Thursday 29 September 2016

யாராத்தாள் செத்தாலும்



இப்போது தமிழ்நாட்டில் யாராவது ஒருத்தர் போயிட்டார்னு அடிக்கடி வதந்திகள் கிளப்பி விட்டுக் கொண்டே இருக்கிறார்கள். செந்தில் செத்துட்டார், கவுண்டமணி அவுட், கே ஆர் விஜயா மரணம் என்று அடிக்கடி பொய்யான வதந்திகள். இதில் சீரியசான செந்தில், புகார் கொடுக்க போலீஸ் வரை சென்று விட்டார் என்று சொன்னார்கள். அதே போல அரசியல் தலைவர்கள் பெயரைச் சொல்லியும்,  போயிட்டாங்க என்று கடைகளை அடைக்கச் சொல்லி பதற்றத்தை உண்டாக்குவார்கள். ஒருமுறை கவிஞர் கண்ணதாசன், தான் இறந்து விட்டதாக ஒரு செய்தியை கிளப்பி விட்டு, நண்பர்கள் எல்லோரும் அலறி அடித்துக் கொண்டு, அழுது கொண்டு தனது வீட்டிற்கு வரும்படி செய்து, தமாஷ் செய்தார் என்று அவரே சொல்லி இருக்கிறார். எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்பதே எல்லோருடைய எண்ணமும்.

இந்த வதந்தியை கிளப்புபவர்கள் பெரும்பாலும் அந்தந்த ஏரியா சமூக விரோதிகளே. இதைச் சாக்கிட்டு ஊரில் கலவரம் மூண்டால், கடைகளை மூடச் சொல்வது, வன்முறையைத் தூண்டி கொள்ளையடிப்பது இவர்களது தொழில். நாம்தான், முக்கியமாக வணிகர்கள் இதுமாதிரியான சமயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.

எது எப்படி இருந்தாலும் எல்லோரும் ஒருநாள் போகக் கூடியவர்களே. இந்த கூத்துக்களையெல்லாம் பார்க்கின்றபோது, எனக்கு ஒரு பழைய பழமொழியும் அதுசார்ந்த கதையும் நினைவுக்கு வருகிறது.

அந்தக் கதை இதுதான்

ரொம்ப, ரொம்ப வருஷத்துக்கு முந்தி நடந்த கதை என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒரு ஊரில் ஒரு புருஷன் அவனுக்கு ஒரு பெஞ்சாதி. அந்த ஊருக்கு அடுத்த ஊரில்தான் இருவரது ஆத்தாள்களும் அவரவரது மற்ற மகன்களோடு இருந்தனர். ஆனால் அவர்களுக்கும் இவர்களுக்கும் இடையில் பேச்சு வார்த்தை இல்லை. இந்தக் காலத்தில் உள்ளது போல் போக்குவரத்து, போன் வசதி, இல்லாத காலம் அது. மேலும் ரேடியோ, ஸ்பீக்கர் என்று இரைச்சல் இல்லாத காலம். எனவே, அந்த ஊர் திருவிழாவில் இரவு வேட்டு போட்டாலும், அல்லது யாராவது இறந்தால் ஊர் கூடி ஒப்பாரி வைத்தாலும் இந்த ஊரில் கேட்கும். அவ்வாறே இந்த ஊரிலிருந்து அந்த ஊருக்கும்.                                                                                                                                                                                       
இவர்களுக்கு அவர்களோடு பேச்சு வார்த்தைகள் இல்லாவிடினும் அந்த ஊரிலிருந்து வந்து போகும் உறவுக்காரர்களிடம் அந்த ஊர் பற்றியும், அவரவர் தாய்களைப் பற்றியும் விசாரித்துக் கொள்வார்கள். ஒருநாள் அந்த ஊரிலிருந்து வந்த ஒருவன், ” இரண்டு கிழவிகளுக்குமே முடியவில்லை. யார் முந்துவார்கள் என்று தெரியவில்லை. இப்பவோ அப்பவோ என்று இருக்கிறது “ என்று சொல்லி விட்டுப் போனான்.

ஒருநாள் இரவு, அடுத்த ஊரிலிருந்து ஊர்மக்கள் ஒன்று சேர்ந்து ஒப்பாரி வைத்து அழும் குரல் ‘ஓ’வென்று கேட்டது. போய் வரலாம் என்றால் நடு இரவு. இந்த புருஷனுக்கும் பெஞ்சாதிக்கும் இறந்தது யார் என்று தெரியவில்லை. எழவு சொல்லி வரும் ஆள் அடுத்தநாள் காலையில்தான் வருவான். எனவே அந்த பெண்ணுக்கு ‘செத்தது நம்ம ஆத்தாவா, அல்லது புருஷனோட ஆத்தாவா” என்று மனதில் ஓடிக் கொண்டே இருக்கிறது. அவளோட புருஷன் மனதிலும் இதே எண்ண ரேகைகள்தான். இருந்தாலும் பெஞ்சாதிக்காரி, தனது சந்தேகத்தை வெளிப்படையாகக் கேட்டும் விடுகிறாள். அதற்கு அந்த புருஷன்காரன் சொன்ன பதில் இதுதான். “யாராத்தாள் செத்தாலும் பொழுது விடிந்தால் தெரிந்துவிடும்” 

பழமொழியும் இதுதான்

இந்தக் கதையை எனக்கு சொல்லியவர் யாரென்று தெரியவில்லை. அல்லது ஏதேனும் ஒரு கதைப் புத்தகத்தில் படித்தேனா என்றும் தெரியவில்லை. இந்த கதையின் வடிவத்தை வேறு மாதிரியும் சிலர் கேட்டு இருக்கலாம். யாராத்தாள் செத்தாலும் பொழுது விடிந்தால் தெரிந்துவிடும் - என்பது பழமொழி.

’இரவும் பகலும்’ என்று நடிகர் ஜெய்சங்கர் நடித்த ஒரு படம்.  அதில் நடிகர் அசோகன் ”எறந்தவன சுமந்தவனும் எறந்திட்டான் அதை இருப்பவனும் எண்ணிப் பார்க்க மறந்திட்டான்” என்று தனது சொந்தக் குரலில் பாடி நடித்து இருக்கிறார்.  பாடல்: ஆலங்குடி சோமு. அந்த பாடலை கண்டு கேட்க கீழே உள்ள யூடியூப் இணைய முகவரியைச் சொடுக்கவும். (நன்றி M/s Columbia Video Films ) 
 https://www.youtube.com/watch?v=BGgdLLH4mXA

Thursday 22 September 2016

தமிழ்நாட்டு சொத்து குவிப்பு வழக்கும் ஸ்ரீரெங்கனை தரிசிக்க வரும் கர்நாடக விஐபிகளும்


நான் எப்போதுமே ஃபேஸ்புக்கா, வலைப்பதிவா என்றால், வலைப்பதிவிற்கே அதிகம் முக்கியத்துவம் கொடுப்பவன். ஃபேஸ்புக்கை நேரம் கிடைக்கும் போது ஒரு ‘ஏரியல் பார்வை’ என்பதோடு சரி. இப்போது கொஞ்ச நாட்களாக எனக்கு வேலைப் பளுவும், அலைச்சலும் அதிகம். எனவே வலைப் பக்கம் படிப்பதோடு சரி. அதில் பதிவுகள் எழுதவோ, மற்றவர்களூக்கு பின்னூட்டங்கள் போடவோ இயலாமல் போய் விட்டது.

ஃபேஸ்புக்கில்

எனவே, சும்மா நாலு வார்த்தைகள் கொண்ட ஒரு பதிவை எனது ஃபேஸ்புக் தளத்தினில் வெளியிட்டேன். அந்த பதிவும், அதற்கு மூத்த வலைப்பதிவர் திரு. நடனசபாபதி அவர்கள் தந்த பின்னூட்டமும் இங்கே.
 
/// உச்சநீதி மன்றமே உத்தர விட்டாலும், காவிரியிலிருந்து ஒரு சொட்டு நீர் கூட தமிழகத்திற்கு தரக் கூடாது – என்று கர்நாடக அரசியல்வாதிகள் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். கேட்டால் காவேரி பொறந்தது எங்க ஊர்தான் என்கிறார்கள். இதில் கட்சி வேறுபாடின்றி, கர்நாடக முன்னாள், இன்னாள் மத்திய, மாநில மந்திரிகளும் அடக்கம்.

அப்புறம் எதற்கு இவர்கள் தமிழ்நாட்டு சொத்து குவிப்பு (ஜெயலலிதா) வழக்கை மட்டும் பெங்களூரு கோர்ட்டில் நடத்த ஒப்புக் கொண்டார்கள் என்று தெரியவில்லை.

கன்னடம், தமிழ்நாடு என்று பிரித்துப் பேசும் இந்த கனவான்களில் பலர், சாமி கும்பிட மட்டும் தமிழ் நாட்டில் இருக்கும் ஸ்ரீரங்கம் வந்து , பரிவட்டம் கட்டிக் கொண்டு ரெங்கநாதனை தரிசித்து செல்வார்கள்.///

Nadanasabapathy Velayutham
Nadanasabapathy Velayutham சொத்துக்குவிப்பு வழக்கை பெங்களூருவிற்கு மாற்றியது சென்னை உயர்நீதி மன்றம்.இதில் கன்னடர்களின் பங்கு எதுவும் இல்லை.
Thamizh Elango T
Thamizh Elango T அய்யா உங்க ஊரு வழக்கு, எங்களுக்கு எதற்கு என்று கர்நாடகம் , மறுத்து இருக்கலாம் அல்லது எதிர்த்து கோர்ட்டில் வழக்கு போட்டு இருக்கலாம் அல்லவா?
Nadanasabapathy Velayutham
Nadanasabapathy Velayutham நீங்கள் சொல்வதும் சரிதான்.

காவிரி அரசியல்:

                                                      ( Picture courtesy: Indian Express)

இந்திய சுப்ரீம் கோர்ட் காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்கச் சொல்லி உத்தரவிட்டதால் கர்நாடகாவில் தீவிர கன்னட அமைப்புகள் கலவரம். சரி. ஒருவேளை கர்நாடகாவிற்கு ஆதரவாக உத்தரவு இருந்து இருந்தால்? அப்போதும் கலவரம்தான் செய்து இருப்பார்கள். எப்படி? தமிழ்நாட்டில் இதற்கு எதிர்ப்பு கிளம்பும். இங்கும் அங்குமாக சில விரும்பத் தகாத சம்பவங்கள் நடக்கும். இதனை எதிர்பார்த்து இருந்த தீவிர கன்னட அமைப்புகள் அப்போதும் கலவரம்தான் செய்வார்கள். இந்த காவிரி பிரச்சினையில் ஒளிந்து இருப்பது ஆட்சியைப் பிடிக்க கர்நாடக அரசியல்வாதிகள் நடத்தும் தமிழர், கன்னடர் என்று பிரித்துப் பார்க்கும் இனவாத அரசியல்.

தமிழ்நாட்டில் காவிரியை வைத்து யாரும் இனவாத அரசியல் செய்வதை தமிழ்நாட்டு மக்கள் விரும்புவதில்லை. அப்படியே ஒன்றிரண்டு பேர் செய்தாலும் இங்கு எடுபடுவதில்லை. 


காவேரி பொறந்தது:                                                                                                             

ஒரு பழைய எம்.ஜி.ஆர் படம். படத்தின் பெயர் பணக்கார குடும்பம்.  கர்நாடகத்தைச் சேர்ந்த சரோஜாதேவி கதாநாயகி. அந்த படத்தில் அவர் கல்லூரி மாணவியாக, கபடி விளையாடுவது போன்று ஒரு காட்சி. அதில் ஒரு பெண், 

காவேரித் தண்ணியிலே குளிச்சி வந்தேண்டி
கரிகால் சோழன் கிட்டே படிச்சி வந்தேண்டி
காவிரிப் பூம்பட்டினத்தைப் பார்த்திருக்கியாடி
கண்ணகி வீடு எங்க வீட்டுப் பக்கம் தாண்டி
சடுகுடு சடுகுடு சடுகுடுசடுகுடு சடுகுடு சடுகுடு

என்று தமிழ்நாட்டு புகழ் பாடுவார். அதற்கு மறுமொழியாக நம்ம சரோஜாதேவி


காவேரி பொறந்தது எங்க ஊர் தாண்டி
காலாலே புலிகளை மிதிச்சவ தாண்டி
ஸ்ரீரங்கப் பட்டணத்தைப் பார்த்திருக்கியாடி
திப்பு சுல்தான் பொறந்தது எங்க ஊர் தாண்டி
சடுகுடு சடுகுடு சடுகுடு
சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு


என்று கர்நாடக புகழ் பாடுவார். பாடலை எழுதியவர் கவிஞர். கண்ணதாசன். தமிழ்நாட்டில் எப்போதுமே இவர் கன்னடர், இவர் தெலுங்கர், இவர் மலையாளி என்று யாரும் பிரித்துப் பார்ப்பதில்லை. எம்ஜிஆரைப் பார்த்தது போலவே பிறமொழி மக்களையும் நம்மில் ஒருவராகத்தான் நாம் நினைக்கிறோம்.

பாடலைக் கண்டு கேட்க இங்கே க்ளிக் செய்யவும். https://www.youtube.com/watch?v=O98bLpYUOl4