Showing posts with label முதுமை. Show all posts
Showing posts with label முதுமை. Show all posts

Tuesday, 24 April 2018

தனிமை.. ஒரு கொடுமை.. ( வாட்ஸ்அப் (Whatsapp) பகிர்வு)

( என்னோடு பணிபுரிந்த நண்பர்கள் பலரும், வாட்ஸ்அப்பில் (Whatsapp) பகிரும் ஆதங்கமான பகிர்வு இதுதான். முதன்முதல் இதனை எழுதியவர் யாரோ? அவருக்கு நன்றி)
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
தனிமை.. ஒரு கொடுமை..

பிள்ளையை.. பெண்ணை பெற்று வளர்த்து.. படிக்க வைத்து ஆளாக்கி.. மணமுடித்து வைக்கிறோம்..வேறு ஊரில.. வேறு மாநிலத்தில்.. வேறு நாட்டில் வேலை நிமித்தமாக சென்று விடுகிறார்கள்..

இங்கு.. 70வயதிற்கு மேல் நமக்கு.. வாழ்ந்த வீட்டில் தனிமை..
இங்குதான் என் மகள் படிப்பாள்.. இங்குதான் விளையாடுவாள்..
என் மகன் கிரிக்கெட் ஆடி உடைத்த ஜன்னல் இதுதான் என்று ஏதோ ஆர்க்கியாலஜி போல அவைகளை நினைத்துப் பார்ப்போம்..


என்ன சமைப்பது?.. என்ன சாப்பிடுவது?.. அ ரை டம்ளர் அரிசி வடித்தாலே மிச்சம்.. பல காய்கள் உடலுக்கு ஒத்துக் கொள்ளாது..

தனிமை.. தனிமை..

அவர்கள் இருக்கும் இடத்திற்கு போகலாம் என்றால் பயணம் ஒரு கொடுமை.. லோயர் பர்த் கிடைக்கவில்லை என்றால் எல்லோரிடமும் பிச்சை எடுக்க வேண்டும். சென்னை போன்ற ஊர்களில் சென்ட்ரல் போய்ச் சேருவதே ஒரு பிரம்ம பிரயத்தனம்..

சரி.. பிள்ளையை வாட்சப்பில் பிடிப்போம்.. பெண்ணை வீடியோ காலில் அழைப்போம்.. என்றால்..அந்த நேரம் அவர்கள்.. ஏதோ மாலில்... ஏதோ ஓட்டலில்.. ஏதோ ஒரு சினிமா தியேட்டரில் இருப்பார்கள்.. கூப்பிடுகிறேன் என்பார்கள்.. அதற்குள் நமக்குத் தூக்கம் வந்து விடும்..

நமக்கு பேரப் பிள்ளைகளின் மேல் இருக்கும் பாசம் அவர்களுக்கு இருக்காது.. மூன்று வயது வரைதான் தாத்தா.. பாட்டி என்று கூப்பிடும்.. பிறகு எப்போது அவர்களை அழைத்தாலும்.. அவன் வெளியே விளையாடுகிறான்.. அவன் கம்ப்யூட்டர் கேம்சில் இருககிறான்.. அவன் டியூஷன் போய்விட்டான் என்ற பதில்தான் வரும்..

வாரம் ஒரு முறையாவது குழந்தைகளைப் பெற்றவர்கள்.. அவர்களுக்கு, தாத்தா பாட்டி கூட பேசச் சொல்லிக் கொடுக்க வேண்டும்.. அப்போதுதான் உறவுகள் விட்டுப் போகாமல் இருக்கும்.அதை விட்டு ஆசையாகக் கூப்பிடும் போது.. வீடியோ காலில் முகத்தைக் காட்டி.. ஹாய்.. என்று ஒன்றைச் சொல் சொல்லிவிட்டு ஓடினால் நமக்கு எப்படி இருக்கும்?

நமது பண்பாடு.. கலாச்சாரம்.. தாத்தா பாட்டி உறவுகளை அவர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டியது.. நமது பிள்ளைகள்தான்.. அதை மறக்கக் கூடாது.

எத்தனை நேரம டிவி பார்ப்பது?.. இந்த அரசியல்களும்.. பொய்களும் நம்மை மேலும் கலங்க வைக்கின்றன.ஊடகங்களில் வரும் விவாதங்களை ஒருவன் தவறாமல் பார்த்தால்.. அதுதான் அவனுக்கு ஆயுள் தண்டனை என்றே ஆகிவிட்டது.

வயதானவர்களுக்கு சொந்த வீட்டில் இருந்தாலும், அது ஒருவகையில் முதியோர் இல்லம் போல் ஆகிவிட்டது.

ஏதோ.. வாட்சப்.. முகநூல் என்று இருப்பதினால் பைத்தியம் பிடிக்காமல் இருக்கிறது..!!!!

கனவில் கூட நம்முடன் முகநூல் நண்பர்கள் இருப்பது போல் ஒரு பிரமை..
ஏதோ.. மார்க்கம்.. மகேசனும்தான் நமக்கு துணை..

😰😰😰😰😰😰😰

Monday, 3 April 2017

முதுமை ஒரு சாபம்



அன்று மாலை, எனது அப்பாவை ( வயது 91.) ஒரு தனியார் மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்று இருந்தேன். அங்கு வந்திருந்த நண்பர் அப்பாவைப் பற்றிய நலன் விசாரித்தார்.அப்போது அந்த நண்பர் ‘ வயதானால் பெரியவர்கள் மீண்டும் ஒரு குழந்தையாக மாறி விடுகிறார்கள்” என்றார். நான் அவருக்கு மறுமொழியாக ‘உண்மைதான். ஆனால் மனித வாழ்வில் முதுமை ஒரு சாபம்” என்றேன்.. அவரும் ”ஏன் அப்படி சொல்லுகிறீர்கள்?” என்று வினவ, நானும் ‘மற்ற உயிரினங்கள் நோயுற்றாலோ அல்லது முதுமை அடைந்தாலோ அவற்றை உணவாக உண்ணும் உயிரினங்கள் அவற்றின் உயிரைப் போக்கி இவ்வுலக கஷ்டத்திலிருந்து  விடுவித்து விடுகின்றன. ஆனால் மனிதன் முதுமை அடையும்போது படும் துன்பங்கள் சொல்லி முடியாது.” என்றேன் 

முதுமை என்பது

ஒருவர் 60 வயதை கடந்து விட்டாலேயே அவரை முதியவர்  என்று அழைக்கிறார்கள். பத்திரிகைகளிலும் அவ்வாறே குறிப்பிடுகின்றனர். இன்னும் கூடுதலாக மூத்த குடிமக்கள் ( Senior Citizens ) என்றும் அழைக்கிறார்கள். ஆனால் இன்றைய நவீன மருத்துவம் மற்றும் மருந்துகள் காரணமாக 60 வயதைக் கடந்தாலும் 90 வயதுக்கு மேலும் நல்ல உடல்நலத்துடன் வாழ்ந்தவர்களையும், வாழ்பவர்களையும் நான் பார்த்து இருக்கிறேன்.

முதுமையில் படும் கஷ்டங்கள்

ஆனாலும் முதுமை என்ற நோய் மனித வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்றாக, வாழ்க்கையின் கடைசி அத்தியாயமாக இருக்கிறது. சிலருக்கு அறுபதில் வரலாம். அல்லது அறுபதிற்கு மேலும் வரலாம். பட்டிமன்றத்தில் வேண்டுமானால் முதுமை ஒரு வரம் என்று வாதாடலாம். ஆனால் நடைமுறையில் முதுமை என்பது ஒரு வரமல்ல; அது ஒரு சாபமே. சாபம் யார் கொடுத்தது என்றுதான் தெரியவில்லை. உள்ளம் இளமையாக இருந்தாலும், தளர்ச்சியின் காரணமாக உடல் அதற்கு ஒத்துழைக்க மறுக்கிறது. ஞாபக மறதியும், நோய்களும், வீண் பயமும் குழப்பத்தில் ஆழ்த்துகின்றன.. நேற்றுவரை அதிகார தோரணையில் இருந்தாலும், இன்று கையில் காசு பணம் பவிசு என்று இருந்தாலும், பார்த்துக் கொள்ள ஆள் இருந்தாலும், ஒவ்வொன்றிற்கும் அடுத்தவர் துணையின்றி எதனையும் செய்ய முடியாத நிலைமை. நம்மால் மற்றவர்களுக்கு வீண் தொந்தரவு என்ற கவலை என்று சொல்லிக் கொண்டே போகலாம். 

எனது அப்பா

எனது அம்மா, அப்பா ( ரெயில்வே ஓய்வு ) இருவரும். வாடகைக்குப் பிடித்த, ஒரு தனிவீட்டில் வசித்து வந்தனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் எனது அம்மா ( 78 ) இறந்த பின்பும் தனியாகவே எனது தந்தை 90 வயது வரை நன்றாகவே தனது வேலைகளைத் தானே செய்து கொண்டும் தனியாகவும் அதே வீட்டில்  இருந்தார். என்னோடு அல்லது எனது தங்கை வீட்டிற்கு வந்து இருந்து கொள்ளுங்கள் என்று அழைத்த போதும் வரவில்லை. இப்போது முதுமை ஆட்கொண்டு, கடுமையான பல கஷ்டங்களை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் அவர் அடைந்ததால், எங்கள் வீட்டிற்கு அழைத்து வந்து விட்டோம். அவருக்கு இன்னும் தனியாக இருக்கவே விருப்பம். ( அவருக்கு 91 வயது முடிந்து 92 ஆவது வயதும் முடிய இன்னும் ஒரு மாதம்தான் இருக்கிறது ).இனிமேல் மருந்து மாயம் எதுவும் அவரிடம் செல்லாது. இருக்கும் வரை கவனித்துக் கொள்ள வேண்டும். அவரைப் பார்த்துக் கொள்ள வேறு யாரும் இல்லாததால் நானே அருகில் இருக்கும்படியான சூழ்நிலை

எனது மனைவி காலையில் வேலைக்கு சென்றால் மாலையில்தான் திரும்புவார். வேலை வாய்ப்பு கோச்சிங் கிளாஸ் சென்று வரும் எங்களது மகனும் அப்படியே. இவர்கள் இருவரும் திரும்ப வரும் வரையிலும் நான் எங்குமே செல்ல முடியாது. எனது அப்பாவிற்கு நான் அருகிலேயே இருக்க வேண்டும். கால் மணிக்கு ஒருமுறை அவரை டாய்லெட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டும். ( நண்பர்களும் உறவினர்களும், எனது தந்தைக்கு disposable diapers போட்டுவிடச் சொல்லுகிறார்கள்.) மீதி நேரமெல்லாம் ஒன்று சேரிலேயே உட்கார்ந்து இருப்பார் அல்லது தரையில் பாயிலேயே படுத்து இருப்பார். தூங்குகிறாரா அல்லது விழித்து இருக்கிறாரா என்றே தெரியாது. திடீரென்று 40 வருடத்திற்கு முந்தைய சங்கதியை நேற்று நடந்தது போல் சொல்லுவார். இந்தநிலையில்,நானும் ஒரு சீனியர் சிட்டிசன்.  இப்போது அவர் அடைந்து கொண்டு இருக்கும் துன்பங்கள், அவரையும் அறியாமல் அவர் செய்யும் தவறுகள் மற்றும் அவரால் எங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள், அவற்றை சமாளித்த விதம் யாவற்றையும் இப்போது இங்கே சொல்வது சரியாக இருக்காது  ( எனது நண்பர்கள் பலர் அவரை நல்ல ஹோம் ஒன்றில் சேர்க்கும்படி சொல்லுகிறார்கள். திடீர் இடமாற்றம் எனது தந்தைக்கு எப்படி ஒத்துப் போகும் என்று யோசனையாகவும் உள்ளது..)

கிராமப்புறமும் நகர்ப்புறமும்

எனக்குத் தெரிந்து கிராமத்தில் இருக்கும் தள்ளாத முதியவர்கள் ஒவ்வொரு நாளையும் எளிதாகவே கழித்து விடுகிறார்கள் என்பது எனது அபிப்பிராயம். அங்கு அவர்கள் யாருக்கும் தொந்தரவு தராத வகையில் ஒரு திண்ணையிலோ, அல்லது ஒரு கொட்டகையிலோ அல்லது ஒரு தோப்பிலோ  சுதந்திரமாக இருந்து கொண்டு காலத்தைக் கழித்து விடுகிறார்கள். எனது பெரியப்பா ஒருவர், தனது கிராமத்து வீட்டு கொல்லைப் புறத்தில் கோமணம் ஒன்றைக் கட்டிக் கொண்டு பகல் முழுக்க அங்கேயே இருப்பார். யாரேனும் வந்தால் அல்லது ஏதேனும் எடுப்பதற்கு என்றால் இடுப்பில் ஒரு துண்டைக் கட்டிக் கொண்டு வருவார். என்னுடைய தாத்தா தனது கடைசி காலத்தை திண்ணையிலேயே முடித்தார். இப்படியே கிராமத்து உறவுகள் பலர்.

பெரும்பாலும் கிராமத்தில் பெரியவர்களைக் கவனித்துக் கொள்ள என்று தனியே ஒரு ஆள் தேவைப் படுவதில்லை. வீட்டில் இருப்பவர்களும், அவ்வப்போது சுற்றி இருப்பவர்களும் தேவைப்படும் சமயத்தில் முதியவருக்கு தேவையான உதவிகளை செய்கிறார்கள். நடக்க முடிந்தவர்கள் ஒரு ஊன்றுகோலை ஊன்றிக் கொண்டு நடமாடுவார்கள். தங்கள் வயது நண்பர்களைச் சந்திக்கும் போது தங்கள் முதுமையை மறந்து விடுகிறார்கள்.. ( இதையேல்லாம் யோசித்து, அப்பா ரிடையர்டு ஆனதுமே, எனது அம்மாவையும் அப்பாவையும், எங்கள் சொந்த ஊருக்கோ அல்லது அம்மா வழி சொந்தங்கள் இருக்கும் ஊருக்கோ சென்று விடுங்கள்; அங்கே நல்ல வசதியுடன் வீடு ஒன்றை கட்டிக் கொள்ளலாம் என்று சொன்னேன். அவர்கள் கேட்கவில்லை )
 ஆனால் நகர்ப்புறத்தில் முதியவர்கள் வாழ்க்கை என்பது இதனிலிருந்து மாறுபட்டு விடுகிறது. ஒரு வராண்டாவிலோ அல்லது ஒரு அறையிலோ ஒரு குறுகிய வட்டத்தில் மன அழுத்ததுடனேயே முடிந்து விடுகிறது.

முதியோர் இல்லம்

ஒரு காலத்தில் முதியோர் இல்லத்தில், பெற்ற பிள்ளைகளே தங்கள் தாய் தந்தையரை சேர்த்தல் என்பது விமர்சனத்திற்கு உள்ளாக்கப் பட்டது. பாவச் செயலாகக் கருதப் பட்டது. ஆனால் இன்றைய சூழலில் அது தவிர்க்க இயலாத ஒன்றாக கருதப் படுகிறது. கிராமத்தில் அவர்களைத் தனியே விட்டுவிட்டு  சொந்த வேலைகளைப் பார்க்க நாம் சென்று விடலாம். ஆனால் நகர்ப்புறத்தில் அவ்வாறு விட்டு விட்டு செல்ல முடியாது. அவர்களைக் கவனித்துக் கொள்ள என்று தனியே ஒருவர் வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் ஒரு துயரமான கதை உண்டு. நகர்ப் புறத்தில் கணவன் மனைவி இருவரும் வேலைக்கு சென்று விடுகிறார்கள். அவர்களுடைய பிள்ளைகள் படிக்க சென்று விடுகிறார்கள். இப்போது பெற்றோரை விட்டு விட்டு வெளிநாடு சென்று விடுகிறார்கள். அப்போது வீட்டில் இருக்கும் முதியவர்களைக் கவனிக்க ஆள் தேவைப் படுகிறது. இது மாதிரியான சந்தர்ப்பங்களில் முதியோர் இல்லம் என்பது பாதுகாப்பானதாக தேவைப்படும் ஒன்றாக இருக்கிறது. (இந்த முதியோர் இல்லம் குறித்து தனியே ஒரு பதிவை எழுத வேண்டும்).

இந்த முதியோர் இல்லம் குறித்து இணையதளத்தில் தேடியபோது பல சுவாரஸ்யமான தகவல்கள். பல முதியோர் இல்லங்கள் கருணை இல்லங்களாக நன்கொடை எதிர்பார்த்து நடத்தப் படுகின்றன. சாதாரண கட்டணம் பெற்றுக் கொண்டு, ஒரு ஹாஸ்டல் போன்று நடக்கும் இல்லங்களும் உண்டு; கார்ப்பரேட் கணக்காக அபார்ட்மெண்ட் ஸ்டைலில் அதிகக் கட்டணம் பெற்றுக் கொண்டு நடக்கும் இல்லங்களும் உண்டு. 

முதியோர் இல்லம் என்றவுடன், வலைப்பதிவர் நண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்கள் ’கனவில் வந்த காந்தி’ என்ற தொடர்பதிவு ஒன்றினை எழுதச் சொன்னபோது, நான் எழுதிய தொடர் பதிவும், அதிலுள்ள கேள்வியும் பதிலும் நினைவுக்கு வந்தது.
( http://tthamizhelango.blogspot.com/2014/11/blog-post_17.html கில்லர்ஜியின் கனவில் வந்த காந்தி – தொடர் பதிவு.  )

// 4. முதியோர்களுக்கு என்று ஏதாவது திட்டம் வைத்திருக்கின்றாயா?
முதியோர்கள் அனைவருக்கும் உண்ண உணவும் உடுக்க உடையும் இலவசமாக வழங்கப்படும். மூன்று வேளையும் அரசாங்கமே உணவளிக்கும். உணவு மற்றும் தங்கும் விடுதிகள் நாடெங்கும் தொடங்கப்படும். இதற்காக கையில் காசோ அல்லது அடையாள அட்டையோ தரப்பட மாட்டாது. வேண்டியதை எந்த விடுதியில் வேண்டுமானாலும் சாப்பிட்டுக் கொள்ளலாம். தங்கிக் கொள்ளலாம். //

                                                          xxxxxxxxxxxxxxxx

தொடர்புடைய எனது பிற பதிவுகள்:
                                                                                                                                                         

வாக்கிங் ஸ்டிக் மனிதர்கள்

http://tthamizhelango.blogspot.com/2013/12/blog-post_30.html

                                                                                                                                   

கருணைக் கொலையும் முதுமக்கள் தாழியும்

http://tthamizhelango.blogspot.com/2013/10/blog-post_16.html

 


Monday, 20 June 2016

என்று வந்தது? இந்த முதுமை?



என்று வந்தது? இந்த முதுமை?
அன்றிலிருந்து இன்றுவரை
எத்தனை முறை பார்த்தும்
எனக்கு இன்னும்
ஏனோ சலிக்கவில்லை
முகம் பார்க்கும் ஆடிகள் 
மாறிய போதும் -
அதே முகம்
அதே கண்கள்
அதே புருவங்கள்
அதே கன்னங்கள் காதுகள்
அதே மூக்கு
அதே மீசை
அதே உதடுகள் - ஆனாலும்
காலம் செய்த கோலம்
என்று வந்தது
எனக்கு இந்த முதுமை?

             PICTURE COURTESY: http://www.shangralafamilyfun.com/mirror.html

இதுபோல் இன்னும் அதிக படங்கள் காண மேலே உள்ள இணையதள முகவரியை சொடுக்கிப் (CLICK) பாருங்கள்இதில் இறுதியாக உள்ள வீடியோவை அவசியம் பாருங்கள். கீழே அதன் யூடியூப் இணைப்பையும் தந்துள்ளேன்.
https://www.youtube.com/watch?v=FgBF3sIPm4c

Monday, 30 December 2013

வாக்கிங் ஸ்டிக் மனிதர்கள்



என்னுடைய அப்பா திருச்சி பொன்மலை ரெயில்வேயில் DY CONTROLLER OF STORES ஆக பணிபுரிந்தவர். சுமார் இருபத்தி எட்டு வருடங்களுக்கு முன்னர் தனது 60 ஆவது வயதில் பணி ஓய்வு பெற்றார். அப்போதெல்லாம் திருச்சியில் ரெயில்வே ஊழியர்கள், சக ஊழியர் பணி ஓய்வு பெறும் நாளன்று அவருக்கு ஒரு வாக்கிங் ஸ்டிக்கையும் பரிசாகத் தருவார்கள். என்னுடைய அப்பாவிற்கும் அதே போல அவரோடு பணிபுரிந்த ஊழியர்கள் வாக்கிங் ஸ்டிக்கை நினவுப்பரிசுகளில் ஒன்றாகத் தந்தார்கள். அவர் அந்த வாக்கிங் ஸ்டிக்கை வாங்கிய நாளிலிருந்து ஒருநாள் கூடப் பயன்படுத்தியது கிடையாது. இப்போது அவருக்கு சர்டிபிகேட் பிரகாரம் வயது 88 (கிராமத்து உறவினர்கள் கணக்குப்படி அவருக்கு 90 வரும் ) இன்றும் அவர் எந்த வாக்கிங் ஸ்டிக்கையும்  பயன்படுத்தாமல் நன்றாகவே இருக்கிறார்.

வாக்கிங் ஸ்டிக:

நான் சிறுவனாக இருந்தபோது பல முதியவர்கள் வாக்கிங் ஸ்டிக் உதவியுடன் நகரத் தெருக்களில் நடந்து போவதைப் பார்த்து இருக்கிறேன். திருச்சி செயிண்ட் லூர்து மாதா ஆலயத்தில் ஒரு வெளிநாட்டு பாதிரியார் இருந்தார். நல்ல உயரம். அவர் கையில் வாக்கிங் ஸ்டிக் உதவியுடன்தான் நடப்பார். அதேபோல ஓய்வு பெற்ற பல அரசு ஊழியர்கள் மின்சார பில்லிற்கு பணம் கட்ட வரும்போதும், ஓய்வூதியம் பெற தெப்பக்குளம் போஸ்டாபிசிற்கு வரும்போதும், டவுன்ஹால் தாலுகா அலுவலகம் வரும்போதும் வாக்கிங் ஸ்டிக்கை ஊன்றியபடி வருவதைப் பார்த்து இருக்கிறேன். கிராமங்களில் வாக்கிங் ஸ்டிக்கிற்குப் பதிலாக கைத்தடி வைத்து இருப்பார்கள். அவ்வையார் போன்று கோலூன்றி  நடப்பார்கள். அறுபது வயது ஆகிவிட்டாலே வயதாகி விட்டது என்ற எண்ணம் அப்போது மக்களிடம் பரவலாக இருந்தது.

பாக்கியம் ராமசாமியின் அப்புசாமி - சீதாப்பாட்டி கதைகளில் வரும் அப்புசாமி தாத்தா வாக்கிங் ஸ்டிக்கோடு வரும் கேரக்டர். அப்போதைய பல அரசியல் தலைவர்கள் பலரது படங்களை வாக்கிங் ஸ்டிக்கோடு காணலாம்.

வாக்கிங் ஸ்டிக் எங்கே?

முன்புபோல் இப்போது வாக்கிங் ஸ்டிக்கோடு வரும்  மனிதர்களை அதிகம் காண முடிவதில்லை. கிராமத்திலும் அவ்வாறே. தடியூன்றிய மனிதர்களைக் காண்பது அரிது. அறுபது வயதானாலும், எழுபது வயதானலும் எல்லோரும் நன்றாகவே நடக்கிறார்கள். முதுமை என்ற உணர்வே வருவது இல்லை.

சராசரி வயது அதிகரிப்பு: 

அண்மையில் நான்    திருக்கடையூர்: அறுபதாம் கல்யாணம்  http://tthamizhelango.blogspot.com/2013/12/blog-post_28.html ) என்று ஒரு பதிவு எழுதினேன். அந்தப் பதிவினில்  

// திருக்கடையூரில் கோயில் வாசலில் நிறைய வேன்கள், டாக்சிகள். வெளியூரிலிருந்து வந்தவர்கள். மார்கழி என்பதால் நிறைய அய்யப்ப பகதர்கள். அவர்களுக்கு இடையில் மாலையும் கழுத்துமாய் அறுபதாம் கல்யாண மணமக்கள். நிறையபேர் அறுபது ஆனவர்களாகவே தெரியவில்லை.( காரணம் நவீன மருத்துவம் மற்றும் உடல் - உடை அலங்காரம் போன்றவை ) //

என்று எழுதினேன். அதற்கு கருத்துரை தந்த மூத்த வலைப்பதிவர் நினைத்துப் பார்க்கிறேன்திரு வே நடனசபாபதி அய்யா அவர்கள்

// எனக்குத்தெரிந்து கடந்த 25 ஆண்டுகளாகத்தான் எல்லோரும் திருக்கடையூர் சென்று அறுபதாம் கல்யாணத்தை நடத்துகிறார்கள். அதற்கு முன்பு அவரவர்கள் வீட்டிலேயே நடத்துவார்கள். மேலும் அறுபதாம் ஆண்டில் கல்யாணம் நடத்துவதற்கு இன்னொரு காரணமும் உண்டு. அப்போதெல்லாம் சராசரி ஆயுட்காலம் 55 தான் என்பதால் 60 வயது தாண்டியவர்கள் குறைவு என்பதால் அந்த வயதை அடைந்தவர்கள் அந்த நிகழ்வை திருமணவிழாவாக கொண்டாடினார்கள்.//

என்று சராசரி வயதைப் பற்றி சொன்னார். அவர் சொன்னதுபோல் இப்போது ஒரு இந்தியனின் சராசரி வயது உயர்ந்து உள்ளது. இந்தியர்களின் சராசரி ஆயுள் 65.8 வயது என உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் நவீன மருத்துவ முறைகள் வந்து விட்டபடியினால் அறுபது அல்லது எழுபது வயதிலும் ஆரோக்கியமாக இருக்க முடிகிறது. யாரும் வாக்கிங் ஸ்டிக்கை நாடுவதில்லை. கிராமங்களில் கூட தடியூன்றிய முதியவர்களைக் காண முடிவதில்லை. நலவாழ்வுத் துறையின் வளர்ச்சியும், ஊட்டச்சத்து உணவுகளும் இந்தியர்களின் ஆயுள் அதிகரிக்க காரணம் என்று சொல்லுகிறார்கள்.

நோயற்ற வாழ்வே: 

எனவே இன்றைய நவீன யுகத்தில் வயதானாலும், மனிதர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க சாத்தியக் கூறுகள் அதிகம். நோய்களைக் கட்டுப்படுத்தலாம். எனபதனைக் கருத்தில் கொள்ளுங்கள். அனைவரும் ஆரோக்கிய வழியினை நாடுங்கள்


HEALTH  IS  WEALTH  நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

அனைவருக்கும் எனது உளங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!