Wednesday 20 May 2015

நடிகர் எஸ்.வி.ரங்காராவ்ஒரு நல்ல நாவலைப் படித்து முடிக்கும் போது, நம்மோடேயே இருந்த ஒருவர் நம்மை விட்டு பிரிவது போன்ற உணர்வு வரும். அதைப் போலவே குடும்பக் கதை கொண்ட பழைய தமிழ்ப் படங்களைப் பார்த்து முடிந்ததும்,நெடுநாள் பழகிய குடும்பம் ஒன்றை விட்டுப் பிரிவது போல் இருக்கும். மறைந்த குணச்சித்திர நடிகர் எஸ்.வி.ரங்காராவ் ஒரு படத்தில் அப்பா வேடத்தில் நடித்து இருந்தால், கேட்கவே வேண்டாம். படம் பார்த்து விட்டு, தியேட்டரை விட்டு வெளியேறும்போது சொந்த தந்தையை விட்டுப் பிரிவது போல இருக்கும். (எஸ்.வி.ரங்காராவ் 03.ஜூலை.1918 18.ஜூலை.1974)

இவர் படங்களைப் பார்க்கும்போது இவர் தெலுங்கு திரையுலகிலிருந்து வந்தவர் என்ற எண்ணமே வந்ததில்லை. நம்மில் ஒருவராகவே தோன்றினார். இவர் பெரும்பாலும் பல படங்களில் பாசக்கார அப்பாவாகவே வந்து இருப்பார். மகாபாரதம் போன்ற புராணக் கதைகள் சம்பந்தப்பட்ட படங்களில் மட்டும் வில்லனாகவே வருவார். இவருடைய உயரமும் கம்பீரமும் அப்படி. இவரைப் பற்றி வலைப்பதிவில் எழுத வேண்டும் என்பது வெகுநாள் ஆசை.

நான் பார்த்த படங்கள்::

இவர் தமிழ் படங்களில் நடிக்கத் தொடங்கிய போது நான் சிறுவன். எனவே இவரது அனைத்து படங்களையும் பார்த்ததில்லை. எல்லாம் பெரியவன் ஆன பிறகு, மீள் வெளியீடாக தியேட்டர்களில் வந்தபோது பார்த்ததுதான்.

மிஸ்ஸியம்மா அந்தக் கால இளமையான ஜெமினி கணேசன் சாவித்திரி ஜோடி, மற்றும் கே.சாரங்கபாணி, கே.ஏ.தங்கவேலு ஆகியோர் நடித்த நகைச்சுவை படம். எஸ்.வி.ரங்காராவிற்கு பள்ளிக்கூடம் நடத்தும், கண்ணியமான பணக்கார கனவான் வேடம். அவருக்கே உரிய ஜிப்பா, அங்கவஸ்திரம், கைத்தடியோடு வருவார். இவரது பள்ளியில் பிள்ளைகளுக்கு, பாடம் சொல்லிக் கொடுக்க பி.ஏ படித்த தம்பதியினர் வேண்டும் என்று விளம்பரம் செய்வார். வேலையில்லாத படித்த பட்டதாரிகளான ஜெமினியும், சாவித்திரியும் கணவன் மனைவி போல நடித்து வருவார்கள். ஆசிரியர் பணி செய்வார்கள். பின் நிஜமாகவே கல்யாணம் செய்து கொள்வார்கள். “வாராயோ வெண்ணிலாவே என்ற இந்த படத்தில் வரும் மறக்க முடியாத பாடல் காட்சியில் எஸ்.வி.ரங்காராவும் வருவார்.

இந்த பாடலை கண்டு கேட்டு ரசிக்க கீழே உள்ள யூடியூப் இணைய முகவரியை கிளிக் செய்யுங்கள். (நன்றி: Kandasamy SEKKARAKUDI SUBBIAH PILLAI)
   
எங்க வீட்டுப்பிள்ளைமக்கள் திலகம் எம்.ஜி.ஆர், சரோஜாதேவி நடித்த இந்த படத்தில் , சரோஜாதேவிக்கு பணக்கார அப்பாவாக வந்து அசத்துவார். தனது ஒரே செல்ல மகளான சரோஜாதேவியுடன் மாப்பிள்ளை பார்க்க எம்,ஜி.ஆர் வீடு வருவார்; நம்பியார் முன் வீட்டில் நடக்கும் கூத்துக்கள் சுவாரஸ்யமானவை. எம்.ஜி.ஆரை மாப்பிள்ளை, மாப்பிள்ளை என்று வாயார அழைப்பார்.

படிக்காத மேதை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த படம் இந்த படத்தில் ரங்காராவ் கண்ணாம்பா தம்பதியினரின் பிள்ளைகளோடு,  ரங்கன் என்ற விசுவாசமுள்ள ஒரு வளர்ப்பு மகனாக சிவாஜி கணேசன் வருவார். வீட்டில் ஒரு வேலைக்காரனுக்கும் மேலாக உழைப்பார். எதனையும் எதிர்பாராத, பாரதி கண்ட “கண்ணன் என் வேலைக்காரன் என்ற பாடலின் பாத்திரப் படைப்பே இந்த ரங்கன் எனலாம். ஒரு சூழ்நிலையில் மற்றவர்கள் பேச்சைக் கேட்டு, சிவாஜியை, ரங்காராவே வீட்டை விட்டு வெளியேற்றி விடுவார். ஆனாலும் வெளியேறிய சிவாஜியை நினைத்து நினைத்து துடிப்பார். அந்த துயரத்திலேயே அவர் இறக்கும் காட்சியில் ரங்காராவ் காட்டும் முகபாவங்கள், நடிப்பை இன்னொருவர் செய்ய முடியாது. உள்ளத்தை உருக்கும் இந்த பாடல் “ எங்கிருந்தோ வந்தான் கண்ணன்.

இந்த பாடலை கண்டு கேட்டு ரசிக்க கீழே உள்ள யூடியூப் இணைய முகவரியை கிளிக் செய்யுங்கள்.(நன்றி:Cinema Junction)
    
நானும் ஒரு பெண்   ஒரு பெண் கறுப்பாக பிறந்து விட்டதனாலேயே, இந்த சமூகத்தில் எவ்வளவு அவதிக்கு உள்ளாகிறாள் என்பதை உணர்த்தும் படம். கறுப்பு பெண்ணாக மேக்கப் போட்டு விஜயகுமாரி பாத்திரத்தோடு ஒன்றி நடித்த படம். விஜயகுமாரிக்கு பாசமுள்ள மாமனாராக எஸ்.வி.ரங்காராவ் நடித்தார். ஜனாதிபதி விருது பெற்ற படம். இதிலும் இவரது நடிப்பு சோடை போகவில்லை.  

மாயாபஜார் இன்றும் அதிக ரசிகப் பெருமக்களால் ரசிக்கப்படும் படம். மகாபாரத கிளைக்கதை ஒன்றினை வைத்து எடுக்கப்பட்டது. இதில் எஸ்.வி.ரங்காராவ் கடோத்கஜனாக நடித்து இருக்கிறார். இந்த படத்தில் வரும், கல்யாண சமையல் சாதம், காய்கறிகளும் பிரமாதம். என்ற பாடலை இன்றைய டீவி சேனல்களில் அடிக்கடி ஒளிபரப்ப்பக் காணலாம்.

இந்த பாடலை கண்டு கேட்டு ரசிக்க கீழே உள்ள யூடியூப் இணைய முகவரியை கிளிக் செய்யுங்கள். (நன்றி: kirubakaran soundararaj மாயா பஜார் திரைப்படத்தின் இப்பாடலுடன் தெலுங்கு வண்ணப்படம் கலவை செய்யப்பட்டுள்ளது.)


பக்த பிரகலாதா - கடவுள் உண்டா? இல்லையா? அன்று தொடங்கிய விவாதம் இன்றும் தொடர்கிறது. இந்த படத்தில் கடவுள் இல்லை என்ற இரணியகசிபு என்ற வேடத்தில் கம்பீரமாக நடித்து தனது திறமையைக் காட்டியவர் நடிகர் எஸ்.வி.ரங்காராவ் அவர்கள்.

அன்புச்சகோதரர்கள் என்று ஒரு படம். இதில் எஸ்.வி.ரங்காராவ் மூத்த சகோதரராக நடித்து இருப்பார்; தனது தம்பிகளுக்காக கல்யாணமே செய்து கொள்ளாத கேரக்டர். இளைய சகோதரர்களாக மேஜர் சுந்தர்ராஜன், ஏ.வி.எம்.ராஜன். ஜெய்சங்கர் ஆகிய மூவரும் நடித்து இருப்பார்கள். கூட்டுக் குடும்பமாக வாழ்ந்த, இவர்களது குடும்பம் எப்படி சிதறுகிறது என்பது கதை. அண்ணன் தம்பிகள் பாசக் கதை. இதில் வரும்

முத்துக்கு முத்தாக, சொத்துக்கு சொத்தாக
அண்ணன் த்ம்பி பிறந்து வந்தோம் கண்ணுக்கு கண்ணாக
அன்பாலே இணைந்து வந்தோம் ஒன்னுக்குள் ஒன்னாக 

என்ற (சகோதரர்கள் நால்வரும் பாடும்) பாடல் மறக்க முடியாத ஒன்று. படத்தின் பிற்பகுதி சோகம்னா சோகம், அவ்வளவு சோகம். எஸ்.வி.ரங்காராவ் தியேட்டரை விட்டு வெளியே வரும்போது, நெஞ்சை கனக்கச் செய்து விடுவார்.

ஒரு தெலுங்கு தமிழ் டப்பிங் படத்தில் இவரை ஒரு மந்திரவாதியாக பார்த்ததாக நினைவு. படத்தின் பெயர் ஞாபகம் இல்லை. இன்னும் நான் பார்த்த நடிகர் எஸ்.வி.ரங்காராவ் நடித்த படங்களைப் பற்றி பேசிக் கொண்டே போகலாம். படிக்கும் உங்களுக்கு “போர் அடிக்கலாம். எனவே இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.

சில தகவல்கள்:

எஸ்.வி.ரங்காராவ் அவர்களுக்கு, ஆந்திராவில் , விஜயவாடா நகரில் மார்பளவு சிலை வைத்துள்ளார்கள். நடிகர் கமல்ஹாசன் அவர்கள் தமது பேட்டி ஒன்றில் எஸ்.வி.ரங்காராவ் மாதிரி ஒரு நடிகர் அவருக்குப் பிறகு வரவில்லை. அவர் மாதிரி நடிகர்கள் வராதது வேதனையளிக்கிறது. எஸ்.வி.ரங்காராவ், நாகேஷ் மாதிரி ஆயிரம் பேர் உருவாக வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.  

பழைய தமிழ் சினிமா குறித்து வலைத்தளத்தில் சுவாரஸ்யமாக எழுதுபவர் திரு R P ராஜநாயஹம் அவர்கள். அவர் இவ்வாறு குறிப்பிடுகிறார்.

 தன் வாழ்நாளில் முதுமையைப் பார்த்தறியாத ஒருவர் திரைப் படங்களில் இருபத்தைந்து வருடங்கள் (1950களில், 1960களில், 1970களின் முன்பகுதியில் ) நிறைய வயதான,முதிய கதாப் பாத்திரங்கள் செய்திருக்கிறார் என்பது விந்தை. எழுபது வயது மனிதராக சினிமா காட்டிய எஸ்.வி ரங்காராவ் அறுபது வயதை தன் வாழ்நாளில் கண்டதில்லை. 1974 ல் அவர் மறைந்த போது அவர் வயது 56 தான்

இந்தியா சினிமா 100 என்ற தலைப்பில் SUN NEWS”  தயாரித்த நிகழ்ச்சி யூடியூப்பில் வீடியோவாக வந்துள்ளது.  கண்ணதாசன், சின்னப்பா தேவர் தொடங்கி பலரது குறிப்புகள் அடங்கியது. இங்கே நடிகர் எஸ்.வி.ரங்காராவ் சம்பந்தப்பட்ட வீடியாவை  கண்டு கேட்டு ரசிக்க கீழே உள்ள இணைய முகவரியை கிளிக் செய்யுங்கள். (நன்றி:Sun News)                               (ALL  PICTURES COURTESY: GOOGLE IMAGES)


Sunday 17 May 2015

உயர் இரத்த அழுத்த நோயைக் கவனத்தில் எடுங்கள் (டாக்டர் M.K.முருகானந்தன்) - மின்நூல் விமர்சனம்       TODAY - 2015 - 17 May - World Hypertension Dayஎங்கள் வீட்டு கம்ப்யூட்டரில் உள்ள மின் நூலகத்தில் (E LIBRARY) மின்நூல்கள் பலவற்றை டவுன்லோடு செய்து வைத்துள்ளேன். நேரம் கிடைக்கும்போது அவற்றை படிப்பது வழக்கம். எனக்கு இரத்த அழுத்தம் (PRESSURE) இருப்பதால், டாக்டர் M.K.முருகானந்தன் அவர்கள் எழுதிய உயர் இரத்த அழுத்த நோயைக் கவனத்தில் எடுங்கள்  என்ற மின்நூலினை அண்மையில் எடுத்து படித்தேன். டாக்டர் M.K.முருகானந்தன் அவர்கள் அவர்கள் ஒரு சிறந்த டாக்டர். மூத்தவர். நிறைய படித்தவர். நிறைய கட்டுரைகள், நூல்கள் எழுதியுள்ளார். எனவே அவரது நூலைப் பற்றிய எனது விமர்சனம் என்பதே தவறு. எனினும் தற்போதைய வழக்கப்படி வாசகர்களுக்கு தெரிய வேண்டி நூல் விமர்சனம் என்றே சொல்ல வேண்டியதாயிற்று. அந்த நூலைப் பற்றிய சில குறிப்புகள் இங்கே.

டாக்டர் M.K.முருகானந்தன்நூலாசிரியர் டாக்டர் M.K.முருகானந்தன் அவர்கள் பற்றி வலையுலகில் அறிமுகம் தேவையில்லை. இலங்கை குடும்ப மருத்துவரான இவரது மருத்துவக் கட்டுரைகள் படிக்கும் அனைவருக்கும், இவரது ஹாய் நலமா? என்ற வலைத்தளம்
( http://hainallama.blogspot.in ) தெரிந்த ஒன்று. மேலும் முருகானந்தன் கிளினிக் ( https://hainalama.wordpress.com) என்ற வலைத்தளத்திலும் மருத்துவம், இலக்கியம், அனுபவம் என பல்வேறு தலைப்புகளில் எழுதி வருகிறார்.

நூலைப் பற்றி:

இந்த நூலில், நூலின் ஆசிரியர் டாக்டர் M.K.முருகானந்தன் அவர்கள், இரத்த அழுத்தம் (PRESSURE) என்பது, தலைச்சுற்று, தலைவலி, களைப்போ சோர்வோ எந்தவித அறிகுறிகளற்ற நோய் என்று குறிப்பிட்டு , இந்நோயை ‘அமைதியான கொலையாளி ( Silent Killer) என்று எச்சரிக்கை செய்கிறார். ஆயினும் கடுமையான தலைவலி, மூக்கில் இரத்தம் வடிதல், பார்வை மங்குதல், மூச்சுவிட சிரமப்படுதல் போன்றவை பிரஸர் அதிகமானதின் அறிகுறியாகும்;மேலும் எந்தெந்த வயதினில் இந்த நோய் தீவிரம் அடைகிறது, என்று சொல்லிவிட்டு, இந்நோய் ஒருவருக்கு இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள பரிசோதித்துக் கொள்வதே (குறிப்பாக 40 வயதைக் கடந்தவர்களுக்கு அவசியம்)  நல்லது என்கிறார். இந்நோயை மருத்துவத் துறையில் உயர் இரத்த அழுத்தம் (HYPERTENSION) என்று சொல்கிறார்கள்.

இந்த நூலில்

1.கவனத்தில் எடுக்க வேண்டிய நோய், 2.உலகளாவிய பிரச்சனை,
3.தொடர்ச்சியான கணிப்பீடும் கண்காணிப்பும் அவசியம், 4. அளவிடுவது எப்படி?,  5.உயர் இரத்த அழுத்தத்தின் வகைகள்,  6. வேறு நோய்களின் விளைவான உயர் இரத்த அழுத்தம்,  7.உயர் இரத்த அழுத்தத்தைப் புரிந்து கொள்ளல்,  8.உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தல்,  9.உயர் இரத்த அழுத்தத்திற்கான மருந்துகள்,  10.உயர் இரத்த அழுத்த நோயைக் கட்டுப்படுத்தாவிடின் என்ன நடக்கும்?,  11.பெண்களும் உயர் இரத்த அழுத்தமும்

என்ற தலைப்புகளில் டாக்டர் இந்த உயர் இரத்த அழுத்தத்தைப் பற்றி விரிவாக கூறுகிறார்.

பிரஸரை அளப்பதற்கு முன் கடைபிடிக்க வேண்டியவை;

தானாக ஏற்படும் உயர் இரத்த அழுத்தம், வேறு நோய்களின் காரணமாக ஏற்படும் உயர் இரத்த அழுத்தம்;

யார் யாருக்கு இந்த நோய் வரும்?;

இரத்த அழுத்தம் என்றால் என்ன?; வருவதற்கான காரணங்கள் என்ன/; அதனைக் கட்டுப்படுத்தும் முறை;

சாதாரண இரத்த அழுத்தம் என்பது 120/80 mm Hg. – இது 140/90 க்கு மேல் உயர்ந்தால் உயர் இரத்த அழுத்தம் (HYPERTENSION); 120/80 இற்கும் 139/89 இற்கும் இடையில் இருந்தால் அது முன் உயர் இரத்த அழுத்தம் (PRE HYPERTENSION); 130/85 என்றால் டாக்டரை பார்த்தல் அவசியம், 140/90 இற்கு மேற்பட்டால் டாக்டர் மேற்பார்வையில் சிகிச்சை அவசியம் வேண்டும்;

உயர் இரத்த அழுத்தம்  குறைப்பதற்காக உடல் எடையைக் குறைத்தல் சம்பந்தப்பட்ட தகவல்கள்; உடற்பயிற்சி மற்றும் உணவு முறைகள்;


புகைபிடித்தலால் வரும் தீமைகள்;
மாரடைப்பிற்கான காரணங்கள்
உயர் இரத்த அழுத்த நோயிற்கான மருந்துகள் மற்றும் அவற்றை பயன்படுத்தும் முறைகள்; பெண்களுக்கான ஆலோசனைகள்;

என்று பலவிதமான தகவல்களை இந்த நூலின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

நூலின் இறுதியில், உங்கள் இரத்த அழுத்தத்தையும், உங்கள் எடையையும், நீங்கள் உபயோகிக்கும் மருந்துகளையும் ஒரு பதிவேட்டில் ஒழுங்காகக் குறித்து வைப்பது அவசியம்.   என்று சொல்லும் டாக்டர், ஒரு உதாரண அட்டவணையையும் தந்துள்ளார்.

பிரஸர் எனப்படும் இரத்தஅழுத்த நோயைப் பற்றி அறிந்து கொள்ள, அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய நூல் இது.

தரவிறக்கம் (DOWNLOAD) செய்ய

இலங்கைத் தமிழ் மக்களின், எழுத்தாவணங்கள், தகவல் களஞ்சியங்கள், நூல்கள், இதழ்கள், பத்திரிகைகள், பிரசுரங்கள் என்று  பலவற்றை நூலகம்(NOOLAHAM FOUNDATION) என்ற நிறுவனம் தொகுத்து வைத்துள்ளது, அந்த நிறுவனத்தின் www.noolaham.org  என்ற இணையதளத்தில் இந்த நூலினை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.                                                                  
நூலகம் > குறிச்சொற்கள் > நுட்பவியல்> 610 மருத்துவமும் நலவியலும் > உயர் இரத்த அழுத்த நோயைக் கவனத்தில் எடுங்கள் (6.68 MB) (PDF வடிவம்)

நூலின் பெயர்:
உயர் இரத்த அழுத்த நோயைக் கவனத்தில் எடுங்கள்
நூலாசிரியர்:
டாக்டர் M.K.முருகானந்தன் M.B.B.S (Cey), D.F.M (SL), M.C.G.P (SL)
பக்கங்கள்: 41
நூல் வெளியீடு: (நூலகம் / மின்நூல்) 

Friday 15 May 2015

நரகமும் பாவமன்னிப்பு சீட்டும்


(இப்போது தினசரி செய்திகளாக கோர்ட், வழக்கு, வாய்தா, சாட்சி, தீர்ப்பு என்று படித்ததன் விளைவாக மனத்துள் எழுந்த கட்டுரை இது)    

முன்பெல்லாம், நான் பள்ளி மாணவனாக இருந்த காலத்தில் திருச்சி பெரிய கடைவீதியில், எல்லா ஞாயிறும், பெரும்பாலும் எல்லா கடைகளுக்கும் விடுமுறையாக கடைகள் மூடியே இருக்கும். அந்நாட்களில் மாலை வேளைகளில் அந்த கடைகளின் வாசலில் பழைய புத்தகங்கள், காலண்டர் வியாபாரம் செய்பவர்கள் தரைக்கடை வியாபாரம் செய்வார்கள். காலண்டர் வியாபாரிகள் ஒன்றிரண்டு படங்களை கடைகளை மூடியிருக்கும் ஷட்டர்களில் (அனுமதியோடுதான்) தொங்க விட்டு இருப்பார்கள். அவற்றுள் ஒன்று, இறந்த பிறகு, மனிதனுக்கு நரகத்தில் கிடைக்கும், அவன் செய்த பாவங்களுக்கான தண்டனைகள் பற்றியது. அதிலுள்ள தண்டனைகளைப் பார்க்கும் போது வேடிக்கையாக இருக்கும். இந்த மாதிரி படங்களை யாரும் வாங்கி வீட்டில் மாட்டியதாகத் தெரியவில்லை. இப்போதும் இதுமாதிரி படங்கள் விற்பனைக்கு வருகின்றனவா என்றும் தெரியவில்லை.

கிட்டத்தட்ட எல்லா மதத்திலும் பாவம், புண்ணியம், சொர்க்கம், நரகம் என்ற நம்பிக்கைகள் உள்ளன; “அவரவர் செய்த பாவங்களுக்கு ஏற்ப கடவுளின் தண்டனை உண்டு; பாவம் செய்தவர்கள் நரகத்தை அடைந்து தாங்க முடியாத துன்பங்களை அடைவார்கள் என்ற நம்பிக்கை உண்டு. பாவம் புண்ணியம் பற்றி கவிஞர் கண்ணதாசன் தனது அர்த்தமுள்ள இந்துமதம் என்னும் நூலில் விரிவாகவே சொல்லி இருக்கிறார். இந்த பாவங்களெல்லாம் மன்னிக்கக் கூடியவைகளே என்று சொல்லி, ஐரோப்பாவில்  பாவமன்னிப்பு சீட்டுக்கள் விற்று காசு பார்த்த காலமும் உண்டு.

நரக நம்பிக்கை:

இந்த நரகத்தைப் பற்றி சொல்லும் போது கிட்டத்தட்ட எல்லோரும் ஒரே மாதிரிதான் சொல்கிறார்கள். அதாவது இது ஒரு தனி உலகம். இறந்து போன ஆத்மாககளில் பாவம் செய்த ஆத்மாககளை  தனியாக அடைத்து தண்டிக்கும் உலைக்கூடம்.  கிட்டத்தட்ட ஒரு பிருமாண்டமான சிறைச்சாலை.. முள் கட்டையால் அடித்தல், சூலம் போன்ற ஆயுதங்களால் குத்துதல், கொதிக்கும் எண்ணெய்க் கொப்பறையில் போட்டு எடுத்தல், அக்னி குண்டத்தில் வாட்டுதல் போன்ற காரியங்கள் செய்தல். எல்லாமே கற்பனைதான். இப்படி பயங்கரமாக சொன்னாலும், இன்றைய மக்கள் யாரும் பயந்த மாதிரிதான் தெரியவில்லை. அவரவர் தெரிந்தும் தெரியாமலும் பாவங்களை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். இருந்தாலும் நரகம் சம்பந்தப்பட்ட, இண்டர்நெட்டில் பார்த்த சில படங்களை இங்கு தந்துள்ளேன்.


நரகம் என்றதும் எனக்கு சட்டென்று நினைவுக்கு வருவது ஸ்ரீ கருட புராணம். இந்த புராணத்தை வாங்கியதிலிருந்து மூன்று தடவை படித்து இருக்கிறேன். இந்த புராணம் பற்றி, அதிகம் சொல்ல வேண்டியது இல்லை. ஏனெனில், விக்ரம் நடித்த ‘அந்நியன் திரைப்படம் வந்த பிறகு இந்த புராணம், தமிழ் கூறு நல்லுலகில் பிரசித்தமாகி விட்டது. இந்த நூலில் 28 வகை நரகங்கள் பற்றி சொல்லப்பட்டுள்ளன.

1. பிறன் பொருள் கொள்ளை அடிப்போர்க்கு தாமிஸிர நரகம்.
2.
கணவன் (அ) மனைவியை வஞ்சித்து வாழ்வோர்க்கு அநித்தாமிஸ்ர நரகம்.
3.
சுயநலக்காரர்களும், பிறர் குடும்பங்களை அழிப்பவர்களும் அடைவது ரௌரவ நரகம்.
4.
குரு என்னும் அகோரமான்கள் பாவிகளைத் துன்புறுத்தும் நரகம் மஹா ரௌரவம்.
5.
தன் சுவைக்காக உயிர்க்கொலை, சித்திரவதை செய்வோர்க்கு கும்பீபாகம்.
6.
பெற்றோர், மற்ற பெரியோர்களைத் துன்புறுத்துவோர்க்கு கால சூத்திரம்.
7.
தெய்வ நிந்தனை, தன் தர்மத்தை விடுத்தோர்க்கு அசிபத்திரம்.
8.
கொடியர், அநீதியாளர், அக்கிரமக் காரர்களுக்குப் பன்றி முகம்.
9.
துரோகம், கொலை, சித்திரவதைச் செய்வோர்க்கான நரகம் அந்த கூபம்.
10.
நல்லொழுக்கம் நீக்கி, கிருமிகள் போல் பிறரைத் துளைப்போர்க்கானது கிருமிபோஜனம்.
11.
பிறர் பொருளை அபகரிப்போர், பலாத்காரம் செய்வோர்க்கு அக்கினி குண்டம்.
12.
கூடா ஒழுக்கம் கொண்ட மோக வெறியர்களுக்கு வஜ்ர கண்டகம்.
13.
தரங்கெட்டு எல்லோருடனும் பழகித் திரியும் மோகாந்தகாரப் பாவிகள் பெறும் நரகம் சான்மலி.
14.
அதிகார வெறி, கபட வேஷம், நயவஞ்சகம் செய்யும் அதர்மிகளுக்கு வைதரணி.
15.
ஒழுங்கின்றி இழிமகளைக் கூடி லட்சியமின்றி விலங்குகளைப் போல் திரிவோர்க்கான நரகம் பூபோதம்.
16.
பிராணிகளைத் துன்புறுத்தல், கொல்லுதல் செய்வோர்க்கு பிராணி ரோதம்.
17.
டம்பத்திற்காக யாகம் புரியும் பித்தலாட்டக்காரர்களுக்கு விசஸனம்.
18.
இல்லாளை விபரீத இச்சைக்கு வற்புறுத்துவோர்க்கானது லாலா பக்ஷம்.
19.
தீ வைத்தல், சூறையாடல், விஷமூட்டல், குடிகளைக் கொல்வோர்க்கு சாரமேயாதனம்.
20.
பொய்ச் சாட்சி கூறுவோர், அகம்பாவம் கொண்டோர்க்கானது அவீசி.
21.
மது, போதைப் பொருள், குடியுள்ள குடிகேடர்களுக்கு பரிபாதளம்.
22.
தானே பெரியோன் எனப் பறை சாற்றிப் பிறரை மதியாதவர்க்கு க்ஷரகர்த்தமம்.
23.
நரமேதயாகம், நரமாமிசம் உண்ணல், பிராணிகள் வதை ஆகியவற்றுக்கு ரக்ஷணம்.
24.
தற்கொலை, நயவஞ்சகக் கொலை, நம்பிக்கைத் துரோகம் செய்த பாவிகளுக்கு சூலரோதம்.
25.
தீமை புரிந்த தீயோர், துரோகிகளுக்கானது தந்த சூகம்.
26.
உயிர்க்கொலை செய்வோர்க்கு வடாரோதம்.
27.
விருந்தினரை வெறுத்தோர், சுயநல வாதிகளுக்கானது பர்வாவர்த்தகைம்.
28.
செல்வம், செல்வாக்கால் கர்வம், அநியாயமாகப் பொருள் ஈட்டல், பதுக்கி வைத்தல் போன்றவை செய்வோர்க்கு சூசி முகம்.

(நன்றி: தினமலர்)

                                                                 
இதில் கூறப்பட்டவை அனைத்தும் நடக்குமா என்று எனக்கு தெரியாது.  

பாவமன்னிப்பு சீட்டு:


ஐரோப்பாவில் ஒரு காலத்தில் ( 11 தொடங்கி 15, 16 ஆம் நூற்றாண்டுகளில்) INDULGENCES எனப்படும் பாவமன்னிப்பு சீட்டுகள் கிறிஸ்தவ ஆலயங்களில் விற்கப்பட்டன. இதன்படி ஒவ்வொரு பாவத்திற்கும் ஒரு விலை நிர்ணயிக்கப்பட்து. இதன்படி அந்த பாவமன்னிப்பு சீட்டை வாங்கினால் (எந்த பாவத்திற்காக வாங்கினாரோ)  அவர் செய்த அந்த பாவம் அவரை விட்டு நீங்கி விடும். பாவம் செய்யும் ஒவ்வொரு தடவையும் வாங்க வேண்டும். எனவே பாவம் செய்த ஒவ்வொருவரும இவற்றை வாங்கியவுடன் அவர்கள் செய்த பாவம் அவர்களை விட்டு நீங்கி விடும்; பாவமன்னிப்பு பெற்று புனிதமடைந்து விடுவார்கள் என்ற கருத்து பரப்பப் பட்டது. ரோமில் இருந்த St. Peter's Basilica  போன்ற  கிறிஸ்தவ ஆலயங்களை புதுப்பிப்பதற்கும் , தேவாலய செலவுகளுக்கும் என்று இவை விற்கப்பட்டாலும், அந்நாளைய கிறிஸ்தவ பாதிரிமார்களின் ஆடம்பர செலவுகளுக்கே அதிகம் செலவழிக்கப்பட்டது. அப்புறம் காலப்போக்கில் இந்தமுறை நீங்கி விட்டது.


இந்த விவகாரத்தில் JOHANN TETZEL (1465 -1519) என்ற ஜெர்மானிய பாதிரியாரின் பெயர் நிரம்பவும் அடிபட்டது. இவர் ஊர் ஊராகச் சென்று பாவமன்னிப்பு சீட்டுக்களை பொது இடங்களில் விற்றார். இந்த பாவமன்னிப்பு சீட்டுக்களை வாங்குவதன் மூலம், மூடநம்பிக்கை மிகுந்தவர்கள், தாங்கள் நரகத்திற்கு செல்ல மாட்டோம் என்று நம்பினார்கள். இன்னும் சிலர் இந்த சீட்டுக்களை இறந்து போன தங்கள் உறவினர்களுக்காகவும் வாங்கி அவர்களது பாவங்களைப் போக்கினார்கள்.

இந்த முறையைக் கடுமையாகக் கண்டித்தவர் மார்ட்டின் லூதர் (MARTIN LUTHER (1483 - 1546) எனப்படும் சீர்திருத்தவாதி. இதுபற்றி இவர் எழுதிய ‘Ninety-Five Theses என்ற நூலில் இவரது கருத்துக்களைக் காணலாம்.

பெரியார் சொன்ன குட்டிக்கதை:

இந்த பாவமன்னிப்பு சீட்டு சம்பந்தமாக பெரியார் சொன்ன ஒரு சின்னக் கதையும் உண்டு.அதன் சுருக்கம் இங்கே.

ஒரு பாதிரியார் பாவங்களைப் போக்கும் பாவமன்னிப்பு சீட்டுக்களை விற்று வந்தார். அவரிடம் ஒருவன் தான் செய்த பாவங்களுக்குப் பரிகாரமாக பாவமன்னிப்பு சீட்டுக்களை வாங்கி வந்தான். ஒருநாள் அவன் அந்த பாதிரியிடம் “அய்யா இதுநாள் வரை நான் செய்த பாவங்களுக்கு மட்டும் பாவமன்னிப்பு சீட்டு வாங்கி வந்தேன். இனிமேல் நான் செய்யப் போகும் பாவங்களுக்கும் முன் கூட்டியே சீட்டுக்கள் வாங்கிக் கொள்ளலாமா? என்று கேட்டான். அதற்கு பாதிரியாரும் சம்மதம் தெரிவித்தார். உடனே பணம் கொடுத்து சில சீட்டுக்களை வாங்கிக் கொண்டான். அவன் ஒரு திருடன். திருடுவது அவன் தொழில். எனவே அவன் சிலநாள் கழித்து, இரவில் அந்த பாதிரியின் வீட்டிலேயே நுழைந்து, கத்தியைக் காட்டி இருக்கும் பணம் எல்லாவற்றையும் கொடுக்கும்படி மிரட்டினான். பாதிரியார் “நீ நரகத்திற்குத்தான் செல்வாய் என்று அலறினார். அந்த திருடனோ சாவகாசமாக அதற்காகத்தான் முன் கூட்டியே உங்களிடமிருந்து பாவமன்னிப்பு சீட்டுகள் வாங்கி விட்டேன் என்று , அந்த சீட்டுக்களை காட்டிவிட்டு, அவரிடமிருந்த பணம் யாவற்றையும் கொள்ளையடித்து சென்று விட்டான்.

இந்த பாவமன்னிப்பு சீட்டுகளும் இப்போதும் பரிகாரம் என்ற பெயரில் சிலரால் செய்யப்படும் பணம் பறிக்கும் சமாச்சாரங்களும் கிட்டத்தட்ட ஒன்று போலவே இருக்கின்றன.


                          (ALL  PICTURES COURTESY: GOOGLE IMAGES)

கட்டுரை எழுத உதவியவை(நன்றியுடன்):
Wikipedia  (English & Tamil)
ஸ்ரீ கருட புராணம் (பிரேமா பிரசுரம்,சென்னை)
தினமலர் மற்றும் விடுதலை


Saturday 9 May 2015

ஆசிரியரும் பிள்ளைகளும் – அன்றும் இன்றும்யார் வேண்டுமானாலும் என்ன தப்பு வேண்டுமாலும் செய்யலாம். ஆனால் வாத்தியார் மட்டும் எந்த தப்பையும் செய்யக் கூடாது. ஆசிரியர் மீது அவ்வள்வு மரியாதை.  கிராமத்தில் ஒரு ஆசிரியர் எல்லோருக்கும் தெரிந்தவராக இருப்பார். அவர் அவசரத்துக்கு கூட ஒரு மூலையில் ஒதுஙகக் கூடாது. கையில் நாலு பேருக்கு தெரிய சிகரெட்டைக் தொடக் கூடாது. வாத்தியாருக்கே இப்படி என்றால் டீச்சருக்கு கேட்கவே வேண்டாம். டீச்சர் என்றால் அது ஆசிரியை மட்டுமே குறிக்கும். வாத்தியார் என்றால் அது ஆசிரியரைத்தான் குறிக்கும்.  

அவ்வளவு ஏன் நான் பள்ளி விடுமுறையில் எங்கள் அம்மாச்சி ( அம்மாவின் அம்மா) ஊருக்கு செல்லும்போது, எனது தாத்தா, மேய்ச்சலுக்கு சென்று திரும்பிய மாடுகளை கட்டுத்தறியில் கட்டச் சொல்வார். அவை எனக்கு நன்றாகவே டேக்கா கொடுக்கும். அப்போது கூட எனது தாத்தா என்னை திட்ட மாட்டார். “ மாட்டைப் புடிச்சி கட்டத் தெரியல ... பள்ளிக் கூடத்திலே என்னாத்த சொல்லித் தர்ராங்க என்றுதான் சொல்லுவார்.

பிள்ளைகளை அடித்தல்:


                                        (PICTURE – COURTESY:  www.thebetterindia.com )

அப்பொழுதெல்லாம் பிள்ளைகளைப் பற்றி சொல்லும்போது “ அடித்து வளர்க்காத பிள்ளையும், முறுக்கி வளர்க்காத மீசையும் முகத்துக்கு முன் ஆடும் “ என்று சொல்லுவார்கள். பிள்ளைகளை பள்ளியில் கொண்டு வந்து விடும்போதே “ சார் நீங்க என் மகனை தலைகீழா கட்டி வைச்சு அடிச்சு வேணுமானாலும் சொல்லிக் கொடுங்க. நான் எதுவும் கேட்க மாட்டேன். என்னோட பிள்ளைக்கு படிப்பு வந்தா போதும் “ என்று சொன்ன பெற்றோர்களும் உண்டு. ஆசிரியர் அடித்தாலும் தாங்கிக் கொள்ளும் உடல் வலிமை மன வலிமை அன்றைய பிள்ளைகளுக்கு இருந்தது. அவ்வளவு ஏன், நண்பர்களுக்குள் பள்ளி இடைவேளையின் போது உடைத்த பாதி வேப்பங் கொட்டையை விரல் முட்டிகளில் வைத்து, இன்னொரு கையால் ஓங்கி அடித்து வலுவை சோதித்து விளையாடியதும் ஒரு காலம்.    

ஆனால் இப்போதோ பிள்ளைகள் கெட்டுப் போக வீட்டிலேயே எத்தனையோ சமாச்சாரங்கள். டீவி, செல்போன், இண்டர்நெட், சினிமா என்று கவனத்தை ஈர்க்கும் ஏகப்பட்ட சமாச்சாரங்கள். இவற்றையெல்லாம் மீறி மாணவனை ஆசிரியர்  படிக்கச் செய்ய வேண்டும். இந்த காலத்து பிள்ளைகளை ஒரு சொல் சொல்ல முடியாது. அப்புறம் அடித்தால் என்னாவது.? இந்த காலத்து பிள்ளைகளுக்கு அவ்வளவாக மனவலிமையோ, உடல் வலிமையோ இல்லை என்பதே உண்மை. பள்ளியை நடத்துபவர்களும், பெற்றோர்களும் எதற்கெடுத்தாலும் ஸ்டேஷன், கோர்ட் என்று சென்று கல்விக் கூடங்களை நுகர்வோர் பொருட்களாக மாற்றி விட்டனர்.                                             

                               (PICTURE – COURTESY: www.moneyandshit.com/walkman )

அன்றைய படிப்பு:

அன்றைய படிப்பு தமிழ் மீடியமாக இருந்தாலும் ஆங்கில மீடியமாக இருந்தாலும் வாழ்க்கைக் கல்விக்கும் உதவியது. ஆசிரியராக இருந்தாலும் மாணவராக இருந்தாலும் அவர்களுக்குள் ஒரு சுய கட்டுப்பாடு இருந்தது. விலகிச் சென்றவர்கள் மட்டுமே வாழ்க்கை என்னும் ஓட்டப் பந்தயத்தில் ஓட முடியாமல் நின்று விட்டார்கள்.

இன்றும் ஏதாவது ஒரு காரியத்தில் இறங்குவதற்கு முன்பு அறஞ் செய விரும்பு, ஆறுவது சினம் - என்ற ஔவைப் பாட்டியின் ஆத்திச்சூடி போன்றவை முன் வந்து நிற்கின்றன. அன்று நான் படித்த (ஆசிரியர்கள் சொல்லிக் கொடுத்த) கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் முறைகள்கள்தான் (மனப்பாடமாக) இன்றும் எனது வாழ்க்கையில் பெரும் பங்கு வகிக்கிறது. வங்கிப் பணி செய்த போதும் இந்த எளிய முறைகள்தான் உதவின. இன்று ஒரு சாதாரண கணக்கிற்கு கூட, இன்றைய பிள்ளைகளில் பெரும்பாலானோர்  கால்குலேட்டர் தேடும் காலமாக உள்ளது.  

மேலே சொன்ன அனைத்தும் 50 வருடங்களுக்கு முந்திய, நான் பள்ளிப் படிப்பை தொடங்கிய காலத்து சமாச்சாரங்கள். நான் சொன்னதற்கு காரணம், இவை அப்படியே இருக்க வேண்டும் என்பதல்ல. அன்றைக்கு சூழ்நிலை அப்படி இருந்தது என்பதனை பதிவு செய்தேன். அவ்வளவுதான். மாற்றம் ஒன்றே மாறாதது என்பதனையும் மறுப்பதற்கில்லை. அதே சமயம் வாழ்க்கையில் நாம் சந்திக்கும் சவால்களை எதிர் கொள்ளும் மனப்பக்குவத்தை ஆசிரியர்கள் மட்டுமே மாணவர்கள் மனதில் விதைக்க முடியும் என்பதனையும் மறுக்க இயலாது.

                              (PICTURE – COURTESY: http://commons.wikimedia.org)

(சென்ற ஆண்டு ஆசிரியர் தினத்தன்று வெளியிட வைத்திருந்த கட்டுரை. ஏனோ மேற்கொண்டு இதில் மேலும் விவரித்து எழுத முடியாமலும், அன்றே வெளியிட முடியாமலும் போனது)


Friday 8 May 2015

சொந்தக் கதை சோகக் கதைகடந்த ஒன்றரை மாதங்களாக வலைப் பக்கம் சரியாக வர இயலவில்லை. அம்மாவின் மறைவு மற்றும் ஒரு சின்ன விபத்து (இடது காலில் காயம்) இவைதான் காரணம். எழுதுவதற்கு ஒன்றுமே தோன்றாவிட்டால் சிலசமயம் சொந்தக் கதை சோகக் கதையை எழுத வேண்டி உள்ளது.

காலில் ஏற்பட்ட காயம்:

நான் வேலையில் இருந்த போது வாங்கி ஓட்ட ஆரம்பித்தது TVS Moped தான். இப்போது TVS 50 XL Super. நாங்கள் இருப்பது புறநகர் பகுதி. எனவே பால், தயிர், மளிகை என்று எது வாங்குவது என்றாலும் கூட இந்த வண்டியில்தான். சைக்கிள் ஓட்டுவது போல, எனக்கு பழகிப் போன வண்டி. எல்லோரும் கார் வாங்கச் சொன்னார்கள். வசதி வாய்ப்பு இருந்தும், இதுவே போதும் என்று இருந்து விட்டேன். வேண்டுமென்றால் இருக்கவே இருக்கிறது, ஆட்டோ அல்லது கால் டாக்ஸி என்ற எண்ணம்தான்.

மறைந்த அம்மாவுக்கு செய்ய வேண்டிய காரியங்கள் முடிந்த மறுதினம். காலை(06.04.15), பால் வாங்குவதற்காக வழக்கம் போல TVS 50 ஐ எடுத்துச் சென்றேன். போகும் போதே வண்டியில் பின் சக்கர பிரேக் கைப்பிடி உடைந்து விட்டது. சமாளித்தபடி சென்று வந்தேன். இன்னும் சில பொருட்கள் வாங்க வேண்டி இருந்தது. முதல்நாள் இரவு, மாடியில், தங்கி இருந்த எனது உறவினரை எனது அப்பா வீட்டில் கொண்டு போய் விடுவதற்காக (எனது TVS 50 ரிப்பேர் என்பதால்) வீட்டில் இருந்த எனது மகள் விட்டுச் சென்ற ஸ்கூட்டியை எடுத்தேன். அப்போதும் அவர் வண்டியில் உட்கார யோசனை செய்தார். விதி வலியது. நான்தான் அவரை வலுக்கட்டாயமாக ஏற்றிச் சென்றேன்.(பெரும்பாலும் இந்த ஸ்கூட்டியை நான் எடுப்பதில்லை. அப்படியே எடுத்தாலும், டபுள்ஸ் சவாரியை தவிர்த்து விடுவேன்). ஒரு இடத்தில், சாலை திருப்பத்தில், ஸ்பீடு பிரேக்கர் இருக்கும் இடத்தில் காலை ஊன்றி வண்டியை எடுத்தேன்.. அப்போது பார்த்து வண்டியின் பின்னால் உட்கார்ந்து இருந்த உறவினர் சரியாக உட்காருவதற்காக அசைந்து விட்டார் போலிருக்கிறது. எனவே என்னையும் அறியாமல்  இரண்டு கால்களையும் ஸ்கூட்டியின் இரண்டு பக்கமும் ஊன்றி விட்டேன். இதனால் யாரும் விழவில்லை. ஆனாலும் வண்டி நகர்ந்த வேகத்தில், இடது குதி காலில் ஸ்கூட்டியின் (சென்டர் அல்லது சைடு) ஸ்டாண்டுகளில் ஒன்று இடித்தது போன்று இருந்தது. நான் சமாளித்தவாறு , அவரை கொண்டு போய் அப்பாவின் வீட்டில் விட்டு விட்டு கிளம்பியபோது பார்த்தால் இடது குதிகாலில் இருந்து இரத்தம் கசிந்து கொண்டு இருந்தது. நான் கடைக்கு போகாமல் உடனே எங்கள் வீட்டிற்கு திரும்பினேன். ஸ்கூட்டியில் கால் வைக்கும் இடம் முழுக்க இரத்தமான இரத்தம். உடனே இடது காலில் தண்ணீரை ஊற்றி கழுவிவிட்டு, பிரிஜ்ஜில் இருந்து எடுத்த ஐஸ் கட்டிகள் வைத்து கட்டினார்கள். உடனே ஒரு ஆட்டோவை வரவழைத்து 24 மணிநேரமும் இயங்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். எனக்கு சர்க்கரை வியாதி இல்லை; எனவே எனக்கு மயக்கம் ஏதும் வரவில்லை. இருந்தாலும் அவ்வளவு இரத்தம் வெளியேறியதால் எனக்கு பயம்தான்.

மருத்துவ மனையில்

மருத்துவ மனையில், மயக்க மருந்து கொடுத்து எனது இடது குதிகாலுக்கு கீழே இருந்த ஆழமான காயத்திற்கு தையல் போட்டார்கள். அதற்கு முன் வழக்கம் போல, எக்ஸ்ரே, இரத்தப் பரிசோதனை முதலானவை நடைபெற்றது. நல்ல வேளை குதிகால் நரம்பிற்கோ அல்லது கால் எலும்பிற்கோ ஒன்றும் ஆகவில்லை.( முன்பு ஒருமுறை அய்யா V.G.K அவர்கள் கூட (வை.கோபாலகிருஷ்ணன்) வண்டியில் டவுன் பக்கம் வர வேண்டாம் என்று எச்சரிக்கை செய்து இருந்தார்கள். எனவே டவுன் பக்கம் வண்டியில் செல்வதில்லை; எங்கள் ஏரியாவிற்குள் மட்டும்தான்.)

(ஏப்ரல் 6 முதல்) ஆஸ்பத்திரியில் ஐந்து நாட்கள் இருந்தேன். படுப்பதும் உட்காருவதுமாக பொழுது நகர்வது கஷ்டமாக இருந்தது. கூடவே எனது மனைவி மட்டும். அவர் செய்த தொண்டு மகத்தானது. முதல் இரண்டு நாட்கள், ஒற்றை காலால் நடந்து கொண்டு நான் பட்ட அவஸ்தை சொல்ல இயலாது. அப்புறம் வாக்கர் (walker) எனப்படும் ஸ்டாண்ட் ஒன்றை வைத்துக் கொண்டு நடந்தேன். அறையில் ஒரே ஒரு ஜன்னல். அதன்  வழியே வெளியே பார்ப்பதோடு சரி. உறவினர்கள் நண்பர்கள் வந்து ஆறுதல் சொன்னார்கள். சிலர், இதேபோல் தங்களுக்கு ஏற்பட்ட காயங்களைப் பற்றிய அனுபவத்தையும் சொன்னார்கள்.

வலைப்பக்கம் வந்தேன்:

இப்போது வீட்டிற்கு வந்து இரண்டு வாரம் ஆகிறது. வெளியே எங்கும் செல்ல முடியவில்லை. மகன் கல்லூரிக்கும், மனைவி அவரது அரசு அலுவலகத்திற்கும் சென்று விடுகிறார்கள். வீட்டில் இருக்கும் புத்தகங்களும், டீவியும், கம்ப்யூட்டரும் தான் துணை. வலைப்பக்கம் அவ்வப்போது வந்து போனேன். அப்படியும் வலியோடு வலியாக சில பதிவுகள், மறுமொழிகள், கருத்துரைகள் மற்றும் பின்னூட்டங்கள் எழுதினேன். Google Images  வழியே ஆறுதலுக்காக சில பொன்மொ்ழிகளைப் படித்தேன் அப்போது கிடைத்த படங்கள் இவை.
.
நான்கு நாட்களுக்கு ஒருமுறை மருத்துவமனை சென்று டாக்டரைப் பார்த்தேன். ஒவ்வொரு முறையும் கால் கட்டை அவிழ்த்து விட்டு, மருந்து வைத்து புதிதாக ஒரு கட்டு போட்டார். காயம் படிப்படியாக குணமாகி வந்தது. சென்ற திங்கட் கிழமை (4 ஆம் தேதி) கால் காயத்தில் இருந்த தையலைப் பிரித்தார்கள். பயப்படும்படி இல்லை. இன்னும் ஒருவாரம் சென்றுதான் முழு குணம் தெரியும் போலிருக்கிறது. காலின் அருமை காலில் அடிபட்டால் தான் தெரியவரும் போலிருக்கிறது.
 
ஸ்கூட்டர், பைக் ஸ்டாண்ட்:

ஸ்கூட்டர் போன்ற வண்டிகளை ஓட்டும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சில்வற்றில் சென்டர் மற்றும் சைடு ஸ்டாண்டுகள் இரண்டும் உண்டு.  நாம் அடிக்கடி இவற்றை பயன்படுத்தும் போது தரையில் படுவதால், அவற்றின் நுனி தேய்ந்து பிளேடு போல் ஆகி விடுகின்றன. வண்டியை ஓட்டும்போது, திடீரென்று நிறுத்தி எடுக்கும் போது அவை காலில் இடிக்க வாய்ப்பு அதிகம். சில சமயம் எனக்கு ஏற்பட்டது போல் பெரியதாக காயம் ஏற்படவும் வாய்ப்பு உண்டு.


Friday 1 May 2015

மே தினம் – வாழ்த்துக்கள்!
மே தினம் என்றால் கம்யூனிஸ்ட் தோழர்கள் சுதந்திர தினம் போன்று கொடியேற்றுவார்கள்,  கூட்டம் நடத்துவார்கள் என்று அவர்களுக்கு மட்டுமே உரிய தினமாக இருந்த நிலைமை இன்று மாறி விட்டது. உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்  ( ‘WORKING MEN OF ALL COUNTRIES UNITE’) என்ற இந்த வாசகம், மேதினம் எனப்படும் இன்று உலகம் முழுக்க முழக்கமிடப் படுகிறது. கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கையில் கார்ல் மார்க்ஸ் மற்றும் பிரடெரிக் ஏங்கெல்ஸ் ஆகியோரால் அறைகூவல் விட்டு அழைக்கப்பட்ட இந்த வாசகத்தை உச்சரிக்கவே பயந்த காலமும் உண்டு. இன்று தொழிலாளர் வர்க்கம் எங்கெல்லாம் தலை நிமிர்ந்து நிற்கிறதோ அங்கெல்லாம், இந்த மேதின அறைகூவல் எழுகின்றது. அனைத்து தொழிற்சங்கங்களும் மேதின நிகழ்ச்சிகள் நடத்துகின்றனர். அனைத்து அரசியல்வாதிகளும் மேதின வாழ்த்துக்கள் தெரிவிக்கின்றனர்.

அனைவருக்கும் எனது உளங்கனிந்த மேதின வாழ்த்துக்கள்!

நான் கல்லூரி மாணவனாக இருந்த காலத்தில் ‘மறக்க முடியாத இலங்கை வானொலி யில், பொங்கல், தீபாவளி போன்ற சிறப்பு நாட்களில், அந்தந்த சூழ்நிலைக்குத் தக்கவாறு தமிழ் திரைப்பட பாடல்களை ஒலிபரப்பினார்கள். அவர்கள் மேதினம் என்ற உலக தொழிலாளர்கள் தினத்தன்று ஒலிபரப்பிய பாடல்கள் இன்றும் நினைவில் நிற்கின்றன. அவற்றை நினைவு படுத்தி இங்கு சில பாடல்களின் வரிகள்.

கம்யூனிசம் என்றால்:

பொதுவுடமைதான் என்ன? என்ற கேள்விக்கு விடை சொல்ல பல்வேறு அறிக்கைகள், பலபல புத்தகங்கள் நாட்டில் இருக்கின்றன. இப்போது இட்லி கம்யூனிசம் என்று (உபயம்: கத்தி படம்) வேறு கலக்குகிறார்கள். நமது  கவிஞர் கண்ணதாசன் அவர்கள் ரொம்பவும் எளிமையாக தான் எடுத்த “கறுப்புப் பணம் என்ற படத்தில், தான் எழுதிய பாடல் வரிகளில் சொல்லுகிறார்.

எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் - இங்கு
இல்லாமை இல்லாத நிலை வேண்டும்
எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் - இங்கு
இல்லாமை இல்லாத நிலை வேண்டும்
வல்லான் பொருள் குவிக்கும் தனி உடமை
வல்லான் பொருள் குவிக்கும் தனி உடமை - நீங்கி
வரவேண்டும் திருநாட்டில் பொதுவுடமை
வல்லான் பொருள் குவிக்கும் தனி உடமை - நீங்கி
வரவேண்டும் திருநாட்டில் பொதுவுடமை

        - பாடல்: கண்ணதாசன் படம்: கறுப்புப் பணம்

எம்.ஜி.ஆர் படப் பாடல்கள்:

பெரும்பாலான எம்.ஜி.ஆர் படங்களில், தனியாக அவர் பாடும் பாடல்களில் உழைக்கும் தொழிலாளர் குரல் ஒலிக்கக் காணலாம். எம்ஜிஆரும் இதுமாதிரி கருத்தமைந்த பாடல்களை தனது படங்களில் இருப்பதை விரும்பினார். மறைந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் எம்ஜிஆர் நடித்த திருடாதே என்ற படத்திற்காக, எழுதிய ஒரு பாடல் திருடாதே! பாப்பா திருடாதே! வறுமை நிலைக்குப் பயந்துவிடாதே திறமை இருக்கு மறந்து விடாதே . இதில் அவர்,

கொடுக்கிற காலம் நெருங்குவதால்-இனி
எடுக்கிற அவசியம் இருக்காது
இருக்கிறதெல்லாம் பொதுவாய்ப் போனால்
பதுக்கிற வேலையும் இருக்காது
ஒதுக்கிற வேலையும் இருக்காது
உழைக்கிற நோக்கம் உறுதியாயிட்டா
கெடுக்கிற நோக்கம் வளராது-மனம்
கீழும் மேலும் புரளாது!

என்ற தனது கனவினைச் சொல்லுகிறார்.

கவிஞர் கண்ணதாசனும் எம்ஜிஆரும் திரைப்பட உலகில் நண்பர்களாக இருந்து பிரிந்தவர்கள். அப்புறம் இருவரும் மீண்டும் நண்பர்கள் ஆனார்கள். எம்ஜிஆர் படம் ஒன்றினுக்கு கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடல் இது.

ஒன்று எங்கள் ஜாதியே
ஒன்று எங்கள் நீதியே
உழைக்கும் மக்கள் யாவரும்
ஒருவர் பெற்ற மக்களே
உழைக்கும் மக்கள் யாவரும்
ஒருவர் பெற்ற மக்களே

            - (படம்: பணக்கார குடும்பம்) 

எம்ஜிஆருக்காகவே பல சிறப்பான பாடல்களை எழுதியவர் கவிஞர் வாலி. பாடல்களை எழுதியது வாலி என்றாலும், எம்ஜிஆர் தத்துவப் பாடல்கள் என்றே அவற்றை வெளியிட்டார்கள். மீனவராக வந்து எம்ஜிஆர் மக்களை கவர்ந்த படம் ‘படகோட்டி. அந்த படத்தில் மீனவ மக்களின் வாழ்க்கைச் சூழலை “கரைமேல் பிறக்க வைத்தான் எங்களை கண்ணீரில் மிதக்க வைத்தான்  என்ற பாடலில் கவிஞர் வாலி எளிமையாககச் சொல்லி உள்ளம் நெகிழ வைத்தார். அந்த படத்தில்

கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
அவன் யாருக்காகக் கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான்
இல்லை ஊருக்காகக் கொடுத்தான்

என்று தொடங்கும் பாடலில் 

எதுவந்த போதும் பொதுவென்று வைத்து
வாழ்கின்ற பேரை வாழ்த்திடுவோம்

என்று முத்தாய்ப்பாக சொல்லுகிறார்.

சிவப்பு மல்லி:

1980 இல் ஆந்திராவில் ஒரு தெலுங்கு படம் வசூலை அள்ளிக் குவித்துக் கொண்டிருப்பதாக, சினிமா வட்டாரத்தில் பரபரப்பாகப் பேச்சு அடிபட்டது. அந்தப் படம் எர்ர மல்லி . ஆந்திர மாநிலக் கம்யூனிஸ்டுகள் உருவாக்கிய படம். ... ... ஏ.வி.எம் சகோதரர்கள் வாங்கினர். தமிழுக்குத் தகுந்த மாதிரி திரைக்கதை எழுத வைத்து ‘சிவப்பு மல்லி என்ற படத்தை 1981 இல் வெளியிட்டனர். தமிழ்ப் படத்துக்கு வசனம் எழுதி டைரக்ட் செய்தவர் ராம.நாராயணன். ….   ‘சிவப்பு மல்லி படத்தில் செங்கொடிகளுடன் ஊர்வலம். ஓர் பாடல். பாரதிராஜா இளையராஜாவினால் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட கவிஞர் வைரமுத்து எழுதியிருந்தார். அதில் பல்லவியில்

ரத்தச் சாட்டை எடுத்தால் கையை
நெரிக்கும் விலங்கு தெறிக்கும்

என்ற வரிகளை , சென்னை சென்சார் போர்டார் நீக்கச் செய்தார்கள். “சிங்கக் கூட்டம் நிமிர்ந்தால் என்பதாகப் படத்தில் அந்த வரிகள் மாற்றப்பட்டன. ( தகவல்: நன்றி அறந்தை நாராயணன் - “தமிழ் சினிமாவின் கதை  பக்கம் 714 & 716 தமிழ் சினிமாவின் ஆரம்ப கால வரலாற்றை அறிய விரும்பும் நண்பர்கள் இந்த நூலை அவசியம் படிக்கவும்). 


விஜயகாந்த், அருணா, சந்திரசேகர் நடித்த சிவப்பு மல்லி என்ற படத்தில் வந்த,  இந்த பாடல் வரிகளை கண்டு கேட்டு களித்திட கீழே உள்ள யூடியூப் இணைய முகவரியை சொடுக்கவும் (CLICK )


பாடல் வரிகள்:

எரிமலை எப்படி பொறுக்கும்
நம் நெருப்புக்கு இன்னுமா உறக்கம்

எரிமலை எப்படி பொறுக்கும்
நம் நெருப்புக்கு இன்னுமா உறக்கம்

சிங்க கூட்டம் நிமிர்ந்தால்
துன்ப சிறையின் கதவு தெறிக்கும்
நாம் கண்ணீர் விற்கும் ஜாதி
இனி அழுதால் வராது நீதி

எரிமலை எப்படி பொறுக்கும்
நம் நெருப்புக்கு இன்னுமா உறக்கம்
சிங்க கூட்டம் நிமிர்ந்தால்
துன்ப சிறையின் கதவு தெறிக்கும்
நாம் கண்ணீர் விற்கும் ஜாதி
இனி அழுதால் வராது நீதி

ரத்தம் இங்கே வேர்வையாக கொட்டி விட்டது
உயிர் வற்றி விட்டது
காலம் இங்கே ஊமை கையை கட்டி விட்டது
கண்ணீர் ஊற்று விட்டது
ரத்தம் இங்கே வேர்வையாக கொட்டி விட்டது
உயிர் வற்றி விட்டது
காலம் இங்கே ஊமை கையை கட்டி விட்டது
கண்ணீர் ஊற்று விட்டது

ஏரு பிடித்தவர்
இரும்பை இளைத்தவர்
வேர்வை விதைத்தவர்
பயிரை அறுத்தவர்
தட்டி கேட்ட்கும் காலம் வந்தால்
தர்மங்கள் தூங்காது

மே தினம் உழைப்பவர் சீதனம்
மே தினம் உழைப்பவர்சீதனம்

எரிமலை எப்படி பொறுக்கும்
நம் நெருப்புக்கு இன்னுமா உறக்கம்
சிங்க கூட்டம் நிமிர்ந்தால்
துன்ப சிறையின் கதவு தெறிக்கும்
நாம் கண்ணீர் விற்கும் ஜாதி
இனி அழுதால் வராது நீதி

எழுதியபடிதான் நடக்கும் எல்லாம்
விதிவசம் என்பதை விட்டுவிடு
இளமை உன் தோள்களில் இருக்கும் போதே
எரிமிசம் என்பதை எட்டிவிடு
எழுதியபடிதான் நடக்கும் எல்லாம்
விதிவசம் என்பதை விட்டுவிடு
இளமை உன் தோள்களில் இருக்கும் போதே
எரிமிசம் என்பதை எட்டிவிடு
காலம் சுருண்டு படுக்கும்
நம் கண்ணீர் துளியை துடைக்கும்
காலம் சுருண்டு படுக்கும்
நம் கண்ணீர் துளியை துடைக்கும்

மே தினம் உழைப்பவர் சீதனம்
மே தினம் உழைப்பவர்சீதனம்

எரிமலை எப்படி பொறுக்கும்
நம் நெருப்புக்கு இன்னுமா உறக்கம்
சிங்க கூட்டம் நிமிர்ந்தால்
துன்ப சிறையின் கதவு தெறிக்கும்
நாம் கண்ணீர் விற்கும் ஜாதி
இனி அழுதால் வராது நீதி

ஏழை வர்க்கம் வேர்வைகுள்ளே முத்து குளிக்கும்
பின்பு செத்து பிழைக்கும்
உழவன் வீட்டு தேனும் கூட உப்பு கரிக்கும்
அதில் கண்ணீர் மிதக்கும்
ஏழை வர்க்கம் வேர்வைகுள்ளே முத்து குளிக்கும்
பின்பு செத்து பிழைக்கும்
உழவன் வீட்டு தேனும் கூட உப்பு கரிக்கும்
அதில் கண்ணீர் மிதக்கும்
நெருப்பென உழைத்தவர்
வரப்பென இளைத்தவர்
சுட சுட அழுதவர்
அடிக்கடி மிரண்டவர்
வெற்றி சங்கு ஊதும் போது
தர்மங்கள் கொண்டாடு

எரிமலை எப்படி பொறுக்கும்
நம் நெருப்புக்கு இன்னுமா உறக்கம்
சிங்க கூட்டம் நிமிர்ந்தால்
துன்ப சிறையின் கதவு தெறிக்கும்
நாம் கண்ணீர் விற்கும் ஜாதி
இனி அழுதால் வராது நீதி

மே தினம் உழைப்பவர் சீதனம்
மே தினம் உழைப்பவர் சீதனம்

மே தினம் உழைப்பவர் சீதனம்
மே தினம் உழைப்பவர் சீதனம்

மே தினம் உழைப்பவர் சீதனம்
மே தினம் உழைப்பவர் சீதனம்

   - பாடல் கவிஞர் வைரமுத்து

                              
                                ( ALL PICTURES - COURTESY: “ GOOGLE IMAGES )