெயர் பற்றி  கேட்பவர்களுக்கு விளக்கம் சொல்லி மாளாது. அதேபோல எனது பெயரில் உள்ள தமிழ் என்பதற்கு கல்லூரி அலுவலகங்களில் ஆங்கிலத்தில் எழுதும்போது TAMIL, TAMIZ , TAMIZH என்று இஷ்டத்திற்கு எழுதுவார்கள். நான் எனது பெயரை சரியாக THAMIZH ELANGO  என்றுதான் எழுதுவேன்.எனக்கு பிடித்த தமிழ் இலக்கியங்கள் இரண்டு.  சிலப்பதிகாரம், கம்பராமாயணம் . இரண்டையும் முழுமையாக ஆர்வத்தோடு படித்து இருக்கிறேன். 


கல்லூரி விரிவுரையாளராக ஆக வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். முன்பெல்லாம் முதுகலை பட்டம் பெற்றாலே போதும். விரிவுரையாளர் ஆகலாம். நான் எம்.ஏ முடித்த நேரம் M.Phil படிப்பும் வேண்டும் என்று ஒரு சட்டம் கொண்டு வந்தார்கள். வங்கித் தேர்வு, நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்று இருந்த படியினால் குடும்பச் சூழ்நிலை கருதி கிடைத்த வங்கி வேலையில் சேர்ந்து விட்டேன்.   

வங்கியில் வேலைக்கு சேர்ந்த புதிதில், எனது பெயரை வைத்து, நான் தீவிர தமிழ் பற்றாளனோ அல்லது ஏதேனும் கட்சிக்காரனோ, என்று என்னிடம் சிலர் நெருங்கிப் பழகாமல் எட்டவே இருந்தனர். நான் அப்படி இல்லாத படியினாலும், எல்லோரிடமும் நன்கு பழகியதாலும் அவர்கள் நண்பர்கள் ஆனார்கள். வங்கியில் சேர்ந்ததும், ஆரம்பத்தில் எனக்கு அரசாங்க சலான்களுக்குப் பணம் வாங்கும் ( GOVERNMENT CASH COUNTER) வேலை. எனது பெயர் நீண்டு இருப்பதால், ஆயிரக் கணக்கான சலான்களில் கையொப்பம் போட்டு போட்டு எனக்கென்று ஆரம்பத்தில் இருந்த கையொப்பமே மாறிவிட்டது.

வங்கியில் பணிபுரியும் போது கவியரங்கக் கூட்டம் ஒன்றில் வங்கி அதிகாரி ஒருவரைச் சந்தித்தேன். பெயர் கருப்பையா பாரதி. அவர் சொன்னார் இளங்கோ நானும் உங்களைப் போல பெயருக்கு முன்னால் தமிழ் சேர்த்து தமிழ் கருப்பையா என்று வானொலியில் கவிதை வாசிக்கச் சென்றேன். அங்குள்ள நண்பர் இப்போதெல்லாம் ( எமர்ஜென்சி நேரம்) பெயருக்கு முன்னால் தமிழ் போடாதீர்கள் என்று சொன்னார். எனவே நான்  கருப்பையா என்ற பெயருக்குப் பின்னால் பாரதியை சேர்த்து கருப்பையா பாரதி ஆனேன் “ என்று சொன்னார். எனக்கு இது மாதிரி பிரச்சினைகள் ஏற்பட்டதில்லை. அவரிடம் மட்டுமல்லாது மற்ற நண்பர்களிடமும், எனது பெயரை நானாக மாற்றிக் கொள்ளவில்லை. அப்பா வைத்த பெயர்தான் என்று விளக்க வேண்டியதாயிற்று.

பெற்றோர் வைத்த எனது பெயரை மாற்றவோ அல்லது சுருக்கவோ எனக்கு விருப்பம் இல்லை. எனவே நான் தமிழ் இளங்கோ என்றே இருக்க ஆசைப்படுகிறேன்.

கல்லூரி வாழ்க்கையின் போது மறக்க முடியாத இலங்கை வானொலி அப்போது ஒலி பரப்பக் கேட்ட ஒரு பாடல் இதோ.... ....

என்ன பேரு வைக்கலாம்?
எப்படி அழைக்கலாம்?
சின்ன சின்ன கண்ணைக் காட்டி
சிரிக்கும் எங்க பாப்பாவுக்கு
என்ன பேரு வைக்கலாம்?
அன்னம் என்று பேரு வச்சா
அப்படியே நடக்கனும்
சொர்ணம் என்று பேரு வச்சா
தங்கம் போல ஜொலிக்கனும் அதனால்
என்ன பேரு வைக்கலாம்?
எப்படி  அழைக்கலாம்?
-         பாடலாசிரியர்: (தெரியவில்லை) படம்: எங்கள் செல்வி (1960)

இதில் ஒவ்வொரு பெயராகச் சொல்லி, பெயருக்கு ஏற்றாற் போல் ஆகிவிடும் என்று, அது வேண்டாம், இது வேண்டாம் என்று காரணம்  சொல்லி விட்டு , முடிவாக  குழந்தைக்கு தமிழ் செல்வி என்று பெயர் வைப்பார்கள். இந்த பாடல் மிகவும் நீண்டது.  எனவே பாடல் வரிகள் போதும்.




Monday 16 July 2012

நானும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸும்!


ஒரு மாலைப் பொழுது, சிறு வயதில் உயர்நிலைப்பள்ளிப் பருவத்தில் எனக்குத் தெரிந்த ஒருவரை (என்னை விட வயதில் பெரியவர்) பார்க்க அவர் வேலை செய்யும் இடத்திற்குச் சென்றேன். அப்போது அவர் திருச்சி சிங்காரத் தோப்பில் இருந்த NCBH  எனப்படும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸில் தற்காலிக ஊழியர். அப்போது அவர் கடையில் இல்லை. எதிரே நடக்கும் அவர்களது புத்தகக் கண்காட்சியில் இருப்பதாகச் சொன்னார்கள். இப்போது திருச்சி சிங்காரத் தோப்பில் இருக்கும் பர்மா பஜார் கடைகள் அப்போது கிடையாது. காலி இடத்தில் கொட்டகை போட்டு புத்தக கண்காட்சி நடைபெற்றுக் கொண்டு இருந்தது. உள்ளே சென்று அவரைப் பார்த்தேன். உட்காரச் சொன்னார்.


அவரிடம் பேசி விட்டு உள்ளே புத்தகங்களை பார்வையிட்டேன். சிறு வயது என்பதால் அங்கிருந்த சிறுவர் கதைகளைப் படிக்க ஆசை. அதிலும் அங்கு இருந்த வண்ணமயமான தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட சோவியத் நாட்டு சிறுவர் கதைகளைப் பார்க்க பார்க்க ஆர்வம் உண்டாகியது. ஒன்றிரண்டு புத்தகங்களை அங்கேயே உட்கார்ந்து படித்தேன். அதுமுதல் தினமும் மாலை அங்கே சென்று எனது படிக்கும் ஆர்வத்தை தணித்துக் கொண்டேன். அங்கு இருந்த தோழர்களும் என்னை ஆரம்பத்தில் விசாரித்ததோடு சரி. நண்பர்கள் ஆகி விட்டனர். NCBH நிறுவனத்தார் ஒரு இடத்தில் புத்தகக் கண்காட்சி முடிந்த கையோடு உடனே வேறு ஒரு இடத்தில் தொடங்கி விடுவார்கள்.பெரும்பாலும் பஸ் ஸ்டாண்ட், பள்ளிகளில் நடத்துவார்கள். இப்படியாக எனது நண்பர் அங்கு வேலை செய்யும் வரை புத்தகம் வாசிக்கும் பழக்கம் தொடர்ந்தது.

 
அவர்களிடம் தமிழாக்கம் செய்யப் பட்ட ருஷ்ய நூல்கள் அதிகம் இருக்கும். விலையும் ரொம்ப குறைவு. மற்ற பதிப்பகங்களின் நூல்களை அவ்வளவாக வைத்து இருக்க மாட்டார்கள். (ஜெயகாந்தன் நூல்களை வெளியிட்ட மீனாட்சி புத்தக நிலையம் போன்றவைகள் விதிவிலக்கு). அப்போது சிறுவர் கதைகள், இலக்கியம்,  மார்க்ஸிம் கார்க்கி, டால்ஸ்டாய், மிக்கயீல் ஷோலகவ், பிரேம்சந்த், புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், கி.ராஜநாராயணன் போன்றவர்களது நூல்களையும், கம்யூனிசம் சம்பந்தப்பட்ட நூல்களையும் படித்தேன். ஆனாலும் அவர்கள் கட்சியில் சேரவில்லை. இப்படியாக எனது படிக்கும் பழக்கம் அதிகமானது. இப்போதும் ஒரு மணி நேரமாவது ஏதேனும் ஒரு புத்தகத்தைப் படித்தால்தான் அன்றைய தினம் திருப்தி அடைகிறது.

ஒருநாள் எனது நண்பர் வேலையிலிருந்து நின்றுவிட நான் அங்கு அதிகம் செல்லவில்லை.அதன் பின் கல்லூரி வாழ்க்கையின் போது எப்போதாவது செல்வேன். வங்கி வேலையில் சேர்ந்த பின்பு, அப்போது வாங்க முடியாத நூல்களை ஆசை தீர வாங்கினேன். மற்ற பதிப்பக, எழுத்தாளர்களின் நூல்களையும் வாங்கினேன். மீண்டும் மீண்டும் படித்தேன்.

சோவியத் ரஷ்யா உடைந்த பிறகு அவர்கள் புத்தக நிறுவனமும் தனியார் நிறுவனம் போல் மாறிவிட்டது. இப்போது மற்ற பதிப்பகங்களின் புத்தகங்களையும் வைத்து இருக்கிறார்கள். வழக்கம் போல புத்தகக் கண்காட்சி எல்லா ஊர்களிலும் நடத்துகிறார்கள். எந்த ஊர் சென்றாலும் பஸ்ஸை விட்டு இறங்கியதும் பஸ் ஸ்டாண்டில் தென்படுவது NCBH – இன் புத்தகக் கண்காட்சிதான். எல்லா இடத்திலும் புது ஆட்கள். நான் அங்கு புத்தகம் வாங்கச் செல்லும்போது நண்பர்கள் ஆகி விடுகிறார்கள். எனக்கு வாசிப்பு அனுபவத்தைத் தூண்டிய, முன்பு NCBH – இன் புத்தக கண்காட்சியில் வாசித்த அந்த நாட்கள் மறக்க இயலாத நாட்கள்.
 
( PICTURES :  THANKS TO  “ GOOGLE ” )












Saturday 14 July 2012

என்றுமே எனக்கு குருவாய்!


                                   ( PHOTO  THANKS TO  “ GOOGLE ” )

எத்தனை முறை தப்பாய் எழுதினாலும்
தாயனைய தவறினைத் திருத்தி
ஆனா ஆவன்னா சொல்லித் தந்த
முகம் மட்டும் நினைவில் நிற்கும்
அந்த முதல் வகுப்பு ஆசிரியை
எனது முதல் குருவாய்!

காணாத ஊரினில் ஒருவரைக்
காணச் சென்ற போது!
ஒற்றைப் பனை அருகே
இரண்டு ஒற்றையடிப் பாதைகள்
எந்த ஊருக்கு எந்தப் பாதை
என்று தெரியாதே நான் விழித்தபோது
வழிகாட்டிச் சென்றான்
மாடோட்டும் சிறுவன் ஒருவன்!
அவனே அங்கே குருவாய்!

புதிதாய் வேலைக்குச் சேர்ந்த போது
வங்கிப் பணி, பண சமாச்சாரம் என்றே
நமக்கென்ன என்று எல்லோரும்
ஒதுங்கி ஒதுங்கிச் சென்றனர்!
ஒருவர் மட்டும் புன்னகையோடு
கேட்கும் போதெல்லாம் ஐயம் தீர்த்து
சொல்லிக் கொடுத்தார் வேலைகளை
அவரே அங்கே குருவாய்!

அலைவீசும் பிரச்சினைகள்
எழுந்த போதெல்லாம் எனக்கு
ஆறுதல் சொல்லி என்றும்
நல்வழி காட்டி யோசனைகள்
சொன்ன நண்பர் ஒருவர்
வாழ்வியலில் எனக்கு குருவாய்!

திசைகெட்டு திசைமாறிப்
போய்விடாமல் என்னைத் தடுத்து
ஆட்கொள்ளும் இறைவன்
பல்வேறு நிலைகளில்
பல்வேறு வடிவில்
என்றுமே எனக்கு குருவாய்!

                             




Wednesday 11 July 2012

எல்.ஆர். ஈஸ்வரியின் மயக்கும் குரல்

மாரியம்மன் பாடல்கள் என்றால் அது எல்.ஆர். ஈஸ்வரி பாடியதுதான். தமிழ் நாட்டில் எந்த ஊரில் அம்மன் திருவிழா நடந்தாலும் எல்.ஆர். ஈஸ்வரியின் கணீர் குரலில் மாரியம்மன் பாடல்களை ஸ்பீக்கரில் வைத்துக் கொண்டு இருப்பார்கள்.

கற்பூர நாயகியே கனகவல்லி
காளி மகமாயி கருமாரியம்மா
பொற்கோவில் கொண்ட சிவகாமியம்மா
பூவிருந்தவல்லி தெய்வயானை அம்மா
விற்கோல வேதவல்லி விசாலாக்ஷி
விழிக்கோல மாமதுரை மீனாக்ஷி
சொற்கோவில் நான் அமைத்தேன் இங்கு தாயே
சுடராக வாழ்விப்பாய் என்னை நீயே.
                                  - பாடல்: அவினாசி மணி

எங்கள் திருச்சியில் ஆண்டுதோறும் காவிரிக் கரையில் உள்ள தேசிய உயர்நிலைப் பள்ளி மைதானத்தில் அரசு பொருட்காட்சி நடைபெறும். அப்போது திறந்த வெளிக் கலையரங்கில் நடைபெறும்  எல்.ஆர். ஈஸ்வரி இன்னிசைக் கச்சேரிக்கு மக்கள் திரளாக வருவார்கள். குறிப்பாக அப்போதைய இளைஞர்கள ஆக்‌ஷனோடு கூடிய அவர் பாடல்களை கேட்க ஆர்வமாக வருவார்கள். மாரியம்மன் பாடல்களை மட்டுமல்லாது, பல மயக்கும் தேனிசைப்  பாடல்களையும் திரைப் படத்தில் பாடியவர்.

தமிழ்நாட்டின் பல ஊர்களில், குறிப்பாக கிராமங்களில் மணமகளை மணமேடைக்கு அழைத்து வரும்போது எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய,

வாராய் என் தோழி வாராயோ
மணப்பந்தல் காண வாராயோ?
மணமேடை தன்னில் மணமே காணும்
திருநாளைக் காண வாராயோ?
          - பாடல் கண்ணதாசன் படம்: பாசமலர்                    

என்ற தொடங்கும் இந்த பாடலை நிச்சயம் ஒலி பரப்புவதை இன்றும் காணலாம்.

ஆலய்மணி படத்தில் சிவாஜி கணேசன் பாடுவது போன்று ஒரு காட்சி.கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமாஎன்ற அந்த பாடலுக்கு எல்.ஆர். ஈஸ்வரி கொடுத்த ஹம்மிங் அவ்வளவு இனிமையாக இருக்கும்.

இன்னிசைக் கச்சேரி நிகழ்ச்சிகளில் மேடையில் இவர் பாடும் போது பாடலுக்கு ஏற்ப சில ஆக்‌ஷன்களும் செய்வார். அந்த பாடல்கள் திரையில் ஹிட் ஆனதைப் போலவே மேடையிலும் ஒன்ஸ்மோர் போட வைத்தன.

இவ்வளவுதான் உலகம் இவ்வளவுதான்
இவ்வளவுதான் உலகம் இவ்வளவுதான்
எவ்வளவோ இருந்தாலும் 
எப்படித்தான் பார்த்தாலும்  இவ்வளவுதான்
 - பாடல்: அவினாசி மணி (படம்: உலகம் இவ்வளவுதான்)                               

வல்லவன் ஒருவன் படத்தில் வில்லி விஜயலலிதாவுடன் ஜேம்ஸ்பாண்ட் ஜெய்சங்கர் நடித்த ஒரு பாடல், எல்.ஆர். ஈஸ்வரியின் அசத்தலான
குரலில்.

பளிங்கினால் ஒரு மாளிகை
பருவத்தால் மணி மண்டபம்
உயரத்தில் ஒரு கோபுரம்
உன்னை அழைக்குது வா   
 -பாடல்:கண்ணதாசன்                                                            
இந்த பாடலில் வரும் எல்.ஆர். ஈஸ்வரியின் குரல் ஒருவித ஏற்ற இறக்கத்தோடு இருக்கும்.

ஆடவரெல்லாம் ஆட வரலாம்!
காதல் உலகம் காண வரலாம்!
பாவையரெல்லாம் பாட வரலாம்!
பாடும் பொழுதே பாடம் பெறலாம்!
-         பாடல்: கண்ணதாசன் (படம்: கறுப்பு பணம்)

வெள்ளிவிழா என்ற படத்தில் காதல் மன்னன் ஜெமினி கணேசனும் நடிகை ஜெயந்தியும் ஜோடியாக நடித்து இருப்பார்கள். ஜெமினி கணேசன் சேஷ்டைகளுக்கு ஏற்ப ஜெயந்தி ஒரு பாடல் காட்சியில் நடித்து இருப்பார். பாடியவர் எல்.ஆர்.ஈஸ்வரி. இதோ அந்த பாடல்.

காதோடுதான் நான் பாடுவேன்
மனதோடுதான் நான் பேசுவேன்
விழியோடு தான் விளையாடுவேன்
உன் மடிமீது கண்மூடுவேன்  
          - பாடல்: வாலி (படம்: வெள்ளி விழா)

பணமா பாசமா என்று ஒரு படம். அதில் நடிகை விஜய நிர்மலா தள்ளு வண்டியில் பாடிக் கொண்டே எலந்த பழம் விற்பார். அந்தக் காட்சிக்குத் தகுந்தவாறு “எலந்த பயம் எலந்த பயம் “ என்ற பாடலை மெட்ராஸ் பாஷையில் பாடி இருப்பார். இந்த பாடல் தமிழ் நாட்டை ஒரு கலக்கு கலக்கியது.

இதே போல் ஜெயலலிதா ஒரு படத்தில் தள்ளு வண்டியில் இளநீர் விற்கும் போது நான் ஏழு வயசிலே எளநி வித்தவ( பாடல்: வாலி படம்: நம்நாடு ) என்று பாடுவார். இதற்கு பின்னணி பாடியவர் ஈஸ்வரிதான்.

தில்லானா மோகனாம்பாள் என்ற படத்தில் நடிகை மனோராமா “பாண்டியன் நானிருக்கஎன்று ஒரு டப்பாங் குத்து ஸ்டைலில் ஒரு பாடலைப் பாடி ஆட்டத்தையும் போடுவார். அது மனோரமாவின் சொந்தக் குரல் போல இருந்தது.. ஆனால் மூச்சு விடாமல் அந்தப் பாட்டை பின்னணியில் பாடி அசத்தியவர் எல்.ஆர். ஈஸ்வரிதான்.


இன்னும் நிறைய பாடல்கள். சொல்லிக் கொண்டே போகலாம்.

இவரேதான் அவரே ( படம்: நல்ல இடத்துச் சம்பந்தம்)
புத்தி சிகாமணி பெற்ற பிள்ளை (படம்: இருவர் உள்ளம்)
சீட்டுக்கட்டு ராஜா ராஜா ( படம்: வேட்டைக்காரன்)
பட்டத்து ராணி ( படம்: சிவந்த மண்)
பிறந்த இடம் தேடி (படம்: நான் ஆணையிட்டால்)
முத்துக் குளிக்க வாரீகளா ( படம்: அனுபவி ராஜா அனுபவி )
ராஜ ராஜஸ்ரீ (படம்: ஊட்டிவரை உறவு)
அடி என்னடி உலகம் இதில் எத்தனை கலகம் (படம்: அவள் ஒரு தொடர் கதை)
ஆட்டுக் குட்டி ஆட்டுக் குட்டி மாமாவைப் பாரு ( படம்: மணி ஓசை)

( குறிப்பு: சூழ்நிலையின் காரணமாக என்னால் தொடர்ச்சியாக வலைப் பதிவுகள் பக்கம் வர இயலவில்லை. சில பதிவர்கள் சொல்லிக் கொண்டே, விடை பெற்றுச் சென்று விட்டனர். தொடர்ச்சியாக எழுதி வந்த பல பதிவர்களைக் காண இயலவில்லை. என்னையும்  அந்த வரிசையில் சேர்த்து விடக் கூடாது என்பதற்காக  போட்ட சினிமா பதிவு இது)






Wednesday 4 July 2012

மனதின் ஆட்டம்!


உரிக்க உரிக்க வெங்காயத்தில்
இறுதியில் ஒன்றுமே இல்லை!
கண்ணீர்தான் வந்தது!

நினைத்து நினைத்துப் பார்த்தேன்
வாழ்க்கை நிலையாமையில் முடிந்தது!

ரசித்து ரசித்துப் பார்த்தேன்
வாழ்க்கை தேனாய் இனித்தது!

குடிசையில் வாழ்ந்தாலும்
கோபுரத்தில் இருந்தாலும்
மனதின் ஆட்டம் ஒன்றே!

Sunday 1 July 2012

” பெண் என்று பார்க்கிறேன் ” - சாமான்யனும் தசரதனும்

எனது பள்ளிப் படிப்பு, கல்லூரிப் படிப்பு சமயம், எங்களது குடும்பம் வாடகை வீட்டில் இருந்தது. அப்போது நாங்கள் இருந்த பகுதி நகரத்தின் ஒரு பகுதியில் நடுத்தர வகுப்பினர் இருந்த பகுதியாகும். அங்கு பல தரப்பட்ட மக்களின் பல்வேறு பிரச்சினைகளைக் காண நேர்ந்தது.

ஒரு குடும்பம். புருசனுக்கு ரெயில்வேயில் கலாசி வேலை. பெண்டாட்டி , மூன்று குழந்தைகள் என்று அளவான குடும்பம். இருந்தாலும் அந்த வீட்டில் எப்போது பார்த்தாலும் சண்டை, சத்தம்தான். அந்த பெண்டாட்டிக்காரி தனது புருசனை ஒரு ஆளாகவே நினைப்பது கிடையாது. அவ்வளவு பேச்சு. மரியாதை இல்லாமல் திட்டுவாள். இவன் அவளை அடிக்க கையை ஓங்குவான். அவள் உடனே ஒரு பொம்பளைய அடிக்கிறியே! உனக்கு வெக்கமா இல்லை? “ என்பான். அவன் கோபம் தலைக்கு ஏற “ பொம்பளைன்னு பார்க்கிறேன். இல்லேன்னா நடக்கிறதே வேற “ என்பான். அவளும் சளைக்காமல் “ யோவ் உன்னால என்ன பண்ண முடியும்என்று உசுப்பேத்துவாள். அவன் வெறியாகி அவளை ரெண்டு சாத்து சாத்துவான். அதுவரை வேடிக்கை பார்த்த அக்கம் பக்கத்தினர், இருவரையும் பிரித்து விட்டு “ ஏய்யா பொம்பளைய போட்டு இப்படி அடிக்கிறேஎன்பார்கள். இப்படியாக சண்டை நடக்கும்.

அந்த பெண் பேசுகின்ற ஒவ்வொரு வார்த்தையும், நடந்து கொள்ளும் முறையும், ஒரு பெண்ணுக்குரிய தன்மையில் இருக்காது. அவனுக்கு அவளை அடிக்கத்தான் தோன்றும். ஆனால் அடிக்க முடியாது. அடித்தால் ஏன் பெண்ணை அடிக்கிறாய் என்பார்கள். விட்டு விட்டால் அவளுக்கு வாய் நீளம். அவனால் எதுவும் பண்ண முடியாது. குடும்ப கவுரவத்தை நினைத்து அமைதியாகி விடுவான்.. இதே நிலைமை ஒரு ராஜாவுக்கும் ஏற்பட்டது. அவர் வேறு யாரும் இல்லை. தசரதன் என்ற அயோத்தி மகா சக்கரவர்த்திதான் அவர். .

என்றோ ஒருநாள் தசரத ராஜன் கண்ணாடியில் காதோரம் நீண்டிருந்த நரைமுடியைப் பார்க்க, தனக்கு வயதாகி விட்டது என்று அப்போதுதான் நினைக்கிறான். எனவே மூத்த மகன் ராமனுக்கு முடிசூட்ட நினைக்கிறான். விடிந்தால் ராமனுக்கு மகுடாபிஷேகம். நாடே மகிழ்ச்சியில் இருக்கும் போது அரண்மனை வேலைக்காரி கூனி தசரதனின் இளைய தாரம் கைகேயிக்கு போதனை செய்கிறாள். வந்தது வினை. தசரத மகராஜா அந்தப்புரம் வரும்போது, தனது சொந்த விவகாரத்தை ஆரம்பிக்கிறாள்.

 
என்றோ தசரதனிடம் கேடடுப் பெற்ற வரங்களை வைத்துக் கொண்டு இன்று அவனை மிரட்டுகிறாள்.. ஒரு பக்கம் முறைப்படி மூத்த மகன் ராமனுக்கு முடி சூட்ட ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன. இளைய தாரமான இவளோ அதையே தடுத்து தனது மகன் பரதனுக்கு முடி சூட்ட நினைக்கிறாள். அது மட்டுமல்ல. ராமன் காட்டுக்கு போக வேண்டும் என்றும் சொல்கிறாள். தசரதனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. தான் ஒரு சக்கரவர்த்தியாக இருந்தும் ஒன்றும் செய்ய முடியவில்லையே என்று உடல் பதறுகிறது. அவளை ஏதாவது செய்தால் என்ன என்று ஆவேசம் அடையும் போது , அவள் ஒரு பெண்ணாயிற்றே  பழி வந்து சேருமே என்று அடக்கிக் கொள்கிறான். அந்த நாளில் அவன் ( ஒரு ஆண் ) பட்ட பாட்டை கம்பன் தனது காவியத்தில் சுவை படச் சொல்லுகிறான்.

நாகம் எனும்கொடியாள், தன் நாவின் வந்த
சோக விடம் தொடர
, துணுக்கம் எய்தா,
ஆகம் அடங்கலும்
, வெந்து அழிந்து, அராவின்
வேகம் அடங்கிய வேழம் என்ன வீழ்ந்தான்.

பூதலம் உற்று, அதனில் புரண்ட மன்னன்
மா துயரத்தினை யாவர் சொல்ல வல்லார்
?
வேதனை முற்றிட
, வெந்து வெந்து, கொல்லன்
ஊது உலையில் கனல் என்ன
, வெய்து உயிர்த்தான்

உலர்ந்தது நா; உயிர் ஓடலுற்றது; உள்ளம்
புலர்ந்தது
; கண்கள் பொடித்த, பொங்கு சோரி;
சலம் தலைமிக்கது
; 'தக்கது என்கொல்?' என்று என்று
அலந்து அலையுற்ற
, அரும் புலன்கள் ஐந்தும்.

மேவி நிலத்தில் இருக்கும்; நிற்கும்; வீழும்;
ஓவியம் ஒப்ப உயிர்ப்பு அடங்கி ஓயும்
;
பாவியை உற்று எதிர் பற்றி எற்ற எண்ணும்
;-
ஆவி பதைப்ப
, அலக்கண் எய்துகின்றான்

பெண்ணென உற்ற; பெரும் பழிக்கு நாணும்;
உள் நிறை வெப்பொடு உயிர்த்து
, உயிர்த்து, உலாவும்;
கண்ணினில் நோக்கும் அயர்க்கும்
; வன் கைவேல் வெம்
புண் நுழைகிற்க உழைக்கும் ஆனை போல்வான்
             
                   - கம்பராமாயணம் (அயோத்தியா காண்டம்) 


முடிவில் தசரதன் தோற்கிறான். இளைய தாரமான கைகேயி அரசியலில் மூக்கை நுழைத்து காரியத்தை சாதித்து விடுகிறாள். அரசியலில் இளைய தாரத்தின் பேச்சை கேட்பது என்பது, அன்றும் இன்றும் என்றும் நடப்பதுதானே!

PICTURE THANKS TO ARTIST:  ASHOK  DONGRE 
(GOOGLE)